கடலுார் மாவட்டம் பண்ருட்டியிலுள்ள திருவதிகை சரநாராயணப்பெருமாள் கோயிலில் பள்ளி கொண்ட நரசிம்மர் சன்னதி உள்ளது. பிரதோஷத்தன்று இவரை தரிசித்தால் நினைத்தது நிறைவேறும்.அசுரர்களான தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலியிடம் பறக்கும் கோட்டைகள் இருந்தன. அவற்றில் பறந்து சென்று தேவர்களையும், முனிவர்களையும் தாக்கினர். சிவபெருமானிடம் முறையிடவே, அவர் அசுரர்களுடன் போர் புரிய தயாரானார். அதற்காக தேர் ஒன்று உருவாக்கப்பட்டது. அதில் சூரியனும், சந்திரனும் சக்கரங்களாக மாறினர். பூமி தேரின் தட்டாக ஆக்கப்பட்டது. நான்கு வேதங்களும் குதிரைகளாக தேரில் பூட்டப்பட்டது.மேருமலையை வில்லாக வளைத்த சிவபெருமான் ஆதிசேஷனை அதில் நாணாக பூட்டினார், பிரம்மா தேரின் சாரதியாக அமர்ந்தார், மகாவிஷ்ணுவே அம்பாக மாறி அசுரர்களின் அழிவுக்கு துணை நின்றார். அவரே 'சர நாராயணப் பெருமாள்' என்னும் பெயரில் இங்கு குடி கொண்டிருக்கிறார். சரம் என்ற சொல்லுக்கு அம்பு என பொருள். பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட இக்கோயிலில் உள்ள மகாவிஷ்ணுவின் சிலை சாளக்கிராம கற்களால் ஆனது. பாரதப்போர் முடிந்ததும் பிராயச்சித்தம் தேடிய அர்ஜுனன் இங்கு வழிபாடு செய்யபாவம் நீங்கப் பெற்றார். செங்கமலத்தாயார் தனி சன்னதியில்இருக்கிறார். மாதம் தோறும் உத்திர நட்சத்திரத்தன்று தாயாருக்கு திருமஞ்சனம் நடக்கிறது. வழக்கமாக கைகூப்பி நிற்கும் கருடாழ்வார், இங்கு மட்டும் கைகட்டி சேவை செய்யும் நிலையில் உள்ளார். மார்க்கண்டேய மகரிஷியின் மகளான ஸ்ரீதேவியை மகாவிஷ்ணு இங்கு மணம் செய்தார். இத்தலத்தை தரிசித்தால் திருப்பதி ஏழுமலையானைத் தரிசித்த புண்ணியம் கிடைக்கும். மகாலட்சுமியின் அம்சமான வில்வம் தலவிருட்சமாக உள்ளது.இங்குள்ள நரசிம்மர் படுத்த கோலத்தில் காட்சியளிக்கிறார். அசுரனான வக்ரனை வதம் செய்த களைப்பு தீர நரசிம்மர் இங்கு தங்கியுள்ளார். பிரதோஷத்தன்று நரசிம்மரை வழிபட்டால் சுகபோக வாழ்வு கிடைக்கும்..
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள கடிகாசலம் மலையில் யோக ஆஞ்சநேயர் சங்கு சக்கரத்துடன் காட்சி தருகிறார். இவரை அமாவாசையன்று தரிசித்தால் எதிரி தொல்லை, கடன் பிரச்னை, வீண்பயம் நீங்கும்.புராண காலத்தில் வாழ்ந்த வாமதேவர், வசிஷ்டர், கஷ்யபர், அத்திரி, ஜமதக்னி, கவுதமர், பரத்வாஜர் என்னும் முனிவர்கள் மோட்சம் அடைய விரும்பினர். இதற்காக கடிகாசல மலையில் நரசிம்மரை நோக்கி தவமிருந்தனர். காலன், கேயன் என்னும் அசுரர்கள் அவர்களுக்கு இடையூறு செய்தனர்.இதில்இருந்துமுனிவர்களை விடுவிக்கஆஞ்சநேயரைஅனுப்பியநரசிம்மர், அவருக்குசங்கு, சக்கரத்தையும் கொடுத்தனுப்பினார். சக்கராயுதம் மூலம் அசுரர்களை வதம் செய்தார் ஆஞ்சநேயர். இதன் பின் முனிவர்களின் தவம் தடையின்றி நிறைவேறியது. இறுதியில் யோக நரசிம்மர் காட்சியளித்து முனிவர்களுக்கு மோட்சம் அளித்தார். அவரே இந்த மலைக்கோயிலில் யோக நரசிம்மராக அருள்புரிகிறார். 500 அடி உயரமுள்ள பெரிய மலையில் யோக நரசிம்மரின் சன்னதி உள்ளது.மலைக்குச் செல்ல 1305 படிகள் உள்ளன. மலையிலிருந்து 4 கி.மீ. துாரத்திலுள்ள சோளிங்கர் கோயிலில் உற்ஸவரான பக்தவத்சலர், சுதாவல்லித்தாயாருடன் இருக்கிறார். அமிர்தவல்லி தாயாருக்கும் சன்னதி உள்ளது.அமிர்த குளம், தக்கான் குளம் என்னும் தீர்த்தங்கள் உள்ளன. பெரிய மலைக்கு எதிரிலுள்ள சிறிய மலையில் ஆஞ்சநேயர் கோயில் கொண்டிருக்கிறார். அக்கோயிலை அடைய 406 படிகள் ஏற வேண்டும்.யோகநிலையில் உள்ள ஆஞ்சநேயரின் கைகளில் சங்கு, சக்கரம் உள்ளன. இவரது கண்கள் பெரிய மலையில் உள்ள நரசிம்மரின் பாதங்களை நோக்கியபடி இருப்பது சிறப்பு. மனநோயாளிகள் குணமடையவும், விரும்பிய மணவாழ்க்கை, குழந்தைப்பேறு உண்டாகவும், வியாபாரம் செழிக்கவும் அன்னதானம் செய்கின்றனர். வீடு கட்டும் பணி விரைவில் நிறைவேற மலைப்பாதையில் கற்களை அடுக்குகின்றனர். நினைத்தது நிறைவேற பவுர்ணமியன்று மலையைச் சுற்றுகின்றனர்.
நேபாளம் முஸ்தாங் மாவட்டம் முக்திநாத்தில் ஆழ்வார்களால் பாடப்பட்ட திவ்ய தேசமான முக்தி நாராயணர் கோயில் உள்ளது. இமயமலைச் சாரலில் உயரமான இடத்தில் அமைந்த கோயில் இது. இப்பகுதியில் சாலமரங்கள் நிறைய இருந்ததால் 'சாளக்கிராம ஷேத்திரம்' எனப்பட்டது. இப்பகுதி மக்கள் 'முக்தி நாராயண ஷேத்திரம்' என்கின்றனர். இங்கு தாமோதர குண்ட் என்ற குளம் உள்ளது. நேபாள பாணியில் அமைந்த இக்கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அமர்ந்த கோலத்தில் மேற்கு நோக்கியபடி சுவாமி இருக்கிறார். சுயம்பு மூர்த்தியான இவர் மீது திருமங்கையாழ்வார், பெரியாழ்வார் பாடியுள்ளனர். ஆனால் முன்பு நின்ற கோலத்தில் வடக்கு நோக்கி சுவாமி இருந்ததாக பழைய நுால்களில் கூறப்பட்டுள்ளது. திருமங்கையாழ்வார் தன் பாடலில் இதை உறுதிப்படுத்துகிறார். கால மாற்றத்தால் புதிய சிலையை பிரதிஷ்டை செய்துள்ளனர். சுவாமிக்கு அர்ச்சனை, அபிஷேகம் கிடையாது. செப்பு கிண்ணத்தில் சந்தனம்,குங்குமம், ஜவ்வாது இருக்கும். அதை துணியில் ஒற்றி சுவாமியை துடைப்பர். இதையே அபிஷேகமாக கருதுகின்றனர். விருப்பம் நிறைவேற சிறிய மணிகளை வாங்கி கோயிலில் கட்டுகின்றனர். இங்குள்ள யாகசாலையில் எப்போதும் நெருப்பு எரிகிறது. அதில் பக்தர்கள் அமர்ந்து மந்திரம் சொல்லி ஹோமம் நடத்துகின்றனர். லட்ச தீபம் ஏற்றும் வழிபாடு இங்குண்டு. கருடன், சந்தோஷி மாதா, லலிதா, விநாயகர், பார்வதி, சிவன் சன்னதிகள் உள்ளன. இங்குள்ள நீர்த்தொட்டியில் தனித்தனி குழாய் வைத்து 108 தீர்த்தங்கள் செயற்கையாக அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர பாவ, புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. அதில் நீராடுவோருக்கு நிம்மதியும், மோட்சமும் கிடைக்கும். நவம்பர் முதல் மார்ச் வரை குளிர் காலம் என்பதால் தீர்த்தத்தில் நீராடுவது சிரமம். இங்கு கிடைக்கும் சாளக்கிராம கல்லை பூஜையறையில் வைத்து வழிபட தோஷம் எல்லாம் விலகும்.
இலங்கையின் தென்கிழக்கும் கரையில் ஊவா மாகாணம் கதிர்காமம் கோயில் உள்ளது. இங்கு 'கப்புறாளைமார் என்னும் சிங்களர்கள் தங்களின் வாயைக் கட்டி கருவறையில் உள்ள திரைக்குப் பின்புறம் நின்று பூஜை செய்வர். இதை விட ஆச்சர்யம் என்ன என்றால் திரைக்குப் பின்புறம் முருகனின் சிலை இல்லை, கருவறையில் உள்ள பெட்டிக்கு பூஜை நடக்கிறது.சிவனின் நெற்றிக்கண்ணில் அவதரித்த முருகன் இங்கு வள்ளியை காதல் மணம் புரிந்ததால் இத்தலம் 'கதிர்காமம்' எனப் பெயர் பெற்றது. இவரை கதிர்காம சுவாமி, கதிரை நாயகன், கதிரை வேலன், மாணிக்க சுவாமி, கந்தக்கடவுள் என அழைக்கின்றனர். வள்ளியை மணம் புரிந்ததால் தனக்கு பிடித்த இடம் கதிர்காமம் என இங்கு கோயில் கொண்டார். இன்னொரு வரலாற்றின்படி சூரபத்மனை வதம் செய்வதற்காக முருகன் கதிர்காமத்திற்கு வந்தார். இங்கு ஓடும் மாணிக்க கங்கை நதியின் அருகில் பாசறை அமைத்தார். சூரனுடன் போரிட்டு வெற்றி பெற்ற பின் நவகங்கைத் தீர்த்தத்தை உருவாக்கி தேவர்கள் வழிபடுவதற்காக இங்கு எழுந்தருளினார்.காவடி எடுத்தல், கற்பூரச் சட்டி எடுத்தல், அங்கப்பிரதட்சணம் செய்தல், தேங்காய் உடைத்தல், தீ மிதித்தல் என நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். கதிர்காம மலையில் இருந்து கிடைக்கும் வெண்ணிறக் கட்டியை திருநீறாக தருகின்றனர். இங்குள்ள பழங்குடியினர் முருகனைத் தங்களின் மாப்பிள்ளையாக கருதுகின்றனர். 'வனமுறை வேடன் அருளிய பூசை மகிழ் கதிர்காமம் உறைவோனே' என அருணகிரிநாதர் பாடியுள்ளார். இங்கு பூஜை செய்யும் கப்புறாளைமார் என்ற சிங்களர்கள் தங்களை வள்ளியின் வழித்தோன்றல் என்கின்றனர்.எல்லாளன் என்ற தமிழ் மன்னரை வெற்றி பெற விரும்பிய துட்ட கெழுனு என்ற இங்கள மன்னன் கதிர்காமத்து முருகனிடம் வேண்டுதல் வைத்து விரதம் இருந்தான். அதன்படி வெற்றி பெற்றதால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கோயில் எழுப்பினான். விநாயகர், பெருமாள், தெய்வானை சன்னதிகள் உள்ளன. கதிர்காமர் (முருகன்) தெற்கு நோக்கியும், வள்ளி வடக்கு நோக்கியும் எதிரெதிரில் உள்ளனர்.இங்கு முருகனின் கருவறை வண்ணத் திரையால் மூடப்பட்டிருக்கும். அதில் வள்ளி, தெய்வானையுடன் முருகனின் ஓவியம் வரையப்பட்டிருக்கும். பக்தர்கள் தரும் அர்ச்சனைப் பொருட்களை திரைக்குள் சென்று கப்புறாளைமார் சுவாமிக்கு சமர்ப்பிப்பர்.காஷ்மீரைச் சேர்ந்தவர் துறவி கல்யாணகிரி. 12 ஆண்டுகள் தவத்தில் ஈடுபட்ட இவரது சமாதி இங்குள்ளது. முத்துலிங்க சுவாமிகள் எனப்படும் இவர் வழிபட்ட சரவணபவ யந்திரமே கருவறையில் இருப்பதாகச் சொல்வர்.
விழுப்புரம் அருகிலுள்ள சிறுவந்தாடு கிராமத்தில், லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் கொண்டிருக்கிறார். புரட்டாசி சனிக்கிழமையில் மட்டைத் தேங்காய் கட்டி வழிபட்டால் திருமணம் நடக்கும்.சோழ மன்னர் கோப்பெருஞ்சிங்கனால் கட்டப்பட்டது லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில். விஜயநகர மன்னர் அச்சுதராயர் இங்கு திருப்பணி செய்ததாக கல்வெட்டு கூறுகிறது. தற்போதுள்ள அமைப்பு 19ம் நுாற்றாண்டைச் சேர்ந்தது. மண்டபம் முழுவதும் கருங்கல்லாலும், விமானம் மட்டும் சுதையாலும் ஆனதாகும். கருவறையில் மூலவர் சுகாசனத்தில் அமர்ந்து, மகாலட்சுமி தாயாரை மடியில் தாங்கியபடி இருக்கிறார். தாயாரின் வலதுகை பெருமாளை அணைத்த படியும், இடதுகை தாமரை ஏந்தியும் உள்ளது. அர்த்த மண்டபத்தில் கனகவல்லி தாயார் சன்னதி உள்ளது. எலுமிச்சை மரம் தலவிருட்சமாக உள்ளது.அர்த்த மண்டபத்தின் கூரையில் பல்லி உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலிலுள்ள பல்லி போலவே இதன் உருவ அமைப்பு உள்ளது.இதை தொட்டு வணங்குவோருக்கு கிரகதோஷம், நோய், திருஷ்டி விலகும். கருவறையின் பின்புறம் நின்றால் மூலவர், தாயார், ராமர், ஆண்டாள், சக்கரத்தாழ்வார் சன்னதிகளில் விமானத்தை ஒருசேர தரிசிக்கலாம். திருமணத் தடை உள்ளவர்கள் லட்சுமி நாராயணர் முன்பு மட்டைத் தேங்காய் வைத்து வழிபடுகின்றனர். பிரசாதமான அதை வாங்கி வீட்டில் வைத்து தினமும் வழிபட்டால் திருமண யோகம் உண்டாகும்.பக்த ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமையில் துளசிமாலை சாத்தி ,நெய்தீபம் ஏற்ற நினைத்தது நிறைவேறும்.
108 திவ்ய தேசங்களில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பெருமாளை 'பெரிய பெருமாள்' என அழைப்பர். இக்கோயில் ஏழு பிரகாரங்களுடன் 156 ஏக்கர் பரப்பு கொண்டது. கோயிலைச் சுற்றி ஊர் இருக்கும். ஆனால் இங்கு கோயிலுக்குள் ஊர் இருக்கிறது. உள் வீதிகளில் வாகனங்கள் கூட செல்கின்றன. இங்குள்ள ரங்கநாயகி தாயாரே எல்லா தேவியரிலும் உயர்ந்தவள். பிரசாத பாத்திரம், வாத்தியம், பலகாரம் என எல்லாமே இங்கு பெரியது.உற்ஸவரை மக்களில் பெரியவனான ராஜாவுக்கு ஒப்பிட்டு 'ரங்க ராஜர்' என்றும், நமக்கே உரித்தானவர் என்னும் பொருளில் 'நம்பெருமாள்' என்றும், பேரழகு மிக்கவர் என்பதால் 'அழகிய மணவாளர்' என்றும் அழைக்கின்றனர். நவக்கிரகங்களில் அனைவராலும் விரும்பப்படுபவர் சுக்கிரன். தேவைக்கும்அதிகமாகபணம் வைத்திருப்பவரை,"உனக்கென்னப்பா சுக்கிர திசை' என புகழ்வதுண்டு. வெள்ளிக்கிழமையில் ஸ்ரீரங்கம் கோயிலை தரிசித்தால் வளமான வாழ்வு அமையும்.
மயில் வாகனத்தில் முருகப்பெருமானை பார்த்திருப்பீர்கள். ஆனால் மயில் மீது அமர்ந்த வள்ளி, தெய்வானையை பார்த்திருக்கிறீர்களா! சிவகங்கை மாவட்டம் இரணியூர் ஆட்கொண்டநாதர் கோயிலுக்கு வாருங்கள்.நரசிம்ம அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு, அசுரனான இரண்யனை வதம் செய்தார். அதனால் ஏற்பட்ட தோஷம் தீர சிவனை வழிபட்ட போது 'ஆட்கொண்டநாதர்' என்னும் பெயரில் இங்கு எழுந்தருளினார்.நரசிம்மருக்கு விமோசனம் தந்தவர் என்பதால் 'நரசிம்மேஸ்வரர்' என்றும் பெயருண்டு.இரணியனைக் கொன்ற பாவத்துக்கு விமோசனம் தந்த ஊர் என்பதால் இத்தலம் 'இரணியூர்' என பெயர் பெற்றது.ஆட்கொண்டநாதர், சுயம்பு மூர்த்தியாக இங்குள்ளார். கருவறை விமானத்தை சுவாமியாக கருதி வழிபடும் வழக்கம் இங்குள்ளது. முன்மண்டபத்தில் இருந்து சுவாமி, விமானத்தை ஒரே நேரத்தில் தரிசிக்கலாம். அறுபது, எண்பது வயதில் நடத்தும் சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகத்தை இங்கு நடத்துகின்றனர். மாசிமகத்தன்று சுவாமிக்கு விசேஷ அபிஷேகம் நடக்கிறது.சிவபுரந்தேவியம்மன் தெற்கு நோக்கி காட்சி தருகிறாள். நரசிம்மர் சிவனை வழிபட்ட போது உடனிருந்த அம்பிகை, இரண்ய வதத்தால் உக்கிரமாக இருந்த மகாவிஷ்ணுவின் தோற்றம் கண்டு கோபம் அடைந்தாள். அப்போது அவளிடம் இருந்து ஒன்பது சக்திகள் உருவாயின. அவர்கள் அம்மன் சன்னதி எதிரிலுள்ள துாண்களில் நவசக்திகள் என்ற பெயரில் உள்ளனர். இடது பக்கம் திரும்பிய நாய் வாகனத்துடன் பைரவர் இருக்கிறார்.இவருக்கு கார்த்திகை மாதம் 6 நாள் சம்பகசூர சஷ்டி நடக்கிறது.பிரகாரத்தில் வித்தக விநாயகரின் சன்னதி உள்ளது. மாணவர்கள் கல்வியில் சிறக்க இவரை வழிபடுகின்றனர். சிம்மங்கள் தாங்கும் மண்டபத்தில் தட்சிணாமூர்த்தி இருக்கிறார். குபேரனும், வாயு பகவானும் குதிரை வாகனத்தில் அமர்ந்தபடி உள்ளனர்.
திருச்சி அருகே திருநாராயணபுரம்எனும் ஊரில் வேதநாராயணப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இத்தல இறை வன் வேதநாராயணப் பெருமாள் எனும் திருநாமத்துடன் வேத நாயகி தாயாருடன் அருள்பாலிக்கிறார்.ஒருமுறை பிரம்ம தேவர், தன் பதவியை இழந்து மீண்டும் படைக்கும் பொறுப்பேற்றார். அப்போது அவர், தனக்கு வேதங்களை உபதேசிக்கும்படி பெருமாளை வேண்டினார். அவருக்கு பெரு மான், இத்தலத்தில் வேதங்களை உபதேசித்து, பின்பு இங்கேயே பள்ளிக்கொண்டார். அதன் காரணமாகவே இத்தல இறைவனுக்கு 'வேதநாராயணர்' என்ற பெயர் ஏற்பட்டது.பிற்காலத்தில் இங்குள்ள சுவாமியின் சிலை மண்ணால் மூடப் பட்டது, ஒரு சமயம், இவ்வூருக்கு வந்த வானவராயர் என்ற மன்ன னின் கனவில் தோன்றிய பெருமாள், "தனது சிலை மண்ணில் புதைந்திருப்பதாக" உணர்த்தி உள்ளார். இதையடுத்து அந்த சிலையை கண்டெடுத்த மன்னர், கோவிலும் கட்டினார்.இரணியனை அழித்தபோது உக்கிரமாக காட்சி அளித்த நரசிம் மர்,பிரகலாதனுக்கு இத்தலத்தில் சாந்த ரூபமாக காட்சி தந்ததாக கூறப்படுகிறது. இதனால் இங்குள்ள சுவாமியின் பாதம் அருகில் மூன்று வயது குழந்தையாக பிரகலாதன் காட்சி அளிக்கிறார்.ஆலயத்தில் அருள்பாலிக்கும் பெருமாள், நான்கு வேதங்களை யும் தலையணையாகக் கொண்டு, ஆதிசேஷன்மீது பள்ளிக் கொண்டபடி, நாபிக்கமலத்தில் இருக்கும் பிரம்மதேவருக்கு வேத உபதேசம் செய்கிறார். பெருமாளின் திருவடியில் ஸ்ரீதேவியும் பூதேவியும் இருக்கிறார்கள்.மூலவர்விமானம்வேதவிமானம்எனப்படுகிறது.கோவில் பிரகாரத்தில்ஆண்டாள், ராமானுஜர், நம்மாழ்வார், மணவாளமாமுனிவர், பிள்ளை லோகாச்சாரியார் ஆகியோர் உள்ளனர்.காவிரியின் வடகரையில் அமைந்துள்ள இக்கோவிலின் முகப் பில் உள்ள தீப ஸ்தம்பத்தில் கம்பத்தடி ஆஞ்சநேயர் இருக்கிறார். இப்பகுதி மக்களிடையே ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், இவர் முன்பாக பேசி தீர்த்துக் கொள்கிறார்கள். யாராவது பொய் சொன் னாலோ, ஏமாற்றினாலோ இங்குள்ள கம்பத்தடி ஆஞ்சநேயர் முன்பு சத்தியம் செய்யும் வழக்கம் உள்ளது.திருமணத் தடை உள்ளவர்கள், கல்வியில் மேன்மை அடைய விரும்புபவர்கள் இங்குள்ள இறைவனுக்கு துளசி மாலை அணி வித்து, 27 அகல் விளக்கு ஏற்றி ஜாதகத்தை பெருமாள் திருவடி யில் வைத்து வழிபட்டு செல்கின்றனர். தோஷம் உள்ளவர்கள், தங்களின் ஜென்ம நட்சத்திரமன்று இந்த வழிபாட்டை செய்வது விசேஷமாகும்.திருச்சி - முசிறி சாலையில் திருச்சியில் இருந்து 52 கிலோமீட்டர் தொலைவில் தொட்டியத்திற்கு அருகில் உள்ள திருநாராயண புரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது.
ஒருவருக்கு பெயர், புகழ். அந்தஸ்து ஆகியவற்றை கொடுப்பவர் சூரியபகவான். இவரின் அருளைப் பெற திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகிலுள்ள நெய்தவாயல் அக்னீஸ்வரரை ஞாயிறன்று வணங்குங்கள்.ராஜகோபுரம் இல்லாத சிறிய நுழைவு வாசலே கோயிலில் நம்மை வரவேற்கிறது, பின் நேராக சென்றால் கிழக்கு நோக்கி உள்ள அக்னீஸ்வரரை தரிசிக்கலாம். சிவலிங்கம் சற்று வெள்ளை நிறத்தில் இருக்கும். இங்கு சிறப்பம்சமே தீபாராதனைதான். சுவாமி முன் தீபாராதனை காட்டும் போது வெள்ளையாகவும், பின்புறம் கொண்டு செல்லும் போது கொஞ்சம் கொஞ்சமாக சிவப்பு நிறத்தில் மாற ஆரம்பிக்கும்.அதாவது சுவாமிக்கு பின்புறத்தில் தீபாராதனை காட்டினால், சிவலிங்கமே அக்னி ஜ்வாலையாக தெரியும். இதை தரிசித்தால் சூரியதோஷம் நீங்கும். ஞாயிறன்று உச்சிக் காலத்தின் போது தரிசித்தால் அந்தஸ்து உயரும். சர்ப்ப தோஷத்தால் திருமணம் தடைபடுபவர்கள் பால் அபிஷேகம் செய்து வில்வார்ச்சனை செய்கின்றனர்.பிறகு தெற்கு நோக்கியிருக்கும் திரிபுரசுந்தரி அம்மனின் தரிசனம் நம் கண்களை நிறைக்கும். பாசம், அங்குசத்தை கைகளில் ஏந்தியும் அபய, வரத ஹஸ்தத்துடன் காட்சி தரும் இவளை பார்த்தால் மனதில் மகிழ்ச்சி ஊற்றெடுக்கும்.அம்மனின் முன் ஸ்ரீசக்கரம் வைக்கப்பட்டு பூஜை நடக்கிறது. வெள்ளி அன்று மாலையில் நடக்கும் விசேஷ பூஜையில் பங்கேற்றால் விருப்பம் நிறைவேறும்.சோழர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில் கஜபிருஷ்ட அமைப்பைக் கொண்டது. தலவிருட்சமாக வில்வ மரம் உள்ளது.
பிறந்த நட்சத்திர நாளன்று கோயில் வழிபாடு செய்தால் முன்வினை பானம் தீரும். அன்று அவரவர் நட்சத்திரத்திற்கு உரிய தெய்வம். மரத்தை வழிபடுவது இன்னும் சிறப்பு, அதற்குரிய விசேஷ தலமாக திருவண்ணாமலை மாவட்டம் உக்கம்பெரும்பாக்கம் கூழமந்தல் ஏரிக்கரை அருகிலுள்ள நட்சத்திர விருட்ச விநாயகர் கோயில் உள்ளது.காஞ்சி மஹாபெரியவரின் வழிகாட்டுதலால் சிவானந்த சரஸ்வதி சதாசிவ சித்தர் சுவாமிகள் இங்கு நட்சத்திர விருட்சங்களை (மரம்) பிரதிஷ்டை செய்தார். பிறந்த நட்சத்திர நாளில் இங்குள்ள விநாயகரை வழிபட்ட பின் நட்சத்திர அதிதேவதைக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்வது நல்லது. அப்போது மரத்தை மூன்று முறை சுற்றுவது அவசியம். இதனால் சகல தோஷங்களும் விலகும். வேலைவாய்ப்பு. திருமணம், குழந்தைப்பேறு என சுபவிஷயங்கள் தடையின்றி நிறைவேறும். நட்சத்திரம் தெரியாதவர்கள் 27 நட்சத்திரம், 12 ராசிக்கான மரங்களை எல்லாம் பொதுவாக வழிபாடு செய்யலாம்.காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதியான விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிரதிஷ்டை செய்த அத்திருத்ராட்ச லிங்கேஸ்வரர் இங்கு இருக்கிறார். வள்ளி, தெய்வானையுடன் சிவசுப்பிரமணியர், குருபகவான், சனீஸ்வரர், ராகு, கேதுவுக்கு சன்னதிகளும் உள்ளன.