16-வது உலகக் கோப்பை ஆக்கிப் போட்டி பெல்ஜியம் (வாவ்ரே) மற்றும் நெதர்லாந்து (ஆம்ஸ்டெல்வீன்) ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் பிரிவில் 16 அணிகள் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு விளையாடி வருகின்றன.‘டி’ பிரிவில் இடம்பெற்றுள்ள உலகத் தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள இந்திய அணி, நேற்று நடைபெற்ற தனது 2-வது லீக் ஆட்டத்தில் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது.விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முடிவில், இங்கிலாந்து அணி 4-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி, தொடர்ச்சியாக 2-வது வெற்றியைப் பதிவு செய்தது.பெண்கள் பிரிவிலும் 16 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் ‘டி’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் தனது 2-வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.
கிராண்ட் செஸ் தொடரின் அங்கமான சின்க்பீல்டு கோப்பை செஸ் போட்டி அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. 9 சுற்றுகளைக் கொண்ட இந்தப் போட்டியில் 10 வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.இதில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற 6-வது சுற்று ஆட்டத்தில் இந்திய கிராண்ட்மாஸ்டரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான பிரக்ஞானந்தா, அமெரிக்க வீரர் லெவோன் அரோனியனை எதிர்கொண்டார்.வெள்ளை நிறக் காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 39-வது நகர்த்தலில் ஆட்டத்தை ‘டிரா’ செய்தார்.
10-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் கடந்த 4-ந்தேதி திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்தத் தொடரின் முதல் கட்டத்தில் 20 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன.இதன் முடிவில் மதுரை பாந்தர்ஸ் 8 புள்ளிகளுடன் முதலிடத்திலும், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் ஆகிய அணிகள் தலா 6 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. திருச்சி கிராண்ட் சோழாஸ் 6 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், கோவை கிங்ஸ் 4 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும், திண்டுக்கல் டிராகன்ஸ் 4 புள்ளிகளுடன் 7-வது இடத்திலும் உள்ளன. சேலம் ஸ்பார்ட்டன்ஸ் புள்ளிகள் ஏதுமின்றி கடைசி இடத்தில் உள்ளது.இறுதிப்போட்டி உள்பட தொடரின் 2-வது கட்ட ஆட்டங்கள் இன்று முதல் 28-ந்தேதி வரை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறுகின்றன. லீக், பிளே-ஆப் மற்றும் இறுதிச்சுற்று என மொத்தம் 12 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன.இந்த நிலையில், சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் 21-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் வெற்றியைப் பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறுவதற்கு முனைப்பு காட்டும் என்பதால், இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாமல்லபுரத்தில் நடைபெற்ற சர்வதேச சர்பிங் லீக் போட்டி நிறைவடைந்தது. கடந்த ஆகஸ்ட் 12-ந்தேதி தொடங்கிய இப்போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.போட்டியின் தொடக்கம் முதலே ஜப்பான் வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இறுதிப்போட்டியில் புரோ ஆடவர் ஜூனியர் பிரிவில் ஜப்பானின் யூமா நாகசவா முதலிடம் பிடித்தார். புரோ ஜூனியர் பெண்கள் பிரிவில் ஹினாடா ஷிமிசு சாம்பியன் பட்டம் வென்றார்.க்யூ.எஸ். ஆடவர் பிரிவில் இக்கோ வடனபேவும், க்யூ.எஸ். பெண்கள் பிரிவில் மிராய் இகேதாவும் முதலிடம் பிடித்தனர்.ஒட்டுமொத்தமாக ஜப்பான் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்.
நெதர்லாந்தின் ஆம்ஸ்டல்வீன் நகரில் நடைபெற்ற பெண்கள் ஹாக்கி ‘டி’ பிரிவு லீக் ஆட்டத்தில் இந்தியா–சீனா அணிகள் மோதின.ஆட்டத்தின் 8-வது நிமிடத்தில் சக வீராங்கனை நேஹா வழங்கிய ‘பாஸ்’ மூலம் இந்தியாவின் நவ்னீத் கவுர் கோல் அடித்தார். இதற்கு 15-வது நிமிடத்தில் கிடைத்த ‘பெனால்டி ஸ்டிரோக்’ வாய்ப்பை பயன்படுத்தி சீனாவின் ஜாங் யிங் கோல் அடித்து பதிலடி கொடுத்தார்.இதையடுத்து 25-வது நிமிடத்தில் இந்தியாவுக்கு கிடைத்த ‘பெனால்டி கார்னர்’ வாய்ப்பில் தீபிகா கோல் அடித்தார். இதனால் முதல் பாதி முடிவில் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றது.இரண்டாவது பாதியில் 39-வது நிமிடத்தில் சீனாவின் மா நிங் ‘பெனால்டி கார்னர்’ வாய்ப்பை கோலாக மாற்றினார். இதனால் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் உள்ள இந்திராகாந்தி ஸ்டேடியத்தில் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. வரும் 23-ந்தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் இதுவரை 5 பதக்கங்களை வென்றுள்ள சிந்து, ஒரு தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என சாதனை படைத்துள்ளார். இந்த முறை மேலும் ஒரு பதக்கம் வென்றால், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் அதிக பதக்கங்கள் வென்ற வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை படைக்க முடியும்.சமீபத்தில் ஜப்பான் ஓபன் பட்டத்தை வென்றது சிந்துவுக்கு கூடுதல் நம்பிக்கையை அளித்துள்ளது. உலக தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள சிந்து, தனது முதல் சுற்றில் அயர்லாந்தைச் சேர்ந்த 141-ம் நிலை வீராங்கனை சோபியா நோபிளை எதிர்கொள்கிறார்.ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ‘நம்பர் ஒன்’ வீரரும், நடப்பு சாம்பியனுமான சீனாவின் ஷி யுகி, தாய்லாந்தின் விதித்சரண் குன் லாவுத், இந்தோனேசியாவின் ஜோனதன் கிறிஸ்டி, டென்மார்க்கின் ஆண்டர்ஸ் ஆன்டோன்சென் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய இளம் வீரர் ஆயுஷ் ஷெட்டிக்கு முதல் சுற்றிலேயே சவாலான ஆட்டம் காத்திருக்கிறது.ஆண்கள் இரட்டையர் பிரிவில் ‘பை’ சலுகை பெற்றுள்ள இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி–சிராக் ஷெட்டி ஜோடி நேரடியாக 2-வது சுற்றில் களம் இறங்குகிறது.பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் திரிஷா ஜாலி–காயத்ரி கோபிசந்த் ஜோடியும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.காலை 9 மணிக்கு தொடங்கும் போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
திண்டுக்கல் நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்த டி.என்.பி.எல். லீக் போட்டியில் நெல்லை, கோவை அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த கோவை அணி 20 ஓவர்களில் 162/9 ரன்கள் எடுத்தது. இலக்கைத் துரத்திய நெல்லை அணி 19.5 ஓவர்களில் 163/8 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.மற்றொரு போட்டியில் திருப்பூர், திருச்சி அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணி 20 ஓவர்களில் 196/6 ரன்கள் குவித்தது. 197 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய திருப்பூர் அணி 20 ஓவர்களில் 179/8 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
நைஜீரியாவில் நடைபெற்ற காமன்வெல்த் வாள் சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. 23 வயது மற்றும் சீனியர் பிரிவுகளுக்கான இந்த தொடரின் கடைசி நாளில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.பெண்கள் தனிநபர் சாப்ரே பிரிவில் வெண்கலம் வென்ற ஷ்ருதி, அணிகள் பிரிவில் தங்கம் வென்றார். கடைசி நாளில் இந்தியா 5 தங்கம், ஒரு வெள்ளி பதக்கத்தை கைப்பற்றியது. தொடரின் முடிவில் இந்தியா 13 தங்கம், 8 வெள்ளி, 14 வெண்கலம் என மொத்தம் 35 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது.
உலக கோப்பை ஹாக்கியில் இந்திய பெண்கள் அணி முதல் பதக்கத்தை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக கோல் கீப்பர் சவிதா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் உலக கோப்பை தொடரின் 16-வது சீசன் ஆகஸ்ட் 14 முதல் 30-ம் தேதி வரை பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடைபெறுகிறது. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் தலா 16 அணிகள் பங்கேற்கின்றன.இந்திய பெண்கள் அணி ‘டி’ பிரிவில் இங்கிலாந்து, சீனா, தென் ஆப்பிரிக்கா அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. ஆகஸ்ட் 16-ம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் இந்திய அணி சீனாவை எதிர்கொள்கிறது.
திண்டுக்கல்: நத்தம் NPR கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்ற தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) போட்டியில் சேலம் மற்றும் சேப்பாக்கம் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சேப்பாக்கம் அணி பந்துவீச்சை (ஃபீல்டிங்) தேர்வு செய்தது.முதலில் பேட்டிங் செய்த சேலம் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து களம் இறங்கிய சேப்பாக்கம் அணி 16.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.