25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Jul 28, 2026

சேதுராஜபுரம் ஊராட்சியில் தமிழக அரசின் சாதனைகள் விளக்க புகைப்பட கண்காட்சி.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் சேதுராஜபுரம் ஊராட்சியில் (27.07.2026) செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பாக வைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனைகள் விளக்க புகைப்பட கண்காட்சிகளை பொதுமக்கள் பார்வையிட்டனர்.

Jul 28, 2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  (27.07.2026) மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிந்தோர் நல உதவித்திட்டங்கள், விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை மற்றும் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தான மனுக்கள் பெறப்பட்டன.மேலும், மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்கு நேரடியாகச் சென்று, அவர்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்று பரிசீலித்தார். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட இம்மனுக்கள் அனைத்தையும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து, அவற்றின் மீது உரிய மற்றும் விரைவான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.தொடர்ந்து, பொதுமக்களிடமிருந்து 745 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்க ஒப்படைக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து, மாவட்ட வருவாய் அலுவலர் பொதுமக்கள் எவ்வித சிரமமுமின்றி சேவைகளைப் பெறுவதை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.இக்கூட்டத்தில், பட்டாசு தொழிற்சாலை விபத்துக்களில் உயிரிழந்த தொழிலாளர்களின் 17 குழந்தைகளுக்கு ரூ.4.79 இலட்சம் மதிப்பிலான பராமரிப்புத்தொகை மற்றும் உயர்கல்வி வரையிலான கல்வி உதவி தொகைகளை  மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி அவர்கள் வழங்கினார்.இக்கூட்டத்தில், தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.கு.மோகனா, இணை இயக்குநர்கள் திரு.இரா.இரவிச்சந்திரன்(விருதுநகர்), திருமதி அ.சித்திரா(சிவகாசி), அரசு துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jul 28, 2026

விருதுநகர் மாவட்டம் தோட்டக்கலை பயிர்களுக்கு குறுவை பருவத்தில் பயிர் காப்பீட்டு செய்யலாம்.

இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பயிர் இழப்பிலிருந்து விவசாயிகளின் நலன் மற்றும் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி 2026-27ஆம் ஆண்டில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.தற்போது நிலவும் ”எல் நினோ” நிகழ்வின் தாக்கத்தால் தென்மேற்கு பருவமழை இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், குறுவை மற்றும் மானாவாரி பயிர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனை கருத்தில் கொண்டு, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், 2026 குறுவை பருவத்தில், விருதுநகர் மாவட்டத்தில்  வாழை, மற்றும் வெங்காயம் ஆகிய  பயிர்களுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன.அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை  25/06/2026 முதல் விவசாயிகள் தேசிய பயிர்க் காப்பீட்டு இணையதளத்தில் காப்பீடு செய்து கொள்ளலாம். குறுவை பருவத்தில் வெங்காயம் பயிருக்கு காப்பீடு செய்வதற்கான கடைசி நாள் 31.08.2026  மற்றும் வாழை பயிருக்கு காப்பீடு செய்வதற்கான கடைசி நாள் 15.09.2026 வரை காப்பீடு செய்து கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ், மாவட்டங்களின் பரிந்துரைப்படி மகசூல் இழப்பு, விதைப்பு / நடவு செய்ய இயலாத நிலை, விதைப்பு / நடவு பொய்த்தல், பகுதி சார்ந்த மற்றும் பயிர் வளர்ச்சி கால இடர் நிகழ்வுகளால் ஏற்படும் இழப்பு மற்றும் அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்பு போன்ற இனங்கள் காப்பீடு செய்யப்படுகின்றன.எனவே, கடன் பெறும் விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் காப்பீடு செய்து கொள்ளலாம். கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்கள் (இ-சேவை மையங்கள்) அல்லது தேசிய பயிர்க் காப்பீட்டு இணையதளத்தில் (https://pmfby.gov.in/) உள்ள "விவசாயிகள் கார்னர்" வாயிலாக நேரடியாகவும் பதிவு செய்து கொள்ளலாம். காப்பீடு செய்வதற்கான இறுதி தேதி எக்காரணத்திற்காகவும் நீட்டிக்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.                                                                                     விவசாயிகள் இத்திட்டத்தின்கீழ், பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் / விதைப்பு அறிக்கை, கணக்கு புத்தகத்தின் (Bank pass book) முதல் பக்க நகல், ஆதார்  அட்டை (Andhaar Card) நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டணத் தொகையை செலுத்திய பின் அதற்கான  இரசீதையும் பெற்றுக்கொண்டு, அதில் தாங்கள் காப்பீடு செய்த பயிர் மற்றும் அதற்கான கிராமம் / குறுவட்டம் உள்ளிட்ட விவரங்கள் சரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநரையோ தோட்டக்கலை அலுவலரையோ உதவி தோட்டக்கலை அலுவலரையோ வங்கி கிளைகளையோ அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.விவசாயிகளின் நலனுக்காக தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் இப்பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் தங்கள் மாவட்டங்களில் அறிவிக்கை செய்த பகுதிகளில் அறிவிக்கை செய்த பயிர்களைக் காப்பீடு செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S.,அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jul 28, 2026

மாவட்ட அளவிளான ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் .

விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான ஆதிதிராவிடர் நலக்குழுவானது 20.06.2023 அன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேற்படி குழுவானது மூன்று வருடத்திற்குள்  கலைக்கப்பட வேண்டும்.  எனவே,  நடைமுறையில் உள்ள ஆதிதிராவிடர் நலக்குழுவானது கலைக்கப்படுகிறது. புதிய குழு அமைத்து, அக்குழுவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைவராகவும், மாவட்ட ஆதிதிராவிடர்  மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்- செயல் உறுப்பினராகவும் செயல்படுவார்கள். இக்குழுவில்   அதிகாரப்பூர்வமான உறுப்பினர்களாக  உதவி ஆட்சியர்/வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட  இயக்குநர் தாட்கோ மாவட்ட மேலாளர் , அ-நிலை ஆதிதிராவிடர் நல அலுவலர் , பி-நிலை ஆதிதிராவிடர் அதிகாரி , சி-நிலை ஆதிதிராவிடர் அதிகாரி , டி-நிலை ஆதிதிராவிடர் அதிகாரி மற்றும் மாவட்டத்திலுள்ள ஆதிதிராவிடர்  சட்டமன்ற  உறுப்பினர்களும், ஒன்றியத்  தலைவர்களும் நிரந்தர உறுப்பினர்களாக செயல்படுவார்கள்.ஆதிதிராவிடர்    அரசு அலுவலர்களின் மாவட்ட சங்கத் தலைவர் ஒருவரும், ஆதிதிராவிடர் அமைப்பின் சங்கத் தலைவர்கள் மூவரும், பழங்குடியினர் சங்கத் தலைவர் மற்றும் ஆதிதிராவிடர் வழக்குரைஞர், பேராசிரியர், தொழில்அதிபர் என ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் பதவிக்கு  விண்ணப்பிக்கலாம்.எனவே, விருப்பமுள்ள  தகுதி வாய்ந்த   நபர்கள்   விருதுநகர்  மாவட்ட ஆதிதிராவிடர் நலக் குழு உறுப்பினராக  சேர்வதற்கு வருகின்ற 31.07.2026 –க்குள் விண்ணப்பிக்கலாம் என  மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jul 27, 2026

அருள்மிகு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோவில் ஆடி அமாவாசைதிருவிழாவினை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், தாணிப்பாறையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோவில் ஆடி அமாவாசை திருவிழாவினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S ., அவர்கள் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. நிஷாந்த் கிருஷ்ணா, I A S., அவர்கள் ஆகியோர் தலைமையில் (25.07.2026) ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.அருள்மிகு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோவில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து பங்கேற்பார்கள். இவ்விழாவில் பங்கேற்கும் பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் போதிய பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளவும், கூட்ட நெரிசலை ஒழுங்குப்படுத்தவும் காவல்துறையினர் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.தரிசனம் செய்ய வருகின்ற பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்குத் தேவையான குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதிகளும், வனத்துறையின் மூலம் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வண்ணம் முன்னேற்பாடு பணிகளையும், எந்த நேரத்திலும் முதலுதவி சிகிச்சை அளித்திடும் வகையில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுடன் கூடிய மருத்துவக் குழுவும்,  ஆம்புலன்ஸ் வசதிகளும் ஏற்படுத்தப்பட வேண்டும்.மேலும், சதுரகிரிக்கு செல்லும் பக்தர்கள் நெகிழி பொருட்கள், போதை வாஸ்து போன்ற பொருட்கள் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.  தாணிப்பாறை அடிவாரத்தில் சேரும் குப்பைகளை அகற்றுவதற்கு தேவையான துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். சதுரகிரிக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்கேற்ப மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வெளியூர் பேருந்துகள், தனிநபர்களுக்கு சொந்தமான வாகனங்கள் போன்ற அனைத்து வாகனங்களையும் நிறுத்துவதற்கு வசதியாக தற்காலிக பேருந்து நிறுத்தங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.சதுரகிரிக்கு செல்லும் பக்தர்கள் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைகளை பின்பற்றி பாதுகாப்பான முறையில் வனப்பகுதிக்குள் சென்று சாமி தரிசனம் செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் தெரிவித்தார்கள்.இந்த ஆய்வின் போது,  துணை இயக்குநர் (திருவில்லிபுத்தூர்மேகமலை புலிகள் காப்பகம் ) திரு.ரவி மீனா.,இ.வ.ப., சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான், I A S., திட்ட இயக்குநர் (விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை)  திருமதி வானதி,  வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Jul 27, 2026

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் ரூ.1.13 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 அங்கன்வாடி மைய கட்டடங்களை திறந்து வைத்தார்.

 சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள்  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா .I A S ., அவர்கள் தலைமையில், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கார்த்திக் முன்னிலையில் விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட இராஜபாளையம். ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு பகுதிகளில்  ரூ.1.13 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 அங்கன்வாடி மைய கட்டடங்களை  (25.07.2026) திறந்து வைத்தார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வளரிளம் குழந்தைகள் முன்பருவ கல்வியினை சிறந்த முறையில் கற்றிடவும், ஊட்டச்சத்து குறைபாடின்றி நல்ல ஆரோக்கியத்துடன் நல்ல பழக்க வழக்கங்களை குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தின் மூலம் ஏராளமான திட்டங்களை ஏற்படுத்தி செயல்படுத்தி வருகிறார்கள்.விருதுநகர் மாவட்டத்தில் 1,504 அங்கன்வாடி மையங்கள் மூலம் 0 முதல் 6 மாதம்  வரை உள்ள 36,000 குழந்தைகளுக்கு இணைவுணவும், 6 மாதம் முதல் 3 வயது வரை உள்ள 29,061 குழந்தைகளுக்கு முட்டையுடன் இணைவுணவும், 8,475 கர்ப்பிணி தாய்மார்கள், 9,050 பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்துடன் இணைவுணவும்  வழங்கப்படுகிறது.குழந்தைகளுக்கு வண்ணச்சீருடைகளும், திங்கட்கிழமை முட்டையுடன் தக்காளிசாதமும், செவ்வாய்க்கிழமை கலவை சாதத்துடன் பச்சைப்பயறு அல்லது கொண்டைக்கடலையும், புதன்கிழமை முட்டையுடன் புலாவ் சாதமும், வியாழக்கிழமை முட்டையுடன் எலுமிச்சை சாதமும், வெள்ளிக்கிழைமை பருப்பு உருளைக்கிழங்கு சாதமும், சனிக்கிழமை கலவை சாதமும் வழங்கப்படுகிறது. குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவானது சுத்தமான முறையில் சுகாதாரத்துடன் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.அதனடிப்படையில் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு பாதுகாப்பான கட்டட வசதியும், காற்றோற்டத்துடன் கூடிய இடங்களில் கல்வி கற்பிக்கும் வகையில் புதிய அங்கன்வாடி மையங்கள் கட்டப்பட்டுள்ளன. அதன்படி இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.17.25 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வடகரை அங்கன்வாடி மையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கொத்தன்குளம் காலனி அங்கன்வாடிமையம், நூர்சாகிபுரம் ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொட்டல்பட்டி  அங்கன்வாடி மையம், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.18.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அழகாபுரி அங்கன்வாடி மையம், ரூ.18.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாத்தூர் அங்கன்வடி மையம்,  ரூ.18.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதுப்பட்டி காலனி அங்கன்வாடி மையம் என மொத்தம் ரூ.1.13 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 அங்கன்வாடி மையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இதனை நல்ல முறையில் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில்  மாவட்ட ஊரக வளர்ச்சி  முகமை திட்ட இயக்குநர் திருமதி வானதி,  சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி  திட்ட அலுவலர் திருமதி ஷீலா, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jul 27, 2026

விருதுநகர் மாவட்டம் 22 பயனாளிகளுக்கு ரூ.14.69 இலட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், விஜயரெங்காபுரத்தில் (25.07.2026) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 22 பயனாளிகளுக்கு  ரூ.14.69 இலட்சம் மதிப்பீட்டிலான இலவச வீட்டுமனை பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ. சுகபுத்ரா, I A S., அவர்கள் வழங்கினார்.இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த தகுதியான பயனாளிகளுக்கு  அரசு புறம்போக்கு இடத்திலோ, அரசு புறம்போக்கு இடம் இல்லாத பட்சத்தில் தனியாரிடமிருந்து அரசு நிர்ணயத் தொகையை செலுத்தி கையகப்படுத்தி, வீட்டு மனைகளாக அளவீடு செய்து   வழங்கப்பட்டு வருகிறது..அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டம்  விஜயரங்கபுரம் கிராமத்தில் வசிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து, 22 பயனாளிகளுக்கு ரூ.14.69 இலட்சம் மதிப்பில் இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு பயனாளிக்கும் தலா 3 சென்ட் வீட்டுமனை இலவசமாக வழங்கப்பட்டது.இதன் மூலம் ஆதிதிராவிடர் குடும்பங்கள் சொந்த வீட்டுமனை பெற்று பாதுகாப்பான மற்றும் நிலையான வாழ்வாதாரத்தை உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு சமூக நீதி மற்றும் சமத்துவத்தை முன்னிறுத்தி ஆதிதிராவிடர் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. தகுதியுடைய அனைத்து பயனாளிகளும் அரசின் நலத்திட்டங்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் , குழந்தைகளை நன்கு படிக்க வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் சாத்தூர் கோட்டாட்சியர் திரு.கனகராஜ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல  அலுவலர் திருமதி சாந்தி, வெம்பக்கோட்டை வட்டாட்சியர் திருமதி ஆண்டாள்,  வருவாய்த்துறை அலுவலர்கள்,  மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Jul 25, 2026

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் 3,992 குடும்ப அட்டைதாரர்களுக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்கும் பணியினை தொடங்கி வைத்தார்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S., தலைமையில் 3,992 குடும்ப அட்டைதாரர்களுக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்கும் பணியினை விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில்  (24.07.2026) தொடங்கி வைத்தார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்களின் நலனையே பெரிதும் முக்கியத்துவமாக கருதி செயல்பட்டு வருகிறார்கள். நாங்கள் அனைவரும் சட்ட மன்ற உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாகவும் இருப்பதற்கு மக்களாகிய உங்களுடைய பெருத்த ஆதரவே காரணம். அதனால் பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கும், குறைகளை தீர்ப்பதற்கும் 24 மணி நேரமும் களப்பணியாற்ற தயாராக இருக்கின்றேன். அதனால் நீங்கள் எந்நேரமும் உங்களது குறைகளை தெரிவிக்கலாம் நிறைவேற்ற தயாராக உள்ளோம். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் சமூக பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் பல்வேறு திட்டங்களை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறையின் மூலம் செயல்படுத்தி வருகிறார்.அதனடிப்படையில் பொதுவிநியோகத் திட்டத்தின் மூலம் சமூகப் பொருளாதாரப் வேறுபாடின்றி அனைத்து குடும்பங்களுக்கும் உணவுப் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு மானியத்தின் அடிப்படையில் அரிசி மற்றும் கோதுமையுடன், சர்க்கரை, மண்ணெண்ணெய் மற்றும் சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் துவரம்பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.  விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக, 727 முழு நேர நியாய விலைக் கடைகளும், 235 பகுதி நேர நியாய விலைக்கடைகளும் என மொத்தம் 962 நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இக்கடைகள் மூலம் 5,51,793 அரிசி குடும்ப அட்டை தரார்கள், 10,060 சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள், 5,933 முதியோர் உதவித் தொகை குடும்ப அட்டைதாரர்கள், 2,518 காவலர்கள் குடும்ப அட்டைதாரர்கள் ஆக மொத்தம் 6,18,619 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது.ஒவ்வொரு மாதமும் நியாய விலைக்கடைகளின் மூலம் 8,723 மெட்ரிக் டன் அரிசியும், 740 மெட்ரிக் டன் சர்க்கரையும், 890 மெட்ரிக் டன் கோதுமையும், 485 மெட்ரிக் டன் துவரம்பருப்பும், 5,02,415 பாக்கெட் பாமாயிலும், லிட்டர் மண்ணெண்ணையும் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.மேலும்,  தமிழக அரசின் சார்பாக 65 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் அடங்கிய 5,311 குடும்ப அட்டைகளுக்கு தாயுமானவர் திட்டத்தின் கீழ் பொதுவிநியோக பொருட்கள் நேரடியாக ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் வீடுகளுக்குச் சென்று விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.ஒரு நபர் மட்டும் இருக்கும் குடும்ப அட்டைக்கு 12 கிலோ அரிசி வழங்கப்படுகிறது.01.05.2026 முதல் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பம் செய்யப்பட்டுள்ள அனைவருக்கும் அரசு உத்திரவு வரப்பெற்ற உடன் வெகு விரைவில் தகுதியான நபர்களுக்கு புதிய குடும்ப அட்டை வழங்கப்படவுள்ளன.தமிழக முதல்வர் அவர்களால் கடந்த வாரம் புதிய குடும்ப அட்டை வழங்கும் விழா நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் இன்று (24.07.2026) இந்த விழாவில் கடந்த 16.12.2025 முதல் 30.04.2026 வரை புதிய குடும்ப அட்டைகள் கோரி விண்ணப்பம் செய்த நபர்களில் தகுதியான 3,992 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படுகிறது. அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ்  முன்னுரிமையுள்ள AAY குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 35 கிலோ அரிசி வழங்கப்படுகிறது.தற்பொழுது மத்திய அரசு மூலமாக மானியம் பெறுவதை உறுதிப்படுத்தும் பொருட்டு AAY, PHH, NPHH ஆகிய முன்னுரிமை குடும்ப அட்டைகளில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் கைரேகை பதிவு செய்ய வேண்டுமென தமிழக அரசால் உத்திரவிடப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 18,00,580 நபர்களில் 16,35,694 நபர்கள் கைரேகை பதிவு செய்துள்ளனர். மீதமுள்ள 1,64,886 நபர்களும் உடனடியாக கைரேகை பதிவு செய்யவும். தங்களது குடும்பத்தில் கைரேகை பதிவு செய்யாத நபர்களை உடனடியாக பதிவு செய்யவும் படிப்பு சம்மந்தமாக மற்றும் பணி சம்மந்தமாக தங்களது குடும்பத்தில் உள்ள நபர்கள் வெளியூரில் இருக்கும் பட்சத்தில் அந்த ஊரில் அருகில் உள்ள நியாய விலைக்கடையில் கைரேகை பதிவு செய்திட வேண்டும் எனசமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் சிவகாசி சார் ஆட்சியர் முகமது இர்பான் I A S., மாவட்ட  வழங்கல் அலுவலர் சு.சோமசுந்தர சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jul 25, 2026

வன உயிரினங்களால் பயிர்கள் பாதிக்கப்பட்ட 4 விவசாயிகளுக்கு நிவாரணத்தொகையை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

  விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (24.07.2026) நடைபெற்ற  விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வன உயிரினங்களால் பயிர்கள் பாதிக்கப்பட்ட 4 விவசாயிகளுக்கு ரூ.94,500/-  மதிப்பீட்டிலான நிவாரணத்தொகையைமாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் வழங்கினார்.கடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளால் வழங்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.தமிழகத்தில் 12 மாவட்டங்களில் அதிகமான வெப்ப அலை ஏற்படக்கூடும் என இந்திய வானிலை ஆய்வகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே,  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வறட்சியைத் தாங்கும் பயிர்களை பயிர் செய்ய விவசாயிகள் முன்வர வேண்டும்.வேளாண் பொறியியல் துறை மூலமாக 100சதவீதம் மானியத்தில் 40 பண்ணைக்குட்டைகள் அமைத்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள விவசாயிகள் பண்ணைக்குட்டைகள் அமைத்திட முன்வரலாம்.வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை மூலமாக 25 உலர்களம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு  விரைவில் உலர்களம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தரமான விதைகள் மற்றும் உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.விவசாயிகள் அறிக்கை செய்யப்பட்ட கண்மாய்களில் வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படவுள்ளது.விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று 4 இடங்களில் தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை விவசாயிகள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.விருதுநகர் மாவட்டத்தில் வனவிலங்குகளால் பயிர்கள் சேதமடையாமல் பாதுகாத்திட வனத்துறையின் மூலம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் எதிர்பாராத வகையில் வனவிலங்குகளால் பயிர் பாதிப்பு ஏற்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது. அதனடிப்படையில் 4 விவசாயிகளுக்கு ரூ.94,500/- மதிப்பீட்டிலான நிவாரண உதவித்தொகை (24.07.2026) வழங்கப்பட்டது.விவசாயிகள் அளிக்கும் கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காண சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இக்கூட்டத்தில் துணை இயக்குனர்(மேகமலை புலிகள் காப்பகம் திருவில்லிபுத்தூர்) திரு.ரவி மீனா இ.வ.ப., அவர்கள், வேளாண்மை துணை இயக்குநர்/மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ) அ.அம்சவேணி, வேளாண்மை இணை இயக்குநர் திரு. சௌமியன், தோட்டக்கலை துணை இயக்குநர் திரு.அ.அறுமுகம், வேளாண்மை துணை இயக்குநர்(வேளாண் வணிகம் மற்றும் விற்பனை) திருமதி.த.வளர்மதி, செயற்பொறியாளர் (வேளாண்மை பொறியியல் துறை) திருமதி. இந்திரா, பேராசிரியர் மண்டல ஆராய்ச்சி நிலையம், அருப்புக்கோட்டை மற்றும் பருத்தி ஆராய்ச்சி நிலையம், ஸ்ரீவில்லிப்புத்தூர், இணை பதிவாளர், கூட்டுறவு சங்கங்கள், உட்பட பல துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Jul 24, 2026

தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி.ச.கீர்த்தனா அவர்கள் சிவகாசி ரயில் நிலையத்திற்கான புதிய வழித்தட பேருந்து சேவையினை தொடங்கி வைத்தார்.

 தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி.ச.கீர்த்தனா அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S., அவர்கள் தலைமையில் சிவகாசி என்.ஆர்.கே.ராஜரத்தினம் பேருந்து நிலையத்தில் சிவகாசி ரயில் நிலையத்திற்கான புதிய வழித்தட பேருந்து சேவையினை  (23.07.2026) தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்களின் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பல்வேறு திட்டங்களை ஏற்படுத்தி செயல்படுத்தி வருகிறார்கள்.பொதுமக்களின் போக்குவரத்து வசதியினை மேம்படுத்திடவும், பாதுகாப்பான போக்குவரத்தினை உறுதி செய்திடவும் அதிக முன்னுரிமை எடுத்து விபத்தில்லா தமிழகம் என்ற நிலையினை எய்திட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். கிராம பொதுமக்கள் பணியின் காரணமாக நகரங்களுக்கும், நகரங்களை கிராமங்களோடு இணைப்பதற்கும் பொது போக்குவரத்துத்துறையின் செயல்பாடுகள் இன்றியமையாததாக உள்ளது.சிவகாசி மாநகராட்சி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சிவகாசி என்.ஆர்.கே.ராஜரத்தினம் பேருந்து நிலையத்தில் இருந்து  சிவகாசி ரயில் நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைக்கு  பேருந்து வசதி இல்லாத நிலையினை சீர்படுத்தும் வகையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு பொதுமக்களின் கோரிக்கைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கும் வகையில் விரைந்து அனுமதி அளிக்கப்பட்டது. இதுநாள் வரை பொதுமக்கள் பேருந்து நிலையத்திலிருந்து ரயில் நிலையத்திற்கும், அரசு மருத்துவமனைக்கும் ஆட்டோ, இரண்டு சக்கர வாகனம் மற்றும் இதர தனியார் வாகனங்கள் மூலமாக சென்றனர். இதனால் பொதுமக்களுக்கு கூடுதல் செலவினமும், மன உளைச்சலுக்கும் ஆளாகி வந்தனர். இந்த சூழ்நிலையை மாற்றிடும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.அதனடிப்படையில் புதிய வழித்தட பேருந்து வசதி துவக்கி வைக்கப்படுகிறது. தினமும் இப்பேருந்தானது 10 முறை இயக்கப்பட உள்ளது. இதன் மூலம் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.பொதுமக்களின் தேவையினை அறிந்து நிறைவேற்றுவதில் எவ்வித சமரசமுமின்றி விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார். கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி பொதுமக்களிடம் பேருந்து வசதி செய்து தரப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழி இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.பொதுமக்கள் பேருந்து வசதியினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என  தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான் I A S., விருதுநகர் மண்டல பொது மேலாளர் (தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்) திரு.கே.கண்ணன், சிவகாசி மாநகராட்சி ஆணையாளர் திரு.கண்ணன்,  உதவி மேலாளர் (வணிகம்) திரு.எஸ்.நாகராஜ்,  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

1 2 ... 5 6 7 8 9 10 11 ... 138 139

AD's



More News