25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Dec 20, 2025

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடத்தப்படும் இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி வழங்கப் பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TNPSC Group –I, Group-IV, Group-II/IIA, TNUSRB, SSC, Railway போன்ற அனைத்து வகை தேர்வுகளுக்காக விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடத்தப்படும் இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு  பயிற்சி வழங்கப் பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இந்தப் பயிற்சி வகுப்புகளில் தேர்ந்தெடுக்கப்படும் பயிற்றுநர்களுக்கு அரசு விதிகளுக்கு உட்பட்டு மதிப்பூதியம் ரூ.800/hr வழங்கப்படும். மேலும், 22.12.2025 அன்று காலை 11:00 மணியளவில் நடைபெறும்  நேர்முகத் தேர்விற்கு வரும்போது பயிற்றுநர்கள் பாடக்குறிப்புகள், PPT, முந்தைய ஆண்டு கேள்வித்தாள்கள், மாதிரித் தேர்வு நடத்துவதற்கான கேள்வி மற்றும் பதில்கள் (ஆங்கிலம் மற்றும் தமிழ்) ஆகியவற்றை தயார் செய்து எடுத்துவர வேண்டும்.மேலும், மேற்கண்ட தேர்வுகளில் முதன்மை தேர்வுகளில் கலந்து கொண்ட அனுபமிக்க இளைஞர்கள், அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு பயிற்சி வகுப்பு நடத்த விருப்பம் இருப்பின் தங்களது சுயவிவர படிவத்தினை https://forms.gle/PH1QbUprWxVbp3LQA google form அல்லது studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் அனுப்புவதோடு நேரில் கலந்து கொள்ளவும். மேலும், கூடுதல் தகவலுக்கு 93601-71161 என்ற Whatsapp எண்ணைத் தொடர்பு கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Dec 19, 2025

சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா-2025 னை முன்னிட்டு அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் ஏழைப்பெண்களுக்கு திருமாங்கல்யத்திற்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவி வழங்கும் விழா.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (18.12.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்களின் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள், சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் மற்றும் விருதுநகர் நகர்மன்றத்தலைவர் திரு.ஆர்.மாதவன் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில், நடைபெற்ற சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும்  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர் தையல் பயிற்சி பெற்ற 28 சிறுபான்மையின பயனாளிகளுக்கு ரூ.1.57 இலட்சம் மதிப்பில் மின்மோட்டார் பொருத்தப்பட்ட விலையில்லா தையல் இயந்திரங்களை வழங்கினார்கள்.பின்னர், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், ஏழைப்பெண்களுக்கு திருமாங்கல்யத்திற்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ், 146 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் வீதம் ரூ.1.38 கோடி மதிப்பிலான தங்க நாணயங்களையும், ரூ.60 இலட்சம் மதிப்பில் திருமண நிதியுதவிகளும் என மொத்தம் ரூ.1 கோடியே 98 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.              தமிழக அரசின் திருமண உதவித் திட்டம் என்பது, பொருளாதார அளவில் நலிவுற்ற, ஏழை விதவை தாய்மார்களின் மகள்களுக்கு திருமணத்தினை நடத்திட போதிய வசதி இல்லாமல் ஏற்படும் சிரமத்ததை தவிர்த்திக்கும் வகையிலும், சமூகத்தில் பிறப்பு அடிப்படையிலான இனப்பாகுபாட்டினை களைந்து சமநிலையை உருவாக்கிடவும், தாய், தந்தையர்கள் இல்லாத ஆதரவற்ற பெண்களுக்கு பொருளாதார வகையில் திருமணத்திற்கு உதவிட தாலிக்கு தங்கம் வழங்கிடும் பொருட்டும், கணவரை இழந்த விதவைகளுக்கு புதுவாழ்வு அளித்திட  விதவை மறுமணம் திருமண நிதியதவி வழங்கிடும் வகையிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதன்படி, பள்ளிப் படிப்பை முடித்த பெண்களுக்கு நிதியுதவி தொகையாக ரூ.25,000/- மற்றும் பட்டபடிப்பு பயின்ற பெண்களுக்கு ரூ.50,000/- நிதியுதவியுடன் 8 கிராம் தங்க நாணயமும், வழங்கப்படுகிறது.அந்த வகையில், ஏழைப்பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியும் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்றைய தினம் 141 பயனாளிகளுக்கு 8 கிராம் தங்க நாணயங்களும், திருமண நிதியுதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.தடைகளைத் தாண்டி சமுதாயத்தில் உள்ள அனைத்துத்தரப்பு மக்களும் முன்னேற வேண்டும் என்ற நோக்குடன் நம்முடைய  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயலாற்றி வருகிறார். அத்தகைய முதலமைச்சர் அவர்களுக்கு நாம் அனைவரும் உறுதுணையாக நிற்க வேண்டும் என தெரிவித்துக் கொண்டார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை நல அலுவலர் திருமதி திலகம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு ஜான்சன் தேவசகாயம், அரசு அலுவலர்கள், பயனாளிகள், மாவட்ட சிறுபான்மையினர் பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Dec 19, 2025

இளைஞர் நீதி குழும அலுவலகம் திறப்பு.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் (18.12.2025) குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில், அமைக்கப்பட்டுள்ள இளைஞர் நீதி குழும அலுவலகத்தை, முதன்மை மாவட்ட நீதிபதி திரு கே.ஜெயக்குமார் அவர்கள் மற்றும் விருதுநகர் 'மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு தெ. கண்ணன் த.கா. ப. அவர்கள் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் மரு, என். ஓ. சுகபுத்ரா  I A S., அவர்கள் திறந்து வைத்தார்.

Dec 18, 2025

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் ஆட்சிமொழிச் சட்ட வார விழிப்புணர்வுப் பேரணி.

விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் ஆட்சிமொழிச் சட்டம் குறித்தும், வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகை அமைத்தல் குறித்தும் நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியை சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.கனகராஜ் அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் தமிழே ஆட்சிமொழியாக இருக்க வேண்டும். அரசு நிருவாகம் முழுமையாகத் தமிழில் மேற்கொள்ளப்பெற வேண்டும் என்ற சீரிய நோக்கில் 27.12.1956-இல் சட்டமன்றத்தில் ஆட்சிமொழிச்  சட்டம் இயற்றப்பட்டதை நினைவுகூரும் வகையில் எல்லா மாவட்டங்களிலும் ஆட்சிமொழிச் சட்டவாரம் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த வகையில் விருதுநகர் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 17.12.2025  முதல் 26.12.2025  வரை ஆட்சிமொழிச் சட்ட வாரம் கொண்டாடப்படவுள்ளது.  இதன் ஒரு பகுதியாக  17.12.2025  ஆட்சிமொழிச் சட்டம் குறித்தும், வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகை அமைத்தல் குறித்தும் விழிப்புணர்வுப் பேரணி சாத்தூர் நகராட்சி மதுரை பேருந்து நிறுத்தத்தில் இருந்து  காவல்நிலையம் வழியாக  கடைவீதி வரை(காய்கறி சந்தை) வரை    நடைபெற்றது.இப்பேரணியின் போது, ஆட்சிமொழிச் சட்டம் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகை அமைத்தல் குறித்து பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு துண்டறிக்கைகளும், ஒட்டுவில்லைகளும் வழங்கப்பட்டன.இப்பேரணியில் விருதுநகர் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர்      திருமதி ந.ஜோதிலெட்சுமி, சாத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், தமிழறிஞர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட  200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Dec 17, 2025

தமிழ்நாடு மாநில ஊரக/ நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மகளிர் சுயஉதவிக்குழுவின் மதி சிறுதானிய உணவகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் திறந்து வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், ஆனையூர் ஊராட்சியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (16.12.2025) தமிழ்நாடு மாநில ஊரக/நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள மகளிர் சுயஉதவிக்குழுவின் மதி சிறுதானிய உணவகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா.  I AS., அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்.தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி, விருதுநகர் மாவட்டத்தில், பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக வறுமை ஒழிப்பு, சிறந்த சுகாதாரம், கல்வி ஆகியவற்றிற்காக பெண்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்திடவும், வேளாண்மையில் முதன்மையாக விளங்கக்கூடிய சிறு தானிய விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதுடன் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.மேலும், மகளிர் குழு உறுப்பினர்கள் தயாரிக்கும் உற்பத்தி பொருள்களை விற்பனை செய்ய ஏதுவாக பல முன்னெடுப்புகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சிவகாசி அரசு கலை அறிவியல் கல்லூரியில் மதி சிறுதானிய உணவகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.இந்த உணவகத்தில் ராகி, தினை, சோளம், வரகு, குதிரைவாலி, கம்பு உள்ளிட்ட சிறுதானியங்கள் மூலம் தயாரிக்கப்படும் பல்வேறு உணவு வகைகள் விற்பனை செய்யப்பட உள்ளது.இதன்மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நிலையான வருவாய் கிடைக்கவும், பொருளாதார முன்னேற்றத்துக்கு வழிவகுக்கவும் உறுதுணையாக இருக்கும்.  மேலும், மாணவர்களுக்கு உடலுக்கு ஆரோக்கியமான, ஊட்டச்சத்துகள் மிக்க உணவாகவும் அமைகிறது. எனவே, மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட அனைவரும் சிறுதானிய உணவகத்தைப் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.இந்நிகழ்வில், திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) திரு.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இஃர்பான், இ.ஆ.ப.,  உதவி திட்ட அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Dec 17, 2025

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 14 மகளிர்களுக்கு மொத்தம் ரூ.3.80 இலட்சம் மதிப்பிலான கடனுதவிகள் மற்றும் 623 உறுப்பினர்களுக்கு சுய உதவிக் குழு அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், விளாம்பட்டியில் (16.12.2025) தமிழ்நாடு மாநில ஊரக/நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 14 மகளிர்களுக்கு மொத்தம் ரூ.3.80 இலட்சம் மதிப்பிலான கடனுதவிகளையும், 72 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 623 உறுப்பினர்களுக்கு சுய உதவிக் குழு அடையாள அட்டைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் வழங்கினார்.பின்னர், பாலின சமத்துவ உறுதி மொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அரசு அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டனர்.அதனைத்தொடர்ந்து, மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்ட உற்பத்தி பொருள்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த உறுப்பினர்களுடன், குழுக்களின் செயல்பாடுகள், வழங்கப்படும் கடனுதவிகள், வட்டி விகிதம் உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்து, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தமிழக அரசினால் வழங்கப்படும் முக்கியத்துவம், கடனுதவிகள், மானியம், பயிற்சிகள், உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான வழிமுறைகள் உள்ளிட்டவைகள் குறித்து எடுத்துரைத்தார்.இந்நிகழ்வில், திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) திரு.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், சிவகாசி வட்டாட்சியர் திரு.இலட்சம், உதவி திட்ட அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Dec 16, 2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும்  நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தலைமையில் (15.12.2025) நடைபெற்றது. இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நல உதவித்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.  மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தகுடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.  அதனைத் தொடர்ந்து, பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை சார்பில், பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நலநிதி திட்டத்தின் கீழ் பெருமாள் தேவன்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க  உறுப்பினர் திரு.கு.நமச்சிவாயம் என்பவர் விபத்தின் காரணமாக மரணமடைந்ததைத் தொடர்ந்து, அன்னாரது வாரிசுதாரரான திருமதி ந.பழனியம்மாள் என்பவருக்கு ரூ.4.25 இலட்சம் உதவித்தொகைக்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். பின்னர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை சார்பில், அருப்புக்கோட்டை வட்டம், கோவிலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த 41 பயனாளிகளுக்கு இலவச இணைய வழிப் பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆனந்தி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.காளிமுத்து, மாவட்ட  ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திருமதி பிரதெளஸ் பாத்திமா, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Dec 16, 2025

கலை பண்பாட்டுத்துறை சார்பில், மாவட்ட அளிலான கலைப்போட்டிகள், குரலிசை, பரநாட்டியம், ஓவியம் மற்றும் கிராமிய நடனம் உள்ளிட்ட போட்டிகள் 31.12.2025 அன்று நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றத்தின் வாயிலாக 5 முதல் 16 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு கலைப் பயிற்சிகள் அளித்து வருகிறது. சிறார்களிடையே மறைந்து கிடக்கும் கலைத்திறன்களை வெளிக்கொணரும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம் மற்றும் கிராமிய நடனம், ஆகிய நான்கு கலைப் பிரிவுகளிலும், 5-8, 9-12, 13-16 வயதுப் பிரிவுகளிலும் போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கி ஊக்குவித்து வருகிறது. மேலும், 9-12, 13-16 ஆகிய வயது பிரிவுகளில் மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்ற சிறார்களுக்கு மாநில அளவிலான கலைப் போட்டிகள் நடத்தி பரிசுத் தொகையும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளது.அவ்வகையில் முதற்கட்டமாக 5-8, 9-12, 13-16 என்ற மூன்று வயது வகைப் பிரிவில் விருதுநகர் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் 31.12.2025 அன்று குரலிசை, பரநாட்டியம், ஓவியம் மற்றும் கிராமிய நடனம் ஆகிய கலைப் போட்டிகள் நடைபெறவுள்ளது. கலைப் போட்டிகள் அனைத்தும் சிவகாசி, அண்ணாமலை நாடார் உண்ணாமலை அம்மாள் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் காலை 9.00 மணி முதல் முன்பதிவு நடைபெறவுள்ளது.போட்டிகளில் கலந்து கொள்ளும், மாணவ, மாணவிகளின் பெயர், வயது, பிறந்த தேதி வீட்டு முகவரி, பள்ளியின் பெயர் ஆகிய விவரங்களுடன் (Birth Certificate) வயது சான்றிதழ் கொண்டு வரவேண்டும். போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு பங்கேற்புக்கான சான்றிதழும், மாவட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும்.இப்போட்டிக்கான விதிமுறைகள் பின்வருமாறு1. பரதநாட்டியம் (செவ்வியல்)பரத நாட்டியம், குச்சிப்புடி, மோகினி ஆட்டம் போன்ற நடனங்கள் ஆடலாம் முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் நடனம் இருத்தல் வேண்டும். திரைப்படப் பாடல்களுக்கான நடனங்கள் (கர்நாடக இசை பாடல்களுக்கான திரைப்பட நடனங்கள் தவிர்த்து) மேற்கத்திய நடனங்கள் மற்றும் குழு நடனங்களுக்கு அனுமதியில்லை. பென்டிரைவ் பயன்படுத்திக் கொள்ளலாம். இவற்றை போட்டியில் பங்கேற்பவர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். குறைந்த பட்சம் 3 நிமிடங்கள் அதிக பட்சம் 5 நிமிடங்கள் நடனமாட அனுமதிக்கப்படுவார்கள்.2. கிராமிய நடனம் (நாட்டுப்புறக் கலை)தமிழகத்தின் மாண்பினை வெளிப்படுத்தும் கிராமிய நடனங்கள் ஆடலாம். முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் நடனம் இருத்தல் வேண்டும். திரைப்படப் பாடல்களுக்கான நடனங்கள் (கிராமிய இசை பாடல்களுக்கான திரைப்பட நடனங்கள் தவிர்த்து) மற்றும் குழு நடனங்கள் அனுமதியில்லை. பெண்டிரைவ் பயன்படுத்திக் கொள்ளலாம். இவற்றை போட்டியில் பங்கேற்பவர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் 3 நிமிடங்கள் அதிக பட்சம் 5 நிமிடங்கள் வரை நடனமாட அனுமதிக்கப்படுவார்கள்.3. குரலிசைகர்நாடக இசை பாடல்கள், தேசியப் பாடல்கள், சமூக விழிப்புணர்ச்சி பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள் மட்டுமே பாட வேண்டும். மேற்கத்திய இசை, திரைப்பட பாடல்கள், பிற மொழி பாடல்கள், குழுப்பாடல்களுக்கு அனுமதியில்லை. குறைந்த பட்சம் 3 நிமிடங்கள். அதிக பட்சம் 5 நிமிடங்கள் வரை பாட அனுமதிக்கப்படுவார்கள்.4. ஓவியம்40X30 செமீ அளவுள்ள ஓவியத் தாள்களையே பயன்படுத்த வேண்டும். பென்சில் கிரையான், வண்ணங்கள், போஸ்டர் கலர், வாட்டர் கலர், ஆயில் கலர், பெயிண்டிங் என எவ்வகையிலும் ஓவியங்கள் அமையலாம். ஓவியத்தாள், வண்ணங்கள், தூரிகைகள் உட்பட தங்களுக்குத் தேவையானவற்றைப் போட்டியாளர்களே கொண்டு வருதல் வேண்டும். குழுவாக ஓவியங்கள் வரைய அனுமதியில்லை. ஒவ்வொரு வயது வகைக்கும் தனித் தனியாக தலைப்புகள் போட்டி தொடங்கும் போது அறிவிக்கப்படும்.மேலும், இப்போட்டிகளில் கலந்து கொள்வோர், 5 முதல் 8 வயது பிரிவுக்கு 01.06.2017 முதல் 31.05.2020 வரை பிறந்தவராகவும், 9 முதல் 12 வயது பிரிவுக்கு 01.06.2012 முதல் 31.05.2017 வரை பிறந்தவராகவும், 13 முதல் 16 வயது பிரிவுக்கு 01.06.2009 முதல் 31.05.2012 வரை பிறந்தவராகவும் இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0462-2901890,94439-61523, 94439-61523 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Dec 16, 2025

தமிழ்வளர்ச்சித் துறையின் சார்பில், 17.12.2025 முதல் 26.12.2025 வரை ஆட்சிமொழிச் சட்ட வாரம் கொண்டாடப்படவுள்ளது .

 2019-2020ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கை அறிவிப்பில் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956ஆம் நாளை நினைவுகூரும் வகையில் “ஆட்சிமொழிச் சட்ட வாரம்” ஒரு வார காலத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாட அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் இந்த ஆண்டு 17.12.2025 முதல் 26.12.2025  வரை ஆட்சிமொழிச் சட்ட வாரம் கொண்டாடப்படவுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், தமிழறிஞர்கள் அரசு அலுவலர்கள்,  வணிக நிறுவனங்கள் பங்கேற்கும்  விழிப்புணர்வுப் பேரணி நடத்தியும், அரசு பணியாளர்களுக்கு ஆட்சிமொழிச் சட்டம், வரலாறு, அரசாணைகள், பிழையின்றி தமிழில் குறிப்புகள், வரைவுகள் எழுதுவதற்குப் பயிற்சி அளித்தும், மாணவர்களுடன் பட்டிமன்றம் நடத்தியும்,  ஒன்றியம், வட்டம் அளவில் அரசுப் பணியாளர்கள், பொதுமக்கள், உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களுடன் ஆட்சிமொழிச் சட்டம் குறித்து விளக்கக் கூட்டம் நடத்தியும் ஆட்சிமொழிச் சட்டவாரம் கொண்டாடப்படவுள்ளது.    தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள்,  தமிழ் அமைப்புகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆகியோர் கலந்து கொள்ள தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆட்சிமொழிச் சட்ட வாரத்தினைச் சிறப்பாகக் கொண்டாட அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Dec 16, 2025

பிரதமரின் கௌரவ நிதித் தொகை(PMKISAN) பெற்று வரும் நில உடைமை பதிவு செய்யாத  விவசாயிகள் 19.12.2025 அன்று நடைபெறும் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்ட முகாம்.

வேளாண்மை உழவர் நலத் துறையால் செயல்படுத்தப்படும் அனைத்து மத்திய, மாநில அரசு திட்டங்களுக்கும், விவசாயிகளுக்கான பிரதமரின் கௌரவ நிதித் தொகை(PMKISAN) பெறுவதற்கும் நில உடைமை பதிவு எண் கட்டாயமானதாகும்.தற்பொழுது, விவசாயிகளுக்கான பிரதமரின் கௌரவ நிதித் தொகை (PMKISAN) பெறும் விவசாயிகள், தங்கள் நில உடைமை விபரங்களை உடனடியாக பதிவு செய்யாவிட்டால் அடுத்த தவணை கிடைக்கப்பெறாது.எனவே, விவசாயிகளுக்கான பிரதமரின் கௌரவ நிதித் தொகை (PMKISAN) பெறுவதற்கு, நில உடைமைகளை பதிவு செய்யாத 10115 விவசாயிகள், உடனடியாக அருகில் உள்ள பொது சேவை மையங்களிலும் பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது.                விருதுநகர் மாவட்டத்தில் 10115 விவசாயிகள் நில உடைமைகளை பதிவுகளை மேற்கொள்ளாமல் உள்ளனர். விவசாயிகளுக்கான பிரதமரின் கௌரவ நிதித் தொகை(PMKISAN) பெறுவதற்கு இதுவரை நில உடைமைகளை பதிவு செய்யாத விவசாயிகள் தங்கள் நில ஆவணங்களான பட்டா, ஆதார் மற்றும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண் கொண்டு நில உடைமைகளை விடுதலின்றி 19.12.2025 அன்று நடைபெறும் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நடைபெறவுள்ள சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது. விவசாயிகள் நில உடைமைகளை பதிவு செய்து அடையாள எண் பெற்றால் மட்டுமே மத்திய,மாநில அரசு திட்டங்களில் பயன்பெற இயலும்.விவசாயிகள் 19.12.2025 அன்று நடைபெறும் நில உடைமை பதிவுக்கான சிறப்பு முகாமில் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசு மானியத் திட்டங்களில் பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.என். ஓ.சுகபுத்ரா, I A S,.அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.  

1 2 ... 55 56 57 58 59 60 61 ... 140 141

AD's



More News