சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவர்கள் தளவாய்புரத்தில் கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர்
மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டம், தளவாய்புரத்தில் செயல்பட்டு வரும் அன்னை சத்யா பெண்கள் தையல் தொழிலாளர்கள் தொழிற்கூட்டுறவு சங்கம் மற்றும் இணை உணவு தயாரிக்கும் மகளிர் மேம்பாட்டு தொழிற் கூட்டுறவு சங்கம் ஆகியவைகளின் செயல்பாடுகள் குறித்து (13.08.2026) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு அரசு சமூக நலத்துறையின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
விருதுநகர் மாவட்ட சமூக நல அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் மொத்தம் 6 மகளிர் தையல் தொழில் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இச்சங்கங்கள் மூலம் இலவச சீருடை திட்டம் 2026 2027 ஆம் ஆண்டில் விருதுநகர் மற்றும் சிவகாசி கல்வி மாவட்டங்களில் 11 வட்டார கல்வி அலுவலகங்களின் கீழ் பயிலும் 52,334 மாணவர்கள், 53,242 மாணவிகள் என மொத்தம் 1,05,576 மாணாக்கர்கள் பயன்பெறுகின்றனர்.அதனடிப்படையில், தளவாய்புரத்தில் உள்ள அன்னை சத்யா பெண்கள் தையல் தொழிலாளர்கள் தொழிற்கூட்டுறவு சங்கம் மூலம் 2026-2027ஆம் கல்வியாண்டிற்கான இலவச சீருடைத் திட்டத்தின் கீழ், இராஜபாளையம் வட்டாரக் கல்வி அலுவலகத்தின் கீழ் 153 பள்ளிகளில் 9,306 மாணவ, மாணவியர்களுக்கும், சிவகாசி வட்டாரக் கல்வி அலுவலகத்தின் கீழ் 118 பள்ளிகளில் 11,259 மாணவ, மாணவியர்களுக்கும் எனமொத்தம் 271 அரசுப்பள்ளிகளைச் சேர்ந்த 20,565 மாணவ, மாணவியர்களுக்கு சீருடைகள் தயாரித்து வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
சங்கத்தின் மூலம் தையல் பணியில் ஈடுபடும் உறுப்பினர்களுக்கு அவர்களின் பணியின் அடிப்படையில் குறைந்தபட்சமாக ரூ.5,000 முதல் அதிகபட்சமாக ரூ.35,000 வரை வருமானம் கிடைத்து வருகிறது. இந்த சங்கம் மூலம், சீருடைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பெண் தையல் தொழிலாளர்களை நேரில் சந்தித்து, அவர்களின் பணிகள், பணிச்சூழல் மற்றும் தொழிற்கூட்டுறவு சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், இணை உணவு தயாரிக்கும் மகளிர் மேம்பாட்டு தொழிற் கூட்டுறவு சங்கம் மூலம் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் வளர் இளம் பெண்களுக்கு வழங்கப்படும் இணை உணவு சத்து மாவு தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில், கோதுமை 42 சதவீதம், மூலப்பொருட்களான வெல்லம், சோயா, கடலை, உளுத்தம் பருப்பு, கேழ்வரகு, வேர்க்கடலை, தாது உப்புகள் மற்றும் வைட்டமின்கள் அடங்கியவை 58 சதவீதம் என்ற விகிதத்தில் தயாரிக்கப்படுகிறது.மேலும், இங்கு தயாரிக்கப்படும் பிஸ்கெட்டுகள் விருதுநகர் மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் இணை உணவு சத்துமாவுகள் விருதுநகர் மாவட்டத்தில் 25,191 வளரிளம் பெண்கள் மற்றும் 14,888 கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களும் நாளொன்றுக்கு தலா 150 கிராம் பெற்று பயனடைந்து வருகின்றனர்.
அதன்படி, சத்து மாவு தயாரிப்பிற்காக பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் பெறப்படும் முறை, அவற்றை தரம் பிரித்தல், சுத்தம் செய்தல், உலர்த்துதல், அரைத்தல், தேவையான அளவில் கலவை செய்தல் உள்ளிட்ட பல்வேறு நிலைகளை குறித்தும், சத்து மாவு தயாரிப்பின்போது கடைப்பிடிக்கப்படும் தரக்கட்டுப்பாட்டு நடைமுறைகள், சுகாதார நடவடிக்கைகள், பாதுகாப்பான சேமிப்பு மற்றும் பொட்டலமிடும் முறைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.மகளிர் கூட்டுறவு சங்கத்தின் மூலம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பெண்கள் தங்களது திறன்களை மேம்படுத்திக்கொண்டு பொருளாதார ரீதியாக முன்னேறுவதற்கு கூட்டுறவு சங்கங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன என தெரிவித்தார்.இந்த ஆய்வின்போது, மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி திலகம், கூட்டுறவுத்துறை அலுவலர்கள், மகளிர் மேம்பாட்டு கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
0
Leave a Reply