கேரளா பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ள ஆரன்முழா திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழ்கிறது. அர்ஜூனன் பூஜித்த குறளப்பன் இங்கு மூலவராக இருக்கிறார். இவரை வழிபட்டால் நம் குறை அனைத்தும் தீரும். பாண்டவர்கள் வனவாசம் சென்ற போது கோளப்பகுதிக்கு வந்தனர். பம்பா நதிக்கரையில் நிலக்கல் என்னுமிடத்தில் பெருமாள் சிலை ஒன்றை அமைத்து அர்ஜூனன் வழிபட்டான். பின்னர் சிலையை ஆறு மூங்கில்களால் ஆன கட்டுமரம் ஒன்றில் வைத்து பம்பை ஆற்றில் விட்டான். கரை ஒதுங்கும் இடத்தில் யாராவது கோயில் கட்டட்டும் என்பதே அவனது எண்ணம். மலையாளத்தில் 'ஆறு முழா' (ஆறு மூங்கில்) என்பதற்கு 'ஆறு மூங்கில்' எனப் பொருள்.சிலையைச் சுமந்த கட்டுமரம் ஆறு மூங்கில்களால் ஆனதால் இத்தலம் 'ஆறுமுழா எனப்பட்டது. காலப்போக்கில் 'ஆரன்முழா' என மாறியது.சிலை கரை சேர்ந்த இடத்தில் பம்பை நதிக்கரையில் இளம்துறவி ஒருவர் வாழ்ந்தார். பெரும் பள்ளமாக இருந்த இப்பகுதியைத் தன் தவசக்தியால் மேடாக்கி கோயில் கட்டினார்.கேரளாவில் மற்ற கோயில்களை விடவும் உயரமான இடத்தில் கோயில் இருப்பது இங்கு மட்டுமே. கிழக்கு நோக்கியபடி நின்ற கோலத்தில் திருக்குறளப்பன் என்ற பெயரில் மூலவர் இருக்கிறார். தாயார் பெய பத்மாசினி. நம்மாழ்வார் இங்கு பாடியுள்ளா பிரம்மாவின் வேண்டுகோளுக்கு இணங்கி, இங்கு பெருமாள் வாமன மூர்த்தியாக காட்சியளித்துள்ளார்.'வல்லங்களி' எனப்படும் பிரபலமானபடகு போட்டி உருவானது இங்கு தான்.ஆண்டு தோறும் ஆவணி மாத உத்திரட்டாதி நட்சத்திரத்தன்று பம்பை நதியில் போட்டி நடக்கும். அர்ஜூனனின் பிறந்த நாளான அன்று வல்லங்களி கொண்டாடப்படுகிறது. 300 ஆண்டுக்கும் மேலாக இப்போட்டி நடக்கிறது.இங்குள்ள வன்னி மரத்தின் காயை எடுத்து தலையை மூன்று முறை சுற்றி வீசினால் நோய் தீரும்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் திருவனந்தபுரம் சாலையில் உள்ள குழித்துறையில் மகாலட்சுமி கோயில் உள்ளது. இங்கு வழிபட்டால் பணம் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும்.300 ஆண்டுக்கு முன்பு கேரளாவில் இருந்து தேவியர் சிலைகள் குழித்துறை பகுதிக்கு வந்தன. அதில் தாமிரபரணி நதிக்கரையில் உள்ள மகாதேவர் கோயிலுக்கு அருகில் கிழக்கு நோக்கி சாமுண்டிதேவி கோயிலும், சற்று தொலைவில் வடக்கு நோக்கி மகாலட்சுமி கோயிலும் அமைக்கப்பட்டன.மகாலட்சுமிக்கு தனி கோயில் இருப்பது மிக அபூர்வம். நின்ற நிலையில் உள்ள மகாலட்சுமியின் சிலை 3/4 அடி உயரம் கொண்டது. தாயாரின் கருணையான முகமும், வலது கையில் கொடுவாளும், இடது கையில் பாசக்கயிறும், பின்னிரு கைகளில் சங்கு, சக்கரமும்,தாமரை மீதமர்ந்த கோலமும் தரிசிப்போரின் பாவத்தை போக்கி விடும். கன்னி மூலையில் கணபதி, இடதுபுறம் பூதத்தான் சன்னதிகள், வெளிப்புறம் மடப்பள்ளி, அருகில் பஜனை மடம் உள்ளன.வெள்ளி அன்று மகாலட்சுமிக்கு பால் பாயாசம் நைவேத்யம் செய்தால் பணப் பிரச்னை வராது. பணப்புழக்கம் அதிகரிக்கும். காஞ்சி மஹாபெரியவர் இங்கு தரிசனம் செய்துள்ளார். பகவதி சேவை (ஐஸ்வர்ய பூஜை) தனலட்சுமி பூஜை, சுயம்வர அர்ச்சனை, லலிதா சகஸ்ரநாமம், சண்டிகா ஹோமம் போன்றவை நடக்கின்றன.
ராமானுஜர் திருப்பணி செய்த தலம் மைசூரு அருகிலுள்ள திருநாராயணபுரம் திருநாராயணர் கோயில். அடிவாரத்தில் திருநாராயணரும், மலை மீது யோகநரசிம்மரும் அருள்புரிகின்றனர். இவர்களை தரிசித்தால் விருப்பம் நிறைவேறும். நல்ல திருப்பம் உருவாகும்.மகாவிஷ்ணுவிடம் இருந்து விஷ்ணு சிலை ஒன்றைப் பெற்றார் பிரம்மா. அதை மகனான சனத்குமாரருக்கு கொடுத்தார். பூலோகம் வந்த சனத்குமாரர் திருநாராயணபுரத்தில் அச்சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவரே இங்கு நாராயணப் பெருமாளாக இருக்கிறார். சாண்டில்ய மகரிஷி இங்கு தவமிருந்து பெருமாளை பத்ரி நாராயணராகத் தரிசிக்கும் பேறு பெற்றார். இங்கு வழிபட்டால் பத்ரிநாத்தை தரிசித்த பலன் கிடைக்கும். பெருமாளையே கணவராக எண்ணி வாழ்ந்த வரத நந்தினி என்னும் பக்தை, மூலவரின் திருவடியில் இருக்கிறாள். உற்ஸவர் செல்வ நாராயணர் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் இருக்கிறார். யதுகிரித் தாயார் தனி சன்னதியில் இருக்கிறார். ஸ்ரீரங்கம், ஸ்ரீபெரும்புதுார், திருக்கோஷ்டியூர் போலவே இங்கும் ராமானுஜருக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. உபதேச முத்திரையுடன் காட்சி தரும் இவர் பக்தர்களின் குறை கேட்டு நிவர்த்தி செய்யும் பாவனையில் இருப்பதால் 'பேசும் யதிராஜர் (ராமானுஜர்)' எனப்படுகிறார். இங்குள்ள இசைத்துாண் காண்போர் வியக்கும் விதத்தில் கலை நுட்பத்துடன் செதுக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மலைக்கோட்டையில் யோக நரசிம்மர் கோயில் உள்ளது. பிரகலாதனுக்காக விஷ்ணு, நரசிம்மராக அவதரித்து இரண்யனைக் கொன்றார். தந்தை இறக்க காரணமாக இருந்த பிரகலாதனுக்கு 'பிதுர்ஹத்ய தோஷம்' ஏற்பட்டது. இதைப் போக்க இத்தலத்தில் தவம் புரிந்தார். அவருக்கு யோக நிலையில் காட்சியளித்து நரசிம்மர் தோஷம் போக்கினார்.அவரேஇங்கு வீற்றிருக்கிறார்.அடிவாரத்திலுள்ளதீர்த்தக்கரையில்பிந்துமாதவன், நாராயணன், லட்சுமிநரசிம்மர், மாருதி சன்னதிகள் உள்ளன. 400 படிகள் ஏறினால் மலைக்கோட்டைக் கோயிலை அடையலாம்.நரசிம்மர் சன்னதியின் முன் நவக்கிரகங்கள் ஒன்பதும் படிக்கட்டுகளாக உள்ளன. இதில் ஏறி யோக நரசிம்மரைத் தரிசித்தால் கிரக தோஷம் நீங்கும்.
அமாவாசை தலமான அய்யாவாடியில் காளியின் அம்சமான பிரத்யங்கிராதேவி அருள்புரிகிறாள். போரில் வெற்றி பெறுவதற்காக ராமர், யாகம் நடத்தி அம்பிகையை இங்கு வழிபட்டார். சரபேஸ்வரரின் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றிய இவள் கரிய நிறத்துடன் சிங்க முகம், 18 கைகளுடன், சிரித்த முகத்துடன் காட்சி தருகிறாள். அமாவாசையன்று அம்மனுக்கு காலை முதல் மதியம் வரை நிகும்பலா என்னும் மிளகாய் வத்தல் யாகம் நடக்கும். இதில் மிளகாயின் நெடி இருப்பதில்லை. அமாவாசையன்று இங்கு வருவோருக்கு ஏதிரி, கடன் தொல்லை மறையும்.கும்பகோணம் உப்பிலியப்பன் கோயிலில் இருந்து 3 கி.மீ.,
மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் குடியிருக்கும் மகாலட்சுமியை தரிசித்தால் செழிப்பான வாழ்வு அமையும். இந்த அம்மனை வழிபடும் விதத்தில் ஆண்டுக்கு ஆறு நாள் கருவறையில் மகாலட்சுமி மீது சூரியன் கதிர்களைப் பரப்புகிறார்.பிரளயகால வெள்ளத்தில் கடல் பொங்கி பூமி அழியத் தொடங்கியது.ஆனால் பூமியில் ஒரே ஒரு பகுதியை மட்டும் மகாலட்சுமி வலது கையை உயர்த்தி அழிவில் இருந்து காப்பாற்றினாள். அந்த இடம் 'கரவீர்' எனப்பட்டது. 'கர' என்றால் 'கை', 'வீர்' என்றால் 'வீரம்' என பொருள். வீரச்செயல் புரிந்ததால் 'வீரலட்சுமி' 'தைரிய லட்சுமி' என மகாலட்சுமி பெயர் பெற்றாள். இத்தலம் காசிக்கு நிகரான புண்ணிய தலமாக விளங்க வேண்டும் என சிவனிடம் அகத்தியர் கோரிக்கை வைக்க அவரும் அருள்புரிந்தார். கோலாசுரன் என்ற அரக்கனை சிங்க வாகனத்தில் எழுந்தருளி மகாலட்சுமி வதம் செய்ததால் 'கோலாப்பூர்' எனப் பெயர் பெற்றது.சக்தி பீடங்களில் இத்தலம் 'கரவீர பீடம்' எனப்படுகிறது. மராட்டியர் பாணியில் கட்டப்பட்ட இக்கோயிலில், மகாதுவாரம் என்ற பிரதான மேற்கு வாசலில் அழகிய தீபத்துாண்கள் காண்போரை கவர்கின்றன. கருவறையில் ஆதிசேஷன் குடைபிடிக்க மகாலட்சுமி சதுர பீடத்தில் அமுதசுரபியை ஏந்தியபடி நிற்கிறாள் 1300 ஆண்டுகள் பழமை மிக்க இச்சிற்பம் அரிய கருரத்தினக் கல்லால் ஆனது.சூரியன் இங்கு மகாலட்சுமியை வழிபடும் விதத்தில் ஆண்டின் ஆறு நாட்கள் மாலை நேரத்தில் கருவறையில் உள்ள ஜன்னல் வழியாக ஒளிக்கதிர்களை பரப்புகிறார். ஜன.31, நவ. 9 ல் மகாலட்மியின் திருவடியிலும், பிப். 1, நவ. 10ல் மார்பிலும், பிப்.2, நவ.11ல் திருமேனி முழுவதும் சூரியக்கதிர் படர்கிறது.மலர்மாலைசாத்திஅம்மனை வழிபடுவோருக்கு செல்வம்பெருகும்.காளி, சரஸ்வதி,நவக்கிரகம், பாண்டுரங்கன், காசி விஸ்வநாதர், சீதை, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயருக்கு சன்னதிகள் உள்ளன.
காளைமாடு பக்தியுடன் தினமும் சிவனை தரிசிக்கும் அதிசயம் கர்நாடக மாநிலம் மங்களூரு பாண்டேஸ்வரர் கோயிலில் நடக்கிறது.பாண்டவர்களில் மூத்தவரான தர்மர் சூதாட்டத்தில் ஈடுபட்டு சகுனியிடம் தோற்றார். இதனால் பாண்டவர்களின் மனைவியான திரவுபதியை, பலர் முன்னிலையில் துரியோதனன் அவமானப்படுத்தினான். இதற்கு பழி தீர்க்கும் வகையில், 'குருக்ஷேத்திர போரில் துரியோதனனின் தலை உருண்டால் தான் கூந்தலை முடிவேன்' என அவள் சபதம் செய்தாள். இதன் பிறகு பாண்டவர்கள் காட்டிற்குப் புறப்பட்டனர். ஓரிடத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.பிற்காலத்தில் அங்கு சிவனுக்கு கோயில் எழுப்பப்பட்டது. பாண்டவர்கள் வழிபட்டதால் சுவாமிக்கு 'பாண்டேஸ்வரர்' என பெயர் வந்தது.சிவபெருமானின் ஜடாமுடி விரிந்து கிடப்பதால் கருவறையைச் சுற்றும் வழக்கம் இக்கோயிலில் கிடையாது. கார்த்திகை திங்கள் அன்று ருத்ரயாகம் நடக்கிறது. அப்போது ருத்ராட்சம், வில்வ இலைகள், பஞ்சமிர்தத்தால் அபிஷேகம் செய்வர். இதை தரிசிப்பவர்களுக்கு எதிரி பயம் நீங்கும். முயற்சி வெற்றி பெறும்.இங்கு கோமடத்தில் உள்ள காளை மாடு தினமும் உச்சிக்கால பூஜை, இரவு நடக்கும் அர்த்தஜாமபூஜையில் பங்கேற்க சன்னதிக்கு வருகிறது. படியில் காளை ஏறியதும், சுவாமிக்கு கற்பூர ஆரத்தி காட்டுகின்றனர்.அப்போது காளை வெளி விடும் மூச்சுக்காற்று நம் உடம்பின் மீது பட்டால் வாழ்நாள் அதிகரிக்கும்.நந்தாதீபம் என்னும் பெரிய விளக்கு உள்ளது. இதில் எண்ணெய் விட்டால் கிரகபீடை விலகும். இரவு 8:00 மணிக்கு நடக்கும் ரங்காபூஜையில் சன்னதி முழுவதும் தீபமேற்றுகின்றனர். வெள்ளி அன்று ராகுகாலத்தில் (காலை 10:30-12:00 மணி) நாகதோஷத்தில் இருந்து விடுபட புற்றில் பால் ஊற்றுகின்றனர். மூலவருக்கு 108 துளைகள் உள்ள கலசத்தில் கங்கா தீர்த்தம் நிரப்பி அபிஷேகம் செய்கின்றனர். இதற்கு 'தாராபிஷேகம்' என்று பெயர். இதனால் திருமணத்தடை விலகும். தலவிருட்சமான அரசமரம் கோயிலுக்கு எதிரில் உள்ளது. எதிரிகளால் பாதிக்கப்பட்டவர்கள் நியாயம் கிடைக்க பவுர்ணமியன்று சத்தியநாராயண பூஜையும், மாதப்பிறப்பு அன்று சதுர்தாபிஷேக பூஜையும் இங்கு நடத்துகின்றனர்.காவல் தெய்வங்களான பஞ்சுளி, முண்டித்தாயா, வைத்திய நாதர், வைஷ்ணவிதேவி, லட்சுமிநாராயணர், அனுமன் சன்னதிகள் இங்குள்ளன.கோயில் முகப்பில் பிரம்மாண்ட சிவன், நந்தி சிலைகள் உள்ளன.
தஞ்சாவூர் அருகே வரகூர் லட்சுமிநாராயணர் கோயில்.நாராயணதீர்த்தர் என்னும் மகான் வயிற்றுவலியால் அவதிப்பட்டார். பல தலங்களையும் வழிபட்ட அவர் நடுக்காவேரி என்னும் இடத்தில் உள்ள விநாயகர் கோயிலில் தங்கினார். "நாளை காலையில் எழுந்ததும் யாரைக் காண்கிறாயோ அவரை பின் தொடர்ந்தால் உன் நோய் குணமாகும்" என கனவில் சுவாமி தெரிவித்தார். கண் விழித்ததும் ஒரு வெள்ளை பன்றி (வராகம்) கண்ணில் படவே அதை பின்தொடர்ந்தார். அது பூபதிராஜபுரம் லட்சுமி நாராயணர் கோயிலுக்குள் சென்றது. அவரும் அந்த பெருமாளை வழிபட்டு குணம் அடைந்தார். பன்றி வடிவில் பெருமாள் வந்த தலம் என்பதால் 'வரகூர்' எனப் பெயர் பெற்றது. முதலாம் பராந்தகச் சோழனால் இக்கோயில் கட்டப்பட்டது.நாராயண தீர்த்தர் வரகூரில் தங்கியிருந்த காலத்தில் நேரில் கிருஷ்ணரை தரிசித்தார். அவருடன் பாமாவும், ருக்மணியும் வந்திருந்தனர். அப்போது,"நாராயண தீர்த்தரே... கிருஷ்ணாவதாரத்தில் கோபியருடன் நடத்திய திருவிளையாடலை பாடுங்கள்" என பாமா வேண்டுகோள் விடுத்தார். அவரும் 'ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி' என்ற பாடலைப் பாடினார்.இங்கு மூலவரை லட்சுமிநாராயணர் என்றும், உற்ஸவரை வெங்கடேசப் பெருமாள் என்றும் அழைக்கின்றனர். துளசி,ஏலக்காய், பச்சைக் கற்பூரம், கிராம்பு, ஜாதிக்காய் கலந்த பொடி சுவாமிக்கு படைக்கப்பட்டு பிரசாதமாக தருகின்றனர். இதை சாப்பிட்டால் நோய் வராது. இங்கு 'கிருஷ்ணலீலா தரங்கிணி' பாடல்களை கிருஷ்ண ஜெயந்தியன்று பாடுவர். குழந்தை வரம் பெற அங்கப்பிரதட்சணம் செய்வர்.பண பலம் பெருக பெருமாளின் கையிலுள்ள வெள்ளிக்குடத்தில் வெண்ணெய் நிரப்புகின்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில் உள்ளது குந்தேஸ்வர் மகாதேவ் கோயில். பாண்டவர்களின் தாய் குந்திதேவி வழிபட்ட இத்தலத்திற்கு வந்தால் வெற்றி நிச்சயம்.பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் இடையே போர் நடப்பது உறுதியானது. உடனே பாண்டவர்களின் தாய் குந்திதேவி சிவபூஜை செய்தாள். ஒருநாள் அவளது கனவில் தோன்றிய சிவன், "தங்க மலர்களால் என்னை பூஜை செய். வெற்றி நிச்சயம்'' என்றார். உடனே தன் மகன் அர்ஜூனனிடம், 'தங்க மலர்கள் பூக்கும் மரத்தை கொண்டு வா" என கட்டளையிட்டாள். அவனும் கிருஷ்ணரிடம் சொல்லவே, "தங்க மலர் என்பது பாரிஜாத மலரைக் குறிக்கும்.பாற்கடலில் இருந்து தோன்றிய இந்த மரம், தற்போது இந்திரலோகத்தில் உள்ளது. அவரை வேண்டினால் மரம் கிடைக்கும். அதை சிவலிங்கத்திற்கு அருகிலேயே நட்டு விடு" என ஆலோசனை கூறினார். அர்ஜூனனும் தவம் செய்து அந்த தெய்வீக மரத்தை பெற்றான். அம்மரத்தின் சிறப்பே அதன் மலர்கள்தான். மரத்தில் இருக்கும் வரை வெள்ளை நிறமாக இருக்கும். பறித்தவுடன் தங்க நிறத்திற்கு மாறி விடும். அந்த மரத்தை மண்ணில் நட்டவுடன் உடனே வளர்ந்து பூ பூத்தது. மகிழ்ந்த குந்திதேவியும் அன்று முதல் சிவபூஜை செய்தாள். பாண்டவர்களும் போரில் வெற்றி பெற்றனர். குந்திதேவி வழிபட்டதால் சுவாமி 'குந்தேஸ்வரர்' என பெயர் பெற்றார்.தற்போதும் இந்த பாரிஜாத மரம்கோயிலுக்கு வெளியே உள்ளது. இங்குள்ள பாரிஜாத மரத்தின் வயது 5000 ஆண்டுகள். குந்தி தேவி இறந்த போது அவரை எரித்த சாம்பல் இம்மரத்தைச் சுற்றியே ாவியதால் தான் மரம் செழித்து வளர்வதாக பக்தர்கள் நம்புகின்றனர். கோயிலுக்கு சற்று முன்பு அலங்கார வளைவு நம்மை வரவேற்கிறது. அதை தாண்டிச் சென்றால் வீடு மாதிரி முகப்பும், அகலமான துாண்களையும் காணலாம். அதுவே கோயிலின் முன்தோற்றம்.கருவறையில் சிவன் செவ்வக வடிவில் காட்சி தருகிறார். இரண்டு அடி உயரத்தில் தலையில் குல்லா அணிந்தது போல நடுவில் லிங்க வடிவம் வித்தியாசமாக உள்ளது.கருவறை மீது வடஇந்திய பாணியில் கோபுரம் உள்ளது. அமர்ந்த கோலத்தில் துர்கா தனி சன்னதியில் அருள்புரிகிறாள். கணேஷ் சன்னதியும் உள்ளது.
நீங்கள் மாடு வளர்ப்பவரா... அதற்கு அடிக்கடி நோய் வருகிறதா கவலை வேண்டாம். மதுரை மாவட்டம் கள்ளிக்குடிக்கு அருகிலுள்ள குராயூர் வேணுகோபால சுவாமிக்கு நேர்ந்து கொள்ளுங்கள்.14ம் நுாற்றாண்டில் தென்காசியை ஆட்சி செய்த மன்னர் 'வென்று மாலையிட்ட வீரபாண்டியன்' கட்டிய கோயில் இது. பின்னர் பராக்கிரம பாண்டியனால் கோயில் விரிவுபடுத்தப்பட்டது. பாமா, ருக்மணியுடன் புல்லாங்குழல் இசைக்கும் கிருஷ்ணர் இங்கு இருக்கிறார்.நவதிருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார்திருநகரி (ஆதிநாதபெருமாள்) கோயிலில் நம்மாழ்வார் அமர்ந்திருந்த புளியமரம் உள்ளது.இது பூப்பதும், காய்ப்பதும் இல்லை. இங்குள்ள நந்தவன புளியமரமும் அதைப் போல பூப்பதும், காய்ப்பதும் இல்லை பொதுவாக தெற்கிலிருந்து வடக்கு நோக்கி ஓடும் ஆற்றின் கரையில் உள்ள ஊர்கள் புனிதமானது அதைப் போல இங்கு ஓடும் கமண்டல ஆறு தெற்கில் இருந்து வடக்கு நோக்கி ஓடுகிறது. நாலாயிரதிவ்ய பிரபந்த பாடல்களில் இடம் பெற்றுள்ள 'குரா' மலர்கள் அதிகம் விளைவதால் இதற்கு 'குராயூர்' எனப் பெயர்.மாடுகள் நோயின்றி வாழவும், விவசாயம் செழிக்கவும் விளைபொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். சனிக்கிழமை காலையில்திருமஞ்சனமும், மாலையில் சிறப்பு பூஜையும் நடக்கிறது. திருமணம், குழந்தை பாக்கியம், உடல்நலம் பெற சுவாமிக்கு துளசிமாலை சாத்துகின்றனர். கல்வியில் சிறந்து விளங்க மாவிளக்கு ஏற்றுகின்றனர்.நுழைவு வாயில், மகா மண்டபம், ஆழ்வார்கள் மேடை, அர்த்த மண்டபம், கருவறை என ஐந்து பிரிவாக கோயில் உள்ளது. கருவறையின எதிரில் கருடாழ்வாரும், கல்துாணில் ஆஞ்சநேயரும் உள்ளனர்.
உத்திர பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில் உள்ளது புரா மகாதேவ் கோவில். இதை பரசுராமேஸ்வரர் கோயில் என்றும் அழைக்கிறார்கள். இவரை தரிசித்தால் பாவம் போகும். மனபலம் அதிகரிக்கும்.முற்காலத்தில் இப் பகுதி கஜரிவனம் என அழைக்கப்பட்டது.இங்கு ஜமதக்னி முனிவர் தன் மனைவி ரேணுகா, ஐந்து மகன்களுடன் வாழ்ந்தார். மேலும் முனிவரிடம் சுசீலா என்ற தெய்வீக பசுவும் இருந்தது. இதன் மீது ஆசை கொண்டார் இப்பகுதி மன்னர் சகஸ்தரஜுனன். ஒருநாள் இப்பசுவை திருடினார் மன்னர். இதனால் இருவர் இடையே பிரச்னை ஏற்பட்டது.இந்த தகராறில் முனிவரின் மனைவி ரேணுகாவை கடத்திச் சென்று, அவளிடம் தவறாக நடந்தார் மன்னர்.கடவுள் அருளால் அவரிடம் இருந்து தப்பினாள் ரேணுகா. ஆனால் முனிவரோ அவளது கற்பின் மீது சந்தேகம் கொண்டார். ஒரு கட்டத்தில் தன் மகன்களிடம் தாயை வெட்டச் சொன்னார். நான்கு மகன்கள் மறுக்கவே, ஐந்தாவது மகன் பரசுராமர் அதை நிறைவேற்றினார். பின் தாயின் மரணத்திற்கு காரணமான சகஸ்திரர்ஜுனனையும் கொன்றார். தான் செய்த பாவத்தில் இருந்து விடுபட சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார் பரசுராமர். பின்னாளில் சிவலிங்கத்தின் மீது மண் மூடி மறைந்தது.ஒருநாள் ராணி லண்டவ்ரா தன் பட்டத்து யானை மீது பரிவாரங்களுடன் நகர்வலம் வந்தாள். ஓரிடத்தில் யானை எவ்வளவு முயற்சித்தும் நகரவில்லை. பண்டிதர்களுடன் ஆலோசனை செய்து அந்த இடத்தை தோண்டவே, பரசுராமர் வழிபட்ட சிவலிங்கம் கிடைத்தது. அதை அங்கேயே பிரதிஷ்டை செய்து கோயிலையும் கட்டினார். இதுவே இங்குள்ள கோயிலாகும்.முன்னால் நான்கு பிரம்மாண்ட துாண்களை தாங்கும் முன் மண்டபம் அதன் வழியாக சில படிகள் ஏறி முதல் மாடிக்கு சென்றால் சன்னதியை அடையலாம். நுழையும் இடத்திற்கு மேலே சிறு கோபுரத்தை பார்க்கலாம். கருவறைக்கு மேலே மற்றொரு கோபுரம் உள்ளது. இதன் புதுமையான கட்டடக் கலையை ரசித்தபடியே கருவறையை அடையலாம். அங்கு இரண்டடி உயர பளிங்கு கல் சிவலிங்கத்தை தரிசிக்கலாம்.பக்தர்கள் ஹரித் வாரிலிருந்து கங்கை நீரை எடுத்து வந்து அபிஷேகம் செய்கின்றனர். வெளியே துர்கா, கணேஷ் சன்னதிகள் உள்ளன. செப்டம்பர் முதல் பிப்ரவரி வரை கோயிலுக்கு செல்ல ஏற்ற காலமாகும்.