ஒன்றே குலம் ஒருவனே தேவன் .
நாம் எந்த மண்ணில் பிறக்கிறோமோ ,அந்த சூழ்நிலைக்கும், பெற்றோர்கள் ஏற்றுக்கொண்டு நடத்தும் மதத்துடனும், கலாச்சாரத்துடனும் ஒன்றுபட்டு ஏற்றுக்கொண்டு வாழ்கின்றோம்."
நாம் நம்முடைய பண்பு, கலாச்சாரங்கள், உணவுப்பழக்கங்கள் தான் மிக உயர்ந்தது என்றும், சரியானது என்றும் நினைக்கிறோம். இதுதான் சரி மற்ற மதங்கள் மற்றவர்களுடைய கருத்துக்கள் இவற்றை ஏளனமாகவும், அலட்சியமாகவும் எடைபோடுகின்றோம். இதிலிருந்தே தெரிகின்றது. அவரவர்களுடைய மதங்களைப் பற்றி தெளிவாகத் தெரியாமலேயே அலட்சியப்படுத்துகிறோம் என்று.
எல்லோரும் ஒன்றுதான். அவர்களுடைய சௌகரியப்படி கோவில், மாஸ்க், சர்ச், புத்த, ஜைன போன்ற வழிபாடுகளில் ஈடுபடுவது அவர்களுடைய சொந்த விஷயம். அதில் தலையிடுவதில் நமக்கு எந்த வித அதிகாரமும் கிடையாது. கலாச்சாரம், உணவு, உடை விஷயத்தில் நம்மைப் போலவே இருக்க வேண்டும் என்று சொல்வதும் சரியாக இருக்காது.
நாம் அனைவரும் ஒரே குலத்தைச் சேர்ந்தவர்கள்தான். நமக்கு ஒரே தெய்வம் தான். அவரவர்களுடைய சூழ்நிலைக்கும் மனநிலைக்கும் ஏற்ப வெவ்வேறு விதங்களில் கடவுளை வழிபடுகின்றனர்.
எந்த முறையில் வழிபாடு செய்தாலும் கடைசியில் நாடுவது, நம்முடைய வயிற்றுப் பசியையும், நம்மையும் காப்பாற்றும் நமக்கும் அப்பாற்பட்ட ஒரு தெய்வசக்தியைத் தான்.
ஏரியின் அருகே உள்ளவர்கள் மீனை சைவ உணவாக ஏற்றுக்கொள்கின்றனர். தைவான் நாட்டுக்காரர்கள், சீனர்கள் கடல் பாசத்தையும், பாம்பையும் சுவைபட சாப்பிடுவார்கள். நமக்கு முகம் கோணலாகிறது என்றால் ,அவர்கள் நம்முடைய சாப்பாட்டைக் கண்டு முகத்தை சுழித்துக் கொள்கின்றனர்.
பாய்வீட்டுப் பிரியாணி, ஐயர்வீட்டு வெண்பொங்கல், உழவர் வீட்டுக் கூழ், டேவிட் பேக்கரி கேக், செட்டிநாடு வெள்ளையப்பம் இவற்றை சாப்பிடும்பொழுது நம்முடைய நாக்கு ஜாதி, மதம் பார்த்ததுண்டா? வித்தியாசங்களால் பார்ப்பது நம் மனம் தானே !.
அவரவர்களுடைய வேலையைச் செய்து கொண்டு, நமக்கு நம்முடையது, சரியானது, அவர்களுக்கு அவர்களுடையது சரியானது என்ற மனப்பான்மையுடன் வாழ்ந்தால் ஜாதிச் சண்டை எங்கே? மதக் கலவரம் எங்கே?
நம்மாளுப்பா! என்று அனைவரையும் நினைப்பதே பரந்த மனப்பான்மை. மனிதனுக்கு மனிதன் வேற்றுமை பாராட்டாமல் உதவுவது அன்பானதொரு சமுதாயத்தை உருவாக்கும்.
குணா பாஸ்கர் ராஜா,
0
Leave a Reply