சாலமன் பாப்பையா அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகிலுள்ள சாத்தங்குடியில் 1936ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி பிறந்த சாலமன் பாப்பையா, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ் இளங்கலைப் பட்டமும், மதுரை தியாகராஜர் கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார். கல்லூரிக் காலத்திலேயே நாடகங்களை இயக்கியும் நடித்தும் தனது கலைத் திறமையை வெளிப்படுத்தினார்.
பின்னர் மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். மாணவராக இருந்த காலத்திலிருந்தே மேடைகளில் பேசி வந்த அவர், பேராசிரியராகப் பணியாற்றிய காலத்திலும் தனது பேச்சாற்றலைத் தொடர்ந்து வளர்த்துக் கொண்டார்.
1961ஆம் ஆண்டு புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியே அவரது முதல் மேடைப் பேச்சாக அமைந்தது. அதன் பின்னர் பட்டிமன்ற நடுவர்களாக இருந்த குன்றக்குடி அடிகளார், ஜோதிமுத்து உள்ளிட்டோரின் ஊக்கமும், அவரது தனித்துவமான நகைச்சுவை கலந்த பேச்சாற்றலும் அவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கின.
தமிழை வெறும் பாடமாக அல்லாமல், மக்களின் வாழ்க்கையோடு இணைந்த மொழியாகக் கொண்டு சென்றவர் சாலமன் பாப்பையா. அவரது பேச்சும் எழுத்தும் தமிழ் மீது கொண்ட ஆழமான பற்றையும், தமிழை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற அக்கறையையும் வெளிப்படுத்தின.
இவரது சேவையை பாராட்டி 2000 ம் ஆண்டு தமிழ்நாடு அரசு கலைமாமணி விருதும், 2021ல் மத்திய அரசு 'பத்ம ஸ்ரீ' விருதும் வழங்கி கவுரவித்தன. அண்ணாமலை பல்கலை 2010ல் 'முத்தமிழ் பேரறிஞர் ' விருது வழங்கியது.
கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவராக இருந்தபோதிலும், ஜாதி, மத எல்லைகளைக் கடந்து அனைவராலும் தமிழறிஞராக மதிக்கப்பட்டவர் சாலமன் பாப்பையா. தன்னை ஒரு குறிப்பிட்ட மத அடையாளத்துக்குள் சுருக்கிக் கொள்ளாமல், தமிழ் ஆளுமையாகவே வாழ வேண்டும் என்பதே அவரது விருப்பமாக இருந்தது. பாரதியார், பாரதிதாசன் போன்றோரின் சிந்தனைகளை மக்களிடம் கொண்டு சேர்த்ததில் அவரது பங்கு குறிப்பிடத்தக்கது. பாரதியாரின் நினைவு நாளே தனது நினைவு நாளாகவும் அமையும் என்று அவர் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.
“சாகும்போதும் தமிழ் படித்துச் சாக வேண்டும்; என் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்” என்ற அறிஞரின் வரிகளுக்கு ஏற்ப, தன் இறுதி தருணங்களிலும் தமிழ் தன்னுடன் இருக்க வேண்டும் என்பதே சாலமன் பாப்பையாவின் விருப்பமாக இருந்தது. அதற்குச் சான்றாக, நேற்று அவரது உடல் மீது அவர் எழுதிய திருக்குறள் உரை வைக்கப்பட்டிருந்தது. அவரது விருப்பத்தை மதித்து, அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.
தமிழ் பேசிய குரல் ஓய்ந்தது.
பட்டிமன்ற மேடையின் பேரொளி மறைந்தது.
சாலமன் பாப்பையா அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி.22/02/1936 - 11/09/2026
0
Leave a Reply