சிதறிய கவளச் சோறு
நாம் பிறந்து வளர்ந்து பின்பு நம் குழந்தைகளுக்காக , சேர்த்து வைக்க பலவாறு பாடுபடுகிறோம். உழைப்பு, முயற்சி என்று அயராது பாடுபட்டு பலவிதமான தடைகளில் இருந்து, மூழ்கி எழுந்து என்ற தொடர்கதைதான் வாழ்க்கை. அப்படிப்பட்ட வாழ்க்கையை வெறுக்காமல் பார்த்துக் கொள்வது நம்முடைய நம்பிக்கை தான்.
சரி, நம் வாரிசுகளுக்கு நல்ல படிப்பு,வீடு,நிலம் என்று எல்லா வசதிகளையும் சிறப்பாகவே செய்திருக்கிறோம். பேரன், பேத்திகளுடன் நன்றாகவே, சந்தோஷமாகவே இருக்கிறோம். ஆனாலும் ஒரு நெருடல் நம்மை அறியாமல் ஏதோ ஒரு மூலையில் ஒன்றை செய்யத் தவற விட்டது போல ஒரு தவிப்பு.
இந்த உலகத்தில் பிறந்து எத்தனை அனுபவித்து விட்டோம் .இந்த மண்ணிற்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும். நாம் சம்பாதிக்கும் பணத்தில் நமக்கு முடிந்த அளவு “ இந்தாப்பா இதை வைத்து பிழைத்துக்கொள் என்று ஒரு தொகையை கொடுக்கிறோம்”. நிலம்,வீடு, வாகனத்திற்காக அரசாங்கம் வரி வசூலிக்கின்றது. அந்த ஊரில் பஞ்சம், வெள்ளம், வந்துவிட்டால் அங்கே போய் வரி வசூல் செய்ய மாட்டார்கள். விட்டுவிடுவார்கள். நடப்பு தெரியாமல் வரி கட்டித்தான் ஆகவேண்டும் என்றால் எப்படி முடியும். அதைப்போல கஷ்டத்திற்காக, கொடுக்கும் பொருளை ஒருக்காலும் திருப்பிக் கேட்கக்கூடாது. விட்டுவிடவேண்டும்.
யானைக்கு கவளம் கவளமாக உணவைக் கொடுக்கிறான் யானைப்பாகன். யானையின் வாயைத் திறக்கச்சொல்லி கவளத்தை 'டபக்' 'டபக்' கென்று போட அது அசை போடுகின்றது. அப்படிச் செய்யும் பொழுது ஒரு கவளம் சோறு, கீழே தவறுதலாக விழுந்து சிதறி விடுகின்றது. அந்த சிதறிய கவளச் சோறு லட்சக்கணக்கான எறும்புகளுக்கு ஒரு வேளை உணவாகிறது. எறும்புகளுக்கு திருப்தி யானைக்கும் திருப்தி தானே!. ஒரு கவளம் சோறு வீணாவதால் யானைக்கு எந்த விதத்திலும் நஷ்டம் இல்லை.
நாம் சம்பாதித்த பணத்தில் ஒரு அளவு ரூபாயை இயலாதவர்களுக்கு, செலவு செய்வதினால் கொடுப்பவர்களுக்கு நிறைவு. வாங்குபவர்களுக்கு தங்களுடைய இயலாமைக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்.நாம் ஒரு கஷ்டமான சூழ்நிலையில் இருக்கும் பொழுது யாராவது தேடி வந்து உதவி செய்தால் எவ்வளவு மனநிறைவு கிடைக்குமோ ,அதைவிட பலமடங்கு நமக்கும் திருப்தி ஏற்படும்.
ஒரு மனிதனுக்கு நாம் செய்யும் உதவி ஒரு தலைமுறையினை நிமிர்ந்து நடக்கச் செய்யும். உதவி பெற்று நல்ல நிலைமையில் இருப்பவர்கள், நல்ல மனிதர்களின் அரவணைப்பில் கிடைத்த வெற்றியை, தானும் கொடுத்து மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறான்.
0
Leave a Reply