25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >>


முதல் பக்க கட்டுரை

Dec 02, 2025

வயதான குழந்தைகள் .

தனியாக ஒரு ரூமில் போட்டு வேளா வேளைக்கு சாப்பாட்டை போட்டு விட்டு கதவை அடைத்து விடும் அவலம் வயதானவர்களுக்கு பல இடங்களில் உண்டு.வணக்கத்திற்குரிய வயதான பெரியவர்கள் வீட்டில்இருந்தால் பலருக்கு பாரமாக இருக்கிறது. சொன்னதையே சொல்லும் கிளிப்பிள்ளையாக இருப்பினும் மதிக்க வேண்டும்.தினமும் 1மணி நேரம் அவர்களிடம் ஏதாவது ஒன்றைப் பற்றி பேசி அதைப்பற்றிய அபிப்பிராயத்தைக் கேட்டு விட்டு உங்களுடைய நிலையும் கூறவேண்டும். காலம் இப்படி இருக்கிறது இப்படித்தான் மாற வேண்டியிருக்கு என்று கருத்துப் பறிமாற்றமோ அவர்களிடம் சின்னச்சண்டையாவது போடுங்கள். அவர்கள் மனதில் நாள் பூராவும் அசை போட்டு சந்தோஷமாக இருப்பார்கள் வெளியூரில் இருக்கிறீர்களா?. தினமும் ஒரு போன்கால் எப்படி இருக்கிறீர்கள் என்று குசலம் விசாரித்து, மருந்து சாப்பிடுங்கள் என்று கூறினால் பக்கத்தில் இருக்கத் தேவையில்லை. அன்பு அவர்களுக்கு பக்கபலமாக இருக்கிறது. ஒரு விதத்தில் இவர்கள் வயதான குழந்தைகளே !கடிதத்தில் அம்மாவின் கைவண்ணத்தையும், அப்பாவின் உபதேசத்தையும் கோடிட்டு எழுதுங்கள். இந்தக் கடிதம் போதும் ஒன்றிரண்டு மாதங்களுக்கு மறுபடியும் இன்னொரு கடிதம், சின்ன  GIFT கொடுங்கள். குறைந்த விலையாக இருந்தாலும், தனக்காக தன் குழந்தைகள் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள் என்ற எண்ணமே,அவர்களை ஆரோக்யமாக வைத்திருக்கும்.உங்கள் குழந்தைக்கும், பாட்டி, தாத்தாவுடன் பேசவும், பழகவும் வாய்ப்பைக் கொடுங்கள். பெரியவர்கள் இல்லையா பக்கத்து வீட்டிலோ அல்லது முதியோர் இல்லத்திற்கோ சென்று பழக விடுங்கள். உங்கள் குழந்தைகள் உங்களை பிற்காலத்தில் நிச்சயமாக மதிப்பார்கள்.பள்ளிகளில் ஏதேதோ Project Report கேட்கிறார்கள்.முதியவர்களிடம் பேசி அதிலிருந்து அவர்கள் கிரஹித்துக் கொள் வதை எழுதச் சொல்லலாம். பெரியவர்களுக்கு பொழுது போகும், குழந்தைகளுக்கும் பழைய கால வாழ்க்கையை தெரிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம்.சமூக சேவை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் தனியாக இருக்கும் வயதானவர்களிடம் சில மணி நேரங்களைச் செலவிடுங்கள். இது பெரியதர்ம காரியம். பெரியவர்கள் மன அழுத்த நோய்களுக்கு, நாம் காரணமாகி விடக்கூடாது.பெரியவர்களை மதித்து அவர்களுடைய வாழ்க்கையில்  பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டு இருபக்கமும் சந்தோஷமாக  வாழலாம்.அன்பிற்காக ஏங்கும் பெரியவர்களை ஒருபடி கூட மரியாதை கொடுத்து தர்மத்தையும் அவர்களுடைய நம்பிக்கையையும் காப்போம்.                                                                      திருமதி.குணா பாஸ்கர் ராஜா 

Nov 01, 2025

விட்டுக் கொடுத்தல்.

மனித உரிமை (Human Rights) என்று வாய் கிழிய பேசும் மனிதர்கள் வீட்டில் மனைவிக்கு உரிமை தருகிறாரா? இல்லை. மனைவி கணவனுக்குஉரிமைதருகிறாரா? சற்று யோசித்துப்பாருங்கள். 100க்கு 99 சதவிகிதம்பேர் 'இல்லை'என்றுதான் சொல்கிறார்கள்.கணவனுக்கு டி.வி.யில் டிஸ்கவரி, பி.பி.சி.பிடிக்கும். மனைவிக்கு சீரியல் நேரம் வந்துவிட்டால் கொஞ்ச நேரம் பார்த்துக்கிறேன் என்றால் அவருக்கு கோபம். காலையிலிருந்து மாலைவரை நான் ஆபிஸிற்கு போய்விட்டு இப்பத்தானே வந்தேன். எனக்குப் பிடித்ததைத்தான் பார்ப்பேன். உரிமை மறுக்கப்படுகின்றது. கணவனுக்குப் பிடித்த படத்தைஹாலில்மாட்டினால்மனைவிக்குப்பிடிப்பதில்லை.எனக்கு ஏ.ஸி. பக்கத்தில் படுக்க வேண்டும். மனைவியோ ஐயோ குளிரடிக்குதே!காத்தாடி வேண்டும் இது மனைவி. கணவனுக்கு கர்நாடக சங்கீதம் பிடிக்கும். மனைவிக்கு வெஸ்டர்ன் மியூசிக் வேண்டும். ஒருவருக்கு ஊர் சுற்ற பிடிக்கும். மற்றவருக்கு வீட்டைவிட்டு வெளியே வருவதே பிடிக்காது. ஒரே நேரத்தில் ஒரே ரூமில் இருவருக்கும் எப்படி இரண்டு வித மியூசிக்கை கேட்கமுடியும். இளம் தம்பதியர்கள் அவரவர்களுடைய உரிமை ,விருப்பத்தை விட்டுக் கொடுக்காமல் ,சேர்ந்து வாழ விரும்புகின்றனர். எப்படி ஒரே விட்டில் இரண்டு பேரும்சேர்ந்து வாழ்கின்றனர். பொருளாதாரத்தில் சௌகரியமாக இருக்கும், வேலைக்குப் போகும் தம்பதியர்கள் ,தனித்தனி அறைகளில் தங்களுக்கு பிடித்தமான சூழ்நிலையில் வாழவே ஆசைப்படுகின்றனர். கணவன் மனைவியாக  வாழ்வது மட்டும் தங்கள் பங்குங்கு அல்ல. அவரவர்களுடைய விருப்பு, வெறுப்புகளையும் மதிக்க வேண்டும். வசதி படைத்தவர்கள் தனித்தனிரூம், டி.வி, மியூசிக் டெக் என்று வைத்துக் கொள்ளலாம். இல்லாதவர்கள் இருக்கும் இடத்திலேயே அவரவர்களுக்கு தகுந்த மாதிரி, ஒருவரை ஒருவர் அனுசரித்து வாழ்வதே ,அர்த்தமுள்ள வாழ்க்கை.கணவன் மனைவியின் சாபத்திற்கோ, மனைவி கணவனின் சாபத்திற்கோ, ஆளாகாமல்அவரவர்களுடைய உரிமையை விட்டுக் கொடுக்க வேண்டும்.இவர்களின் மற்ற உறவினர்களுக்கு நோ.சான்ஸ்.  அவரவர் வேலையைப் பார்த்துச் செல்வதே மேல், கௌரவம் கூட. உரிமைக்கு மதிப்பளித்து உல்லாசமாக வாழக் கற்றுக் கொள்ளளுங்கள். 

Oct 01, 2025

திருஷ்டி பூசணிக்காய்.

தவறை 'தவறு' செய்கிறோம் என்று தெரிந்தே பலர் செய்கின்றர். எதற்காக? தன்னை நல்லவன் என்றும், உயர்ந்தவன் என்றும் தான் நன்றாக வாழ வேண்டும்என்பதற்காக பல  தவறுகளை செய்து கொண்டே  இருக்கின்றனர். இவை தெரிந்து செய்யும் தவறுகள். தவறு செய்பவர்கள் அனுபவிக்கத்தான் போகிறோம் என்று தெரிந்தும் ''அப்ப பார்த்துக்கலாம்" என்று இன்னொரு காரணத்தை சொல்லி சமாளிப்பார்கள்.ஆனால் 'தவறை ' தவறே இல்லை என்று எத்தனை தவறுகள் செய்து கொண்டிருக்கிறோம் தெரியுமா? கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் தெரியும். பழகி விட்ட தவறுகளைப் பற்றி.தன் கடையில் வியாபாரம் ஓஹோ என்றிருந்தாலும், வியாபாரம் இல்லை என்றாலும் 'கண் திருஷ்டி' என்று பூசணிக்காய் மேல் சூடம் ஏற்றி சுற்றி நடுத்தெருவில் போட்டு உடைத்து விட்டு திருப்தியாகச் செல்கின்றனர். தங்களுடைய கடைக்கு ரெம்ப பக்கத்தில் உடைத்தால் மறுநாள் சுத்தப்படுத்த வேண்டும் என்று தான்.சரி திருஷ்டி சுற்றி விட்டு சாலையில் சிதறிய  பூசணிக்காயோடு தங்களுடைய கஷ்டங்களெல்லாம் தீர்ந்த விடும் என்று நினைப்பவர்களுக்கு ,அடுத்த பெரிய பாபச் செயல் (கொலைக்குச் சமமான) செய்திருக்கிறோம் என்று கொஞ்சம் கூட நினைத்துப் பார்ப்பதில்லை. அவ்வழியே  வேகமாக வரும் ஸ்கூட்டர், பைக் சறுக்கி பல உயிர்கள் எதிரே வரும் வாகனங்களில் அடிபட்டு மரணம்  அல்லது காயமடைந்து, படுத்த படுக்கையாகி விடுகின்றனர் என்று பல செய்திகளைப் பார்க்கிறோம். உங்கள் வாழ்க்கையை சுகமாக்க இன்னொருவர் வாழ்க்கையில் விளையாடி இருக்கிறீர்கள்.  இது எப்பேர்பட்ட தவறு. பாவம். உயிர்களை காவு வாங்கும் இந்த திருஷ்டி பரிகாரம் தேவையா? இந்த செய்தி வாசிக்கும் வரை யாருக்கும், தான்  செய்தது தவறு என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை.சரி தெரிந்த பின்பாவது அந்தத் தவறை மற்றவர்கள் செய்யாமல் இருக்கலாம் அல்லவா? 'ம்ஹீம்' நோ சான்ஸ். 'அவன் விதி', அதுக்கு நான் திருஷ்டி பூசணிக்காயை நடுரோட்டில் தான் உடைப்பேன் என்று அடம் பிடிக்கின்றனர். இதை மனிதர்களின் அறியாமை, முட்டாள்தனம் என்றும் சொல்லிவிட முடியுமா? பின்பு இவர்களை எதில் சேர்ப்பது?பழகிவிட்ட இத்தவறினை தவறு என்று உணர்ந்து கொள்ள வேண்டும்.நீங்கள் திருஷ்டி சுற்றும் பூசணிக்காய் உங்கள் மகனையோ, உங்களுடைய சொந்தங்களையோ காவு வாங்கினால் என்ன செய்வீர்கள்?இவை எல்லாம் மற்றவர்களுக்கு எவ்வளவு இடைஞ்சல் தரும் என்பதை கொஞ்சமாவது சிந்திக்கவேண்டாமா? பழகிவிட்ட தவறினை, இனிவரும்  சமுதாயத்தினருக்காவது தவறு ,என்று புரிய வைப்பது நமது கடமையாகும்.திருமதி. குணா பாஸ்கர் ராஜா

Sep 01, 2025

அன்பே பிரதானம், சகோதர அன்பே பிரதானம்!

ஒரே தாய் வயிற்றில் பிறந்து அக்கா,தம்பி, தங்கை, அண்ணன் என்று பாசத்துடன், ஒரு வித வித்யாசமும் இன்றி பெற்றோர்களிடம் வளர்ந்து வருகிறோம். ஒரு வீட்டில்இரண்டாவதாக குழந்தை பிறந்திருக்கிறது. அந்தக் குழந்தையைப் பார்க்கவருபவர்கள் பெரிய குழந்தையிடம் உன் தம்பிப் பாப்பாவை நான் தூக்கிக் கொண்டுபோகிறேன் ,என்று சொன்னால் அக்குழந்தை கோபமாக நம்மைப் பார்த்து. தன் தம்பியைஅணைத்துக் கொள்ளும். ஏன்? தன் தம்பி தன்னை விட்டுப் பிரிந்துசென்றுவிடுவானே? என்ற பயம் கலந்த வருத்தம்.கேவலம் நிலம், காசு, பணத்திற்காக, நெஞ்சில் ஈவு இரக்கமின்றி, அதே தம்பியை இழக்கத் தயாராகிறார்கள். சகோதர, சகோதரிகளே, உங்களுக்குள்ளே எத்தனையோ பிரச்சனைகள் இருக்கலாம். அதை உங்களுக்குள்ளேயே பேசித் தீர்த்துக் கொள்ளலாம். அதைத்தவிர்த்து மூன்றாம் மனிதரை பிரச்சனை தீர்ப்பதற்கு அணுகுகின்றோம் என்றால்கதை கந்தல் தான். பூனைகளின் அப்பம் பிரச்சனைக்கு குரங்கு தீர்ப்பு சொன்னகதை தான். உங்கள் பிரச்சனையை தீர்க்க கோர்ட், கேஸ், போலீஸ் ஸ்டேஷன் என்றுஅலையாமல் உங்களிடையே பேசித் தீர்த்துக் கொள்வது உத்தமமான விஷயம்.ஹர்ஷ வர்த்தனர் காலத்தில் நாட்டு நலத்திற்காக கண்ணுக்கு கண், பல்லுக்குப்பல்' என்ற சட்டம் இருந்தது. கையால் பொருளைத் திருடினானா? வெட்டு கையை கண்ணால் ஒரு பெண்ணை தவறான கண்ணோட்டத்துடன் பார்த்தானா? சிரித்தானா? கண்ணைத் தோண்டு! பல்லைத்தட்டு! என்று கடுமையான தண்டனையுடன் நாட்டைச் செம்மையாக ஆண்டு வந்தான். ஆனால் இந்த முறையை குடும்பபாசத்திற்கு நடுவே கொண்டு வருவார்கள் என்று அம்மன்னன் நினைத்திருக்கமாட்டார்.சொத்தை மொத்தமும் விற்று கோர்ட், கேஸ் என்று அலைவேனே தவிர பைசா தரமாட்டேன் உடன்பிறப்பிற்கு என்று சொல்லும் அளவிற்கு, கொடூரம் கூடிக் கொண்டு விடுகிறது.இந்த தகராறில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெற்றோர்கள். தன் குழந்தைகள் நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த காசிற்காக, சண்டை போடுகிறார்களே? இதற்காகவா இந்த சொத்தை அரும்பாடு பட்டு சம்பாதித்தோம் என்று ஆதங்கப்படுகின்றனர்.பூர்வீகச் சொத்தோ, உங்களுக்கு சேரவேண்டிய சொத்துக்களோ ,ஏமாற்றப்பட்டு அநியாயமாக உங்கள் கைவிட்டுச் சென்றால், உங்கள் வாரிசுகளுக்கு எந்த விதத்திலாவது வந்து சேரும் என்பதில் சந்தேகமில்லை. யாருக்கு சொத்துக்கள் சேர வேண்டுமோ, அவர்களைச் சென்றடையும். சொத்துக்களுக்கு உண்மையான எஜமானரிடம் போய்ச் சேர வேண்டும் என்ற பாசம் இருக்குமாம், இது கதையல்ல நிஜம். இரண்டு தலை முறைக்குமுந்தியவர்கள் இதை அடிக்கடி கூறுவார்கள்.இந்த அற்பகுணத்தை விட்டொழித்து அன்பு, அன்பு என்று அனைத்தையும் மன்னித்து, மறந்து, விட்டுக் கொடுத்து, "அன்பே பிரதானம், சகோதர அன்பே பிரதானம்" என்ற நல்லெண்ணத்துடன் வாழ்க்கையைத் தொடரலாம். 

Aug 01, 2025

ஒன்றே குலம் ஒருவனே தேவன் .

நாம் எந்த மண்ணில் பிறக்கிறோமோ ,அந்த சூழ்நிலைக்கும், பெற்றோர்கள் ஏற்றுக்கொண்டு நடத்தும் மதத்துடனும், கலாச்சாரத்துடனும் ஒன்றுபட்டு ஏற்றுக்கொண்டு வாழ்கின்றோம்."நாம் நம்முடைய பண்பு, கலாச்சாரங்கள், உணவுப்பழக்கங்கள் தான் மிக உயர்ந்தது என்றும், சரியானது என்றும் நினைக்கிறோம். இதுதான் சரி மற்ற மதங்கள் மற்றவர்களுடைய கருத்துக்கள் இவற்றை ஏளனமாகவும், அலட்சியமாகவும் எடைபோடுகின்றோம். இதிலிருந்தே தெரிகின்றது. அவரவர்களுடைய மதங்களைப் பற்றி தெளிவாகத் தெரியாமலேயே அலட்சியப்படுத்துகிறோம் என்று.எல்லோரும் ஒன்றுதான். அவர்களுடைய சௌகரியப்படி கோவில், மாஸ்க், சர்ச், புத்த, ஜைன போன்ற வழிபாடுகளில் ஈடுபடுவது அவர்களுடைய சொந்த விஷயம். அதில் தலையிடுவதில் நமக்கு எந்த வித அதிகாரமும் கிடையாது. கலாச்சாரம், உணவு, உடை விஷயத்தில் நம்மைப் போலவே இருக்க வேண்டும் என்று சொல்வதும் சரியாக இருக்காது. நாம் அனைவரும் ஒரே குலத்தைச் சேர்ந்தவர்கள்தான். நமக்கு ஒரே தெய்வம் தான். அவரவர்களுடைய சூழ்நிலைக்கும் மனநிலைக்கும் ஏற்ப வெவ்வேறு விதங்களில் கடவுளை வழிபடுகின்றனர்.  எந்த முறையில் வழிபாடு செய்தாலும் கடைசியில் நாடுவது, நம்முடைய வயிற்றுப் பசியையும், நம்மையும் காப்பாற்றும் நமக்கும் அப்பாற்பட்ட ஒரு தெய்வசக்தியைத் தான்.ஏரியின் அருகே உள்ளவர்கள் மீனை சைவ உணவாக ஏற்றுக்கொள்கின்றனர். தைவான் நாட்டுக்காரர்கள், சீனர்கள் கடல் பாசத்தையும், பாம்பையும் சுவைபட சாப்பிடுவார்கள். நமக்கு முகம் கோணலாகிறது என்றால் ,அவர்கள் நம்முடைய சாப்பாட்டைக் கண்டு முகத்தை சுழித்துக் கொள்கின்றனர்.பாய்வீட்டுப் பிரியாணி, ஐயர்வீட்டு வெண்பொங்கல், உழவர் வீட்டுக் கூழ், டேவிட் பேக்கரி கேக், செட்டிநாடு வெள்ளையப்பம் இவற்றை சாப்பிடும்பொழுது நம்முடைய நாக்கு ஜாதி, மதம் பார்த்ததுண்டா? வித்தியாசங்களால் பார்ப்பது நம் மனம் தானே !.அவரவர்களுடைய வேலையைச் செய்து  கொண்டு, நமக்கு நம்முடையது, சரியானது, அவர்களுக்கு அவர்களுடையது சரியானது என்ற மனப்பான்மையுடன் வாழ்ந்தால் ஜாதிச் சண்டை எங்கே? மதக் கலவரம் எங்கே?நம்மாளுப்பா! என்று அனைவரையும் நினைப்பதே பரந்த மனப்பான்மை. மனிதனுக்கு மனிதன் வேற்றுமை பாராட்டாமல் உதவுவது அன்பானதொரு சமுதாயத்தை உருவாக்கும்.குணா பாஸ்கர் ராஜா, 

Jul 01, 2025

சின்ன விஷயம் .

 சின்னக் குழந்தைகள் சண்டை போடுகின்றனர். ரஜினி, ஜாக்கி, செராப் ஸ்டைலில் சண்டை போடுகிறார்கள். ரசிக்கின்றனர், பல பெரியவர்கள், 'சண்டை போடுகிறான் பாரு', 'சூப்பரா போடுகிறான்' என்று ரசித்து சந்தோஷப் படுகின்றனர். பெற்றோர்கள் ஊக்குவித்ததால் அக்குழந்தை மனதில் பயமின்மையால் அதே சண்டையை பள்ளியில் பெஞ்ச் மீது தாவிக் குதித்து தன் மண்டையை உடைத்துக் கொண்டு 'கோமா' நிலையடைந்து படுக்கையில் இருக்கிறான். சின்ன விஷயந்தானே என்று அலட்சியப் படுத்தியதின் பின் விளைவு எப்படி இருக்குய்யா! காலில் துருப்பிடித்த இரும்புக் கம்பிகுத்திவிட்டது. சின்ன காயம் தானே போகட்டும். துடைச்சி மண்ணை தெளித்து ஒட்டிக்கொள் என்று விட்டு விடுகின்றனர். அந்தக் குழந்தையின் காலில் புரை ஏறி விட்டது. தாங்க முடியாத வலியுடன் டாக்டரிடம் செல்கின்றனர். டாக்டர் பார்க்கிறார். ஏய்யா! நீ படிச்சவன் தானே? புண் வந்து 2 மாசமாக இருக்கு இப்போ சொல்றியே! முன்னமே வர வேண்டியது தானே! இன்னும் ஒரு வாரம் ஆகியிருந்தால் காலையே எடுக்க வேண்டியிருக்கும். 'இப்பவாவது வந்து தொலைஞ்சியே' என்று ஏசும் டாக்டர்களைப் பார்த்திருக்கிறோம். சின்ன விஷயம் தானே என்று அலட்சியப் படுத்தியதின் பின் விளைவுகளைப் பார்த்தீங்களா? எப்பேற்பட்ட விபத்தினைக் கொண்டு வருகிறது. வேறு சில சின்ன விஷயங்கள் எத்தனை நன்மைகளை உண்டாக்குகிறது என்று பார்க்கலாமா? ஆலமரவிதை சின்னதாக ரவை சைஸ்ஸீக்குத் தான் இருக்கும். அதை ஊன்றி வைத்தால் மெதுவாக குச்சி மாதிரி வளர்ந்து சின்ன கிளைவிட்டு அதிலிருந்து மற்றொரு கிளைவிட்டு அப்படி, இப்படி வளர்ந்து விழுதுகளுடன் கூடிய மரமாக மாறி கம்பீரமாக நிற்கிறது. அப்பொழுது கொஞ்சம் சிந்தித்தோமானால் அந்த இத்துணூண்டு விதையை விதைத்து தண்ணீர் விட்டதின் பின்விளைவைப் பார்த்தால் ரெம்பவும் மகிழ்ச்சியாக இருக்கும். அம்மரங்கள் பறவைகளின் சரணாலயமாகவும், குரங்குகளின் இருப்பிடமாகவும் திகழும். அதைவிட ஒருபடி மேல் சென்று கல்யாணச் சமையலும், கல்யாணமும் அம்மர நிழலில் அமோகமாக நடைபெறுவதை நாம் கண்கூடாக கிராமங்களில் பார்க்கிறோம். அந்தச் சின்ன விதை எத்தனை - பேருக்கு இருப்பிடமாகவும், நிழல் தருவதாகவும் இருக்கிறது. ஒரு பெரியவர் வெளியூருக்குச் செல்ல எந்த பஸ்ஸில் ஏறுவது என்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த நேரத்தில் 26 வயது மதிக்கத்தக்க வாலிபன் அப்பெரியவரிடம் ஐயா எங்கே போகணும் என்று கேட்டு, அவர் செல்ல வேண்டிய பஸ்ஸில் ஏற்றி பஸ்ஸில் உட்கார வைத்து விட்டு வெளியில் செல்கிறான். அந்த 10 நிமிட உதவி அப்பெரியவருக்கு எவ்வளவோ சந்தோஷத்தைக் - கொடுத்து 'மஹாராசா' 'நீ நல்லாயிருக்கணும்' என்று வாழ்த்துகிறார். அந்தச் சின்ன உதவி (தர்மம்) சொர்க்கத்தை விட மேலானதாகிறது. நன்றாகப் படிக்கும் ஊமைப் பையனுக்கு பெரிய படிப்பு படிப்பதற்கு வசதியில்லை. யாரிடம் கேட்பது என்பது தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறான். ஒருவர் தன்னால் முடியாது என்று தெரிந்தும் தனக்குத் தெரிந்த தனவான்களிடம் எடுத்துரைத்து அக்குழந்தை மேலும் படிப்பைத் தொடர்வதற்கான பண உதவியைச் சேர்த்துக் கொடுக்கிறார். தன்னிடம் இல்லை. இன்னொருத்தரிடம் சொல்வது சின்ன விஷயம் தான். அதனுடைய பின் விளைவு, அச்சிறுவனுக்கு மிகப் பெரிய கல்வி செல்வம் கிடைப்பதற்கு முக்கிய காரண கர்த்தாவாகிறார்.சின்ன விஷயம் தானே என்று அலட்சியப் படுத்தாமல் கவனித்துச் செய்யலாமே!  இதைப்படிப்பது சின்ன விஷயம் தான். ஆனால் எத்தனை விஷயங்கள் அடங்கியிருக்கிறது இல்லையா! 

May 31, 2025

தர்ம சிந்தனை

தர்மம் செய்தல் என்பது பணம் இருந்தால்தான் செய்ய முடியும். 1 ஆம் தேதி சம்பளம் வாங்குவதற்குள் 30 ஆம் தேதி வரை சிரமப்பட்டு ஓட்டுகின்ற குடும்பத்தினர் தர்மசிந்தனையாவது தர்மமாவது என்று விட்டு விடுகின்றனர். 'தனக்குப் போகத் தானம் செய் என்பதை கெட்டியாக பிடித்துக் கொள்கின்றனர். இது தவறான எண்ணம் ஆகும்.தர்மம் என்பது பணத்தால்தான் முடியும் என்பதே கிடையாது. மனதால் தான் உள்ளது. எது தர்மம் என்று தெரியாமலே பலர் இருக்கின்றனர். உன் வீட்டின் அருகில் ஒரு தர்மசிந்தனை உள்ளவன் மரக் கன்றுகளை நட்டு வைக்கிறான் அதற்கு நாம் தண்ணீர் ஊற்றினால் அது தர்மம். அவன்தானே வைத்தான் என்று நாம் திருப்பிப் பார்க்காமல் இருப்பது அதர்மம். ஒருமுதியவர் கஷ்டப்பட்டு பாரத்தை சுமந்து சென்று கொண்டிருக்கிறார், அவரைப் பார்த்துக் கொண்டே அதே வழியில் செல்லும் இளைஞன் ,அந்த பாரத்தை அவன் செல்லும் வழி வரையாவது தூக்கினால் அது தர்மம்.என்னதான் உனக்கு கஷ்டம் இருப்பினும் பணத்தால் முடியாவிட்டால் மனதளவில் என்ன முடியுமோ அதைச் செய்தால், அது பெரிய தர்மம். பிறருக்கு உதவும் மனப்பான்மையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். கணவனை இழந்த பெண் தன் குழந்தைகளை வைத்துக் கொண்டு கஷ்டப்படுகிறாள் என்றால், அந்த தெருவில் உள்ள அனைவரும் அவளுடைய ஜீவனத்திற்கு தங்களால் ஆன பல உதவிகளைச் செய்தால், அந்த நன்றி கலந்த பார்வையினால்  ஏற்படும்  திருப்திக்கு ஆயிரம் கோடி கொட்டிக் கொடுக்கலாம். பிரதி பலன்களை எதிர்பார்க்காமல் உதவ வேண்டும் என்ற தர்மசிந்தனைகளை நம்மிடம் கூடக்கூட நம்முடைய ஆத்மா சுத்தமடைகின்றது. ஆத்மா சுத்தமடைய அடைய உங்களுடைய எண்ணங்களும் நல்ல எண்ணங்களாக பிரகாசிக்கும். பகைவனாக இருந்தாலும் தர்மம் செய்தால் நாமும் பகைமை மறந்து விடுவோம். அவர்களும் நம்மிடம் அபரிதமான பாசக்கரம் நீட்டுவார்கள். கெடுதல் செய்தவர் நம்மைப் பார்த்து உங்களுக்கு நான் தீமை செய்தேனே என்று வெட்கப்படும் அளவிற்கு நன்மை செய்ய வேண்டும். தர்மத்தை ஜாதி, மதம், பேதம், நேரம், குணம், தரம் என்று பார்க்காமல் செய்வது தெய்வ சேவைக்கு சமமானது. 

Apr 30, 2025

சமுதாயம் முன்னேறுகின்றதா?

நாம் எங்கே செல்கிறோம் என்று தெரியாமலே பல விஷயங்களில் முன்னேறுவதும் ,பின்தங்குவதும் சகஜமாகிவிட்டது. முன்பைவிட இப்பொழுது எவ்வளவோ முன்னேறியிருக்கிறோம் என்று கூறினாலும் எப்படி? என்ற கேள்வி எழுகின்றது. விஞ்ஞான முன்னேற்றம் ஒரு பக்கம் இருந்தாலும் மனிதனுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் என்ன முன்னேற்றம். முன்பு 200ரூ சம்பளத்தில் சுபிட்சமாக வாழ்க்கை நடத்தி மிச்சம் வைத்து சந்தோஷித்த ,அதே மக்கள் இன்று 20,000 ரூபாய் கிடைத்தாலும் ஏதோ ஒன்று குறைகின்றது என்று தான் கூறுகின்றார்கள்.சாதாரணமாகஒருவீடுஎன்றுஎடுத்துக்கொள்வோம்.இன்றையதேவைகள்? முதலில்கரண்ட், பேன், ரேடியோ, பிரிட்ஜ், கிரைண்டர், மிக்ஸி, டி.வி. ஏ.சி., டெக், மைக்ரோ வேவ் ஓவன், சைக்கிள், ஸ்கூட்டர், கார் ஒரு காரல்ல 2 கார், சொகுசான மாளிகை, பாரின் டூர் இப்படி அடுக்கிக் கொண்டே செல்கிறோம். இதெல்லாம் இருப்பினும் புதிய வரவு செல்போன், ஹோம் தியேட்டர் என்று ஆரம்பித்து இளைய சமுதாயத்தினர் வீட்டிற்கு உள்ளே வரும்பொழுது கேட் திறக்க ஆளில்லை என்று ஆட்டோமேட்டிக்காக திறக்கும் வசதியை வெளிநாடுகளைப்போல நாமும் ரிமோட் வைத்துத் திறக்க வேண்டும்  என்று அசை போட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த வசதிகளெல்லாம் நம்முடைய நேரத்தை மிச்சப்படுத்தத்தானே? புதிய வரவுகளால் கிடைக்கும் நேர மிச்சத்தை நாம் உழைத்து முன்னேற உபயோகப்படுத்த வேண்டும். விஞ்ஞான முன்னேற்றத்தின் வசதிகளையெல்லாம் சுலபத்தவணைகளில் வாங்கி ( EMI ) அதனால் கிடைக்கும் நேர மிச்சத்தை என்ன செய்கின்றனர்.  இளைஞர்கள்,  பெண்கள்  தங்களது கடமைகளை மறந்து லேட்டஸ்ட் சினிமா, பல விதமான ஹோட்டல் சாப்பாடுகளை சாப்பிடுவது, பிரண்ட்ஷிப் வட்டாரங்களை பெருக்குவதாகக் கூறிக் கொண்டு கிளப், பார்ட்டி, என்று அலைகின்றனர். இவர்கள் இப்படி என்றால் பெரியவர்கள்  செல்போன்,  டி.வி., என்ற போதை வஸ்துவிற்கு அடிமையாகிவிட்டனர். டி.வி. என்பது பொழுது போக்கிற்கான நிகழ்ச்சிதான். அதை முழு நேர தொழிலாக மிச்சமாகும் நேரத்தை வீணாக்கி, சமுதாயப் பேரழிவிற்கு வழிவகுக்கின்றனர்.  நம்முடைய டென்ஷனைக் குறைக்க நாம் டி.வி, செல்போனை பொழுது போக்காக எடுத்துக் கொண்டாலும் ,அதில் உள்ள நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக் கொண்டு, மற்றவற்றை விட்டு விட வேண்டும். இளைஞர்களிலிருந்து முதியோர் வரை சுண்டி இழுக்கும், கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பை ரெம்பவே குறைக்க வேண்டும். இவற்றில் காண்பிக்கப்படும் வன்முறை, வக்கிரம், தீவிரவாதம் போன்றவற்றின் கொடூரமான பாதிப்பை மக்கள் அறிய முடிகின்றது.. உலகத்தில் கண்கூடாகப் பார்க்க முடிகின்றது. அந்தக் காலத்தில் யசோதை கிருஷ்ண பரமாத்மாவின் வாயில் உலகத்தை அப்படியே பார்த்த மாதிரி நம் எல்லோர் வீட்டிலும் டி.வி. பெட்டியில் உலக நிகழ்ச்சி அனைத்தையும் பார்க்கிறோம். கிருஷ்ணர் எப்படி தீயசக்தியை அழித்தும், நியாயத்தை நிலைநாட்டியும் வாழ்ந்து காட்டினார். சமுதாயம் முன்னேற வேண்டுமென்றால் குடும்ப ஓற்றுமை, கலாச்சார பண்பு, அன்பு மட்டும் போதாது.நேரத்தை முறையாகப் பயன்படுத்துவது நம்முடைய முன்னேற்றத்தில் 50% பங்கு கொள்கின்றது. அதனால் இயந்திர கதியில் எந்த நேரமும் ,நேரத்தை -வீணாக்காமல் வேலை, வேலை என்றால் என்ன ஆகும்? மன நிம்மதியும் பாதிக்கப்படும். எந்த ஒரு செயலையும் காலம், இடம், நேரம்  அறிந்து  நம் சமுதாயத்தை நாம் முன்னேற்ற மடையச் செய்ய வேண்டும். 

Mar 31, 2025

குடும்பம் ஒரு கோவில் .

ஒரு குடும்பம் சந்தோஷமாக இருப்பதற்கு வீட்டில் உள்ள ஒவ்வொருவருடைய நடவடிக்கையும், சரியான அளவில் இருக்க வேண்டும். முக்கியமாகவிட்டுக்கொடுத்துச்செல்லவேண்டும்.குடும்பத்தில்உள்ளமாமனார், மாமியார், தாய்,தந்தை, மகன், மகள், மருமகன், மருமகள், சகோதர, சகோதரிகள் தனக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ அதற்குத் தகுந்தாற் போல் நடந்து கொள்ள வேண்டும். வரம்பு மீறும் பொழுதுதான் பிரச்சனை ஏற்படுகின்றது.மாமியார் தான் மருமகளாக இருக்கும்பொழுது ,நம் மாமியார் இப்படி நடந்து கொண்டால் நன்றாக இருக்குமே ,என்று நினைத்ததை தன் மருமகளிடம் காண்பிக்க வேண்டும். அதைத் தவிர்த்து தான் பட்ட கஷ்டத்தைப் போல மருமகளும் படட்டும் என்று நினைப்பது கூடாது. மருமகள் நாமும் ஒரு நாள் மாமியாராப் போகிறோம் என்று நினைவில் வைத்துக் கொண்டு ,நம் மருமகள் தவறாக நடந்து கொண்டால் கஷ்டம்தானே! நாத்தானாரும் திருமணம் ஆகி புகுந்த வீட்டிற்குச் சென்றால்.....என்று பட்டியலிட்டுக்கொண்டே செல்லலாம்.. குடும்ப உறுப்பினர்களிடையே ஒருவருக்கொருவர், பொருளாதார நிலைமையைச் சுட்டிக் காட்டி சுடு சொற்களாகவும், மரியாதை குறைவாக நடந்து கொண்டால் காலப்போக்கில் பொருளாதாரத்திற்காக நம்மால் அவமதிக்கப்பட்டவர்கள் செல்வத்திலும், செழிப்பிலும் நம்மைவிட மிஞ்சும் நேரம் வரும். ஆனால் நம்மால் செய்யப்பட்ட அவமானம் ஒருகாலும் மறையவே மறையாது.நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றால், குடும்பத்து அங்கத்தினர்களின் எல்லோருடைய நிலைமையிலும், நாம் இருப்பதாக பாவித்துக் கொண்டு ,எந்த ஒரு வார்த்தையையும் ,அவசரகதியில் கொட்டிவிடாமல் யோசித்து, அவரவர்கள் இருக்க வேண்டிய இடத்தில், வரம்பை மீறாமல் நடந்து கொண்டால் குடும்பம் ஒரு கோவில்தான். இல்லாவிட்டால் தறி கெட்டு ஓடும் ரேஸ் குதிரையைப் போல், நம் குடும்ப கெளரவம் பறைசாற்றப்படும். குடும்பம் என்ற கோவிலை காப்பாற்றும் பொறுப்பு நம்மிடம்தான் உள்ளது. 

Feb 28, 2025

காற்றுக்கென்னவேலி

இவ்வுலகில் நாம் காணும் அனைத்துப் பொருள்களும், உயிர், உயிரற்ற எல்லாமே பஞ்ச பூதங்களால் ஆனவையே. பஞ்ச பூதங்கள் என்றால் பேய், பிசாசு, முனிஎன்றுபலர்தவறாகநினைத்துக்கொண்டிருக்கின்றனர்.ஆகாயம், காற்று, நீர்,நெருப்பு, பூமி, இவை ஐந்தும் பஞ்சபூதங்கள்.இந்தபஞ்சபூதங்கள்யாரையும்வித்தியாசம்பார்ப்பதில்லை.எல்லாவற்றிற்கும் தன் குணத்தைக் காட்டிக் கொண்டே செல்கின்றது.காற்று தென்றலாக வீசும் பொழுது பணக்காரனுக்கு மட்டும் வீசி விட்டு மற்றவர்களை விட்டு விடுமோ? அதற்கு ஏழை, பணக்காரன், நண்பன், விரோதி என்ற பாகுபாடே கிடையாதே. புயல்காற்று அடிக்கும் போதும் சமமாகத்தான் அனைத்தையும் அழிக்கும். காற்று தன் கடமையைச்‘’சிவனே’ என்று கறாராகச் செய்கிறது. எல்லா பஞ்சபூதங்களின் வேலையும் அது தானே! ஏற்றத் தாழ்வுகள் எல்லாம் மனித மனங்களுக்கு மாத்திரம் தான். ஏற்றத்தையும், தாழ்வையும் தன்னாலே உண்டு பண்ணி ,அதற்குண்டான துக்கத்தை அனுபவித்துக் கொண்டு ‘நிம்மதியே இல்லை’ என்று அலைகிறோம். வசதி படைத்தவர்களுக்கு ஒரு மரியாதை கொடுக்கின்றனர். ஏழைகளை அலட்சியப்படுத்துகின்றனர். இந்த பாகுபாடு பகுத்தறியும் ஆற்றல் உடைய நமக்கு, ஏன்? இந்த கீழ்த்தரமான குணம்.பஞ்ச பூதங்களின் இணைப்பினால் ஆன நமக்கு அதனுடைய மேலான குணம் இல்லாமல் போனதற்குக் காரணம் என்ன? சுயநலம் தான். நான், எனது என்ற கர்வம், புகழ் மயக்கம் ஆகிய மனித குணங்கள், நம்மை மிருகங்களாக்கி விடுகின்றன.மனிதர்களாகிய நாம் அன்புடன் நம்மைச் சுற்றியுள்ள அனைவரிடமும்தென்றல்காற்றாகவும், கண் எதிரே அநியாயங்கள் நடக்கும் பொழுது அதை அழிக்கும் புயலாகவும் மாறலாம்.துரோபதியை அவமானப்படுத்தும் பொழுது நடுச்சபையில் பீஷ்மர், திருதராஷ்டினர்,துரோணர்,யாருமே தட்டிக் கேட்காமல் இருக்கப்போய்தான் குருஷேத்திரப் போர் முண்டது. முளையிலேயே கிள்ளி எறிந்தால் இந்தப்போர் வந்திருக்காதல்லவா?மனிதாபிமானத்துடன் தட்டிக் கேட்கவேண்டும். வன்முறையில் அல்ல!' 

1 2 3 4

AD's



More News