25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Dec 25, 2025

கால்நடைகளுக்கான 8-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம்.

கால்நடை வளர்ப்பின் மூலம் கால்நடைகளிலிருந்து கிடைக்கும் பால் மனிதர்களின் உணவில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. கால்நடைகளிலிருந்து பெறப்படும் பால், மாமிசம், உரோமம்  மற்றும் பிற உபபொருட்களின் மூலம் நாட்டிற்கு பெரும் பொருளாதாரத்தை ஈட்டி கொடுப்பதால் நாட்டின் பொருளாதாரத்தில் கால்நடை வளர்ப்பு பெரும் பங்கு வகிக்கிறது. கோமாரி நோய் நம் நாட்டில் கலப்பின மாடுகளை அதிகம் தாக்கி கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 1,45,700 பசு மற்றும் எருமை இனங்களை கோமாரி நோயிலிருந்து  காக்கும் வண்ணம் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டம் மூலம் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் 29.12.2025 முதல் 18.01.2026 வரை 21 நாட்களுக்கு விருதுநகர் மாவட்டம் முழுவதும் நடைபெறுகிறது.கோமாரி நோய்  கால்நடை வளர்ப்போருக்கு அதிகப்படியான பொருளாதார இழப்பை ஏற்படுத்தும்  கோமாரி நோய் வைரஸ் தொற்றால் ஏற்படுகிறது. பொதுவாக இந்நோய் பசு மற்றும் எருமைகளை அதிகம் பாதிக்கிறது.  இந்த நோய் தாக்குதலால் கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைகிறது. எருதுகளின் வேலை  செய்யும் திறன் குறைகிறது. கறவை மாடுகள் சினை பிடிப்பது தடைபடுகிறது.இளம் கன்றுகளில் இறப்பு நேரிடுகிறது. கோமாரி நோயினால் இறப்புகள் குறைவாக  இருந்த போதிலும், மேற்கண்ட பாதிப்புகளால் ஏற்படும் பொருளாதார இழப்பு அதிகம். நோய் பரவ சாதகமான சூழ்நிலைகள் பொதுவாக குளிர் மற்றும் பனிக்காலம். நோய் பாதித்த இடங்களிலிருந்து வாங்கி வரப்பட்ட கால்நடைகள், சுகாதாரமற்ற கால்நடை வளர்ப்பு, கால்நடைகளுக்கு தடுப்பூசி போடாதிருத்தல்,  நோய் பாதித்த கால்நடைகளை பிரித்து பராமரிக்காமல் இருத்தல். கலப்பின கால்நடைகளில் இந்நோயின் பாதிப்பு அதிகம் காணப்படும் .நோய் பரவும் விதம் :-இந்நோய் பாதித்த மாடுகளிலிருந்து மற்ற மாடுகளுக்கு நேரடியாக தொற்றும் தன்மை கொண்டது. பாதிக்கப்பட்ட மாடுகளிலிருந்து தீவனம், தீவனத்தட்டுகள், தண்ணீர் வைக்கோல், கால்நடைகளின் இதர உபகரணங்கள் மற்றும் மனிதர்கள் மூலமூம் பரவும் . இந்த நச்சுயிரி மாட்டுக்கொட்டகைகளில் சுமார் 15 நாட்கள் வரை உயிருடன் இருக்கும். இந்நோய் விரைவாக காற்றின் மூலமூம் பரவும் தன்மை கொண்டது. பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீர், பால், உமிழ்நீர், சாணம் ஆகியவற்றால் இந்த நோய் அதிகமான கால்நடைகளுக்கு பரவுகின்றது.நோய் அறிகுறிகள் :காய்ச்சல் , தீவனம் உட்கொள்ளாத மந்த நிலையில் இருக்கும். அசை போடாது. அதிகமான நீர் தாகம் இருக்கும். பால் உற்பத்தி குறையும். வாயிலிருந்து நுரை கலந்த உமிழ்நீர் நூல் போல் ஒழுகிய வண்ணம் இருக்கும். வாயின் உட்பகுதி, நாக்கு மற்றும் கால் குளம்புகளின் நடுப்பகுதி, மடி ஆகிய இடங்களில் கொப்புளங்கள் தோன்றும் . பின்பு அவை உடைந்து ரணமாகிவிடும். அசை போடும் போது மாடு சப்பை கொட்டுவது போல் சப்தம் உண்டாகும். சினை மாடுகளில் கருசிதைவு ஏற்படலாம். பாதிக்கப்பட்ட மாடுகளில் மலட்டுத்தன்மையும், இரத்த சோகையும் ஏற்படும். பாதிக்கப்பட்ட பசுக்களில் கன்றுகளை பால் குடிக்க விடக்கூடாது. அவ்வாறு குடித்தால் கன்றுகள் உடனடியாக இறக்க நேரிடும்.தடுப்பூசி பணி :-சிறந்த பராமரிப்பும், தடுப்பூசி போடுவதும் இந்நோயினை தடுக்க உகந்த வழி. விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 1,45,700 பசு மற்றும் எருமை இனங்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள 82 கால்நடை மருந்தகங்கள் மற்றும் 6 கால்நடை மருத்துவமனைகளில் உள்ள கால்நடை உதவி மருத்துவர், கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கொண்ட 58 குழுக்கள் அமைக்கப்பட்டு, வருகின்ற 29.12.2025 முதல் 18.01.2026 வரை 21 நாட்களுக்கு தடுப்பூசிபணி இலவசமாக மேற்கொள்ளப்பட உள்ளது. இத்தடுப்பூசிப்பணி நான்கு மாதத்திற்கு மேல் உள்ள கன்றுகளுக்கும் மற்றும் நிறை மாத  சினை இல்லாத மாடுகளுக்கும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை போடப்பட்டு வருகிறது.உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மக்களுக்கு இத்தடுப்பூசி முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள் வரும் பொழுது முழு ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.மேலும், விவசாயிகளுக்கு தங்களது கிராமத்தில் எந்த நாட்களில் தடுப்பூசி பணி நடைபெறும் என்ற விவரம் முன்கூட்டியே சம்மந்தப்பட்ட கால்நடை மருந்தகத்தால் அக்கிராமத்திற்கு தெரிவிக்கப்படும் அல்லது பொது மக்கள் தங்கள் பகுதி கால்நடை மருத்துவமனை, கால்நடை மருந்தகம் மற்றும் கால்நடை கிளை  நிலையத்தை தொடர்பு  கொண்டு தெரிந்து கொள்ளலாம். கோமாரி நோய் தடுப்பூசி முகாம் போடும் நாளில் விவசாயிகள் கால்நடை பராமரிப்புத் துறையினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி தவறாது தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என   மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Dec 25, 2025

பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஆர்வம் உள்ள ஆர்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொண்டு நிறுவனத்தினர் தொடர்பு கொள்ளலாம்.

விருதுநகர் மாவட்டத்தில் டிசம்பர் 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் இராஜபாளையம் தேவதானம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்ராப், கோவிலார் அணை, பெரியார் அணை, கூமாபட்டி, விராகசமுத்திரம், விருதுநகர் குல்லூர் சந்தை, அருப்புக்கோட்டை, உலக்குடி, இருக்கண்குடி, வெம்பக்கோட்டை அணை, சங்கரபாண்டியபுரம், கோட்டையூர், தாயில்பட்டி, சங்கரபாணடியபுரம், தாயில்பட்டி கோட்டையூர் உள்ளிட்ட 21 இடங்களில் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு பணிகள் நடைபெற உள்ளது.இதன் வாயிலாக விருதுநகர் மாவட்டத்தில் காணப்படும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பறவைகள், விருதுநகர் மாவட்டத்திற்கு இனப்பெருக்கத்திற்காக வெளிநாட்டு பறவைகள் வந்து உள்ளனாவா என்று அறியலாம். பறவைகள் கணக்கெடுப்பில் ஆர்வம் உள்ள ஆர்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொண்டு நிறுவனத்தினர் துணை இயக்குநர் அலுவலக தொலைபேசி எண். 04563-260565 மற்றும் சிவகாசி வனச்சரக அலுவலர் திரு.பூவேந்தன் 84890-54853 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தங்கள் கணக்கெடுப்பில் கலந்துக் கொள்வதற்கு பதிவு செய்துக் கொள்ளலாம். மேலும் பறவைகள் கணக்கெடுப்பில் பங்கு பெறுபவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்படும் என துணை இயக்குநர்(திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்) மரு.இரா.முருகன்,இ.வ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Dec 24, 2025

சிறப்பு கல்வி கடன் முகாம் .

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (23.12.2025) மாவட்டத்தை சார்ந்த கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகளின் சார்பில் சிறப்பு கல்வி கடன் வழங்கும் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இம்முகாமில் 155 மாணவர்களுக்கு ரூ.6.72 கோடி கல்விக்கடனுக்கான ஆணைகளை  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இம்முகாமில் மாவட்டத்திலுள்ள 200 தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கி கிளைகளின் மாவட்ட அளவிலான வங்கி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அனைத்து வங்கிகள் சார்பாகவும் அரங்குகள் அமைக்கப்பட்டு கல்விக்கடன் சம்பந்தமாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்பட்டனர்.மேலும் மாணவர்களிடம் நேரடியாக கல்விக்கடன் விண்ணப்பங்கள் வங்கிகளின் மூலம் பெறப்பட்டன. இந்த முகாமின் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் வங்கிக்கிளைகளில் பரிசீலனை செய்யப்பட்டு 20 நாட்களுக்குள் தகுதியான அனைத்து மாணவர்களுக்கும் கல்வி கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.நடப்பு நிதி ஆண்டிற்கு கல்வி கடன் இலக்காக ரூ.38.11 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் நமது மாவட்டத்திலுள்ள வங்கிகள் செப்டம்பர் மாதம் வரை 576 மாணவர்களுக்கு ரூ.27.61 கோடி கல்விக்கடனாக வழங்கியுள்ளன.  மேலும் தனியார் துறை வங்கிகள் கல்விக்கடன் வேண்டி விண்ணப்பிக்கும் தகுதியான மாணவர்களின் விண்ணப்பங்களை நிராகரிக்காமல் கல்விக்கடன் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்வில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.பாண்டிச்செல்வன், அனைத்து வங்கிகளின் மாவட்ட பிரதிநிதிகள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

Dec 24, 2025

வாக்காளர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 07 சட்டமன்ற தொகுதிகளிலும், அமைந்துள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும். 2026-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாக் கொண்டு சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க, பெயர் நீக்கம் செய்ய, பெயர் திருத்தம், முகவரி மாற்றம், வாக்காளர் அடையாள அட்டை பெற விரும்புபவர்கள் அதற்கான விண்ணப்பங்கள் அளிக்க வேண்டும்.மேலும், வாக்காளர்கள் இணையவழியாகவும் நேரடியாக இந்திய தேர்தல் ஆணையத்தின் https://voters.eci.gov.in/  என்ற இணையதளம் மற்றும் “Voters Help Line” என்ற கைபேசி செயலி மூலம் விண்ணப்பம் செய்துகொள்ளலாம். விண்ணப்பங்கள் பூர்த்தி செய்தல், இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதில் சந்தேகம் ஏதும் இருப்பின் கட்டணமில்லா தொலைபேசி எண் 044-1950 என்ற எண்ணை தொடர்பு கொண்டு விபரங்களைத் தெரிந்துக்கொள்ளலாம்.மேற்படி இணையவழியில் விண்ணப்பிக்க இயலாதவர்கள் வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க, பெயர் நீக்கம் செய்ய, பெயர் திருத்தம், முகவரி மாற்றம், வாக்காளர் அடையாள அட்டை பெற விரும்புபவர்கள் அதற்கான விண்ணப்பங்களை 19.12.2025 (வெள்ளி) முதல் 18.01.2026 (ஞாயிறு) வரை வரை வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் அனைத்து உதவி வாக்காளர் பதிவு அலுவலங்களிலும் அளிக்கலாம்.மேலும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் 27.12.2025 (சனிக்கிழமை), 28.12.2025 (ஞாயிறுக்கிழமை), 03.01.2026 (சனிக்கிழமை) மற்றும் 04.01.2026 (ஞாயிறுக்கிழமை) ஆகிய நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. இம்முகாம்களில் புதியதாக பெயர் சேர்க்க, பெயர் நீக்கம் செய்ய, பெயர் திருத்தம், முகவரி மாற்றம், வாக்காளர் அடையாள அட்டை பெற விரும்புபவர்கள் அதற்கான விண்ணப்பங்களை அளிக்கலாம்.எனவே, பொது மக்கள் சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை வாக்குச்சாவடி மையங்களிலும், தேர்தல் பதிவு அலுவலகத்திலும், இணையவழியாகவும் சரிபார்த்துக் கொள்ளவும், புதியதாக பெயர் சேர்த்தல்,  நீக்கம், பெயர் திருத்தம், முகவரி மாற்றம் செய்ய விரும்புபவர்கள் இந்த வாய்ப்பினை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Dec 20, 2025

சிவகாசி ஊராட்சி ஒன்றியம், எம்.சொக்கம்பட்டி கிராமத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் புதிய அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி திறப்பு.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியம், எம்.சொக்கம்பட்டி கிராமத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் புதிய அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் முன்னிலையில்,  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் (19.12.2025) திறந்து வைத்தார். உடன் திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.வீ.கேசவதாசன் அவர்கள், சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான், I A S., அவர்கள் ஆகியோர் உள்ளனர்.

Dec 20, 2025

நில உடைமை பதிவு செய்யாத விவசாயிகள் நில உடைமைகளை பதிவு செய்யும் வகையில் நடைபெற்ற சிறப்பு முகாம்.

 விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (19.12.2025) வேளாண்மைத்துறை சார்பில், பிரதமரின் கௌரவ நிதித் தொகை(PMKISAN) பெற்று வரும் நில உடைமை பதிவு செய்யாத விவசாயிகள் நில உடைமைகளை பதிவு செய்யும் வகையில் நடத்தப்பட்ட சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.வேளாண்மை உழவர் நலத் துறையால் செயல்படுத்தப்படும் அனைத்து மத்திய, மாநில அரசு திட்டங்களுக்கும், விவசாயிகளுக்கான பிரதமரின் கௌரவ நிதித் தொகை(PMKISAN) பெறுவதற்கும் நில உடைமை பதிவு எண் கட்டாயமானதாகும்.தற்பொழுது, விவசாயிகளுக்கான பிரதமரின் கௌரவ நிதித் தொகை (PMKISAN) பெறும் விவசாயிகள், தவணைத் தொகை பெற தங்கள் நில உடைமை விபரங்களை பதிவு செய்ய வேண்டியுள்ளது.அந்த வகையில், விருதுநகர் மாவட்டத்தில் பிரதமரின் கௌரவ நிதித் தொகை(PMKISAN) பெற்று வரும் நில உடைமை பதிவு செய்யாத விவசாயிகள் நில உடைமைகளை பதிவு செய்யும் வகையில் சிறப்பு முகாம் நடைபெற்றது.இம்முகாமில் விவசாயிகள் நில ஆவணங்களுடன் வந்து, தங்களது நில உடைமைகளை பதிவு செய்து பயனடைந்தனர்.மேலும், இதுவரை பிரதமரின் கௌரவ நிதித் தொகை(PMKISAN) பெற்று வரும் நில உடைமை பதிவு செய்யாத விவசாயிகள் தங்களுடைய பட்டா, சிட்டா, ஆதார் எண், ஆதார் எண் இணைக்கப்பட்ட செல்போனையும் கொண்டு சென்று நில உடைமை பதிவு செய்து மத்திய, மாநில அரசு மானியத் திட்டங்களில் பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இம்முகாமில் 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Dec 20, 2025

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் ரூ.2.38 கோடி மதிப்பில் 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கூடுதல் சேமிப்பு கிடங்கு கட்டும் பணிகளுக்கு அமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டம், கங்காகுளத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் ரூ.2.38 கோடி மதிப்பில் 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கூடுதல் சேமிப்பு கிடங்கு கட்டும் பணிகளுக்கு திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.வீ.கேசவதாசன் அவர்கள், சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான்,I A S., அவர்கள், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில்,  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் (19.12.2025) அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், கங்காகுளம் பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலமாக புதிதாக அமைக்கப்படவுள்ள இந்த கிட்டங்கியினை அமைப்பது என்பது, தமிழ்நாடு அரசினுடைய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் எந்தளவிற்கு ஒரு முறையான கட்டமைப்பினை தமிழ்நாடு எங்கும் உருவாக்குவதற்கும் குடிமைப் பொருட்களை பாதுகாத்து அதை உரிய மக்களுக்கு சென்று சேர்வதில், எந்தவிதமான குறைபாடும் இல்லாமல் இருப்பதற்கும் இன்றைக்கு சிறப்பான முறையில் உருவாக்கி வருகிறார்கள் என்பதற்கான எடுத்துக்காட்டாகும்.தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் 26 இடங்களில் உருவாக்கப்படக்கூடிய இந்த கிட்டங்கிகள் நம்முடைய விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி கங்காபுரத்திலும், திருச்சுழி தமிழ்பாடியிலும் என இரண்டும் சேர்த்து சுமார் ரூ.6 கோடி மதிப்பில் இந்த கட்டிடங்களை நுகர்பொருள் வாணிப கழகம் உருவாக்கயிருக்கிறது. இதற்காக நபார்டு வங்கியினை நிதியுதவியை பெற்றிருக்கிறோம்.  பொதுவாக நம்முடைய உணவு பொருட்கள் வழங்கல் துறை என்பது எந்தளவிற்கு மிக கவனமாக செயல்படக்கூடிய ஒரு துறை.  நம்முடைய முதலமைச்சர் அவர்கள் பொறுப்பு ஏற்றுக் கொண்டிருக்கக் கூடிய பிறகு, இன்றைக்கு நெல் விளைச்சல் என்பது குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அமோகமாக இருக்கிறது. எனவே நெல் கொள்முதல் நிலையங்களை அந்த அளவிற்கு வேகமாக அதிக அளவில் கொண்டு வருகின்றோமோ அப்படி கொள்முதல் செய்யப்படக்கூடிய நெல்லை நாம் பாதுகாத்து வைக்கக்கூடிய வகையில் அவற்றிற்கான கிட்டங்கி, கிடங்கு வசதிகளை அரசு பெரிய அளவில் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.அந்த வகையில் நம்முடைய நுகர்பொருள் வாணிபக் கழகமும் தன்னுடைய பொறுப்பில் எடுத்துக் கொண்டிருக்க கூடிய இத்தகைய குடிமைப் பொருட்களுக்கு, அந்த குடிமைப் பொருட்களை பாதுகாப்பான முறையிலே வைத்திருந்து, அதை கெட்டுப் போகாமலோ, வேற எந்த விதமான குறைபாடுகளும் வந்து விடாமல் வைப்பதற்கு அவர்களுக்கான புதிய வசதிகளை உருவாக்கி தந்திட வேண்டும் என்று உணவுத்துறை அமைச்சர் அவர்கள் 2024-25 சட்டமன்றத்தில் அறிவிப்புகளை வெளியிட்டு இன்றைக்கு தமிழ்நாடெங்கும் இத்தகைய புதிய அமைப்புகள் உருவாக்கப்பட இருக்கின்றது.அதில் ஒன்று சிவகாசி கங்காகுளத்தில் வருவது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கிறது. எனவே அந்த நிகழ்ச்சிகளை பங்கேற்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.பொதுவாக இந்த அடிக்கல் நாட்டுவது என்பது ஒருபுறம் இருந்தாலும், அது மக்களுக்கு பயன்பாட்டுக்கு கொண்டு வரக்கூடிய அளவில் மிக விரைவில் அதற்கான காலகட்டத்திற்குள் அந்த பணிகளை துறையும், ஒப்பந்ததாரர்களும் இணைந்து பணியாற்றி தரமான முறையில் அதனை நிறைவேற்றி உரிய காலத்திற்குள் பணிகளை முடித்து அதற்கான பயன்பாட்டிற்கு கொண்டு வருவதிலும் முனைப்பு காட்ட வேண்டும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Dec 20, 2025

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாத நபர்கள் மற்றும் 18 வயதைப் பூர்த்தி செய்பவர்களும் விண்ணப்பங்களை 18.01.2026 வரை அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம் ஆகியவற்றில் அளிக்கலாம்.

2026-ஆம் ஆண்டு சனவரி 1-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல்களை சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணி 04.11.2025 முதல் நடைபெற்று வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு முன்பாக 27.10.2025 அன்று இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் 2,31,157 வாக்காளர்களும், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 2,43,752 வாக்காளர்களும், சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 2,41,074 வாக்காளர்களும், சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் 2,43,782 வாக்காளர்களும், விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் 2,26,140 வாக்காளர்களும், அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் 2,22,248 வாக்காளர்களும், திருச்சுழி சட்டமன்றத் தொகுதியில் 2,18,332 வாக்காளர்களும், ஆக மொத்தம் 16,26,485 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவருக்கும் கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டு, 14.12.2025 வரை பூர்த்தி செய்யப்பட்டு திரும்பப் பெறப்பட்ட படிவங்கள் அதற்கான செயலி மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு  (19.12.2025) வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் 2,01,901 வாக்காளர்களும், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 2,13,655 வாக்காளர்களும், சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 2,18,801 வாக்காளர்களும், சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் 2,14,544 வாக்காளர்களும், விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் 1,90,824 வாக்காளர்களும், அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் 1,98,996 வாக்காளர்களும், திருச்சுழி சட்டமன்றத் தொகுதியில் 1,97,790 வாக்காளர்களும், ஆக மொத்தம் 14,36,521 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளிலும், நிரந்தர முகவரி மாற்றம், தொடர்பு கொள்ள இயலாதவர்கள், இறப்பு, இரட்டைப் பதிவு இனங்கள் மற்றும் இதர காரணங்களுக்காக 1,89,964 வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்த கணக்கெடுப்புப் படிவங்களைப் பெற இயலாத நிலையில் அவர்களது பெயர்களை வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாதவர்களின் விபரங்களை https://erolls.tn.gov.in/asd/ என்ற வலைதளத்தின் மூலம் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வலைதளத்தின் மூலம், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பெயர் சேர்க்கப்படாதவர்களின் பட்டியல்களை பார்த்துக் கொள்ள இயலும். மேலும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்களுடன் ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலை அலுவலராலும் நடத்தப்பட்ட கூட்ட விபரத்தையும் இந்த வலைதளத்தின் மூலம் பார்க்க இயலும்.வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாத நபர்கள் மற்றும் 01.01.2026 அன்று 18 வயதைப் பூர்த்தி செய்பவர்களும் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்வதற்கு படிவம் 6 -ல் விண்ணப்பங்களை 18.01.2026 வரை அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம் ஆகியவற்றில் அளிக்கலாம். அதே போன்று வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தங்கள் ஏதேனும் செய்ய வேண்டியிருப்பின் படிவம்-8 ல் விண்ணப்பம் அளிக்கலாம். வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள ஒருவரது பெயரை நீக்கம் செய்ய வேண்டியிருப்பின் படிவம்-7 ல் விண்ணப்பம் அளிக்கலாம். இந்த விண்ணப்பங்களை https://voters.ec.gov.in என்ற வலைதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பமாகவும் பதிவு செய்யலாம். மேலும், 2026 -ம் ஆண்டில் ஏப்ரல்-1, ஜூலை-1, அக்டோபர்-1 ஆகிய எதிர்வரும் தகுதி ஏற்படுத்தும் நாட்களில் 18 வயதைப் பூர்த்தி செய்பவர்களும் தற்போதே படிவம்-6 ல் முன்கூட்டிய விண்ணப்பத்தை அளிக்க இயலும். இவ்விண்ணப்பங்கள் அந்தந்த தகுதி ஏற்படுத்தும் நாட்களில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.விருதுநகர் மாவட்டத்தில் மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 1901 ஆக இருந்த நிலையில், ஒரு வாக்குச்சாவடிக்கு 1200 வாக்காளர்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்று வரம்பு மாற்றியமைக்கப்பட்டதால் மேற்கொள்ளப்பட்ட வாக்குச்சாவடி மறு சீரமைப்புக்கு பின்னர் 98 வாக்குச்சாவடிகள் அதிகரித்து, தற்போது விருதுநகர் மாவட்டத்திலுள்ள எழு தொகுதிகளிலும் மொத்தம் 1999 வாக்குச்சாவடிகள் உள்ளது. இவை 1009 வாக்குச்சாவடி அமைவிடங்களில் அமைந்துள்ளன. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக 29.10.2025, 24.11.2025, 08.12.2025 மற்றும் 10.12.2025 ஆகிய தேதிகளில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியரால் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டது. 14.12.2025 அன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த சிறப்பு பார்வையாளர் (Special Roll Observer) தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் கூட்டம் நடத்தப்பட்டது.மேலும், விருதுநகர் மாவட்டத்திலுள்ள எழு சட்டமன்றத் தொகுதிகளிலும் அந்தந்த வாக்காளர் பதிவு அலுவலரால் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. மேலும் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்களுடன் அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், திரும்பப் பெற இயலாத கணக்கெடுப்புப் படிவங்கள் குறித்து கூட்டம் நடத்தி அப்பட்டியல்களை அளித்துள்ளனர். இவ்வாறு அனைத்து நிலைகளிலும் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில் அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறையைச் சார்ந்த 1901 அலுவலர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக பணியாற்றினர். மேலும், வருவாய்த் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் இதர துறைகளின் 199 அலுவலர்கள் வாக்குச்சாவடி நிலைக் கண்காணிப்பாளர்களாகப் பணியாற்றினர். மேலும், மகளிர் சுய உதவிக் குழுக்கள், மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழான தன்னார்வலர்கள் மற்றும் பல்வேறு தன்னார்வலர்கள் 500க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இந்த தீவிரத் திருத்தப் பணியில் பங்காற்றியுள்ளனர் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Dec 20, 2025

மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தின் நடைபெவிருந்த மின்கம்பி உதவியாளர் தகுதிகாண் தேர்வு(Wiremen Helper Competency Examination) நிர்வாக காரணங்களுக்காக தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது .

13.12.2025 மற்றும் 14.12.2025 ஆகிய தேதிகளில் மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு (Wiremen Helper Competency Examination) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, அத்தேர்வானது நிர்வாக காரணங்களினால், 27.12.2025 மற்றும் 28.12.2025 ஆகிய தேதிகளில் வடசென்னை, அம்பத்தூர், கோயம்புத்தூர், திருப்பூர், கடலூர், திருச்சிராப்பள்ளி, நாகப்பட்டினம், திண்டுக்கல், மதுரை, சேலம், ஈரோடு, தஞ்சாவூர், திருநெல்வேலி, நாகர்கோவில், ஓசூர், உளுந்தூர்பேட்டை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விருதுநகர், வேலூர், நாமக்கல் ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நடைபெறவுள்ளது.   மேலும், விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பித்திருந்த தொழிற் பயிற்சி நிலையங்கள் மூலம் தேர்வு தொடர்பான விவரங்கள் மற்றும் தேர்வு நுழைவுச்சீட்டினை பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S,  அவர்கள் தெரிவித்துள்ளார்.

Dec 20, 2025

விசைத்தறிகள் நவீனமாக்குதல் திட்டத்தின் கீழ், சாதாரண விசைத்தறிகளை நாடாயில்லா ரேபியர் தறிகளாக தரம் உயர்த்தவும், புதிய நாடாயில்லா ரேபியர் தறிகளை கொள்முதல் செய்திடவும் மூலதன மானியங்கள் பெற விண்ணப்பிக்கலாம் .

விசைத்தறி துறையில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு மூன்று ஆண்டுகள் பழமையான சாதாரண விசைத்தறிகளை (Conventional Plain Powerlooms) நாடாயில்லா ரேபியர் தறிகளாக (Rapier Shuttleless looms) தரம் உயர்த்த மூலதன மானியங்கள் விசைத்தறிகள் நவீனமாக்குதல் திட்டத்தின் கீழ் வழங்கப்படவிருக்கிறது.  இத்திட்டத்தின் வரையறையின்படி, ஆண்டு தோறும் 3000 விசைத்தறிகளை நவீனமாக்கும் பொருட்டு ரூ.30.00/- கோடி நிதியும், புதிய நாடா இல்லா ரேபியர் தறிகள் அல்லது பழைய குறைந்த வேக ரேபியர் தறிகளுக்கு மாற்றாக புது ரேபியர் தறிகள் கொள்முதல் செய்திட ரூ.15.00/- கோடியும், பொது வசதி மையங்கள், தறிக்கூடங்கள் மற்றும் தரப்பரிசோதனை ஆய்வகங்களின் உள்கட்டமைப்புகளை நிறுவும் பொருட்டு ரூ.5.00/- கோடி என மொத்தம் ரூ.50.00/- கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே, கீழ்க்கண்ட சிறப்பம்சங்கள் அடிப்படையில் விசைத்தறிகளை கொள்முதல் செய்திடலாம். வழக்கமான விசைத்தறிகளை (Conventional Plain Powerlooms) நாடா இல்லா ரேபியர் தறிகளாகத் (Shuttleless Rapier Looms) தரம் உயர்த்துவதற்கு (With Tuck in device) 50% மூலதன மானியம் அல்லது ரூ.1.00/- இலட்சம் (ஒரு தறிக்கு With Tuck in device) இதில் எது குறைவோ அத்தொகை. (ஒரு பயனாளிக்கு அதிக பட்சம் 10 தறிகள்)புதிய நாடா இல்லா ரேபியர் தறிகள் கொள்முதல் அல்லது பழைய குறைந்த வேக ரேபியர் தறிகளுக்கு மாற்றாக புது ரேபியர் தறிகள் கொள்முதல் செய்வதற்கு 20% மூலதன மானியம் அல்லது ரூ.1.50/- இலட்சம் (ஒரு தறிக்கு) இதில் எது குறைவோ அத்தொகை. (ஒரு பயனாளிக்கு அதிக பட்சம் 5 தறிகள்) பொது வசதி மையம் அமைத்திட (Common Facility Centre - Warping and Sizing unit, Testing Lab, Design Studio and Sample Production centre) 25% மூலதன மானியம் அல்லது ரூ.60.00/- இலட்சம் (இதில் எது குறைவோ அத்தொகை)மேற்படி திட்டத்தில் மானிய விலையில் தறிகளை நவீனமாக்கிட அல்லது புதிய நாடாயில்லா ரேபியர் தறிகளை கொள்முதல் செய்திட அல்லது பொது சேவை மையம் நிறுவிட விருப்பமுள்ள நபர்கள் https://tnhandlooms.tn.gov.in/pms என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும், கூடுதல் விபரங்களுக்கு அறை எண்.513, 5வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விருதுநகர்-626002 என்ற முகவரியில் செயல்பட்டு வரும் கைத்தறித் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் தெரிவித்துள்ளார். 

1 2 ... 54 55 56 57 58 59 60 ... 140 141

AD's



More News