ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் பைனலுக்கு இந்திய அணி முன்னேறியது. நேற்று நடந்த அரையிறுதியில் மலேசியாவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.சீனாவில், ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி (20 வயதுக்குட்பட்டோர்) தொடரின் 10-வது சீசன் நடக்கிறது. ஆண்கள் பிரிவில் 10 அணிகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியனான இந்திய அணி, ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றது.லீக் சுற்றில் பங்கேற்ற 4 போட்டிகளில் 3 வெற்றி, ஒரு ‘டிரா’ என 10 புள்ளிகள் பெற்ற இந்தியா, பட்டியலில் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது.நேற்று நடந்த அரையிறுதியில், ‘பி’ பிரிவில் இரண்டாவது இடம் பிடித்த மலேசியாவை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறியது.நாளை நடைபெற உள்ள பைனலில் இந்தியா, தென் கொரிய அணியை எதிர்கொள்கிறது.
ஆசிய கோப்பை பெண்கள் கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இலங்கை அணி பைனலுக்கு முன்னேறியது.ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.) பெண்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் (டி-20) தொடரின் 10-வது சீசன் நடக்கிறது. இதில் 8 அணிகள் பங்கேற்கின்றன. துபாயில் நடந்த முதல் அரையிறுதியில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்தியா, பைனலுக்கு முன்னேறியது.நேற்று இரண்டாவது அரையிறுதி போட்டி நடந்தது. ‘பி’ பிரிவில் முதலிடம் பெற்ற இலங்கை அணி, ‘ஏ’ பிரிவில் இரண்டாவது இடம் பிடித்த பாகிஸ்தானை எதிர்கொண்டது. ‘டாஸ்’ வென்ற இலங்கை அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 130/5 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய இலங்கை அணி, 18.4 ஓவர்களில் 134 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
வியட்நாம் ஓபன் பாட்மின்டன் தொடரின் அரையிறுதிக்கு இந்தியாவின் தான்வி சர்மா, ரக்ஷிதா ஸ்ரீ, இஷாராணி, பிரனாய் உள்ளிட்டோர் முன்னேறினர்.வியட்நாமில், ‘சூப்பர் 100’ அந்தஸ்து பெற்ற வியட்நாம் ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது.பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில், இந்தியாவின் தான்வி சர்மா, மாளவிகா பன்சோத் மோதினர். இதில் தான்வி சர்மா 21-18, 15-21, 21-14 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் ரக்ஷிதா ஸ்ரீ, 21-12, 21-10 என்ற நேர் செட் கணக்கில் சக வீராங்கனை மான்சி சிங்கை வீழ்த்தினார்.இந்தியாவின் இஷாராணி, 21-15, 21-18 என்ற நேர் செட் கணக்கில் சீனதைபேயின் ஹுவாங் சிங் பிங்கை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் பிரனாய், சக வீரர் சான்ஸ்கர் சரஸ்வத்தை எதிர்கொண்டார். இதில் பிரனாய் 28-26, 21-12 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
சீனாவில் பெண்களுக்கான (20 வயதுக்குட்பட்டோர்) ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் 10வது சீசன் நடைபெற்று வருகிறது. இதன் காலிறுதியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.இதில் அபாரமாக விளையாடிய இந்திய அணி, ஆட்டநேர முடிவில் 19-0 என்ற கோல் கணக்கில் இமாலய வெற்றியைப் பதிவு செய்தது.இந்திய அணியில் பூஜா மாலிக் ‘ஹாட்ரிக்’ கோல்கள் (27, 49, 51வது நிமிடங்கள்) அடித்தார். ரோஷ்னி (9, 60+), சனிகா மானே (13, 23), மது சிதரர் (16, 39), சுப்ரியா (40, 54) ஆகியோர் தலா 2 கோல்கள் அடித்தனர்.மேலும், பூஜா (7), தனுஸ்ரீ (11), சுக்வீர் கவுர் (13), கீதா (18), தனுஜா (25), பூர்ணிமா யாதவ் (33), கிருஷ்ணா சர்மா (48), பினிமா (55) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.அரையிறுதியில் (செப். 12) இந்தியா - தென் கொரியா அணிகளும், சீனா - ஜப்பான் அணிகளும் மோதவுள்ளன.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் யு.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, சீனாவின் கின்வென் ஜெங் மோதினர்.முதல் செட்டை 3-6 என இழந்த ரிபாகினா, இரண்டாவது செட்டை 6-1 எனக் கைப்பற்றினார். வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது செட்டை 6-4 என வென்றார்.இரண்டு மணி நேரம், 14 நிமிடங்கள் நீடித்த போட்டியில் அசத்திய ரிபாகினா, 3-6, 6-1, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று, யு.எஸ். ஓபனில் முதல்முறையாக அரையிறுதிக்குள் நுழைந்தார்.மற்றொரு காலிறுதியில் அமெரிக்காவின் கோகோ காப், ரஷ்யாவின் மிர்ரா ஆன்ட்ரீவாவை எதிர்கொண்டார். இரண்டு மணி நேரம், 19 நிமிடங்கள் நீடித்த போட்டியில் கோகோ காப் 2-6, 7-6, 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் இத்தொடரில் 2வது முறையாக (2023, 2026) அரையிறுதிக்கு முன்னேறினார்.ஸ்வெரேவ் அசத்தல்ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், நெதர்லாந்தின் போடிக் வான் டி ஜாண்ட்சுல்ப் மோதினர்.அபாரமாக ஆடிய ஸ்வெரேவ் 6-2, 7-5, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, 3வது முறையாக (2020, 2021, 2026) அரையிறுதிக்கு முன்னேறினார்.மற்றொரு காலிறுதியில் ரஷ்யாவின் கரன் கச்சனோவ், பெல்ஜியத்தின் அலெக்சாண்டர் பிளாக்ஸ் மோதினர். இதில் கச்சனோவ் 6-2, 7-5, 3-2 என முன்னிலையில் இருந்தபோது, காயம் காரணமாக பெல்ஜியம் வீரர் போட்டியிலிருந்து விலகினார். இதையடுத்து கச்சனோவ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் பைனலுக்கு இந்திய பெண்கள் அணி 10வது முறையாக முன்னேறியது. அரையிறுதியில் வங்கதேசத்தை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பெண்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 10வது சீசன் நடக்கிறது. நேற்று துபாயில் நடந்த முதல் அரையிறுதியில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற வங்கதேச அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 149/5 ரன்கள் எடுத்தது. சவாலான இலக்கை விரட்டிய வங்கதேச அணி 20 ஓவர்களில் 109/7 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
டில்லியில், இந்திய தடகள கூட்டமைப்பு சார்பில் இந்திய தடகள சீரிஸ் பைனல் நடந்தது.ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் தமிழகத்தின் விஷால் 45.36 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடத்தை கைப்பற்றினார். பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் மகாராஷ்டிராவின் ஐஸ்வர்யா 52.51 வினாடிகளில் முதலிடம் பிடித்தார்.பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் தமிழகத்தின் அபினயா 11.31 வினாடிகளிலும், கிரிதாரணி 11.35 வினாடிகளிலும் ஓடி முறையே 2வது, 3வது இடங்களைப் பிடித்தனர். மகாராஷ்டிராவின் ஹரிதா 11.22 வினாடிகளில் முதலிடத்தை கைப்பற்றினார்.ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் ஒடிசா வீரர் அனிமேஷ் குஜுர் 10.21 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடத்தை தட்டிச் சென்றார்.பெண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் தமிழகத்தின் கவுதமி 2 நிமிடம், 05.63 வினாடிகளில் ஓடி 3வது இடம் பிடித்தார்.பெண்களுக்கான வட்டு எறிதலில் ஹரியானாவின் சீமா 56.52 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்தார். பீதா 54.82 மீட்டர், கானி 54.16 மீட்டர் தூரம் எறிந்து முறையே 2வது, 3வது இடங்களைப் பிடித்தனர்.ஆண்களுக்கான குண்டு எறிதலில் பஞ்சாப் வீரர் தஜிந்தர்பால் சிங் டூர் 20.64 மீட்டர் தூரம் எறிந்து முதலிடத்தை கைப்பற்றினார்.
ஆமதாபாத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலக பாரா வில்வித்தை சீரிஸ் ‘ஸ்டேஜ்-3’ போட்டி நடந்தது. இந்தியா, சீனா, இங்கிலாந்து உள்ளிட்ட 19 நாடுகளைச் சேர்ந்த 109 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.நேற்று நடைபெற்ற கடைசி நாள் போட்டிகளில் பல்வேறு பிரிவுகளுக்கான இறுதிப் போட்டிகள் நடந்தன. ‘காம்பவுண்டு’ தனிநபர் பிரிவு இறுதிப் போட்டியில், நடப்பு உலக சாம்பியனும், உலகின் ‘நம்பர்-1’ வீராங்கனையுமான இந்தியாவின் ஷீத்தல் தேவி, கஜகஸ்தானின் அய்ஜடா செய்டனை எதிர்கொண்டார்.முதல் நான்கு செட்கள் முடிவில் ஷீத்தல் 115-116 என பின்தங்கினார். கடைசி செட்டில் 29-28 என முன்னிலை பெற்ற அவர், ஸ்கோரை 144-144 என சமன் செய்தார். இதையடுத்து வெற்றியாளரைத் தீர்மானிக்க ‘ஷூட்-ஆப்’ நடத்தப்பட்டது. இதில் ஷீத்தல் 10-9 என வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.‘ரீகர்வ்’ கலப்பு அணிகள் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஹர்விந்தர் சிங்–பாவ்னா ஜோடி, சீனாவின் லியாம்–ஜியா லெய் ஜோடியை 6-0 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.ஒட்டுமொத்தமாக இந்திய அணி 4 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 13 பதக்கங்களை வென்றது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் யு.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் உலகின் ‘நம்பர்-1’ வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, 6-ம் நிலை வீராங்கனையான செக்குடியரசின் லிண்டா நோஸ்கோவாவை எதிர்கொண்டார்.முதல் செட் ‘டைபிரேக்கர்’ வரை நீடித்த நிலையில், சபலென்கா 7-6 என கைப்பற்றினார். 2-வது செட்டை நோஸ்கோவா 6-3 என வென்றார். வெற்றியாளரைத் தீர்மானித்த 3-வது செட்டும் ‘டைபிரேக்கர்’ வரை சென்றது. இதில் சபலென்கா 7-6 என வெற்றி பெற்றார்.2 மணி நேரம் 22 நிமிடங்கள் நீடித்த போட்டியின் முடிவில், நடப்பு சாம்பியனான சபலென்கா 7-6, 3-6, 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.மற்றொரு காலிறுதியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, சகநாட்டவரான எம்மா நவரோவை 3-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். இதன் மூலம் தொடர்ச்சியாக 3-வது முறையாக (2024-26) அமெரிக்க ஓபன் அரையிறுதிக்கு பெகுலா முன்னேறினார்.
மகளிருக்கான ஆசியக் கோப்பையின் 10-வது சீசன், ‘டி-20’ கிரிக்கெட் தொடராக துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தியா, இலங்கை உள்ளிட்ட 8 அணிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் விளையாடின.‘ஏ’ பிரிவில் இடம்பெற்ற இந்திய அணி, தாய்லாந்து, ஹாங்காங் மற்றும் பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தியது. 3 போட்டிகளில் 6 புள்ளிகளைப் பெற்று, தனது பிரிவில் முதலிடம் பிடித்த இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது.இந்நிலையில், இன்று நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் ‘பி’ பிரிவில் இரண்டாவது இடம் பிடித்த வங்கதேச அணியை இந்தியா எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.