25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Jan 24, 2025

குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்ணான 1098 வடிவில் 1098 பெண் குழந்தைகள் நின்று சாதனை புரியும் நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்

விருதுநகர் மாவட்டம், சிவகாசி இந்து நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் (24.01.2025) தேசிய பெண் குழந்தைகள் தினம்- 2025- ஐ முன்னிட்டு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் அன்பால் இணைவோம் அறக்கட்டளை இணைந்து நடத்திய குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்ணான 1098 வடிவில் 1098 பெண் குழந்தைகள் நின்று சாதனை புரியும் நிகழ்ச்சியினை சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.இன்று பல்வேறு துறைகளில் குறிப்பாக அதிகாரமிக்க அரசு பணிகளில் இருந்து, நிறைய பொருளாதார வளமிக்க தனியார் துறைகள் மற்றும் நிறைய வணிகத் துறைகளிலும் பெண்களினுடைய பங்களிப்பு அதிகமாகிக் கொண்டே வருகிறது.இதற்கு மிக முக்கியமான காரணம், பெண்களுக்கு என்று நிறைய வாய்ப்புகள் இருப்பதால் அந்த வாய்ப்புகளை அவர்கள் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். பெண்களுக்கு இயற்கையாகவே புத்தி கூர்மை அதிகமாக இருக்கிறது என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றனர்.பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவிபேணி வளர்த்திடும் ஈசன்மண்ணுக்குள்ளே சில மூடர் - நல்லமாதர் அறிவைக் கெடுத்தார்கண்கள் இரண்டினில் ஒன்றைக் - குத்திக்காட்சிக் கெடுத்திட லாமோ?பெண்கள் அறிவை வளர்த்தால் - வையம்பேதைமை யற்றிடும் காணீர்!பெண்;களுக்கு இயற்கையாகவே அதிகமான ஞானம் இருக்கிறது. பெண்ணுக்குள் அறிவை வளர்ப்பதன் மூலமாக இந்த சமுதாயத்தில் எதெல்லாம் பேதமையாக இருக்கிறதோ, எதெல்லாம் மடமையாக இருக்கிறதோ அவற்றையெல்லாம் அழிப்பதற்கு பெண்களுக்கு இருக்கக்கூடிய வாய்ப்புகளை கல்வி வாய்ப்புகளை அதிகரிப்பது தான் என்று 115 ஆண்டுகளுக்கு முன்பாக மகாகவி பாரதியார்; பாடியிருக்கிறார்.அப்படிப்பட்ட ஒரு சமூக சூழலில் பெண்களுக்கு இன்று அவர்கள் நிறைய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதன் காரணமாக நிறைய தொழில்களில் மிகப்பெரிய அளவில் முன்னேறி இருக்கிறார்கள். இருப்பினும் சமூக சூழ்நிலைகள் காரணமாக அவர்கள் எதிர் கொள்ளக்கூடிய பிரச்சனைகள், அது குடும்பத்திலிருந்து, சமுதாயத்தில் இருந்து, அவர்கள் பழகக்கூடிய மனிதர்களிடமிருந்து எதிர்கொள்ளக்கூடிய பிரச்சனைகளை இரண்டு விதமாக அணுக வேண்டிய தேவை இருக்கிறது. ஒன்று அறிவியல் பூர்வமாக உளவியலை அணுகுவது, இன்னொன்று சட்டத்தின் மற்றும் அரசினுடைய திட்டங்களின் மூலமாக வாழ்க்கையையும் தங்களையும் பாதுகாத்துக் கொள்வதற்கான வாய்ப்புகளை புரிந்து கொள்ளுதல் ஆகும்.குழந்தைகளுக்கு எதிரான உடல் மற்றும் மன அளவிலான வன்முறையோ, குழந்தைத் தொழிலாளராகவோ, குழந்தைத் திருமணமோ, பெண் சிசு மற்றும் கருக்கொலையோ, பாலின பாகுபாடோ, ஜாதி வேற்றுமையா, குழந்தைத் கடத்தலோ நடைபெறாமல் தடுத்தல், அவ்வாறு எங்கேனும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு எதிரான தீங்கிழைத்தலோ அல்லது வன்முறையோ நடைபெற்றால் அல்லது நடைபெறுவது போல் தெரிந்தால் உடனடியாக 1098 என்ற எண்ணிற்கு தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம். அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.இச்சாதனையை ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்டஸ், புதுச்சேரி அமைப்பு கண்காணித்து அங்கீகாரம் செய்தனர்.இந்நிகழ்வில் சிவகாசி சார் ஆட்சியர் திருமதி ந.ப்ரியா ரவிச்சந்திரன், காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ரா.பாஸ்கர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் திருமதி இல.மீனாட்சி, அன்பால் இணைவோம் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் தலைமை இயக்குனர் திரு.சதீஷ்குமார், பள்ளி தலைமையாசிரியர், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jan 24, 2025

தேசிய பெண் குழந்தைகள் தினம் - 2025 முன்னிட்டு நடைபெற்ற மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி ஆசிரியைகளுக்கான பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (24.01.2025) தேசிய பெண் குழந்தைகள் தினம்- 2025- ஐ முன்னிட்டு நடைபெற்ற மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆசிரியைகளுக்கான வளர் இளம் பருவ உளவியல் பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மென்ஸ்ட்ரூபீடியா காமிக் (Menstrupedia Comics) தமிழ் புத்தகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டார்.தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, வளரிளம் பருவத்தில் இருக்கக்கூடிய பதினோரு வயதிலிருந்து 17 வயது வரை பள்ளிகளில் உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளில்  இருக்கக்கூடிய மாணவியர்களுக்கு வழிகாட்டுவதற்காக மருத்துவ உளவியல் மற்றும் உடல் சார்ந்த மருத்துவங்கள் பற்றி எடுத்து கூறுவதற்காக இந்த பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம் இந்திய அளவில் கல்வி மற்றும் மனித வள குறியீடுகளில் நன்கு வளர்ச்சி அடைந்த மாவட்டம். உயர்கல்வி பொருத்தவரையில் இந்தியாவில் இருக்கக்கூடிய மாவட்டங்களில் உயர்கல்வி சேர்க்கையில் அதிகமான எண்ணிக்கை கொண்ட முதல் மாவட்டம் விருதுநகர் தான். மனிதவள குறியீடுகளிலும் மிக அதிகமாக உள்ள மாவட்டம்.இப்படி நன்கு வளர்ச்சி அடைந்த விழிப்புணர்வு பெற்ற நமது மாவட்டத்தில் கூட ஒவ்வொரு ஆண்டும் 200- 300 வரையிலான குழந்தை திருமணங்கள் தொடர்பான புகார்கள் பதிவு செய்யப்படுகின்றன. அதுபோல  நமது  மாவட்டத்தில் மகப்பேறு புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தால் 19 வயதிற்குள் தாய்மை பேறு அடையும் சிறுமிகளின் எண்ணிக்கை ஆண்டிற்கு சுமார் 700 முதல் 800 வரை  இருக்கிறது. இது இன்னும் விழிப்புணர்வுக்கான தேவை இருப்பதை காட்டுகிறது.குறிப்பாக மாணவிகளுக்கு பதின் பருவத்தை புரிந்து கொள்ளுதல், பதின் பருவத்தில் ஏற்படக்கூடிய உளவியல், உடல் சார்ந்த மாற்றங்களை புரிந்து கொள்ளுதல் ஆகியவையோடு அதனை அறிவியல் பூர்வமாக அணுகுதல் என்பது மிக முக்கியமான தேவையாக இருக்கிறது.  இன்றைக்கு அறிவியல் மனப்பாங்கு என்பது மிக முக்கியமான தேவையாக இருக்கிறது. நாம் அறிவியலை படித்து அறிவியல் தகவலை பெற்று ஒரு அறிவியல் நிபுணராகவோ அல்லது படித்த படிப்பாளியாகவோ இருப்பது வேறு, அறிவியல் மனப்பாங்கோடு இருப்பது என்பது வேறு. இரண்டிற்கும் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. எனவே நிரூபிக்கப்பட்ட அறிவியல் வழியாக, அறிவியல் மருத்துவத்தின் உடைய நன்மைகளை பெற்றுக் கொள்வதற்கு அறிவியல் மனப்பாங்கு மிகவும் முக்கியமானது. அதனை இளம் குழந்தைகளுக்கு எடுத்து சொல்ல வேண்டும். 19 வயதிற்குள்ளாக தாய்மை பேறு அடையும் பெண்களின் குழந்தைகள் தான் பெரும்பாலும் எடை குறைவான குழந்தைகளாகவும், குறிப்பிட்ட காலகட்டத்தில் அடைய வேண்டிய உடல், மனவளர்ச்சி அடையாத குழந்தைகளாக இருக்கிறார்கள்.குழந்தை பிறப்பு விகிதம்(IMR) என்று சொல்லக்கூடிய பிறந்ததிலிருந்து ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் ஒரு ஆறு மாதம் அல்லது ஒரு ஆண்டிற்குள் இறந்து போகக்கூடிய குழந்தைகளின் எண்ணிக்கையும்  இதுபோன்ற ஒரு வளரிளம் பருவத்தில் உள்ள பெண்கள் பெறக்கூடிய குழந்தைகள் தான் அதிகமாக இருக்கிறார்கள். எனவே, ஒரு குழந்தை பிறப்பு என்பதும், அந்த குழந்தை இறந்து போவது என்பதும் எவ்வளவு பெரிய வலியாக அந்த தாய்க்கும், அந்த குடும்பத்திற்கும் இருக்கும் என்பதை நம்மால் புரிந்து கொள்ளவே முடியாது.நாம் வளர்ச்சியடைந்த இந்த சூழ்நிலையிலும் கூட நாம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் தேவை மிகவும் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக மாணவிகளுக்கு நாம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வளரிளம் பருவத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்களில் உளவியல் சார்ந்த மாற்றங்களுக்கு அவர்களை தங்களை தயார்படுத்தி கொண்டிருக்கிறார்களா என்றும் அதனுடைய நன்மை தீமைகளை அறிவியல் மனப்பான்மையுடன் புரிந்து கொண்டிருக்கிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும்.நம்முடைய மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பிரச்சனைகளை ஆய்வு செய்து பார்த்தால், இந்த குழந்தைகளுக்கு எல்லாம் நல்ல வழிகாட்டுதலும் ஆற்றுப்படுத்துதலும் அவசியமாகிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. எனவே, ஒவ்வொரு பள்ளிகளிலும் குறிப்பாக பெண் குழந்தைகள் படிக்கக்கூடிய உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் அதற்கென்று நியமிக்கப்படக்கூடிய ஆசிரியர்கள், இது குறித்து மாணவிகளுக்கு குறைந்த பட்சம் வாரத்தில் ஒரு நாளாவது, ஒரு வகுப்பாவது அவர்கள் வாழ்க்கை முறை சார்ந்த கல்வியை,  குறிப்பாக அவர்களுடைய உடல் உளவியல் சார்ந்த பிரச்சினைகளை அறிவியல் பூர்வமாக புரிந்து கொள்வதற்கும், அதைவிட மிக முக்கியமானது அதற்கான தீர்வுகள் குறித்து அவர்களுக்கு தெரிந்து கொள்வது மிக முக்கியமானது.ஒரு உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு அறிவியல் பூர்வமாக மருத்துவர்களை அணுகி எப்படி தீர்வு காண்பது. ஒரு உளவியல் சார்ந்த பிரச்சனைக்கு எப்படி ஒரு ஆலோசனைகளை பெறுவது. தங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகளை எப்படி முறையாக தீர்வுக்கு கொண்டு வருவது. இவற்றையெல்லாம் அறியாமையின் காரணமாக நமது குழந்தைகளுக்கு தெரியவில்லை.  அவற்றை எல்லாம் அவர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக அனைத்து வட்டாரங்களில் இருந்தும் சுமார் 200 ஆசிரியர்கள் என்று இந்த நிகழ்ச்சியில் வருகை தந்திருக்கிறீர்கள்.  ஆசிரியர்களாகிய நீங்கள் ஒவ்வொரு வட்டாரங்களிலும் சென்று தொடர்ச்சியாக செயல்படக்கூடிய நிகழ்ச்சிகளில், நீங்கள் இது குறித்து அறிவியல் பூர்வமாக பேச வேண்டும். அறிவியல் பூர்வமாக இருக்கக் கூடிய தீர்வுகளுக்கு மாணவிகளை ஆற்றுப்படுத்த வேண்டும். தேவை ஏற்படக்கூடிய சூழ்நிலையில் அவர்களுடைய  பெற்றோர்களுக்கும் நீங்கள் ஆதரவோடும், பெற்றோர்களுக்கு  ஆலோசனைத் தரக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். மாணவிகளை உயர்கல்விக்கும், கல்வியின் வழியாக பெரிய வாய்ப்புகளை பெறுவதற்கும் இருக்க்க்கூடிய சூழ்நிலைகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். இன்று பெண்களுடைய முன்னேற்றம் என்பது மிகப்பெரிய சமூக முன்னேற்றம். அரசு மற்றும் தனியார் துறை வேலை வாய்ப்புகளில் பெண்கள் அதிகமாக வருகிறார்கள்.எனவே எதிர்காலத்தில் அவர்கள் வெற்றி அடையக்கூடிய  பெண்ணாக இருக்க வேண்டும் என்றால் அவர்கள் பொருளாதாரத்தில் தலைநிமிர வேண்டும். பொருளாதாரத்தில் தலை நிமிர்ந்தால் தான் உண்மையான வெற்றி கிடைக்கும். அதை மாணவிகள் அடைவதற்கு அவர்களுடைய பதின் பருவத்தை மிக கவனமாகவும் விழிப்புணர்வோடும் ஆரோக்கியமாகவும் கடந்து, அடுத்து வாழ்க்கை தரக்கூடிய பல்வேறு வாய்ப்புகளை பெறக்கூடிய மாணவிகளாக நமது மாணவச்செல்வங்கள் உருவாக வேண்டும். அவர்களுக்கு ஆற்றுப்படுத்தக்கூடிய பணிகளை நீங்கள் அனைவரும் செய்ய வேண்டும். எனவே இந்த நிகழ்ச்சியினை நீங்கள் நன்கு பயன்படுத்திக்கொண்டு மாணவிகளுக்கான ஒரு ஆரோக்கியமான சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கு நாம் உறுதி மொழி மேற்கொண்டால் அதுதான் இந்த தேசிய பெண் குழந்தைகள் தினத்தின் வெற்றியாக  இருக்கும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட மனநல மருத்துவர் மரு.விதுபிரபா, விருதுநகர் மருத்துவக்கல்லூரிமருத்துவமனைபேராசிரியர்(மகப்பேறு) மரு.சுதா, மாவட்ட தொற்று நோய் அலுவலர் மரு.நிஜவர்த்தன் ஆகியோர் விளக்கவுரையாற்றினார்கள்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் திருமதி ஷீலா சுந்தரி உட்பட மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஆசிரியைகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Jan 24, 2025

எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமியின் படைப்புலகம் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கு

விருதுநகர் மாவட்டம், செந்திக்குமார நாடார் கல்லூரியில்  (24.01.2025) செந்திக்குமார நாடார் கல்லூரி முதுகலைத் தமிழ்த்துறை, மதுரை நியூ செஞ்சுரி புத்தக நிலையம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்தும் எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமியின் படைப்புலகம் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

Jan 24, 2025

தேசிய பெண் குழந்தைகள் தினம்- 2025- ஐ முன்னிட்டு, தகவல் வளமையம் வாசகர் வட்டம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறந்த வாசகர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்

விருதுநகர் மாவட்டம், சிவகாசி எஸ்.எப்.ஆர்.பெண்கள் கல்லூரியில்(24.01.2025) தேசிய பெண் குழந்தைகள் தினம்- 2025- ஐ முன்னிட்டு, தகவல் வளமையம் வாசகர் வட்டம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறந்த வாசகர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

Jan 24, 2025

பொது விநியோகத்திட்டத்தின் மூலம் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் 25.01.2025 அன்று நடைபெறவுள்ளது.

பொது விநியோகத்திட்ட பயனாளிகளின் நலன்கருதி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பத்து வட்டங்களிலும் மின்னணு குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை / நகல் குடும்ப அட்டை முதலியவை தொடர்பான குறைதீர்வு முகாம் 2025- ஜனவரி 25 -ந் தேதி அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.எனவே, இக்குறைதீர்வு முகாமில் பொதுமக்கள் தங்கள் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தம் மற்றும் புகைப்படம் பதிவு செய்தல் தொடர்பான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அளித்து அளித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jan 24, 2025

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முக்கியமான நீர்நிலைகள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் வணிக வளாகங்களில் பெரும் நெகிழி சேகரிக்கும் இயக்கம்

தமிழக அரசின், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் அறிவுறுத்தலின்படி விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் இணைந்து மாபெரும் நெகிழி சேகரிக்கும் இயக்கத்தை தொடங்க உள்ளது. சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை பாதுகாக்கவும் நெகிழி மாசுபாட்டை கட்டுப்படுத்தவும் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.இத்திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில்  மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள், மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையாளர்கள்,  செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு சாரா அமைப்பு மற்றும் தேசிய பசுமைப்படை பங்கேற்ற ஆலோசனை கூட்டம் 21.01.2025 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.இதன் அடிப்படையில் 25.01.2025  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முக்கியமான நீர்நிலைகள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் வணிக வளாகங்களில் பெரும் நெகிழி சேகரிக்கும் இயக்கம் ,நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் முன்னிலையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.உள்ளாட்சி அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தேசிய பசுமைப்படை மற்றும் அரசு சாரா அமைப்புகள் ஆகிய அனைவரும் இதில் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.  மேலும், மாவட்டம் முழுவதும் சேகரிக்கப்பட்ட நெகிழிகழிவுகள் மறுசுழற்சி செய்வதற்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர்  முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jan 23, 2025

ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 13.02.2025 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது

விருதுநகர் மாவட்ட அளவிலான ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையிலும் சென்னை கூடுதல் ஓய்வூதிய இயக்குநர் அவர்கள் முன்னிலையிலும் எதிர்வரும் 13.02.2025 அன்று காலை 10.30 மணியளவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.விருதுநகர் மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள் / குடும்ப ஓய்வூதியர்கள் ஆகியோர் தங்களது ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வூதிய பலன்கள் பெறுவதில் பிரச்சினைகள் ஏதும் இருப்பின் அது தொடர்பான கோரிக்கை மனுக்களை 27.01.2025 முதல் 31.01.2025-ம் தேதிக்குள் விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு இரட்டைப் பிரதிகளில் அனுப்பி வைக்கலாம்.  விண்ணப்பங்களில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் மனு எனக் குறிப்பிட்டு அனுப்பப்பட வேண்டும்.விண்ணப்பத்தில் மனுதாரர் கோரிக்கை விவரத்துடன் ஓய்வூதியதாரர் பெயர், குடும்ப ஓய்வூதியம் என்றால் உறவுமுறை, பணியிலிருந்து ஓய்வு பெற்ற நாள், கடைசியாக பணிபுரிந்த அலுவலகம், ஓய்வூதிய கொடுவை எண் மற்றும் ஓய்வூதியம் பெற்று வரும் கருவூலம் ஆகிய விவரங்கள் குறிப்பிடப்பட வேண்டும்.  தற்போது ஓய்வூதியம் பெறுவதில் உள்ள குறைபாடுகள் குறித்து ஏற்கனவே சென்னையிலுள்ள மாநில கணக்காயருக்கு அனுப்பப்பட்டு அது தொடர்பான பதில் ஏதும் பெற்றிருப்பின் அதன் விவரங்களும் இணைக்கப்பட வேண்டும்.ஓய்வூதியர்களுக்கு உள்ள குறைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் விவாதித்து, ஓய்வூதியர்களின் குறைகளை தீர்க்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jan 23, 2025

Coffee With Collector” என்ற 146-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  (23.01.2025) சிவகாசி அரசன் கணேசன் கல்வியியல் கல்லூரியில் பயின்று வரும் 35 ஆசிரிய பயிற்சி மாணவியர்களுடன் "Coffee With Collector”  என்ற 146- வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A Sஅவர்கள் மாணவிகளுடன் கலந்துரையாடி, கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம்  குறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ / மாணவியர்களுடன் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 146 -வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.பள்ளி, கல்லூரி படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும். எனவே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் மூலம் வாழ்க்கைக்கான பல அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம். அனுபவங்களில் இருந்து கிடைக்கும் கல்விதான் சிறந்த கல்வியாகும்.தமிழ் ஆர்வத்தை வளர்த்தல், சிறுகதை படைத்தல், படைப்பிலங்கியங்கள், தமிழ் அறிஞர்கள் குறித்தும் கல்லூரி மாணவிகளிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துரையாடினார்.கல்லூரி படிப்பில் சேர்வதற்கு விருப்பத்தின் அடிப்படையில் மட்டும் முடிவு எடுத்தல் கூடாது. அனைவருக்கும் இலட்சியம் உண்டு. இலட்சியத்தை அடைவதற்கு தொடர்ந்து விடா முயற்சி செய்ய வேண்டும். நிலையான தொடர்ச்சியான சிறிய முயற்சிகள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது.மேலும், ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்த சந்திப்பில் கல்லூரியில் பயிலும் மாணவியர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு, இந்த நிகழ்ச்சி மூலம் எங்களுக்கு ஒரு புத்துணர்வு, ஊக்கம் அளிப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் போன்று தாங்களும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகி உள்ளதாகவும், எங்களுடைய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் தெளிவான விடை கொடுத்ததாகவும், நாங்களும் மாவட்ட ஆட்சியர் போன்று சாதித்து காட்டுவோம் என்றும், இந்த நிகழ்;ச்சி ஏற்பாடு செய்ததற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு மாணவர்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.   

Jan 23, 2025

ஆண்டாள் படைப்புலகம் என்ற பொருண்மையில் நடத்தப்பட்ட ஒரு நாள் தேசியக் கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் எ.கா.த.தர்மராஜா பெண்கள் கல்லூரியில் (23.01.2025) மாவட்ட நிர்வாகம், கரிசல் இலக்கிய கழகம் மற்றும் எ.கா.த.தர்மராஜா பெண்கள் கல்லூரி இணைந்து, ஆண்டாளின் படைப்புலகம் என்ற பொருண்மையில் நடத்தப்பட்ட ஒரு நாள் தேசியக் கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர்முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தொடங்கி வைத்து உரையாற்றினார்.கரிசல் இலக்கிய கழகத்தின் சார்பாக நமது மாநிலத்தில் இருக்கக்கூடிய பல்வேறு கல்லூரிகளில் ஒவ்வொரு தலைப்பிலும் தமிழ் கருத்தரங்குகளை நடத்தி  கொண்டிருக்கிறோம். இன்று ஆண்டாளின் படைப்புலகம் குறித்து நமது மண்ணில் 12 நூற்றாண்டுகளுக்கு முன்பாக அவதரித்து தன்னுடைய செழுமையான தமிழ் பாடல்களால் பக்தி இலக்கியத்திற்கும், தமிழ் பண்பாட்டிற்கும் மிகப்பெரிய கொடை அளித்த கோதை நாச்சியாரின் படைப்புகள் குறித்து இன்று தமிழ்த்துறை மாணவர்களும் மற்ற மாணவர்களும் அதை அறிந்து கொள்வதற்காக நடத்தக்கூடிய இந்த ஒரு நாள் கருத்தரங்கு நடைபெறுகிறது.ஆண்டாளின் படைப்புகளில் இருக்கக்கூடிய தமிழ் சுவையை அதில் இருக்கக்கூடிய காலம் கடந்து நிற்கக்கூடிய பல்வேறு பண்பாட்டு கூறுகளையும் புரிந்து கொள்கின்ற பொழுது அது உலகம் முழுமைக்கான படைப்பு என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.கவிஞன் என்பவன் காலக் கண்ணாடி. கண்ணதாசன் கவிஞன் பற்றி  ஒரு வரையறை  சொல்கின்ற பொழுது கருப்படு பொருளை உருப்பட வைப்போன் கவிஞன் யான் ஒரு காலக் கணிதம் என்று குறிப்பிடுகிறார். அவர்கள் வாழக்கூடிய காலத்தை கண்ணாடி போல் பிரதிபலிப்பது மட்டுமில்லாமல், சில நூற்றாண்டுகள் கழித்து உருவாக்கக்கூடிய சமுதாயத்திற்கும் பொருத்தம் உள்ளதாக  ஒரு கவிதை இருக்கும் என்றால் அதுதான் காலத்தை கடந்து கொண்டு நிற்கக்கூடிய கவிதைகள். அப்படி எழுதக்கூடியவர்கள் தான் காலக் கணிதமாக நிற்கிறார்கள்.அப்படிப்பட்ட  ஒரு காலக்கணிதமாக ஆண்டாளின்  படைப்புகள் இருக்கின்றன என்பதை அவற்றை முழுவதுமாக  வாசிக்கின்ற பொழுது புரிந்து கொள்ள முடிகிறது. ஆண்டாளின் படைப்புகளை நுணுக்கமாக பார்த்தால் அது இயற்iகையை சார்ந்தே தான் இருக்கும். மார்கழி  திங்கள் மதி நிறைந்த நன்னாளால் என்ற திருப்பாவையின் முதல் பாடலை எடுத்து கொண்டால் அது இயற்கையை சார்ந்ததாக இருக்கும். கதிரவனை போற்றக்கூடியதாக இருக்கும். இயற்கையை போற்றக்கூடியதாக இருக்கும்.  இன்னும் ஆண்டாளின் பாடல்களை பார்த்தால்  உயிர் பன்முகத் தன்மையை (டீஐழு- னுiஎநசளவைல) பற்றியதாக இருக்கும்.விருதுநகர் மாவட்டத்தில் காட்டுப்பன்றி, மயில்கள், மான்கள் இவை எல்லாம் விவசாயத்திற்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. நம்முடைய  இயற்கை சமநிலை சில பத்தாண்டுகளில் மாறி மாறி  பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். மயில்களின் உடைய இனப்பெருக்கத்திற்கு காரணமாக இருக்கக்கூடிய மயில்களினுடைய முட்டை நரிகளுக்கு உணவாக இருக்கிறது.மேலும், மான்களின் எண்ணிக்கை அதிகமாகும் போது, அதன் எண்ணிக்கைக்கு ஏற்ப புற்கள் கிடைக்காமல்  தன்னுடைய உணவிற்கு காட்டை விட்டு வெளியில் செல்லும் நிலைமை ஏற்படுகிறது. புலிகளின் எண்ணிக்கை குறைந்ததன் காரணமாக மான்களின் எண்ணிக்கை அதிகமாகிறது.எனவே, இயற்கை சமநிலை என்பது எல்லா காலக்கட்டத்திற்கும் பொருத்தமாக இருக்கிறது. ஆண்டாளின் உடைய திருப்பாவை முழுவதும் பார்த்தல் இயற்கை சமநிலையும், சின்ன சின்ன உயிரினங்களை பற்றியும் ஆண்டாள் தொடர்ச்சியாக பாடி கொண்டிருப்பார்.ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி என்ற பாடலில் ஐந்து உயிரினங்கள்  ஐந்து இயற்கை சமநிலையை பற்றி கூறப்பட்டிருக்கும். இயற்கையை போற்றக்கூடிய பாடல்களாக பக்தி இலக்கியங்கள்  அமைந்திருக்கிறது.ஆண்டாளின் பக்திசுவையுடைய பாடல்கள் அதாவது நாச்சியார் திருமொழி, திருப்பாவை அனைத்தையும் தாண்டி, பண்பாட்டு அளவில் பண்பாட்டு செல்வாக்கை செலுத்தக்கூடிய பாடலாக வாரணம் ஆயிரம் என்ற திருமணத்தில் பாடக்கூடிய பாடல்கள் என அனைத்து பாடல்களும் இன்றைக்கும் செல்வாக்கை செலுத்தக்கூடியதாக இருக்கிறது.ஆண்டாளின் படைப்புகளில் நாச்சியார் திருமொழி பாடல்களில் இறைவனுக்கும்  மனிதனுக்கும் இடையே இருக்கக்கூடிய  தொடர்பு மற்றும் முழு சரணாகதி தத்துவம் எப்படி இருக்கிறது என்பதை எல்லாம் இன்றைக்கும் பேசக்கூடிய செல்வாக்கை செலுத்தக்கூடிய பக்தி இலக்கிய பாடல்களாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இது பக்தி நெறியையும் தாண்டி தமிழ் மொழிக்கு எத்தகைய ஆற்றலோடு இருக்கிறது என்று பார்த்தால் புதிய சொற்களை தமிழுக்கு பக்தி இலக்கியத்தால் அறிமுகம் செய்தது. அதற்கு முன்பு எளிய சொற்கள் இருந்தாலும் இன்னும் மிக எளிய சொற்களாக  இன்றளவும் பயன்படக்கூடிய சொற்களை பக்தி இலக்கிய காலக்கட்டத்தால் தமிழுக்கு வழங்கியது.ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட பாடலை ஒரு சந்த நயத்தோடு பொருள் புரிந்து படித்தால் எளிய புதுக்கவிதை போல தான் இருக்கும். அப்படி எளிமையான பதங்களில் எளிமையான கருத்துக்களில் புதிய தத்துவங்களோடு இயற்கை சமநிலையோடு பாடிய ஆண்டாளின் படைப்புகள் குறித்து விருதுநகர் மாவட்டத்தில் கொண்டாடுவது மிகவும் சிறப்பு.ஏனென்றால் ஆண்டாள் கரிசல் இலக்கியத்தின் முன்னோடி கவிஞர். இயற்கையை போற்றிய கவிஞர், பக்தியை போற்றிய கவிஞர், பண்பாட்டை போற்றிய கவிஞர். அவர்களுடைய படைப்புகள் குறித்து இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்வதற்காக மாணவர்கள் தெரிந்து கொள்வதற்காக ஒரு நாள் கருத்தரங்கை கரிசல் இலக்கிய கழகம் நடத்துகிறது என்று   மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்தார்.இக்கருத்தரங்கில், கரிசல் இலக்கிய கழக செயலாளர் மரு.அறம், கல்லூரி முதல்வர் கல்லூரி பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jan 23, 2025

திருச்சுழி வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற திட்டத்தின் கீழ், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் பொதுமக்களிடம் சென்றடைவது குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கள ஆய்வு செய்தார்.

மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மக்களை தேடிச்சென்று குறைகளைக் கேட்டறியவும், பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே சென்று ஆய்வு செய்திட "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதன்படி, விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற திட்டம் மூலம் 22.01.2025 நேற்று காலை 9 மணி முதல் 23.01.2025 இன்று காலை 9 மணி வரை நடைபெற்றது. இந்த முகாமின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் அரசின் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும் கள ஆய்வு மேற்கொண்டனர்.அதன்படி இரண்டாம் நாளான இன்று திருச்சுழி வட்டார பகுதிகளில் இன்று அதிகாலை முதல்  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் சேதுபதி தொடக்கப்பள்ளியில்  மாணவர்களுக்கு வழங்கப்படும் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மூலம் வழங்கப்படும் உணவின் தரம், பயன்பெறும் மாணவர்கள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்து மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.திருச்சுழி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து, நிலையத்தின் செயல்பாடுகள், ஊர்தி மற்றும் உபகரணங்களின் பராமரிப்பு, தீயணைப்பு வீரர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள், நிலையத்தில் உள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் பொம்மைக்கோட்டை ஊராட்சியில் செயல்பட்டு வரும்  மீன் வளர்ப்பு பண்ணை கூட்டத்தினை பார்வையிட்டு  அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்.திருச்சுழியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஒத்தக்கடை வேடநத்தம் சாலை முதல் இறைசின்னம்பட்டி வரை சாலை அமைக்கப்பட்டுள்ள பணியினை பார்வையிட்டு ஆய்வு  செய்தார்.பின்னர், திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், மறவர் பெருங்குடி ஊராட்சியில், ஊரக வீடுகள் சீரமைத்தல் திட்டத்தின் கீழ் ரூ.32,000ஃ- மதிப்பில் சீரமைக்கப்பட்டுள்ள வீடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்ற பயனாளிகளிடம் கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.பின்னர், திருச்சுழி ஊராட்சியில், ஆலடிப்பட்டி முதல் கல்லுமடை வரை செல்லும் புதிதாக  அமைக்கப்பட்ட தார் சாலையின் தரத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.சுத்தமடம் ஊராட்சியில் பிரதம மந்திரி குடியிருப்பு வீடுகள் திட்டத்தின் கீழ், வீடு கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.ராஜகோபாலபுரம் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த நிகழ்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

1 2 ... 94 95 96 97 98 99 100 101 102 103

AD's



More News