விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பயிற்சி மையங்கள் என அனைத்து இடங்களிலும் பணிபுரியும் இடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம் -2013 ன் கீழ் உள்ளக குழு (Internal Committee) அமைக்குமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி மையங்கள் என அனைத்து நிறுவனங்களும் www.tnswd-poshicc.tn.gov.in என்ற இணையதள முகப்பில் பதிவேற்றம் செய்திடுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.உள்ளக குழு அமைக்கப்படவேண்டிய விபரம்: உள்ளககுழுவில் ஒருபெண் மூத்த அலுவலர் அல்லது பெண் ஊழியரே தலைவராக இருத்தல் வேண்டும். குறைந்தது இரண்டு உறுப்பினர்கள் பெண்களின் நலனுக்காக பணியாற்றும் ஆர்வமிக்க நபர்களாக பணியாளர்களில் இருந்து நியமிக்கவேண்டும். ஒரு உறுப்பினர் பெண்களுக்கான குற்றங்களை தடுக்கும் பணிகளில் ஈடுபடும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் ஒருவராக இருத்தல் வேண்டும். உள்ளக குழுவில் ஐம்பது சதவீதம் பெண்கள் இருத்தல் வேண்டும்.தண்டனைகள்:உள்ளக குழு அமைக்கப்படாத இடங்களுக்கு ரூ.50,000- அபராதமாக விதிக்கப்படும், மேலும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களின் மீது எடுக்கப்படும் பரிந்துரைகளில் நடவடிக்கைஎடுக்காமலும், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு ஆண்டறிக்கை சமர்பிக்காமலும் இருப்பினும் அபராதம் விதிக்கப்படும்.நிறுவனம், சட்டத்திற்கு உட்படாமல் மீண்டும் மீண்டும் தவறிழைப்பின் அபராதத் தொகை இரட்டிப்பாக்கப்படுவதுடன், கடுமையாக தண்டனைக்கும் உட்படுத்தப்படுவர். விற்பனை கூடம் / பணியிட பதிவு அனுமதி இரத்து செய்யப்படுவதுடன், மீளபெறுதல் /புதுப்பித்தல் செய்யப்படாது. அனைத்து இடங்களிலும் உள்ளககுழு அமைத்து அறிக்கை சமர்பிக்க வேண்டிய 21.11.2025 அன்றே கடைசி நாளாகும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
01.01.2026 தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல்களை திருத்தம் செய்வதற்கான சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுவீடாகச் சென்று கணக்கெடுப்புப் படிவங்களை வழங்கியும், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை வாக்காளர்களிடமிருந்து திரும்பப் பெற்றும் வருகின்றனர். இதுவரை விருதுநகர் மாவட்டத்தில் 1572654 வாக்காளர்களுக்கான கணக்கெடுப்புப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன.வெளியூர்களில் பணிபுரிபவர்கள் தங்களுக்கான படிவங்களைப் பெற்றுக் கொள்வதை எளிதாக்குவதற்காகவும், 2002-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களைக் கண்டறிவதற்கு உதவி செய்வதற்காகவும், படிவங்களை நிரப்புவதற்கும், நிரப்பப்பட்ட படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் திரும்ப அளிப்பதற்காகவும், அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நாளை 19-11-2025 புதன் கிழமை மற்றும் 20.11.2025 வியாழக் கிழமை ஆகிய 2 தினங்களிலும், தினசரி காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சிறப்பு முகாம்கள் விருதுநகர் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.ஏற்கெனவே வாக்காளர்களாகப் பதிவு செய்துள்ளவர்கள் எவரேனும் இதுவரை கணக்கெடுப்புப் படிவங்களைப் பெற்றுக் கொள்ளாமல் இருந்தால் இச்சிறப்பு முகாம்களுக்குச் சென்று தங்களுக்கான மற்றும் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கான கணக்கெடுப்புப் படிவங்களைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும், கணக்கெடுப்புப் படிவங்களை ஏற்கெனவே பெற்றுள்ளவர்கள், பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை திரும்ப அளிக்க இயலும்.படிவங்களைப் பூர்த்தி செய்வதற்கும், 2002-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரையோ அல்லது தங்களின் தந்தை/தாய்/தாத்தா/பாட்டி பெயர்களைக் கண்டறிவதற்கும் உதவி தேவைப் பட்டால் இம்முகாம்களுக்குச் சென்று தேவையான உதவியைப் பெற்றுக் கொள்ளலாம். இம்முகாம்களில் அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், தன்னார்வலர்கள் இந்தப் பணிகளை மேற்கொள்வார்கள்.பூர்த்தி செய்யப்பட்ட படிவத்துடன் எந்த ஆவணத்தையும் இணைத்து வழங்கத் தேவையில்லை. வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தம் தொடர்பாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (04562)-1950 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்கள் பெற்றுக் கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S,. அவர்கள் தெரிவித்துள்ளார்.
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் சென்னை அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் இணைந்து ஆண்டு தோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்கள் குடிமைப்பணிகளுக்கான போட்டித் தேர்வில் கலந்துகொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளித்திடும் திட்டத்தினை செயல்படுத்திட தமிழ்நாடு அரசால் ஆணை வழங்கப்பட்டது.விருதுநகர் மாவட்டத்தில் மீனவ சமுதாயத்தைச் சார்ந்த உள்நாட்டு மீனவ கூட்டுறவுச் சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இச்சிறப்பு பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இத்திட்டத்தின் கீழ் 2025-26-ம் ஆண்டிற்கு பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்பபடிவம் (Application Form) மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை (Guidelines) மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் அல்லது விருதுநகர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை அலுவலக வேலை நாட்களில் நேரில் தொடர்பு கொண்டு விலையின்றி பெற்றுக்கொள்ளலாம்.விண்ணப்பதாரர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணையதளத்தில் உள்ள அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பூர்த்தி செய்து, 25.11.2025-க்குள் விருதுநகர் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ விண்ணப்பிக்க வேண்டும். மேலும், இத்திட்டம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு உதவி இயக்குநர் அலுவலகம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, 114 B27/1, வேல்சாமி நகர், விருதுநகர் - 626-001. தொலைபேசி எண். : 04562-244707 மற்றும் விருதுநகர் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S,. அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டத்திலுள்ள பிளவுக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு, அணைகளிலிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி ராணி ஸ்ரீகுமார் அவர்கள் மற்றும் சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.அசோகன் அவர்கள் முன்னிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் (17.11.2025) நீர் பாசனத்திற்காக தண்ணீரினை மலர் தூவி திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், விருதுநகர் மாவட்டத்திலுள்ள வேளாண் பெருங்குடி மக்களின் கோரிக்கைளை ஏற்று, பிளவுக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகளிலிருந்து நீர் இருப்பு, நீர்வரத்து மற்றும் நீர்த்தேவை அடிப்படையில் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டிருந்தார்கள். அதனடிப்படையில், இன்று வத்திராயிருப்பு வட்டத்திலுள்ள பிளவுக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பிளவுக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு ஆகிய அணைகள் முறையே 13.90 சதுர மைல், 9.57 சதுர மைல் நீர்ப்பிடிப்பு பகுதி கொண்டவை. 192.00 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட பெரியாறு அணையில் தற்போது 143.52 மில்லியன் கன அடி நீரும், 133 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கோவிலாறு அணையில் தற்பொழுது 22.55 மில்லியன் கனஅடி நீரும் இருப்பில் உள்ளது. மேலும்,பிளவுக்கல் பெரியாறு அணைக்கு வினாடிக்கு 0.08 கனஅடி நீரும், கோவிலாறு அணைக்கு 0.08 கனஅடி நீரும் வந்து கொண்டிருக்கிறது. பிளவுக்கல் பாசன திட்டத்தில் பயன்பெறும் பாசன பரப்பு 8531.71 ஏக்கர (3452.515 ஹெக்டேர்) ஆகும்.தற்பொழுது பாசனத்திற்காக பிளவுக்கல் பெரியாறு அணை மற்றும் கோவிலாறு அணைகளின் மூலம் 17.11.2025 முதல் 7 நாட்களுக்கு வினாடிக்கு 150 கன.அடி வீதமும், நேரடி கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 3.00 கனஅடி வீதம் 28.02.2026 வரையிலும் தண்ணீர் திறந்து விடப்படவுள்ளது. மேலும் 17.11.2025 இன்று பிளவுக்கல் பெரியாறு அணை மற்றும் கோவிலாறு அணைகளிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் திறப்பினால் மீதமுள்ள கண்மாய்களுக்கு அணையின் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தைப் பொறுத்து பாசனத்திற்காகவும், பெரியாறு பிரதானக்கால்வாய் மூலம் நேரடி பாசனத்திற்காகவும் தண்ணீர் வழங்கப்படவுள்ளது. இத்தண்ணீர் திறப்பினால் பிளவக்கல் திட்டத்தின் கீழ் உள்ள 40 கண்மாய்களின் 7219 ஏக்கர் விவசாய நிலங்களும், பெரியாறு பிரதான கால்வாய் நேரடி பாசனத்தின் மூலம் 960 ஏக்கர் விவசாய நிலங்களும் பயனடையவுள்ளன. இதன் மூலம் கொடிக்குளம், கான்சாபுரம், மகாராஜபுரம். வ.புதுப்பட்டி, வத்திராயிருப்பு, கூமாபட்டி, சுந்தரபாண்டியம், நத்தம்பட்டி, மூவரைவென்றான், மங்கலம், செம்மாண்டிகரிசல்குளம், பாட்டக்குளம் சல்லிபட்டி, விழுப்பனூர், தச்சகுடி, கிருஷ்ணபேரி, நெடுங்குளம், குன்னூர் ஆகிய 17 வருவாய் கிராமங்கள் பயன்பெறும். இதேபோல் அணை நீர் இருப்பினை கருத்தில் கொண்டு பாசன பருவகாலம் வரை தேவைக்கேற்ப தண்ணீர் வழங்கப்படும். எனவே விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமென மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்வின்போது, நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் பொறி.சு.மதனசுதாகரன், செயற்பொறியாளர் பொறி.மு.மகேஸ்வரி, உதவி செயற்பொறியாளர் பொறி.சி. ஜான்சி அனிதா மற்றும் உதவி பொறியாளர்கள் பொறி.காளி சரண் பாபு, பொறி.அருண் பிரசாத், பொறி. உமாபதி, பொறி. அருண்குமார் மற்றும்உள்ளாட்சி பிரதிநிதிகள், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வன விரிவாக மையத்தில் (17.11.2025) திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் (திருவில்லிபுத்தூர் கோட்டம்) சார்பில், வன பாதுகாப்பு, காட்டுத்தீ மேலாண்மை, வனவிலங்கு கணக்கெடுப்பு மற்றும் மனித-விலங்கு மோதல் மேலாண்மை பயிற்சி திட்டத்தின் கீழ் வனமும் வாழ்வும் என்ற தலைப்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான இரண்டு நாள் ஆசிரியர் பயிற்சி பட்டறையினை துணை இயக்குநர்(திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்) மரு.இரா.முருகன்,இ.வ.ப., அவர்கள் தலைமையில், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி ராணி ஸ்ரீகுமார் அவர்கள் முன்னிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் தொடங்கி வைத்தார்.தமிழ்நாடு அரசின் அறிவிப்பின்படி, மாநிலம் முழுவதும் 20,000 அரசு பள்ளி மாணவர்களுக்கு வன பாதுகாப்பு, காட்டுத்தீ மேலாண்மை, வனவிலங்கு கணக்கெடுப்பு மற்றும் மனித-விலங்கு மோதல் மேலாண்மை குறித்த சான்றிதழ் பயிற்சி வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் 25 அரசு மேல்நிலை/உயர்நிலை பள்ளிகள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற அரசு வழிகாட்டுதலின்படி, விருதுநகர் மாவட்டத்திற்குள் உள்ள 25 அரசு பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.ஒவ்வொரு பள்ளியிலும் 11 ஆம் வகுப்பு மாணவர்களில் இருந்து 10 மாணவர்கள், 10 மாணவிகள் என மொத்தம் 20 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் பயிற்சி பெறுவதற்கான மாணவர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.மேலும், தேர்வு செய்யப்பட்ட ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் உயிரியல் அல்லது சுற்றுச்சூழல் அறிவியல் தொகுப்புகளை கற்பிக்கும் 25 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி, தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு வனத்துறையின் பயிற்சியாளர்கள் (Forest Range Officer) மூலம் இரண்டு நாள் மாவட்ட அளவிலான பயிற்சி பட்டறை இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் வனவிரிவாக்க மையத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.ஆசிரியர்களுக்கு வன பாதுகாப்பு, காட்டுத்தீ தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பற்றிய விளக்கங்கள், பள்ளிகளில் மாணவர்களுக்கு அளிக்க வேண்டிய பயிற்சி முறையை ஒருங்கிணைத்து பயிற்சி அளித்தல், வனவிலங்கு கணக்கெடுப்பு அடிப்படை நடைமுறைகள் மற்றும் புது தலைமுறைக்கு வன பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மனித-விலங்கு மோதல் தடுப்பு, மேலாண்மை மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விரிவான விளக்கங்கள் வழங்குதல் ஆகியவை குறித்து இவ்வகுப்பில், பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.இந்த இரண்டு நாள் பயிற்சி நிறைவடைந்த பின், தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளில் மாணவர்களுக்கு வகுப்பு வாரியாக பயிற்சி வழங்குவார்கள். பின்னர், மாணவர்களின் மதிப்பீடு செய்யப்பட்டு அரசு வழங்கும் சான்றிதழ் வழங்கல் நிகழ்ச்சி நடைபெறும்.இயற்கை என்பது நாம் ரசிக்கக் கூடியது. இயற்கையை அழித்து விடலாம். ஆனால் அதை நம்மால் உருவாக்குவது கடினம். அந்த இயற்கை மீதான விழிப்புணர்வை உண்டாக்குவதற்கு தான் இது போன்ற பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. நம்முடைய குழந்தைகளுக்கு இதனை சொல்லித் தர வேண்டும். மாணவர்களிடையே இயற்கை மற்றும் மரங்களின் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, மரம் வளர்ப்பை அவர்களுக்கு சொல்லித் தர வேண்டும். தாங்கள் வைத்த மரங்கள் தங்களுக்கு முன்னே வளர்ந்து வரும் பொழுது அதனை பார்த்து ரசிக்க கூடிய உணர்வை அவர்களுக்கு உருவாக்க வேண்டும். நம்முடைய நாட்டு மரங்களை வளர்ப்பதை ஊக்குவிக்க வேண்டும். எனவே, இந்த பயிற்சி வகுப்பினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், திருவில்லிபுத்தூர் உதவி வனப்பாதுகாவலர் திரு.ஞானப்பழம், வனச்சரக அலுவலர்(சிவகாசி வன உயிரின சரகம்) திரு.பூவேந்தன், சிவகாசி மாவட்ட கல்வி அலுவலர்(இடைநிலை) திரு.ரெ.சுரேஷ், சீர்மரபினர் வாரிய துணைத்தலைவர் திரு.இராசா அருண்மொழி, திருவில்லிபுத்தூர் நகர்மன்றத்தலைவர் திரு.ரவிக்கண்ணன், திருவில்லிபுத்தூர் முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் திரு.மல்லி கு.ஆறுமுகம், வன சர அலுவலர்கள், அரசு அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இளைஞர் நீதி (குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு) சட்டம் 2015, பிரிவு 56-ன்கீழ் தத்தெடுத்தல் திட்டத்தின் மூலம் குழந்தையை சட்டப்படி தத்தெடுத்து வளர்க்கலாம். அவ்வாறின்று சட்டத்திற்கு புறம்பாக குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பது மற்றும் குழந்தையை விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். இதுகுறித்து புகார் வரப்பெற்றால் சட்டப்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், வழக்கு விசாரணையின்போது குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்று ஆண்டுகள் முதல் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ஒரு லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்தும் விதிக்கப்படும்.குழந்தைத் தத்தெடுத்தல் திட்டத்தின்கீழ் பெற்றோர் இருவரும் இல்லாத குழந்தைகள் (Orphan), பெற்றோரால் புறக்கணிக்கப்பட்ட குழந்தைகள் (Abandoned), பெற்றோரால் வளர்க்க முடியாமல் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகள் (Surrendered) மற்றும் உறவுமுறையில் குழந்தைகளை (Relative child adoption) தத்தெடுத்து வளர்க்கலாம். அவ்வாறு குழந்தையை தத்தெடுக்க விருப்பம் உள்ளவர் Mission Vatsalya Portal - https://missionvatsalya.wcd.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே பதிவு செய்யவேண்டும்.அவ்விணையதளத்தில் பெற்றோருக்கான (Parents) என்ற பகுதியினை தெரிவு செய்து அதில் உள்ள விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து கணவன், மனைவி ஆகியோரின் பின்கண்ட சான்றுகளான 1.பிறப்புச்சான்று, 2.ஆதார்/வாக்காளர் அடையாள அட்டை/ரேசன் கார்டு, 3.பான்கார்டு, 4.திருமண பதிவுச்சான்று, 5.மருத்துவ அலுவலரின் உடற்தகுதிச்சான்று, 6.தம்பதியரின் புகைப்படம், 7.குடும்ப ஆண்டு வருமானச்சான்று, 8.அரசு/தனியார் நிறுவனத்தில் பணிபுரிவதற்கான சான்று, 9.நண்பர்/உறவினரால் வழங்கப்படும் ஆளறிச்சான்றுகளை பதிவேற்றம் செய்யவேண்டும்.மேலும், விபரங்களுக்கு “மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அறை எண்.503, 5-வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், விருதுநகர் – 626002, தொலைபேசி எண். 04562 – 293946 மற்றும் சிவகாசி, ஈஞ்சார் விலக்கு பகுதியில் செயல்பட்டு வரும் ஜீவக்கல் சிறப்பு தத்தெடுப்பு மையத்தினையும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு;ம் மையத்தின்; வாயிலாக ஒவ்வொரு மாதமும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுவருகிறது. அதன்படி, படித்த வேலை தேடும் இளைஞர்களுக்காக வரும் 21.11.2025 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 03.00 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், விருதுநகர் சூலக்கரையில் உள்ள, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு;ம் மையத்தில் நடைபெறவுள்ளது.இத்தனியார் வேலைவாய்ப்பு முகாமில் ADYAR ANANDHA BHAVAN, TVS SUNDARAM BRAKE LININGS LIMITED, ANAAMALAIS TOYOTA, TTK HEALTH CARE, MTC POLYMERS & PACKAGING போன்ற 20க்கும் மேற்பட்ட பிரபல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் படிப்பு ஆகிய கல்வித் தகுதி உடைய பணியாளர்களை தெரிவு செய்யவுள்ளார்கள்.இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்த விரும்பும் வேலைநாடுநர்கள் 21.11.2025 அன்று வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பாக www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களை பதிவு செய்துவிட்டு சுய விவரச் சான்றிதழ் (RESUME), அனைத்து கல்விச்சான்றிதழ், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இச்சேவையானது முற்றிலும் கட்டணமில்லா இலவச சேவையாகும்.இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள்இ விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அவர்களை நேரிலோ அல்லது vnrjobfair@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தின் கலை, கலாச்சாரம் மற்றும் இலக்கியம் தொடர்பான திறனை மேம்படுத்தி உயர்த்தும் நோக்கில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டுச் சங்கம் தோற்றவிக்கப்பட்டு அச்சங்கம் மூலம் 11 சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகளை தெரிவு செய்து அவர்களுக்கு தலா ரூ.1,00,000/- ஆக நிதி உதவியினை உயர்த்தி வழங்கிட அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. 2024-2025-ஆம் ஆண்டிற்கான சிறந்த எழுத்தாளர்களுக்கான உதவித்தொகையினை பெற தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அதற்கான விண்ணப்பங்களை தொடர்புடைய மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகங்களிலும், ஆதிதிராவிடர் நல ஆணையரகத்திலும் வேலை நாட்களில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் tn.gov.in என்ற இணைய தளத்திலும் (website) (or) https://www.tn.gov.in/form view.php?dep id=MQ= பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தங்களது படைப்பினை இரு நகல்களிலும் டிஜிட்டல் (Digital) முறையிலும், உரிய படிவத்தில் அனுப்ப வேண்டும், இதற்காக விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 28.11.2025-அன்றாகும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், பாலையம்பட்டி B.P.V.சாலா மேல்நிலைப்பள்ளியில் (15.11.2025) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை சார்பில், “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ், பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S,. அவர்கள் தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.தமிழ்நாடு அரசு சாமானிய மக்களும் தரமான மருத்துவ சேவைகளை பெற வேண்டும் என்பதற்காக மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48, வருமுன் காப்போம், இதயம் காப்போம், நடப்போம் நலம் பெறுவோம் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசாங்க அதிகாரிகள், மருத்துவர்கள் பொது மக்களை நேரடியாக சென்று அவர்களுக்கு சேவைகளை வழங்க வேண்டும். மக்கள் எங்கே இருக்கிறார்களோ அங்கே சென்று அமர்ந்து அவர்களுக்கான உதவியை, சேவைகளை செய்ய வேண்டும் என்று யோசித்து செயல்படுத்திக் கொண்டிருப்பவர் நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்.ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், தலைமை மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட மருத்துவமனைகளில் இருந்து மிகச் சிறந்த மருத்துவர்கள் இங்கு வருகை தந்து இருக்கிறார்கள்.விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 13 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. தற்போது 14 ஆவது முறையாக நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நடத்தப்படுகிறது.இம்முகாமில் உயர் இரத்த அழுத்தம், எக்கோ, எக்ஸ்ரே, நீரழிவுநோய் கண்டறிதல்,மார்பக புற்றுநோய், வாய் புற்றுநோய் பரிசோதனை, மின் இதய வரைபடம், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்,கருப்பை வாய் பரிசோதனை, காச நோய் மற்றும் தொழு நோய், சிறுநீரக நோய் பரிசோதனை, உள்ளிட்ட 24 வகையான இரத்த பரிசோதனைகளும் மற்றும் பொது மருத்துவம், மகளிர் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், கண் மருத்துவம், இயன்முறை மருத்துவம், நீரழிவு நோய் மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, குழந்தை மருத்துவம், தோல் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், கதிரியக்கவியல் மருத்துவம், சித்தா மருத்துவம், எலும்பு மருத்துவம், இருதய மருத்துவம், பல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் போன்ற இலவச சிறப்பு மருத்துவ சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகிறது. கர்ப்பிணி தாய்மார்களுக்கு வேண்டிய மருத்துவ வசதிகள், அறிவுரைகள் அந்தந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலே அளிக்கப்பட்டு வருகிறது.அருப்புக்கோட்டை தலைமை மருத்துவமனையில் சுமார் ரூபாய் 37 கோடி செலவில் பல்வேறு வசதிகளுடன் மருத்துவமனை கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அந்த மருத்துவமனையில் விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட உள்ளது.சமீபத்தில் நடந்து முடிந்த உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்கள் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 65 ஆயிரம் மனுக்கள் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வேண்டி பெறப்பட்டுள்ளன.அதில் தகுதியான அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.பாலையம்பட்டி பகுதி மக்களுக்கு தேவையான குடிநீர் வசதிகளுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு விரைவில் பணிகள் நிறைவடைய உள்ளன.இதுபோன்று எண்ணற்ற திட்டங்கள் மூலம் மக்களுக்கு தேவையான சேவைகளை அவர்களின் இருப்பிடம் தேடிச் சென்று வழங்கி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசுக்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.இம்முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டங்களையும், மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளையும், தாட்கோ மூலம் தூய்மை பணியாளர்களுக்கு நல வாரிய அட்டைகளையும் அமைச்சர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், விருதுநகர் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.யசோதாமணி, மருத்துவத்துறை அலுவலர்கள், வட்டாட்சியர், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம் 1.1.2026 தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல்களை திருத்தம் செய்வதற்கான சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுவீடாகச் சென்று கணக்கெடுப்புப் படிவங்களை வழங்கி வருகின்றனர். இதுவரை விருதுநகர் மாவட்டத்தில் 14,62,874 வாக்காளர்களுக்கான கணக்கெடுப்புப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. வெளியூர்களில் பணிபுரிபவர்கள் தங்களுக்கான படிவங்களைப் பெற்றுக் கொள்வதை எளிதாக்குவதற்காகவும், படிவங்களை நிரப்புவதற்கும், 2002-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களைக் கண்டறிவதற்கு உதவி செய்வதற்காகவும் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நாளை (16-11-2025 ஞாயிற்றுக் கிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சிறப்பு முகாம்கள் விருதுநகர் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.ஏற்கெனவே வாக்காளர்களாகப் பதிவு செய்துள்ளவர்கள் எவரேனும் இதுவரை கணக்கெடுப்புப் படிவங்களைப் பெற்றுக் கொள்ளாமல் இருந்தால் இச்சிறப்பு முகாம்களுக்குச் சென்று தங்களுக்கான மற்றும் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கான கணக்கெடுப்புப் படிவங்களைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும், கணக்கெடுப்புப் படிவங்களை ஏற்கெனவே பெற்றுள்ளவர்கள், பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை திரும்ப அளிக்க இயலும். படிவங்களைப் பூர்த்தி செய்வதற்கும், 2002-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரையோ அல்லது தங்களின் தந்தை/தாய்/தாத்தா/பாட்டி பெயர்களைக் கண்டறிவதற்கும் உதவி தேவைப் பட்டால் இம்முகாம்களுக்குச் சென்று தேவையான உதவியைப் பெற்றுக் கொள்ளலாம்.இம்முகாம்களில் அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், தன்னார்வலர்கள் இந்தப் பணிகளை மேற்கொள்வார்கள்.பூர்த்தி செய்யப்பட்ட படிவத்துடன் எந்த ஆவணத்தையும் இணைத்து வழங்கத் தேவையில்லை. வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தம் தொடர்பாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (04562)-1950 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்கள் பெற்றுக் கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.