விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (04.07.2025) மாவட்ட தீ தடுப்பு பாதுகாப்புக் குழு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பட்டாசு தொழிற்சாலைகளில் நிகழும் வெடிவிபத்தினை தடுப்பது குறித்த வழிமுறைகளான அனுமதிக்கப்பட்ட அளவில் இரசாயன வேதிப்பொருட்களை கையாள்வது, ஒவ்வொரு உற்பத்தி அறை, வேதிப்பொருட்கள் கலவை மற்றும் நிரப்புதல் அறைகளில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் மட்டும் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவது குறித்தம், பாதுகாப்பாக மணி மருந்து கையாளுதல்; குறித்தம், உள்குத்தகை விடுவதை தடுப்பது குறித்தும், தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு பயிற்சி வழங்குவது குறித்தும், பட்டாசு உற்பத்தியாளர் சங்க பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால்; அறிவுரை வழங்கி தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டது.இக்கூட்டத்தில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர்கள், மற்றும் இணை இயக்குநர் பயிற்சி மையம்) சிவகாசி வெடிப்பொருள் கட்டுபாட்டு துறை அலுவலர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், தீயணைப்பு அலுவலர், தனி வட்டாச்சியர் (தீ.தொ.ஆ) மற்றும் டான்பாமா, டிப்மா, சிப்மா, டாப்மா, சிறு,குறு பட்டாசு உற்பத்தி சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் மூலமாக பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சாத்தியக் கூறுகள் சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபர் கடன் மற்றும் குழுக் கடன் திட்டங்களுக்குகுறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. 2025-2026 ஆம் நிதியாண்டியில் ரூ.200 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பத்தாரரின் தகுதிகள் பின்வருமாறு:விண்ணப்பத்தாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராக இருத்தல் வேண்டும்.குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3,00,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். தனிநபர் கடன் திட்டம் சிறு வார்த்தகம் ஃ வணிகம், விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழில்கள் செய்வதற்கு அதிக பட்சமாக ரூ.25 இலட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.ஆண்டு வட்டி விகிதம் ரூ1.25 இலட்சம் வரை 7 சதவிதம் மற்றும் ரூ1.25 இலட்சம் முதல் ரூ15 இலட்சம் வரை 8 சதவிதம் கடனைத் திரும்ப செலுத்தும் காலம் 3 முதல் 5 ஆண்டுகள் வரை ஆகும்.குழுக்கடன் திட்டம் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் சிறு தொழில்ஃவணிகம் செய்வதற்கு ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1.25 இலட்சம் வரையும் குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.25 இலட்சம் வரையும் ஆண்டிற்கு 7 சதவிதம் வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படுகிறது.கடனைத் திரும்ப செலுத்தும் காலம்: 3ஆண்டுகள். சுய உதவிக்குழு துவங்கி 6 மாதங்கள! பூர்த்தியாகியிருக்க வேண்டும். திட்ட அலுவரர்(மகளிர் திட்டம்) அவர்களால் தரம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இரு பாலருக்கான சுய உதவிக்குழுவில் உறுப்பினர்களுக்கும் இக்கடனுதவி வழங்கப்படுகிறது.பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு ஒரு கறவை மாட்டிற்கு ரூ.60,000- வீதம் 2 கறவைமாடுகள் வாங்க அதிகபட்சம் ரூ.1,20,000- வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 7 சதவிதம், திரும்ப செலுத்தும் காலம் 3 ஆண்டுகள்.மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளிலும் கடன் விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம். மேலும் இக்கழக இணையதள முகவரியில் (www.tabcedco.tn.gov.in) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பதாரர்கள் கடன் விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து சாதி சான்று, வருமான சான்றுஇ பிறப்பிடச் சான்றுஇ குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம்இ ஆதார் அட்டைஇ வங்கி கோரும் ஆவண நகல்களுடன் சம்மந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை மற்றும் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் (04.07.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசு திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்டங்களின் பயன்கள், கருத்துக்கள் குறித்து பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.அதன்படி, அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வில்லிபத்திரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, மாணவர்களின் எண்ணிக்கை, மாணவர்களின் கற்றல் திறன், அடிப்படை வசதிகள், வழங்கப்படும் உணவுகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்தார்.மேலும், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், மல்லாங்கிணறு பேரூராட்சியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.230.50 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 40 குடியிருப்பு வீடுகளின் தரம் குறித்தும்,ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்தும்,பின்னர், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், மீனாட்சிபுரம் ஊராட்சியில் 12 ஆம் வகுப்பு முடித்து, உயர்கல்வி சேர்க்கைக்கு விண்ணப்பிக்காத மாணவியின் வீட்டிற்கு சென்று நேரில் சந்தித்து, உயர்கல்விக்கு விண்ணப்பிக்காதற்கான காரணங்கள், குடும்ப சூழ்நிலைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்து, அவர்களுக்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கி, உயர்கல்வி பயில வலியுறுத்தினார்.அதனைத்தொடர்ந்து, டி.கடம்பங்குளம் ஊராட்சியில், சிறு பாசன குளங்களை புனரமைக்கும் திட்டத்தின் கீழ், ரூ.9.85 இலட்சம் மதிப்பில் தொடுவன்பட்டி கண்மாய் தூர்வாரப்பட்டு வரும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.கம்பிக்குடி ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.9.12 இலட்சம் மதிப்பில், வனத்துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ள நர்சரி பண்ணையில் மரக்கன்றுகள் உருவாக்கப்பட்டு வருவதையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும், கம்பிக்குடி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.10 இலட்சம் மதிப்பில், பயணியர் நிழற்குடை புதிதாக கட்டப்பட்டு வருவதையும்,காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், முடுக்கன் குளம் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, அங்கு பயிலும் குழந்தைகளின் எண்ணிக்கை, வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவுகள், குழந்தைகளின் வயதுகேற்ற உயரம் மற்றும் எடை உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்.பின்னர், முடுக்கன்குளம் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு அங்கு பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை, இடைநிற்றல், கற்றல் திறன், அடிப்படை வசதிகள் உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார். மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது, வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில், ரூ.2.75 கோடி மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தினை (04.07.2025) காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து, புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் குத்துவிளக்கேற்றி பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.பின்னர், தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட வேளாண்மை - உழவர் நலத்துறையின் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் 2025-26 திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு பயிறு வகை தொகுப்பு, பழச்செடி தொகுப்பு, காய்கறி விதை தொகுப்புகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் ஊட்டச்சத்து வழங்கும் விளைப்பொருட்களின் உற்பத்தியினை அதிகரித்து ஊட்டச்சத்துப் பாதுகாப்பினை உறுதி செய்திட, உழவர்களின் வருமானத்தை அதிகரித்திட தமிழ்நாடு அரசு மூலம் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் என்னும் புதிய திட்டம் 2025-26-ம் நிதியாண்டில் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் 2025-26 திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் தலா 25 தொகுப்புகள் வீதம் மொத்தம் 275 தொகுப்புகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் கீழ் மரத்துவரை, காராமணி மற்றும் அவரை வகை விதைத் தொகுப்புகளும் மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் வீட்டுத்தோட்டங்களில் வளர்க்க தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய், கொத்தவரை, கீரை வகைகள் போன்ற ஆறு வகையான காய்கறி விதைகள் அடங்கிய தொகுப்பும், பப்பாளி, கொய்யா, எலுமிச்சை ஆகிய மூன்று வகையான பழச்செடிகள் அடங்கிய தொகுப்பும் 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டது.மேலும், இத்திட்டத்தின் கீழ் பயன் பெற உழவர் செயலியில் பதிவேற்றம் செய்யும், tnhorticulture.tn.gov.in வலைதளத்தில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு முன்னுரிமையில் வழங்கப்படும். கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பெண்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாய குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.இந்நிகழ்ச்சியில், வேளாண்மை பொறியியல் துறையின் கீழ் வேளாண்மை இயந்திரமாக்குதல் உப இயக்கம்-2025-2026 திட்டத்தின் கீழ் பவர் டில்லர் 50 சதவீதம் மானியத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில், வேளாண்மை இணை இயக்குநர்(பொ) திருமதி நாச்சியார் அம்மாள், செயற்பொறியாளர் திருமதி இந்திரா, உதவி இயக்குநர்கள், அரசு அலுவலர்கள், விவசாயிகள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (04.07.2025) முன்னேற விழையும் மாவட்டமான விருதுநகர் மாவட்டத்தில் பொது விநியோக திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் முன்னிலையில், மத்திய குழுவின் ஆய்வு அலுவலர் கூடுதல் செயலாளர் மற்றும் முதன்மை ஆலோசகர் (கணக்குகள்) திரு.வெங்கடேஷ் அவர்கள் மற்றும் குழுவினருடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.முன்னதாக, மத்திய குழுவின் ஆய்வு அலுவலர் கூடுதல் செயலாளர் மற்றும் முதன்மை ஆலோசகர் (கணக்குகள்) திரு.வெங்கடேஷ் அவர்கள் மற்றும் குழுவினர் 03.07.2025 மற்றும் 04.07.2025 ஆகிய 2 நாட்கள் வத்திராயிருப்பு வட்டத்தில் நியாய விலை கடைகள், நேரடி நெல் கொள்முதல் நிலையம் மற்றும் விருதுநகர் மத்திய உணவுப் பொருள் சேமிப்பு கிடங்கினை ஆய்வு மேற்கொண்டார்கள்.இந்த ஆய்வுக்குப்பின் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அவர்களைச் சந்தித்து தாங்கள் மேற்கொண்ட ஆய்வு குறித்து தங்களுடைய கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.இந்நிகழ்வில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திரு.செந்தில்குமார், துணை ஆட்சியர் /மண்டல மேலாளர்(தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்) திரு.பால்பாண்டி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) திரு.பாலசுப்பிரமணியம், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.உதயசங்கர் உட்பட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையினையும் கடைபிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவித்து கௌரவிக்கும் வகையில், தகுதி படைத்த 10 ஊராட்சிகளுக்கு சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுடன் தலா ரூபாய்.1 கோடி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதனடிப்படையில், 2025-ஆம் ஆண்டிற்கான சமூக நல்லிணக்க ஊராட்சி விருது பெற விரும்புவோர் விண்ணப்பப் படிவத்துடன், அதற்குரிய ஆவணங்களையும் இணைத்து விண்ணப்பிக்கலாம். இவ்விருதுக்கான விண்ணப்பபடிவத்தைhttps://tinyurl.com/Panchayataward (அல்லது)https://cms.tn.gov.in/cms_migrated/document/forms/Samooga_Nallinakka_Ooraatchi_Award_Application.pdf என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விருதுநகர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலும் விண்ணப்பப் படிவத்தை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் உரிய ஆவணங்கள் மற்றும் புகைப்படத்துடன், விருதுநகர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது அரசு தபால் அஞ்சல் மூலமாகவோ 15.07.2025 மாலை 06.00 மணி வரை பெறப்படும் எனவும், அதற்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
திருச்சுழி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான மாணவர் நேரடி சேர்க்கை நடைபெறுகிறது. இந்நிலையத்தில் கணினி இயக்குபவர் மற்றும் திட்டமிடுதல் உதவியாளர் (COPA) நிலஅளவையர் (SURVEYOR) மின்சார பணியாளர் (ELECTRICIAN) இயந்திர வேலையாள் (MACHINIST) ஆகிய நான்கு தொழிற்பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளது. பயிற்சி முடித்தவுடன் தனியார் மற்றும் அரசு துறைகளில் அப்ரண்டீஸ் மற்றும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.விருப்பமுள்ள மாணவ மாணவிகள் தங்களது கல்வி மற்றும் சாதி அசல் சான்றிதழ்களுடன் அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம். பயிற்சியின்போது மாணவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.750/- கட்டணமில்லா பேருந்து சலுகை, விலையில்லா சீருடை (தையற்கூலியுடன்) விலையில்லா மிதிவண்டி, விலையில்லா வரைபடக்கருவிகள், விலையில்லா மூடுகாலணிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில், தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு தமிழ்புதல்வன் திட்டத்தின்கீழ் மற்றும் மாணவியருக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000/- வழங்கப்படும்.எனவே, திருச்சுழி சுற்று வட்டாரங்களில் உள்ள 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 70100-40810, 94864-62585, 76038-28709, 95669-29663 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் (03.07.2025) சென்னை அடையாறு சாஸ்திரி நகர், நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற நல்வாழ்வு மையங்களை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்த நிகழ்ச்சியில், விருதுநகர் மாவட்டத்தில் ரூ.2.90 கோடி மதிப்பிலான நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களை திறந்து வைத்தார்.அதனைத்தொடர்ந்து, விருதுநகர் நகராட்சி பணியாளர்கள் குடியிருப்பு வளாகத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற நல்வாழ்வு மையத்தின் சேவைகளை விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.பின்னர், கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர் நகராட்சி பணியாளர்கள் குடியிருப்பு வளாகம் மற்றும் சிவகாசி அம்மன்கோவில்பட்டி ஆகிய இடங்களில் நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் தலா ரூ.25 இலட்சம் மதிப்பிலும், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் செம்பட்டி மற்றும் திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் இலுப்பையூர் ஆகிய இடங்களில் தேசிய நல வாழ்வு நிதி மூலமாக தலா ரூ.1.20 கோடி மதிப்பில் புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் என ஆக மொத்தம் 4 இடங்களில் ரூ.2.90 கோடி மதிப்பிலான புதிய கட்டிடங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளன.இந்நிகழ்வில், விருதுநகர் நகர்மன்ற தலைவர் திரு.ஆர்.மாதவன், மாவட்ட சுகாதார அலுவலர்கள் மரு.யசோதாமணி (விருதுநகர்), மரு.த.ஜெகவீரபாண்டியன் (எ) குணசேகரன் (சிவகாசி) உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக் கூட்டரங்கில் முன்னாள் படைவீரர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பான (Sparsh Outreach programme) குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாக குறைதீர்க்கும் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்களால் 01.07.2025 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. அதன்படி, இம்முகாமானது 01.07.2025 மற்றும் 02.07.2025 ஆகிய நாட்களில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் மற்றும் திருவில்லிபுத்தூர் முன்னாள் படைவீரர் நல அலுவலகம் ஆகிய இடங்களில் நடைபெற்றது.இம்முகாமில், ஓய்வூதியம் தொடர்பான குறைகள், ஆதார் எண், அலைபேசி எண் மற்றும் பான் இணைப்பு, முகவரி மாற்றம், ஓய்வூதிய கொடுப்பாணை வழங்குதல், உயிர்ச்சான்று சமர்ப்பித்தல் தொடர்பான குறைகள் உடனடியாக நிவர்;த்தி செய்யப்பட்டது. உயிர்சான்று சமர்ப்பிக்க இயலாத முன்னாள் படைவீரர்களின் குறைகள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் கேட்டறியப்பட்டு முன்னாள் படைவீரர்களுக்கு உயிர்ச்சான்று வழங்கப்பட்டது. மேலும், முன்னாள் படைவீரர்கள் சார்ந்தோர்களது பெயர் மற்றும் பிறந்த தேதி மாற்றம் தொடர்பான குறைகள் நிவர்த்தி செய்யும் பொருட்டு பரிந்துரை செய்யப்பட்டது.மேலும், அன்று திருவில்லிபுத்தூரில் போர் நடவடிக்கையில் பணியாற்றிய 90 வயதுடைய முன்னாள் படைவீரர் இல்லத்திற்கு நேரில் சென்று ஓய்வூதியம் பெறும் விவரம் அறியப்பட்டு ஓய்வூதிய கொடுப்பாணையின் நகலினை உதவி கட்டுப்பாட்டாளர்(இந்திய பாதுகாப்பு கணக்கு பணி) திரு.விக்னேஷ் அவர்களால் வழங்கப்பட்டது.இம்முகாமில், உதவி கட்டுப்பாட்டாளர்(இந்திய பாதுகாப்பு கணக்கு பணி) திரு.விக்னேஷ், முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர், SPARSH குழுவினர் மற்றும் நல அமைப்பாளர், பணியாளர்கள், 200 - ற்கும் மேற்ப்பட்ட முன்னாள் படைவீரர்கள்ஃ அவரை சார்ந்தோர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் மற்றும் சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் (03.07.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட நூலக அலுவலகத்தினை பார்வையிட்டு, நூலகத்திற்கு வருகை தரும் வாசகர்களின் விபரம், நூல்களின் இருப்பு, அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து, அங்கு போட்டித்தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துரையாடினார்.அதனை தொடர்ந்து, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் இ-சேவை மையம், ஆதார் மையம் மற்றும் முதலமைச்சரின் காப்பீட்டு அலுவலகம் ஆகியவற்றின் பல்வேறு சேவைகளை பெற வருகை தந்த பொதுமக்களிடம் கலந்துரையாடி கருத்துக்களை கேட்டறிந்தார்.மேலும், சூலக்கரையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, போட்டித்தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களை ஊக்கப்படுத்தி அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கி, அலுவலகத்தின் செயல்பாடுகள், பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான வழிகாட்டி கையேடுகள், மாதிரி வினாத்தாள்கள் உள்ளிட்டவைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.பின்னர், சிவகாசி ஊராட்சி ஒன்றியம், ஆனையூர் ஊராட்சி, சாட்சியாபுரத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை (இரயில்வே திட்டப்பணிகள்) சார்பில், ரூ.61.74 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய இரயில்வே மேம்பாலம் பணிகளின் முன்னேற்றம் குறித்து, நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில், வடப்பட்டி ஊராட்சியில் நபார்டு திட்டத்தின் கீழ், ரூ.34.23 இலட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இரண்டு வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டு வருவதை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, மாணவர்களுடன் கலந்துரையாடினார்.மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.