25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Jan 26, 2025

15-ஆவது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  (25.01.2025) 15-ஆவது தேசிய வாக்காளர் தினம் - 2025 -ஐ முன்னிட்டு,  வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை  உணர்த்தும் வகையில் நடைபெற்ற விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இந்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் காவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு,  மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் இருந்து  புதிய பேருந்து நிலையம், கருமாதிமடம், அல்லம்பட்டி முக்கு, அரசு மருத்துவமனை, மாரியம்மன் கோவில், பழைய பேருந்து நிலையம், பர்மா காலனி, ஆத்துப்பாலம், சிவகாசி பாலம் உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக விழிப்புணர்வு பதாகைகளுடன் சென்று பொதுமக்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.முன்னதாக, வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை  உணர்த்தும் வகையில், விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அனைவரும் எடுத்துக்கொண்டனர்.பின்னர், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு,  மாவட்ட அளவில் நடத்தப்பட்ட சுவர் பதாகை தயாரிப்பு போட்டியில்  வெற்றி பெற்ற இராஜபாளையம் அன்னப்ப ராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியை  சேர்ந்த மாணவி செல்வி.ரம்யா என்பவருக்கு முதல் பரிசாக ரூ.2000/-மும், சாத்தூர் கம்ம மகாஜன டிரஸ்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த            மாணவி செல்வி. அட்சயா ஸ்ரீ என்பவருக்கு இரண்டாம் பரிசாக ரூ.1000/-மும், சாத்தூர் கம்ம மகாஜன டிரஸ்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவி செல்வி.திவ்ய சரஸ்வதி என்பவருக்கு மூன்றாம் பரிசாக ரூ.500/-ம்,கல்லூரி மாணவர்களுக்கான சுவர் பதாகை தயாரிப்பு போட்டியில்  வெற்றி பெற்ற இராஜபாளையம் ராம்கோ பொறியியல் கல்லூரி மாணவி செல்வி. மோகன கிருத்திகா என்பவருக்கு முதல் பரிசாக ரூ.2000/-மும், இராஜபாளையம் ஏ.கே.டி.ஆர். பெண்கள் கல்லூரியை சேர்ந்த மாணவி செல்வி.விஜயலெட்சுமி என்பவருக்கு இரண்டாம் பரிசாக ரூ.1000/-மும், சிவகாசி எஸ்.எப்.ஆர். பெண்கள் கல்லூரியை சேர்ந்த மாணவி  செல்வி.மகாலெட்சுமி என்பவருக்கு மூன்றாம் பரிசாக ரூ.500/-ம்,மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான ரங்கோலி போட்டியில் வெற்றி பெற்ற திருவில்லிபுத்தூர் சிவம் சக்தி சுய உதவிக்குழுவிற்கு முதல் பரிசாக ரூ.5000/-மும், திருச்சுழி மல்லிகை சுய உதவிக்குழுவிற்கு இரண்டாம்  பரிசாக ரூ.4000/-மும், காரியாபட்டி சுதா காளியம்மன் சுய உதவிக்குழுவிற்கு மூன்றாம் பரிசாக ரூ.3000/-மும் என ஆக மொத்தம் ரூ.19,000/- மதிப்பிலான பரிசுத்தொகைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

Jan 26, 2025

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் “பருத்தி திருவிழா “ என்ற தலைப்பில் நடைபெற்ற வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை  சௌடாம்பிகா பாலிடெக்னிக் கல்லூரியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் (25.01.2025) “பருத்தி திருவிழா “ என்ற தலைப்பில் நடைபெற்ற வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் பார்வையிட்டார்.மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் வேளாண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய தொழில்நுட்பங்கள், விதைகள் நவீன விவசாய கருவிகள் உள்ளிட்டவை குறித்து அறிந்து பயன்பெறும் வகையில் வட்டார அளவில் ஒவ்வொரு தலைப்பிலும் நடைபெற்று வருகிறது.அதன்படி, இன்று அருப்புக்கோட்டையில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் பருத்தி திருவிழா என்ற தலைப்பில் நடைபெறுகிறது.இவ்வேளாண் கண்காட்சியில் விவசாயிகள் பயனடைந்திடும் வகையில் வேளாண் தொழில் நுட்ப விளக்கக் காட்சிகள், நவீன விவசாய தொழில் நுட்ப விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளது. வேளாண் ஆராய்ச்சி நிலைங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின்  வேளாண் சார்ந்த புதிய கண்டுபிடிப்புகள், புதிய தொழில் நுட்பங்கள், இடுபொருட்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.மேலும், இக்கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் நெல், சிறுதானியங்கள், மா, பருத்தி, மிளகாய், மக்காச்சோளம், வேளாண் இயந்திரங்கள் பயன்பாடுகள், காய்கறிகள், பயறு வகைகள், எண்ணெய்வித்துக்கள், தென்னை பயிர்கள் தொடர்பாக அனைத்து தொழில் நுட்பம் சார்ந்த கருத்தரங்குகள் மற்றும் செயல் விளக்கங்களும் வழங்கப்படுகிறது.மேலும், அனைத்து வட்டார விவசாயிகளுக்கும் பயிர் சார்ந்த ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.விவசாயிகள் மாறி வரும் சூழலுக்கு ஏற்ற வகையிலும், புதிய நவீன தொழில் நுட்பங்களின் உதவியுடனும், சந்தை மதிப்புள்ள வேளாண் பொருட்களை விளைவிப்பதின் மூலமும் நல்ல வருமானத்தை ஈட்ட முடியும்.

Jan 26, 2025

‘Coffee With Collector” என்ற 148-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், (25.01.2025) இராஜபாளையம் பி.ஏ.சி.ஆர். ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11- ஆம் வகுப்பு பயிலும் 30 பள்ளி  மாணவர்களுடன்  நடைபெற்ற ‘Coffee With Collector”  என்ற 148-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்  முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி, கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம்  குறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து  கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 148-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால்  நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளிடம், அவர்களுடைய இலட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம், அவர்கள் உயர்கல்வி பயில விரும்பும் கல்லூரி மற்றும் இடம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.பள்ளி கல்லூரி படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும். எனவே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் மூலம் வாழ்க்கைக்கான பல அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம். அனுபவங்களில் இருந்து கிடைக்கும் கல்விதான் சிறந்த கல்வியாகும்.பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி படிப்பை முடித்தவுடன் கல்லூரி படிப்பில் சேருவதற்காக அனைத்து கல்லூரிகளிலும் தவறாமல் விண்ணப்பம் செய்ய வேண்டும். கடந்தாண்டு எந்த கல்லூரியில் எவ்வளவு கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது போன்ற தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும்.ஒவ்வொருவரும் தங்களது தனித் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.பன்னிரெண்டாம் வகுப்பில் எடுக்க கூடிய மதிப்பெண்களை பயன்படுத்தி நமக்கான நல்ல வாயப்புகளை உருவாக்கி கொள்ள வேண்டும். உயர்கல்வி எங்கு பயின்றாலும், இந்தியாவில் சிறந்த கல்லூரியை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். வெற்றிக்கு  தேவையான  விஷயங்களை தொடர்ந்து ஆர்வத்துடன், கவனசிதறல் இல்லாமல், தொடர்ந்து விடா முயற்சியுடனும், கடினமாக உழைத்தால் எளிதாக வெற்றி பெறலாம்.மேலும், ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்த சந்திப்பில் மாணவ, மாணவியர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு,  இந்த நிகழ்ச்சி மூலம் எங்களுக்கு ஒரு புத்துணர்வு, ஊக்கம் அளிப்பதாகவும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் போன்று தாங்களும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகி உள்ளதாகவும், எங்களுடைய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெளிவான விடை கொடுத்ததாகவும், நாங்களும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் போன்று சாதித்து காட்டுவோம் என்றும், இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு மாணவர்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.  

Jan 26, 2025

மாபெரும் நெகிழி கழிவு சேகரிக்கும் திட்டத்தினை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

விருதுநகர் கௌசிகா நதி பாலம் புதிய பேருந்து நிலைய அருகில் (25.01.2025) மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் இணைந்து மாபெரும் நெகிழி கழிவு சேகரிக்கும் திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S.,  அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள், சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில்,  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் துவக்கி வைத்தார்.பின்னர், நெகிழி பயன்பாட்டை தவிர்த்து, அதற்கு மாற்றாக துணிப்பைகளின் உபயோகிக்கும் பழக்கத்தை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில், மஞ்சப்பைகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.தமிழக அரசு உத்தரவின்படி 2025 ஜனவரி முதல் டிசம்பர் வரை ஒவ்வொரு மாதமும் நான்காவது சனிக்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊராட்சி அமைப்புகள் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் இணைந்து  நெகிலியால் ஆன பொருட்களை நீர்நிலைகள், நகர்புற பகுதிகள், கிராம பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெகிலியை அகற்றுவதற்கான மாபெரும் இயக்கம் துவங்கி வைக்கப்பட்டுள்ளது.குறிப்பாக ஒருமுறை பயன்படுத்தக்கூடிய நெகிலியை நாம் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று நம்முடைய அரசு உறுதி கொண்டிருக்கிறது. அதற்கு மாற்றாக மீண்டும் மஞ்சப்பை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இது ஒரு மக்கள் இயக்கமாக மாற்றிட வேண்டும். பல இடங்களிலே இத்தகைய உணவுப் பொருட்களை உபயோகப்படுத்தக்கூடிய பைகள், ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பைகள் சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிப்பதோடு உடல் நலக்கத்திற்கும் பெரிய அளவில் தீங்கு விளைவிப்பதாக  உள்ளது.எனவே பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க  அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த கூடிய நிகழ்ச்சி இன்று தமிழகமெங்கும் பல்வேறு இடங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.நம்முடைய விருதுநகர் மாவட்டத்தில் இன்றைக்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்வில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்(தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்) திரு.ஹேமந்த் ஜோசன், விருதுநகர் நகர்மன்ற தலைவர் திரு.மாதவன்,  தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலர்கள், நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jan 26, 2025

இந்திய தேர்தல்கள்” என்ற தலைப்பில் நடத்தப்பட்ட  மாநில அளவிலான தேர்தல் தொடர்பான வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில்,  (25.01.2025)  தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம்  மற்றும் திருச்சி என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமி இணைந்து வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை  உணர்த்தும் வகையில், ‘இந்திய தேர்தல்கள்” என்ற தலைப்பில் நடத்தப்பட்ட  மாநில அளவிலான தேர்தல் தொடர்பான வினாடி-வினா போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு  மொத்தம் ரூ.84,000- மதிப்பிலான பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் வழங்கினார்.அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கோகுல் மற்றும் மதன் ஆகியோரின் குழுவிற்கு முதல் பரிசாக ரூ.30,000-மும், விருதுநகரைச்  சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மற்றும் மலைப்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் செல்வன் ஆகியோரின் குழுவிற்கு இரண்டாம் பரிசாக ரூ.20,000-மும், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சிவராம் குமார் மற்றும் கணக்கனேந்தல் பகுதியைச் சேர்ந்த மணி சேகர் ஆகியோரின் குழுவிற்கு மூன்றாம் பரிசாக ரூ.10,000- மும்,கரூரைச் சேர்ந்த பிரபாகரன் மற்றும் திருச்சியை சேர்ந்த கோகுல் பிரசாத் ஆகியோரின் குழுவிற்கு நான்காம் பரிசாக ரூ.7000- மும், திருவாரூரைச் சேர்ந்த விக்னேஷ் மற்றும் தஞ்சாவூரைச் சேர்ந்த கபிலன் ஆகியோரின் குழுவிற்கு ஐந்தாம் பரிசாக ரூ.5000- மும், சிவகாசியை சேர்ந்த சுந்தரபாண்டியன் மற்றும் விருதுநகரைச் சேர்ந்த ஜெயராமகிருஷ்ணன் குழுவிற்கும், கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அய்யப்ப தாஸ் மற்றும் பந்தன்திட்டாவை சேர்ந்த டென்சின் சைமன் ஆகியோரின் குழுவிற்கும், விருதுநகரை சேர்ந்த பாலாஜி மற்றும் விருதுநகரைச் சேர்ந்த மைதிலி ஆகியோரின் குழுவிற்கும், விருதுநகரை சேர்ந்த சுந்தரலிங்கம் மற்றும் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சதீஷ்குமார் ஆகியோரின் குழுவிற்கும், திருச்சியைச் சேர்ந்த மணிவேல் மற்றும் சேலத்தைச் சேர்ந்த நவீன் குமார் ஆகியோரின் குழுவிற்கும், பல்லடத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் மற்றும் காரைக்குடியைச் சேர்ந்த விஷ்ணுகுமார் ஆகியோரின் குழுவிற்கும் என 6 குழுவிற்கு ஆறுதல் பரிசாக தலா ரூ.2000- மும் என மொத்தம் 11 குழுக்களுக்கு ரூ.84,000- மதிப்பிலான பரிசுத்தொகைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.                       இந்த வினாடி - வினா போட்டியில் மாநிலம் முழுவதிலும் இருந்து 16  வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஒரு குழுவிற்கு இரண்டு நபர்கள் வீதம் 262 குழுக்கள் கலந்து கொண்டனர்.

Jan 26, 2025

தியாகி சங்கரலிங்கனார் அவர்களின் 130-வது பிறந்த தினத்தை முன்னிட்டு அன்னாரது சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

விருதுநகரில் உள்ள தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபத்தில் (26.01.2025) செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், தியாகி சங்கரலிங்கனார் அவர்களின் 130-வது பிறந்த தினத்தை முன்னிட்டு அன்னாரது சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்     முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி ராணி ஸ்ரீ குமார் அவர்கள்,  விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.தியாகி சங்கரலிங்கனார், தமிழகத்திற்கு, தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்று போராடி, உண்ணாவிரதம் மேற்கொண்டு தனது இன்னுயிரை ஈந்த தியாகச் செம்மல் ஆவார். இவர் 1895ஆம் ஆண்டு, பெரிய கருப்பசாமி நாடார் வள்ளியம்மை தம்பதியினரின் புதல்வராகப் பிறந்தார். 1914ஆம் ஆண்டு, பெண்கல்வி வளர்ச்சிக்கான சங்கத்தின் செயலாளராகப் பதவி வகித்தார். 1915ஆம் ஆண்டு திருமணம் புரிந்த இவர் 1917ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 1920ஆம் ஆண்டு இராஜாஜியை சந்தித்தபோது அவரது சீடரானார். இவர், “மாதர்கடமை” என்னும் நூலை எழுத்p வெளியிட்டார். கதர் இயக்கத்தில் சேர்ந்து, கதர் வளர்ச்சிப்பணியை மேற்கொண்டார்.திருச்சியில் நடைபெற்ற சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டமைக்காக 6 மாத சிறைத் தண்டனைப் பெற்றார். கரூரில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டமைக்காக இவருக்கு 6 மாத கடுங்காவல் தண்டனையும் 5 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. தேசசேவையின் காரணமாக 1944ஆம் ஆண்டு மாதம் ரூ.150/- ஊதியத்திலிருந்த வேலையை விட்டு விட்டு திருச்செங்கோட்டிலிருந்த காந்தி ஆசிரமத்தில் ரூ.30/- சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தார். 1951 ஆம் ஆண்டு விருதுநகரில் உள்ள சூலக்கரையில் ஓர் ஆசிரமம் அமைத்து செயல்பட்டார்.இன்றைய தமிழகத்தின் பெயர் சென்னை மாகாணம் என இருந்த போது, அப்பெயரை மாற்றித் தமிழ்நாடு என பெயரிட வேண்டும் எனக் கோரி 27.07.1956 நாள் முதல் 13.10.1956 முடிய 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். 10.10.1956 அன்று மதுரையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.திருவாளர்கள் கு.காமராஜர், பி.கக்கன், ம.பொ.சிவஞானம், சி.என்.அண்ணாதுரை, ஜீவானந்தம் ஆகியோர் இவரைச் சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிடும்படி கோரினர். ஆனால், இந்திய வரலாற்றிலேயே தாம் மேற்கொண்ட கொள்கைக்காக காந்தி வழியில் அதிக நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாகச் செம்மல் தியாகி சங்கரலிங்கனார், தமிழ்நாட்டு வரலாற்றில் தியாக தீபமாக சுடர்விட்டுக் கொண்டிருக்கிறார்.தியாகி சங்கரலிங்கனார் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் விருதுநகர் மாவட்டத்தில் ரூ.77 இலட்சம் செலவில் மணிமண்டபம் 18.06.2015 அன்று திறக்கப்பட்டுள்ளது. மேலும், விருதுநகர் மாவட்டத்தில், தியாகி சங்கரலிங்கனார் அவர்களின் பிறந்த நாளான  ஜனவரி 26 மற்றும் நினைவு நாளான அக்டோபர் 13 - ஆம் நாளன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.அதனடிப்படையில், விருதுநகரில் உள்ள தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபத்தில்  (26.01.2025) செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், தியாகி சங்கரலிங்கனார் அவர்களின் 130-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, அன்னாரது சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்   அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இந்நிகழ்ச்சியில்,  மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், செயற்பொறியாளர்(பொதுப்பணித்துறை) திரு.செந்தூர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் (மு.கூ.பொ) திரு.ச.தங்கவேல், விருதுநகர் நகர்மன்றத்தலைவர் திரு.மாதவன், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.சிவக்குமார், வட்டாட்சியர், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Jan 26, 2025

76-வது குடியரசு தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஏற்றுக்கொண்டார்.

விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில்  (26.01.2025) நடைபெற்ற இந்திய திருநாட்டின் 76-வது குடியரசு தின விழா நிகழ்ச்சிக்கு   மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் வருகை தந்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன்,த.கா.ப., அவர்கள் வரவேற்றார்.பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் காலை 8.05 மணியளவில் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து மூவர்ண பலூன்களை பறக்கவிட்டார்.பின்னர், சிறப்பாக பணியாற்றிய 133 தலைமைக் காவலர்களுக்கு முதலமைச்சர் காவலர் பதக்கங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.மேலும், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பாக 2 நபர்களுக்கு தலா ரூ.25,000ஃ- மதிப்பில் வருடாந்திர பராமரிப்பு உதவித்தொகையாக ரூ.50,000ஃ-த்திற்கான காசோலைகளை  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.தொடர்ந்து, அரசின் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அரசு பணியாளர்களுக்கும், மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பான செயல்பாட்டிற்கு முழு ஒத்துழைப்பு நல்கி மாவட்டத்தை முன்னோடி மாவட்டமாக திகழ தொடர்ந்து தங்களது பங்களிப்பை வழங்கி வரும் 12 மாவட்ட நிலை அலுவலர்களுக்கும், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் சிறப்பு இனங்களில் சிறந்த ஆலை பராமரிப்பு மற்றும் தொழிலாளர் நலன் காக்கும் 4 நிறுவனங்களுக்கும், அதிகமாக பெரு நிறுவன சமூக பொறுப்பு நிதியினை வழங்கிய  4 நிறுவனங்களுக்கும், சிறந்த உழவர் உற்பத்தியாளர் 5 நிறுவனங்களுக்கும்,  பொதுநலன் சார்ந்த செயல்பாடு மற்றும் சமூக மேம்பாட்டுக்கான பங்களிப்பு ஆற்றிய 55 நபர்களுக்கும், 3 சிறந்த தன்னார்வ நிறுவனங்களுக்கும், 2 சிறந்த குருதிக் கொடையாளர்களுக்கும், 1 சிறந்த தொண்டு நிறுவனத்திற்கும், திருநங்கைகளின் சுகாதார நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்த 3 நபர்களுக்கும், சிறந்த சமூக ஆர்வலர்கள் 2 நபர்களுக்கும், 2 சிறந்த குழந்தைகள் நல காப்பகத்திற்கும், கரிசல் இலக்கிய எழுத்தாளர்கள் 2 நபர்களுக்கும், கரிசல் இலக்கிய படைப்புகளுக்கு உதவிய எழுத்தாளர்கள் 2 நபர்களுக்கும், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான மானிய கடனுதவி பெற்று சுய தொழில்களில் சிறப்பாக செயல்பட்டு வரும் 3 மாற்றுத்திறனாளிகளுக்கும், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான மானிய கடனுதவி பெற்று சுய தொழில்களில் சிறப்பாக செயல்பட்டு வரும் 3  பெண் தொழில் முனைவோர்களுக்கும்,  சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான மானிய கடனுதவி பெற்று சுய தொழில்களில் சிறப்பாக செயல்பட்டு வரும் 3 சிறந்த இளம் தொழில் முனைவோர்களுக்கும், சிறுதானிய உற்பத்தியில் சிறப்பாக செயலாற்றும் 6 விவசாயிகளுக்கும், 2 சிறந்த மகளிர் சுய உதவி குழுக்களுக்கும், 1 சிறந்த அங்கன் வாடி மையத்திற்கும்,  அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருதல், சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் நீர்நிலைகளை பாதுகாத்தல் ஆகிய இனங்களுக்கு பாராட்டி சிறந்த பள்ளி, சிறந்த ஆசிரியர், சிறந்த மாணவர், சிறந்த சுற்றுச்சூழல் ஊக்கி, சிறந்த நீர் பாதுகாவலர் என 5 நபர்களுக்கும்,சிறார் குற்றவாளிகளுக்கான மறுவாழ்வு பணிகளை சிறப்பாக மேற்கொண்டமைக்காக 1 நபருக்கும், 5 சிறந்த மருத்துவர்களுக்கும், 11 சிறந்த ஊராட்சி செயலர்களுக்கும், சிறப்பாக செயல்படும் 4 பள்ளிகளுக்கும், 2 சிறந்த ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 2  கண்காணிப்பு குழு உறுப்பினர்களுக்கும்,  11 சிறந்த சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையலர்களுக்கும், சாலை பாதுகாப்பு உறுப்பினர் 1 நபருக்கும், சிறந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் (தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்) 2 நபர்களுக்கும், சிறந்த மருத்துவ ஊர்தி பணியாளர்கள் 2 நபர்களுக்கும், விருதுநகர் மாவட்ட தேசிய தகவல் மைய பணியாளர்கள் 4 நபர்களுக்கும், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை சிறந்த முறையில் செயல்படுத்திய 2 பணியாளர்களுக்கும், சிறப்பாக பணியாற்றிய பல்வேறு துறைச் சார்ந்த 158 அரசு பணியாளர்களுக்கும்,  குடியரசு தின விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்த 5 நபர்களுக்கும் என மொத்தம் 463 நபர்களுக்கு நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர்    முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.அதனைத்தொடர்ந்து, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், சிவகாசி சார் ஆட்சியர் திருமதி ப்ரியா ரவிச்சந்திரன்,I A S., திட்ட இயக்குநர் (மா.ஊ.வ.மு) மரு.தண்டபாணி, உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ஹிமான்சு மங்கள்,I A S., மாவட்ட அளவிலான அலுவலர்கள், கோட்டாட்சியர்கள், துணை ஆட்சியர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள், காவல் துறை அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Jan 26, 2025

விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், ஓ.கோவில்பட்டி கிராமத்தில் 76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், ஓ.கோவில்பட்டி கிராமத்தில்  (26.01.2025) 76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, கிராமசபைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் (01.04.2024 முதல் 31.12.2024 வரை), கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கிராம ஊராட்சியில் கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், மக்கள் திட்டமிடல் இயக்கம் (People’s Plan Campaign) ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.அரசு என்பது எல்லா மக்களையும் சமமாக பார்த்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரும் ஒரு அமைப்பாகும். இந்த கிராம சபையின் மிக முக்கிய நோக்கம் என்னவென்றால், ஜனநாயக நாட்டில், கிராமத்தில்; ஊராட்சி தலைவர்கள், மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள், அரசுத் துறை அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர்கள் இருப்பார்கள். நாங்கள் எல்லாம் மக்களின் பணியாளர்கள். எங்களுக்கு கிடைக்கப்பெற்ற அதிகாரம் உங்களிடம் இருந்து பெறப்பட்டது. உண்மையான அதிகாரம் மக்களிடம் தான் உள்ளது. அதனடிப்படையில் இந்த கிராமசபை கூட்டத்தின் வாயிலாக இந்த கிராமத்தின் வளர்ச்சிக்கு தேவையான பணிகள் அரசு மூலம் என்னென்ன வளர்ச்சி பணிகள் முடிக்கப்பட்டுள்ளது, என்னென்ன பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் என்னென்ன தேவைகள் உள்ளது என்பது கிராம மக்கள் வாயிலாக அறிந்து அதை செயல்படுத்துவது தான் இதன் நோக்கம்.மேலும், ஒரு கிராமத்தினுடைய உண்மையான வளர்ச்சி என்பது அந்த கிராமத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வி கற்பதை உறுதி செய்ய வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தை கல்வி கற்று, நல்ல வேலை வாய்ப்பை பெறும் பொழுது, அந்த குடும்பம், கிராமம் வளர்ச்சி அடையும். எனவே, அனைவருக்கும் கல்வி என்பது மிக முக்கியமானது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை நல்ல கல்வியாளராக உருவாக்க வேண்டும். கல்வி மற்றும் அதற்கு இணையாக சுகாதாரத்தையும் பேணி பாதுகாக்க வேண்டும்.கல்வி, சுகாதாரம் இரண்டும் இருந்தால் நமது குடும்ப வளர்ச்சியும், சமுதாய வளர்ச்சியும் மேன்மையடையும் என தெரிவித்தார்.இக்கிராமசபை கூட்டத்தில் போதை மற்றும் புகையிலை பொருட்கள் தடுப்பு தொடர்பாகவும், தொழுநோய் விழிப்புணர்வு தொடர்பாகவும் உறுதிமொழி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.இந்த கிராம சபை கூட்டத்தில் மருத்துவத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.இந்த கிராம சபைக் கூட்டத்தில் திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) திரு.அரவிந்த், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.சிவகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.சீனிவாசன், ஊராட்சி மன்றத் தலைவர், அரசு அலுவலர்கள், ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jan 24, 2025

விருதுநகர் மாவட்டம் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் (24.01.2025) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  முனைவர் வீ.ப. ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் தெரிவித்துக் கொண்டனர். மாவட்ட ஆட்சியர் அவர்கள் விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து உரிய விளக்கம் அளித்து தொடர் நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.கடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளால் வழங்கப்பட்ட மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வேளாண்மை துணை இயக்குநர் ,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ) அவர்களால் எடுத்துரைக்கப்பட்டது.மேலும்,  இராஜபாளையம் வட்டாரத்தில், மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ்  வேளாண் பட்டதாரிகளை தொழில் முனைவோர் ஆக்குதல் என்ற திட்டத்தில் ரூ.1,00,000ஃ-த்திற்கான காசோலை வழங்கப்பட்டது.கண்மாய்கள் மற்றும் ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று முன்னுரிமை அடிப்படையில்  அப்பகுதிக்குரிய   வட்டாட்சியர், செயற்பொறியாளர், நீர்வளத்துறை, வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் செயற்பொறியாளர், வேளாண் பொறியியல் துறை, விருதுநகர் இணைந்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதமடைவதை தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும், முதன்மை செயலாளருக்கு நேர்முக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.மேலும், வனவிலங்குகளால் பயிர் சேதம் ஏற்பட்டிருப்பின் கள ஆய்வு செய்து கூடிய விரைவில் இழப்பீடு விவசாயிகளுக்கு வழங்கவும், தாமதமாக்கும் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது.பின்னர், பரளச்சி, இராஜகோபாலபுரம், தொப்பலாக்கரை, தும்முசின்னம்பட்டி ஆகிய கிராமங்களில் நிலத்தடி நீர் ஆய்வு செய்யப்பட்டு, மாசுப்பட்டுள்ளதால் சிறுநீரக பாதிப்புகள் அதிகளவில் உள்ளது குறித்து விவாதிக்கப்பட்டது. அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு தொடர் நடவடிக்கையில் உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைப்பதன் முக்கியத்துவம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விரிவாக எடுத்துரைத்தார்.குப்பை கழிவுகளால் சுற்றுச்சுழல் மாசுபடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும்  இதில் பொது மக்களும் தங்களது கடமைகளை சரிவர பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) திருமதி நாச்சியார் அம்மாள், துணை இயக்குநர் (மேகமலை புலிகள் காப்பகம்) திருவில்லிபுத்தூர் திரு.தேவராஜ்,இ.வ.ப., வேளாண்மை இணை இயக்குநர் திருமதி க.விஜயா, தோட்டக்கலை துணை இயக்குநர் திருமதி சுபா வாசுகி, விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்ப பலர் கலந்து கொண்டனர்.  

Jan 24, 2025

Coffee With Collector” என்ற 147-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (24.01.2025) சிவகாசி அரசன் கணேசன் சி.பி.எஸ்.இ.பள்ளியில் பயின்று வரும் 32 மாணவர்களுடன் "Coffee With Collector”  என்ற 147- வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்   முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி, கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம்  குறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ ஃ மாணவியர்களுடன் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு,  147 -வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.பள்ளி, கல்லூரி படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும். எனவே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் மூலம் வாழ்க்கைக்கான பல அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம். அனுபவங்களில் இருந்து கிடைக்கும் கல்விதான் சிறந்த கல்வியாகும்.தமிழ் ஆர்வத்தை வளர்த்தல், சிறுகதை படைத்தல், படைப்பிலங்கியங்கள், தமிழ் அறிஞர்கள் குறித்தும் கல்லூரி மாணவிகளிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துரையாடினார்.கல்லூரி படிப்பில் சேர்வதற்கு விருப்பத்தின் அடிப்படையில் மட்டும் முடிவு எடுத்தல் கூடாது. அனைவருக்கும் இலட்சியம் உண்டு.இலட்சியத்தை அடைவதற்கு தொடர்ந்து விடா முயற்சி செய்ய வேண்டும். நிலையான தொடர்ச்சியான சிறிய முயற்சிகள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது.மேலும், ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தெரிவித்தார்.இந்த சந்திப்பில் கல்லூரியில் பயிலும் மாணவியர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு, இந்த நிகழ்ச்சி மூலம் எங்களுக்கு ஒரு புத்துணர்வு, ஊக்கம் அளிப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் போன்று தாங்களும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகி உள்ளதாகவும், எங்களுடைய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் தெளிவான விடை கொடுத்ததாகவும், நாங்களும் மாவட்ட ஆட்சியர் போன்று சாதித்து காட்டுவோம் என்றும், இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் , அவர்களுக்கு மாணவர்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.  

1 2 ... 93 94 95 96 97 98 99 ... 102 103

AD's



More News