விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், ஆனையூர் ஊராட்சியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (16.12.2025) தமிழ்நாடு மாநில ஊரக/நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள மகளிர் சுயஉதவிக்குழுவின் மதி சிறுதானிய உணவகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா. I AS., அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்.தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி, விருதுநகர் மாவட்டத்தில், பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக வறுமை ஒழிப்பு, சிறந்த சுகாதாரம், கல்வி ஆகியவற்றிற்காக பெண்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்திடவும், வேளாண்மையில் முதன்மையாக விளங்கக்கூடிய சிறு தானிய விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதுடன் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.மேலும், மகளிர் குழு உறுப்பினர்கள் தயாரிக்கும் உற்பத்தி பொருள்களை விற்பனை செய்ய ஏதுவாக பல முன்னெடுப்புகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சிவகாசி அரசு கலை அறிவியல் கல்லூரியில் மதி சிறுதானிய உணவகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.இந்த உணவகத்தில் ராகி, தினை, சோளம், வரகு, குதிரைவாலி, கம்பு உள்ளிட்ட சிறுதானியங்கள் மூலம் தயாரிக்கப்படும் பல்வேறு உணவு வகைகள் விற்பனை செய்யப்பட உள்ளது.இதன்மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நிலையான வருவாய் கிடைக்கவும், பொருளாதார முன்னேற்றத்துக்கு வழிவகுக்கவும் உறுதுணையாக இருக்கும். மேலும், மாணவர்களுக்கு உடலுக்கு ஆரோக்கியமான, ஊட்டச்சத்துகள் மிக்க உணவாகவும் அமைகிறது. எனவே, மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட அனைவரும் சிறுதானிய உணவகத்தைப் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.இந்நிகழ்வில், திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) திரு.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இஃர்பான், இ.ஆ.ப., உதவி திட்ட அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், விளாம்பட்டியில் (16.12.2025) தமிழ்நாடு மாநில ஊரக/நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 14 மகளிர்களுக்கு மொத்தம் ரூ.3.80 இலட்சம் மதிப்பிலான கடனுதவிகளையும், 72 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 623 உறுப்பினர்களுக்கு சுய உதவிக் குழு அடையாள அட்டைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் வழங்கினார்.பின்னர், பாலின சமத்துவ உறுதி மொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அரசு அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டனர்.அதனைத்தொடர்ந்து, மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்ட உற்பத்தி பொருள்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த உறுப்பினர்களுடன், குழுக்களின் செயல்பாடுகள், வழங்கப்படும் கடனுதவிகள், வட்டி விகிதம் உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்து, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தமிழக அரசினால் வழங்கப்படும் முக்கியத்துவம், கடனுதவிகள், மானியம், பயிற்சிகள், உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான வழிமுறைகள் உள்ளிட்டவைகள் குறித்து எடுத்துரைத்தார்.இந்நிகழ்வில், திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) திரு.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், சிவகாசி வட்டாட்சியர் திரு.இலட்சம், உதவி திட்ட அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தலைமையில் (15.12.2025) நடைபெற்றது. இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நல உதவித்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது. மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தகுடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்கள். அதனைத் தொடர்ந்து, பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை சார்பில், பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நலநிதி திட்டத்தின் கீழ் பெருமாள் தேவன்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர் திரு.கு.நமச்சிவாயம் என்பவர் விபத்தின் காரணமாக மரணமடைந்ததைத் தொடர்ந்து, அன்னாரது வாரிசுதாரரான திருமதி ந.பழனியம்மாள் என்பவருக்கு ரூ.4.25 இலட்சம் உதவித்தொகைக்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். பின்னர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை சார்பில், அருப்புக்கோட்டை வட்டம், கோவிலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த 41 பயனாளிகளுக்கு இலவச இணைய வழிப் பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆனந்தி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.காளிமுத்து, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திருமதி பிரதெளஸ் பாத்திமா, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றத்தின் வாயிலாக 5 முதல் 16 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு கலைப் பயிற்சிகள் அளித்து வருகிறது. சிறார்களிடையே மறைந்து கிடக்கும் கலைத்திறன்களை வெளிக்கொணரும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம் மற்றும் கிராமிய நடனம், ஆகிய நான்கு கலைப் பிரிவுகளிலும், 5-8, 9-12, 13-16 வயதுப் பிரிவுகளிலும் போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கி ஊக்குவித்து வருகிறது. மேலும், 9-12, 13-16 ஆகிய வயது பிரிவுகளில் மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்ற சிறார்களுக்கு மாநில அளவிலான கலைப் போட்டிகள் நடத்தி பரிசுத் தொகையும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளது.அவ்வகையில் முதற்கட்டமாக 5-8, 9-12, 13-16 என்ற மூன்று வயது வகைப் பிரிவில் விருதுநகர் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் 31.12.2025 அன்று குரலிசை, பரநாட்டியம், ஓவியம் மற்றும் கிராமிய நடனம் ஆகிய கலைப் போட்டிகள் நடைபெறவுள்ளது. கலைப் போட்டிகள் அனைத்தும் சிவகாசி, அண்ணாமலை நாடார் உண்ணாமலை அம்மாள் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் காலை 9.00 மணி முதல் முன்பதிவு நடைபெறவுள்ளது.போட்டிகளில் கலந்து கொள்ளும், மாணவ, மாணவிகளின் பெயர், வயது, பிறந்த தேதி வீட்டு முகவரி, பள்ளியின் பெயர் ஆகிய விவரங்களுடன் (Birth Certificate) வயது சான்றிதழ் கொண்டு வரவேண்டும். போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு பங்கேற்புக்கான சான்றிதழும், மாவட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும்.இப்போட்டிக்கான விதிமுறைகள் பின்வருமாறு1. பரதநாட்டியம் (செவ்வியல்)பரத நாட்டியம், குச்சிப்புடி, மோகினி ஆட்டம் போன்ற நடனங்கள் ஆடலாம் முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் நடனம் இருத்தல் வேண்டும். திரைப்படப் பாடல்களுக்கான நடனங்கள் (கர்நாடக இசை பாடல்களுக்கான திரைப்பட நடனங்கள் தவிர்த்து) மேற்கத்திய நடனங்கள் மற்றும் குழு நடனங்களுக்கு அனுமதியில்லை. பென்டிரைவ் பயன்படுத்திக் கொள்ளலாம். இவற்றை போட்டியில் பங்கேற்பவர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். குறைந்த பட்சம் 3 நிமிடங்கள் அதிக பட்சம் 5 நிமிடங்கள் நடனமாட அனுமதிக்கப்படுவார்கள்.2. கிராமிய நடனம் (நாட்டுப்புறக் கலை)தமிழகத்தின் மாண்பினை வெளிப்படுத்தும் கிராமிய நடனங்கள் ஆடலாம். முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் நடனம் இருத்தல் வேண்டும். திரைப்படப் பாடல்களுக்கான நடனங்கள் (கிராமிய இசை பாடல்களுக்கான திரைப்பட நடனங்கள் தவிர்த்து) மற்றும் குழு நடனங்கள் அனுமதியில்லை. பெண்டிரைவ் பயன்படுத்திக் கொள்ளலாம். இவற்றை போட்டியில் பங்கேற்பவர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் 3 நிமிடங்கள் அதிக பட்சம் 5 நிமிடங்கள் வரை நடனமாட அனுமதிக்கப்படுவார்கள்.3. குரலிசைகர்நாடக இசை பாடல்கள், தேசியப் பாடல்கள், சமூக விழிப்புணர்ச்சி பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள் மட்டுமே பாட வேண்டும். மேற்கத்திய இசை, திரைப்பட பாடல்கள், பிற மொழி பாடல்கள், குழுப்பாடல்களுக்கு அனுமதியில்லை. குறைந்த பட்சம் 3 நிமிடங்கள். அதிக பட்சம் 5 நிமிடங்கள் வரை பாட அனுமதிக்கப்படுவார்கள்.4. ஓவியம்40X30 செமீ அளவுள்ள ஓவியத் தாள்களையே பயன்படுத்த வேண்டும். பென்சில் கிரையான், வண்ணங்கள், போஸ்டர் கலர், வாட்டர் கலர், ஆயில் கலர், பெயிண்டிங் என எவ்வகையிலும் ஓவியங்கள் அமையலாம். ஓவியத்தாள், வண்ணங்கள், தூரிகைகள் உட்பட தங்களுக்குத் தேவையானவற்றைப் போட்டியாளர்களே கொண்டு வருதல் வேண்டும். குழுவாக ஓவியங்கள் வரைய அனுமதியில்லை. ஒவ்வொரு வயது வகைக்கும் தனித் தனியாக தலைப்புகள் போட்டி தொடங்கும் போது அறிவிக்கப்படும்.மேலும், இப்போட்டிகளில் கலந்து கொள்வோர், 5 முதல் 8 வயது பிரிவுக்கு 01.06.2017 முதல் 31.05.2020 வரை பிறந்தவராகவும், 9 முதல் 12 வயது பிரிவுக்கு 01.06.2012 முதல் 31.05.2017 வரை பிறந்தவராகவும், 13 முதல் 16 வயது பிரிவுக்கு 01.06.2009 முதல் 31.05.2012 வரை பிறந்தவராகவும் இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0462-2901890,94439-61523, 94439-61523 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
2019-2020ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கை அறிவிப்பில் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956ஆம் நாளை நினைவுகூரும் வகையில் “ஆட்சிமொழிச் சட்ட வாரம்” ஒரு வார காலத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாட அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் இந்த ஆண்டு 17.12.2025 முதல் 26.12.2025 வரை ஆட்சிமொழிச் சட்ட வாரம் கொண்டாடப்படவுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், தமிழறிஞர்கள் அரசு அலுவலர்கள், வணிக நிறுவனங்கள் பங்கேற்கும் விழிப்புணர்வுப் பேரணி நடத்தியும், அரசு பணியாளர்களுக்கு ஆட்சிமொழிச் சட்டம், வரலாறு, அரசாணைகள், பிழையின்றி தமிழில் குறிப்புகள், வரைவுகள் எழுதுவதற்குப் பயிற்சி அளித்தும், மாணவர்களுடன் பட்டிமன்றம் நடத்தியும், ஒன்றியம், வட்டம் அளவில் அரசுப் பணியாளர்கள், பொதுமக்கள், உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களுடன் ஆட்சிமொழிச் சட்டம் குறித்து விளக்கக் கூட்டம் நடத்தியும் ஆட்சிமொழிச் சட்டவாரம் கொண்டாடப்படவுள்ளது. தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அமைப்புகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆகியோர் கலந்து கொள்ள தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆட்சிமொழிச் சட்ட வாரத்தினைச் சிறப்பாகக் கொண்டாட அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
வேளாண்மை உழவர் நலத் துறையால் செயல்படுத்தப்படும் அனைத்து மத்திய, மாநில அரசு திட்டங்களுக்கும், விவசாயிகளுக்கான பிரதமரின் கௌரவ நிதித் தொகை(PMKISAN) பெறுவதற்கும் நில உடைமை பதிவு எண் கட்டாயமானதாகும்.தற்பொழுது, விவசாயிகளுக்கான பிரதமரின் கௌரவ நிதித் தொகை (PMKISAN) பெறும் விவசாயிகள், தங்கள் நில உடைமை விபரங்களை உடனடியாக பதிவு செய்யாவிட்டால் அடுத்த தவணை கிடைக்கப்பெறாது.எனவே, விவசாயிகளுக்கான பிரதமரின் கௌரவ நிதித் தொகை (PMKISAN) பெறுவதற்கு, நில உடைமைகளை பதிவு செய்யாத 10115 விவசாயிகள், உடனடியாக அருகில் உள்ள பொது சேவை மையங்களிலும் பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் 10115 விவசாயிகள் நில உடைமைகளை பதிவுகளை மேற்கொள்ளாமல் உள்ளனர். விவசாயிகளுக்கான பிரதமரின் கௌரவ நிதித் தொகை(PMKISAN) பெறுவதற்கு இதுவரை நில உடைமைகளை பதிவு செய்யாத விவசாயிகள் தங்கள் நில ஆவணங்களான பட்டா, ஆதார் மற்றும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண் கொண்டு நில உடைமைகளை விடுதலின்றி 19.12.2025 அன்று நடைபெறும் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நடைபெறவுள்ள சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது. விவசாயிகள் நில உடைமைகளை பதிவு செய்து அடையாள எண் பெற்றால் மட்டுமே மத்திய,மாநில அரசு திட்டங்களில் பயன்பெற இயலும்.விவசாயிகள் 19.12.2025 அன்று நடைபெறும் நில உடைமை பதிவுக்கான சிறப்பு முகாமில் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசு மானியத் திட்டங்களில் பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.என். ஓ.சுகபுத்ரா, I A S,.அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (12122025) எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல்-2026 னை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின்படி, தேர்தலுக்கு முன்னதாக, தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான முதல் நிலை சரிபார்க்கும் பணிகள் நடைபெற்றுவருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என். ஓ.சுகபுத்ரா, I A S,. அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் (12.12.2025) நடைபெற்ற அரசு விழாவில், வெல்லும் தமிழ்ப் பெண்கள் தமிழ்நாட்டின் சாதனை பெண்களின் மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2 ஆவது கட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார்.அதனைத்தொடர்ந்து, விருதுநகர் மாவட்டம், விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் (12.12.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள், இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.தங்கபாண்டியன் அவர்கள், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுமான் அவர்கள் மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம்தென்னரசு அவர்கள் ஆகியோர் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், 38,263 மகளிருக்கு ரூ.3 கோடியே 82 இலட்சம் மதிப்பில் கலைஞர் மகளிர் உதவித்தொகை பெறும் வகையில் மகளிர்களுக்கு வங்கி பற்று அட்டைகளை (ATM Cards) வழங்கினார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான 2023 செப்டம்பர் 15 ஆம் நாள் காஞ்சிபுரம், பச்சையப்பன் ஆடவர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் குடும்பத்திற்காக வாழ்நாளெல்லாம் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும் என்ற சீரிய நோக்கத்திற்காக குடும்ப தலைவிக்கு மாதம் ரூ 1000/ (ஆண்டிற்கு ரூபாய் பன்னிரெண்டாயிரம் மட்டும்) கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மூலம் தொகையாக வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 1,11,637 பயனாளிகளுக்கு ரூ.1000/- வீதம் மாதந்தோறும் ரூ.1.12 கோடி வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்படி, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு விதிகளை தளர்வு செய்து புதிய பயனாளிகள் தேர்வு செய்யும் பொருட்டு, மாவட்டத்தில் ஜீலை -2025 முதல் நவம்பர் -2025 முடிய நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் மூலம் 67,551 புதிய விண்ணப்பங்கள் பெறப்பட்டு, கள ஆய்வு செய்து, இதில் 38,263 தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி, அருப்புக்கோட்டை வட்டத்தில் 5,199 பயனாளிகள், காரியாபட்டி வட்டத்தில் 2,202 பயனாளிகள், இராஜபாளையம் வட்டத்தில் 7,305 சாத்தூர் வட்டத்தில் 2,190 பயனாளிகள், சிவகாசி வட்டத்தில் 7,800 பயனாளிகள், திருவில்லிபுத்தூர் வட்டத்தில் 2,944 பயனாளிகள், திருச்சுழி வட்டத்தில் 1,762 பயனாளிகள், வெம்பக்கோட்டை வட்டத்தில் 2,393 பயனாளிகள், விருதுநகர் வட்டத்தில் 3,869 பயனாளிகள், வத்திராயிருப்பு வட்டத்தில் 2,599 பயனாளிகள் என மொத்தம் 38,263 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு ரூ.1000- வீதம் மாதந்தோறும் ரூ.3.83 கோடி கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படவுள்ளது.இதன் மூலம் நமது விருதுநகர் மாவட்டத்தில் முதல் கட்டம் 1,11,637 மற்றும் இரண்டாம் கட்டம் 38,263 ஆக மொத்தம் 1,49,900 பயனாளிகள் மாதந்தோறும் ரூ.14.99 கோடி பெற்று பயனடைய உள்ளனர்.அதன்படி, இன்று நடைபெற்ற விழாவில் 1200 பயனாளிகளுக்கு வங்கி பற்று அட்டைகள் (ATM Cards) வழங்கப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆனந்தி, தனித்துணை ஆட்சியர் திரு.காளிமுத்து, திட்ட இயக்குநர்(தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) திரு.ஜார்ஜ் மைக்கேல் ஆண்டனி, சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான், I A S., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி பிர்தௌஸ் பாத்திமா, சாத்தூர் கோட்டாட்சியர் திரு.கனகராஜ், அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் திரு.மாரிமுத்து, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.பாண்டிச்செல்வன், விருதுநகர் நகர்மன்றத் தலைவர் திரு.ஆர்.மாதவன், திருவில்லிபுத்தூர் நகர்மன்றத் தலைவர்திரு. ரவிக்கண்ணன், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக அரசின் 2026 ஆம் ஆண்டிற்கான " கபீர் புரஸ்கார் விருது" ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சர் அவர்களால் குடியரசு தினவிழாவின் போது வழங்கப்படுகிறது. இவ்விருதானது தலா – ரூ.20.000/-. ரூ.10.000/- மற்றும் ரூ.5,000/- என தகுதியுடையோர்க்கு வழங்கப்படுகிறது. சென்னை மாவட்டத்தைச் சார்ந்த விண்ணப்பதாரர்கள் (ஆயுதப்படை வீரர்கள், காவல், தீயணைப்புத் துறை மற்றும் அரசுப் பணியாளர்கள் ஆகியோர்கள் நீங்கலாக) சமுதாய நல்லிணக்க செயல் ஆற்றும் அரசுப் பணியாளர்கள் சமுதாய நல்லிணக்க செயல் ஆற்றும் அரசுப் பணியின் ஒரு பகுதியாக நிகழும் பட்சத்தில் இப்பதக்கத்தைப் பெறத் தகுதியுடையவராவர். மேலும் இவ்விருதானது ஒரு இனம் வகுப்பைச் சார்ந்தவர்கள் பிற இனவகுப்பைச் சார்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடைமைகளையோ வகுப்புக் கலவரத்தின் போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாகத் தெரிகையில் அவரது வீரம் மற்றும் மனவலிமையைப் பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது. மேற்காணும் விருதிற்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு இணையதள முகவரியான http://awards.tn.gov.in. மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 15.12.2025-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறும் அதற்கு பின்னர் தாமதமாகப் பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக ஒவ்வொரு மாதமும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, படித்த வேலை தேடும் இளைஞர்களுக்காக வரும் 19.12.2025 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 03.00 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், விருதுநகர் சூலக்கரையில் உள்ள, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது.இத்தனியார் வேலைவாய்ப்பு முகாமில் ADYAR ANANDHA BHAVAN, ANAAMALAIS TOYOTA, TTK HEALTH CARE, SRI RAM MOTORS, DEVENDRAN PLASTICS போன்ற 20 க்கும் மேற்பட்ட பிரபல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு I.T.I. டிப்ளமோ மற்றும் பொறியியல் படிப்பு ஆகிய கல்வித் தகுதி உடைய பணியாளர்களை தெரிவு செய்ய உள்ளார்கள்.இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்த விரும்பும் வேலை நாடுநர்கள் 19.12.2025 அன்று வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பாக www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களை பதிவு செய்துவிட்டு சுயவிவரச் சான்றிதழ் (RESUME), அனைத்து கல்விச் சான்றிதழ், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது மேலும் இச்சேவையானது முற்றிலும் கட்டணமில்லா சேவையாகும். இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் .விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அவர்களை நேரிலோ அல்லது vnrjobfair@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணி நியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.