மாற்றுத்திறனாளிகளுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் திலீப் மஹாது காவிட் தங்கப் பதக்கமும், முகமது பாசில் வெள்ளிப் பதக்கமும் வென்றனர். நீளம் தாண்டுதலில் முரளி ஸ்ரீசங்கர் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் சந்தோஷ்குமார் தமிழரசன் மற்றும் யாஷஸ் பாலக் ஷா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) வெளியிட்டுள்ள புதிய டி-20 பேட்டர் தரவரிசையில், இந்தியாவின் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 230 இடங்கள் முன்னேறி 48-வது இடத்தை பிடித்துள்ளார். 536 புள்ளிகளுடன் 278-வது இடத்தில் இருந்து மிகப்பெரிய முன்னேற்றம் கண்டுள்ளார்.
சீன தைபேயில் நடைபெறும் சூப்பர் 300 தைபே ஓபன் பாட்மின்டன் தொடரில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் உன்னதி ஹூடா 21-12, 21-18 என்ற நேர் செட்களில் பெய் யு வாஙை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.மேலும், அன்மோல் கார்ப், தான்யா, தான்வி சர்மா ஆகியோரும் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் எச்.எஸ். பிரனாய், ஜப்பானின் மினோரு கோகாவை 21-11, 21-14 என்ற கணக்கில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
காமன்வெல்த் விளையாட்டில் இந்தியா தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 10,000 மீட்டர் ஓட்டத்தில் குல்விந்தர் சிங் வெள்ளிப்பதக்கம் வென்று, இந்தப் பிரிவில் இந்தியாவுக்கான முதல் பதக்கத்தைப் பதிவு செய்தார். பளுதூக்குதலில் ஹர்ஜிந்தர் கவுர் வெள்ளி வென்றார். இதன்மூலம் பளுதூக்குதலில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இதில் மீராபாய் சானு மட்டுமே தங்கம் வென்றுள்ளார்.குத்துச்சண்டையில், பெண்கள் 51 கிலோ பிரிவு காலிறுதியில் சாக்சி சவுத்ரி 5-0 என்ற கணக்கில் வடக்கு அயர்லாந்தின் கெய்த்லினை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். மொத்தமாக 4 ஆண்கள் மற்றும் 5 பெண்கள் என 9 இந்திய வீரர்கள் அரையிறுதிக்கு தகுதி பெற்று, குறைந்தபட்சம் 9 பதக்கங்களை உறுதி செய்துள்ளனர்.ஆண்கள் 200 மீட்டர் ஓட்டத்தில் அனிமேஷ் குஜுர் 20.46 வினாடிகளில் இலக்கை எட்டி முதலிடம் பிடித்து அரையிறுதிக்குள் நுழைந்தார்.இதற்கிடையில், இன்று நடைபெறும் ஈட்டி எறிதல் தகுதிச்சுற்றில், இரு முறை ஒலிம்பிக் பதக்க நாயகன் நீரஜ் சோப்ரா உள்ளிட்ட 18 இந்திய வீரர்கள் களமிறங்குகின்றனர்.
வாழ்க்கையில் வந்த எண்ணற்ற சவால்களை தன்னம்பிக்கையாலும் விடாமுயற்சியாலும் வென்று, சர்வதேச அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்தியுள்ளார் ஷர்மிளா தன்கர். பலருக்கும் ஊக்கமளிக்கும் அவரது சாதனை, "முயன்றால் முடியாதது எதுவுமில்லை" என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.
கோவையில் நடைபெற்று வரும் 16-வது தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி நேற்று தொடங்கியது.முதல் போட்டியில் அசாம் அணி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. கோவா - ராஜஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் 3-3 என டிராவில் முடிந்தது.மற்ற போட்டிகளில் தெலுங்கானா 3-0 என்ற கோல் கணக்கில் திரிபுராவை வீழ்த்தியது. புதுச்சேரி அணி 10-0 என்ற கோல் கணக்கில் குஜராத்தை தோற்கடித்து அபார வெற்றி பெற்றது. சண்டிகர் அணி 9-2 என்ற கோல் கணக்கில் சத்தீஸ்கரை வென்றது. தொடரின் அடுத்த கட்ட போட்டிகள் இன்று நடைபெறுகின்றன.
நடப்பு உலக செஸ் சாம்பியனான இந்தியாவின் குகேஷ், உஸ்பெகிஸ்தானின் ஜவோகிர் சிந்தாரோவை உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் எதிர்கொள்கிறார்.இந்தப் போட்டி நவம்பர் 25 முதல் டிசம்பர் 15 வரை சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறுகிறது. 14 சுற்றுகள் கொண்ட கிளாசிக்கல் முறையில் நடைபெறும் இந்தத் தொடரில் முதலில் 7.5 புள்ளிகள் பெறும் வீரர் சாம்பியன் பட்டம் வெல்வார். 7-7 என சமநிலை ஏற்பட்டால் டைபிரேக்கர் மூலம் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார்.2024-ல் உலக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்த தமிழக வீரர் குகேஷ், தனது பட்டத்தை தக்கவைத்துக் கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.குண்டு எறிதல் (F57): மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவில் ஷர்மிளா தங்கர் 9.81 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கம் வென்றார்.உயரம் தாண்டுதல்: ஆண்கள் பிரிவில் சர்வேஷ் அனில் குஷாரே 2.25 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார்.பளுதூக்குதல் (79 கிலோ): வல்லுரி அஜயா பாபு, ஸ்னாட்சில் 149 கிலோ தூக்கி காமன்வெல்த் சாதனை படைத்தார். மொத்தம் 330 கிலோ தூக்கி வெள்ளிப்பதக்கம் வென்றார்.நீச்சல்: ஆண்கள் 100 மீட்டர் பேக்ஸ்டிரோக்கில் ஸ்ரீஹரி நடராஜ் அரையிறுதிக்கு முன்னேறினார். பார்வைக் குறைபாடு உள்ளோருக்கான 50 மீட்டர் பிரீஸ்டைல் S13 பிரிவில் புதிகினா மற்றும் அலி இமாம் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு பளுதூக்குதலில், தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டி ஆண்கள் பிரிவில் மொத்தம் 286 கிலோ தூக்கி வெள்ளிப்பதக்கம் வென்றார். அவருக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்தார்.பெண்கள் 53 கிலோ பிரிவில் ஞானேஷ்வரி மொத்தம் 199 கிலோ தூக்கி வெள்ளிப்பதக்கமும், 58 கிலோ பிரிவில் பிந்தியாராணி தேவி 199 கிலோ தூக்கி வெண்கலப் பதக்கமும் வென்றனர்.ஆண்கள் நீளம் தாண்டுதல் தகுதிச் சுற்றில் முரளி ஸ்ரீசங்கர் (8.01 மீ.) மற்றும் லோகேஷ் சத்யநாதன் இருவரும் பைனலுக்கு முன்னேறினர்.
சீனாவில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கிசுடுதல் தொடரின் பெண்கள் 25 மீ. பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஈஷா சிங் பைனலில் 40 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். மனு பாகர் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். இதுவரை இந்தியா ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என 3 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.