தமிழ்நாட்டில் நகரங்கள் மட்டுமின்றி, கிராமப்புறங்களிலும் உள்ள இளம் கிரிக்கெட் வீரர்களின் திறமையை வெளிக்கொண்டு வந்து, அவர்களுக்கு உயர்மட்ட போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் தொடர் 2016-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.இதுவரை 9 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அதிகபட்சமாக 4 முறை சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது. கோவை கிங்ஸ், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், மதுரை பாந்தர்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் ஆகிய அணிகளும் தலா ஒரு முறை கோப்பையை கைப்பற்றியுள்ளன.இந்நிலையில், 8 அணிகள் பங்கேற்கும் 10-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் நத்தத்தில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. லீக் சுற்று, 'பிளே-ஆஃப்' மற்றும் இறுதிப்போட்டி என விறுவிறுப்பாக நடைபெறவுள்ள இந்த தொடரில் தமிழகத்தின் முன்னணி வீரர்களுடன், வளர்ந்து வரும் இளம் திறமையாளர்களும் தங்களது திறமையை நிரூபிக்க களமிறங்குகின்றனர்.டி.என்.பி.என்.எல். தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு இந்தியன் பிரிமீயர் லீக் (ஐ.பி.எல்.) அணிகளில் இடம்பிடிக்கும் வாய்ப்பு தொடர்ந்து கிடைத்து வருகிறது. மேலும், தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்களுக்கு இந்திய அணிக்கான கதவும் திறக்க வாய்ப்புள்ளதால், இந்த தொடருக்கு ஆண்டுதோறும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பும் வரவேற்பும் நிலவி வருகிறது.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற 23வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 2 வரை நடைபெற்றன. இந்த தொடரில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மொத்தம் 39 பதக்கங்களை வென்றனர்.இந்தியாவின் பதக்கப் பட்டியல்:🥇 தங்கம் – 13🥈 வெள்ளி – 17🥉 வெண்கலம் – 9மொத்தம் 39 பதக்கங்களுடன் இந்தியா தனது திறமையை மீண்டும் நிரூபித்தது.பாரா போட்டியிலும் இந்தியாவின் சாதனை.மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா பிரிவிலும் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு 3 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை வென்றனர்.கடந்த ஆறு காமன்வெல்த் சீசன்களில் இந்தியா மொத்தம் 7 பதக்கங்கள் மட்டுமே வென்றிருந்த நிலையில், இந்த முறை அதே எண்ணிக்கையை ஒரே தொடரில் கைப்பற்றி புதிய வரலாறு படைத்துள்ளது.அடுத்த காமன்வெல்த் போட்டி இந்தியாவில்..காமன்வெல்த் விளையாட்டின் அடுத்த சீசன் 2030ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடைபெற உள்ளது. கிளாஸ்கோவில் நடைபெற்ற நிறைவு விழாவில், இந்தியாவின் சார்பில் குத்துச்சண்டை வீராங்கனை ஜாஸ்மின் தேசியக் கொடியை ஏந்திச் சென்றார். அதனைத் தொடர்ந்து காமன்வெல்த் விளையாட்டு கொடி அதிகாரப்பூர்வமாக ஆமதாபாத் நகருக்கு ஒப்படைக்கப்பட்டது.
.காமன்வெல்த் விளையாட்டில் பதக்கங்களை வென்று சாதனை படைத்த இந்திய வீரர், வீராங்கனைகள் தாயகம் திரும்பியபோது ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.முதல் கட்டமாக பளுதூக்குதல் போட்டியில் பதக்கம் வென்ற மீராபாய் சானு, லவ்ப்ரீத் சிங், ராஜா முத்துப்பாண்டி உள்ளிட்டோர் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தனர். அங்கு நூற்றுக்கணக்கான ரசிகர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் மலர்மாலைகள் அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர்.காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 2026: முதல் 4 இடங்கள்.2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் கடைசி நாளில் இந்தியா வெறும் 24 மணி நேரத்தில் 8 தங்கம் உட்பட 16 பதக்கங்களை குவித்து அசத்தியது. இதன் மூலம் 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 39 பதக்கங்களுடன், பதக்கப் பட்டியலில் 11-வது இடத்திலிருந்து 4-வது இடத்திற்கு மின்னல் வேகத்தில் முன்னேறி Top 4-ல் நிறைவு செய்தது.காமன்வெல்த் மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனைகள் பிரியா கங்காஸ் (60 கிலோ), அருந்ததி சௌத்ரி (70 கிலோ), சாக்ஷி சௌத்ரி (51 கிலோ) ஆகியோர் தங்கப் பதக்கங்கள் வென்று அசத்தல்!குத்துச்சண்டை போட்டிகளில் மட்டும் இந்திய வீரர், வீராங்கனைகள் இதுவரை 7 தங்கம், 3 வெள்ளி என மொத்தம் 10 பதக்கங்களை வென்று சாதித்துள்ளனர்.இந்திய விளையாட்டு வீரர்கள் சர்வதேச அரங்கில் தொடர்ந்து சாதனைகள் படைத்து வருவது, நாட்டின் விளையாட்டு வளர்ச்சிக்கும் இளம் தலைமுறைக்கு ஊக்கமளிக்கும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
இந்திய பாட்மின்டன் வீராங்கனை தான்வி சர்மா தைபே ஓபன் 'சூப்பர் 300' பாட்மின்டன் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.சீனதைபேயில் நடைபெற்ற இந்த தொடரின் பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில், 17 வயதான தான்வி சர்மா, வியட்நாமின் துய்லின் நுகுயெனை எதிர்கொண்டார். வெறும் 36 நிமிடங்கள் மட்டுமே நீடித்த இந்த போட்டியில், தான்வி 21-16, 21-16 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, தனது முதல் 'சூப்பர் 300' சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.17 வயது 222 நாட்களில் இந்த சாதனையை படைத்த தான்வி, சர்வதேச பாட்மின்டன் அரங்கில் இந்தியாவின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து வருகிறார்.
ஹாங்காங்கில் நடைபெற்ற ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான பிளிட்ஸ் பிரிவில் 46 வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியாவின் ஹரிகா 9 வெற்றி, 3 டிரா மற்றும் ஒரு தோல்வியுடன் மொத்தம் 10.5 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.தொடர்ந்து நடைபெற்ற பெண்களுக்கான ரேபிட் பிரிவில் 52 வீராங்கனைகள் களமிறங்கினர். இதில் ஹரிகா 11 சுற்றுகளில் 6 வெற்றி மற்றும் 5 டிரா செய்து 8.5 புள்ளிகளுடன் மீண்டும் சாம்பியன் பட்டம் வென்று இரட்டை சாதனை படைத்தார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 23-வது காமன்வெல்த் விளையாட்டு தொடர் நடைபெற்று வருகிறது.ஜூடோநேற்று நடைபெற்ற ஜூடோ போட்டிகளில், பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் அஸ்மிதா தே, ஸ்காட்லாந்தின் சம்மர் ஷாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.இறுதிப்போட்டியில் கனடாவின் ஹெய்தியை எதிர்கொண்ட அஸ்மிதா, நிர்ணயிக்கப்பட்ட 4 நிமிட முடிவில் 1-1 என்ற சமநிலையில் இருந்தார். இதையடுத்து வெற்றியாளரைத் தீர்மானிக்க கோல்டன் ஸ்கோர் முறை பின்பற்றப்பட்டது. இதில் முதல் புள்ளி பெற்றவரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.கோல்டன் ஸ்கோர் முறையில் ஹெய்தியை கீழே தள்ளி ஒரு புள்ளி பெற்ற அஸ்மிதா, 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இதன்மூலம் காமன்வெல்த் ஜூடோ வரலாற்றில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார்.ஆண்களுக்கான 60 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் ஹர்ஷ் சிங், ஆஸ்திரேலியாவின் ஜோஷுவா காட்ச்வை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஹர்ஷ் சிங் 10-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை வென்றார். காமன்வெல்த் ஜூடோவில் தங்கம் வென்ற முதல் இந்திய ஆண் வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.பளுதூக்குதல்ஆண்களுக்கான +110 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் லவ்பிரீத் சிங் பங்கேற்றார்.முதலில் நடைபெற்ற ஸ்னாட்ச் பிரிவில் 176 கிலோ எடையைத் தூக்கி புதிய காமன்வெல்த் சாதனை படைத்தார். நியூசிலாந்தின் டேவிட் ஆன்ட்ரூ 166 கிலோ எடையுடன் 2-வது இடத்தில் இருந்தார்.தொடர்ந்து நடைபெற்ற கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் முதல் முயற்சியிலேயே 205 கிலோ எடையைத் தூக்கிய லவ்பிரீத் சிங் தங்கத்தை நோக்கி முன்னிலை வகித்தார். ஆனால் நியூசிலாந்தின் டேவிட் ஆன்ட்ரூ தனது 2-வது முயற்சியில் 223 கிலோ எடையைத் தூக்கி மொத்தம் 389 கிலோவுடன் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். மொத்தம் 388 கிலோ எடை தூக்கிய லவ்பிரீத் சிங் ஒரு கிலோ வித்தியாசத்தில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.குத்துச்சண்டைநேற்று நடைபெற்ற குத்துச்சண்டை அரையிறுதி போட்டிகளில், பெண்களுக்கான 54 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பிரீத்தி, ஜாம்பியாவின் கேத்தரின்வை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.ஆண்களுக்கான 70 கிலோ எடைப்பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் அன்குஷ், கனடாவின் ஜோஷுவாவை 5-0 என்ற கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.55 கிலோ எடைப்பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஜடுமானி சிங், நமீபியாவின் பிலிப்வை 5-0 என்ற கணக்கில் தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் பங்கேற்கும் இந்திய ஆண்கள், பெண்கள் அணிகளுக்கு வழக்கமான நீல நிற ஜெர்சிக்கு பதிலாக காவி நிற ஜெர்சி வழங்கப்பட்டுள்ளது. ஹாக்கி மைதானத்தின் நீல நிற ஆடுகளத்துடன் வீரர்களை எளிதில் அடையாளம் காணும் வகையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நிரந்தர மாற்றம் அல்ல என்றும், எதிர்காலத்தில் வீரர்களின் கருத்துகளின் அடிப்படையில் ஜெர்சி நிறம் மாற்றப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
தைபே ஓபன் 'சூப்பர் 300' பாட்மின்டன் தொடரில் இந்தியாவின் உன்னதி ஹூடா, தான்வி சர்மா, தேவிகா சிஹாக் மற்றும் கிரண் ஜார்ஜ் ஆகியோர் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினர். அன் மோல் சீனதைபே வீரரிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் திலீப் மஹாது காவிட் தங்கப் பதக்கமும், முகமது பாசில் வெள்ளிப் பதக்கமும் வென்றனர். நீளம் தாண்டுதலில் முரளி ஸ்ரீசங்கர் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் சந்தோஷ்குமார் தமிழரசன் மற்றும் யாஷஸ் பாலக் ஷா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) வெளியிட்டுள்ள புதிய டி-20 பேட்டர் தரவரிசையில், இந்தியாவின் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 230 இடங்கள் முன்னேறி 48-வது இடத்தை பிடித்துள்ளார். 536 புள்ளிகளுடன் 278-வது இடத்தில் இருந்து மிகப்பெரிய முன்னேற்றம் கண்டுள்ளார்.