சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்கள் மற்றும் வக்ஃபு வாரிய செயல்பாடுகள் குறித்துஅமைச்சர் பெருமக்கள் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (13.06.2026) பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.பி.செல்வம் அவர்கள், திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.கார்த்திக் அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி அவர்கள் மற்றும் சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான்,I A S., அவர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற ஆய்வுக்கூடத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு.ஏ.எம்.ஷாஜஹான் அவர்கள் ஆகியோர் சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்கள் மற்றும் வக்ஃபு வாரிய செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
இக்கூட்டத்தில் முஸ்லீம் மற்றும் கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கங்களின் செயல்பாடுகள், உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத்தின் செயல்பாடுகள் மற்றும் வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள், உலமா பணியாளர்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் மானியத்திட்டத்தின் செயல்பாடுகள், கிறிஸ்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியர்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத்தின் செயல்பாடுகள், கிறிஸ்துவ தேவாலயங்கள் பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள், கிறித்தவர்/முஸ்லிம்களின் பயன்பாட்டிற்காக கல்லறைத்தோட்டம்/கபர்ஸ்தான் அமைத்தல், சிறுபான்மையின மாணவிகளுக்கான கிராமப்புற பெண்கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டம், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம்(TAMCO) மூலம் வழங்கப்பட்ட கடனுதவிகள், சிறுபான்மையினருக்கு மின் மோட்டாருடன் கூடிய விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டம், பிரதான் மந்திரி ஜன்விகாஸ் கார்யகிராம் திட்டம்(PMJVK) உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பின்னர், முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த ஆதரவற்ற மற்றும் ஏழ்மை நிலையிலுள்ள மகளிருக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும், சுயதொழில் செய்து வருமானம் ஈட்ட வழிவகை செய்யும் பொருட்டு, 160 முஸ்லீம் மகளிர்களுக்கு ரூ15.78 இலட்சம் மதிப்பீட்டில் கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, சிறுதொழில் விரிவாக்க உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும், 15 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பயனாளிகளுக்கு ரூ.80,980/- மதிப்பீட்டில் விலையில்லா தையல் இயந்திரம், விலையில்லா தேய்ப்புப் பெட்டிகளையும், 4 உறுப்பினர்களுக்கு உலமாக்கள் நல வாரிய அட்டைகளையும், 1 உறுப்பினருக்கு கிறிஸ்துவ உபதேசியர் நல வாரிய அட்டையையும் என மொத்தம் 180 பயனாளிகளுக்கு ரூ.16.59 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு.ஏ.எம்.ஷாஜஹான் அவர்கள் ஆகியோர் வழங்கினார்கள்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:
தமிழக அரசு மக்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக சிறுபான்மையின மக்களை பாதுகாக்கவும் அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் அவர்களுக்கான கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக மேம்பாட்டை நோக்கமாக கொண்டு பல்வேறு அரசு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.ஒரு மாநிலத்தின் உண்மையான வளர்ச்சி என்பது தொழில்துறை வளர்ச்சியில் மட்டுமல்ல அந்த மாநிலத்தில் வாழும் விளிம்புநிலை மற்றும் சிறுபான்மையின மக்களின் பொருளாதார வளர்ச்சியிலும் தான் அடங்கியுள்ளது. அதை மிகச்சரியாக உணர்ந்த அரசுதான் நமது அரசு.ஆதரவற்ற, ஏழை இஸ்லாமிய மற்றும் கிறித்துவ மகளிரின் வாழ்வாதாரத்தை உயர்த்த இஸ்லாமிய/கிறித்துவ 'மகளிர் உதவும் சங்கங்கள்' மூலம் தையல் இயந்திரங்கள், சிறுதொழில் மற்றும் கல்வி நிதியுதவிகள் பெருமளவில் வழங்கப்பட்டுள்ளன. சமூகத்திற்கு வழிகாட்டும் உலமாக்கள் மற்றும் கிறித்துவ உபதேசியார்கள், பணியாளர்கள் நல வாரியங்கள் மூலம் பல்வேறு சமூகப் பாதுகாப்பு உதவிகள் வழங்கப்படுகின்றன.அதன்படி, இன்றைய தினம் 180 பயனாளிகளுக்கு ரூ.16.59 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக பெண்களின் வாழ்வாதாரத்திற்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
அரசு நலத்திட்ட உதவிகளைப் பெற்றுள்ள அனைத்துப் பயனாளிகளுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த உதவிகளை நல்வழியில் பயன்படுத்தி உங்கள் வாழ்வை நீங்கள் வளமாக்கிக் கொள்ள வேண்டும்.இத்தகையதொரு சிறப்பான ஆய்வுக்கூட்டத்தை ஒருங்கிணைத்த சிறுபான்மையின நலத்துறைக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.சிறுபான்மை சமுதாயத்தினுடைய கல்வி, பொருளாதாரம் போன்ற நிலைகளை உயர்த்துவதற்காக நீதியரசர் ஸ்ரீ ராஜிந்தர் சச்சார் அவர்களுடைய பரிந்துரையின் அடிப்படையிலே சிறுபான்மையினர் நலத்துறை என்று ஒரு துறை பிரிக்கப்பட்டு, இஸ்லாமிய, கிருஸ்துவ சமுதாயத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களையும், வளர்ச்சித் திட்டங்களையும், கல்விக்கான திட்டங்களையும் அரசு தொடர்ச்சியாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.
அந்த வகையிலே விருதுநகர் மாவட்டத்திலே 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சுமார் 11 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கக்கூடிய இந்த மொழி வழி, மத வழி சிறுபான்மையின மக்களுக்கு அரசின் உதவிகள், நலத்திட்டங்கள் சரியான முறையில் சென்று சேர்கிறதா என்பதை ஆய்வு செய்வதற்காகத்தான் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இன்று தமிழகத்திலே முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கக்கூடிய தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் ஒட்டுமொத்த தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், அனைத்து மக்களின் நன்மைக்காகவும், அதிலும் குறிப்பாக சிறுபான்மை மக்களின் நலனுக்காகவும் மிகுந்த அக்கறை கொண்டுள்ள காரணத்தினால், வரக்கூடிய நிதிநிலை அறிக்கையிலே பல்வேறு சிறப்பான திட்டங்களை அறிவிக்க இருக்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக வரக்கூடிய ஐந்து ஆண்டுகளை கணக்கில் எடுத்துக்கொண்டு, தொலைநோக்கு திட்டங்களை அறிவிக்க இருக்கிறார்கள். அந்த திட்டங்களை மேலும் செம்மைப்படுத்தக்கூடிய வகையிலே இந்த கலந்துரையாடக்கூடிய வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு, நீங்கள் அளிக்கக்கூடிய தகவல்களை, கோரிக்கைகளை உள்வாங்கிக்கொண்டு, அந்த திட்டங்களை மேலும் சிறப்பாக செயல்படுத்துவதற்கு உதவும் என்ற அடிப்படையில் தான் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியும் இங்கே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.மிகக் குறிப்பாக, இந்தத் துறையின் சார்பிலே பல்வேறு உதவித்தொகை வழங்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் போன்ற வழிபாட்டுத் தலங்கள் புதுப்பித்துக் கொள்ளக்கூடிய வகையிலும், சேதமடைந்திருக்கக்கூடிய இது போன்ற தலங்களை புனரமைக்கக்கூடிய வகையிலும் இந்தத் துறையின் சார்பிலே நிதி ஒதுக்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது.
அதுபோலவே, உலமாக்களுடைய நல வாரியத்திலே பதிவு செய்திருக்கக்கூடிய உலமாக்களுக்கும், தேவாலயத்திலே பணிபுரியக்கூடிய அந்த உபதேசியார்கள் என்று சொல்லக்கூடியவர்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்களும் இந்தத் துறையின் சார்பிலே செயல்படுத்தப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. இறந்தவர்களை அடக்கம் செய்வதற்காக இருக்கக்கூடிய கல்லறைத் தோட்டம், கபரஸ்தான் போன்றவைகளுக்கு எல்லா இடங்களிலும் அதற்கான இடங்களைத் தேர்வு செய்து, இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு வழிவகை செய்யக்கூடிய வகையிலே தமிழகத்திலே இருக்கக்கூடிய அனைத்து மாநகராட்சியிலும் இடம் ஒதுக்க வேண்டும் என்ற அடிப்படையிலும், 38 மாவட்டங்களிலும் இதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்ற அடிப்படையிலும் கிட்டத்தட்ட 90-க்கும் அதிகமான இடங்களிலே அதற்கான பணிகள் முடிவு பெற்றுவிட்டது.
அந்த வகையிலே விருதுநகர் நகராட்சியிலும், சிவகாசி மாநகராட்சியிலும் அதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, விருதுநகர் நகராட்சி கோட்டைப்பட்டியில் இடம் தேர்வு செய்யப்பட்டு நகராட்சியால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. சிவகாசி மாநகராட்சி பகுதியில் விரைவில் அதற்கான இடம் கையகப்படுத்தப்பட இருக்கிறது.அதுபோலவே, தமிழகத்திலே இருக்கக்கூடிய பள்ளிவாசல்களை நிர்வகிக்கக்கூடிய வக்ஃபு வாரியமும் சிறுபான்மைத் துறைக்கு கீழே வருவதால், அந்த பள்ளிவாசலினுடைய செயல்பாடுகளும், வரவு செலவுகளும், அந்த பள்ளிவாசலினுடைய புதுப்பிக்கும் பணிகளும், நிதி ஒதுக்கீடு செய்யக்கூடிய பணிகளையும் இந்தத் துறை செய்து வருகிறது.அதுபோலவே தேவாலயங்களுக்கும் குறிப்பிடத்தக்க அளவிலே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. 100 ஆண்டுகளைக் கடந்திருக்கக்கூடிய பழமைவாய்ந்த தேவாலயங்களுக்கு ₹2 கோடி அளவுக்கு நிதி உதவி அளித்து, அது புனரமைக்கக்கூடிய பணிகளும் இந்தத் துறையின் மூலம் செய்யப்பட்டு வருகிறது.
உலமாக்களுக்கு இருசக்கர வாகனங்கள் ஏற்கனவே ₹25,000 ஆக இருந்து தற்போது ₹50,000 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதுவும் இந்த மாத இறுதிக்குள் சுமார் 1,000 உலமாக்களுக்கு அந்த வாகனத்தை அளிக்க வேண்டும் என்ற அடிப்படையிலே அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.மேலும், முஸ்லிம் உதவும் சங்கங்கள், கிறிஸ்துவ உதவும் சங்கங்கள் ஒரு பங்கு நிதியை அளித்தால், அதனுடன் கூடுதலாக 2 பங்கு நிதியுடன் சேர்த்து நலத்திட்ட உதவிகளை இந்த சிறுபான்மை சமுதாயம் பெறக்கூடிய வகையிலே ஒரு திட்டம் இருக்கிறது.ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகபட்சமாக இரண்டு உதவும் சங்கங்களை நாம் நிறுவிக் கொள்ள முடியும். இரண்டாவது சங்கம் தொடங்கப்பட வேண்டும் என்று சொன்னால், இந்த முதலாவது சங்கம் முழுமையாக செயல்பட்டு, அதனுடைய பயன்கள் முழுமையாக அந்த பயனாளிகளுக்கு கிடைக்கக்கூடிய வகையில் செயல்படுமேயானால், மேலும் ஒரு சங்கத்தைத் தொடங்கி இந்த ஏழை எளிய மக்களுக்கு உதவக்கூடிய வகையிலே திட்டங்களை செயல்படுத்த முடியும்.
அதேபோலவே, நிதிநிலை அறிக்கையிலே இந்தத் துறை சார்ந்து இதுவரை ஒதுக்கீடு செய்த தொகையை விட ஒரு சிறப்பான முறையிலே தொகையை ஒதுக்கீடு செய்து, இந்த சிறுபான்மை சமுதாயம் கல்வி, வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சி போன்றவற்றிகளில் அடுத்த நிலைக்கு உயர்த்த வேண்டும் என்ற அடிப்படையிலே, தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான அரசு ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறது.அந்த வகையிலே நிச்சயமாகச் சொல்ல முடியும், உறுதியாகச் சொல்ல முடியும், வரக்கூடிய நிதிநிலை அறிக்கையிலே இந்த சிறுபான்மை சமுதாயத்திற்கான நிதிகள் உயர்த்தி வழங்கப்பட இருக்கிறது.எனவே, சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதோடு, இந்தத் திட்டங்கள் சென்று சேராத அனைவருக்கும் இந்தத் திட்டங்களை கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் வைப்பதோடு, இந்தத் திட்டங்கள் மூலம் எல்லா நிலையிலும் பின்தங்கி இருக்கக்கூடிய சமுதாயம் அடுத்த நிலைக்கு உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படக்கூடிய அரசிற்கு அனைத்து நிலைகளிலும் நீங்க அனைவரும் ஒத்துழைப்போடு இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
பின்னர், இக்கூட்டத்தில் கலந்து கொண்ட கிருஸ்துவ, இஸ்லாமிய, பௌத்தர், சீக்கியர், ஜெயின் உள்ளிட்ட சிறுபான்மையின பிரதிநிதிகள் கலந்து கொண்டு, தங்கள் கோரிக்கைகள் மற்றும் கருத்துக்களை அமைச்சர் அவர்களிடம் தெரிவித்தனர். இந்த கோரிக்கைகளை முறையாக பரிசீலனை செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்தார்.
0
Leave a Reply