தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் எதிர்வரும் 28.09.2025 அன்று நடைபெறவுள்ள தொகுதி II மற்றும் II A தேர்வுகளுக்கு, உரிய நடைமுறையினை தேர்வர்கள் பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தகவல்.
விருதுநகர் மாவட்டத்தில், விருதுநகர் / சாத்தூர் / சிவகாசி / அருப்புக்கோட்டை / திருவில்லிபுத்தூர் / இராஜபாளையம் ஆகிய வருவாய் வட்டங்களில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் எதிர்வரும் 28.09.2025 முற்பகல் 9.30 மணி முதல் 12.30 மணி வரை மட்டும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி – II (தொகுதி - II மற்றும் தொகுதி - IIA) பதவிகளுக்கான போட்டித் தேர்வு மொத்தம் 63 தேர்வு மையங்களில் 19083 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, விருதுநகர் மாவட்டத்தில் விண்ணப்பத்தாரர்கள் காலை 08.30 மணிக்கு தேர்வு கூடத்திற்கு அனுமதிச்சீட்டு (Hall Ticket) உடன் வருகைபுரிய அறிவுறுத்தப்படுகிறார்கள். காலை 09.00 மணிக்கு மேல் தேர்வு கூடத்திற்கு வருகை தரும் தேர்வர்கள் கண்டிப்பாக தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும், தேர்வர்கள் 12.30 மணிக்கு முன்னர் தேர்வறையிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள். தேர்வர்கள் தங்களுடைய புகைப்பட அடையாள அட்டைகளான ஆதார் அட்டை /கடவுச்சீட்டு (Passport)/ஓட்டுநர் உரிமம்/நிரந்தர கணக்கு எண்(PAN Card)/வாக்காளர் அடையாள அட்டை யின் அசல் அல்லது ஒளிநகலை கொண்டு வர வேண்டும்.
தேர்வர்கள் கருப்பு நிற பந்துமனை பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும், தேர்வர்கள் தேர்வு கூடத்தின் உள்ளே மொபைல் போன், மின்னணு கைக்கடிகாரம் (Electronic Watch), புளுடூத் (Bluetooth) போன்ற மின்னணு சாதனங்களை எடுத்து செல்ல அனுமதி இல்லை. தேர்வர்கள் எளிய அனலாக் கைக்கடிகாரங்கள் (Simple Analog Watches) பயன்படுத்தலாம்.
தேர்வர்கள் தேர்வு கூடங்களுக்கு செல்வதற்கு ஏதுவாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தின் மூலம் சிறப்பு பேருந்து வசதிகள் தேர்வு நாளன்று காலை 06.00 மணி முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் மேற்குறிப்பிட்ட முக்கிய அறிவுரைகளை பின்பற்றி தேர்வில் வெற்றி பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply