திருச்சுழி வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற திட்டத்தின் கீழ், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் பொதுமக்களிடம் சென்றடைவது குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கள ஆய்வு செய்தார்.
மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மக்களை தேடிச்சென்று குறைகளைக் கேட்டறியவும், பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே சென்று ஆய்வு செய்திட "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற திட்டம் மூலம் 22.01.2025 நேற்று காலை 9 மணி முதல் 23.01.2025 இன்று காலை 9 மணி வரை நடைபெற்றது. இந்த முகாமின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் அரசின் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும் கள ஆய்வு மேற்கொண்டனர்.அதன்படி இரண்டாம் நாளான இன்று திருச்சுழி வட்டார பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் சேதுபதி தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மூலம் வழங்கப்படும் உணவின் தரம், பயன்பெறும் மாணவர்கள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்து மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.
திருச்சுழி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து, நிலையத்தின் செயல்பாடுகள், ஊர்தி மற்றும் உபகரணங்களின் பராமரிப்பு, தீயணைப்பு வீரர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள், நிலையத்தில் உள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் பொம்மைக்கோட்டை ஊராட்சியில் செயல்பட்டு வரும் மீன் வளர்ப்பு பண்ணை கூட்டத்தினை பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்.திருச்சுழியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஒத்தக்கடை வேடநத்தம் சாலை முதல் இறைசின்னம்பட்டி வரை சாலை அமைக்கப்பட்டுள்ள பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், மறவர் பெருங்குடி ஊராட்சியில், ஊரக வீடுகள் சீரமைத்தல் திட்டத்தின் கீழ் ரூ.32,000ஃ- மதிப்பில் சீரமைக்கப்பட்டுள்ள வீடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்ற பயனாளிகளிடம் கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.பின்னர், திருச்சுழி ஊராட்சியில், ஆலடிப்பட்டி முதல் கல்லுமடை வரை செல்லும் புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலையின் தரத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சுத்தமடம் ஊராட்சியில் பிரதம மந்திரி குடியிருப்பு வீடுகள் திட்டத்தின் கீழ், வீடு கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.ராஜகோபாலபுரம் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த நிகழ்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply