25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Nov 13, 2025

தமிழ்நாட்டைச் சார்ந்த கன்னியாஸ்திரிகள்,அருட்சகோதரிகளுக்கு(ECS ) முறையில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 01.11.2025-க்கு பிறகு ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவ மத பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தமிழ்நாட்டைச் சார்ந்த அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய 600 கிறிஸ்தவர்கள் பயனடையும் வகையில் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய 550 கிறித்தவர்களுக்கு நபர் ஒருவருக்கு ரூ.37,000/- வீதமும் 50 கன்னியாஸ்திரிகள்/அருட்சகோதரிகளுக்கு நபர் ஒருவருக்கு ரூ.60,000/- வீதமும் ECS முறையில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 01.11.2025-க்கு பிறகு ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவ மத பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.                இதற்கான விண்ணப்ப  படிவத்தினை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்  சிறுபான்மையினர் நல அலுவலகம்/சிறுபான்மையினர் நல அலுவலகங்களிலிருந்து கட்டணமின்றி பெறலாம்.  மேலும்  www.bcmbcmw.tn.gov.in  என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 28.02.2026-க்குள் உரிய ஆவணங்களுடன் ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம். சேப்பாக்கம், சென்னை- 600 005 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார். 

Nov 10, 2025

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், நடைபெற்ற பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் , அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், மல்லாங்கிணறு பேரூராட்சியில் (08.11.2025) நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தொடங்கி வைத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.தமிழ்நாடு அரசு சாமானிய மக்களும் தரமான மருத்துவ சேவைகளை பெற வேண்டும் என்பதற்காக மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48, வருமுன் காப்போம், இதயம் காப்போம், நடப்போம் நலம் பெறுவோம் போன்ற பல்வேறு  திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த வரிசையில் தமிழ்நாடு அரசு மற்றொரு மருத்துவ சேவை சார்ந்த திட்டமான நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தினை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது.மாநிலம் முழுவதும் 1,256 நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம்களை நடத்தி, அனைத்து வயதினருக்கும், குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கும் அதிநவீன பரிசோதனை சாதனங்கள் மூலம் நோய்களை கண்டறிந்து, நோய் கண்டறியப்பட்டவர்களுக்கு உடனடியாக இலவச சிகிச்சை அளித்து அவர்களின் ஆரோக்கியத்தையும், உயிரையும் காப்பாற்றுவதே நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். பொதுவாக தனியார் மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனைகள் செய்ய ரூ.15,000 வரை செலவாகிறது. ஆனால், நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாமில் மக்களை தேடிச் சென்று அனைத்து பரிசோதனைகளும் இலவசமாக செய்யப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், நோய் கண்டறியப்பட்டால், அதற்கான சிகிச்சைகளும், மருந்துகளும் கூட இலவசமாகவே வழங்கப்படுகின்றன. இதனால், கட்டணம் செலுத்தி மருத்துவம் பார்க்க வசதி இல்லாத ஏழை, எளிய மக்கள் பெரியளவில் பயனடைந்து வருகின்றனர். போக்குவரத்து வசதி அதிகம் இல்லாத இடங்களிலும் முகாம்கள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு முகாமின் போது பொதுமக்கள் எளிதாக புரிந்துக் கொள்ளும் வகையில் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 36 பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.                        இம்முகாமில் உயர் இரத்த அழுத்தம், எக்கோ, எக்ஸ்ரே, நீரழிவுநோய் கண்டறிதல்,மார்பக புற்றுநோய், வாய் புற்றுநோய் பரிசோதனை, மின் இதய வரைபடம், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்,கருப்பை வாய் பரிசோதனை, காச நோய் மற்றும் தொழு நோய், சிறுநீரக நோய் பரிசோதனை, உள்ளிட்ட 24 வகையான இரத்த பரிசோதனைகளும் மற்றும் பொது மருத்துவம், மகளிர் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், கண் மருத்துவம், இயன்முறை மருத்துவம், நீரழிவு நோய் மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, குழந்தை மருத்துவம், தோல் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், கதிரியக்கவியல் மருத்துவம், சித்தா மருத்துவம், எலும்பு மருத்துவம், இருதய மருத்துவம், பல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், ஆயுர்வேத  மருத்துவம் போன்ற இலவச சிறப்பு மருத்துவ சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகிறது.                                     மேலும், இம்முகாமில்  குறிப்பிட்டுள்ள பரிசோதனைகள் மட்டும் இன்றி முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பதிவு செய்தல், மாற்று திறனாளிகளுக்கான அரசு அடையாள அட்டை வழங்குதல், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர் அடையாள அட்டை வழங்குதல் மற்றும் வருவாய்துறையினர் மூலமாக வருமானச் சான்றிதழ் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 12 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. தற்போது 13 ஆவது முறையாக காரியாபட்டி வட்டம், மல்லாங்கிணறு பேரூராட்சியில் நடைபெற்ற பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார்.                                        மேலும் இந்த சிறப்பு மருத்துவ முகாமில், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர் அடையாள அட்டைகள் மற்றும் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு அட்டைகள், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வேண்டி விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிக்கு அடையாள அட்டைகள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டைகள் உள்ளிடவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை பெறுவதற்கு, மருத்துவ பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து, அடையாள அட்டையை பெறுவதே வழக்கம். இது பெரும்பாலும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு பெரும் சிரமமாக இருந்தது. ஆனால் இந்த நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் மூலம் நமது இருப்பிடத்திற்கு அருகிலேயே நடத்தப்பட்ட முகாம் மூலம் பரிசோதனை செய்து முடிவுகளை பெற்று, உடனடியாக அடையாள அட்டைகளை பெற்று பயன்பெற்ற பயனாளிகள் தங்களது  நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.மேலும்,  நடைபெற்ற இம்முகாம் மூலம் சுமார் 2500 க்கும் மேற்பட்டோர் பரிசோதனை செய்து பயன்பெற்றனர்.இந்நிகழ்வில், மருத்துவத்துறை அலுவலர்கள், வட்டாட்சியர், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Nov 10, 2025

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம்- 2026 வாக்காளர் படிவம் வழங்கப்பட்டு வருவதையும் மாவட்ட தேர்தல் அலுவலர் , மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி சட்டமன்றத்தொகுதி, அ.முக்குளம் கிராமத்தில் (08.11.2025) வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம்- 2026 கீழ் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று கணக்கெப்புகள் பணிகள் மேற்கொண்டு வருவதையும், வாக்காளர் படிவம் வழங்கப்பட்டு வருவதையும் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா. I A S,. அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Nov 08, 2025

முன்னேற விழையும் மாவட்டம்(Aspirational District) தொடர்பாக நடைபெற்று வரும் பணிகள் குறித்து தொடர்புடைய அரசுத்துறை உயர் அலுவலர்களிடம் ஆய்வு.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்(07.11.2025) முன்னேற விழையும் மாவட்டம் (Aspirational District) தொடர்பாக நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப்  பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் முன்னிலையில், கூடுதல் செயலாளர் (இந்திய அரசின் கல்வி அமைச்சகம் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை) / மத்திய பொறுப்பு அலுவலர் (Central Prabhari Officer) திரு.ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல், I A S., அவர்கள் அரசு அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.மத்திய அரசு நிதி ஆயோக் அமைப்பினால் பொது சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி, வேளாண்மை, நிதி உள்ளடக்கம் மற்றும் திறன் மேம்பாட்டு, அடிப்படை உட்கட்டமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவில் 112 முன்னேற விழையும்   மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு, அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளையும் ஒருங்கிணைத்து முற்றிலும் வளர்ச்சியடைந்த மாவட்டமாக மாற்றுவது தான் இத்திட்டத்தின் நோக்கமாகும். விருதுநகர் மாவட்டத்தில் பொது சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி, வேளாண்மை, நிதி உள்ளடக்கம் மற்றும் திறன் மேம்பாட்டு, அடிப்படை உட்கட்டமைப்பு ஆகியவற்றில் தனிக்கவனம் செலுத்தி அந்த துறைகளை முன்னேற்ற பாதையில் எடுத்து செல்வதற்கு அலுவலர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஒன்றிய அரசினால் முன்னேற விழையும் மாவட்டங்களாக(Aspirational District) தேர்வு செய்யப்பட்டுள்ள மாவட்டங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஒன்றிய, மாநில அமைச்சர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.அதன் ஒரு பகுதியாக கூடுதல் செயலாளர் (இந்திய அரசின் கல்வி அமைச்சகம் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை) / மத்திய பொறுப்பு அலுவலர் (Central Prabhari Officer) திரு.ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல்,இ.ஆ.ப., அவர்கள் முன்னேற விழையும் மாவட்டங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள காரணிகள் மற்றும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து கேட்டறிந்து, காரணிகளின் மீது தனிக்கவனம் செலுத்தி, இந்த காரணிகளின் தரத்தினை மேம்படுத்த தொடர்புடைய துறைத்தலைவர்களுக்கு அறிவுறுத்தினார்.இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள ரத்தசோகை குறைபாடு உள்ள 56 சதவீதம் பள்ளிக் குழந்தைகளின் முன்னேற்றம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்து, மாவட்டத்தில் உள்ள ரத்தசோகை குறைபாடு உள்ள பெண் குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு இரத்த சோகை குறைபாட்டை போக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.விருதுநகர் மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக பேறு காலத்தில் ஏற்படும் சிசு மரண விகிதம் வெகுவாக குறைந்ததை பாராட்டினார்.மாவட்டத்தில் உயர்கல்வி சேர்க்கை விகிதம் அதிகமாக இருப்பதை பாராட்டி, இந்த சதவிகிதம் வருங்காலங்களில் குறையாமல் இருப்பதற்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை தொடர்புடைய அலுவலர்களுக்கு வழங்கி, தொடர் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.அருப்புக்கோட்டை வட்டாரப் பகுதிகளில் விவசாய நிலங்களில் காட்டுக் பன்றிகளால் ஏற்படக்கூடிய இழப்புகளை தடுப்பதற்கு அறிவியல் பூர்வமான நடவடிக்கைகளை எடுக்குமாறும், திருச்சுழி மற்றும் நரிக்குடி வட்டாரப்பகுதிகளில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறும் தொடர்புடைய அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.மேலும் திறன் வளர்ச்சி துறை மூலமாக கொடுக்கப்பட்டு வரும் பயிற்சிகளை நவீனப்படுத்துமாறும், செயற்கை நுண்ணறிவு, ட்ரோன் டெக்னாலஜிஸ் மற்றும் டேட்டா சயின்ஸ் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பம் தொடர்பாகவும் பயிற்சி வழங்கும்படி தொடர்புடைய அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார். தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதாரத்தின் சார்பாக மகளிர் சுய உதவி குழுக்கள் மூலமாக புதுமையான பொருட்களை தற்போதுள்ள கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு உற்பத்தி செய்து அவர்களுடைய வாழ்வாரத்தை உயர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையம் சார்பாக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அதிக அளவில் மானிய கடன் வழங்கியதற்காக பாராட்டி, சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்கி அவர்களுடைய தொழில் வளர்ச்சிக்கு உதவுமாறு தொடர்புடைய அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார். முன்னேற விழையும் மாவட்டத்தின் கீழ், தனித்தனியாக ஆய்வு செய்து மாவட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை தொடர்ந்து கண்காணித்து, முன்னேற விழையும் மாவட்டத்தின் கீழ் உள்ள அனைத்து குறியீடுகளிலும் தனிக்கவனம் செலுத்தி பணிகளை துரிதபடுத்தி, மாவட்டத்தின் முழுமையான வளர்ச்சிக்கு சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்கள் முழுமையான ஒத்துழைப்பு நல்க வேண்டும் என தெரிவித்தார்.முன்னதாக விருதுநகர், கன்னிச்சேரிபுதூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தினை நேரில் சென்று பார்வையிட்டு, அங்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள், மருந்துகளின் இருப்பு, மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவ பணியாளர்களின் எண்ணிக்கை, பயன்பெறும் கிராமங்களின் எண்ணிக்கை உள்ளிட்டவைகள் குறித்து  கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர், மருத்துவமனையில் மகப்பேறு அடைந்த கர்ப்பிணித்தாய்மார்களுக்கு தாய் சேய் நல பரிசு பெட்டகங்கள், மற்றும் பிறப்புச் சான்றிதழ்களையும், வளரிளம் பெண்களுக்கு இரும்புச் சத்து குறைபாட்டை சரி செய்யும் வகையில் இரும்புச்சத்து மற்றும் ஊட்டச்சத்து மிக்க பொருட்கள் அடங்கிய தொகுப்பினையும்  கூடுதல் செயலாளர் (இந்திய அரசின் கல்வி அமைச்சகம் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை) / மத்திய பொறுப்பு அலுவலர் (Central Prabhari Officer)  அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்வுகளில் திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.வீ.கேசவதாசன், மாவட்ட சுகாதார அலுவலர்(விருதுநகர்) மரு.யசோதாமணி, வட்டார மருத்துவ அலுவலர் மரு.ஆரோக்கிய ரூபன்ராஜ், அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Nov 08, 2025

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை வழங்கும் பொருட்டு முகாம்கள் நடைபெற உள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில், மாற்றுத்திறனாளிகளின் நலன் வேண்டி மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம்கள் நடைபெறவுள்ளது.அதன்படி, விருதுநகர் அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், ஒவ்வொருவாரம் புதன்கிழமையும், அருப்புக்கோட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமையும், திருவில்லிபுத்தூர், அரசுமருத்துவமனையில் மாதந்தோறும் இரண்டாவது செவ்வாய்கிழமையும், இராஜபாளையம், அரசுமருத்துவமனையில் மாதந்தோறும் மூன்றாவது வியாழக்கிழமையும், சிவகாசி அரசு மருத்துவமனையில் மாதந்தோறும் நான்காவது வெள்ளிக்கிழமையும் முகாம்கள் நடைபெறும்.மேற்காணும் முகாம்கள் நடைபெறும் நாட்களில்  மாற்றுத்திறனாளிகளின் வகைகளான கை,கால் இயக்கக் குறைபாடு,  தொழுநோயிலிருந்து குணமடைந்தோர், மூளை முடக்குவாத பாதிப்பு, குள்ளத் தன்மை, தசைசிதைவு நோய்,  அமிலவீச்சினால் பாதிக்கப்பட்டோர், கண் பார்வையின்மை, குறைந்த பார்வையின்மை, காதுகேளாமை, பேச்சு மற்றும் மொழித்திறன் குறைபாடு, அரிவாளது இரத்தக்சோகை, இரத்த அழிவுச்சோகை, இரத்த உறையாமை (அல்லது) இரத்த ஒழுகுகுறைபாடு, அறிவுசார் குறைபாடு, குறிப்பிட்ட கற்றலில் குறைபாடு, புற உலகு சிந்தனையற்றோர், மனநோய், நாள்பட்ட நரம்பியல் பாதிப்பு, பல்வகைகுறைபாடு, நடுக்குவாதம், பல்வகை குறைபாடு உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்டமாற்றுத்திறன் உடையவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (Unique Disability Identity Card) பெறுவதற்கு ஆதார் அட்டைநகல், குடும்ப அட்டைநகல் மற்றும் பாஸ்போட் சைஸ் போட்டோ-4, ஆகியவற்றை கொண்டு வந்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது.மேலும் இது தொடர்பாக விபரம் ஏதேனும் இருப்பின் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விருதுநகர் என்ற முகவரியில் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Nov 08, 2025

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு 14.11.2025 அன்று ”குழந்தைகளுக்கான நடை (Walk for Children)” மற்றும் என் நாள் - என் உரிமை (My Day, My Rights)“என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெறவுள்ளது.

மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் நலனை கருத்தில்கொண்டு “ தேசிய குழந்தைகள் தினம் நவம்பர் 14“-யினை முன்னிட்டு 14.11.2025 அன்று காலை 10.00 மணியளவில் விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தேசபந்து மைதானத்திலிருந்து ”குழந்தைகளுக்கான நடை (Walk for Children)” - ”என் நாள் - என் உரிமை (My Day, My Rights)“ என்ற தலைப்பில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் கையெழுத்து பிரச்சாரம், விழிப்புணர்வு பேரணி மற்றும் தெருக்கூத்து உள்ளிட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இப்பேரணியின்போது குழந்தைத் திருமணம், பாலியல் வன்கொடுமை, குழந்தைத் தொழிலாளர் முறை ஒழித்தல், கல்வியின் அவசியம் மற்றும் குழந்தைகள் நலன் சார்ந்த சட்டங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து தெருக்கூத்து கலைக்குழுவினர் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.குழந்தைகள் நலன் சார்ந்த பணிகளில் தொடர்புடைய அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பத்திரிக்கையாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 18 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் மட்டுமே இவ்விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொள்ளலாம்.  இப்பேரணியில் கலந்து கொள்பவர்கள் நீலநிற (Blue) உடை அணிந்து பங்கேற்றவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S,. அவர்கள் தெரிவித்துள்ளார்.

Nov 07, 2025

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம்- 2026

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதி கோபாலபுரம் கிராமத்தில் (06.11.2025) வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம்- 2026 கீழ் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு பணிகள் மேற்கொண்டு வருவதையும், வாக்காளர் படிவம் வழங்கப்பட்டு வருவதையும் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா. I A S, அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Nov 05, 2025

இராஜபாளையம் மற்றும் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு.

இராஜபாளையம் மற்றும் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா. I A S,. அவர்கள் செய்தியாளர் பயணத்தின் போது ஆய்வு மேற்கொண்டார்.விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் மற்றும் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா.இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர் பயணத்தின் போது, நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அரசுஅதன்படி, இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம். மேலராஜகுலராமன் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.10.00 இலட்சம் மதிப்பில் நர்சரி பூங்கா அமைக்கப்பட்டு மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Nov 04, 2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சிமன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S.,அவர்கள் தலைமையில்  (03.11.2025) நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்பஅட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.இக்கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மூன்றுச்சக்கர வண்டிகள் வேண்டி மனு அளித்த 5-மாற்றுத்திறனாளிகளின் மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, 5-நபர்களுக்கு தலா ரூ.11,500/- வீதம்  மொத்தம் ரூ.57,500/- மதிப்பில் மூன்றுச்சக்கர வண்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.மேலும், விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டம் சங்கரபாண்டியபுரம் கிராமத்தில் கிராம உதவியாளராக பணிபுரிந்து பணியிடை மரணமடைந்த திரு.சுப்புராஜ் என்பவரின் வாரிசுதாரரான அன்னாரது மனைவி திருமதி மல்லிகா என்பவருக்கு கிராம உதவியாளர் பணியிடத்திற்கான ஆணையினையும்,சாத்தூர் வட்டம், கஞ்சம்பட்டி கிராமத்தில் கிராம உதவியாளராக பணிபுரிந்து பணியிடை மரணமடைந்த திரு.ச.கருத்தபாண்டியன் என்பவரின் வாரிசுதாரரான அன்னாரது மகன் திரு.க.சங்கர் கணேஷ் என்பவருக்கு கருணை அடிப்படையில் கிராம உதவியாளர் பணியிடத்திற்கான ஆணையினையும், திருச்சுழி வட்டம், முத்துனேந்தல் கிராமத்தில் கிராம உதவியாளராக பணிபுரிந்து பணியிடை மரணமடைந்த திரு.சோ.செல்லம் என்பவரது வாரிசுதாரரான அன்னாரது மகள் திருமதி சத்தியவாணிமுத்து என்பவருக்கு கருணை அடிப்படையில் கிராம உதவியாளர் பணியிடத்திற்கான ஆணையினையும், காரியாபட்டி வட்டம் சிறுவேப்பங்குளம் கிராமத்தில் கிராம உதவியாளராக பணிபுரிந்து பணியிடை காலமான திரு.வே.பரமன் என்பவரின் வாரிசுதாரரான அன்னாரது மகள் திருமதி சமுத்திரசெல்வி என்பவருக்கு கருணை அடிப்படையில் கிராம உதவியாளர் பணியிடத்திற்கான ஆணையினையும்,என கிராம உதவியாளராக பணிபுரிந்து பணியிடை காலமான 4 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.           

Nov 01, 2025

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ)ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ஒப்பனை, அழகுக்கலை மற்றும் பச்சை குத்துதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.

  தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ)  சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது தாட்கோ, தலை சிறந்த தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, ஒப்பனை, அழகுக்கலை மற்றும் பச்சை குத்துதல் போன்ற (Tattoo Making Course, Aesthetic Training Course and Semi Permanent Makeup Courses)  பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.    இப்பயிற்சியினை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கு எட்டாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை படித்தவராக இருக்க வேண்டும். 18 முதல் 35 வயதிற்குள்ளும்  குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3.00  லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கான கால அளவு 90 நாட்கள். மேலும்  திருச்சி மாவட்டத்தில் தங்கி படிப்பதாற்கான செலவினத் தொகை தாட்கோவால் வழங்கப்படும். இப்பயிற்சி முடித்தவுடன் தகுதியான நபர்களை பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக தேர்வு செய்து அந்நிறுவனத்தின் சார்பாக ஆரம்ப கால மாத  ஊதியமாக ரூ.15,000/- முதல் ரூ.25,000/-  வரை  வருவாய் ஈட்ட வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளம் (www.tahdco.com)  என்ற முகவரியில் பதிவு செய்ய  வேண்டும். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள்  பதிவு செய்து இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

1 2 ... 63 64 65 66 67 68 69 ... 140 141

AD's



More News