விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டம், கீழூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், வீடுகள் கட்டி குடியிருப்பதற்கான உத்தரவுகள் பெற்று, சுமார் 35 ஆண்டுகளாக குடியிருந்து வரும் 31 பயனாளிகளுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், இணையவழி பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் பயனாளிகளின் இல்லங்களுக்கு நேரில் சென்று வழங்கினார்.தமிழ்நாடு அரசு சொந்தமாக வீடு இல்லாமல் அரசின் புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் ஏழை, எளிய குடும்பங்களுக்கு சொந்தமாக ஒரு வீடு கட்டி வாழ வேண்டும் என்பதற்காக இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டம் என்ற உன்னதமான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.இத்திட்டத்தின் மூலம் ஆக்கிரமிப்பு பகுதிகளில் வசிக்கும் ஏழை குடும்பங்கள் பாதுகாப்பான மற்றும் நிலையான வாழ்க்கையை வாழ வழிவகை செய்யப்படுகிறது.இலவச மனை பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு இல்லாமல் ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி வாழ்ந்து வரும் ஏழை, எளிய குடும்பங்களுக்கு வீட்டு மனை வழங்கப்படுகிறது. மேலும், ஆக்கிரப்பு நிலத்திற்கு உண்டான பட்டாவையும் அரசே இலவசமாக வழங்கி வருகிறது.தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து மாவட்டங்களிலும் அதிகமான பட்டாக்களை வழங்கிய மாவட்டமாக நமது மாவட்டம் தான் முதலிடத்தில் இருக்கிறது. இதுவரை சுமார் 40000 -த்திற்கும் மேற்பட்ட பட்டாக்களை வழங்கி இருக்கிறது.அந்த வகையில் திருவில்லிபுத்தூர் வட்டம் கீழூர் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த 31 குடும்பங்கள் கடந்த 3வருடங்களுக்கு முன்பு அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி குடியிருப்பதற்கான உத்தரவுகளை பெற்று குடியிருந்து வருவதாகவும், இதுவரை இந்த இடங்களுக்கான பட்டா இல்லை என்பதால், அதற்கான பட்டார்கள் வழங்கிட வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.அதனடிப்படையில், சுமார் 35 ஆண்டுகளாக குடியிருந்து வரும் அப்பகுதி மக்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து வருவாய்த்துறையின் மூலம், 31 குடும்பங்களுக்கு இணையவழி பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று வழங்கினார். இந்த இடங்களில் நாங்கள் 35 ஆண்டுகளாக குடியிருந்து வந்தாலும், அரசு பட்டா இல்லாமல் சிரமப்பட்டு இருந்தோம். தற்போது எங்கள் அனைவருக்கும் இலவச பட்டாக்களை, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களே வீடு தேடி வந்து வழங்கியது மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது எனவும், இலவச பட்டா வழங்கியதன் மூலம் நாங்கள் குடியிருந்து வரும் இந்த வீட்டுக்கான அரசு அங்கீகாரம் கொடுத்த தமிழ்நாடு அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் இப்பகுதி மக்கள் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.
புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவ செலவினத் தொகையை திரும்பக் கோரும் இனங்களின் மீது தீர்வு காணும் பொருட்டும், மனுக்கள் மற்றும் அசல் ஆவணங்கள் விடுபட்ட மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தொடர்பான குறைதீர்கூட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறை தீர்க்கும் கூட்ட அரங்கில் 18.09.2025 அன்று முற்பகல் 11.00 மணியளவில் நடைபெற உள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஒய்வூதியதாரர்கள் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து அதன் மீது விருதுநகர், இணை இயக்குநர், மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் மற்றும் குடும்ப நலம்; மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனத்தால் ஆவணங்கள் கோரப்பட்டிருக்கும் பட்சத்தில் மேற்படி கூட்டத்தில் தகுந்த ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S ., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், (29.08.2025) மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்கூட்டம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு உறுப்பினர் செயலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S. , அவர்கள், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.அசோகன் அவர்கள், சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் மற்றும் சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான்,I A S., அவர்கள் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழுத்தலைவர் / விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ப.மாணிக்கம்தாகூர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.மத்திய அரசு திட்டங்கள் மற்றும் அதன் நோக்கம் சரியாக நிறைவேற்றப்படுவதை மாவட்டஅளவில் கண்காணித்து நிறைவேற்றுவது மற்றும் ஆலோசனைகள் வழங்குவது மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் (District Development Coordination and Monitoring Committee) பணியாகும். மத்திய அரசின் திட்டப்பணிகளை செயல்படுத்தும் போது ஏற்படும் இடர்களை சரியான நேரத்தில் களைந்து அதற்கான தீர்வுகளை கண்டு பணிகளை சிறப்பாக நிறைவேற்ற மாவட்ட நிர்வாகத்திற்கு வழிகாட்டியாக இந்தக்குழு செயல்படுகிறது.விருதுநகர் மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை மூலம் மத்திய அரசுத் திட்டங்களை செயல்படுத்துவதை கண்காணித்திடும் பொருட்டு மாவட்டவளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (District Development Coordination and Monitoring Committee) கூட்டம் காலாண்டிற்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. அதன்படி 2025-2026 ஆம் நிதியாண்டிற்கான இரண்டாம் காலாண்டிற்கான கூட்டம் இன்று நடைபெற்றது.இக்கூட்டத்தில் கடந்த காலாண்டிற்கான கூட்டத்தின் போது எழுப்பப்பட்ட கேள்விகள் மற்றும் கோரிக்கைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும் தொடர்புடைய மாவட்ட அளவிலான அனைத்து அலுவலர்களிடம்; திட்ட செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இக்கூட்டத்தில், விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்களான பிரதம மந்திரி வேலைவாய்ப்பு திட்டம், பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம், தேசிய உணவு பாதுகாப்புச் சட்ட பொது விநியோகத் திட்டம், நில ஆவணங்கள் கணினி மயமாக்குதல், தேசிய நெடுஞ்சாலை - மத்திய சாலை திட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், மதிய உணவு திட்டம், பிரதம மந்திரி கௌசல் விகாஸ் யோஜனா, டிஜிட்டல் இந்தியா - பொது தகவல் மையம், பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம், தூய்மை பாரத இயக்கம் (கி), ஜல் ஜீவன் மிஷன் திட்டம், பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், தீன்தயாள் அந்த்தோயா யோஜனா, தீன்தயாள் உபாத்தயாகிராமின் கௌசல்யா யோஜனா, தூய்மை பாரத இயக்கம் - மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள், அனைவருக்கும் வீடுகள் வழங்கும் திட்டம், அனைவருக்கும் வீட்டுவசதி திட்டம், இராஷ்டிரிய கிருஷி விகாஸ் யோஜனா, பரம்பரக்கத் கிருஷி விகாஸ் யோஜனா, பிரதம மந்திரி கிராம முன்னேற்றத் திட்டம், தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம், மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம், தேசியநலக் குழுமம், பிரதம மந்திரி கனிஜ் சேஷ்த்ரா கல்யாண் யோஜனா, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, தேசிய செயற்கை முறை கரூவூட்டல் திட்டம், தேசிய கால்நடை இயக்கம் - கால்நடை காப்பீடு திட்டம், தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டு திட்டம்- கோமாரி நோய் தடுப்பூசி செலுத்துதல், பொதுப்பணித் துறை - தேசிய சுகாதார இயக்கம், ஜல் ஜீவன் மிஷன் திட்டம், மறுசீரமைக்கப்பட்ட மின் விநியோக திட்டம், பிரதம மந்திரி வேலைவாய்ப்பு திட்டம் (கதர் கிராமத் தொழில்கள்) உட்பட பல்வேறு திட்டங்களின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள பணிகள் மற்றும் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள், இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட பணிகள், முடிவுற்ற பணிகள், நிலுவையில் உள்ள பணிகள் குறித்தும் துறை வாரியாக ஆய்வு மேற்கொண்டு, நிலுவையில் உள்ள பணிகள் மற்றும் நடைபெற்று வரும் பணிகளை தரமாக விரைந்து முடித்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழுத்தலைவர் / விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் அறிவுறுத்தினார்கள். பின்னர், அனைத்து வளர்ச்சித் திட்டப் பணிகளையும் வேலை உத்தரவு பெற்றவுடன் குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை தரமாக முடிக்க வேண்டும் எனவும் தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.மேலும், மேற்கண்ட திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகளில் என்னென்ன சிரமங்கள் உள்ளது என்பது குறித்தும், என்னென்ன திட்டங்களுக்கு நிதிவராமல் நிலுவையில் உள்ளது என்பது குறித்தும், புதிய திட்டங்களுக்கு தேவையான நிதிகள் ஆகியவை குறித்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்கும் பட்சத்தில் அது குறித்து, சம்பந்தப்பட்ட துறை மத்திய அமைச்சர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, நமது மாவட்டத்திற்கு தேவையான திட்டங்கள் அனைத்தும் விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், அரசு அலுவலர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கி, நமது மாவட்டத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல அனைவரின் ஒத்துழைப்பை நல்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தெரிவித்தார்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர்- 3644 பணிக்காலியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கை 02/2025, நாள் 21.08.2025 அன்று வெளியிடப்பட்டுள்ளது.இத்தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் விருதுநகர் மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் பொருட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், விருதுநகர் சார்பாக இலவசப் பயிற்சி வகுப்புகள் 03.09.2025 (புதன் கிழமை) அன்று தொடங்கப்படவுள்ளது.இவ்வகுப்புகள் திறன் வாய்ந்த பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு இத்தேர்வுக்கு தேவையான பாடக்குறிப்புகள் இலவசமாக வழங்கப்படும். இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உடையவர்கள் https://forms.gle/dsWChcUm8coEtMZr8 என்ற கூகுள் பார்ம் மூலமாகவோ அல்லது விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாக தெரிவிக்கலாம்.மேலும், விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாவோ அல்லது அலுவலகத்திற்கு வந்து நேரடியாகவோ தொடர்புகொள்ளலாம். எனவே, TNUSRB – PC EXAM 2025 தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S..,அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி மெப்கோ பொறியியல் கல்லூரியில், (28.08.2025) தமிழ் இணையக் கல்விக் கழகம் சார்பில் நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தொடங்கி வைத்து உரையாற்றினார்.இந்நிகழ்ச்சியில் கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்கள் “நூற்றாண்டு கண்ட கல்விப் புரட்சி” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.கல்லூரி மாணவர்களிடையே தமிழர்களின் மரபையும் தமிழ்ப் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் உயர்கல்வித் துறையுடன் தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து "மாபெரும் தமிழ்க்கனவு" என்ற பெயரிலான பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வுகள் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளான 03.02.2023 அன்று தொடங்கப்பட்டு, 2022- 2023 மற்றும் 2023 - 2024 கல்வியாண்டுகளில், தமிழ்நாடு முழுவதும் உள்ள 2000 கல்லூரிகளைச் சேர்ந்த ஏறத்தாழ 2 இலட்சம் மாணவர்களைச் சென்றடையும் வண்ணம் 200 இடங்கில் சிறப்பாக நடத்தப்பட்டன.இதன் 100-வது நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உரையாற்றுகையில் இந்நிகழ்வானது கல்லூரி மாணவர்களிடையே தமிழ் மரபு, தமிழர் தொன்மை, மொழி முதன்மை, சமூக விழிப்புணர்வு, சமத்துவ வளர்ச்சி குறித்த புரிதலை ஏற்படுத்தும் வகையிலும், அவர்கள் அடுத்த கட்ட இலக்குகளை நோக்கிச் செல்லும் வகையிலும் அமைந்திருக்கிறது. எனவே, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் பயனடையும் வண்ணம் இந்நிகழ்ச்சி அடுத்து வரும் ஆண்டுகளில் தொடர்ந்து நடத்தப்படும் எனவும் அறிவித்தார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க, அடுத்த கட்ட நிகழ்ச்சியானது தற்போது தொடங்கியுள்ளது. நமது தமிழ் மரபின் வளமையும் பண்பாட்டின் செழுமையும், சமூகச் சமத்துவத்தையும், பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகளையும் இளம் தலைமுறையினரிடையே குறிப்பாகக் கல்லூரி மாணவர்களிடையே கொண்டு செல்வதற்காக தமிழ்நாடு அரசு இந்தப் பரப்புரைத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட நூலக அலுவலகம் மூலம் புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனை, கல்லூரி மாணவர்களுக்கான நான் முதல்வன் திட்டத்தின் கீழ் திறன் பயிற்சித் திட்டங்கள், வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மூலம் உயர்கல்;வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி, மாவட்ட முன்னோடி வங்கி மூலம் கல்விக்கடன், வங்கிக்கடன், மாவட்ட தொழில் மையம் சார்பில் மத்திய மாநில அரசுகளின் தொழில் முனைவோர் திட்டங்கள், மான்யத்துடன் கூடிய கடன்உதவிகள், தாட்கோ மூலம் தொழில்முனைவோர்களுக்கான அரசுத் திட்டங்கள் மற்றும் மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வாய்ப்புகள், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் மகளிர் சுய உதவிக்குழு பொருட்களின் கண்;காட்சி மற்றும் விற்பனை உள்ளிட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.மேலும், கல்லூரி மாணவ, மாணவியர்கள் தங்களது சிந்தனை மற்றும் திறனை நிரூபிக்கும் வகையில் தமிழ் பெருமிதம் குறித்து சிறப்பாக பேசிய மாணவர்களுக்கு பெருமித செல்வன் மற்றும் பெருமித செல்வி விருதுகள் வழங்கப்பட்டன. சொற்பொழிவு நிகழ்ச்சிக்குப் பின் சிறந்த கேள்விகள் எழுப்பிய கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கேள்வியின் நாயகன் மற்றும் கேள்வியின் நாயகி விருதுகளும் வழங்கப்பட்டன.இந்நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர், பல்வேறு கல்லூரிகளிலிருந்து சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், விஸ்வநத்தம் ஊராட்சி சிவகாமிபுரத்தில் (28.08.2025) நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.உங்களுடன் ஸ்டாலின் முகாமானது மாவட்டத்தில் 15.07.2025 முதல் நடைபெற்று வருகிறது. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 349 சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.இம்முகாம்கள் கிராமப்பகுதியான 11 ஊராட்சி ஒன்றிய பகுதியில் 229 முகாம்களும், நகரப் பகுதிகளான சிவகாசி மாநகராட்சி, 5 நகராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சி பகுதிகளில் 120 முகாம்கள் என மொத்தம் 349 முகாம்கள் நடைபெற உள்ளது.இம்முகாம்களில் நகரப்பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும் ஊரகப்பகுதிகளில் 15 துறைகள் மூலம் 46 சேவைகளும் அளிக்கப்படுகிறது.அந்த வகையில் (28.08.2025) அருப்புக்கோட்டை நகராட்சி நெசவாளர் தெரு, சிவகாசி ஊராட்சி ஒன்றியம் விஸ்வநத்தம் ஊராட்சி சிவகாமிபுரம், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் படிக்காசுவைத்தான்பட்டி, இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் மேலராஜகுலராமன், வத்திராயிருப்பு பேரூராட்சி தெற்கு தெரு, விருதுநகர் நகராட்சி எஸ்.எஸ்.டி திருமண மண்டபம் ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெற்றன.அதன்படி, சிவகாசி ஊராட்சி ஒன்றியம், விஸ்வநத்தம் ஊராட்சி சிவகாமிபுரத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் என்ற சிறப்பு முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து, மனுக்கள் பதிவேற்றம் செய்வது, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு பிரிவுகள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, அலுவலர்களுக்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.அதனை தொடர்ந்து, இம்முகாமில் பட்டா வேண்டி மனு அளித்து, தீர்வு பெற்றவர்களுக்கு பட்டா உத்தரவுகளையும், மின் இணைப்பில் பெயர் மாற்றம் வேண்டி விண்ணப்பித்த மனுதாரரின் மனுவை உடனடியாக பரிசீலனை செய்து மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்த நகலினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்த “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு 45-நாட்களுக்குள் உரிய தீர்வு காணப்படும். எனவே, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்கள் உங்கள் வீட்டின் அருகிலுள்ள முகாம்களுக்கு சென்று மனுவை அளித்து தங்களின் குறைகளுக்கு தீர்வு காண இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் (26.08.2025) தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதலமைச்சர் கோப்பை 2025-க்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன்,த.க.ப., அவர்கள், சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி.சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் தொடங்கி வைத்தார்.முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் - 2025(Chief Minister’s Trophy Games - 2025) அனைத்து மாவட்ட மற்றும் மண்டல அளவில் 26.8.2025 அன்று முதல் 10.9.2025 வரை நடைபெறவுள்ளது.இப்போட்டிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு பணியாளர்கள் என ஐந்து பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில், மாவட்ட அளவில் 25 வகையான விளையாட்டுப் போட்டிகளும், மண்டல அளவில் 7 வகையான விளையாட்டுப் போட்டிகளும், மாநில அளவில் 37 வகையான விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்படவுள்ளன. தனி நபர் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 இலட்சம், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். குழு போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.75 ஆயிரம், இரண்டாம் பரிசாக தலா ரூ.50 ஆயிரம், மூன்றாம் பரிசாக தலா ரூ.25 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.அதன்படி, முதல் நாளான இன்று விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில், நடைபெற்ற விளையாட்டு போட்டிகளை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.அதன்படி, (26.08.2025) மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில், பள்ளி மாணவிகளுக்கான கைபந்து, கபடி, சிலம்பம் போட்டிகளும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான நீச்சல் மற்றும் சதுரங்கம் போட்டிகளும், சத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவிகளுக்கான கையுந்து பந்து போட்டிகளும், விருதுநகர் கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவியர்களுக்கான ஹாக்கி போட்டிகளும், செந்திகுமார நாடார் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான கிரிகெட் போட்டிகளும், விருதுநகர் ஆரள் விளையாட்டு அகாடமியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான டேபிள் டென்னிஸ் விளையாட்டு போட்டிகளும், சாத்தூர் சன்இந்தியா பள்ளியில் பள்ளி மாணவிகளுக்கான கால்பந்து போட்டிகளும், சாத்தூர் எஸ்.ஆர்.என்.எம். கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகளும், சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான கேரம் போட்டிகளும் நடைபெறுகிறது.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இளைஞர்களின் கல்வி மற்றும் விளையாட்டிற்கு பல்வேறு திட்டங்களை தீட்டி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். மாணவர்களுக்கு எப்படி கல்வி முக்கியமோ அது போல உடல் வலிமை மிக முக்கியம். இளைஞர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் செல்லும் போது, வேறு தவறான பழக்க வழக்கங்களுக்கு கவனங்கள் போகாது. எனவே, இளைஞர்கள் எதிர்கால சவால்களை சந்திப்பதற்கு உங்களது அறிவையும், உடலையும் தயார்செய்து கொள்ள வேண்டும். இந்த விளையாட்டில் நல்ல முறையில் பங்கேற்று மாநில அளவில் தேர்வாக வாழ்த்துக்களை தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் (26.08.2025) தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்கம் 2025-26 கீழ், 40 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.12 இலட்சம் மதிப்பில் 50 சதவிகித மானியத்துடன் கூடிய நடமாடும் காய்கனிகள் விற்பனை வண்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார்.மேலும், தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், 8 பயனாளிகளுக்கு ரூ.60 ஆயிரம் மதிப்பிலான காய்கறி விதைகளையும், 5 பயனாளிகளுக்கு ரூ.225 மதிப்பிலான காய்கறி விதைதொகுப்புகளையும், 3 பயனாளிகளுக்கு ரூ.450 மதிப்பிலான பழக்கன்று தொகுப்புகளையும், 2 பயனாளிகளுக்கு ரூ.900 மதிப்பிலான மாடிதோட்டம் தளைகளையும் என மொத்தம் 18 பயனாளிகளுக்கு ரூ.61,575 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.மேலும், வேளாண்மைத்துறை சார்பில், 13 பயனாளிகளுக்கு ரூ.25,135 மதிப்பிலான மண்புழு உரம் தயாரிப்பதற்கான படுக்கை விரிப்புகள், மிளகாய் வத்தல், நெல், சிறுதானியம், பருத்தி உள்ளிட்ட விவசாயிகளுக்கான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் தேசிய தோட்டக்கலை இயக்கம் 2025-26 திட்டத்தின் கீழ், சில்லறை விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், ரூ.30,000/- மதிப்பிலான நடமாடும் காய்கனிகள் விற்பனை வண்டிகள் ரூ.15,000 மானியத்துடன் வழங்கப்படுகின்றன.இந்தத் திட்டத்தின் மூலம் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நேரடியாக விற்பனை செய்ய முடியும். விவசாயிகளுக்கு தங்கள் விளைபொருட்களைச் சந்தைப்படுத்த புதிய வழிகளை உருவாக்குதல், சில்லறை விற்பனையை மேம்படுத்துதல், விவசாயிகளுக்கு நேரடியாக வருமானத்தை அதிகரிக்கும் வாய்ப்புகளை வழங்குதல் ஆகியவை இத்திட்டத்தின் நோக்கம்.அந்த வகையில், இன்று 40 பயனாளிகளுக்கு இந்த நடமாடும் காய்கனிகள் விற்பனை வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.இத்திட்டத்தின் மூலம் மானிய விலையில் நடமாடும் காய்கனிகள் வண்டிகள் பெற்றுள்ளதால், எங்களைப்போன்ற சிறு விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் விளையும் காய்கள் மற்றும் கனிகளை நேரடியாக விற்பனை செய்ய முடியும் என்றும், ஒரே இடத்தில் அமர்ந்தும், கூடைகளில் சுமந்தும் விற்பனை செய்து வந்த எங்களுக்கு, இந்த நடமாடும் வண்டிகள் வழங்கப்பட்டுள்ளதால், காய்கனிகளை சிரமமின்றி வேறு இடத்திற்கு சுலபமாக எடுத்துச் சென்று விற்பனை செய்து எங்கள் வருமானத்தை பெருக்க முடியும் எனவும், இந்த நடமாடும் வண்டிகளை மானிய விலையில் வழங்கிய தமிழ்நாடு அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் விவசாயிகள் நன்றிகளை தெரிவித்தனர்.இந்நிகழ்வில், துணை இயக்குநர்(தோட்டக்கலைத்துறை) திருமதி சுபாவாசுகி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) திருமதி அம்சவேணி, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர், அரசு அலுவலர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (26.08.2025) அனைத்துத் துறை திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து அரசு உயர் அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் முன்னிலையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில், மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை சார்பில் நடைபெற்று வரும் சாலைப் பணிகள் மற்றும் பாலங்கள் கட்டும் பணிகள் அதனுடைய தற்போதைய நிலை குறித்தும், அந்த பணிகளை விரைந்து முடிப்பதில் உள்ள சிரமங்கள் குறித்தும், கேட்டறிந்து ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அறிவுறுத்தினார்.சிவகாசி மாநகராட்சி, அனைத்து நகராட்சிப் பகுதிகள் மற்றும் அனைத்து பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் சாலைப் பணிகள், அந்த பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்த அறிப்புகள், திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் நீர்வளத்துறை மூலம் மாவட்டத்தில் வைப்பாறு, கவுசிகா நதி, குண்டாறு உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும், அருங்காட்சியகங்கள் துறை சார்பில் விருதுநகரில் ரூ.6.50 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் அரசு அருங்காட்சியகத்தின் தற்போதைய நிலை குறித்தும், விரைந்து முடிப்பதற்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் நடைபெற்று வரும் இராஜபாளையம், திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, விருதுநகர், சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை, அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாபட்டி மற்றும் நரிக்குடி ஒன்றியங்களைச் சார்ந்த 1286 கிராமக்குடியிருப்புகள் மற்றும் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மற்றும் கயத்தாறு ஒன்றியங்களைச் சார்ந்த 45 கிராம குடியிருப்புகளுக்கான தாமிரபரணி ஆற்றை நீராதாரமாகக் கொண்ட புதிய கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.விருதுநகர் நகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அறிவியல் தொழில்நுட்ப பூங்கா (ளவநஅ pயசம) அமைக்கும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.மாவட்டத்தில் நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் குறித்தும், பெறப்பட்ட மனுக்களுக்கு உரிய முறையில் தீர்வு காணவும் உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.நலம் காக்கும் ஸ்டாலின் முகாமினை பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தி பயன்பெறுவதற்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டது.மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை முடிப்பதில் ஏதேனும் சிரமங்கள் இருந்தால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்து, விரைந்து முடிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். சாலை, குடிநீர் மற்றும் மின்சாரம் தொடர்பான குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது.முன்னதாக, விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் எஸ்.மறைக்குளம் ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்ஃதமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பெறப்படும் மனுக்கள், இணையத்தில் பதிவேற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.பின்னர், அருப்புக்கோட்டையில் ரூ.154.98 கோடி மதிப்பில் அருப்புக்கோட்டை புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் மற்றும் தரம் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.தொடர்ந்து, விருதுநகர் அரசு தொழிற்பயிற்சி நிலைய சமூக நீதி மாணவர்கள் தங்கும் விடுதியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, காப்பகத்தின் செயல்பாடுகள், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், தங்கும் வசதிகள், அவர்களது கல்வி விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.விருதுநகர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை, மின்சார வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து நடைபெற்று வரும் திட்டப் பணிகளில் அதிக கவனம் செலுத்தி குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா,I A S., அவர்கள் தொடர்புடைய அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், துணை இயக்குநர் (மேகமலை புலிகள் காப்பகம்) திருவில்லிபுத்தூர் திரு.தேவராஜ்,இ.வ.ப., திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.வீ.கேசவதாசன், சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான்,I A S., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி பிரதௌஸ் பாத்திமா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், பஞ்சாப் மாநில முதலமைச்சர் திரு.பகவந்த் மான் அவர்கள் மற்றும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் சென்னை, மயிலாப்பூர், புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் (26.08.2025) நகரப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு "முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்" விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார்.அதனைத் தொடர்ந்து, காரியாபட்டி பேரூராட்சியில் அமலா துவக்கப்பள்ளியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிதி சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்களும், இத்திட்டத்தினை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நாளும் நல்ல பல திட்டங்களை நாட்டு மக்களுக்காக அறிவிக்கும் திட்டங்களில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் என்பது சிறந்த திட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு வரக்கூடிய குழந்தைகளுக்கு உணவு வழங்கக்கூடிய இந்த திட்டம் சர்.பி.டி தியாகராயர் காலத்தில் முதன்முறையாக சென்னையில் ஆரம்பிக்கப்பட்டு, அதற்கு பிறகு பெருந்தலைவர் காமராஜர் அவர்கள், எம்.ஜி.ஆர் அவர்கள், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஆகியோர்களால் தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தப்பட்டு, நமது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மதிய உணவு திட்டத்தையும் தாண்டி காலையிலும் உணவு வழங்க வேண்டும் என்று இந்த திட்டத்தை செயல்படுததி வருகிறார்கள்.அதன் பயனாக இன்று பள்ளிக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கிராமப் பகுதிகளுக்கு மட்டும் செயல்படுத்தி வந்த இந்த திட்டம், நகரப்பகுதியில் இருக்கக்கூடிய அரசுப்பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது. நகர்ப்பகுதியில் இருக்கக்கூடிய அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கக்கூடிய குழந்தைகளும் மாநில பாடத்திட்டத்தில் படிக்கிறார்கள். அவர்களும் பயன்பெற வேண்டும் என்ற அடிப்படையில் தற்போது நகர்ப்புற பகுதிகளில் இருக்கக் கூடிய அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இன்று இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே, நமது விருதுநகர் மாவட்டத்தில் ஏறத்தாழ 144 பள்ளிகளுக்கு இந்த காலை உணவுத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. நமது விருதுநகர் மாவட்டத்தில் 23,242 குழந்தைகள் பயனடைகிறார்கள். ஒட்டு மொத்தமாக 1200 பள்ளிகளில் ஏறத்தாழ 70,000 குழந்தைகள் பயன்பெறும் வகையில் இந்த காலை உணவுத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.இந்த திட்டம் வந்ததற்கு பிறகு நடத்தப்பட்ட ஆய்வில் பள்ளிக்கு வரக்கூடிய பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என தெரிகிறது.. அவர்களுடைய கற்றல் திறன் அதிகமாகிறது. காலையில் அவர்களுக்கு வயிறு நிரம்பி வருகின்ற பொழுது பாடங்களை கவனிக்க கூடிய வாய்ப்பு அதிகமாகிறது. எனவே கற்றல் சூழ்நிலையில், படிக்கக்கூடிய தன்மையில் மிகப்பெரிய மாற்றத்தை இந்த காலை உணவு திட்டம் ஏற்படுத்துகிறது. அதுபோல குடும்பத்தில் வீட்டுத் தலைவிகளாக இருக்கக்கூடிய பெண்கள் காலை உணவு செய்து குழந்தைகளை அனுப்புவது என்பது மிகப்பெரிய சிரமாக இருக்கிறது.காலையில் பள்ளிக்கூடத்தில் உணவளிக்கின்ற பொழுது பெண்களுக்கு வீட்டினுடைய தலைவியாக இருக்கக்கூடிய பெண்களுக்கு பெருமளவில் அந்த சுமைகள் குறைக்கப்படுகிறது.எனவே ஒரு சமுதாய நோக்கோடு, அதே நேரத்தில் பள்ளி குழந்தைகளுக்கு நல்ல கல்வி சூழலை உருவாக்கக் கூடிய வகையில் பள்ளிக்கூடத்தை நோக்கி இன்னும் நிறைய பிள்ளைகளை இழுக்கக்கூடிய வகையிலே இந்த திட்டம் சிறப்பாக வந்திருக்கின்றது. அந்தத் திட்டத்திற்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பை தரவேண்டும். இன்றைக்கு எப்படி வெற்றி கரமாக துவக்கி இருக்கிறோமோ, அதுபோல அதை வெற்றி கரமாக வரக்கூடிய வருடங்களில் செயல்படுத்த வேண்டும். இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மகளிர் திட்டம், பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிற அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.வீ.கேசவதாசன், திட்ட இயக்குநர்(தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) திரு.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், காரியாபட்டி பேரூராட்சித்தலைவர் திரு.செந்தில், மகளிர் திட்ட அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆசிரியர்கள், பள்ளிக் குழந்தைகள் பலர் கலந்து கொண்டனர்.