விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் (10.01.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் வேப்பிலைப்பட்டி ஊராட்சி ஜக்கம்மாள்புரம்; கிராமத்தில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.9.77 இலட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக்கடை கட்டப்பட்டுள்ளதையும்,மேலும், சந்தையூர் ஊராட்சி குலசேகரபுரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.5 இலட்சம் மதிப்பில் பேருந்து நிறுத்தம் கட்டப்பட்டு வருவதையும், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் ரூ.2.40 இலட்சம் மதிப்பில் அரசு மானியத்தில் வீடு கட்டப்பட்டு வருவதையும்,அதனை தொடர்ந்து, கோல்வார்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.9.99 இலட்சம் மதிப்பில் புதிய ஊரணி அமைக்கப்பட்டு, குளம் தூர்வாரபட்டு வரும் பணிகளையும்,பின்னர், நல்லமநாயக்கன்பட்டி ஊராட்சியில் ராஷ்ட்ரிய கிராம் ஸ்வராஜ் அபியான் (RGSA) திட்டத்தின் கீழ் ரூ.5 இலட்சம் மதிப்பில் ஒருங்கிணைப்புக்குழு கட்டடம் கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு பணிகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.மேலும் நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென தொடர்புடைய அரசு அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது, திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.இரா.தண்டபாணி, உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ஹிமான்சு மங்கள்,I A S, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னையில் (09.01.2025) பொங்கல் திருவிழா- 2025 யை முன்னிட்டு, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, விருதுநகர் அஹமத் நகரில் உள்ள மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் நியாய விலைக் கடையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புகளை விநியோகம் செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் வழங்கி துவக்கி வைத்தார்.தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசுத்தொகுப்பு அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கும் திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.அதனடிப்படையில் பொங்கல் பரிசுத்தொகுப்பானது இன்று முதல் அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் வழங்கும் வகையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் மூலம் 5,66,182 குடும்ப அட்டைகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் 34,793 குடும்ப அட்டைகள் மற்றும் இலங்கை தமிழர் முகாம்கள் 1061 குடும்ப அட்டைகள் என மொத்தம் 6,02,036 குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம் செய்வதற்கான டோக்கன்கள் கடந்த 03.01.2025 முதல் வழங்கப்பட்டு வந்தது.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ள பச்சரிசி, சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் தயார் நிலையில் உள்ளது. இன்று முதல் வரும் 13.01.2025 வரை பொங்கல் பரிசுத்தொகுப்பு குடும்ப அட்டைதாரர்கள் பெற்றுக்கொள்ளலாம். எனவே, குடும்ப அட்டைத்தாரர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நாளில் சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்றுக்கொள்ளலாம். பொங்கல் திருநாள் தமிழர்கள் உடைய மிக முக்கியமான பண்டிகை. இதில் நாம் அனைவரும் இணைந்து வேறுபாடுகள் இல்லாமல்; ஒற்றுமையாக இந்த பண்பாட்டு திருவிழாவை கொண்டாட வேண்டும். அதிலும் குறிப்பாக பொங்கல் பண்டிகை என்பது உழவர்களுக்கு நன்றி சொல்லக் கூடிய விழாவாகவும், உழவனுக்கு உறுதுணையாக இருக்கக்கூடிய அனைத்திற்கும், இயற்கைக்கும் நன்றி சொல்லக்கூடிய ஒரு இயற்கை திருவிழாவாக இருக்கிறது.நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் போகிப் பண்டிகை தினத்தன்று வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லா பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர்.ஆனால் தற்பொழுது போகி பண்டிகையின் போது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், இரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு இதனால் வெளிப்படும் நச்சுவாயுக்களால் மூச்சுதிணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது.எனவே, போகி பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாத்து, சுற்றுச்சூழலை காத்திட பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திரு.பா.செந்தில்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி அனிதா, துணைப்பதிவாளர் (பொது விநியோகத்திட்டம்) திரு.இ.நாகேந்திரன், கூட்டுறவு சார்பதிவாளர் (பொது விநியோகத்திட்டம்) திருமதி ச.முத்துலட்சுமி, விருதுநகர் நகர்மன்ற தலைவர் திரு.ஆர்.மாதவன், தனி வட்டாட்சியர் திரு.பாஸ்கர் உட்பட அரசு அலுவலர்கள், கூட்டுறவு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (09.01.2025) விருதுநகர் செந்திக்குமார நாடார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த 40 மாணவ, மாணவியர்களுடன் நடைபெற்ற ""Coffee With Collector” என்ற 143- வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி, கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் குறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ , மாணவியர்களுடன் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 143-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.பள்ளி, கல்லூரி படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும். எனவே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் மூலம் வாழ்க்கைக்கான பல அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம். அனுபவங்களில் இருந்து கிடைக்கும் கல்விதான் சிறந்த கல்வியாகும்.தமிழ் ஆர்வத்தை வளர்த்தல், சிறுகதை படைத்தல், படைப்பிலங்கியங்கள், தமிழ் அறிஞர்கள் குறித்தும் கல்லூரி மாணவர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துரையாடினார்.கல்லூரி படிப்பில் சேர்வதற்கு விருப்பத்தின் அடிப்படையில் மட்டும் முடிவு எடுத்தல் கூடாது. அனைவருக்கும் இலட்சியம் உண்டு. இலட்சியத்தை அடைவதற்கு தொடர்ந்து விடா முயற்சி செய்ய வேண்டும். நிலையான தொடர்ச்சியான சிறிய முயற்சிகள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது.மேலும், ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்த சந்திப்பில் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு, இந்த நிகழ்ச்சி மூலம் எங்களுக்கு ஒரு புத்துணர்வு, ஊக்கம் அளிப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் போன்று தாங்களும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகி உள்ளதாகவும், எங்களுடைய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் தெளிவான விடை கொடுத்ததாகவும், நாங்களும் மாவட்ட ஆட்சியர் போன்று சாதித்து காட்டுவோம் என்றும், இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு மாணவர்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் (09.01.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசு திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்டங்களின் பயன்கள், கருத்துக்கள் குறித்து பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.அதன்படி, திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், பண்ணைமூன்றடைப்பு கிராமத்தில், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.12.20 இலட்சம் மதிப்பில் புதிய குளம் அமைக்கப்பட்டு வருவதையும்,குச்சம்பட்டி ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.1.50 இலட்சம் மதிப்பில், புறம்போக்கு நிலத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்து பராமரிக்கப்பட்டு வரும் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர், குச்சம்பட்டி ஊராட்சி, கடம்பங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.3.15 இலட்சம் மதிப்பில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை பார்வையிட்டு, பள்ளி மாணவர்களிடம் கலந்துரையாடி குழந்தைகளின் வாசிப்புத்திறன், எழுத்தறிவு குறித்தும், மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.சென்னிலைக்குடி ஊராட்சியில் ரூ.6.20 கோடி மதிப்பில் புதிய சமத்துவபுரம் வீடுகள் கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும் நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு அறிவுத்தினார்.இந்த ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர்கள், பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் நோபல் மெட்ரிக் பள்ளியில் (09.01.2025) அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் உட்பட 37 பள்ளிகளில் உள்ள அடல் பழுதாக்க ஆய்வகத்தில் (Atal tinkering lab) பயிற்சி பெற்ற மாணவர்களின் புதுமை மற்றும் தொழில்நுட்பம்(Innovation and Technology) என்ற தலைப்பில் நடைபெற்ற அரிய அறிவியல் கண்டுபிடிப்புகளின் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.இந்த கண்காட்சியில் 70 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு 35 புதிய புதுமை மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினர். இந்த அறிவியல் கண்டுபிடிப்புகள் பல அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் இருந்தது.பின்னர், தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றுகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், முதுநிலை மேலாளர் திரு.ரவீந்திர வாதர்கர்(Lead of Flagship program for CSR and sustainable banking at IndusInd bank limited), நிறுவன இயக்குநர்(ACICI kalasalingam innovation) திருமதி சுபத்ரா, பள்ளி முதல்வர் உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகரில் இன்று (08.01.2025) நெடுஞ்சாலைத்துறை சார்பில், தேசிய சாலை பாதுகாப்பு மாதம் - 2025 ஐ முன்னிட்டு, நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தொடங்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.ஒவ்வொரு ஆண்டும் தேசிய சாலை பாதுகாப்பு மாதம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு சாலை பாதுகாப்பு மாதம் 01.01.2025 முதல் 31.01.2025 வரை அனுசரிக்கப்படுகிறது.இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துக்களில் இலட்சக்கணக்கானோர் இறக்கின்றனர். குறிப்பாக இளைஞர்கள் அதிகளவில் உயிரிழக்கிறார்கள். இந்தியாவிலேயே சாலை விபத்துக்களில் அதிகமாக உயிரிழிக்கின்ற மாநிலங்களில் தமிழ்நாடும் இருக்கிறது.தமிழ்நாட்டில் 2.50 கோடி மக்கள் வசிக்கிறார்கள். இதில், 3.50 கோடிக்கு மேலான இருசக்கர வாகனங்கள் இருக்கின்றன. இதில் தமிழ்நாட்டில் ஏறத்தாழ ஒரு ஆண்டிற்கு 15,000 நபர்கள் வாகன விபத்துக்களில் மரணமடைகிறார்கள். இதுமட்டுமல்லாமல் கொடுங்காயம் என்று சொல்லக்கூடிய கை, கால்கள் இழத்தல் மற்றும் சில உடலுறுப்புகள் வாழ்நாள் முழுவதும் செயல்படாமல் இருத்தல் போன்றவையும் விபத்துகளினால் ஏற்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் வாகன விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சராசரியாக 500 ஆக உள்ளது. இதனை பகுத்தாய்வு செய்தால் இதில் இளைஞர்கள் தான் அதிகளவில் உயிரிழக்கின்றனர் என்றும், ஏறக்குறைய 70 விழுக்காடு இருசக்கர வாகன விபத்துக்களினால் என்றும் புள்ளி விபரங்கள் கூறுகின்றனர். அதிலும் முக்கியமாக தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவது மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் தான் 50 விழுக்காடு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன எனவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றனர்.மது அருந்துவதின் மூலமாகவும், சாலை விதிகளை பின்பற்றாமலும், வாகனங்களை இயக்கும் பொழுது அவர்களுக்கான ஆபத்தை தேடுவது மட்டுமல்லாமல், மற்றவர்களுடைய உயிருக்கும், உடைமைக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவர்களாக இருக்கிறார்கள். இது மிகவும் வருத்தத்திற்குரிய செயலாகும்.மேலும், ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பு என்பது ஒரு நாட்டின் உடைய பொருளாதாரத்திற்கும் அழுத்தம் கொடுக்கக்கூடியதாகவும் இருக்கிறது.எனவே, 18 வயதிற்குட்பட்ட எவரும் இருசக்கர வாகனங்களை உபயோகப்படுத்தக்கூடாது. பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும். இருசக்கர வாகனங்களில் செல்லும்போது தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். மது அருந்திவிட்டு வாகனம் பயன்படுத்தக்கூடாது என்று இந்த சாலை பாதுகாப்பு மாதத்தில் அனைவரும் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் (விருதுநகர்) திருமதி பாக்கியலெட்சுமி, நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், போக்குவரத்துத்துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, திருவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை மற்றும் விருதுநகர் ஆகிய நகரங்களில் அறிவுசார் மையங்கள் அமைந்துள்ளன.மேற்படி அறிவு சார்மையங்களில் குறைந்த கட்டணத்தில் தன்னார்வலர்கள் மற்றும் அறக்கட்டளைகள் வாயிலாக நடத்தப்படும் போட்டி தேர்வு கருத்தரங்குகள், இலக்கியக் கூட்டங்கள் மற்றும் கல்வி அறிவுசார்ந்த போட்டிகள் மற்றும் சிறு விழாக்கள் மாலை நேரங்களில் மட்டும் நடத்திட அனுமதிக்கப்படும்.மேலும் முன் பதிவு மற்றும் இதர விபரங்கள் குறித்து தெரிந்;து கொள்ள சிவகாசி மாநகராட்சி ஆணையாளர் அவர்களை 73973-89921 என்ற தொலைப்பேசி எண்ணிலும், திருவில்லிபுத்தூர் நகராட்சி ஆணையாளர் அவர்களை, 73973-89916 என்ற தொலைப்பேசி எண்ணிலும், அருப்புக்கோட்டை நகராட்சி ஆணையாளர் அவர்களை, 73973-89919 என்ற தொலைப்பேசி எண்ணிலும், விருதுநகர் நகராட்சி ஆணையாளர் அவர்களை, 73973-89922 என்ற தொலைப்பேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக இந்த மாதத்தின் இரணடாவது வெள்ளிக்கிழமையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. அதன்படி படித்த வேலை தேடும் இளைஞர்களுக்காக 10.01.2025 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 02.00 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.இத்தனியார் வேலைவாய்ப்பு முகாமில் ADYAR ANANDHA BHAVAN, TVS SUNDHARAM BREAKLINE, AANAIMALAI TOYOTO, TTK HEALTH CARE போன்ற 20-க்கும் மேற்பட்ட பிரபல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு I.T.I.டிப்ளமோ மற்றும் பொறியியல் படிப்பு ஆகிய கல்வித் தகுதி உடைய பணியாளர்களை தெரிவு செய்யவுள்ளார்கள். இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்த விரும்பும் வேலைநாடுநர்கள் 10.01.2025 அன்று வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பாக www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களை பதிவு செய்துவிட்டு அனைத்து கல்விச்சான்றிதழ், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இச்சேவையானது முற்றிலும் கட்டணமில்லா சேவையாகும். இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அவர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்பட மாட்டாது என்ற விபரமும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
சர்க்கரைத்துறை ஆணையர், சென்னை அவர்களின் ஆணையின்படி, 2024-2025-ம் ஆண்டு கரும்பு சாகுபடி செய்யப்பட்ட விவசாயிகள், உற்பத்தியாகும் கரும்பினை இரண்டு சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்ப ஆணை பெறப்பட்டுள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் உற்பத்தியாகும் கரும்பினை கரும்பு அரவைக்காக சக்தி சர்க்கரை ஆலை, சிவகங்கை மற்றும் இராஜ ஸ்ரீ சர்க்கரை ஆலை, தேனி ஆகிய ஆலைகளுக்கு அனுப்பி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லா பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர்.ஆனால் தற்பொழுது போகி பண்டிகையின் போது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், இரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு இதனால் வெளிப்படும் நச்சுவாயுக்களால் மூச்சுதிணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது.எனவே, போகி பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாத்து, சுற்றுச்சூழலை காத்திட பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.