திருச்சுழி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலையரங்கம் கட்டும் பணிகளுக்கு அமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், விடத்தகுளம் கிராமத்தில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக ரூ.1 கோடி மதிப்பில் கலையரங்கம் கட்டும் பணிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S,அவர்கள் தலைமையில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.
கிராமபுரத்தில் அமையக்கூடிய இத்தகைய கல்லூரிகளில், என்னென்ன வசதிகள் மேம்பாட்டுக்கு செய்ய வேண்டியது அவசியமாக இருக்கிறது. அது எந்த வகையில் நம்முடைய உயர்க்கல்வி தரத்தை உயர்த்துவதற்கு அடிப்படையாக இருக்கிறது என்பது குறித்தும், இந்த கல்லூரி அமையப்பெற்று 2022-ஆம் ஆண்டு தொடங்கினாலும், உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவதற்கு தொடர்ந்து நாம் அக்கறையினை மேற்கொண்டு வருகிறோம்.
அதனுடைய ஒரு பகுதியாக இன்றைக்கு நம்முடைய கலையரங்கம் ஒன்று இங்கு அமைப்பதற்கு அரசினுடைய நிதி உதவி பெற்று அதற்கான பணிகளை இன்று துவக்கி வைத்துள்ளோம். கலையரங்கம் என்று சொன்னால் கலை நிகழ்ச்சி நடத்துவதற்கான ஒரு இடம் மட்டும் கிடையாது. அதன் வாயிலாக பல அறிஞர் பெருமக்கள் உங்களுடன் கலந்துரையாடலாம். பல பாட சம்பந்தமாகவும், பாடத்திற்கு வெளியே இருக்கக்கூடிய முக்கியமான நிகழ்வுகள் குறித்தும், நீங்கள் அறிந்து கொள்ளக்கூடிய வகையிலும், பல வகையிலும் பல்வேறு வாய்ப்புகளை நீங்கள் பெற்று பயன்பெறக் கூடிய வகையில் பல்நோக்கு மையமாக உருவாக இருக்கிறது.
நமது பகுதி ஒரு கிராமப்புற பகுதியாக இருந்தது. 2011-ஆம் ஆண்டுகளில் நான் கல்வித்துறை அமைச்சராக இருக்கின்ற பொழுது நம்முடைய தொகுதியில் அதிகமான பள்ளிக்கூடங்களை உருவாக்கினோம். ஆனால் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவுடன் பெண் குழந்தைகளுக்காக தான் இங்கே ஒரு கல்லூரி அமைய வேண்டும் என்பதற்காக நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி 2021 - ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்ட முதல் கல்லூரி நமது திருச்சுழி கல்லூரி தான்.
நீங்கள் எல்லோரும் இந்த கல்லூரியில் படித்து உயர்ந்த நிலைக்கு வரவேண்டும். நீங்கள் அனைவரும் மேன்மேலும் உயர்ந்து சிறக்க வேண்டும் என்பதற்காக தான் முதலமைச்சர் அவர்கள் புதுமைப்பெண் திட்டம், தமிழ்புதல்வன் திட்டம் மூலம் உங்களுக்கு மாதம் ரூ.1000-/- வழங்கப்பட்டு அனைவரும் கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பதற்காக தான்.கல்லூரி படிப்பு என்பது இந்த கல்லூரியோடு நின்று விடாமல் மேன்மேலும் படித்து ஆராய்ச்சி மாணவர்களாக, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற உயர் அதிகாரியாக நீங்கள் அனைவரும் உருவாக வேண்டும் என நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சி என்பது ஏதோ ஒரு கல்லூரியில் மாணவர்களுக்கு கலையரங்கம் கட்டப்படக்கூடிய ஒரு சாதாரண நிகழ்ச்சி என்று மட்டும் நாம் நிச்சயம் எண்ணிவிடக்கூடாது. ஏனென்றால் இன்று உயர்கல்வியில் சிறந்து விளங்கக்கூடிய தமிழ்நாட்டில் மாணவர்கள் உயர்கல்வியில் படித்து பட்டம் பெறுவது என்பது அவர்கள் கல்வி சார்ந்த ஒரு முன்னேற்றம் மட்டுமல்ல. அவர்கள் ஒருங்கிணைந்த ஆளுமை மிக்கவர்களாக உருவாவதற்கு, அவர்களுக்கு கலை, இலக்கியம் ஒரு சிறந்த பங்களிப்பை வழங்குகிறது. ஒரு முழுமையான கல்வி வளர்ச்சி என்பது மிக முக்கியமாக வகுப்பறைகளுக்கு வெளியே தான் நிகழ்கிறது.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர்கள் திரு.பொன்னுத்தம்பி(திருச்சுழி) திருமதி காளீஸ்வரி சமயவேலு (நரிக்குடி), முக்கிய பிரமுகர்கள், கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply