தமிழ்நாடு அரசு, கால்நடை பராமரிப்புத்துறை மூலம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கால்நடைகளுக்கு இலவசமாக காலத்திற்கு ஏற்றவாறு முகாம்கள் நடத்தி தடுப்பூசிப் பணியினை மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் கோடைகாலத்திற்கு முன்னர் பிப்ரவரி மாத்தில் வெள்ளைக்கழிச்சல் தடுப்பூசி முகாம்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. நமது மாவட்டத்தில் தற்போது கோழிகளை தாக்கும் வெள்ளைக் கழிச்சல் நோய்க்கான தடுப்பூசி முகாம்களை 01.02.2025 முதல் 14.02.2025 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கோழிகள், பண்ணைக்கோழிகள், வாத்துகள் மற்றும் வான்கோழிகளை வைரஸ் கிருமியால் உண்டாக்கப்படும் வெள்ளைக் கழிச்சல் நோய் தாக்குகிறது. இந்நோயின் முக்கிய அறிகுறிகளாவது, கோழிகள் தீவனம் உண்ணாமை, சோர்ந்து போய் இருத்தல், வெள்ளை நிறத்தில் வயிற்றுப்போக்கு ஏற்படுதல், நரம்பு தளர்ச்சி ஏற்பட்டு கோழிகள் நடக்க இயலாமல் போகும் ஆகியவை ஆகும். இந்நோய் ஏற்படின் கோழிகள் வளர்ப்போருக்கு அதிகளவில் பொருளாதார இழப்பு நேரிடும். மேலும் நோய் கண்ட கோழிகளை சிகிச்சை மேற்கொள்வது கடினமானது ஆகும். எனவே கோழிகள் வளர்ப்போர், கோழிப்பண்ணையாளர்கள் எட்டு வார வயதிற்கு மேல் உள்ள கோழிகள் மற்றும் குஞ்சுகளுக்கு இத்தடுப்பூசியினை போட்டுக்கொள்ளலாம். வருடத்திற்கு இருமுறை தடுப்பூசி செலுத்தி வந்தால் இந்நோயினை முற்றிலும் அகற்றி விடலாம். விருதுநகர் மாவட்டத்திற்கு இப்பணிக்கென 1.68 இலட்சம் டோஸ் மருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்திலுள்ள அனைத்து 115 கால்நடை மருத்துவ நிலையங்களிலும் மற்றும் துறை சார்பாக நடத்தப்படும் சிறப்பு முகாம்களிலும் தடுப்பூசிப்பணி மேற்கொள்ளப்பட இருக்கிறது. தகுந்த முன்னறிவிப்போடு ஊராட்சி மன்றங்களின் ஒத்துழைப்போடு இந்த முகாமினை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சிறப்பு இலவச கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்களில் பங்கேற்று தங்கள் கோழிகளுக்கு தடுப்பூசியினை செலுத்திக்கொள்ளுமாறு கால்நடை கால்நடை வளர்ப்போர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S.,அவர்கள் கேட்டுக்கொள்கிறார்.
விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில், (31.01.2025) தமிழ்நாடு முழுவதிலிருந்தும் தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் பங்குபெறும் மாநில அளவிலான 2- ஆவது திருக்குறள் மாணவர் மாநாடு - 2025- ஐ மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தொடங்கி வைத்தார்.இந்த மாநாடு துவக்க விழா நிகழ்ச்சியில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம்தென்னரசு அவர்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் ஆகியோர் காணொளி காட்சி வாயிலாக சிறப்புறையாற்றினார்கள்.அறநெறிகளை பற்றிய உலகின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாக கருதப்படும் திருக்குறளின் தொன்மை மற்றும் மாண்பினை பறைசாற்றும் விதமாக "தீராக் காதல் திருக்குறள்" திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கிடையே திருக்குறளின் அடிப்படையில் வாழ்வியல் கோட்பாடுகளை அடித்தளமாக அமைத்து, அவர்களின் எதிர்காலத்தையும், சமுதாயத்தையும் செழுமைப்படுத்தும் முயற்சியாக, தமிழ்த் திறனறிவுத் தேர்வு-2024-ல் வெற்றி பெற்ற தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களையும் அழைத்து 31.01.2025 மற்றும் 01.02.2025 ஆகிய தேதிகளில் “திருக்குறள் மாணவர் மாநாடு 2025" என்ற நிகழ்வு, மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படுகிறது.திருக்குறள் என்பது இலக்கிய நூல் மட்டுமல்ல. அது உலகப் பொதுமறை நூலாகும் என்பதை எடுத்துக்காட்டக் கூடிய வகையில் ஏராளமான நிகழ்வுகள், இலக்கிய விழாக்கள் நடந்திருந்தாலும், தமிழ்நாடு அரசினுடைய சார்பில் தீராக் காதல் திருக்குறள் என்கின்ற தலைப்பில் ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டு, அத்திட்டத்தின் உடைய ஒரு பகுதியாக திருக்குறள் மாணவர் மாநாடு நடைபெறுவது என்பது சால சிறந்த ஒன்று.உலக பொதுமறை நூலக இருக்கக்கூடிய திருக்குறளுக்கு புகழ் சேர்த்தவர் டாக்டர் கலைஞர் அவர்கள். வள்ளுவர் கோட்டமாக இருந்தாலும், கலைஞரின் உடைய உரைகளாக இருந்தாலும், குறளோவியமாக இருந்தாலும், அவற்றுக்கெல்லாம் சாலச் சிறந்ததாக அமைந்திருக்கக்கூடிய, தென்கோடி முனையில் குமரியில் அமைந்திருக்கக்கூடிய வானளாவிய வள்ளுவர் சிலையாக இருந்தாலும், இவையெல்லாம் கலைஞர் அவர்கள் திருக்குறளையும், திருவள்ளுவரையும் போற்றி நமக்கு வழங்கிய கொடைகள்.வருங்காலத்தில் உயர்கல்விக்கு செல்லும் பொழுது புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் ஆகியவைகள் மூலம் உங்களில் பலர் நிச்சயம் பயனடைவீர்கள். அதற்கு முன்னோட்டமாகவும், அதே நேரம் தமிழ் மீதான உங்களுடைய ஆர்வத்திற்கு ஊக்கமளிக்க வேண்டும் என்று தான், ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனறித்தேர்வு நடத்தி அதில் 1500 மாணவர்களை தேர்வு செய்து தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகையாக மாதந்தோறும் ரூ.1500/- வழங்கப்படுகிறது.அதற்குரிய முன்னெடுப்புக்காக தீராக் காதல் திருக்குறள் என்ற திட்டத்தைதமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு உருவாக்கிய பெருமை இதே மாவட்டத்தைச் சேர்ந்த மைந்தன் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்களை சேரும். தந்தை பெரியார் 1925-ல் சுயமரியாதை இயக்கம் தொடங்கிய பின்புதான் திருக்குறள் பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களிடம் தொடங்குகிறது. அதற்கு முன்பு திருக்குறளுக்கு எழுத்தப்பட்டியிருந்த உரைகளை குறிப்பிட்டு, விமர்சிக்க தொடங்கிய பெரியார் அவை திருக்குறளின் மூலக்கருத்துக்கு எதிராக இருப்பதை எடுத்துச் சொன்னார்.1999-ம் ஆண்டு இறுதியில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு உலகத்திற்கு பொதுமறையை தந்த அய்யன் வள்ளுவர் சிலையை திறந்து வைத்து உலக தமிழர்களை உற்சாகப்படுத்தினார் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள். அச்சிலைக்கு மாண்புமிகு தமிழ்நாட்டின் உடைய முதலமைச்சர் அவர்கள் 25-ஆம் ஆண்டு விழாவை எடுத்து அய்யன் வள்ளுவரையும், திருக்குறளையும், தமிழகத்தையும் பெருமைப்படுத்தினார்.இப்போட்டியில் உங்களுக்கு கிடைத்த வெற்றி என்பது உங்களுக்கான வெற்றி அல்ல. தமிழுக்கான வெற்றி. தமிழ் தொடர்ந்து வெல்லட்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியினுடைய 90 விழுக்காடு, நீங்கள் பெற்றுக் கொள்வதற்கும், கற்றுக் கொள்வதற்கும் நிகழ்ச்சிகள், உங்கள் பங்கேற்பு, ஆர்வம் ஆகியவற்றின் அடிப்படையில் தான் இருக்கிறது.தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் மூலமாக திருக்குறளையும், தமிழ் இலக்கியத்தையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.தமிழ் இலக்கியத்தில் இருக்கக்கூடிய பெருமைகளை நன்கு தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் அடுத்த 50, 60 ஆண்டுகளுக்கு உங்களுடைய வாழ்க்கையில் எப்போதெல்லாம் வாய்ப்புகள் கிடைக்கின்றதோ, அப்போதெல்லாம் மொழியை, இலக்கியத்தை, தமிழில் மொழி தரக்கூடிய வழுமியங்களை, திருக்குறள் தரக்கூடிய உயர்ந்த செம்மார்ந்த அனுபவங்களை, நீங்கள் கைக் கொண்டு உயர்வதற்கும், நீங்கள் வழி காட்டுவதற்கும் இந்த நிகழ்ச்சி உறுதுணையாக அமையும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி அனிதா உட்பட அரசு அலுவலர்கள், அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ்த் திறனறித் தேர்வு- 2024- ல் வெற்றி பெற்ற மாணவர்களில், சிறந்த மற்றும் ஆர்வமுள்ள சுமார் 1000- க்கு மேற்பட்ட மாணவர்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தமிழ் அறிஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (30.01.2025) வருவாய்த்துறை அலுவலர்களுடனான டிசம்பர் - 2024 மாதத்திற்கான பணித்திறன் ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில், சிறப்பாக பணியாற்றிய சிறந்த வருவாய் வட்டாட்சியர்களில், இராஜபாளையம் வருவாய் வட்டாட்சியர் திரு.இரா.இராமசுப்பிரமணியன் அவர்களுக்கு முதல் பரிசும், சாத்தூர் வருவாய் வட்டாட்சியர் திரு.தி.ராமநாதன் அவர்களுக்கு இரண்டாம் பரிசும், வெம்பக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் திருமதி ந.கலைவாணி,சிறப்பாக பணியாற்றிய சிறந்த தனி வட்டாட்சியர் (ச.பா.தி) களில் இராஜபாளையம் தனி வட்டாட்சியர் (ச.பா.தி) திரு.பா.பாலகிருஷ்ணன் அவர்களுக்கு முதல் பரிசும், சாத்தூர் தனி வட்டாட்சியர் (ச.பா.தி) திருமதி சீ.உமா அவர்களுக்கு இரண்டாம் பரிசும், வெம்பக்கோட்டை தனி வட்டாட்சியர் (ச.பா.தி) திருமதி வீ.கிருஷ்ணவேணி அவர்களுக்கு மூன்றாம் பரிசும்,சிறப்பாக பணியாற்றிய தனி வட்டாட்சியர் (கு.பொ.வ)ஃ வட்ட வழங்கல் அலுவலர்களில் இராஜபாளையம் தனிவட்டாட்சியர் (கு.பொ.வ.) திரு.மு.வடிவேல் அவர்களுக்கு முதல் பரிசும், அருப்புக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலர் திரு.தெ.அறிவழகன் அவர்களுக்கு இரண்டாம் பரிசும், விருதுநகர் வட்ட வழங்கல் அலுவலர் திரு.செ.பாஸ்கரன் அவர்களுக்கு மூன்றாம் பரிசும்,முழுப்புலம் பட்டா மாறுதல் மனுக்களை அதிகளவில் ஏற்பளிப்பு செய்த மண்டல துணை வட்டாட்சியர்களில் திருச்சுழி மண்டல துணை வட்டாட்சியர் திரு.சி.சிங்கராஜ் அவர்களுக்கு முதல் பரிசும், அருப்புக்கோட்டை மண்டல துணை வட்டாட்சியர்-1 திரு.ஆ.பிரின்ஸ் ரஞ்சித்சிங் அவர்களுக்கும், அருப்புக்கோட்டை மண்டல துணை வட்டாட்சியர்-2 திருமதி சி.பானுமதி அவர்களுக்கும் இரண்டாம் பரிசும், வெம்பக்கோட்டை மண்டல துணை வட்டாட்சியர் திரு.தே.சுப்பிரமணியன் அவர்களுக்கு மூன்றாம் பரிசும், உட்பிரிவு பட்டா மாறுதல் மனுக்களை அதிகளவில் ஏற்பளிப்பு செய்த வட்டத் துணை ஆய்வாளர்களில் திருச்சுழி வட்டத்துணை ஆய்வாளர் திரு.பாலச்சந்திரன் அவர்களுக்கு முதல் பரிசும், வத்திராயிருப்பு வட்டத்துணை ஆய்வாளர் திருமதி.பெ.செல்வி அவர்களுக்கு இரண்டாம் பரிசும், சாத்தூர் வட்டத்துணை ஆய்வாளர் திரு.மாரிமுத்து அவர்களுக்கு மூன்றாம் பரிசும்,சிறந்த தனி வருவாய் ஆய்வாளர்களில் (கு.பொ.வ.) அருப்புக்கோட்டை வட்டம் தனி வருவாய் ஆய்வாளர் (கு.பொ.வ.) திரு.சு.சசிகுமார் அவர்களுக்கு முதல் பரிசும், சிவகாசி வட்டம் தனி வருவாய் ஆய்வாளர் (கு.பொ.வ.) திரு.மா.கோட்டைராஜ் அவர்களுக்கு இரண்டாம் பரிசும், இராஜபாளையம் வட்டம் தனி வருவாய் ஆய்வாளர் (கு.பொ.வ.) திரு.கே.பாலமணிகண்டன் அவர்களுக்கு மூன்றாம் பரிசினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.முன்னதாக, சிவகாசியில் நடைபெற்ற “சுவையுடன் சிவகாசி” உணவுத்திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றதை பாராட்டி சிவகாசி சார் ஆட்சியர் திருமதி நா.ப்ரியா ரவிச்சந்திரன் அவர்களுக்கும், விருதுநகரில் நடைபெற்ற “விருந்துடன் விருதுநகர் கார்னிவல் -2025” உணவுத்திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றதை பாராட்டி சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.மு.சிவக்குமார் அவர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.இராஜேந்திரன், சிவகாசி சார் ஆட்சியர் திருமதி நா.ப்ரியா ரவிச்சந்திரன், I A S, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொ) மரு.பிர்தௌஸ் பாத்திமா, வருவாய் கோட்டாட்சியர்கள், வருவாய் வட்டாட்சியர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சட்டம் ஒழுங்கு, சாலை பாதுகாப்பு, போதைபொருள் ஒழிப்பு மற்றும் நீர்நிலைகள் புறம்போக்கு ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் I A S, அவர்கள் தலைமையில் (30.01.2025) நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில், தமிழ்நாடு முழுவதிலிருந்தும் தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் பங்குபெறும் மாநில அளவிலான 2- ஆவது திருக்குறள் மாணவர் மாநாடு - 2025- ஐ வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம்தென்னரசு அவர்கள் மற்றும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் ஆகியோர் தொடங்கி வைக்கவுள்ளனர்.அறநெறிகளை பற்றிய உலகின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாக கருதப்படும் திருக்குறளின்; தொன்மை மற்றும் மாண்பினை பறைசாற்றும் விதமாக "தீராக் காதல் திருக்குறள்" திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கிடையே திருக்குறளின் அடிப்படையில் வாழ்வியல் கோட்பாடுகளை அடித்தளமாக அமைத்து, அவர்களின் எதிர்காலத்தையும், சமுதாயத்தையும் செழுமைப்படுத்தும் முயற்சியாக, தமிழ்த் திறனறிவுத் தேர்வு-2024-ல் வெற்றி பெற்ற தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களையும் அழைத்து 31.01.2025 மற்றும் 01.02.2025 ஆகிய தேதிகளில் “திருக்குறள் மாணவர் மாநாடு 2025" என்ற நிகழ்வு, மாவட்ட நிர்வாகத்தால், விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் நடத்தப்படவுள்ளது.இம்மாநாட்டில் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ்த் திறனறித் தேர்வு- 2024- ல் வெற்றி பெற்ற மாணவர்களில், சிறந்த மற்றும் ஆர்வமுள்ள மாணாக்கர்கள் தேர்வு செய்து சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இம்மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.மேலும், இம்மாநாட்டில் நடைபெற உள்ள சிறப்பு நிகழ்ச்சிகளில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக இணை இயக்குநர் டாக்டர் சங்கர சரவணன் அவர்கள் குறள் வினாடி வினா போட்டியினையும், திரைப்பட இசையமைப்பாளர் திரு.ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் சங்கத்தமிழும் திருக்குறளும் என்ற தலைப்பில் தமிழ் ஓசை இசை நிகழ்ச்சியினையும் மற்றும் ஊடகவியலாளர் திரு.கார்த்திகைச் செல்வன் அவர்கள் திருக்குறள் விவாத மேடை நிகழ்ச்சியினையும் நடத்த உள்ளனர். மேலும், இந்நிகழ்ச்சியில், பேராசிரியர் முனைவர் பர்வீன் சுல்தானா அவர்கள் புதியதோர் உலகம் செய்வோம் என்ற தலைப்பிலும், பேச்சாளர் பாரதி கிருஷ்ணகுமார் அவர்கள் சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா என்ற தலைப்பிலும், கவிஞர் நெல்லை ஜெயந்தா அவர்கள் அழகே தமிழே என்ற தலைப்பிலும், திரு.ஆர்.விஜயாலயன் அவர்கள் உயர்கல்விக்கு வழிகாட்டல் என்ற தலைப்பிலும், பிக்பாஸ் சீசன் 8 வெற்றியாளர் திரு.முத்துக்குமரன் அவர்கள் தமிழும் நானும் என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்ற உள்ளனர்.மாணவர்களுக்கு மொழியாற்றலும், சமூக உணர்வும் மேம்படுத்த சிறப்புப் பயிற்சி வகுப்புகள், பேச்சுப்போட்டி, சிறுகதை எழுதுதல் போட்டி, கவிதை எழுதுதல் போட்டி உள்ளிட்ட தனிநபர்களுக்கான போட்டிகளும், நடனம், நாடகம், பாவனை நாடகம், வினாடிவினா, திருக்குறள் விவாத மேடை உள்ளிட்ட குழுப் போட்டிகளும் நடைபெறவுள்ளது. இந்த போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளது. மேலும், மதுரை மேஸ்ட்ரோ சைமன் இன்னிசைக் குழுவினரின் தமிழ்-திரையிசை பாடல்கள் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற, சட்டமன்ற, உறுப்பினர்கள், உள்ளாட்சிப்பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.எனவே, இந்த மாநாட்டில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள், தமிழ் அறிஞர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம், தேசபந்து மைதானத்தில் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்ற தொழுநோய் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வுப் பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் (30.01.2024) கொடியசைத்து துவக்கி வைத்தார்.முன்னதாக, அண்ணல் காந்தியடிகள் நினைவு தினத்தை முன்னிட்டு, அன்னாரது படத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.மேலும், தொழுநோய் விழிப்புணர்வு உறுதி மொழியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.மகாத்மா காந்தி அவர்கள் தொழுநோயாளிகளுக்கு ஆற்றிய சேவையைப் போற்றும் வகையில் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30-ம் தேதி தேசிய தொழுநோய் ஒழிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்தத் தொழுநோயானது காற்றின் மூலம் மைக்ரோ பாக்டீரியம் லெப்ரே என்ற பாக்டீரியா கிருமியினால் பரவுகிறது. இந்த நோய் தொற்று ஏற்பட்டால் முதலில் தேமல், படை போன்ற தோல் நோய்கள் ஏற்படும். சிவந்த அல்லது வெளிறிய ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட தேமல்கள் ஏற்பட்ட இடங்களில் உணர்ச்சியற்ற நிலை ஏற்படும். எண்ணெய் தடவியது போன்று மினு மினுப்பு,தோல், முகம் மற்றும் கண் இமைகளில் முடியில்லாது இருத்தல், காது, காதுக்கு பின்னாலும் சிறு,சிறு முடிச்சு (nodules) போன்ற கட்டிகள் இருத்தல். கை,கால்களில் சதை குறைந்து வறண்ட உணர்ச்சியற்ற நிலை ஆகியன தொழுநோயின் ஆரம்ப அறிகுறிகள் மற்றும் இது தொற்றுநோய் அல்ல.இந்த நோயினால் பாதிக்கப்பட்டு மேற்கண்ட அறிகுறிகள் உடல்பகுதிகளில் தென்பட்டால் உடனே அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது அரசு மருத்துவமனைக்குச் சென்று உரிய சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும். உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரையின்படி (WHO – World Health Organization) மல்டி டிரக் தெரபி எனப்படும் சிகிச்சை தற்போது தொழுநோயாளிகளுக்கு அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சைகள் மூலம் தொழுநோய் முற்றிலும் குணப்படுத்தப்படுகிறது.மேலும், பொதுமக்களின் முக்கிய நோக்கம் என்பது இந்த தொழுநோய் எப்படி வருகிறது என்பது பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். தொழுநோய் குறித்து அறிகுறிகள் எதும் தென்பட்டால், அதனை அலட்சியமாக எடுத்துக்கொள்ளலாமல் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது அரசு மருத்துவமனைக்குச் சென்று உரிய சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும். நமது மாவட்டத்தில் தொழுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் குறைவு, இருந்தாலும் அதனை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதும், பொதுமக்கள் மத்தியில் தொழுநோய் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதும், இந்நோயால் பாதிப்புக்குள்ளாகி அவதிப்படுவோர் இடையே ஒற்றுமை உணர்வை ஏற்படுத்துவதும், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர் சமுதாயத்தில் மரியாதையுடன் வாழக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்துவதும் இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும் என தெரிவித்தார்.முன்னதாக, தொழுநோயால் பாதிக்கப்பட்டு முற்றிலும் நோயிலிருந்து குணமடைந்தவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவப்படுத்தினார்.மேலும், மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் சுமார் 200 பேர் கலந்துகொண்ட தொழுநோய் விழிப்புணர்வுப் பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். தேசபந்து மைதானத்தில் தொடங்கிய இந்த விழிப்புணர்வுப் பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி, நகராட்சி அலுவலகம் வரை சென்று நிறைவடைந்தது.இந்நிகழ்ச்சியில் மருத்துவத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி, இராஜபாளையம், வத்திராயிருப்பு, விருதுநகர், காரியாபட்டி ஆகிய ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள் (29.01.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசு திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்டங்களின் பயன்கள், கருத்துக்கள் குறித்து பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.அதன்படி, சிவகாசி ஊராட்சி ஒன்றியம், ஆனைக்குட்டம் ஊராட்சி, மீனாட்சிபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியினை பார்வையிட்டு, பள்ளியில் அடிப்படை வசதிகள், கட்டமைப்புகள், பள்ளி குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு வரும் முறைகள், குழந்தைகளின் வாசிப்புத்திறன், எழுத்தறிவு குறித்து ஆசிரியர் மற்றும் மாணவர்களிடம் கேட்டறிந்தார்.ஆனைக்குட்டம் ஊராட்சியில், 15-வது நிதிக்குழு மானியம் திட்டத்தின் கீழ், ரூ.1,80,000ஃ- மதிப்பில் அங்கன்வாடி மையம் சீரமைக்கப்பட்டு வரும் பணியினையும், மேலும், ஆனைக்குட்டம் ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளியினை நேரில் சென்று பார்வையிட்டு, அடிப்படை வசதிகள் குறித்தும், பள்ளி மாணவர்களிடம் கலந்துரையாடி குழந்தைகளின் வாசிப்புத்திறன், எழுத்தறிவு குறித்தும், மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்தும்,ஆனைக்குட்டம் ஊராட்சியில், மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டி முடிக்கப்பட்டுள்ள பணியினையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம், முகவூர் நாடார் தெருவில் அமைந்துள்ள அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளதை பார்வையிட்டு, அங்கு பயிலும் குழந்தைகளின் எண்ணிக்கை, வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவுகள், வயதுகேற்ற எடை, உயரம் உள்ளிட்டவை குறித்தும்,இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம், முகவூர் ஊராட்சியில் உள்ள அரசு துணை சுகாதார நிலையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.முகவூர் ஊராட்சியில், ஊராட்சி ஒன்றிய பொது நிதி - 2020-2021 -ன் கீழ், பூக்குழி மைதானத்தில் ஆண்கள் சுகாதார வளாகம் பராமரிப்பு பணியினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும், முகவூர் ஊராட்சி தெற்குத்தெரு இந்து நாடார் ஆரம்பப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மூலம் வழங்கப்படும் உணவின் தரம், பயன்பெறும் மாணவர்கள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்து மாணவர்களுடன் உணவருந்தினார்.முகவூர் ஊராட்சி பாரதி நகரில் கட்டப்பட்டுள்ள பழைய சமுதாயக்கூடத்தினையும் மற்றும் முகவூர் ஊராட்சியில், தூய்மைப் பணியாளர்கள் மூலம் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று திடக்கழிவுகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என தரம் பிரித்து குப்பைகளை சேகரித்து வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம், தம்பிபட்டி ஊராட்சியில், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு அலுவலகங்களை நேரில் சென்று ஆய்வு செய்து, கட்டிடத்தின் தன்மை குறித்து கேட்டறிந்தார்.மேலும், தம்பிபட்டி ஊராட்சியில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளதை பார்வையிட்டு, அங்கு பயிலும் குழந்தைகளின் எண்ணிக்கை, வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவுகள், வயதுகேற்ற எடை, உயரம் உள்ளிட்டவை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.பின்னர், தம்பிபட்டி ஊராட்சியில், ஊர்ப்புற நூலகத்தினை பார்வையிட்டு, நூலகத்திற்கு வருகை தரும் வாசகர்களின் விபரம், நூல்களின் இருப்பு, அடிப்படை வசதிகள் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்.மேலும், தம்பிப்பட்டி ஊராட்சியில் உள்ள நியாயவிலைக் கடையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பொருட்களின் இருப்பு, தரம், பயன்பெறும் குடும்ப அட்டைத்தாரர்கள், தராசு உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார்.தம்பிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியினை நேரில் சென்று பார்வையிட்டு, அங்கு அடிப்படை வசதிகள் குறித்தும் மற்றும் தம்பிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இ-சேவை மையக் கட்டிடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்து அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.பின்னர், விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், வடமலைக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், மாணவர்களுக்கு வழங்கப்படும் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மூலம் வழங்கப்படும் உணவின் தரம், பயன்பெறும் மாணவர்கள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்து மாணவர்களுடன் உணவருந்தினார்.விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், வடமலைக்குறிச்சியில் உள்ள அரசு துணை சுகாதார நிலையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், வடமலைக்குறிச்சியில் உள்ள மாவட்ட கிளை நூலகத்தினை பார்வையிட்டு, நூலகத்திற்கு வருகை தரும் வாசகர்களின் விபரம், நூல்களின் இருப்பு, அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்.பின்னர், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், கடம்பன்குளம் ஊராட்சியில், மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்;டிக்கடையை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.மேலும், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், மாங்குளம் கிராமத்தில் எஸ்.எஸ்.ஆர்.புளு மெட்டலில் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும், குவாரியின் உரிமம், குவாரி இயங்கி வரும் முறை, தயாரிக்கப்படும் பொருட்கள் உள்ளிட்டவை குறித்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்;.மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென தொடர்புடைய அரசு அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (29.01.2025) விருதுநகர் மாவட்டம் ஒரு கண்ணோட்டம் - ஒரு வரலாற்றுப் பயணம் (1800- 1950) GLIMPSES OF VIRUDHUNAGAR DISTRICT -A Historical Journey (1800 -1950)புத்தகத்தினைமாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் முன்னிலையில் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்திரு.தங்கம் தென்னரசு அவர்கள்வெளியிட்டார்.நமக்கு எதிரே இருக்ககூடிய சவால்கள் குறித்த எதிர்காலம் இருக்கிறது. நாம் நீந்தக்கூடிய நிகழ்காலம் இருக்கிறது. வரலாறு என்பது முடிந்து போன ஒரு காலம். அதனை நாம் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சொன்னால், வரலாற்றை மறந்த ஒருவன் சுய நினைவை இழந்தவனாக கருதப்படுபவனாவான் என ஒரு வரலாற்று பேராசிரியர் குறிப்பிடுகிறார்.கடந்த காலத்தில் நாம் என்னவாக இருந்தோம் என்பதை அறிந்தால் தான் எதிர்காலத்தில் நாம் என்னவாக இருக்கபோகிறோம் என்பதை தீர்மானிக்க முடியும். நம்முடைய முன்னோர்களுக்கு எதெல்லாம் தெரிந்திருக்கிறது. இதை நாம் அறிந்திருக்கின்றோம். என்னுடைய மொழி என்னுடைய நிலம் தொன்மை வாய்ந்தது என்பதை எல்லாம் நாம் அறியும்போது, இவையெல்லாம் எதிர்காலத்தில் சாதிப்பதற்கு தூண்டுகின்ற வகையில் தான் நாம் ஒவ்வொருவரும் வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற முனைப்போடு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு கடந்த நான்கு வருடங்களிலே பண்பாட்டு தளத்தில் தொடர்ச்சியாக பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.மொழியின் தொன்மை குறித்து கீழடி நமக்கு எடுத்துச் சொன்னது. இந்த குடியின் பெருமை குறித்து அதிரம்பாக்கம், பட்டறைப் பெரும்புதூர் நமக்கு நிறைய சொன்னது. இந்த தமிழ் பெருங்குடி மக்கள் பெற்று இருந்த நாகரிகம், அவர்கள் பெற்ற தொழில்நுட்ப அறிவு என்பதற்கு மயிலாடும்பாறையில் கிடைக்கக்கூடிய சான்றுகளை தாண்டி சிவகளையினுடைய முடிவுகள் இந்திய துணை கண்டத்தில் இரும்பினுடைய பயன்பாட்டை இரும்பின் தொழில்நுட்பத்தை அறிந்து அந்த தொழில்நுட்பத்தை உணர்ந்து படைக்கலன்களையோ அல்லது உழவு தொழில்களுக்கான கருவிகளையோ உருவாக்கிய ஒரு சமுதாயம் தமிழ் சமுதாயமாகத்தான் இருந்தது. அது 5000 வருடத்திற்கு முன்பாகவே நாம் அதைப் பெற்றிருக்கின்றோம்.நம் முன்னேர்கள் இதனை எல்லாம் அறிந்திருக்கிறார்கள். என்னுடைய மொழி மற்றும் நிலம் இத்தகைய தொன்மை வாய்ந்ததென நாம் அறியும் போது இவையெல்லாம் நமது எதிர்காலத்தில் சாத்திக்க தூண்டுகிறது.வெம்பக்கோட்டை அகழ்வாராய்ச்சியில் பார்க்கின்ற பொழுது தான் எத்தகைய அளவிற்கு அங்கு தொழில் வளர்ச்சி அடைந்த இடமாக வெம்பக்கோட்டை விஜயகரிசல் குளம் இருக்கிறது.இதற்கு முன்னே இருக்கக்கூடிய மன்னர்கள் சாசனங்கள், சங்க இலக்கியங்கள் தமிழ் இலக்கிய வளங்கள் மூலமாக அறிந்து கொள்ளக்கூடிய செய்திகள் இருந்தாலும் கூட அவற்றை எல்லாம் எழுதி வைக்கககூடிய நிலைமை பல அரசர்களுக்கு இல்லை.அதனால் தான் நம்முடைய கல்வெட்டுகளில் இருந்தும், இலக்கியங்களில் இருந்தும், அகழாய்வுகள் மூலமும் கிடைக்கின்ற சான்றுகள் ஆகியவைதான்இன்றைக்கு பெரிய அளவிலே துணை புரிவதாக இருக்கிறது.ஆங்கிலர்களுடைய வருகைக்குப் பிறகு ஒவ்வொரு மாவட்டங்களை அவர்கள் பிரிக்கின்ற பொழுதுதான் அந்த மாவட்டத்தினுடைய மொத்த விவரங்களை அறிந்து கொள்ளக்கூடிய ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. நம்முடைய விருதுநகர் மாவட்டத்தின் உடைய வரலாற்றை நாம் அறிந்து கொள்ளக் கூடிய வகையில் அன்றைக்கு நம்முடைய மாவட்ட ஆட்சித் தலைவராக இன்றைக்கு மத்திய அரசாங்கத்தில் செயலாளராக இருக்கக்கூடிய மதிப்புக்குரிய திரு.கிருஷ்ணன் அவர்கள் மற்றும் அவர்களுடைய துணைவியார் அவர்கள் முயற்சியோடு அறிஞர் வேதாச்சலம் போன்றவர்களால் 1998 மற்றும் 1999 அன்றைக்கு புத்தகத்தை உருவாக்கி தந்தார்கள். அதற்குப் பிறகு விருதுநகர் மாவட்டத்தின் உடைய வரலாறு இன்னும் தொல்லியல் நோக்கில் எழுதப்பட வேண்டும் என்று பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம் அந்த புத்தகத்தை கொண்டு வந்தது. ஆனால் அதற்குப் பிறகு இருக்கக்கூடிய இந்த விவரங்களை குறிப்பாக 1800 களிலிருந்து 1950 வரை இருக்கக்கூடிய விவரங்களை எழுத வேண்டும் என்பதன் அடிப்படையில் இந்த புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தினுடைய புவியியல் அமைப்பை நன்றாக உணர்ந்தவர்கள் அறிவார்கள். இந்த மாவட்டத்தினுடைய ஒரு பகுதி இராமநாதபுரத்தை பிரதிபலிப்பதாக இருக்கும். இன்னொரு பகுதி அப்படியே திருநெல்வேலி மாவட்டத்தை பிரதிபலிப்பாக இருக்கும். இந்த மாவட்டத்தினுடைய வடக்கு பகுதி மதுரையை பிரதிபலிப்பதாகவும் இருக்கும். இந்த மூன்று மாவட்டங்களில் இருந்தும் ஒவ்வொரு இடத்திலிருந்தும் நாம் புவியியல் ரீதியாக பகுதிகளை இணைத்து விருதுநகர் மாவட்டத்தை உருவாக்கி இருந்தாலும் கூட விருதுநகர் மாவட்டத்திற்கு என்று தனித்த அடையாளங்கள் இருக்கிறது. அந்த தனித்த அடையாளங்கள் புவியியல் ரீதியாக மட்டுமல்ல தொழில், இலக்கிய, தொல்லியல், வணிக, வியாபார ரீதியாக எடுத்துக் கொண்டு போனால் பல இடங்களில் இது நிச்சயமாக இருக்கிறது. அது குறித்த தகவல்களை தொகுத்து இந்த புத்தகத்தில் இடம் பெற்று இருக்கிறது என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மரு. தண்டபாணி, மாவட்ட சுற்றுலா அலுவலர் திருமதி உமா தேவி, முன்னாள் துணை வேந்தர்,சுவாமி விவேகானந்தா பல்கலைக்கழகம், சாகர்.(மத்திய பிரதேசம்) முனைவர் கே.ஏ.மணிக்குமார், இராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி,உதவிப் பேராசிரியர்முனைவர் போ.கந்தசாமி, விருதுநகர் நகர மன்ற தலைவர் திரு.ஆர்.மாதவன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (29.01.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் முன்னிலையில் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் நரிக்குடி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் தொடர்பாக அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (29.01.2025) பொது சுகாதாரம் மற்றும் தோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில், மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைக்கும் பொருட்டு, விருதுநகர் மாவட்ட அளவில் உருவாக்கப்பட்ட மாவட்ட தாய்சேய் நல கண்காணிப்பு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் திறந்து வைத்தார்.