2025-26 ஆம் கல்வியாண்டிற்கான புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரணப் பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாணவியர்களுக்கு வழங்கினார்.
விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்(02.06.2025) விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ப.மாணிக்கதாகூர் அவர்கள் மற்றும் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரணப் பொருட்களை மாணவ, மாணவியர்களுக்கு வழங்கினார்.
தமிழ்நாடு அரசின் சார்பில் மாநில முழுவதும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னையிலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் அங்கு இருக்கக்கூடிய மாண்புமிகு அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் மாணவர்களை நேரில் சந்தித்து 2025-26 ஆம் கல்வியாண்டின் தொடக்க நாளான இன்று மாணவர்களை அன்போடு பள்ளிக்கு வரவேற்கக் கூடிய இனிய நிகழ்வுகளில் கலந்து கொண்டு வருகிறார்கள்.
வாழ்க்கையில் ஒரு மனிதர் சராசரியாக 75 ஆண்டுகள் வாழ்கிறார். இதில் உணவு, உடை, இருப்பிடம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள், சமூக தேவைகள் என்று நிறைய தேவைகள் இருக்கின்றன. அந்த தேவைகளை நிறைவேற்றுவதற்கு தங்களுக்கு தேவையான பொருளாதாரத்தை அவர் சம்பாதிக்க வேண்டும். அதற்கு நிறைய வழிமுறைகள் இருக்கின்றன. ஆனால் நாம் ஏன் இந்த கல்வியை மட்டும் வலியுறுத்தி சொல்லுகின்றோம்.
இது இன்றைக்கு நேற்று அல்ல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நமது பகுதியை ஆட்சி செய்த ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்ற ஒரு பாண்டிய மன்னன்
உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும்,
பிற்றைநிலை முனியாது, கற்றல் நன்றே
பிறப்பு ஓர் அன்ன உடன்வயிற்று உள்ளும்,
சிறப்பின் பாலால், தாயும் மனம் திரியும்;
ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்,
மூத்தோன் வருக என்னாது, அவருள்
அறிவுடை யோன் ஆறு அரசும் செல்லும்;
வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்,
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்,
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே,
என்று இந்தப் பாடலை சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பாக எழுதியுள்ளார்.
வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கும், நமக்கு தேவையான பொருளை ஈட்டுவதற்கும் எத்தனையோ வழிகள் இருந்தாலும் அதில் இருக்கக்கூடிய எளிய வழி என்றால் அது கல்வியும், கடுமையான உழைப்பும்தான். இது இரண்டும் தான் சுலபமான வழி.
பதினோராம் வகுப்பு அல்லது பன்னிரண்டாம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர் ஒரு சாதாரண சூழலில் இருந்து வரக்கூடியவர் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் செலவிட்டு முழு ஈடுபாட்டோடு படித்தால் ஒரு சராசரி மாணவர் கூட உயர்ந்த நிலையை அடையலாம்.
அதிகமான பலன் ஒன்று கிடைக்கும் என்றால் நிச்சயமாக கல்வியால் மட்டும் தான் அது சாத்தியம். வாழ்க்கை முழுவதும் உங்களுக்கு வெற்றி பெறுவதற்கும் வாழ்க்கையில் நீங்கள் நினைத்த இலட்சியத்தை அடைவதற்கும் தொடர்ச்சியான வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வாய்ப்புகளில் மிக எளிய வாய்ப்பும் குறைந்த உழைப்பில் அதிகமான பலனை தரக்கூடிய வாய்ப்பு ஒன்று இருக்குமானால் அது பள்ளிக்கல்வியில் நீங்கள் அடையக்கூடிய உயர்வு தான் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், விருதுநகர் நகர்மன்றத்தலைவர் திரு.ஆர்.மாதவன், தலைமையாசிரியை உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply