கால்நடைகளுக்கான சுகாதார மற்றும் விழிப்புணர்வு சிறப்பு முகாம்.
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி.ச.கீர்த்தனா அவர்கள், மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S, தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.பி.செல்வம் அவர்கள், முன்னிலையில், விருதுநகர் மாவட்டம், பாப்பாகுடியில் கால்நடைகளுக்கான சுகாதார மற்றும் விழிப்புணர்வு சிறப்பு முகாமினை (22.08.2026) தொடங்கி வைத்தார்கள்.பின்னர், 24 கால்நடை வளர்ப்போர்களுக்கு தாது உப்பு கலவை, சீமைப்புல் கரணைகளையும், சிறந்த கிடாரி கன்று மேலாண்மைக்காக 3 பயனாளிகளுக்கு பரிசுகளையும், சிறந்த மேலாண்மை முறையில் கால்நடை வளர்க்கும் 5 பயனாளிகளுக்கு பரிசுகளையும் அமைச்சர் பெருமக்கள் அவர்கள் வழங்கினார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏழை, எளிய பொதுமக்களின் நலன் கருதியும், கிராமப்புற பொருளாதாரத்தினை பாதுகாத்துக்கொண்டிருக்கும் முக்கிய தொழில்களில் ஒன்றான கால்நடை வளர்ப்பினை பாதுகாத்திட பல்வேறு திட்டங்களை கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் செயல்படுத்தி வருகிறார்.கால்நடைகளை நோய்தாக்குதலிலிருந்து பாதுகாத்திடும் வகையில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்களை தமிழகமெங்கும் 388 ஊராட்சி ஒன்றியங்களில் 6,984 சிறப்பு முகாம்கள் நடத்திட உத்தரவிட்டு அதற்காக 7.63 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார்கள்.அதனடிப்படையில், 11 ஊராட்சி ஒன்றியங்களிலும் தலா 18 முகாம்கள் வீதம் 198 சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படவுள்ளது.
சிறப்பு முகாம்களின் மூலம் 1,65,850 கால்நடைகளும், 3,092 எருமையினங்களும், 5,45,991 வெள்ளாடுகளும், 5,80,489 செம்மறியாடுகளும், 17,10,958 கோழிகளும் பயனடையும்.முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், மடி வீக்க நோய் மேலாண்மை, குடற்புழு நீக்கம் செய்தல், நோய்களுக்கெதிரான தடுப்பூசி, ஆண்மை நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சைகள், சினை சரிபார்ப்பு மற்றும் சுண்டு வாத அறுவை சிகிச்சை போன்ற பல்வேறு சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.முகாமில் கலந்து கொள்ளும் கால்நடைகளுக்கு தாது உப்புக்கலவை, 1 கிலோ எடையுள்ள சத்துப்பவுடர் இலவசமாக வழங்கப்படும். விவசாயிகள் தங்களது பெயர்களை பதிவு செய்து கால்நடைவளர்ப்புக்குத் தேவையான தீவனப் புல் விதைகளை பெற்றுக்கொள்ளலாம்.
முகாம் நடைபெறும் இடம், நாள், பங்கேற்கும் மருத்துவ குழுவினர் குறித்த விவரங்கள் முன்கூட்டியே ஊராட்சிப்பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படும். இது குறித்து துண்டு பிரசுரங்கள், ஒலிபெருக்கிகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் மற்றும் விலங்கின ஆர்வலர்கள் இச்சிறப்பு முகாமினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் பெருமக்கள் அவர்கள் தெரிவித்தனர்.இம்முகாமில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இயக்குநர் மரு.ம.சு.சரவணன், உதவி இயக்குநர் பா.கார்த்திக் கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply