மாற்றுத்திறனாளி திரு.குமார் என்பவர் விடுத்த கோரிக்கையை ஏற்று காய்கறி கடையினை திறந்து வைத்து முதல் விற்பனையினை அமைச்சர் அவர்கள்தொடங்கி வைத்தார்.
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் விருதுநகர் மாவட்டம், சிவகாசி சாட்சியாபுரத்தில் மாற்றுத்திறனாளி திரு.குமார் என்பவர் சுயதொழில் தொடங்குவதற்காக முன்வைத்த கோரிக்கையை ஏற்று, அவருக்கு வாழ்வாதாரம் ஏற்படுத்தும் வகையில் காய்கறி கடையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தலைமையில் (22.09.2026) திறந்து வைத்து, விற்பனையை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசு அனைத்து தரப்பு மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் சுயமரியாதையுடனும், தன்னம்பிக்கையுடனும் வாழ்வதற்கு தேவையான வாழ்வாதார மற்றும் சுயதொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துவதில் அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.மாற்றுத்திறனாளிகள் தங்களது திறமை மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப சுயதொழில் தொடங்கி, பொருளாதார ரீதியாக தன்னிறைவை அடைவதற்கு அரசு சார்பில் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சிவகாசி சாட்சியாபுரத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி திரு.குமார் என்பவர் சமூக வலைதளத்தின் வாயிலாக,
”தனக்கு விபத்து ஏற்பட்டதால் நடமாட முடியாமல் இருக்கும் சூழ்நிலையிலும், அவரது மனைவியும் மாற்றுத்திறனாளியாக இருப்பதால் வெளியே சென்று வருமானம் ஈட்ட முடியாத சூழ்நிலையில் உள்ளனர். இதன் காரணமாக சாலை ஓரத்தில் திறந்த வெளியில் காய்கறி கடை வைத்துள்ளோம். திறந்த வெளி கடையாக இருப்பதால் மீதமுள்ள காய்கறிகளை வீட்டுக்கு கொண்டு செல்ல இயலாததால், பொருட்களை ஓரத்தில் கட்டி வைத்து செல்வோம். அதற்கும் கூட மற்றொருவரின் உதவி தேவைப்படுகிறது. அவ்வாறு வைத்துச் செல்லும் பொருட்கள் இரவு நேரங்களில் காணாமல் போய்விடுகிறது. இதன் காரணமாக எனது முதலீடும், வருமானமும் பாதிக்கப்படுகிறது. எனவே, எங்களது வாழ்வாதாரத்திற்கும், இந்த காய்கறி பொருட்களை பாதுகாப்பாக வைக்கவும், பெட்டிக்கடை வைத்துத்தர தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார்.“
அதனடிப்படையில் அவரது கோரிக்கையை ஏற்று, சமூக பங்களிப்பு நிதியின் மூலம் அவருக்கு வாழ்வாதாரம் ஏற்படுத்திடும் வகையில் காய்கறி கடை அமைக்கப்பட்டு, இன்று திறந்து வைத்து காய்கறிகளை வாங்கி முதல் விற்பனை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.இந்த காய்கறி கடையின் மூலம் மாற்றுத்திறனாளி தனது சொந்த உழைப்பின் மூலம் வருவாய் ஈட்டி, குடும்பத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும்.
இதுபோன்று மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெறப்படும் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்வின் போது, சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான் I A S., மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.பிரம்ம நாயகம், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply