விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுவருகிறது. அதன்படி, படித்த வேலை தேடும் இளைஞர்களுக்காக வரும் 21.02.2025 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 02.00 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் விருதுநகர், சூலக்கரையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது.இத்தனியார் வேலைவாய்ப்பு முகாமில் ADYAR ANANDHA BHAVAN, AANAIMALAI TOYOTO, VVV & SONS EDIBLE OIL PRIVATE LIMITED, RK MOTORS, DEVENDRAN PLASTIC PRIVATE LIMITED போன்ற 20க்கும் மேற்பட்ட பிரபல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு; I.T.I .டிப்ளமோ மற்றும் பொறியியல் படிப்பு ஆகிய கல்வித் தகுதி உடைய பணியாளர்களை தெரிவு செய்யவுள்ளார்கள். இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்த விரும்பும் வேலைநாடுநர்கள் 21.02.2025 அன்று வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பாக www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களை பதிவு செய்துவிட்டு அனைத்து கல்விச்சான்றிதழ், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது மேலும் இச்சேவையானது முற்றிலும் கட்டணமில்லா சேவையாகும். இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் .விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அவர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம், இருஞ்சிறை கண்மாயில் நீர்வளத்துறையின் சார்பில், ரூ.1.60 கோடி மதிப்பில் புனரமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம்தென்னரசு அவர்கள்துவக்கி வைத்தார்.நீரின்றி அமையாது உலகு என்று வள்ளுவம் கூறுகிறது. வானத்திலிருந்து ஒரு சொட்டு நீர் கீழே விழுந்தால் தான் கீழே இருக்கக்கூடிய பயிர்களுக்கும், இந்த உலகத்தில் இருக்கக்கூடிய உயிர்களுக்கும் உயிர் கொடுக்கக்கூடியதாக இருக்கிறது. எனவே தான் மழை நீர் என்பது நம்மை பொருத்தமட்டில் ஒரு உயிர் நீர் என்கின்ற வகையிலே நாம் எப்போதும் அதற்கு தலைவணங்கி மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் என்று அதனை வணங்குகிறோம்.அப்படி வானின்று வழங்கக்கூடிய இந்த பெருமழை நீரை தேக்கி வைக்கக்கூடிய இத்தகைய கண்மாய்கள், அதற்கான பாசன வசதிகள், அதற்கான வரத்துக் கால்வாய் என்று இந்த கட்டமைப்பை பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே நம்முடைய முன்னோர்கள் மிகச் சிறப்பாக வடிவமைத்திருக்கிறார்கள். நம்முடைய தொகுதி மேற்கே இருந்து கிழக்கே சாய்வாக இருக்கக்கூடிய காரணத்தினால் மழைச்சாரலில் இருந்து உருண்டு வரக்கூடிய பல இடங்களில் நீரைத்தேக்கி, அதற்கு பிறகு கடலிலே உபரி நீராக கலக்கக் கூடிய வகையில் இந்த நீர்பாசனம் மிக சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.அந்த வகையில் நம்முடைய இருஞ்சிறை கண்மாய் நம்முடைய விருதுநகர் மாவட்டத்தில் அமைந்திருக்ககூடிய மிகப்பெரிய கண்மாய்களிலேயே முக்கியமானது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இது போன்ற கண்மாய்க்கு அன்றைய முதல்வராக இருந்த டாக்டர் கலைஞர் அவர்கள் கண்மாய்களை சீரமைக்கக்கூடிய திட்டத்தின் அடிப்படையில் தூர்வாரக்கூடிய பணிகள், கரைகளை பலப்படுத்தக்கூடிய பணிகள் மேற்கொள்ளப்பட்டது.அதற்கு பிறகு இத்தகைய கண்மாய்களை எல்லாம் சீரமைக்க வேண்டும், புனரமைக்க வேண்டும் என்றும், வருங்கால சமுதாயத்திற்கு நாம் விட்டு செல்லக்கூடிய இயற்கையான கட்டமைப்புகளை நாம் மேலும் பலப்படுத்த வேண்டும், மதில்களை சீரமைக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான்; நம்முடைய மாவட்டத்தில்; இத்தகைய முயற்சிகளை பெரிய அளவில் எடுத்துக்கொண்டு, ஆங்காங்கே இருக்கக்கூடிய இந்த கண்மாய்களிலேயே புனரமைப்பு பணிகளை மேற்கொள்வதன் மூலமாக நாம் இந்த பகுதியிலே அதிகமான மழை நீர் வருகின்ற பொழுது சேமித்து வைக்க முடியும் என்ற அடிப்படையில் இதுபோன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இருஞ்சிறை கிராமத்தில் உள்ள இருஞ்சிறை கண்மாய்க்கு கிருதுமால் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அத்திகுளம் அணைக்கட்டின் இடது பிரதான கால்வாயின் மூலம் பாசன நீர் வழங்கப்பட்டு வருகிறது.இருஞ்சிறை கண்மாயினை புனரமைக்கும் பணிக்காக தமிழக சுற்றுச்சூழல் மேலாண்மை அமைப்பு (Environment Management Agency of Tamilnadu Corporate Environment Responsibility Fund) நிதியின் கீழ், ரூ.1.60 கோடி மதிப்பில் இப்பணிகள் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது.இந்த புனரமைக்கும் பணிகளில் கண்மாய் கரை 5120 மீட்டர் நீளத்திற்கு பலப்படுத்தும் பணிகளும், மொத்தம் 6 மடைகளில் 1 மடை மறுகட்டுமானம் மற்றும் 5 மடைகள் சீரமைக்கும் பணிகளும், கலுங்கு மறுகட்டுமானம் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.இதன் மூலம் 138 மில்லியன் கன அடி நீர்தேக்கப்பட்டு, சுமார் 509.05 ஹெக்டேர் (1258 ஏக்கர்) பாசனப்பரப்பு பயன்பெறும்.மேலும், கண்மாயின் முழு கொள்ளளவிற்கு தண்ணீர் சேமிக்கப்பட்டு, இருஞ்சிறை கிராமத்தை சுற்றியுள்ள கிராமங்களுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயரவும், கோடை காலங்களில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சனை தீர்வதுடன், இப்பகுதி கிராம மக்களின் வாழ்வாதாரம் உயர்வதுடன் கால்நடைகளின் தண்ணீர் தேவைகளும் பூர்த்தி செய்ய உறுதுணையாக இருக்கும் என நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.இன்றைய நாள் இந்த பகுதிக்கு ஒரு மிக முக்கியமான ஒரு நாள். தமிழர்களுடைய அறிவின் அடையாளமாக இருக்கும் வள்ளுவர் பெருந்தகைஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்செல்லும்வாய் நோக்கிச் செயல்என்று ஒரு திருக்குறளை எழுதி இருக்கிறார். அதனுடைய பொருள் நாம் நல்ல செயல்களை செய்து கொண்டே வேண்டும். அந்த நல்ல செயல்களை செய்வதற்கு என்னென்ன வகைகளில் எல்லாம் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமோ, அந்த முயற்சிகளையாவது செய்து கொண்டே இருக்க வேண்டும் என அவர் குறிப்பிடுகிறார். நமது பகுதியில் அமைந்திருக்கக் கூடிய அனைத்து நீர்நிலைகளை தூர்வார வேண்டும். அதற்கு அரசினுடைய நிதிநிலை அறிக்கை உள்ளிட்ட பல்வேறு வகைகளில் நிதி வந்தாலும், அது போதாமையாக இருக்க கூடிய சூழ்நிலையில், இன்னும் எந்தெந்த வகையில் எல்லாம் இதுபோன்ற நல்ல பணிகளுக்கு நிதிகளை பெற முடியும் என்று மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தொடர்ச்சியாக அறிவுறுத்தி, இது குறித்து விவாதித்து, இருக்கக்கூடிய வாய்ப்புகளை எல்லாம் கண்டறிந்து, நிறுவனங்களினுடைய சமூக பொறுப்பு நிதி என்று தனியார் நிறுவனங்கள் தாங்கள் ஈட்டக்கூடிய லாபத்தில் இரண்டு சதவீதத்தை இது போன்ற பணிகளுக்கு செலவிட வேண்டும் என்று இருக்கக்கூடிய அத்தகைய சமூக பொறுப்பு நிதிகளையும் பெற்று நமது மாவட்டத்தில் பணிகளை மேற்கொள்வதற்கு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.அதையும் தாண்டி இன்னும் நிதி தேவைப்படுகின்ற போது, குறிப்பாக நமது வறட்சியான பகுதிகளில் இருக்கக்கூடிய கண்மாய்களை தூர்வார வேண்டும். இந்தப் பகுதியில் மட்டுமே ஏறத்தாழ 2 ஒன்றியங்களை சேர்த்து 300 க்கும் மேற்பட்ட சிறு, பெரிய கண்மாய்கள் இருக்கின்றன.அதில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாயம் செய்வதற்குரிய வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்று மாண்புமிகு அமைச்சர் அவர்களிடத்தில் மேலும் வேண்டுகோளை வைத்த போது, அரசின் சார்பாக இயங்கக்கூடிய நிறுவனங்கள், அரசினுடைய நிதி நிறுவனங்கள், அரசினுடைய பல்வேறு பொதுத்துறை அமைப்புகள் போன்றவற்றில் சமூகப் பொறுப்பு நிதி இருக்குமா என்று தேடிப்பார்த்து, அப்படி ஒரு துறையில் இருந்து தான், இந்த இளஞ்சிறை கண்மாயை தூர்வாருவதற்கு ஏறக்குறைய ரூ.2 கோடி மாண்புமிகு அமைச்சர் அவர்களுடைய பெரும் முயற்சியால் பெற்று, இப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.இப்படி தொடர்ச்சியான பல்வேறு முயற்சிகள், அரசினுடைய நிதி பட்ஜெட் நிதியை தாண்டி ஒதுக்கப்படக்கூடிய நிதி திட்டங்களுக்கும் தாண்டி இன்னும் அதிகமாக பெற்று, இந்த பகுதியினுடைய வறட்சியை போக்க வேண்டும், இந்த பகுதியினுடைய விவசாயத்தை மேம்படுத்த வேண்டும். நிலத்தடி நீரை வளப்படுத்த வேண்டும் என்பதற்காக செய்யக்கூடியது தான் இது.இந்த இளஞ்சிறை கண்மாய் மிக முக்கியமான நமது மாவட்டத்தினுடைய மூன்றாவது பெரிய கண்மாய். ஏறத்தாழ 138 மில்லியன் கன அடி அளவில் தண்ணீரை தேக்கக் கூடிய அளவிற்கு வாய்ப்பைக் கொண்டிருக்கின்றது. சுமார் 1300 ஏக்கர் நிலங்கள் நேரடியாக பாசன வசதியும், குடிநீர் வசதியும், நிலத்தடி நீரை மேம்படுத்துவதற்கு இந்த கண்மாயின் மிகப்பெரிய அளவில் உறுதுணையாக இருக்கும்.இந்த பகுதியில் விவசாயத்தை வளப்படுத்துவதற்கும், அதுவும் குறிப்பாக கிருதுமால் நதியில் இருந்து தொடர்ச்சியாக தண்ணீரை பெறுவதற்கும், இதற்கு இடதுபுறம் இருக்கக்கூடிய கால்வாய் தொடர்ச்சியாக ஆண்டுதோறும் நீரை பெறுவதற்குரிய முயற்சிகளையும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள்.நீர்வளத்துறை அலுவலர்கள் விரைந்து இந்த திட்டத்தை முடிக்க வேண்டும். அதேபோன்று எடுத்திருக்கக்கூடிய அனைத்து தூர்வாரக் கூடிய பணிகள், பலப்படுத்தக் கூடிய பணிகள், மதகுகளை புரணமைக்க கூடிய பணிகள் எல்லாம் விரைந்து முடித்து, ஒரு காலத்தில் இந்த பகுதிகள் ஒரு 400 ஆண்டுகளுக்கு முன்பாக கூடுதலாக விவசாயம் நடைபெற்ற பகுதி, அவற்றை மீண்டும் கொண்டு வந்து இந்த பகுதியினுடைய பொருளாதார வளர்ச்சிக்கு நீர்வளத்துறை இயன்ற பணிகளை எல்லாம் செய்ய வேண்டும், விரைந்து முடிக்க வேண்டும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் நீர்வளத்துறை செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர்கள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்ட திருக்குறள் முற்றோதல் போட்டியில் 20 நிமிடங்களில் 300 திருக்குறளுக்கு மேல் ஒப்புவித்த வெற்றி பெற்ற மாணவர்கள் (24.07.2024) கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையினை பார்வையிட்டனர். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மாணவர்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள்.அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில், தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக, பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள், அவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக கோடைகால சிறப்பு பயிற்சி வகுப்புகள், போட்டித்தேர்வுகளுக்கு தயார் படுத்துவதற்காக சிறப்பு பயிற்சி வகுப்புகள், உயர்கல்வி குறித்த புரிதல் மற்றும் உயர்கல்வி படிப்புகளில் உள்ள துறைகள் குறித்து வழிகாட்டும் நோக்கில் கல்லூரிகளுக்கு கல்விச் சுற்றுலா, உயர்கல்வி படிப்பதற்கு விரிவான வழிகாட்டுதலையும், அவர்களின் எதிர்கால கல்வி நோக்கங்கள் குறித்து தகவல் அறிந்து முடிவுகளை எடுக்க மாணவர்களுக்கு உதவிடும் வகையிலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், சுற்றுச்சூழல் மற்றும் வன உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி பசுமை ஆர்வலர்களை உருவாக்கும் திட்டம், மாணவர்களுக்கு கல்வியோடு, அவர்களின் கல்வி இணை செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அறிவோம் தெளிவோம் என்ற சிறப்புத் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்கள் அருகில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு சென்று, அங்குள்ள அலுவலக நடைமுறைகளையும், அங்கு வழங்கப்படும் சேவைகளையும் தெரிந்து கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது.மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடர்ச்சியாக காபி வித் கலெக்டர் நிகழ்ச்சிகள் மூலம் பல்வேறு தனித்திறமைகளில் சிறந்து விளங்கும் அரசுப்பள்ளி மாணவர்களை சந்தித்தும், அரசுப்பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுடன் கலந்துரையாடி, இலக்கை நிர்ணயிப்பது, அந்த இலக்கை எவ்வாறு அடைவது, வாய்ப்புகளை பயன்படுத்துவது, தொடர்ச்சியான செயல்பாட்டினால் திறமையை வளர்த்துக் கொண்டு வாழ்வில் வெற்றி பெறுவது, தவறுகளில் இருந்து படிப்பினை கற்றுக் கொண்டு எவ்வாறு வாழ்வில் முன்னேறுவது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை கூறி, அறிவுரை மற்றும் ஆலோசனைகளுடன் கூடிய உரிய வழிகாட்டுதல்களை மாணவர்களுக்கு வழங்கி வருகிறார்கள்.கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதின் 25 வது ஆண்டினை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகள் போட்டிகள் நடத்தப்பட்டன. அதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் முற்றோதல் செய்யும் போட்டிகள் 30.12.2024 அன்று நடைபெற்றது. இப்போட்டியில் 20 நிமிடங்களில் 300 திருக்குறளுக்கு மேல் ஒப்புவித்த மாணவர்களுக்கு சிறப்பு செய்யும் விதமாக கல்வி சுற்றுலா கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வள்ளுவர் சிலைக்கு இன்று அழைத்து செல்லப்பட்டனர். இச்சுற்றுலாவில் 53 மாணவர்கள் கலந்து கொண்டு அய்யன் வள்ளுவர் சிலை நிறுவப்பட்டதன் நோக்கம் மற்றும் அமைப்பு குறித்து தெரிந்துகொண்டனர்.இந்த பயணத்தை ஏற்பாடு செய்து, எங்களை அழைத்து வந்த மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், பேராலி சாலை, ஓம் சக்தி திருமண மண்டபத்தில் (13.02.2025) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், சமூக நல ஆணையர் திருமதி ஆர்.லில்லி,I A S., அவர்கள் மற்றும் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், சர்வதேச முதியோர் தின கொண்டாட்ட நிகழ்ச்சி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி பெ.கீதா ஜீவன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி பெ.கீதா ஜீவன் அவர்கள் முதியோர்களை கௌரவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு, குழந்தைகள், முதியோர்கள், பெண்கள், திருநங்கைகளுக்கான திட்டங்களையும், அவர்களுக்கான பாதுகாப்பு சட்டங்களையும் சமூக நலத்துறை மூலம் சிறப்பாக நடைமுறைப்படுத்துகிறது. புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், திருமண நிதியுதவி போன்ற திட்டங்களுக்கு நிதி உதவி செய்து இத்துறையில் முறையாக திறம்பட நிர்வாகித்து வருகிறது.அதுபோல முதியோர் இல்லம் தொடங்கி, அரசு அங்கீகாரம் பெற்று இருந்தும் நிதியுதவி கிடைக்காமல் இருந்தாலும், புதிதாக முதியோர் இல்லம் தொடங்க வேண்டும் என்றால், விண்ணப்பிக்கும் போது அதனை முறையாக பரிசளித்து அதற்கான அனுமதியும், உதவிகளும் வழங்கப்படுகின்றன.மேலும், அரசு உதவி பெறும் குழந்தைகள் இல்லங்களில் மூலம் ஆதரவற்ற குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களின் பாதுகாப்பை ஏற்று அவர்களுக்கு உணவு, உடை தங்குமிடம் உள்ளிட்டவற்றை உருவாக்கித் தந்து, அவர்கள் 21 வயது வரை பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் ஆதரவற்ற குழந்தைகளுக்கு என சுமார் 36 அரசு குழந்தைகள் இல்லம், 147 தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் பாராமரிக்கட்டு வருகின்றனர். அவர்களுக்கும் விளையாட்டு விழாக்களை, நிகழ்ச்சிகளை நடத்தி அவர்களுக்கும் அனைத்து கலைகளையும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவின்படி, கடந்த ஆண்டு முதல் தொழிற்பயிற்சி, ஆற்றுப்படுத்துதல், விளையாட்டு, பயிற்சி, ஓவியம், இசை போன்ற கலைகள் அவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்படுகிறது.இந்தத் துறை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் புத்துயிர் பெற்று பல்வேறு திட்டங்கள், சட்டங்கள் குழந்தைகள் நலன், பெண்கள் நலனுக்காக நிறைவேற்றப்பட்டு வருகிறது.இது போன்ற திட்டங்களை ஆதரவற்றவர்களுக்கும், முதியோர்களுக்கும், பெண்களுக்கும் இந்த அரசு தொடர்ந்து செயல்படுத்தும் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி பெ.கீதா ஜீவன் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி ஷீலா சுந்தரி, விருதுநகர் நகர்மன்ற தலைவர் ஆர்.மாதவன், அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், முதியோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் சிங்கராஜா கோட்டை பணிபுரியும் மகளிர் தங்கும் விடுதியில் உள்ள சித்திரக்கதைகள் நூலகத்தில் காமிக்ஸ் திருவிழா(Comics Thiruvizha) நிகழ்ச்சி 15.02.2025 அன்று நடைபெறவுள்ளது.இந்நிகழ்ச்சியில் 5 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகள் கலந்து கொள்ளலாம். இதில் கேலி சித்திரம், முகமுடி தயாரித்தல் போட்டி, நாடகம், உடை அலங்காரம், பொம்மலாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.இந்த காமிக்ஸ் திருவிழா நிகழ்ச்சியில் பங்கு பெற விரும்பும் 5 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகள், அவர்கள் பள்ளி பயிலும் பள்ளியை அணுகி பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (13.02.2025) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில், சமூக நல ஆணையர் திருமதி ஆர்.லில்லி,இ.ஆ.ப., அவர்கள், இயக்குநர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் திருமதி ஐ.சா.மெர்சி ரம்யா,I A S, அவர்கள், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள், இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.தங்கபாண்டியன் அவர்கள் மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி பெ.கீதா ஜீவன் அவர்கள் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.இக்கூட்டத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மதிய உணவு சத்துணவு திட்டம், முதலமைச்சரின் காலை உணவு திட்டம், சத்துணவு மையங்கள், மாவட்ட அளவில் செயல்படும் வழிகாட்டல் மற்றும் கண்காணிப்பு குழுவின் செயல்பாடுகள், புதுமைப்பெண் திட்டம், தமிழ் முதல்வன் திட்டம், திருமண நிதி உதவி திட்டம், திருநங்கைகள் சுயதொழில் துவங்கிட மானிய திட்டம், திருநங்கைகள் அடையாள அட்டை, திருநங்கைகளுக்கான ஓய்வூதியம், குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம், வரதட்சணை தடுப்புச் சட்டம், தனியார் பணிபுரியும் மகளிர் விடுதி பதிவு விவரங்கள், முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், 18 வயது முடிவுற்ற பயனாளிகளின் முதிர்வுத் தொகை வழங்கப்பட்ட விவரம், மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் மற்றும் தடுப்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள், பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம், மாவட்ட மகளிர் அதிகாரம் மையத்தின் செயல்பாடுகள், மகளிர் உதவி எண், ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழங்கப்பட்டு வரும் சேவைகள், முதியோர் இல்லங்கள், சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டம், ஒருங்கிணைந்த வளாகங்கள், ஒருங்கிணைந்த மூத்த குடிமக்களுக்கான திட்டங்கள், மகளிர் குறுகிய கால தங்கும் இல்லங்கள், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து ஒவ்வொரு துறை சார்ந்த அரசு அலுவலருடன் ஆய்வு மேற்கொண்டார்.மாவட்டத்தில் குழந்தைகள் பிறப்பு குறித்த மருத்துவத்துறையின் புள்ளி விவரங்கள் கிடைத்தவுடன் குழந்தைகளின் வயதுக்கேற்ற உயரம் மற்றும் எடை குறித்து நேரில் சென்று ஆய்வு செய்து குறிப்பிட்ட கால இடைவெளியில் துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதுபோல கர்ப்ப காலத்தில் பெண்களின் ஊட்டச்சத்து வளர்ச்சியினை முறையாக கண்காணித்து, அவர்களுக்கான ஊட்டசத்துக்கள் கிடைக்கச் செய்வதன் மூலம் ஆரோக்கியமான குழந்தைப் பேறு அடைவதை உறுதி செய்ய வேண்டும்.மதிய உணவு திட்டத்தில் சமையல் கூடத்திற்கு தேவையான மின்சார வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தேவைப்படின் தொடர்புடைய அரசு துறைகளிடம் தெரிவித்து அதனை உறுதி செய்ய வேண்டும். திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள தொகைகளை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.குடும்ப வன்முறை மற்றும் வரதட்சணை கொடுமையால் பாதிக்;கப்படும் பெண்களுக்கு முதற்கட்டமாக அவர்களின் நகை, பணம், கல்விச் சான்றிதழ்கள் உள்ளிட்டவைகளை பெற்றுத்தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குழந்தை திருமணம் தடுப்பு குறித்து தொடர்ச்சியான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.மேலும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் முறையாக அவர்களுக்கு சென்றடைய அரசு அலுவலர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கி, நமது மாவட்டத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல அனைவரின் ஒத்துழைப்பை நலக வேண்டும் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி பெ.கீதா ஜீவன் அவர்கள் தெரிவித்தார்.இந்த ஆய்வுக் கூட்டத்தில் உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ஹிமான்சு மங்கள்.,I A S., விருதுநகர் நகர்மன்ற தலைவர் ஆர்.மாதவன், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் வி.இ.நா.செந்திக்குமார நாடார் கல்லூரியில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் (13.02.2025) தமிழறிஞர்கள், எழுத்தாளர்களை நினைவு போற்றும் வகையில் நடைபெற்ற இலக்கியக் கருத்தரங்கு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் துவக்கி வைத்து உரையாற்றினார்.
விருதுநகர் மாவட்டத்தில் தமிழக அரசு உத்தரவுப்படி அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ள 56 வழித்தடங்களில் மினி பஸ்களை இயக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.அதன்படி, விருதுநகர் வட்டாரப்போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட சண்முக சுந்தரபுரம் விலக்கு முதல் கோட்டூர் வரை, வாழ வந்தாள்புரம் முதல் கோட்டூர் வரை, வே.வ. வன்னியப்பெருமாள் கல்லூரி(VVV காலேஜ்) முதல் நல்லமநாயக்கன்பட்டி வரை(NH47), விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் முதல் ஒண்டிப்புலி நாயக்கனூர் வரை, விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முதல் வாழவந்தாள்புரம் வரை, விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முதல் சென்னல்குடி வரை, விருதுநகர் ஆத்துப்பாலம் முதல் மங்களம் பிரிவு வரை, விருதுநகர் ஏ.ஆர் கிரவுண்ட் முதல் மத்தியசேனை விலக்கு வரை, வெற்றிலை முருகன்பட்டி முதல் காரியாபட்டி முக்கு ரோடு வரை, துலுக்கப்பட்டி ராம்கோ சிமெண்ட் பேக்டரி முதல் மேட்டமலை வரை, ஸ்ரீராம்பூர் முதல் அழகாபுரி வரை, விருதுநகர் சிட்கோ முதல் மெட்டுக்குண்டு காலனி வரை, சண்முகசுந்தரபுரம் விலக்கு முதல் மலைப்பட்டி வரை, ராமசாமிபுரம் விலக்கு முதல் கோட்டூர் வரை, பாலவனத்தம் முதல் சென்னல்குடி வரை, பாலவனத்தம் முதல் கோட்டைநத்தம் வரை, விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முதல் மேட்டுப்பட்டி வரை, முக்குளம் முதல் கட்டன்குளம் விலக்கு வரை, மெட்டுக்குண்டு காலனி முதல் சண்முகசந்தரபுரம் விலக்கு வரை, துலுக்கப்பட்டி முதல் மேட்டமலை வரை, காரியாபட்டி முதல் வெற்றிலைமுருகன்பட்டி வரை, காரியாபட்டி பேருந்து நிலையம் முதல் என்.நெடுங்குளம் வரை, காரியபட்டி பேருந்து நிலையம் முதல் குறிஞ்சான்குளம் வரை, பகுதி அலுவலகம் அருப்புக்கோட்டை அலுவலக எல்லைக்குட்பட்ட அருப்புக்கோட்டை பழைய பேருந்து நிலையம் முதல் புலி குறிச்சி வரை, அருப்புக்கோட்டை பழைய பேருந்து நிலையம் முதல் புலியூரான் வரை,சிவகாசி வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட தேவர் சிலை முதல் சாமிநத்தம் வரை, வெற்றிலையூரணி முதல் கூத்தனாட்சியாபுரம் வரை, அய்ய நாடார் காலேஜ் முதல் இடையன்குளம் வரை சிவகாசி அரசு மருத்துவமனை முதல் வடமாலபுரம் காலனி பிரிவு வரை, வெற்றிலையூரணி முதல் சேதுராமலிங்கபுரம் வரை, திருவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட லட்சுமி நாராயண மஹால் முதல் பொட்டல்பட்டி வரை, மல்லி முதல் இனாம் கரிசல்குளம் வரை கிருஷ்ணன் கோவில் முதல் பண்டிதன்பட்டி வரை, ஸ்ரீவில்லிபுத்தூர் பழைய பேருந்து நிலையம் முதல் பி.மீனாட்சிபுரம் வரை, (மல்லி முதல் அன்னை சத்யா நகர் வரை, ஸ்ரீவில்லிபுத்தூர் பழைய பேருந்து நிலையம் முதல் மல்லி வரை, கிருஷ்ணன் கோவில் முதல் அழகாபுரி வரை, அழகாபுரி முதல் சுந்தரபாண்டியம் வரை, சீசாபுரம் முதல் கூமாப்பட்டி வரை, பட்டியகல் முதல் கீழக்கோட்டையூர் வரை, பட்டியக்கல் முதல் மகாராஜபுரம் வரை, முத்துவெங்கடராயபுரம் முதல் வங்கார்பட்டி வரை, பகுதி அலுவலகம், இராஜபாளையம் அலுவலக எல்லைக்குட்பட்ட காட்டன் மார்க்கெட் முதல் நரிமேடு வரை, ஆர்டிஓ ஆபீஸ் முதல் தொட்டியபட்டி வரை, சத்திரப்பட்டி முதல் கோபாலபுரம் வரை, காந்தி சிலை முதல் அன்னத்தலை விநாயகர் கோவில் வரை, சாராபட்டி முதல் குறுக்கம்பட்டி வரை, தளவாய்புரம் பேருந்து நிலையம் முதல் முறம்பு வரை, சம்சிகாபுரம் முதல் தும்பகுளம் வரை, ராஜபாளையம் ரயில்வே நிலையம் முதல் சமத்துவபுரம் வரை, ரெட்டியாபட்டி முதல் அப்பநாயக்கன்பட்டி வரை, புதிய பேருந்து நிலையம் முதல் நத்தம்பட்டி வரை, சுந்தரராஜபுரம் முதல் பத்மா மருத்துவமணை வரை, ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் முதல் ஹீத் டிரஸ்ட் வரை, இளந்திரை கொண்டான் முதல் சொக்கனாதபுத்தூர் விலக்கு வரை, எம்.கே.எஸ் பெட்ரோல் பல்க் முதல் அட்டைமில் முக்கு ரோடு வரை.மேற்கண்ட 56 வழித்தடங்களில் மினி பஸ்களை இயக்க உரிய அனுமதி பெற விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்ப படிவத்தினை ஆன்லைன் மூலம் ரூ.1600 செலுத்தி பெற்று அதனை பூர்த்தி செய்து அதனை உரிய சான்றுகளுடன் 10.02.2025 முதல் விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சிவகாசி வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் நேரில் சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
இரயில்வே துறை அமைச்சகத்தின் கீழ் இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் மூலம் வெளியிட்டுள்ள 32438 பல்வேறு பணிக் காலிப்பணியிடங்கான அறிவிப்பு 21.01.2025 அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு 23.01.2025 ஆம் தேதியிலிருந்து 22.02.2025 தேதி வரை விண்ணப்பிக்கலாம். இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் பயன்பெறும் பொருட்டு விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தால் ஒரு நாள் அடிப்படை பயிற்சி வகுப்பு வரும் 17.02.2025 அன்று விருதுநகர்.ஸ்ரீ வித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடத்தப்படவுள்ளது. இவ்வகுப்பு திறன் வாய்ந்த பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்படவுள்ளது.. இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உடையவர்கள் https://forms.gle/8hB1dvzGvctLtMAs9 என்ற கூகுள் பார்ம் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை 93601-71161 என்ற தொலைபேசி எண் வாயிலாக தொடர்புகொள்ளலாம். எனவே இத்தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S , அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களை அரசு பொது தேர்வு நடக்கும்பொழுதும், தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகும் அரசு அங்கீகாரம் பெறாத தனியார் கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள் அணுகி அவர்களை சேர்ப்பதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.ஒரு சில ஆசிரியர்களே மாணவர்களின் விவரங்களை இது போன்ற கல்லூரிகளுக்கு தருவதாகவும் புகார்கள் வருகின்றன. அவ்வாறு கல்லூரிகளுக்கு மாணவர்களின் விவரங்களை அளிக்கவோ, மாணவர்களை சேர்க்கவோ கூடாது. மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த சந்தேகங்கள் இருப்பின் அந்தந்த பள்ளியினுடைய முதுகலை உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியரையே அணுகி ஆலோசனை பெற வேண்டும்.கல்லூரிகளுக்கு நேரடியாக மாணவர்களின் விவரங்களை அளிப்பதோ அல்லது சேர்ப்பதோ, அங்கீகாரம் இல்லாத கல்லூரிகள் மாணவர்களை நேரடியாக அணுகினாலோ அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.