தொழுநோய் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வுப் பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், தேசபந்து மைதானத்தில் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்ற தொழுநோய் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வுப் பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் (30.01.2024) கொடியசைத்து துவக்கி வைத்தார்.முன்னதாக, அண்ணல் காந்தியடிகள் நினைவு தினத்தை முன்னிட்டு, அன்னாரது படத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.மேலும், தொழுநோய் விழிப்புணர்வு உறுதி மொழியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
மகாத்மா காந்தி அவர்கள் தொழுநோயாளிகளுக்கு ஆற்றிய சேவையைப் போற்றும் வகையில் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30-ம் தேதி தேசிய தொழுநோய் ஒழிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்தத் தொழுநோயானது காற்றின் மூலம் மைக்ரோ பாக்டீரியம் லெப்ரே என்ற பாக்டீரியா கிருமியினால் பரவுகிறது. இந்த நோய் தொற்று ஏற்பட்டால் முதலில் தேமல், படை போன்ற தோல் நோய்கள் ஏற்படும். சிவந்த அல்லது வெளிறிய ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட தேமல்கள் ஏற்பட்ட இடங்களில் உணர்ச்சியற்ற நிலை ஏற்படும். எண்ணெய் தடவியது போன்று மினு மினுப்பு,தோல், முகம் மற்றும் கண் இமைகளில் முடியில்லாது இருத்தல், காது, காதுக்கு பின்னாலும் சிறு,சிறு முடிச்சு (nodules) போன்ற கட்டிகள் இருத்தல். கை,கால்களில் சதை குறைந்து வறண்ட உணர்ச்சியற்ற நிலை ஆகியன தொழுநோயின் ஆரம்ப அறிகுறிகள் மற்றும் இது தொற்றுநோய் அல்ல.
இந்த நோயினால் பாதிக்கப்பட்டு மேற்கண்ட அறிகுறிகள் உடல்பகுதிகளில் தென்பட்டால் உடனே அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது அரசு மருத்துவமனைக்குச் சென்று உரிய சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும். உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரையின்படி (WHO – World Health Organization) மல்டி டிரக் தெரபி எனப்படும் சிகிச்சை தற்போது தொழுநோயாளிகளுக்கு அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சைகள் மூலம் தொழுநோய் முற்றிலும் குணப்படுத்தப்படுகிறது.
மேலும், பொதுமக்களின் முக்கிய நோக்கம் என்பது இந்த தொழுநோய் எப்படி வருகிறது என்பது பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். தொழுநோய் குறித்து அறிகுறிகள் எதும் தென்பட்டால், அதனை அலட்சியமாக எடுத்துக்கொள்ளலாமல் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது அரசு மருத்துவமனைக்குச் சென்று உரிய சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும். நமது மாவட்டத்தில் தொழுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் குறைவு, இருந்தாலும் அதனை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதும், பொதுமக்கள் மத்தியில் தொழுநோய் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதும், இந்நோயால் பாதிப்புக்குள்ளாகி அவதிப்படுவோர் இடையே ஒற்றுமை உணர்வை ஏற்படுத்துவதும், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர் சமுதாயத்தில் மரியாதையுடன் வாழக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்துவதும் இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும் என தெரிவித்தார்.
முன்னதாக, தொழுநோயால் பாதிக்கப்பட்டு முற்றிலும் நோயிலிருந்து குணமடைந்தவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவப்படுத்தினார்.மேலும், மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் சுமார் 200 பேர் கலந்துகொண்ட தொழுநோய் விழிப்புணர்வுப் பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். தேசபந்து மைதானத்தில் தொடங்கிய இந்த விழிப்புணர்வுப் பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி, நகராட்சி அலுவலகம் வரை சென்று நிறைவடைந்தது.இந்நிகழ்ச்சியில் மருத்துவத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply