விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் (20.02.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.விருதுநகர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசின் மூலம் ஊரகம், நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள், நலத்திட்டங்கள், சேவைகள் முறையாகவும், தரமானதாகவும் குறித்த காலத்திற்குள் நிறைவேற்றுவதை உறுதிசெய்யும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடர்ச்சியாக பல்வேறு கள ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.அதன்படி, சிவகாசி மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மாநகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் திடக்கழிவுகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என தரம் பிரித்து நுண் உரம் தயாரிக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தொடர்ந்து, இரயில்வே பீடர் சாலையில், சிறு பாலம் அமைப்பதற்கான சாத்திக்கூறுகள் குறித்தும், ஹட்சன் பிளாட் சாலையில் உள்ள தெருவிளக்குகள் குறித்தும், முஸ்லீம் தெருவில் கட்டப்பட்டு வரும் சமுதாயக்கூடத்தினையும், வேலாயுத ரஸ்தா சாலையில் உள்ள நான்கு முக்கு பகுதியில் சாலை அகலப்படுத்துவது குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும், மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், திடக்கழிவு மேலாண்மை, கழிவு நீர் வடிகால், பொதுமக்களுக்கான குடிநீர் உள்ளிட்டவற்றை முறையாக மேற்கொள்வது குறித்து தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.இந்த ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையர் திரு.கிருஷ்ணமூர்த்தி, பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கம் சார்பில், மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்கள் விற்பனை மதி பல்பொருள் அங்காடியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் ,I A S., அவர்கள் திறந்து வைத்தார்.பின்னர், இராஜபாளையம் வட்டார இயக்க மேலாண்மை அலகில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இராஜபாளையம் வட்டாரத்தை சேர்ந்த 42 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தலா ரூ.1.50 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.49.50 இலட்சம் மதிப்பிலான சமுதாய முதலீட்டு கடனுதவிகளையும்,கிழவிகுளம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு ரூ.1.35 கோடி மதிப்பிலும், சுந்தரராஜபுரம் ஊராட்சியை சேர்ந்த 8 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1.10 கோடி மதிப்பிலும் என மொத்தம் ரூ.2.95 கோடி மதிப்பிலான கடனுதவிகளை மகளிர் சுய உதவிக்களுக்கு வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் ஏறத்தாழ சுமார் ஒரு இலட்சத்து இருபதாயிரம் பெண்கள்; மகளிர் சுய உதவிக்குழுவில்; இருக்கின்றனர். அதில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிறு சிறு தொழில்களை செய்யக்கூடியவர்களாகவும், தொழில் முனைவோர்களாக இருக்கிறார்கள்.நிறைய பேர் புதிய தொழில் தொடங்க வேண்டும் என்று ஆர்வமாக உள்ளார்கள். இந்த சுய உதவி குழுவில் இணைகின்ற பொழுது அதன் மூலமாக நன்மைகளை பெறக்கூடிய சகோதரிகளாக மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த பெண்கள் இருக்கிறார்கள். அதே நேரத்தில் இன்னும் அவர்கள் சிறப்பாக செயல்படுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.பெண்களுக்கான விடுதலை என்று சொல்கின்ற பொழுது அவர் விரும்பிய பணியை செய்வது தான் சுதந்திரம்.இன்றைய சமூகத்தில் இன்று மட்டுமல்ல எப்பொழுதும் பெண்களுக்கான மிக வலிமையான விடுதலை என்பது அவர்களுக்கு இருக்கக்கூடிய பொருளாதார சுதந்திரம் தான். அதிகமாக பணம் சம்பாதிக்க வாய்ப்புகள் இருக்க வேண்டும். தான் சம்பாதித்ததை, தான் உருவாக்கிக் கொண்ட செல்வத்தை முழுமையாக தானே அந்த செல்வத்தின் மீது செல்வாக்கு செலுத்துவதற்கு வாய்ப்புகளும், உரிமைகளும் கிடைப்பதே மிக முக்கியமான பெண்களுக்கான விடுதலை ஆகும்.பெண்கள் தங்களுக்கான அரசு திட்டங்களை தெரிந்துகொண்டு, தொழில் வாய்ப்புகளுக்கான பயிற்சிகளை பெற்று, அரசு மூலம் வழங்கப்படும் கடனுதவிகளை முறையாக முதலீடு செய்து தங்களுடைய வருமானத்தை பெருக்கி, குடும்ப பொருளாதாரத்தையும், சமூக பொருளாதாரத்தையும் மேம்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர்(தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) திரு. திரு.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
2015 ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின்படி விருதுநகர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இளைஞர் நீதி குழுமத்திற்கு சமூகப்பணி உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதற்காக தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இளைஞர் நீதி குழுமத்திற்கு ஒரு பெண் உட்பட இரண்டு சமூகப்பணி உறுப்பினர்கள் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர் மற்றும் இப்பதவி அரசு பணி அல்ல.விண்ணப்பதாரர், குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவராக இருத்தல் வேண்டும்.(அல்லது)குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சமூகவியல் அல்லது சட்டம் ஆகியவற்றுள் ஏதேனும் பட்டம் பெற்று தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு குறையாதவராகவும், 65 வயதைப் பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும்.இதற்கான விண்ணப்படிவத்தை விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக்கொள்ளலாம் அல்லது மாவட்ட அல்லது துறை சார்ந்த இணையத்தளமான www.virudhunagar.nic.in அல்லது https://dsdcpimms.tn.gov.in- முகவரியில் விண்ணப்பத்தாரர் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தகுதிவாய்ந்த நபர்கள் அதற்கான படிவத்தில் 07.03.2025 (வெள்ளிக்கிழமை) மாலை 5.00 மணிக்குள் இயக்குநர், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, எண்.300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லிஸ், சென்னை - 600 010. என்ற முகவரியில் கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகள் 1959-ன்படி சாதாரண கற்கள், மண், கிராவல், கிரானைட் போன்ற சிறுவகை கனிமங்கள் மற்றும் 31 வகையான சிறுகனிமங்களுக்கான குவாரி குத்தகை உரிமம் கோரும் விண்ணப்பங்கள், மற்றும் சுண்ணாம்புக்கல் போன்ற பெரு கனிம குவாரிகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் செங்கல் சூளை பதிவு சான்று பெறுவற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 24.02.2024 தேதி முதல் மின்னணு முறையில் இணையதள வாயிலாக மட்டுமே பெறப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.மேற்கண்ட சிறுகனிமங்களுக்கான குவாரி குத்தகை உரிமம் கோர விண்ணப்பிக்கும் நபர்கள் www.mimas.tn.gov.in என்ற இணையதளத்தில் வாயிலாக உரிய படிவத்தில் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், (20.02.2025) மாவட்ட அளவிலான வங்கி மேலாளர்கள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.விருதுநகர் மாவட்டத்தின் 2025-26 ஆண்டிற்கான வளம் சார்ந்த கடன் திட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்களால் வெளியிடப்பட்டதுநபார்டு வங்கி வருடந்தோறும் வளம் சார்ந்த கடன் திட்டத்தை தயாரித்து வெளியிட்டு வருகிறது. அதன்படி முன்னுரிமை துறைகளுக்கு 2025-26ஆம் ஆண்டில், ரூபாய் 19425.99 கோடி அளவுக்கு வங்கிக் கடன் அளவிடப்பட்டுள்ளது.தமிழகத்தின் ஊரக மற்றும் வேளாண் வளர்ச்சி பணியில் முக்கிய பங்கு வகிக்கும் நபார்டு வங்கி, விருதுநகர் மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற வளம் சார்ந்த தகவல்களை சேகரித்து அதன் மூலம் வரும் நிதியாண்டில் ரூபாய் 19425.99 கோடி அளவுக்கு கடனாற்றல் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.இதன்படி, மாவட்டத்தில் 2025-26ஆம் ஆண்டில் வேளாண்மைக்கு ரூபாய் 9998.59 கோடியாகவும், நுண், சிறு மற்றும் குறு தொழில்களுக்கான கடன் ரூபாய் 7918.08 கோடியாகவும், பிற முன்னுரிமை துறைகளுக்கு (ஏற்றுமதி, கல்வி, வீடு சுட்டுதல் மற்றும் மீள்சக்தி) ரூபாய் 1509.32 கோடியாகவும்என மொத்தம் ரூ.19425.99 கோடி அளவிற்கு மதிப்பிடப்பட்டுள்ளது.அதற்கான கடன் திட்ட அறிக்கையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று வெளியிட்டார்இக்கூட்டத்தில் நபார்டு மாவட்ட மேலாளர் திரு. ராஜா சுரேஷ்வரன், மாவட்ட முதன்மை வங்கி மேலாளர் திரு. பாண்டிசெல்வன், வங்கி மேலாளர்கள், அனைத்து வங்கியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
"மீண்டும் மஞ்சப்பை" பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர், 2022-23 நிதியாண்டிற்கான மஞ்சப்பை விருதுகளை சட்டமன்றக் கூட்டத்தில் அறிவித்தார். ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகள் மீதான தடையை திறம்பட செயல்படுத்தி, ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் (SUP) கை பைகள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றுகளைப் பயன்படுத்துவதை ஊக்குவித்து, மஞ்சப்பை போன்ற பாரம்பரிய சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை மீண்டும் உயிர்ப்பித்து, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றும் சிறந்த 3 பள்ளிகள், 3 கல்லூரிகள் மற்றும் 3 வணிக நிறுவனங்களுக்கு இது வழங்கப்படும். முதல் பரிசாக ரூ.10 இலட்சம், இரண்டாம் பரிசாக ரூ. 5 இலட்சம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ. 3 இலட்சம் பரிசு வழங்கப்படும்.இந்த அறிவிப்பின்படி, தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் (TNPCB) ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றாகப் சுற்றுச் சுழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்கள் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கும், தங்கள் வளாகங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் ஆக்கப்பூர்வமான முயற்சிகள் மூலம் தடையை அமல்படுத்துவதற்கும், வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றுவதற்கும் முன்மாதிரியான பங்களிப்பைச் செய்த பள்ளிகள்/கல்லூரிகள்/வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருதுகளை வழங்க முன்மொழிகிறது.விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளத்திலும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களின் அனைத்து இணைப்புகளிலும் தனிநபர் /அமைப்புத் தலைவர் முறையாக கையொப்பமிட்டு, விண்ணப்பங்களின் மென் நகலுடன், இரண்டு அச்சுப் பிரதிகளை (கடின நகல்) 01.05.2025 அன்றுக்குள் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் அவர்கள் 10.11.2024 அன்று விருதுநகர் மாவட்டம் கூரைக்குண்டு கிராமத்தில் உரையாற்றிய போது “பட்டாசு தொழிற்சாலைகளில், ஏற்படுகின்ற விபத்துகளில் உயிரிழக்கின்ற தொழிலாளர்களின் குழந்தைகளுடைய உயர் கல்வி வரையிலான அனைத்துக் கல்வி செலவுகளையும் அரசே ஏற்கும்” என்ற அறிவிப்பினை தொடர்ந்து தற்போது தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (எம்1) துறை அரசாணை (நிலை) எண் : 13, நாள் 12.02.2025 ன் படி ரூ.5.00 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் படி பட்டாசு தொழிற்சாலை விபத்தில் மரணமடைந்த பெற்றோர்களின் கல்வி பயிலும் வாரிசுகளில் 10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.4,000-ம், 12 ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.6,000 -ம் ஒரு தடவை பணப்பலனாக அளிக்கப்படும். மேலும் பராமரிப்பு செலவினங்களுக்காக 18 வயது பூர்த்தி ஆகும் வரை ஒவ்வொரு வாரிசுக்கும் பெற்றோரில் ஒருவரை விபத்தில் இழந்திருந்தால் ரூ.2,000-ம் பெற்றோர் இருவரையும் இழந்திருந்தால் ரூ.4,000-ம் மாத உதவித்தொகையாக வழங்கப்படும்.மேலும் அரசு கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி, தனியார் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் கல்வி பயிலும் பொறியியல் மற்றும் பிற தொழிற் பட்டயப் படிப்புகளுக்கு அதிகபட்சமாக அரசு பள்ளி மாணவர்களுக்காக 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் செலுத்த வேண்டிய கட்டணமும், தொழிற்நுட்பக் கல்வி, செவிலியர் மற்றும் பிற பட்டயப் படிப்புகள் பயிலும் வாரிசுதாரர்களுக்கு அதிகபட்சமாக ரூ.55 ஆயிரம் வரையும் கல்வி உதவி தொகை வழங்கப்படும். மேலும் கல்லூரிகளில் பட்டப்படிப்பு பயிலும் வாரிசுதாரர்களுக்கு அதிகபட்சமாக ரூ.60 ஆயிரம் கல்வி உதவி தொகை வழங்கப்படும். 10.11.2024 அன்றோ அதற்கு பிறகோ மேற்சொன்ன அரசாணையில் கூறியுள்ள விதிகளின் படியான தகுதியான பட்டாசு தொழிற்சாலை விபத்துகளில் உயிரிழந்த தொழிலாளர்களின் கல்வி பயிலும் குழந்தைகள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற ஏதுவாக இறந்தவரின் பெயர், பட்டாசு தொழிற்சாலையின் பெயர், விபத்து நாள், வாரிசுகளின் விவரம், வயது மற்றும் கல்வி விவரம் மற்றும் தொடர்பு அலைபேசி எண், முகவரியுடன் கூடிய விவரங்களுடன் “இணை இயக்குநர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் , கதவு எண்: 4, NPSN ஆறுமுகநாடார் ரோடு, தங்கம் மஹால் முதல் தளம், சிவகாசி - 626 123” என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கும் படியும், விபத்தில் இறந்தவரின் இறப்புச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ் ஆகியவற்றையும் இணைத்து அனுப்பும் படி பட்டாசு தொழிற்சாலை விபத்துகளில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.மேலும் இது பற்றிய விவரங்கள் அறிய 98659-58876 (இணை இயக்குநர், விருதுநகர்), 93447-45064 (இணை இயக்குநர், சிவகாசி) அவர்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் (19.02.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசு திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்டங்களின் பயன்கள், கருத்துக்கள் குறித்து பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.அதன்படி, வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் பனையடிப்பட்டி கிராமத்தில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் ரூ.2.40 இலட்சம் மானியத்தில் வீடுகள் கட்டப்பட்டு வருவதையும்,கோட்டைபட்டி ஊராட்சியில் ஊரக வீடுகள் சீரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.1.50 இலட்சம் மதிப்பில் வீடுகள் சீரமைக்கப்பட்டு வருவதையும், கோட்டைபட்டி ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.60 இலட்சம் மானியத்தில் வீடுகள் கட்டப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து, பயனாளிகளிடம் கலந்துரையாடி கருத்துக்களை கேட்டறிந்தார்.பின்னர், சூரார்பட்டி ஊராட்சியில் ரூ.30.10 இலட்சம் மதிப்பில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டு வருவதையும், ஜகவீரம்பட்டி ஊராட்சியில் ரூ.30.10 இலட்சம் மதிப்பில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம்; கட்டப்பட்டு வருவதையும், குகன் பாறை ஊராட்சியில்; ரூ.7.50 இலட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பணிகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.மேலும், ராமுதேவன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.34.23 இலட்சம் மதிப்பில் புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு, மாணவர்களுக்கு வழங்கப்படும்; மதிய உணவின் தரம், பயன்பெறும் மாணவர்கள் குறித்தும் ஆய்வு செய்து மாணவர்களுடன் உணவருந்தினார்.இந்த ஆய்வின் போது, அரசின் மூலம் அந்தந்த ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகள் மற்றும் நலத்திட்டங்கள் முறையாக மக்களை சென்றடைகிறதா என பொதுமக்கள் மற்றும் பயனாளிகளிடம் கலந்துரையாடி, அவர்களின் கருத்துக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்.மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவிப் பொறியாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் (18.02.2025) தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம், மாவட்ட நிர்வாகம் மற்றும் திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் இணைந்து செண்பகப்தோப்பில் நடத்தும் பசுமை விழிப்புணர்வு பயிற்சி முகாமிற்கு, பசுமை பள்ளியாக தேர்வு செய்யப்பட்டுள்ள மல்லாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் செல்லும் பேருந்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் வளாகத்தை சிறப்பான முறையில் பாதுகாக்கும் வகையில் பசுமை பள்ளி திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது, மழைநீர் சேகரிப்பு, காய்கறி தோட்டங்கள் அமைத்தல், கழிவுநீர் மறுசுழற்சி, பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்தல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் மாணவர்களால் மேற்கொள்ளப்படுகிறது. இது மாணவர்கள் மூலம் பள்ளி வளாகங்களுக்குள் இயற்கை வளங்களின் நுகர்வைத் தணிக்கை செய்கிறது மற்றும் விலைமதிப்பற்ற வளங்களை வீணாக்குவதைக் குறைக்க நடைமுறை தீர்வுகளைப் பயன்படுத்துவதன் மூலம் பள்ளிகள் நல்ல சுற்றுச்சூழல் மேலாளர்களாக மாற உதவுகிறது.விருதுநகர் மாவட்டத்தில் பந்தல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மல்லாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, செண்பகப்தோப்பில் நடைபெறும் பசுமை விழிப்புணர்வு பயிற்சி முகாமிற்கு செல்லும் மல்லாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 50 மாணவர்கள் செல்லும் பேருந்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழியனுப்பி வைத்தார். இந்த பசுமை விழிப்புணர்வு பயிற்சி முகாம் 18.02.2025 முதல் 21.02.2025 வரை நான்கு நாட்கள் நடைபெறவுள்ளது.இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் (மேகமலை புலிகள் காப்பகம்) திரு.தேவராஜ்,இ.வ.ப., ஆசிரியர்கள், மாணவர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் நகராட்சி அலுவலகத்தில் (18.02.2025) நகர நில ஆவணங்களை நவீன மயமாக்கும் நக்சா திட்டத்தின் கீழ் விருதுநகர் நகராட்சியில் ஆளில்லா வானுர்தியை பயன்படுத்தி நிலஅளவை மேற்கொள்ளும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் துவக்கி வைத்தார்.இந்தியாவில் மொத்தம் 152 நகராட்களில், தமிழ்நாட்டில் மட்டும் 10 நகராட்சியில் நில ஆவணங்களை நவீனமயமாக்கும் நக்சா (NAtional geospatial Knowledge – based land Survey of Urban HAbitations – NAKSHA) திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டம், விருதுநகர் நகரம் முன்னோடி திட்டமாக வார்டு 23, பிளாக்:133, மொத்த நகர புல எண்கள். 29, 320-ல் (6.600 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில்) இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஆளில்லா வானுர்தியை பயன்படுத்தி நிலஅளவை மேற்கொள்வதால் நில உடைமை தகராறுகள் மற்றும் நீண்டகால சட்ட வழக்குகளைத் தீர்ப்பதற்காகவும், உள்கட்டமைப்பு திட்டங்களில் உள்ள தடைகளை நிவர்த்தி செய்யவும், நிலப்பதிவுகளை வெளிப்படையாகவும், துல்லியமாகவும், அனைவரும் அணுகக்கூடியதாகவும் மாற்றுதல் செய்ய பயன்படுகிறது. புவிசார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சொத்துவரி செலுத்துவதற்கு பயன்படுகிறது.இன்று ஒரு பகுதியில் நடக்கக்கூடிய பல்வேறு வளர்ச்சிப் பணிகள், நகரத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் சேவைகள், வழங்கக்கூடிய பல்வேறு பணிகளுக்கும், சொத்து வரி உள்ளிட்ட வரி விதிப்புகளுக்கும் செய்யப்பட வேண்டிய நில அளவு, சொத்தினுடைய அளவீடுகள் அனைத்தும் பழங்கால முறைகள் தான் இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகிறது. அதில் பொது மக்களுக்கு அந்த சேவைகளை வழங்கக்கூடிய அளவிற்கு நிறைய கால விரையமும், நகராட்சியினுடைய வருவாயும் பாதிக்கப்படுகிறது.அதனை சரி செய்வதற்கு நிறைய நவீன தொழில்நுட்பங்களின் அடிப்படையில் இவற்றிற்கான தீர்வு தான் இந்த திட்டம். இதன் மூலமாக நகர் பகுதிகளில் இந்த ஆளில்லா வானூர்திகள் என்று சொல்லக்கூடிய ட்ரோன் கேமராக்கள் மூலமாக துல்லியமாக சர்வே செய்து, அந்த சர்வே செய்யப்பட்ட ஒளி அச்சுக்களை வைத்து, அவற்றை முறையாக புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மென்பொருள்களை வைத்து, அதனுடைய தரவுகளை எல்லாம் ஆய்வு செய்து சரியான விகிதத்தில் அவற்றை ஜி.பி.எஸ் என்று சொல்லக்கூடிய சரியான புவியியல் துல்லியத்தின் அடிப்படையில் அந்த இடங்களை துல்லியமாக வரையறுக்க முடியும்.அந்த புவியியல் வரையறைக்கு மொத்தமாக நகரை முழுமையாக சர்வே செய்து அனைத்து விவரங்களும் பொதுமக்களுக்கு வெளியிடப்படும். அதில் குறைபாடு இருந்தால் மேல்முறையீடு செய்ய முடியும். மேல்முறையீடு செய்வதை அந்த குழு சென்று பார்வையிட்டு, புகார்கள் சரியாக இருந்தால் அந்த ஐயப்பாடுகளை கலைவதற்கும் இந்த திட்டத்தில், நடைமுறையில் உரிய வாய்ப்பு இருக்கிறது.வான்வழி ஆய்வுகள் மூலம் துல்லியமான மேப்பிங் வரைவதற்கும், மாநில அரசுகள் மற்றும் குடிமக்கள் பங்கேற்புடன் நிலப்பதிவுகளைச் சரிபார்ப்பதற்கும், டிஜிட்டல் தளங்கள் வழியாக எளிதாக அணுகவும், புவியில் தரவுகளுடன் துல்லியமாக திட்டமிடலுக்கு பயன்படுகிறது.வான்வழி ஆய்வு துல்லியமாக மற்றும் வேகமான தரவு சேகரிப்பதற்கும், படம் பிடிப்பதற்கும், செங்குத்து நகரங்களுக்கு சாய் கோண கேமரா மூலம் நிலஅளவை செய்வதற்கும், மலைப்பாங்கான நெரிசலான இடம் மற்றும் மர அடர்த்தியாக உள்ள இடங்களில் LiDAR சென்சார் மூலம் நிலஅளவை செய்வதற்கு பயன்படுகிறது. ஒழுங்கமைக்கப்பட்ட நிலபதிவுகள் இல்லாதது, காலாவதியான மற்றும் முழுமையடையாத தரவு காரணமாக அரசாங்க ஆவணங்களுக்கும், உண்மையான நில உரிமைக்கும் இடையிலான முரண்பாடுகளை தவிர்க்கவும் பயன்படுகிறது. மாநிலங்கள் முழுவதும் ஒரே மாதிரியான அமைப்பு இல்லாதது, உரிமை தகராறுகள் மற்றும் சட்ட விரோத ஆக்கிரமிப்பு தொடர்பான சிக்கல்களை தவிர்க்க பயன்படுகிறது.துல்லியமான மற்றும் ஆன்லைன் நிலப்பதிவுகள் கிடைக்கும். நகர்ப்புற நில மேலாண்மையை மேம்படுத்துதல் மற்றும் மேம்பட்ட நகர்ப்புற நில நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைக்கும், வெளிப்படையான மற்றும் வேகமான நிலம் தொடர்பான செயல்முறைகள் கிடைக்கவும் பயன்படுகிறது.எனவே இவற்றை தொடர்ச்சியாக செய்து முழுமையாக நிறைவேற்றுகின்ற போது பொது மக்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளுடைய சேவைகள் விரைவாக கிடைப்பதற்கும், நீதிமன்ற வழக்குகள், கால விரயங்கள் அவற்றையெல்லாம் தவிர்ப்பதற்கும் இந்த தொழில்நுட்பத்தின் வழியாக ஒரு மிகப்பெரிய மாறுதல்களை நிச்சயமாக செய்ய முடியும்.எனவே ஒரு வெளிப்படை தன்மையோடு எல்லோருக்கும் சரியாக இந்த சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நக்சா திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்கு அனைத்து பகுதிகளில் இருக்கக்கூடிய பொதுமக்கள், துறை சார்ந்த அலுவலர்கள், பல்வேறு இடங்களில் இருக்கக்கூடிய சமூக ஆர்வலர்கள், அங்கு இருக்கக்கூடிய குடியிருப்பு நல சங்கங்கள் ஆகியோர் நகராட்சி நில அளவை பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். இதன் மூலமாக இவற்றை விரைவாக செய்து முடித்தால் நிச்சயமாக நம்முடைய நகரின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான ஒரு அம்சமாக இது திகழும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் உதவி இயக்குநர் / மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(நில அளவை பதிவேடுகள் துறை) திரு.த.விஜயகுமார், விருதுநகர் நகராட்சி பொறியாளர் திரு.ஆர்.எட்வின் பிரைட் ஜோஸ் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.