விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் ஆட்சிமொழிச் சட்ட வார விழிப்புணர்வுப் பேரணி.
விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் ஆட்சிமொழிச் சட்டம் குறித்தும், வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகை அமைத்தல் குறித்தும் நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியை சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.கனகராஜ் அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் தமிழே ஆட்சிமொழியாக இருக்க வேண்டும். அரசு நிருவாகம் முழுமையாகத் தமிழில் மேற்கொள்ளப்பெற வேண்டும் என்ற சீரிய நோக்கில் 27.12.1956-இல் சட்டமன்றத்தில் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்டதை நினைவுகூரும் வகையில் எல்லா மாவட்டங்களிலும் ஆட்சிமொழிச் சட்டவாரம் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் விருதுநகர் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 17.12.2025 முதல் 26.12.2025 வரை ஆட்சிமொழிச் சட்ட வாரம் கொண்டாடப்படவுள்ளது. இதன் ஒரு பகுதியாக 17.12.2025 ஆட்சிமொழிச் சட்டம் குறித்தும், வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகை அமைத்தல் குறித்தும் விழிப்புணர்வுப் பேரணி சாத்தூர் நகராட்சி மதுரை பேருந்து நிறுத்தத்தில் இருந்து காவல்நிலையம் வழியாக கடைவீதி வரை(காய்கறி சந்தை) வரை நடைபெற்றது.
இப்பேரணியின் போது, ஆட்சிமொழிச் சட்டம் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகை அமைத்தல் குறித்து பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு துண்டறிக்கைகளும், ஒட்டுவில்லைகளும் வழங்கப்பட்டன.இப்பேரணியில் விருதுநகர் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் திருமதி ந.ஜோதிலெட்சுமி, சாத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், தமிழறிஞர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply