விருதுநகர் மாவட்டம், பழைய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், விருதுநகர் மண்டலத்தில் புதியதாக வாங்கப்பட்ட 9 பேருந்துகளின் சேவையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் முன்னிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் நிதி, சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள்; ஆகியோர் (26.08.2025) பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசு பேருந்துகளின் பராமரிப்பினை மேம்படுத்திடவும், பேருந்து வழித்தடங்களை மறுஆய்வு செய்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பேருந்து சேவை மற்றும் வசதியினை மேம்படுத்திடவும், போக்குவரத்து கழகங்களுக்கு புதிய பேருந்துகளை ஒதுக்கீடு செய்யவும், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை கோட்டத்தின் கீழ் மதுரை, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் ஆகிய இடங்களில் மண்டல அலுவலகங்கள் செயல்பட்டு நகர், புறநகர் மற்றும் மலைப்பகுதிகளில் பேருந்து சேவை வழங்கப்பட்டு வருகின்றது. விருதுநகர் மண்டலத்தில் தற்போது 457 பேருந்துகள் வரை இயக்கப்படுகிறது.அதன் ஒரு பகுதியாக தற்போது 9 புதிய பேருந்துகள் இன்று பயன்பாட்டிற்கு இயக்கி வைக்கப்பட்டுள்ளது.அதன்படி, இராஜபாளையம் -மதுரை - செங்கோட்டை வழித்தடத்திலும், இராஜபாளையம் - செங்கோட்டை -பழனிவழித்தடத்திலும்,அருப்புக்கோட்டை - பழனி வழித்தடத்திலும்,சிவகாசி - மதுரை - திருச்சி வழித்தடத்திலும், இராஜபாளையம் - மதுரை -திருச்சி வழித்தடத்திலும், சிவகாசி - மதுரை -திருச்சி வழித்தடத்திலும், அருப்புக்கோட்டை -மதுரை -திருச்சி வழித்தடத்திலும்,கோவில்பட்டி- மதுரை -திருச்சி வழித்தடத்திலும், இராஜபாளையம் -மதுரை -திருச்சிவழித்தடத்திலும் ஆகிய 9 வழித்தடங்களுக்கு புதிய பேருந்துகளின் சேவைகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.விருதுநகர் மண்டலம் மூலம் தினசரி 2 இலட்சம் கிலோ மீட்டர் இயக்கம் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு 176 மகளிர் கட்டணமில்லா பேருந்துகள் இயங்கி வந்த நிலையில் தற்பொழுது 222 பேருந்துகளாக அதிகப்படுத்தப்பட்டுள்ளது. மகளிர் கட்டணமில்லா பேருந்துகளில் நாளொன்றுக்கு ஒரு பேருந்திற்கு சராசரியாக 1003 மகளிர்கள் பயணம் செய்கின்றனர். மேலும், 85757 பள்ளி மாணவ, மாணவியர்களும், 348 மாற்றுத்திறனாளிகளும் இலவச பயண அட்டைகள் மூலம் பயன்பெறுகின்றனர் என தெரிவித்தனர்.இந்நிகழ்ச்சியில், விருதுநகர் மண்டல பொது மேலாளர் (தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்) திரு.கலைவாணன், விருதுநகர் நகர்மன்ற தலைவர் திரு.மாதவன், உதவி இயக்குநர்(போக்குவரத்து கழகம்) திரு.தங்கவேலு, உதவி மேலாளர்கள் திரு.சத்திய மூர்த்தி மற்றும் திரு.நாகராஜ், உள்ளாட்சி பிரதிநிதிகள், போக்குவரத்துக்கழக அலுவலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (25.08.2025) உயர்கல்வி பயில்வதற்காக கல்வி கட்டணத்திற்கான உதவித்தொகை வேண்டி மனு அளித்த 9 மாணவர்களுக்கு ரூ.65,867/- மதிப்பில் கல்வி உதவித்தொகைக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என்.ஓ.சுகபுத்ரா. I A S., அவர்கள் வழங்கினார்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரியில் (25.08.2025) நான் முதல்வன் உயர்வுக்கு படி திட்டத்தின் கீழ், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர்கல்வி சேராத மாணவர்களுக்கான சிறப்பு உயர்கல்வி வழிகாட்டுதல் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,, I A S., அவர்கள் துவக்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க அருப்புக்கோட்டை பகுதி மாணவர்களுக்காக நான் முதல்வன் உயர்வுக்கு படி என்ற திட்டத்தின் மூலம் உயர் கல்வி சேர்க்கைக்கான முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது .பள்ளி படிப்பை முடித்த அனைத்து மாணவர்களும் உயர் கல்வியை படிக்க வேண்டும். வாழ்க்கையில் முன்னேற வேண்டும். நன்றாக படித்து அவர்களுடைய குடும்பங்களை பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் தமிழக அரசு செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.மேலும், குடும்ப சூழ்நிலை, உடல்நிலை உள்ளிட்ட காரணங்களால் தேர்ச்சி பெற முடியாமலும், தனித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் அவர்களுக்கும் தமிழக அரசு உயர்கல்விக்கான வாய்ப்புகள் குறித்து வழிகாட்டுதல் வழங்கி வருகிறது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் படிக்க விருப்பமுள்ள ஒவ்வொரு மாணவ, மாணவிகளும் எந்த சூழ்நிலையிலும் படிப்பை தொடர முடியாமல் இருக்கக்கூடாது என்பது தான்.இந்த நிகழ்ச்சியில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, இன்றளவும் உயர் கல்வி சேராத மாணவர்களுக்கு உயர்கல்வி சார்ந்த படிப்புகள், உயர் கல்வி நிறுவனங்கள், கல்லூரிகளில் உள்ள இடங்கள் மற்றும் தொழிற்நுட்ப கல்வி இடங்களுக்கு நேரடி சேர்க்கையும், வேலைவாய்ப்புகள் சார்ந்த வழிகாட்டல்களும் வழங்கப்படுகிறது.மேலும் கல்லூரிகளில் உள்ள பல்வேறு வகையான படிப்புகள் மற்றும் இடங்கள் குறித்தும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு உரிய ஆலோசனை வழங்கவும், கல்விக் கடன் வழங்குதல் குறித்தும் பல்வேறு துறைகள் சார்பில் அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் முயற்சியை கைவிடக்கூடாது. தோல்வி என்பது நிரந்தர தோல்வி அல்ல. தோல்வி அடுத்த கட்டத்திற்கு போவதற்கான ஒரு பாடம் மட்டுமே. நம் வாழ்க்கையில் எந்த நிலைமையிலும் கூட விடா முயற்சி செய்தால்; முன்னேறி விடலாம். தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் திட்டங்கள் மூலம் மாதந்தோறும் ரூ.1000/-, கல்விக்கடன், உதவித்தொகைகள் போன்ற நிறைய அரசு திட்டங்கள் மற்றும் சலுகைகளை அரசு மாணவர்களுக்காக செயல்படுத்துகிறது.இந்த வாய்ப்பை பயன்படுத்தி நன்றாக படித்து வாழ்வில் நீங்களும் உயர வேண்டும் உங்களுடைய குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் வீட்டிற்கும், ஊருக்கும், நாட்டிற்கும் நல்ல பெயiர் எடுத்து தர வேண்டும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்(25.08.2025) தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்கம் 2025-26 கீழ், 10 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.3 இலட்சம் மதிப்பில் 50 சதவிகித மானியத்துடன் கூடிய நடமாடும் காய்கனிகள் விற்பனை வண்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் வழங்கினார்.தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் தேசிய தோட்டக்கலை இயக்கம் 2025-26 திட்டத்தின் கீழ், சில்லறை விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், ரூ.30,000/- மதிப்பிலான நடமாடும் காய்கனிகள் விற்பனை வண்டிகள் ரூ.15,000 மானியத்துடன் வழங்கப்படுகின்றன.இந்தத் திட்டத்தின் மூலம் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நேரடியாக விற்பனை செய்ய முடியும். விவசாயிகளுக்கு தங்கள் விளைபொருட்களைச் சந்தைப்படுத்த புதிய வழிகளை உருவாக்குதல், சில்லறை விற்பனையை மேம்படுத்துதல், விவசாயிகளுக்கு நேரடியாக வருமானத்தை அதிகரிக்கும் வாய்ப்புகளை வழங்குதல் ஆகியவை இத்திட்டத்தின் நோக்கம்.அந்த வகையில், விருதுநகர் மற்றும் சாத்தூர் வட்டாரங்களைச் சேர்ந்த 10 பயனாளிகளுக்கு இந்த நடமாடும் காய்கனிகள் விற்பனை வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.இத்திட்டத்தின் மூலம் மானிய விலையில் நடமாடும் காய்கனிகள் வண்டிகள் பெற்றுள்ளதால், எங்களைப்போன்ற சிறு விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் விளையும் காய்கள் மற்றும் கனிகளை நேரடியாக விற்பனை செய்ய முடியும் என்றும், ஒரே இடத்தில் அமர்ந்தும், கூடைகளில் சுமந்தும் விற்பனை செய்து வந்த எங்களுக்கு, இந்த நடமாடும் வண்டிகள் வழங்கப்பட்டுள்ளதால், காய்கனிகளை சிரமமின்றி வேறு இடத்திற்கு சுலபமாக எடுத்துச் சென்று விற்பனை செய்து எங்கள் வருமானத்தை பெருக்க முடியும் எனவும், இந்த நடமாடும் வண்டிகளை மானிய விலையில் வழங்கிய தமிழ்நாடு அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் விவசாயிகள் நன்றிகளை தெரிவித்தனர்.இந்நிகழ்வில், துணை இயக்குநர்(தோட்டக்கலைத்துறை) திருமதி சுபாவாசுகி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) திருமதி அம்சவேணி, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர், அரசு அலுவலர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் (25.08.2025) நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது. மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தகுடி மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடர்புடைய அலுவலர்களை அறிவுறுத்தினார்கள். பின்னர், விருதுநகர் மாவட்டத்தில் குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம் 1986 மற்றும் குழந்தைத் தொழிலாளர் தடைசெய்தல் மற்றும் முறைப்படுத்துதல் திருத்தச் சட்டம் 2016-ன் கீழ் மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு தொகையாக 12 பயனாளிகளுக்கு தலா ரூ.40/- ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.4.8 இலட்சம் மதிப்பிலான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி பிரதௌஸ் பாத்திமா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.காளிமுத்து, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (25.08.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.முன்னதாக, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நகர்புற பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை 26.08.2025- அன்று விரிவாக்கம் செய்யவுள்ளதை தொடர்ந்து, காரியாபட்டி பேரூராட்சி, கே.செவல்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ள அமலா துவக்கப்பள்ளியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.மேலும், தொடக்கப்பள்ளி மாணவர்களின் கற்றல், கற்பித்தல் திறன் குறித்து கேட்டறிந்து, மாணவர்களுடன் கலந்துரையாடினார்.பின்னர், காரியாபட்டி பேரூராட்சியில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.10.27 கோடி மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளதை நேரில் சென்று பார்வையிட்டு, மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் இருந்து ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள மற்றும் புதியதாக அமைக்கப்படவுள்ள பகிர்மான குழாய்கள் மூலம் பயனாளிகளுக்கு குடிநீர் வழங்கப்படவுள்ளதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.பின்னர், காரியாபட்டி பேரூராட்சியில் 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் வார்டு எண்.10-ல் உள்ள அரசு பணியாளர் குடியிருப்பு முதல் தெருவில் ரூ.6 இலட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.அதனை தொடர்ந்து, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வார்டு எண்.7 பாண்டின் நகர் 1,2,3,4 மற்றும் 5-வது தெருக்களில் ரூ.44 இலட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.மேலும் நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது,காரியாபட்டி பேரூராட்சி தலைவர் திரு.ஆர்.கே.செந்தில், செயற்பொறியாளர், பேரூராட்சி உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
“பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களைத் தடுக்கவும் பாடுபட்டு, வீர தீர செயல் புரிந்த, 13 முதல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு, தகுதிகளின் அடிப்படையில், தேசிய பெண் குழந்தை தினத்தில் (ஜனவரி, 24) பாராட்டு பத்திரமும், ரூ.1 இலட்சத்திற்கான காசோலையும் வழங்கி சிறப்பிக்கப்பட்டு வருகிறது.அதன்படி இவ்விருதிற்கு 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட (31 டிசம்பர்-ன் படி) தமிழகத்தில் வசிக்கும் பெண் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்.பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல், வேறு ஏதாவது வகையில் சிறப்பான / தனித்துவமான சாதனை செய்திருத்தல், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூட நம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணர்வை ஏற்படுத்தியிருத்தல், ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல் உள்ளிட்ட தகுதிகளை உடைய குழந்தைகளிடமிருந்து கருத்துருக்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்விருதுக்கான விண்ணப்ப விவரங்களை (http://awards.tn.gov.in) என்ற இணையதளத்தில் 30.11.2025 -ற்குள் பதிவேற்றம் செய்திலாம்.மேலும் அசல் கருத்துருவினை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாகத்திலுள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு, ட்ரோன் தயாரிப்பு, கூட்டமைப்பு , சோதனை மற்றும் பறக்கும் தொழில் நுட்ப பயிற்சி (Drone Manufacturing Assembly Test& Flying), எம்பெடெட் சென்சார் சோதனை பயிற்சி (Embedded Sensor Testing Program), பிரிண்டெட் சர்க்யூட்போர்டு வடிவமைப்பு பயிற்சி (PCB Designing Program), பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி திட்டம் (Core Tech Placement program) அளிக்கப்படவுள்ளது . தாட்கோவின் முன்னெடுப்பாக சென்னையில் உள்ள முன்னணி தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, ட்ரோன் தயாரிப்பு, கூட்டமைப்பு , சோதனை மற்றும் பறக்கும் தொழில்நுட்ப பயிற்சி (Drone Manufacturing Assembly Test& Flying), எம்பெடெட் சென்சார் சோதனை பயிற்சி (Embedded Sensor Testing Program), பிரிண்டெட் சர்க்யூட் போர்டு வடிவமைப்பு பயிற்சி திட்டம்(PCB Designing Program), பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி திட்டம் (Core Tech Placement program ) போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். ட்ரோன் தயாரிப்பு, கூட்டமைப்பு ,சோதனை மற்றும் பறக்கும் தொழில்நுட்பபயிற்சி (Drone Manufacturing Assembly Test& Flying ) சம்பந்தப்பட்ட பயிற்சிக்கு ஏதெனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவராகவும், 18 முதல் 35 வயது நிரம்பியவராகவும் இருத்தல் வேண்டும். எம்பெடெட் சென்சார் சோதனை பயிற்சி(Embedded Sensor Testing Program), பிரிண்டெட் சர்க்யூட்போர்டு வடிவமைப்பு பயிற்சி திட்டம்(PCB Designing Program) மற்றும் பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி திட்டம்(Core Tech Placement program) போன்ற பயிற்சிகளுக்கு 18 முதல் 35 வயது நிரம்பியவராகவும், ஏதேனும் ஒரு இளநிலை பொறியியல் பட்டப்படிப்பு அல்லது ஏதேனும் ஒரு பொறியியல் பட்டயப்படிப்பில் (Diploma)தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும்.மேற் கூறிய பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதார்களின் குடும்ப ஆண்டு வருமானம்ரூ.3.00 இலட்சத்திற்குள் இருக்கவேண்டும். தகுதியுள்ள இளைஞர்கள் இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளத்தின் மூலம் www.tahdco.comபதிவு செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் தங்கும் விடுதி மற்றும் உணவு உட்பட செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் பதிவுசெய்து இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் .மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு செய்தி. கடந்த சில தினங்களாக நமது மாவட்ட ஆட்சியரின் புகைப்படத்தை பயன்படுத்தி ஆட்சியர் பெயரில் போலியான முகநூல் பக்கம் உருவாக்கி, அதன் மூலம் பணம் கேட்பதாக எங்களது கவனத்திற்கு வந்துள்ளது.இது முற்றிலும் இணையவழி திருடர்களின் வேலையாகும். ஏற்கனவே இதுபோன்ற பல மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் பெயரில் போலியான முகநூல் பக்கம் உருவாக்கி அதன்மூலம் பலரிடமும் பணம் பெற்று ஏமாற்றியுள்ளனர்.இதுபோன்ற போலியான முகநூல் பக்கத்திலிருந்து யாராவது பணம் கேட்டால் யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். மேலும் இணைய வழியாக யாரேனும் கடன் தருவதாகவோ, பரிசு விழுந்துள்ளதாகவும் அதற்கு முன்பணம் கட்டவேண்டும் என்றோ, வெளிநாட்டிலிருந்து பரிசு வந்துள்ளது.அதனை விமான நிலையத்தில் சுங்ககட்டணம் கட்டி வாங்கிக்கொள்ள பணம் அனுப்புமாரோ யாரேனும் தொலைபேசி வாயிலாகவோ தொடர்புகொண்டால் அதனை நம்பவேண்டாம். இவை அனைத்தும் இணையவழி திருடர்களின் வேலையாகும்.எனவே விருதுநகர் மாவட்ட மக்கள் இதுபோன்ற போலியான முகநூல் அல்லது இணையவழியாக யாரேனும் பணம் கேட்டால் யாரும் நம்பி பணம் அனுப்பி ஏமாற வேண்டாம் என்றும், மிகவும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மாநில அரசின் பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறை அலுவலர்களால் 80வது தேசிய மாதிரி ஆய்வு ஜூலை 2025 முதல் ஜீன் 2026 முடிய உள்ள காலத்தில் முழுமையான உள்நாட்டுச் சுற்றுலா செலவு கணக்கெடுப்பு (Domestic Tourism Expenditure Survey), பற்றிய விவரங்கள் குறித்து 20 நகர்புறபகுதிகளிலும் மற்றும் 17 கிராமப்புறபகுதிகளிலும், ஜூலை 2025 முதல் டிசம்பர் 2025 முடிய உள்ள காலத்தில் இணைக்கப்படாத துறை நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பு (Annual Survey of Unincorporated Sector Enterprises) பற்றிய விவரங்கள் குறித்து 08 நகர்புற பகுதிகளிலும் மற்றும் 08 கிராமப்புறபகுதிகளிலும் மற்றும் ஜூலை 2025 முதல் டிசம்பர் 2025 முடிய உள்ள காலத்தில் காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு (Periodic Labour Force Survey) பற்றிய விவரங்கள் குறித்து 12 நகர்புற பகுதிகளிலும் மற்றும் 07 கிராமப்புற பகுதிகளிலும் ஆகிய மூன்று தலைப்புகளில் சமூக பொருளாதார ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.தேசிய பொருளாதாரத்தில் சுற்றுலாவின் முக்கியத்துவம் பன்மடங்கு ஆகும். போக்குவரத்து சேவைகள் மற்றும் இரவு நேர உள்நாட்டுப் பயணம் தொடர்பான விவரங்கள் உள்ளடக்கிய உள்நாட்டு சுற்றுலா செலவினங்கள் குறித்த தரவுகளை சேகரிப்பதற்கும்,கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் வேலைவாய்ப்பு மற்றும் வேலையின்மை கணக்கிடுவதற்கும், இணைக்கப்படாத துறை நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் கட்டுமான நடவடிக்கைகள் குறித்த ஒரு முன்னோடி ஆய்வும் மற்றும் தனியுரிமை, கூட்டாண்மை மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் போன்ற இணைக்கப்படாத நிறுவனங்களின் கட்டுமானப் பணிகளுடன் தொடர்புடைய மொத்த மதிப்பு வெளியீடு (Gross Value Output) மற்றும் மொத்த மதிப்பு கூட்டல் (Gross Value Added) ஆகியவற்றை மதிப்பிடுவதற்கான அத்தியாவசிய தரவுகளை இந்த ஆய்வு சேகரிக்கும்.விருதுநகர் மாவட்டத்திற்கு உள்நாட்டுச் சுற்றுலா செலவு கணக்கெடுப்பிற்கு குறையறவாசித்தான்,தம்பிபட்டி,பிள்ளையார்நத்தம், பந்தல்குடி, சாணான்குளம், பேர்நாயக்கன்பட்டி, வெங்கடேஸ்வரபுரம், மேலராஜகுலராமன்(பகுதி), பி.ஆண்டிப்பட்டி, கல்லூரணி, கீழத்திருத்தங்கல், புதுப்பாளையம், ஊமத்தம்பட்டி, வரலொட்டி, தம்மநாயகன்பட்டி, மங்கலம் மற்றும் கலங்காபேரி ஆகிய 17 கிராமப்புற மாதிரிகளிலும், விருதுநகர், செங்கமலநாச்சியார்புரம், பாலையம்பட்டி, படிக்காசுவைத்தான்பட்டி, பள்ளப்பட்டி(2மாதிரிகள்), வத்திராயிருப்பு, இராஜபாளையம்(4மாதிரிகள்), ஆத்திபட்டி(2மாதிரிகள்), ஆமத்தூர்(2மாதிரிகள்), சிவஞானபுரம், சிவகாசி, சித்துராஜபுரம், விஸ்வநத்தம் மற்றும் ரோசல்பட்டி ஆகிய 20 நகர்ப்புற மாதிரிகளிலும்,இணைக்கப்படாத துறை நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பிற்கு கோவிலாங்குளம், நெய்விளக்குநெடுங்குளம், முள்ளிசெவல் (எ) சொக்கலிங்கபுரம், முஸ்டக்குறிச்சி, கம்பிக்குடி, மேலக்கண்டமங்கலம், நதிக்குடி மற்றும் மல்லி ஆகிய 8 கிராமப்புற மாதிரிகளிலும், இராஜபாளையம் (2மாதிரிகள்), விருதுநகர், மம்சாபுரம், சேத்தூர், ரோசல்பட்டி, விஸ்வநத்தம் மற்றும் பாலையம்பட்டி ஆகிய 8 நகர்புற மாதிரிகளிலும்,காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பிற்கு வச்சக்காரப்பட்டி, தெற்கு தேவதானம், ஆனையூர்(பகுதி), ரெகுநாதபுரம், வேப்பிலைச்சேரி, வலையபட்டி மற்றும் முள்ளிசெவல்(எ) சொக்கலிங்கபுரம் ஆகிய 7 கிராமப்புற மாதிரிகளிலும், வெங்கடாசலபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர், திருத்தங்கல்(2மாதிரிகள்), விருதுநகர், சாத்தூர்(2மாதிரிகள்), செட்டியார்பட்டி, விஸ்வநத்தம், நாரணாபுரம், பாலையம்பட்டி மற்றும் சேத்தூர் 12 நகர்புற மாதிரிகளிலும் ஆய்வு நடத்தப்பட உள்ளதால்,மேற்படி ஆய்வுக்காக துறை சார்ந்த அலுவலர்கள் நேரடியாக ஒவ்வொரு வீட்டிற்கும் விவரங்களை சேகரிப்பதற்காக வரும் பொழுது பொதுமக்கள் உண்மையான புள்ளி விவரங்களை அளித்து, நாட்டின் வளர்ச்சிக்கு உரிய ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது. மக்களால் கொடுக்கப்படும் புள்ளி விவரங்கள் மிகவும் இரகசியமாக பாதுகாக்கப்படும் என்ற உறுதி மொழியும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. மேலும் குடும்ப வருமானம் அல்லது குடும்ப செலவினம் தொடர்பான விவரங்கள் கேட்கப்படும் போது பொது மக்கள் உண்மையான விவரங்கள் வழங்கவேண்டும் எனவும், திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்த ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஒ.சுகபுத்ரா, I A S.,அவர்கள் தெரிவித்துள்ளார்.