விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், உயர்கல்வியில் சேராத மாணவர்களுக்காக சிறப்பு முகாம் நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.மாவட்டத்தில் பள்ளிப்படிப்பை முடித்த மாணவர்கள், 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தனித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் என அனைத்து மாணவர்களையும் உயர் கல்வியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதன்படி பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத 561 மாணவர்கள் மற்றும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 190 மாணவர்கள் உயர்கல்வி, ஐ.டி.ஐ, தொழில்நுட்ப கல்லூரிகளில் சேரவில்லை என கண்டறியப்பட்டுள்ளது. அவர்களை கண்டறிந்து உயர்கல்வியில் சேர்ப்பது தொடர்பாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அந்த வகையில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் சேராத மாணவர்களுக்காக சிறப்பு முகாம் 27.08.2026 அன்று பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கிலும், 28.08.2026 அன்று சிவகாசி நகராட்சி மேல்நிலைப்பள்ளியிலும் நடத்தப்பட உள்ளன.இந்த சிறப்பு முகாமில், மாணவர்களிடமிருந்து, உயர்கல்வி பயில்வதற்கான சந்தேகங்கள் மற்றும் குறைகளையும் கேட்டறிந்து மாணவர்கள் உயர்கல்வி சேர்வதற்கான வழிமுறைகள் குறித்து எடுத்துக் கூறி, பள்ளிப் படிப்பை நிறைவு செய்த மாணவர்கள் அனைவரும் விடுபடாமல் உயர்கல்வியில் சேருவதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக, தொழிற்கல்வி படிப்புகளான ITI மற்றும் பல் தொழில்நுட்பக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்த அனைத்துக் கல்லூரி முதல்வர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாவட்டத்தில் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை அதிகரிக்கும் வகையில், அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, தகுதியுள்ள மாணவர்கள் அனைவரும் உயர்கல்வி வாய்ப்புகளைப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இக்கூட்டத்தில், கல்லூரி முதல்வர்கள், தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் பல் தொழில்நுட்பக் கல்லூரிகளின் முதல்வர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா 2026-2027 போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள்(25.08.2026) பார்வையிட்டார்.தமிழ்நாடு அரசு, பள்ளி மாணவர்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மேலும், கல்வித்திறனை மேம்படுத்துவதோடு மாணவர்களிடையே உள்ள தனித்திறமைகளை வெளிப்படுத்தும் வகையிலும், பாரம்பரிய கலைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்த்திடும் வகையிலும் மாவட்டம் முழுவதும் கலைத்திருவிழாக்களை நடத்திட உத்தரவிடப்பட்டுள்ளது.அந்த வகையில், மாவட்டத்தில் கலைத்திருவிழா நிகழ்ச்சிகள் மூலம் இராஜபாளையம், திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, வெம்பக்கோட்டை, சிவகாசி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி மற்றும் நரிக்குடி ஆகிய ஒன்றியங்களில் பயிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு ஓவியம், களிமண் சிற்பம், கீ போர்டு, நடனம், நாடகம், சித்திரம் வரைதல், செதுக்கு சிற்பம், இசை, நடிப்பு, பாடல், பலகுரல், பேச்சு, ஓவியம், ரங்கோலி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.ஊராட்சி ஒன்றிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான போட்டிகள் 24.08.2026 மற்றும் 25.08.2026 ஆகிய தினங்கள் விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது.இதில், 9 மற்றும் 10 ஆம் வகுப்பில் 524 அரசுப்பள்ளி மாணவர்கள், 282 அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களும், 11 மற்றும் 12 ஆம் வகுப்பில் 348 அரசுப்பள்ளி மாணவர்கள், 225 அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களும் என மொத்தம் 1379 மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவில் நடத்தப்படும் போட்டிகளில் கலந்து கொண்டு, வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். எனவே, மாணவர்கள் சிறப்பாக செயல்பட்டு, மாவட்டத்திற்கு பெருமை சேர்த்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்வில் முதன்மைக் கல்வி அலுவலர் திரு.அரவிந்தன், மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களான விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர் மற்றும் திருச்சுழியில் 2026-ம் ஆண்டிற்கான ஓராண்டு, ஈராண்டு தொழிற்பிரிவுகளில் பயிற்சியாளர்களின் நேரடிச்சேர்க்கை 14.08.2026 முடிய நடைபெற்றது.இச்சேர்க்கையில் பூர்த்தி செய்யப்பட்ட இடங்கள் போக காலியாகவுள்ள தொழிற்பிரிவுகளில் இன ஒதுக்கீடு மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள மதிப்பெண்களின் தரவரிசை அடிப்படையில் 31.08.2026 முடிய உரிய அசல் கல்விச்சான்றுகளை வழங்கி, நேரடிச்சேர்க்கையில் மாணவ, மாணவிகள் அதிகளவில் சேர்ந்து தொழிற்கல்வியினை பயின்று வேலை வாய்ப்பினை பெற்று பயன்பெறலாம்.மேலும் இப்பயிற்சியில் ஓராண்டு தொழிற்பிரிவுக்கான கட்டணம் ரூ.185/-ம் மற்றும் ஈராண்டு தொழிற்பிரிவுக்கான கட்டணம் ரூ.195/-ம் நேரிடையாக செலுத்தப்பட வேண்டும். இந்நிலையத்தில் பயிற்சி பெறும் தகுதியுள்ள அனைத்து பயிற்சியாளர்களுக்கும் விலையில்லா மடிக்கணினி, விலையில்லா மிதிவண்டி, கட்டணமில்லா பேருந்து பயணச் சலுகை, மாதாந்திர கல்வி உதவித் தொகை ரூ.750/- (வருகைக்கு ஏற்ப), சீருடை 2 செட் (தையல்கூலியுடன்) , மூடு காலணி 1 செட், பாடப்புத்தகங்கள், வரைபட கருவிகள் மற்றும் பயிற்சியாளர் அடையாள அட்டை, இவற்றுடன் 6ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு முடிய அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி பெறும் ஆண், பெண் பயிற்சியாளர்களுக்கு தமிழ்புதல்வன், புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.1000/- உதவித்தொகை பெற்று வழங்கப்படும். இவ்வாய்ப்பினை 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மற்றும் அதற்கு மேல் கல்வித்தகுதியுடைய 11, 12, பட்டய, பட்டப்படிப்புகளில் தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெறாத, இடைநின்ற மாணவ, மாணவியர் தொழிற்கல்வியினை பயின்று நல்ல ஊதியத்துடன் வேலை வாய்ப்பினை மத்திய/மாநில/ தனியார் அரசு தொழிற் நிறுவனங்களில் வேலைவாய்ப்பினைப் பெற வளாகத் தேர்வு மூலம் தெரிவு செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக ஒவ்வொரு மாதமும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுவருகிறது. அதன்படி, படித்த வேலை தேடும் இளைஞர்களுக்காக வரும் 28.08.2026 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 03.00 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், விருதுநகர் சூலக்கரையில் உள்ள, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது.இத்தனியார் வேலைவாய்ப்பு முகாமில் சமர்தனம் டிரஸ்ட், செபாஸ் மெடிகல், ஃப்ளேர்மேக்செல், அடையார் ஆனந்த பவன், ஸ்ரீ ராம் மோட்டார்ஸ் போன்ற 20க்கும் மேற்பட்ட பிரபல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு, தொழிற்படிப்பு, டிப்ளமோ மற்றும் பொறியியல் படிப்பு ஆகிய கல்வித் தகுதி உடைய பணியாளர்களை தெரிவு செய்யவுள்ளார்கள். இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்த விரும்பும் வேலை நாடுநர்கள் 28.08.2026 அன்று வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பாக தனியார்துறை வேலைவாய்ப்பு இணையம் என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களை பதிவு செய்துவிட்டு சுய விவரச் சான்றிதழ், அனைத்து கல்விச்சான்றிதழ், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இச்சேவையானது முற்றிலும் கட்டணமில்லா சேவையாகும். இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அவர்களை நேரிலோ அல்லது 9360171161 என்ற தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது. என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S.. அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் எப்.எல் -1 / எப்.எல் -2 / எப்.எல் -3 / எப்.எல் -3A / எப்.எல் -3AA / மற்றும் எப்.எல் -11 மற்றும் ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை 2003-ம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணை விதி (1) Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981-ன்படி நபிகள் நாயகம் பிறந்த நாளான (மிலாடி நபி) 26.08.2025 (புதன்கிழமை) அன்று தற்காலிகமாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேற்படி உத்தரவினை மீறி செயல்படும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் எப்.எல் -1/ எப்.எல் -2/ எப்.எல் -3/ எப்.எல் -3A/ எப்.எல் -3AA மற்றும் எப்.எல் -11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களின் உரிமதாரர்களின் மீது Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981-ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா.I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (24.08.2026) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிந்தோர் நல உதவித்திட்டங்கள், விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை மற்றும் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தான மனுக்கள் பெறப்பட்டன.மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்கு நேரடியாகச் சென்று, அவர்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்று பரிசீலித்தார். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட இம்மனுக்கள் அனைத்தையும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து, அவற்றின் மீது உரிய மற்றும் விரைவான நடவடிக்கை எடுக்கவும், முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தி விரைந்து தீர்வு காணவேண்டும் என உத்தரவிட்டார்.இக்கூட்டத்தில், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் விடுதியில் சமையலராக பணிபுரிந்து பணியிடை மரணமடைந்த திரு.பால்ராஜ் என்பவரது வாரிசுதாரர் திரு.பிரபாகரன் என்பவருக்கு கருணை அடிப்படையில் சுந்தரராஜபுரம் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியில் பதிவுரு எழுத்தராக பணிநியமன ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.தொடர்ந்து, பொதுமக்களிடமிருந்து 641 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்க ஒப்படைக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்கள் எவ்வித சிரமமுமின்றி சேவைகளைப் பெறுவதை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.முன்னதாக எச்.ஐ.வி./எய்ட்ஸ் விழிப்புணர்வு வாகனத்தை தொடங்கி வைத்து, கிராமிய கலைகளான கரகாட்டம், பறை இசை, ஒயிலாட்டடம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி பிர்தௌஸ் பாத்திமா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) திரு.சையது முகமது, ஆதி திராவிடர் நலத்துறை அலுவலர் திருமதி சாந்தி, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.யசோதாமணி (விருதுநகர்), அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி.ச.கீர்த்தனா அவர்கள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S., அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.பி.செல்வம் அவர்கள் முன்னிலையில், விருதுநகர் மாவட்டம், ஆமத்தூர், எ.எ.எ. பொறியியல் கல்லுரியில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் வேலைநாடுநர்களுக்கு பணிநியமன ஆணையினை (22.08.2026) வழங்கினார்கள்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அரசானது இளைஞர்களால் உருவாக்கப்பட்ட மக்களுக்களின் நலன் காக்கும் அரசாகும். பெண்களுக்கு அனைத்து வகைகளிலும் சம உரிமை வழங்கிட வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.பெண்கள் வீட்டிலேயே முடங்கி இருக்காமல் உங்களது திறமைக்கேற்ற பணியினை பெற்று பிறர் துணை இல்லாமல் சுயமாக முன்னேற வேண்டும்.நான் விருதுநகரில் ஷத்திரியா வித்யாலயா பள்ளியில் தமிழ் வழியில் பயின்றேன். பின்னர் எனக்கு புள்ளியல் துறை சார்ந்து ஆர்வம் ஏற்பட்டதனால் எனது கனவினை நிறைவேற்ற மதுரைக்குச் சென்று மேல்படிப்பிற்காக நுழைவுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றேன். நான் கல்லூரி முடித்தவுடன் எனது பெற்றோர் தங்களது சமூக பொறுப்பினை நிறைவேற்றும் விதமாக எனக்கு திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர். அந்த நேரத்தில் நான் எனது லட்சியங்களை தெரியப்படுத்தி அதனை நோக்கி எனது பயணத்தினை தொடங்கினேன்.வெளி மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் அடித்தட்டு மக்களின் வாழ்வியல் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை குழுவாக இணைந்து செயல்படுத்தினோம். இருந்தாலும், பொதுமக்களுக்கு நேரடியாக திட்டங்களை உருவாக்கும் இடத்தில் நாம் இருந்தால் இதை விட அதிகப்படியான திட்டங்களை செயல்படுத்த முடியும் என்பதனை கருத்தில் கொண்டு அரசியல் பயணத்தினை தொடங்கினேன். அரசியல் நிலை அறியும் வண்ணம் அந்த தேர்தல் குழுவுடன் இணைந்து ஆந்திரா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் பணியாற்றிய பொழுது நாமே அரசியல் கட்சியில் இணைந்து பணியாற்றுவது சிறப்பாக இருக்கும் என திட்டமிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் களத்திற்கு வந்தேன். எனது ஒவ்வொரு நடவடிக்கைகளையும் சமூக வலைதளத்தின் வாயிலாக பொதுமக்களுக்கு எடுத்துச்சென்றேன். இதில் நல்ல மற்றும் எதிர்மறையான விமர்சனங்கள் வந்தன.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எவ்வித எதிர்மறை கருத்துகளுக்கும் செவி சாய்க்காமல் மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்படுவதைப்போல் நானும் செயல்பட்டு வருகிறேன்.இங்கு வேலை நாடி வந்த இளைஞர்கள் வேலைவாய்ப்பினை பெறுவதோடு நின்றுவிடாமல் நீங்கள் தொழில் முனைவோர்களாக முன்னேறி பல நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பவராக உருவாக வேண்டும். பல்வேறு தொழில் நிறுவனங்கள் வாயிலாக ரூ.1 லட்சம் கோடி மதிப்பீட்டில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. அதன்வாயிலாக அதிகமான தொழில் நிறுவனங்கள் தங்களது தொழிலை துவக்கும் நேரங்களில் கூடுதலான வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.இதனை இளைஞர்கள் நல்லமுறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி.ச.கீர்த்தனா அவர்கள் தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான அரசு, தமிழ்நாட்டு இளைஞர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கும் உயரிய நோக்கத்துடனும், இளைஞர்களுக்கான திறன் வளர்ப்பு, சுயதொழில் வாய்ப்பு, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றம் போன்றவற்றிற்காக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.படித்து முடித்த இளைஞர்கள் தங்களுக்கான வேலைவாய்ப்பினை விரைவாகவும், எளிதாகவும் பெற்றிட அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வேலை நாடுநர்களின் கல்வித் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பினை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இளைஞர்களின் தொழில்திறனை மேம்படுத்தி தொழில் முனைவோர்களாக உருவாக்கவும், தனியார் தொழில் நிறுவனங்களின் மூலம் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பதற்காகவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையானது, வேலைதேடும் இளைஞர்களை, மனித வளம் நாடும் தொழில் நிறுவனங்களுடன் இணைக்கும் பாலமாக செயல்பட்டு வருகிறது. மாவட்டந்தோறும் தொழில் நிறுவனங்களின் தேவைகளையும், இளைஞர்களின் திறன்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் தொடர்ந்து வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்றது முதல் 10 பெரிய வேலைவாய்ப்பு முகாம்களும், 118 சிறிய வேலைவாய்ப்பு முகாம்களும், மொத்தம் 128 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.வேலைவாய்ப்பு முகாம்களின் மூலம் 405 மாற்றுத்திறனாளிகள் உட்பட 16,961 வேலைநாடுநர்கள் பல்வேறு தனியார் தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.தற்போது, நடைபெற்று கொண்டிருக்கும் இம்மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில், 150-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களும் பங்கேற்று தங்கள் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான அலுவலர்களையும், பணியாளர்களையும் தேர்வு செய்கின்றனர்.மேலும், தமிழ்நாடு தனியார்துறை வேலைவாய்ப்பு இணைய தளமானது வேலைதேடும் இளைஞர்களுக்கும், தனியார் தொழில் நிறுவனங்களுக்கும் இடையிலான நம்பகமான இணைப்பு தளமாக உள்ளது. இதில் 5,93,186 வேலைநாடுநர்களும், 13,436 தனியார்துறை நிறுவனங்களும் பதிவு செய்துள்ளன. இந்த இணையதளத்தின் வாயிலாக 58,226 நபர்கள் தனியார்துறையில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.படித்த இளைஞர்கள் அரசுப்பணிக்காக பல்வேறு தேர்வு முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிடும் வகையில் அரசின் சார்பில் இலவசபயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தன்னார்வ பயிலும் வட்டங்கள் வாயிலாக 150 பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு 7,668 தேர்வர்கள் கலந்துகொண்டுள்ளனர். நேரடியாக பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க இயலாதவர்களுக்கு தொலைக்காட்சியின் வாயிலாக திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், மறுஒளிபரப்பு இரவு 7 மணி முதல் 9 மணி வரை நடத்தப்படுகிறது.வேலை வாய்ப்பினை உருவாக்குவது மட்டுமல்லாமல் ஒவ்வொரு இளைஞரையும் திறன் மிக்க தன்னம்பிக்கை கொண்ட பொருளாதார வளமிக்க குடிமகனாக உருவாக்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.மாவட்டந்தோறும் வேலைவாய்ப்புகளை அதிகரித்தல், தொழில் நிறுவனங்களுடன் நீடித்த கூட்டாண்மைகளை உருவாக்குதல், திறன் மேம்பாட்டு பயிற்சிகளை விரிவுபடுத்துதல், பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் கிராமப்புற இளைஞர்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துதல் மற்றும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் வெளிப்படையான வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.நமது மாவட்டத்தில் சிறப்பு முன்னெடுப்பாக விவசாயக்குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு அல்லது தனியார் துறையில் வேலைவாய்ப்பினை பெற்றுத்தர வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் மூலம் கதிரதிகாரம் என்னும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் படித்த விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த 19 நபர்களுக்கு தலா ரூ.25,000 மாத ஊதியத்தில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிவதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேலும், சிறுவயதில் குற்றம் புரிந்து மனம்திருந்தியவர்களுக்கு நிரந்தர வருவாய் ஈட்டும் திறனை உருவாக்கித் தரும் விதமாக உயிர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் அதிகமாக இளைஞர்கள் பயன்பெற்று வருகின்றனர்.இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்களை நன்கு பயன்படுத்தி தங்களது எதிர்காலத்தை வளமாக்கி கொள்ள வேண்டும் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் திரு.சு.இலக்குவன், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மண்டல இணை இயக்குநர் திரு.சண்முகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திருமதி ஞானபிரபா உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் வேலைநாடுநர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி.ச.கீர்த்தனா அவர்கள், மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S, தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.பி.செல்வம் அவர்கள், முன்னிலையில், விருதுநகர் மாவட்டம், பாப்பாகுடியில் கால்நடைகளுக்கான சுகாதார மற்றும் விழிப்புணர்வு சிறப்பு முகாமினை (22.08.2026) தொடங்கி வைத்தார்கள்.பின்னர், 24 கால்நடை வளர்ப்போர்களுக்கு தாது உப்பு கலவை, சீமைப்புல் கரணைகளையும், சிறந்த கிடாரி கன்று மேலாண்மைக்காக 3 பயனாளிகளுக்கு பரிசுகளையும், சிறந்த மேலாண்மை முறையில் கால்நடை வளர்க்கும் 5 பயனாளிகளுக்கு பரிசுகளையும் அமைச்சர் பெருமக்கள் அவர்கள் வழங்கினார்கள்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏழை, எளிய பொதுமக்களின் நலன் கருதியும், கிராமப்புற பொருளாதாரத்தினை பாதுகாத்துக்கொண்டிருக்கும் முக்கிய தொழில்களில் ஒன்றான கால்நடை வளர்ப்பினை பாதுகாத்திட பல்வேறு திட்டங்களை கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் செயல்படுத்தி வருகிறார்.கால்நடைகளை நோய்தாக்குதலிலிருந்து பாதுகாத்திடும் வகையில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்களை தமிழகமெங்கும் 388 ஊராட்சி ஒன்றியங்களில் 6,984 சிறப்பு முகாம்கள் நடத்திட உத்தரவிட்டு அதற்காக 7.63 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார்கள்.அதனடிப்படையில், 11 ஊராட்சி ஒன்றியங்களிலும் தலா 18 முகாம்கள் வீதம் 198 சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படவுள்ளது.சிறப்பு முகாம்களின் மூலம் 1,65,850 கால்நடைகளும், 3,092 எருமையினங்களும், 5,45,991 வெள்ளாடுகளும், 5,80,489 செம்மறியாடுகளும், 17,10,958 கோழிகளும் பயனடையும்.முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், மடி வீக்க நோய் மேலாண்மை, குடற்புழு நீக்கம் செய்தல், நோய்களுக்கெதிரான தடுப்பூசி, ஆண்மை நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சைகள், சினை சரிபார்ப்பு மற்றும் சுண்டு வாத அறுவை சிகிச்சை போன்ற பல்வேறு சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.முகாமில் கலந்து கொள்ளும் கால்நடைகளுக்கு தாது உப்புக்கலவை, 1 கிலோ எடையுள்ள சத்துப்பவுடர் இலவசமாக வழங்கப்படும். விவசாயிகள் தங்களது பெயர்களை பதிவு செய்து கால்நடைவளர்ப்புக்குத் தேவையான தீவனப் புல் விதைகளை பெற்றுக்கொள்ளலாம். முகாம் நடைபெறும் இடம், நாள், பங்கேற்கும் மருத்துவ குழுவினர் குறித்த விவரங்கள் முன்கூட்டியே ஊராட்சிப்பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படும். இது குறித்து துண்டு பிரசுரங்கள், ஒலிபெருக்கிகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் மற்றும் விலங்கின ஆர்வலர்கள் இச்சிறப்பு முகாமினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் பெருமக்கள் அவர்கள் தெரிவித்தனர்.இம்முகாமில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இயக்குநர் மரு.ம.சு.சரவணன், உதவி இயக்குநர் பா.கார்த்திக் கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தங்களது பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில், மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் மேம்பாட்டு அலுவலகம், சென்னை சார்பில் விற்பனையாளர் மேம்பாட்டு நிகழ்ச்சி ஆகஸ்ட் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது.இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிறு தொழில் நிறுவனங்களை அரசு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கொள்முதல் தேவைகளுடன் நேரடியாக இணைத்து, புதிய வணிக வாய்ப்புகள் மற்றும் சந்தை வாய்ப்புகள் உருவாவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில் 40-க்கும் மேற்பட்ட அரசு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இதன் மூலம் மாவட்ட தொழில் நிறுவனங்கள் தங்களது பொருட்கள் மற்றும் சேவைகளை நேரடியாக அறிமுகப்படுத்துவதுடன், நிறுவனங்களின் கொள்முதல் தேவைகளை அறிந்து கொள்ளவும், புதிய வாடிக்கையாளர்களை அடையாளம் காணவும், விற்பனையாளர் பதிவு மற்றும் அரசு கொள்முதல் நடைமுறைகள் தொடர்பான தகவல்களைப் பெறவும் வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.நமது மாவட்டத்தில் உற்பத்தியாகும் பட்டாசு, தீப்பெட்டி, அச்சுத்தொழில் உணவு பொருட்கள் பதப்படுத்துதல், அட்டைபெட்டி, ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள், மருத்துவ கட்டுத்துணிகள், ரப்பர், பொறியியல் உதிரிபாகங்கள், மின்சாரம் மற்றும் மின்னணு பொருட்கள் உள்ளிட்ட உற்பத்தித் நிறுவனங்களுடன் சேவை மற்றும் வர்த்தக நிறுவனங்களும் தங்களுக்கு ஏற்ற வாய்ப்புகளைத் தேர்வு செய்யலாம்.மேற்கண்ட நிகழ்ச்சியில் பங்கேற்கும் தகுதியான நிறுவனங்களுக்கு, சம்பந்தப்பட்ட அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் விதிமுறைகள் மற்றும் தகுதித் தேவைகளுக்கு உட்பட்டு சோதனை கொள்முதல், விருப்பக் கடிதம், விற்பனையாளர் பதிவு மற்றும் தொடர் கொள்முதல் பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்படும்.இந்நிகழ்வில் உருவாகும் தொழில் தொடர்புகள் இந்தநிகழ்ச்சியுடன் முடிவடையாமல், அவற்றை தொடர்ந்து முன்னெடுத்து நடைமுறை வணிக வாய்ப்புகளாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி, புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடக்கூடிய காரணிகளை உருவாக்குவதே இந்நிகழ்ச்சியின் முதன்மை நோக்கமாகும்.மாவட்ட நிர்வாகத்தின் ஒருங்கிணைப்பில், மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் மேம்பாட்டு அலுவலகம் - சென்னை, தமிழ்நாடு தொழில் முனைவோர் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு அமைப்பு, விருதுநகர் மாவட்ட தொழில் மையம் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலகங்கள் இணைந்து இந்நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்துள்ளன.எனவே, விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து தகுதியான குறு, சிறு மற்றும் நடுத்தர, உற்பத்தி, சேவை, மற்றும் வர்த்தக நிறுவனங்களும் இவ்வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுடன் புதிய வணிகத் தொடர்புகளை உருவாக்கி அதன் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களும் பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் (21.08.2026) நடைபெற்றது. இக்கூட்டத்தில் 16 விவசாயிகளுக்கு கணினி திருத்த பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S., அவர்கள் வழங்கினார். இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் தெரிவித்தனர். கடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளால் வழங்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.விவசாயிகளுக்கு 2024 – 2025 ஆம் ஆண்டிற்கான கரும்பு ஊக்கத்தொகை அனைத்தும் வழங்கப்பட்டு விட்டன. அதேபோல், இவ்வாண்டிற்கான கரும்பு ஊக்கத்தொகையானது அரசாணை பெறப்பட்டவுடன் வழங்கப்படும். மேலும், UDR -இல் ஏற்பட்ட பிழையினையும் திருத்த வேண்டும். விவசாயிகளுக்கான அடங்கல் சான்றிதழை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். வனவிலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதத்தினை தடுப்பதற்கு வனத்துறை விவசாயிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும். மேலும், விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளான அரசின் மூலம் கூடுதலான கண்மாய்களை தூர் வாருவதற்கான நடவடிக்கை, மாம்பழ கூழ் தயாரிக்கும் தொழிற்சாலைகளை நிறுவுதல், மழை நீரை முழுவதுமாக சேமித்திட வரத்து வாய்க்கால்களை தூர்வாரி முழு அளவில் தயார் செய்தல், பொது இடங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை தனியார் பங்களிப்புடன் அகற்றிடுதல், மின்கம்பங்கள் மாற்றுவது குறித்த மனுக்களுக்கு தீர்வு காணுதல், சாலை பணிகளுக்காக எடுக்கப்பட்ட நிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகையினை விவசாயிகளுக்கு வழங்குதல், கூட்டுறவு வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்ட நகைகளுக்கான கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் நகைகளை திரும்ப உரியவரிடம் ஒப்படைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காண சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.மேலும், மாவட்டத்தில் 3826.7 மெட்ரிக் டன் யூரியாவும், 1927.4 மெட்ரிக் டன் டி.ஏ.பியும், 269.2 மெட்ரிக் டன் முயூரெட் ஆப் பொட்டாசும், 2330.1 மெட்ரிக் டன் கலப்பு உரமும், 357.4 மெட்ரிக் டன் சிங்கிள் சூப்பர் பஸ்பேட் உரமும் என மொத்தம் 8711 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு உள்ளது. இதனை, விவசாயிகள் பெற்றுக்கொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இக்கூட்டத்தில் துணை இயக்குனர்(மேகமலை புலிகள் காப்பகம் திருவில்லிபுத்தூர்) திரு.ரவி மீனா இ.வ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, வேளாண்மை இணை இயக்குநர் திரு.சௌமியன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திரு.திருப்பதி, வேளாண்மை துணை இயக்குநர்/மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ) அ.அம்சவேணி, கோவிலாங்குளம் வேளாண் அறிவியல் நிலையம் பேராசிரியர் மற்றும் தலைவர் திரு.ராமசுப்பிரமணியன், தோட்டக்கலை துணை இயக்குநர் திரு.ஆறுமுகம், வேளாண்மை துணை இயக்குநர்(வேளாண் வணிகம் மற்றும் விற்பனை) திருமதி த.வளர்மதி, செயற்பொறியாளர் (வேளாண்மை பொறியியல் துறை) திருமதி இந்திரா, உட்பட பல துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.