சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவர்கள் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமினை தொடங்கி வைத்தார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள், இராஜபாளையம், டி.பி.மில் சாலை, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமினை (22.11.2026) தொடங்கி வைத்தார்.தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி 7 மாவட்டங்களில் உள்ள துணை சுகாதார நிலையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
போலியோ எனப்படும் இளம்பிள்ளைவாத நோயை இந்தியாவிலிருந்து ஒழிக்கும் பொருட்டு கடந்த 1995 ம் ஆண்டு முதல் 30 ஆண்டுகளாக தீவிர முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இம்முகாமில் பிறந்ததிலிருந்து 5 வயதிற்குட்பட்ட (0-5 வயது) அனைத்துக் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் 1,30,013 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து இலவசமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் 1,144 மையங்களில் சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகின்றன. இந்த மையங்கள் அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிகள், சாவடிகள், கோயில்கள் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்களில் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.
மேலும் ரயில் நிலையம், பஸ் நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் 'நடமாடும் முகாம்' மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.ஏற்கனவே முறையான தவணைகளில் சொட்டு மருந்து கொடுக்கப்பட்டிருந்தாலும் இம்முகாமிலும் சொட்டு மருந்து தவறாது கொடுக்கப்பட வேண்டும். லேசான ஜூரம், சளி, இருமல், வயிற்றுப்போக்கு இருந்தாலும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கலாம்.இம்முகாமில் சுகாதாரப் பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் என மொத்தம் 4,555 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.
மேலும் 21 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு இலங்கை அகதிகள் முகாம், நரிக்குறவர்கள் மற்றும் தற்காலிக குடியிருப்புகளில் வசிக்கும் பிறந்ததிலிருந்து 5 வயதிற்குட்பட்ட (0 - 5 வயது) குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்க தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் 37 குழுக்கள் மூலம் ரயில்வே நிலையங்கள், பேருந்து நிலையங்கள், கோயில் திருவிழாக்கள் மற்றும் திருமண விழாக்களுக்கு வரும் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்க வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
ஆகையால் பொதுமக்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளை போலியோ சொட்டு மருந்து முகாமிற்கு அழைத்துச் சென்று, குழந்தைகளை போலியோ நோயிலிருந்து பாதுகாத்து போலியோ இல்லாத சமுதாயத்தை அமைக்க வேண்டும் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் தெரிவித்தார்.இம்முகாமில் சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான் I A S., சிவகாசி மாவட்ட சுகாதார அலுவலர் மரு.இந்திரா, இராஜபாளையம் நகராட்சி ஆணையர் திரு.முஸ்தபா, மருத்துவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply