விவசாயிகள் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளுக்கான மானியம் பெற விண்ணப்பிக்கலாம் .
விருதுநகர் மாவட்டத்தில் 2026-27 ம் நிதியாண்டில் வேளாண் இயந்திரமயமாக்கல் துணை இயக்கம் திட்டத்தின் கீழ் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்கிட 392 நபர்களுக்கு ரூ.478.32 இலட்சம் மானியம் வேளாண்மைப் பொறியியல் துறை மூலமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்திடவும், குறித்த காலத்தில் பயிர் சாகுபடி செய்திடவும், விவசாயிகளின் நிகர லாபத்தை உயர்த்திடவும் தமிழக அரசு சார்பில் வேளாண்மை இயந்திரமயமாக்கல் திட்டம் வேளாண்மைப் பொறியியல் துறை மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் சிறு/குறு, ஆதிதிராவிட மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியமும் , இதர விவசாயிகளுக்கு 40 சதவீத மானியம் அல்லது அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிக பட்ச மானியத் தொகை வழங்கப்படுகிறது.
தற்போது இத் திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் தனிப்பட்டவிவசாயிகள் தங்கள் விண்ணப்பத்தினை உழவன் செயலியில் பதிவு செய்து பிரதி மாதம் 1 முதல் 7 வரை மற்றும் 15 முதல் 21 வரை விண்ணப்பத்தினை பதிவு செய்திட வேண்டும். பிரதி மாதம் 8 மற்றும் 22 ம் நாள் கணிணி முறை லாட்டரியில் தேர்ந்தெடுக்கப்படும் பயனாளிகளுக்கு கருவி/ இயந்திரத்திற்கான வழங்கலாணை வழங்கப்பட்டு, பின்னர் இயந்திரம்/கருவிக்கான மொத்த விலையில் மானியத்தொகை கழித்த தொகைக்கு வங்கி வரைவோலை(DD)/உடனடி மொத்த தீர்வு (RTGS) மூலமாக பணத்தினை உற்பத்தியாளருக்கு செலுத்திய பின்னர் கருவி/ இயந்திரங்களை அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்/விநியோகஸ்தர் விவசாயிகளுக்கு வழங்குவர். பின்னர் கருவி/இயந்திரங்களை உதவி செயற் பொறியாளர்(வே.பொ) மற்றும் வட்டாரப் பொறியாளர்கள் பார்வையிட்டு அரசாணையின்படி, உரிய வழிகாட்டுமுறையின்படி மானியம் விடுவிக்கப்படும்.
தற்போது சிறு உழுவை இயந்திரம், பெரிய உழுவை இயந்திரம், பவர்டில்லர், களை எடுக்கும் கருவி, ரோட்டவேட்டர், விதை மற்றும் உரமிடும் கருவி, பேட்டரியினால் இயங்கும் பருத்தி பறிக்கும் கருவி மின்மோட்டர்/இயந்திரம்/பவர் டில்லர்/20 எச்பி க்கு குறைந்த டிராக்டரால் இயங்கும் புல் வெட்டும் கருவி , பல்வகை கதிரடிக்கும் இயந்திரம் ,வைக்கோல் கட்டும் இயந்திரம் , தென்னை ஓலை வெட்டும் இயந்திரம் , எடுத்துச் செல்லக்கூடிய கால்நடைக் கொட்டகை ஆகியவை வழங்கப்படவுள்ளது. மொத்தம் 392 எண்கள் 478.32 இலட்சம் மானியம் வழங்கப்படவுள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் தங்களது விவசாய பதிவினை (Farmer Registers) கட்டாயமாக பதிவு செய்திருக்க வேண்டும். இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், பட்டா, அடங்கல், புலவரைபடம், ஆதார் நகல், குடும்ப அட்டை நகல், சாதிச் சான்றிதழ், சிறு/குறு விவசாயி சான்றிதழ் மற்றும் வங்கி புத்தகத்தின் முன்பக்க நகல் ஆகியவை தேவையான ஆவணங்கள் ஆகும்.
மேலும் விபரங்களுக்கு விருதுநகர், காரியாபட்டி, அருப்புக்கோட்டை, திருச்சுழி மற்றும் நரிக்குடி வட்டார விவசாயிகள் உதவி செயற் பொறியாளர் (வே.பொ), வேளாண்மைப் பொறியியல் துறை, மாவட்ட ஆட்சியரகம், விருதுநகர் (8838825538) மற்றும் திருவில்லிப்புத்தூர், இராஜபாளையம், வத்திராயிருப்பு, சிவகாசி, வெம்பக்கோட்டை மற்றும் சாத்தூர் வட்டார விவசாயிகள் உதவி செயற்பொறியாளர்(வே.பொ), வேளாண்மைப் பொறியியல் துறை, திருவில்லிபுத்தூர் (9786390851)ஆகியோரை தொடர்பு கொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S.,அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply