25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Aug 19, 2026

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி 2, 2அ (TNPSC Group-II / II A) தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளது. விருப்பமுள்ள தேர்வர்கள் பங்கேற்கலாம்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி 2, 2அ(TNPSC Group-II / II A) தேர்விற்கான அறிவிக்கை 11.08.2026 அன்று வெளியிடப்பட்டுள்ளது.  இத்தேர்வின் மூலம் 821 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 09.09.2026 ஆகும்.விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தேர்வர்கள் போட்டித்தேர்வில் சிறப்பாகத் தயாராகி வெற்றி பெறும் வகையில், விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்புகள் 20.08.2026 வியாழக்கிழமை முதல், விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.இப்பயிற்சி வகுப்பில் திறன் வாய்ந்த பயிற்றுநர்களைக் கொண்டு, தேர்வின் பாடத்திட்டத்திற்கு ஏற்ப பாடவாரியான பயிற்சிகள், தேர்வு நுணுக்கங்கள் மற்றும் வினா அணுகுமுறைகள் குறித்து பயிற்சி வழங்கப்படும். மேலும், தேர்வர்களின் தொடர் தயாரிப்பிற்கு உதவும் வகையில் இலவச  வை-பை (Wi-Fi) வசதியுடன் கூடிய நூலகம் மற்றும் கணினி வசதிகள் அலுவலகத்தில் உள்ளன. பயிற்சியின் ஒரு பகுதியாக இலவச பாடவாரியானத் தேர்வுகள் மற்றும் முழுமாதிரித் தேர்வுகள் நடத்தப்பட்டு, தேர்வர்களின் முன்னேற்றம் மதிப்பீடு செய்யப்படும்.இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளலாம் அல்லது விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாக அணுகி தங்களது விருப்பத்தைத் தெரிவிக்கலாம்.எனவே, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி 2, 2அ (TNPSC Group-II / II A) தேர்விற்குத் தயாராகும் விருதுநகர் மாவட்டத் தேர்வர்கள், இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Aug 19, 2026

நாக்பூர் தீக்க்ஷா பூமியில் நடைபெறும் தம்ம சக்கர பரிவர்தன திருவிழாவில் பங்கேற்ற பௌத்த மதத்தினை சேர்ந்தவர்கள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் .

தமிழ்நாட்டைச் சேர்ந்த  பௌத்தர்கள் நாக்பூர் தீக்ஷ பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்ம சக்கர பரிவர்தன திருவிழாவில் கலந்து கொண்டு திரும்புபவர்களுக்கு,  நபர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.5,000/- வரை மானியம் வழங்கும் திட்டம் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 2026 ஆம் ஆண்டு பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் பௌத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இதற்கான விண்ணப்ப படிவத்தினை www.bcmbcmw.tn.gov.in என்ற இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்தோ அல்லது விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ  (5-வது தளம், அறை எண்-505) கட்டணமின்றி பெறலாம்.மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை உரிய ஆவணங்களுடன் - ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பராம்பரிய கட்டடம், முதல்தளம், சேப்பாக்கம், சென்னை – 600 005 என்ற முகவரிக்கு 15.11.2026-க்குள் அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Aug 18, 2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்  (17.08.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S ., அவர்கள் வழங்கினார்.இக்கூட்டத்தில், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிந்தோர் நல உதவித்திட்டங்கள், விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை மற்றும் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தான மனுக்கள் பெறப்பட்டன.மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்கு நேரடியாகச் சென்று, அவர்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்று பரிசீலித்தார். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட இம்மனுக்கள் அனைத்தையும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து, அவற்றின் மீது உரிய மற்றும் விரைவான நடவடிக்கை எடுக்கவும், முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தி விரைந்து தீர்வு காணவேண்டும் என  உத்தரவிட்டார்.இக்கூட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் பணியின் போது உயிர்நீந்தவரின் வாரிசுதாரர்கள் 2 நபருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளையும், பட்டாசு தொழிற்சாலை விபத்துகளில் உயிரிழந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான  மாதாந்திர பராமரிப்புத் தொகைக்கான ஆணையினை முன்னாதாக 10 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. அதேபோல் (17.08.2026) இன்று 8 குழந்தைகளுக்கு மதாந்திர பராமரிப்பு உதவித்தொகைக்கான ஆணையினை வழங்கினார்.  மேலும், இக்கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.6,400/- மதிப்பிலான காதொலி கருவியினையும், 1 மாற்றுத்திறானிளுக்கு ரூ.6,500/- மதிப்பீட்டிலான நான்கு சக்கர நாற்காலியையும்  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.தொடர்ந்து, பொதுமக்களிடமிருந்து 564 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்க ஒப்படைக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்கள் எவ்வித சிரமமுமின்றி சேவைகளைப் பெறுவதை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி பிர்தௌஸ் பாத்திமா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) திரு.சையது முகமது, ஆதி திராவிடர் நலத்துறை அலுவலர் திருமதி சாந்தி, அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Aug 18, 2026

திருவில்லிபுத்தூர் வட்டாரத்தில் “உங்களை தேடி உங்கள் ஊரில்”முகாமானது நடைபெறவுள்ளது.

மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மக்களை தேடிச்சென்று குறைகளைக் கேட்டறியவும், பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே சென்று ஆய்வு செய்திட ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டம் முகாமானது 19.08.2026 அன்று காலை 09.00 மணி முதல் மறுநாள் 20.08.2026  அன்று காலை 09.00 மணி வரை நடைபெறவுள்ளது.19.08.2026 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 04.30 மணி வரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அனைத்து மாவட்ட நிலை அலுவலர்களும் கள ஆய்வில் ஈடுபட்டு, திருவில்லிபுத்தூர் வட்டத்தில் உள்ள மக்களின் குறைகளைக் கேட்டறிந்து அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி  சென்றடைவதை ஆய்வு செய்ய உள்ளனர்.அதன் ஒரு பகுதியாக, 19.08.2026 மாலை 03.00 மணி முதல் 04.00 மணி வரை திருவில்லிபுத்தூர், நகராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் உள்ள நகர் மன்ற கூட்டரங்கில் வைத்து மக்களை சந்தித்து குறைகள் கேட்பதும், மாலை 04.00 மணி முதல் முதல்நிலை அலுவலர்களுடன் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்து இரவில் தங்கி பணியாற்றவும் உள்ளனர். எனவே, திருவில்லிபுத்தூர் வட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது பகுதிகளில் உள்ள குறைகளை அரசு அலுவலர்களிடம்  நேரில் தெரிவித்து, அரசின் திட்டங்கள் அனைத்தும் தங்கள் பகுதிக்கு முழுமையாக கிடைத்திட வழிவகை செய்யும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Aug 18, 2026

சுதந்திர தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காமல் இயங்கிய 52 கடைகள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினங்கள்) சட்டம் 1958ன்படி, தேசிய விடுமுறை தினமாகிய சுதந்திர  தினம் – 15.08.2026 அன்று கடைகள் மற்றும் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விடுமுறை  அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.  மேற்படி தினத்தில் விடுமுறை அளிக்கப்படாமல் ஊழியர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்பட வேண்டுமானால் அவர்களுக்கு வேலையளிப்பவரால் இரட்டிப்பு சம்பளம் அல்லது வேறொருநாளில்  மாற்று விடுப்பு அளிக்கப்பட வேண்டும்.அதன்படி, தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினத்தில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த தொழிலாளர்களிடம், கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு VA என்ற படிவத்திலும், உணவு நிறுவனங்களுக்கு IVEE என்ற படிவத்திலும்,  மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களுக்கு XIIA படிவத்திலும் கையொப்பம் பெற்று, அதனை தேசிய பண்டிகை மற்றம் சிறப்பு விடுமுறை தினத்திற்கு 24 மணி நேரத்திற்கு முன்னர் சம்பந்தப்பட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளர்களிடம் சமர்ப்பித்திட வேண்டும்.மேற்கண்டவாறு படிவம் அனுப்பாமலும், சட்ட விதிகளை அனுசரிக்காமலும் அவற்றிக்கு முரணாக தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 19 கடைகள் மற்றும் நிறுவனங்கள், 28 உணவு நிறுவனங்கள் மற்றும் 05 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் ஆக மொத்தம் 52 நிறுவனங்களில் முரண்பாடு கண்டறியப்பட்டு, சம்பந்தப்பட்ட கடைகள் மற்றும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது, தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் ( தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினங்கள்) சட்டம் 1958, தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் சட்டம் 1958 மற்றும் மோட்டார் போக்குவரத்துத் தொழிலாளர் சட்டம் 1961 ஆகிய சட்டங்களின் கீழ்  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மேலும், தேசிய விடுமுறை தினமான சுதந்திர தினத்தன்று பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மூன்று நாட்களுக்குள் மாற்று விடுப்பு சட்டப்படி அனைத்து நிறுவனங்களும் வழங்க வேண்டும்.  இச்சட்டத்தை மீறுபவர்கள் மீது சம்பளப்பட்டுவாடா சட்டத்தின் கீழ் மதுரை, தொழிலாளர் இணை ஆணையர் நீதிமன்றத்தில் கேட்புமனு தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.சுதந்திர தினத்தன்று கிராமங்கள் தோறும் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை அகற்றுதல் குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Aug 17, 2026

80 -வது இந்திய சுதந்திர தினவிழாவினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சிறப்பாக பணியாற்றிய 256 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார்.

இந்திய திருநாட்டின் 80-வது சுதந்திர தினவிழாவினை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று(15.08.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கௌதம் கோயல்,இ.கா.ப., அவர்கள் முன்னிலையில், தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து மூவர்ண பலூன்களை பறக்க விட்டார்.  பின்னர், சமாதானத்தை வலியுறுத்தும் விதமாக  வெள்ளை நிற புறாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பறக்க விட்டார்.காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 55 காவலர்களுக்கும், சிறப்பாக பணியாற்றிய 11 மாவட்ட நிலை அலுவலர்களுக்கும், 25 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்தமை, 20 ஆண்டுகள் விபத்தில்லா சேவை புரிந்தமைக்காக 5 அலுவலர்களுக்கும்,  தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் 3 அலுவலர்களுக்கும், சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை சார்பில் 3 அலுவலர்களுக்கும், வனத்துறை சார்பில் 3 அலுவலர்கள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 26 அலுவலர்களுக்கும், யுவ ஆப்த மித்ரா தன்னார்வலர்கள் 6 நபர்களுக்கும், நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை சார்பில் 1 அலுவலருக்கும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் 19 அலுவலர்களுக்கும், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துத்துறை சார்பில் 18 அலுவலர்களுக்கும், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில் 1 அலுவலருக்கும், வேளாண்மைத்துறை சார்பில் 9 அலுவலர்களுக்கும், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர்வழங்கல் துறை சார்பில் 7 அலுவலர்களுக்கும், சமூகநலத் துறை சார்பில் 2 அலுவலர்களுக்கும், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் 1 அலுவலருக்கும், பதிவுத்துறை சார்பில் 1 அலுவலருக்கும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 அலுவலர்களுக்கும், கரூவூலம் மற்றும் கணக்குத்துறை சார்பில் 1 அலுவலருக்கும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 3 அலுவலர்களுக்கும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 2 அலுவலர்களுக்கும், கூட்டுறவுத்துறை சார்பில் 1 அலுவலருக்கும், பொதுப்பணித்துறை சார்பில் 6 அலுவலர்களுக்கும், நெடுஞ்சாலைத்துறை சார்பில் 3 அலுவலர்களுக்கும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் 1 அலுவலருக்கும், பள்ளிக்கல்வித்துறை சார்பில் 23 அலுவலர்களுக்கும், போக்குவரத்துத்துறை சார்பில் 1 அலுவலருக்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துக்கழகம் (மதுரை) லிட், விருதுநகர் மண்டலம் சார்பில் 1 அலுவலருக்கும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் 2 அலுவலர்களுக்கும், தொழில் வணிகத்துறை சார்பில் 1 அலுவலருக்கும், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் சார்பில் 1 அலுவலருக்கும், பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை சார்பில் 2 அலுவலர்களுக்கும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 1 அலுவலருக்கும், நீர்வளத்துறை சார்பில் 2 அலுவலர்களுக்கும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் 1 அலுவலருக்கும், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 5 அலுவலர்களுக்கும், தாட்கோ சார்பில் 1 அலுவலருக்கும், பொது நூலகத்துறை சார்பில் 2 அலுவலர்களுக்கும், தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் லிமிடெட் சார்பில் 1 அலுவலருக்கும், கைத்தறித்துறை சார்பில் 1 அலுவலருக்கும், பேரூராட்சித்துறை சார்பில் 2 அலுவலர்களுக்கும், உணவுப் பாதுகாப்புத்துறை சார்பில் 3 அலுவலர்களுக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் 1 அலுவலருக்கும், பொருளியல் மற்றும் புள்ளியல் துறை சார்பில் 2 அலுவலர்களுக்கும், வணிகவரித்துறை சார்பில் 2 அலுவலர்களுக்கும், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சார்பில் 2 அலுவலர்களுக்கும், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் சார்பில் 2 அலுவலர்களுக்கும், சுதந்திர தின விழா பணிகளை சிறப்பாக செய்தமைக்கான நற்சான்றிதழ் 7 நபர்களுக்கும் என மொத்தம் 256 நபர்களுக்கு நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.பின்னர், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள் சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, துணை இயக்குநர் (மேகமலை புலிகள் காப்பகம்) திருவில்லிபுத்தூர் திரு.ரவீ மீனா,இ.வ.ப., திட்ட இயக்குநர்(மா.ஊ.வ.மு) திருமதி வானதி, சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான்,இ.ஆ.ப., சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு, சிப்காட்) திருமதி சசிகலா, மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலை)  திரு.எம்.ராஜசேகர், திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) திரு.இலக்குவன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி பிர்தௌஸ் பாத்திமா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், வருவாய் கோட்டாட்சியர்கள், மாவட்ட நிலை அலுவலர்கள்,  வட்டாட்சியர்கள் உட்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள், மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Aug 17, 2026

விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குந்தலப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சிறப்பு பார்வையாளராக பங்கேற்றார்.

இந்திய திருநாட்டின் 80-வது சுந்திரதினத்தை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குந்தலப்பட்டி கிராமத்தில் (15.08.2026) நடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில்  மாவட்ட ஆட்சித்தலைவர்  மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் சிறப்பு பார்வையாளராக பங்கேற்றார்.இக்கூட்டத்தில், தூய்மைப் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். பின்னர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 2 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும், கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் 5 பயனாளிகளுக்கு தாது உப்புக்கலவைகளையும், தோட்டக்கலைத்துறையின் மூலம் 3 பயனாளிகளுக்கு மரக்கன்றுகள், விதைகளையும், 5 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1.60 இலட்சம் மதிப்பில் கடன் உதவிகளையும் என மொத்தம் 15 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.அரசு என்பது எல்லா மக்களையும் சமமாக பார்த்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரும் ஒரு அமைப்பாகும். இந்த கிராம சபையின் மிக முக்கிய நோக்கம் என்னவென்றால், ஜனநாயக நாட்டில், கிராமத்தில் ஊராட்சி தலைவர்கள், மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள், அரசுத் துறை அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர்கள் இருப்பார்கள். நாங்கள் எல்லாம் மக்களின் பணியாளர்கள். எங்களுக்கு கிடைக்கப்பெற்ற அதிகாரம் உங்களிடம் இருந்து பெறப்பட்டது. உண்மையான அதிகாரம் மக்களிடம் தான் உள்ளது. அதனடிப்படையில் இந்த கிராமசபை கூட்டத்தின் வாயிலாக இந்த கிராமத்தின் வளர்ச்சிக்கு தேவையான பணிகள் அரசு மூலம் என்னென்ன வளர்ச்சி பணிகள் முடிக்கப்பட்டுள்ளது, என்னென்ன பணிகள் நடைபெற்று வருகிறது, இன்னும் என்னென்ன தேவைகள் உள்ளது என்பது கிராம மக்கள் வாயிலாக அறிந்து அதை செயல்படுத்துவது தான் இதன் நோக்கம்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, தமிழக அரசானது  அனைத்துத் துறைகளிலும் மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.தற்போது ஒவ்வொரு கிராமத்திலும் வெற்றி இல்லம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஒரு வீட்டிற்கு ரூ.5 இலட்சம் வரை நிதி உதவி வழங்கப்பட உள்ளது. வீடு இல்லாமல் இடம் வைத்துள்ளவர்கள் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம். அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களை அறிந்து பொதுமக்கள் தங்களது கிராமத்தின் அடிப்படைத் தேவைகளையும், வளர்ச்சிக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் தெரிவித்த  சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், அங்கன்வாடி மையம், வாறுகால் சுத்தம் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.இந்த கிராம சபைக் கூட்டத்தில், 01.04.2025 முதல் 15.08.2026 வரையிலான கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல் ஜீவன் திட்டம், இதர பொருட்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.மேலும், பொதுசுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, கால்நடைதுறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் தங்கள் துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை பொதுமக்கள் அறிந்து தெரிந்து கொள்ளும் விதமாக விரிவாக எடுத்துரைத்தனர்.அதனை தொடர்ந்து, குழந்தை தொழிலாளர் மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு தொடர்பான உறுதி மொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.இந்த கிராம சபைக் கூட்டத்தில்,  திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திருமதி வானதி, உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) (பொ)  திரு.பாலசுப்பிரமணியன், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.கனகராஜ், அரசு அலுவலர்கள், ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Aug 15, 2026

மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது, வேலை நாடுநர்கள் பங்கேற்று பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

விருதுநகர்,  மாவட்ட   வேலைவாய்ப்பு  மற்றும்  தொழில்நெறி  வழிகாட்டும்  மையம் வாயிலாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில்   மாபெரும்   தனியார்துறை  வேலைவாய்ப்பு  முகாம் நடத்தப்படவுள்ளது.அதன்படி , படித்த   வேலை  தேடும்  இளைஞர்களுக்காக  வரும் 22.08.2026 அன்று  சனிக்கிழமை   காலை 09.00 மணி முதல் 03.00 மணி வரை தனியார்துறை   வேலைவாய்ப்பு  முகாம்,  விருதுநகர்-சிவகாசி மெயின் ரோடு, ஆமத்தூரில் அமைந்துள்ள ஏ.ஏ.ஏ பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது.இம்மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் எம்ஆர்எஃப் டயர்ஸ், ஹுண்டாய் மோட்டார்ஸ், வி.வி.வி & சன்ஸ் எடிபில் ஆயில்(இதயம்), ராயல் என்பீல்டு, மீனாட்சி மிஷன் ஹாஸ்பிடல், டிவிஎஸ் ஸ்ரீசக்ரா, அடையார் ஆனந்தபவன், சென்டர்சாஃட் டெக்னாலஜிஸ், சால்காம்ப் போன்ற  100க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 10,000க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ/டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடைய பணியாளர்கள தெரிவு செய்யவுள்ளார்கள்.இந்த  அரிய வாய்ப்பினை பயன்படுத்த   விரும்பும் வேலைநாடுநர்கள் 22.08.2026  அன்று  மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு  முகாம்  நேர்காணலில் கலந்து  கொள்ளவதற்கு  முன்பாக தனியார் துறை வேலைவாய்ப்பு இணையத்தில்   தங்களது சுய  விவரங்களை  பதிவு  செய்துவிட்டு  சுய விவரச் சான்றிதழ்  (RESUME)> அனைத்து   கல்விச்சான்றிதழ்,   ஆதார் அட்டை நகல்  ஆகியவற்றுடன்  கலந்து  கொள்ளுமாறு   கேட்டுக்கொள்ளப்படுகிறது.  மேலும்  இச்சேவையானது   முற்றிலும்   கட்டணமில்லா சேவையாகும்.மேலும் வேலையளிக்கும் நிறுவனங்கள்  முகாமிற்கு பதிவு செய்ய மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைப்பேசி எண்ணிற்கு (9360171161) தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது  என  மாவட்ட ஆட்சித்தலைவர்  மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S.. அவர்கள்  தெரிவித்துள்ளார்.

Aug 15, 2026

100% மானியத்தில் உயர் ரக பருப்பு விதை உற்பத்தி மற்றும் கொள்முதல் செயல் விளக்கத்திடல் அமைத்திட வருப்பமுள்ள விவசாயிகள் விண்ணப்பத்திடலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பருப்பு வகைகளில் முழுமையான தன்னிறைவு அடைவதை நோக்கமாக கொண்டு மத்திய அரசின் மூலம் ஆத்மநிர்பர்தாவிற்கான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பருப்பு வகைகளின் இறக்குமதியை குறைத்து உள்நாட்டு வேளாண்மையின் மூலம் பருப்பு வகைகளின் உற்பத்தியை அதிகரிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். 2025 – 26 முதல் 2030 – 31 வரை பயறு உற்பத்தி அதிகரிப்பு பயறு வகை சாகுபடி பரப்பு விரிவாக்கம் போன்றவற்றில் முழு கவனம் செலுத்தி பயறு உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்காக இத்திட்டம் நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது.    விருதுநகர் மாவட்டத்திற்கு உளுந்து மற்றும் பாசிபயறு வகைகளில் இத்திட்டம் செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இத்திட்டத்தின் முக்கிய கூறான சான்று விதை விநியோகம் (8 ஆண்டுகளுக்கு உட்பட்டது) மூலம் குவிண்டாலுக்கு ரூ.6,000/- வீதம் மானியத்தில் விவசாயிகளுக்கு 400 குவிண்டால் உயர்ரக விதைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.  ரூ.10,000/- மதிப்புள்ள செயல்விளக்க திடல் அமைப்பதற்கு தேவையான இடுபொருட்கள் (விதை, உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரம், Pulse wonder, பயிர் பாதுகாப்பு மருந்துகள்) விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது. எனவே, விருதுநகர் மாவட்ட  விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்தோ அல்லது தங்கள் பகுதி ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்களை தொடர்பு கொண்டும் பயன் பெறலாம்.  அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் பயன்பெற்று பயறு உற்பத்தியில் தன்னிறைவு அடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா .I A S., அவர்கள் தெரிவித்துள்ளார். 

Aug 15, 2026

தொழில் முதலீட்டு, ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர்அவர்கள் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவர்கள் திருவில்லிப்புத்தூர் அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோயில் ஆடிப்பூரத் தேரோட்டத்தினை தொடங்கி வைத்தார்கள்.

 தொழில் முதலீட்டு, ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் மற்றும்  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் ஆகியோர் திருவில்லிப்புத்தூர் அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோயில் ஆடிப்பூரத் தேரோட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S , அவர்கள் தலைமையில், திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.கார்த்திக் அவர்கள் முன்னிலையில்  (14.08.2026) தொடங்கி வைத்தார்கள்.அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோவிலில்  திருஆடிபூரத்  திருத்தேரோட்டம்  ஆண்டு தோறும் ஆடிமாதம் ஆண்டாள் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் ஆடிப்பூரத் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆடிப்பூரத்தேரோட்ட விழா நடைபெற்றது. இந்த விழாவைதொழில் முதலீட்டு, ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் திருத்தேரின் வடம்பிடித்து தேரோட்டத்தினை துவக்கி வைத்தார்கள்.திருத்தேரானது கோவிலை சுற்றியுள்ள நான்கு ரத வீதிகளிலும் உலா வந்தது.ஆடிப்பூரத்  தேரோட்ட விழாவிற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தது. காவல்துறையின் மூலம் தேரோட்ட நிகழ்ச்சியில் பங்கேற்கும் பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. குற்றங்களைத் தடுக்க ஆங்காங்கே கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தி கண்காணிக்கப்பட்டது. கூட்ட நெரிசலை தவிர்க்க போக்குவரத்தினை ஒழுங்குபடுத்தி மாற்றுப்பாதை ஏற்படுத்தப்பட்டிருந்தது. வருகின்ற பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்குத் தேவையான குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதிகள் நகராட்சி நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கௌதம் கோயல், இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான்,I A S., இணை ஆணையர் திரு.செ.மாரியப்பன், தக்கார்/உதவி ஆணையர் திரு.மு.நாகராஜன், திருக்கோவில் செயல் அலுவலர் திருமதி சௌ.சக்கரையம்மாள், அரசு அலுவலர்கள், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 139 140

AD's



More News