சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவர்கள் சாஸ்தாகோவில் நீர்த்தேக்கம், பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளிலிருந்து பாசனத்திற்காக தண்ணீரினை திறந்து வைத்தார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தலைமையில், திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கார்த்திக் அவர்கள் முன்னிலையில் விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டத்திலுள்ள சாஸ்தா கோவில் நீர்த்தேக்கம், வத்திராயிருப்பு வட்டத்திலுள்ள பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு, அணைகளிலிருந்து (23.11.2026) பாசனத்திற்காக தண்ணீரினை மலர் தூவி திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், விருதுநகர் மாவட்டத்திலுள்ள வேளாண் பெருங்குடி மக்களின் கோரிக்கைளை ஏற்று, சாஸ்தாகோவில் நீர்த்தேக்கம், பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகளிலிருந்து நீர் இருப்பு, நீர்வரத்து மற்றும் நீர்த்தேவை அடிப்படையில் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டிருந்தார்கள்.அதனடிப்படையில், இன்று நீர் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சாஸ்தாகோவில் பாசனத்திட்டம் என்பது நகரி ஆற்றின் குறுக்கே 36.47 மி.க.அடி கொள்ளளவில், கட்டப்பட்ட நீர்த்தேக்கம் ஆகும். தற்போது சாஸ்தாகோவில் நீர்த்தேக்கத்தில் 36.47 மி.க.அடி நீர் இருப்பில் உள்ளது.
தற்போது பாசனத்திற்காக சாஸ்தாகோவில் நீர்த்தேக்கத்திலிருந்து விநாடிக்கு 50 க.அடி வீதம் 23.11.2026 முதல் 29.11.2026 வரையிலான 7 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் மீதம் நீர் இருக்கும் வரை அணை நீர் வரத்து மற்றும் நீர் இருப்பினைக் பொறுத்து 09.01.2027 வரை மொத்தம் 48 நாட்கள் தொடர்ந்து தண்ணீர் வழங்கப்படும். இதன் மூலம் 11 கண்மாய்கள் வழியாக 2679.10 ஏக்கர் மற்றும் நேரடி பாசனம் மூலம் 451.58 ஏக்கர் ஆக மொத்தம் 3130.68 ஏக்கர் நிலங்கள் பயனடையவுள்ளன. வடக்கு தேவதானம், தெற்கு தேவதானம், சேத்தூர், முத்துசாமிபுரம், நல்லமங்கலம், செட்டியார்பட்டி மற்றும் கோவிலூர் ஆகிய ஏழு வருவாய் கிராமங்கள் பயனடையவுள்ளது.
வத்திராயிருப்பு வட்டத்திலுள்ள பெரியாறு மற்றும் கோவிலாறு ஆகிய அணைகள் முறையே 13.90 சதுர மைல், 9.57 சதுர மைல் நீர்ப்பிடிப்பு பகுதி கொண்டவை. 192.00 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட பெரியாறு அணையில்தற்போது 99.17 மில்லியன் கன அடி நீரும், 133 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கோவிலாறு அணையில் தற்பொழுது 16.89 மில்லியன் கனஅடி நீரும் இருப்பில் உள்ளது.பிளவக்கல் பாசன திட்டத்தின் கீழ் பயன்பெறும் பாசன பரப்பு 8531.17 ஏக்கர் (3452.515 ஹெக்டர்) ஆகும்.தற்பொழுது பாசனத்திற்காக பிளவுக்கல் பெரியாறு அணை மற்றும் கோவிலாறு அணைகளின் மூலம் 23.11.2026 முதல் 4 நாட்களுக்கு வினாடிக்கு 150 கனஅடி வீதமும், நேரடி கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 3.00 கனஅடி வீதம் 28.02.2027 வரையிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
மேலும் 23.11.2026 அன்று பிளவுக்கல் பெரியாறு அணை மற்றும் கோவிலாறு அணைகளிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் திறப்பினால் மீதமுள்ள கண்மாய்களுக்கு அணையின் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தைப் பொறுத்து பாசனத்திற்காகவும், பெரியாறு பிரதானக்கால்வாய் மூலம் நேரடி பாசனத்திற்காகவும் தண்ணீர் வழங்கப்படும். இத்தண்ணீர் திறப்பினால் பிளவுக்கல் திட்டத்தின் கீழ் உள்ள 40 கண்மாய்களின் 7219 ஏக்கர் விவசாய நிலங்களும், பெரியாறு பிரதான கால்வாய் நேரடி பாசனத்தின் மூலம் 960 ஏக்கர் விவசாய நிலங்களும் பயனடையவுள்ளன. இதன் மூலம் கொடிக்குளம், கான்சாபுரம், மகாராஜபுரம், வ.புதுப்பட்டி, வத்திராயிருப்பு, சுந்தரபாண்டியம், நத்தம்பட்டி, மூவரைவென்றான், மங்கலம், செம்மாண்டிகரிசல்குளம், பாட்டக்குளம் சல்லிபட்டி, விழுப்பனூர், தச்சகுடி, கிருஷ்ணபேரி, நெடுங்குளம், குன்னூர் ஆகிய 16 வருவாய் கிராமங்கள் பயனடையவுள்ளது.
இதேபோல் அணை நீர் இருப்பினை கருத்தில் கொண்டு பாசன பருவகாலம் வரை தேவைக்கேற்ப தண்ணீர் வழங்கப்படும். எனவே விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமென அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்வின் போது, வேளாண்மை இணை இயக்குநர் திரு.மோகன்தாஸ் சௌமியா, சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான் I A S., நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர்(மேல் வைப்பாறு) திருமதி மகேஷ்வரி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply