நடப்பு ஆண்டு 500 மெ.டன் உளுந்து கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது
விருதுநகர் மாவட்டத்தில் 2024-2025 ஆம் ஆண்டு ராபி பருவத்தில் 500 மெ.டன் உளுந்து கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலை கிடைத்திடவும், அவர்களின்; வருவாய் மற்றும் வாழ்வாதாரத்தினை உயர்த்திடவும் தமிழக அரசு பல்வேறு உழவர் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் உளுந்து சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவர்கள் விளைவித்த உளுந்து விளைபொருளை மத்திய அரசின் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு இணையத்தின் (NCCF) மூலம், விலை ஆதரவு திட்டத்தின்கீழ் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. முதன்மை கொள்முதல் நிலையங்களான சாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் உளுந்து 250 மெ.டன் மற்றும் அருப்புக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் உளுந்து 250 மெ.டன் கொள்முதல் செய்யப்பட உள்ளது. உளுந்துக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிலோ ஒன்றுக்கு ரூ.74- என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நியாயமான சராசரி தரத்தின்படி உளுந்து விளைபொருளில் அதிகபட்சமாக இதர பொருட்கள் கலப்பு 0.1 சதவீதமும், இதர தானியங்கள் கலப்பு 0.1 சதவீதமும், சேதமடைந்த பருப்புகள் 0.5 சதவீதமும், வண்டுதாக்கிய பருப்புகள் 2 சதவீதமும், ஈரப்பதம் 10 சதவீதமும் இருக்கலாம்.
விவசாயிகள்; உளுந்து விளைபொருளை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு சம்மந்தப்பட்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் அசல் சிட்டா, கிராம நிர்வாக அலுவலர் கையொப்பமிட்ட அடங்கல், வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் கைபேசி எண் ஆகிய விவரங்களை சமர்ப்பித்து பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் இக்கொள்முதல் 15.03.2025 முதல் 12.06.2025 வரை நடைபெறும்.
விவசாயிகளுக்கு உரிய தொகை அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இத்திட்டம் தொடர்பான விவரங்களை சாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளரை 04562 - 260410, 9003356172 என்ற எண்ணிற்கும், அருப்புக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளரை 04566 - 220225, 7904537699 என்ற எண்களிலும் தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு விருதுநகர் வேளாண் துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) / தனி அலுவலர் மற்றும் விருதுநகர் விற்பனைக்குழு, செயலாளர் ஆகியோர்களை அணுகியும் தகவல்களை பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply