தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நடைபெற்ற அரசு விழாவில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் 2025-2026ன் கீழ், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ ,மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் பணிகளைத் தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, தேவாங்கர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் (14.11.2025) பள்ளிக்கல்வித்துறை / பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் 2025-2026ன் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில் 11-ஆம் வகுப்பு பயிலும் 419 பள்ளி மாணவ / மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகரிலே பள்ளி மாணவ , மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழாவினை தொடக்கி வைத்தார். அதனடிப்படையில், இன்று அருப்புக்கோட்டை பள்ளி மாணவ / மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளன. நம்முடைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒரு அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்குடன் பள்ளிக்கல்வித்துறைக்கு பல்வேறு வகையான திட்டங்களை வகுத்து வருகிறார்.இன்றைய காலகட்டத்தில் ஒரு போட்டியான உலகம் அமைந்துள்ளது. இன்றைய சமூகத்தில் அனைவரும் கல்வி கற்றவர்களாக உள்ளனர். அவர்களின் திறமைக்கேற்றவாறு வேலைக்கு செல்கின்றனர். நமது அரசாங்கம் செயல்படுத்தியுள்ள நான் முதல்வன் திட்டம் போன்ற திட்டங்களை மாணவச் செல்வங்களாகிய நீங்கள் பயன்படுத்தி தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.மாணவச் செல்வங்களாகிய நீங்கள் தங்கள் குடும்பக் கஷ்டங்களை போக்கி ஒரு வசதியான தலைமுறையாக வாழ வேண்டும் என்று தெரிவித்தார்.நம்முடைய தமிழ்நாடு துணைமுதலமைச்சர் அவர்கள் சிவகங்கை மாவட்டத்தில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்வினை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, இன்றைய தினம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 166 – பள்ளிகளைச் சேர்ந்த 18,585 பள்ளி மாணவ / மாணவியர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளன.இதில், இன்றைய தினம் மட்டும் அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் 415 பள்ளி மாணவ / மாணவியர்களுக்கும், எம்.ரெட்டியப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் 144 பள்ளி மாணவ / மாணவியர்களுக்கும் என மொத்தம் 559 மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளன.விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை நராட்சியில் மாணவர்களுக் கு 1050 மிதிவண்டிகளும், மாணவிகளுக்கு 1283 மதிவண்டிகளும் ஆக மொத்தம் 2333 எனவும், காரியாபட்டியில் மாணவர்களுக்கு 463 மதிவண்டிகளும், மாணவிகளுக்கு 666 மதிவண்டிகளும் ஆக மொத்தம் 1129 எனவும், நரிக்குடியில் மாணவர்களுக்கு 285, மிதிவண்டிகளும் , மாணவிகளுக்கு 262 மிதிவண்டிகளும் ஆக மொத்தம் 547 எனவும், இராஜபாளையம் நகராட்சியில் மாணவர்களுக்கு 1492 மிதிவண்டிகளும், மாணவிகளுக்கு 1992 மிதிவண்டிகளும் ஆக மொத்தம் 3484 எனவும், சாத்தூரில் மாணவர்களுக்கு 504 மிதிவண்டிகளும், மாணவிகளுக்கு 676 மிதிவண்டிகளும் ஆக மொத்தம் 1180 எனவும், சிவகாசி நகராட்சியில் மாணவர்களுக்கு 1107 மிதிவண்டிகளும், மாணவிகளுக்கு 1766 மிதிவண்டிகளும் ஆக மொத்தம் 2873 எனவும், திருவில்லிபுத்தூர் ஊராட்சியில் மாணவர்களுக்கு 932 மிதிவண்டிகளும், மாணவிகளுக்கு மிதிவண்டிகளும் 1003 ஆக மொத்தம் 1935 எனவும், திருச்சுழியில் மாணவர்களுக்கு 411 மிதிவண்டிகளும், மாணவிகளுக்கு 471 மிதிவண்டிகளும் ஆக மொத்தம் 882 எனவும், வெம்பக்கோட்டையில் மாணவர்களுக்கு 329, மாணவிகளுக்கு 413, ஆக மொத்தம் 742 ஆக மொத்தம் எனவும், விருதுநகரில் மாணவர்களுக்கு 1072 மிதிவண்டிகளும் , மாணவிகளுக்கு 1315 மிதிவண்டிகளும் ஆக மொத்தம் 2387 எனவும் , வத்திராயிருப்பு ஊராட்சியில் மாணவர்களுக்கு 515 மிதிவண்டிகளும் , மாணவிகளுக்கு 578 மிதிவண்டிகளும் ஆக மொத்தம் 1093 எனவும், என ஆக மொத்தம் 18585 மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளன.தொடர்ந்து, மாவட்ட நிர்வாகத்தின் சார்பாகவும், மாணவ / மாணவியர்களின் சார்பாகவும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.இந்நிகழ்ச்சியில், அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் திரு.மாரிமுத்து, அருப்புக்கோட்டை நகர்மன்றத்தலைவர் திருமதி சுந்தர்லட்சுமி சிவப்பிரகாசம், அரசு அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் தேசபந்து மைதானத்தில் (14.11.2025) தேசிய குழந்தைகள் தினம் நவம்பர் 14“-யினை முன்னிட்டு, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை சார்பில், “குழந்தைகளுக்கான நடை (Walk for Children)” – “என் நாள் - என் உரிமை (My Day, My Rights)” என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் துவக்கி வைத்தார்.மாவட்டத்தில் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இன்று 14.11.2025 குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, “குழந்தைகளுக்கான நடை (Walk for Children)” – “என் நாள் - என் உரிமை (My Day, My Rights)” என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகளான குழந்தைத் திருமணம், இளம்வயது கர்ப்பம், பாலியல் வன்முறை, பள்ளி இடைநிற்றல், போதைப்பொருள் பயன்பாடு, குழந்தைத் தொழிலாளர், சமூக ஊடகங்கள் தாக்கம், பாலின வேறுபாடு மற்றும் வேறு எந்தவிதமான குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகளை கண்டறிந்தால் உடனடியாக குழந்தைகளை பாதுகாக்கும் செயலில் ஈடுபட வேண்டும். சாதி மன இன வேறுபாடுடின்றி அனைத்து குழந்தைகளையும் சமமாக நடத்த வேண்டும். பாலின தேர்வு நிலையற்ற குழந்தைகளுக்கான பாதுகாப்பு சூழலை அனைத்து நிலையிலும் உறுதிபடுத்த வேண்டும். மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கும், மனவளர்ச்சி குன்றிய, ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கும் அவர்களது அணுகல்களை உறுதி செய்து பாதுகாப்பு மற்றும் பராமரிப்பினை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.குழந்தைகள் தொடர்பாக பிரச்சனைகள் கவனத்திற்கு வரும் பட்சத்தில் உடனடியாக 1098, 181 மற்றும் அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும். நம் எதிர்காலத்தில் முதலீடு செய்வது என்பது நம் குழந்தைகளுக்காக முதலீடு செய்வதாகும் என்பதை உணர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசுடன் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும். பாதுகாப்பான குழந்தைப்பருவத்திற்காக தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து விதமான குழந்தைநேய செயல்பாடுகளில் அனைவரும் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார். இந்த பேரணியில் அரசு அலுவலர்கள், தன்னார்வு தொண்டு நிறுவனங்கள், பள்ளி மாணவர்கள் உட்பட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டு, குழந்தைத் திருமணம், பாலியல் வன்கொடுமை, குழந்தைத் தொழிலாளர் முறை ஒழித்தல், கல்வியின் அவசியம் மற்றும் குழந்தைகள் நலன் சார்ந்த சட்டங்கள் மற்றும் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பதாதைகளை ஏந்தியபடி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.முன்னதாக, குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.மேலும், இப்பேரணியில் 1098 - குழந்தைகளுக்கு சிறப்பு இலவச உதவி எண் தொடர்பான துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமதி மீனாட்சி, மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் - மதுரை சாலையில் அமைந்துள்ள கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பொருட்காட்சி மைதானத்தில் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து, "அறிவும் வளமும்"- என்ற பொருண்மையின் கீழ், நடைபெறவுள்ள விருதுநகர் நான்காவது புத்தக திருவிழா- 2025-யினை (14.11.2025 முதல் 24.11.2025 வரை) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில், இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் திரு.கே.நவாஸ்கனி அவர்கள், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.அசோகன் அவர்கள், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள், சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன்,த.கா.ப., மற்றும் துணை இயக்குனர் (திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்) மரு.இரா.முருகன்,இ.வ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.பின்னர், சுற்றுச்சூழல் காக்க பொறுப்பு ஏற்கிறேன் என்று உறுதியளிக்கிறேன் என்ற காலநிலை மாற்றத் தணிப்பிற்கான கையெழுத்து இயக்கத்தினை கையெழுத்திட்டு தொடங்கி வைத்தனர்.ஒரு புத்தகம் ஒரு வடிவாக இருப்பது போல, குழப்பம் இல்லாமல் சரியாக எந்தெந்த இடங்களில் எது இருக்க வேண்டும் என்று சொல்லி மிக சிறப்பாக ஒழுங்குப்படுத்தி இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ள நம்முடைய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை நான் பாராட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.மிகச் சிறப்பாக இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். நம்முடைய பகுதி மக்கள் பெரியவர்கள், தாய்மார்கள், பள்ளியிலே படிக்கிறவர்கள், கல்லூரியிலே படிக்கிறவர்கள் இந்த புத்தகங்களை வாங்கி படித்து அறிவாற்றலை பெறவேண்டும் என்று எண்ணத்தோடு தான் நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை மாவட்டந்தோறும் நடத்த அனுமதி வழங்கியுள்ளார். பொதுவாக புத்தகங்களை படிக்கிற நேரத்தில் மனிதனுக்கு இயற்கையாக அறிவு சிந்தனை வளரும். தனக்குள் எழும் கேள்விக்கு உரிய பதிலும் அந்த புத்தகத்திலேயே ஒருவருக்கு கிடைக்கும். ஆக புத்தகம் படிப்பதன் வாயிலாக அறிவுத்திறன் மட்டுமல்ல, உலகம் எப்படி இருந்தது, நமக்கு முன்னாலே இருந்த உலகம் எப்படி இருந்தது, அரசர் காலத்திலே எப்படி இருந்தார்கள், அதற்கு முன்னாலே நம்முடைய முன்னோர்கள் எப்படி இருந்தார்கள்? ஆங்கிலேயர் காலத்திலே நம்முடைய நாடு எப்படி இருந்தது. தற்பொழுது எவ்வாறு உள்ளது, எதிர்காலத்தில் நம்முடைய நாடு எவ்வாறு இருக்க வேண்டும் போன்றவற்றையெல்லாம் எடுத்துரைக்கின்ற ஒரு கண்காட்சியாக இந்த புத்தகக் கண்காட்சி அமைய உள்ளது. எனவே அத்தகைய புத்தக கண்காட்சிகளை நாம் சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மண்ணுக்கும் ஒரு சிறப்பு இருப்பதைப் போல நம்முடைய விருதுநகர் மண்ணுக்கு இருக்க கூடிய சிறப்பு இந்த மண்தான். கரிசல் பூமியை கொண்டிருக்கக்கூடிய ஒரு மாவட்டம். இந்த மண் தான் கரிசல் பூமியிலிருந்து வந்திருக்கக்கூடிய இலக்கியத்தை எடுத்துச் சொல்லி இருக்கக் கூடிய மாவட்டம். இந்த மாவட்டத்திலிருந்து உருவாகி இருக்கக்கூடிய இலக்கியவாதிகள் இன்றைக்கு சாகித்ய அகாடமி விருது பெற்று திகழ்பவர்களாக விளங்கும் மாவட்டம் நம்முடைய விருதுநகர் மாவட்டம்.கரிசல் இலக்கியம் என்று ஒரு இலக்கிய மரபை தோற்றுவிக்க கூடிய மாவட்டத்திற்கு சொந்தக்காரர்கள் நாம் என்பதிலே நமக்கு மிகப்பெரிய பெருமை இருக்கிறது. எனவே, வழி வழியாக வந்திருக்கிறோம். இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால் பெண்கள் படிக்க முடியுமா என்று கேள்வி நிலவிய ஒரு காலத்தில் இதே விருதுநகர் மாவட்டத்தினுடைய திருவில்லிபுத்தூர் தான் ஆண்டாள் என்கின்ற ஒரு அற்புதமான ஒரு தமிழ் கவிஞர் உருவாகி அந்த அம்மையார் பாடிய பாடல்கள் திருப்பாவை என்று சொன்னால் பெண் கல்விக்கு வித்திட்டு இருக்கக்கூடிய மாவட்டமாக இன்றைக்கு அல்ல ஏறத்தாழ 1300 வருடங்களுக்கு முன்பாக நம்முடைய விருதுநகர் மாவட்டம் இருந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஒரே நோக்கம் படிப்பு மட்டும் தான். காரணம், படித்தால் மட்டுமே ஒரு அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க முடியும். அறிவார்ந்த சமுதாயம் அமைந்தால் மட்டுமே சமுதாயம் தன்னிச்சையாக வளரும் என்ற நோக்கத்துடன் இத்தகைய புத்தகத்திருவிழாவினை மாநிலம் முழுவதும் நடத்த ஆணையிடப்பட்டுள்ளது.இப்புத்தகத்திருவிழாவில், புத்தக அரங்குகள் மட்டுமல்லாமல், வெம்பக்கோட்டை அகழ்வாராய்ச்சி அரங்கமும், தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்க அறிவரங்கமும், வனத்துறையின் பெருமைகள் மற்றும் திடக்கழிவு மேலாண்மைகள் குறித்து விளக்க பசுமை அரங்கமும், ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுடன் இணைந்து மூன்று வகையான நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.எனவே, “அறிவும் , வளமும்” என்ற தலைப்பில் நடத்தப்படவுள்ள இந்த புத்தகத் திருவிழாவினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி வளமடையுமாறு கேட்டுக் கொண்டார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, திட்ட இயக்குநர், (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.வீ.கேசவதாசன், சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான், இ.ஆ.ப., சீர்மரபினர் வாரியத் துணைத்தலைவர் திரு.இராசா அருண்மொழி, விருநகர் நகர் மன்றத்தலைவர் ஆர்.மாதவன் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நடைபெற்ற அரசு விழாவில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் 2025-2026ன் கீழ், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ ,மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் பணிகளைத் தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, விருதுநகர் மாவட்டம், ம.ரெட்டியபட்டி, அரசு மேல்நிலைப்பள்ளியில், (14.11.2025) பள்ளிக்கல்வித்துறை / பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் 2025-2026ன் கீழ், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி அவர்கள் தலைமையில் 11-ஆம் வகுப்பு பயிலும் 144 பள்ளி மாணவ ,மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் வழங்கினார். நம்முடைய துணை முதலமைச்சர் அவர்கள் இன்றைக்கு சிவகங்கை மாவட்டத்தில் இந்த விழாவினை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த ம.ரெட்டியபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்த விழாவினைத் துவக்கி வைப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.நம்முடைய தமிழ்நாடு அரசு குறிப்பாக நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கக்கூடிய இந்த நான்கரை ஆண்டு காலத்தில் தமிழ்நாட்டினுடைய பல்வேறு துறைகளில் மிக குறிப்பிடத்தக்க ஒரு முன்னேற்றம் அடைந்தாலும், பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்துள்ள துறை என்றால் பள்ளிக்கல்வித்துறையே ஆகும்.பள்ளிகளிலே படிக்கக்கூடிய மாணவர்களுக்கு தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், உயர்கல்வியைத்தொடர விரும்பும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் என்ற திட்டத்தின் மூலமும், மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் மூலமும் மாதந்தோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.மேலும், மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டம் மற்றும் குறித்த நேரத்தில் பள்ளிக்குச் செல்ல பஸ் பாஸ் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறுத் திட்டங்கள் பள்ளிக்கல்வித்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.தமிழ்நாடு அரசால் வகுக்கப்பட்டுள்ள இத்தகைய திட்டங்களையெல்லாம் மாணவச் செல்வங்களாகிய நீங்கள் பயன்படுத்தி வளமார்ந்த சமுதாயத்தை உருவாக்க பாடுபட வேண்டும் எனத்தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் திரு.த.ஜான்சன் தேவசகாயம், அரசு அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் காவல் சார்பு ஆய்வாளர்கள் (SI) (தாலுகா மற்றும் ஆயுதப்படை) - 1299 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கை 01.04.2025 அன்று வெளியிடப்பட்டு, இதற்கான முதன்மை எழுத்துத் தேர்வு மற்றும் தமிழ் தகுதித் தேர்வு 21.12.2025 அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் விருதுநகர் மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் பொருட்டு, இதற்கான குறுகிய கால (Crash Course) பயிற்சி வகுப்புகள் 17.11.2025 (திங்கள் கிழமை) முதல் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவிருக்கிறது. இவ்வகுப்புகள் திறன் வாய்ந்த பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்படவுள்ளது. மேலும், வாராந்திர இலவச மாதிரித் தேர்வுகளும், தேர்வுக்கு தேவையான பாடக்குறிப்புகள் வழங்கப்படும். இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உடையவர்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாக தெரிவிக்கலாம். மேலும், விவரங்களை studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். எனவே, TNUSRB - SI தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
.விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (13.11.2025) மாவட்டத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளின் வாயிலாக, கல்லூரி மாணவ , மாணவியர்களுக்கு சிறப்பு கல்விக்கடன் வழங்கும் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,, I A S., அவர்களின் தலைமையில் நடைபெற்றது.இச்சிறப்பு முகாமில், 200 தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கி கிளைகளின் மாவட்ட அளவிலான வங்கி பிரதிநிதிகள் கலந்து கொண்டு, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கல்விக்கடன் சம்மந்தமாக எழும் சந்தேகங்களை நிவர்த்தி செய்தனர். மேலும், கல்விக்கடன் வேண்டி பெறப்பட்ட விண்ணப்பங்கள் வங்கிகளின் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டு , அவ்விண்ணப்பங்கள் வங்கிக் கிளைகளில் பரிசீலனை செய்யப்பட உள்ளன.அவ்வாறு, பரிசீலனை செய்யப்படும் விண்ணப்பங்களில், தகுதியான மாணவர்களுக்கு 20 – நாட்களுக்குள்ளாக கல்விக் கடன் வழங்கப்படும் என மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சு. பாண்டிச்செல்வன் அவர்கள் தெரிவித்துள்ளார். நடப்பு நிதி ஆண்டிற்கு கல்விக்கடன் இலக்காக ரூபாய் 38.11 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வங்கிகள் செப்டம்பர்-2025 வரை 576 மாணவர்களுக்கு ரூபாய் 27.61 கோடி கல்விக் கடனை வழங்கியுள்ளது குறிப்பிடத்தகுந்தது.அதனைத்தொடர்ந்து, இம்முகாமின் சிறப்பு நேர்வாக, 152 மாணவர்களுக்கு ரூபாய்.8.76 கோடி கல்விக்கடன் ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இம்முகாமில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.சு.பாண்டிச்செல்வன் அனைத்து வங்கிகளின் மாவட்ட பிரதிநிதிகள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே புத்தக வாசிப்பினை ஊக்குவிக்கும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு ஆண்டும் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.அதனடிப்படையில், இந்த ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் “அறிவும் வளமும்” என்ற தலைப்பின் கீழ் புத்தக கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதற்காக பிரத்யேகமாக தொல்லியல் துறை அரங்கு, அறிவரங்கம், பசுமை அரங்கு, புத்தக நன்கொடை அரங்கு உள்ளிட்ட பல்வேறு வகையான அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக மாணவர்களுக்கு நெகிழி பயன்பாட்டின் பாதிப்பு குறித்தும், திடக்கழிவு மேலாண்மை மற்றும் மறுசுழற்சி குறித்தும் எடுத்துக்கூறும் வகையில் விருதுநகரில் உள்ள ஆர்.ஜே.குப்பை வங்கி(RJ Garbarage Bank) மூலம் அரங்கம் அமைக்கப்படவுள்ளது. இந்த அரங்கில் மாணவர்கள் தங்களிடம் உள்ள தேவையற்ற காகிதம், நெகிழி முதலிய திடக்கழிவு பொருட்களை கொண்டு வந்து, அதனை மக்கும், மக்காத பொருட்கள் என பிரித்து, எவ்வாறு மறுசுழற்சி செய்யலாம் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்படுவதோடு, திடக்கழிவுகளை கொண்டு வரும் மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.மேலும் இக்கண்காட்சியில் அமைக்கப்படவுள்ள அறிவு அரங்கத்தில் வேலை வாய்ப்பு, உயர் கல்வி, சிறப்புத் திட்டங்கள், தொழில் முனைவு வழிகாட்டி, அறிவியல் அறிவோம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மாணவர்களுக்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட உள்ளன. இக்கண்காட்சி காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறும். இந்த புத்தகத் திருவிழாவில் தினந்தோறும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி போன்ற பல்வேறு வகையான போட்டிகளும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள், நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள், தலை சிறந்த ஆளுமைகளின் சிறப்புரைகள், பட்டிமன்றம், இலக்கிய அரங்கு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள், புத்தக வாசிப்பை விரும்பும் அனைவரும் பயன்பெறும் வகையில், இந்தப் புத்தகத் திருவிழா சிறப்புடன் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை அனைவரும் கண்டுகளித்து, புத்தகத் திருவிழாவில் இடம்பெறும் பதிப்பகங்களின் மதிப்புமிகு புத்தகங்களை வாங்கி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
.வேளாண் பயிர்களுக்கு பயிர் காப்பீடு கட்டணம் ஏக்கருக்கு பாசி பயருக்கு ரூ.251/- ஆகவும், உளுந்து, துவரை பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.252/- ஆகவும், சம்பா-நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.491/- ஆகவும், மக்காச்சோளம் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.319/- ஆகவும், சோளம் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.136/- ஆகவும், கம்பு பயிருக்கு ஏக்கருக்கு ரூ.160/- ஆகவும், பருத்தி பயிருக்கு ஏக்கருக்கு ரூ.473/- ஆகவும், நிலக்கடலை பயிருக்கு ஏக்கருக்கு ரூ.314 ஆகவும், எள் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.122/- ஆகவும் மற்றும் சூரியகாந்தி பயிருக்கு ஏக்கருக்கு ரூ.188/- ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தோட்டக்கலை பயிர்களுக்கு பயிர் காப்பீடு கட்டணம் ஏக்கருக்கு கொத்தமல்லி பயிருக்கு ரூ.583/- எனவும், மிளகாய் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.1109/- எனவும், வெங்காயம் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.1573/- எனவும், வாழைபயிருக்கு ஏக்கருக்கு ரூ.4426/- எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் 2025-26 ம் ஆண்டின் நடப்பு ராபி பருவத்தில் பயிர் காப்பீடு பதிவு செய்ய உளுந்து மற்றும் பாசிப்பயறு வகைகளுக்கு கடைசி நாள் 15.11.2025 ஆகவும், மக்காச்சோளம், கம்பு, துவரை மற்றும் பருத்தி பயிர்களுக்கு 30.11.2025 ஆகவும், சம்பா-நெல் மற்றும் சோளம் பயிருக்கு 16.12.2025 ஆகவும், நிலக்கடலை மற்றும் சூரியகாந்தி பயிர்களுக்கு 30.12.2025 ஆகவும், மற்றும் எள் பயிருக்கு 31.01.2026 வரையிலும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தோட்டக்கலை பயிர்களுக்கு பயிர் காப்பீடு பதிவு செய்ய கடைசி நாள் கொத்தமல்லி பயிருக்கு 17.01.2026 ஆகவும், மிளகாய் வெங்காயம் பயிர்களுக்கு 31.01.2026 ஆகவும், மற்றும் வாழைபயிர்களுக்கு 28.02.2026 வரையிலும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல்/விதைப்பு அறிக்கை, வங்கிக் கணக்கு புத்தகத்தின் (Bank Pass Book) முதல் பக்க நகல், ஆதார் அட்டை (Aadhar Card) நகல் ஆகியவற்றை இணைத்து, வங்கிகள், தொடக்கவேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் பொது சேவை மையத்தில் கட்டணத் தொகையை செலுத்திய பின் அதற்கான இரசீதையும் பெற்றுக் கொள்ளலாம். எனவே, விவசாயிகள் எதிர்பாராமல் ஏற்படும் இயற்கை பேரிடர்களையும், பூச்சிநோய் தாக்குதலால் ஏற்படும் இழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளையும் கருத்தில் கொண்டு தங்களது பயிர்களுக்கான காப்பீடை (Crop Insurance) கடைசி நேர தாமதத்தினை தவிர்த்து தங்களது பயிர்களை காப்பீடு செய்து பயன் அடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், மதுரை வீட்டு வசதி பிரிவிற்குட்பட்ட விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே சாட்சியாபுரத்தில் அமைந்துள்ள சிதிலமடைந்த 72 அரசு அலுவலர் வாடகை குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்து வசிக்க தகுதியற்ற நிலையில் உள்ளன. ஆபத்தான இந்த குடியிருப்புகளை இடித்து அப்புறப்படுத்த தற்போது அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே சாட்சியாபுரத்தில் அமைந்துள்ள சிதிலமடைந்த 72 அரசு அலுவலர் வாடகை குடியிருப்பு கட்டிடங்கள் பழுதடைந்து குடியிருக்கத்தக்க இயலாத நிலையில் உள்ளதால் இடித்து இக்கட்டிடங்கள் அப்புறப்படுத்தப்பட உள்ளன. இப்பணிக்கு அரசு துறை கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்திய அனுபவம் வாய்ந்தவர்கள் 06.11.2025 முதல் https://tntenders.gov.in/ என்ற இணையதள முகவரியில் ஏல விபரங்களை பார்த்து மேற்படி ஏலத்தில் கலந்து கொள்ளுமாறு மதுரை வீட்டு வசதி பிரிவு, செயற்பொறியாளர் (ம) நிர்வாக அதிகாரி அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் நகராட்சி மற்றும் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் சாலைப் பராமரிப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, IAS., அவர்கள் (12.11.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.அதன்படி சாத்தூர் நகராட்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நகராட்சி சாலைகளை நேரில் சென்று பார்வையிட்டு, பழுதாகியுள்ள சாலையின் (Potholes and Patch Work) பணியினை விரைந்து துவங்கி, முடித்திட தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.பின்னர்வெம்பக்கோட்டைஊராட்சிஒன்றியத்தில்,கீழகோதைநாச்சியார்புரத்தில்சாத்தூர்,திருவேங்கடபுரம்ஊரகசாலையினையும்,வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், தாயில்பட்டி - பேரநாயக்கன்பட்டி ஊரக சாலையினையும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பழுதாகியுள்ள சாலையின் (Potholes and Patch Work) பணிகளை விரைந்து துவங்கி, முடித்திட தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர், எட்டநாயக்கன்பட்டி கிராமத்தில் கனிமவள நிதியின் கீழ் ரூ.34 இலட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற புதிய அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.1.85 லட்சம் மதிப்பில் சுப்பிரமணியபுரம் - தாயில்பட்டி சாலையில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருவதையும்,தாயில்பட்டியில் 15ஆவது மானியக்குழு நிதியின் கீழ் ரூ.41.35 லட்சம் மதிப்பில் ஆரம்ப சுகாதார மையம் கட்டப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, நகராட்சி ஆணையர், உதவி பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் இருந்தனர்.