25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Jun 04, 2026

அங்கன்வாடி தொடக்க நாளிலேயே நலத்திட்டங்கள் முழுமையாகக் கிடைப்பதை உறுதி செய்ய அதிகாரிகள் நேரடிக் கண்காணிப்பு.

விருதுநகர் மாவட்டத்தில் 2026–2027ஆம் கல்வியாண்டு தொடங்குவதை முன்னிட்டு, அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு விலையில்லா கல்வி உபகரணங்கள், சீருடைகள் மற்றும் நலத்திட்டப் பொருட்கள் வழங்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.அதனைத் தொடர்ந்து, நாளை (04.06.2026) மாவட்டம் முழுவதும் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் திறக்கப்படவுள்ள நிலையில், 1,504 அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகள் மற்றும் முன்பருவக் குழந்தைகளுக்கு வழங்கப்படவுள்ள விலையில்லா சீருடைகள், மற்றும் முன்பருவக் கல்வி உபகரணங்களின் இருப்பு நிலையை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள்  (03.06.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.1,504 அங்கன்வாடி மையங்களில் சீருடைகள் மற்றும் முன்பருவக் கல்வி உபகரணங்கள் விநியோகம்:விருதுநகர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் (ICDS) கீழ் 1,427 முதன்மை அங்கன்வாடி மையங்களும், 77 குறு அங்கன்வாடி மையங்களும் என மொத்தம் 1,504 அங்கன்வாடி மையங்கள் மிகச்சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.விலையில்லா சீருடைகள்:மே-2026 கோடை விடுமுறை முடிந்து இம்மையங்களில் சேர்ந்து பயிலும் 2-3 வயது, 3-4 வயது மற்றும் 4-5 வயதுடைய அனைத்துக் குழந்தைகளுக்கும் ஒரு குழந்தைக்கு 2 செட் (2 Set) வீதம் புத்தம் புதிய சீருடைகள் வழங்கப்பட்டு வருகின்றன.கல்வி உபகரணங்கள் மற்றும் கற்றல் கையேடுகள்:குழந்தைகள் அதிக அளவில் அங்கன்வாடிகளில் சேர்ந்து பயில்வதை ஊக்குவிக்கும் நோக்கில், அனைத்து 1,504 மையங்களுக்கும் (1,427 முதன்மை அங்கன்வாடி மையங்கள் மற்றும் 77 குறு அங்கன்வாடி மையங்கள்) முன்பருவக்கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், குழந்தைகளின் செயல்திறன் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதற்காக, *வயது வாரியான செயல்பாட்டுப் புத்தகங்கள், விவரத்தொகுப்பு (Portfolio), ஆய்வு அட்டைகள் மற்றும் முன்பருவக்கல்வி நிறைவுச் சான்றிதழ்கள் ஆகியவையும் அனைத்து மையங்களுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளன.அங்கன்வாடி குழந்தைகளுக்குச் சூடான சத்துணவு மற்றும் தினசரி ஊட்டச்சத்து அட்டவணை:அங்கன்வாடி மையங்களில் பயிலும் முன்பருவக் குழந்தைகளுக்குக் காலை மற்றும் மதிய வேளைகளில் சத்துமிக்க உணவுகள் தடையின்றி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது:காலை உணவு:தினசரி காலை வேளையில் குழந்தைகளுக்கு 50 கிராம் அளவிலான கொழுக்கட்டை அல்லது இணை உணவு உருண்டை வழங்கப்படுகிறது.மதிய உணவு:திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் மதியம் சூடான சமைத்த கலவை சாதம்/மதிய உணவு வழங்கப்படுகிறது.வாரம் முழுவதும் கூடுதல் ஊட்டச்சத்து:குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வாரத்தில் 3 நாட்கள் முட்டை, செவ்வாய்க்கிழமைகளில் பாசிப்பயறு, வெள்ளிக்கிழமைகளில் உருளைக்கிழங்கு மற்றும் 1 நாள் கொண்டைக்கடலை (சுண்டல்) ஆகியவை மதிய உணவுடன் சேர்த்துத் துல்லியமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் வட்டார கள அலுவலர்கள் அனைத்து வட்டாரங்களிலும் உள்ள அங்கன்வாடி மையங்களின் செயல்பாடுகளைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருகின்றனர்.எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்களது குழந்தைகளை அருகில் உள்ள அங்கன்வாடி மையங்களில் சேர்த்துப் பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.ஒவ்வொரு குழந்தையும் அரசின் கல்வி மற்றும் ஊட்டச்சத்து நலத்திட்டங்களின் பயனை முழுமையாகப் பெறுவதோடு, புதிய கல்வியாண்டின் முதல் நாளிலிருந்தே எவ்விதக் குறையுமின்றி, சிறந்த கற்றல் சூழலைப் பெறுவதை உறுதி செய்ய விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி வருகிறது.

Jun 04, 2026

வேளாண் துறை சார்பில் "விளைநிலம் காப்போம் இயக்கம்" விழிப்புணர்வு முகாம்.

ஒன்றிய அரசின் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில், *"விளைநிலம் காப்போம் இயக்கம்" (கேத் பச்சாவோ அபியான் - Khet Bachao Abhiyan)* விழிப்புணர்வு முகாம் ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 450 கிராம ஊராட்சிகளிலும் (Gram Panchayats) நடத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் மரு. என்.ஓ. சுகபுத்ரா, I A S, , அவர்கள் தெரிவித்துள்ளார்.இயக்கத்தின் முக்கிய நோக்கங்கள் மற்றும் விழிப்புணர்வு விபரங்கள்:இந்த விழிப்புணர்வு இயக்கத்தின் கீழ், வேளாண் துறை அலுவலர்கள் மற்றும் வேளாண் விஞ்ஞானிகள் மூலம் விவசாயிகளுக்குப் பின்வரும் அத்தியாவசியத் தொழில்நுட்பத் தகவல்களும் ஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளன:மண் ஆரோக்கியம் மற்றும் நுண்ணூட்ட மேலாண்மை:மண்வள அட்டை (Soil Health Card) பரிந்துரைப்படி, தேவைக்கேற்ப நேரடி உரங்கள், உயிர் உரங்கள், நானோ உரங்கள் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களைப் பயன்படுத்துதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.சமச்சீர் உரப் பயன்பாடு:அதிகப்படியான இரசாயன உரப் பயன்பாட்டைத் தவிர்த்து, சமச்சீர் உரமிடுதல் மற்றும் பசுந்தாள் உரப்பயிர்களைப் பயன்படுத்துவது ஊக்குவிக்கப்படும்.இயற்கை விவசாய நன்மைகள்:இயற்கை மற்றும் கரிம உரப் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில், களச் செயல்விளக்கங்கள் (Field Demonstrations) மற்றும் கிராம அளவிலான சிறப்பு நிகழ்ச்சிகள் மூலம் விபரங்கள் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்படும்.நிலையான வேளாண்மை:சாகுபடி செலவினைக் குறைத்தல், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திறனை அதிகரித்தல் மற்றும் நிலையான விவசாய முறைகளைக் கையாளுதல் போன்ற தொழில்நுட்பங்கள் கற்றுத்தரப்படும். ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கம்:பொதுமக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், சமையல் எண்ணெய் பயன்பாட்டினை 10% வரை குறைப்பது உள்ளிட்ட ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்கள் குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.விருதுநகர் மாவட்டத்திலுள்ள அனைத்துக் கிராம ஊராட்சிகளும் இந்த "விளைநிலம் காப்போம் இயக்க" விழிப்புணர்வு முகாமில் பெருந்திரளாகப் பங்கேற்று, தங்களது விளைநிலத்தின் ஆரோக்கியத்தையும், தங்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அவர்கள் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Jun 04, 2026

புதிய கல்வியாண்டு தொடக்கம் 1.56 லட்சம் மாணவர்கள் மற்றும் முன்பருவக் குழந்தைகளுக்கு விலையில்லா கல்வி உபகரணங்கள், சீருடைகள், ஊட்டச்சத்து உணவுகள் தயார்நிலை, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் ஆய்வு.

விருதுநகர் மாவட்டத்தில் 2026–2027ஆம் கல்வியாண்டு தொடங்குவதை முன்னிட்டு, அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு விலையில்லா கல்வி உபகரணங்கள், சீருடைகள் மற்றும் நலத்திட்டப் பொருட்கள் வழங்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.அதனைத் தொடர்ந்து, நாளை (04.06.2026) மாவட்டம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், மாணவர்களுக்கான கல்வி உபகரணங்களின் இருப்பு மற்றும் விநியோகத் தயார்நிலைகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள்  (03.06.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.1,478 பள்ளிகளைச் சேர்ந்த 1.56 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர்விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 990 அரசுப் பள்ளிகள், 454 அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் 34 பகுதி உதவிபெறும் பள்ளிகள் என மொத்தம் 1,478 பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இந்த விலையில்லா கல்வி உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன.இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள 76 ஆயிரத்து 156 மாணவர்களும், 80 ஆயிரத்து 596 மாணவிகளும் என மொத்தமாக ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 752 மாணவ-மாணவிகள் அரசின் இந்த உன்னதமான கல்வி நலத்திட்டங்களால் முழுமையாகப் பயன்பெறவுள்ளனர்.அரசுப் பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா நலத்திட்டப் பொருட்கள்:அரசின் கல்வி நலத்திட்டங்களின் கீழ், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், கணிதப் பயிற்சி நோட்டுகள், கணித வரைபட நோட்டுகள், ஓவியப் பயிற்சி நோட்டுகள், இரு கோடு மற்றும் நான்கு கோடு நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்ட பல்வேறு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன.அதேபோல், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், கிரையான்ஸ் (Crayons), வண்ணப் பென்சில்கள், கணித உபகரணப் பெட்டிகள் (Geometry Boxes), காலணிகள், சாக்ஸ்கள், பள்ளிப் பைகள், சீருடைகள், வரைபடப் புத்தகம் (Atlas) மற்றும் பிற கல்வி உதவிப் பொருட்கள் வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பொருட்கள் அனைத்தும் பள்ளிகளுக்கு உரிய காலத்தில் சென்றடையவும், பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே மாணவர்களுக்கு வழங்கப்படவும் தேவையான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இல்லம் தேடிச் சென்று ஊக்கமளிக்கும் 72 மாவட்ட அலுவலர்கள்:விருதுநகர் மாவட்டத்தில் கல்வித் துறையை மேம்படுத்தும் மற்றொரு சிறப்பான நடவடிக்கையாக, அண்மையில் வெளியான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்குத் தொடர்ந்து சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இம்மாணவர்கள் மீண்டும் தேர்வினை எழுதி உடனடியாகத் தேர்ச்சி பெறுவதை ஊக்குவிக்கும் பொருட்டு, மாவட்ட அளவில் சிறப்பு அலுவலர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.இக்குழுக்களில் இடம்பெற்றுள்ள 72 மாவட்ட நிலை அலுவலர்கள், சம்பந்தப்பட்ட மாணவர்களின் இல்லங்களுக்கே நேரடியாகச் சென்று, மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் நேரில் சந்தித்து வருகின்றனர். அவர்கள் கல்வியைத் தடையின்றித் தொடர வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைப்பதுடன், நடைபெற்று வரும் சிறப்புப் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கவும் தொடர்ந்து ஊக்கமளித்து வருகின்றனர்.பள்ளி மற்றும் அங்கன்வாடி தொடக்க நாளில் நேரடிக் கண்காணிப்பு:புதிய கல்வியாண்டின் முதல் நாளான நாளை (04.06.2026), இந்த 72 மாவட்ட நிலை அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு நேரடியாகச் சென்று, மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள் மற்றும் இதர கல்வி நலத்திட்டப் பொருட்கள் முறையாகவும், காலதாமதமின்றியும் விநியோகிக்கப்படுவதை நேரில் கண்காணித்து உறுதி செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.ஒவ்வொரு குழந்தையும் அரசின் கல்வி மற்றும் ஊட்டச்சத்து நலத்திட்டங்களின் பயனை முழுமையாகப் பெறுவதோடு, புதிய கல்வியாண்டின் முதல் நாளிலிருந்தே எவ்விதக் குறையுமின்றி, சிறந்த கற்றல் சூழலைப் பெறுவதை உறுதி செய்ய விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி வருகிறது. 

Jun 04, 2026

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு இலவச உணவு ஊட்டச்சத்தியல் மற்றும் உடல் எடை சீரமைப்புப் பயிற்சிகள்.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்குப் பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.இதன் தொடர்ச்சியாக, தற்போது தாட்கோ மற்றும் முன்னணி தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு *உணவு ஊட்டச்சத்தியல்* (Nutrition & Dietetics) மற்றும் *உடல் எடை சீரமைப்பு* (Slimming & Weight Loss Courses) ஆகிய பயிற்சிகளை இலவசமாக வழங்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் மரு. என்.ஓ. சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்:இனம்: விண்ணப்பதாரர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.கல்வித் தகுதி: பன்னிரண்டாம் வகுப்பில் (12-ஆம் வகுப்பு) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.வயது வரம்பு: 18 முதல் 35 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.குடும்ப வருமானம்: குடும்ப ஆண்டு வருமானம் *ரூ.3.00 லட்சத்திற்குள்* இருக்க வேண்டும்.பயிற்சியின் விவரங்கள்:கால அளவு: 50 நாட்கள்.பயிற்சி மையங்கள்:  இப்பயிற்சிகள் *இராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில்* நடைபெற உள்ளன.தங்கும் வசதி: தேர்வு செய்யப்படும் நபர்கள் பயிற்சி நடைபெறும் மாவட்டங்களில் தங்கிப் படிப்பதற்கான முழுச் செலவினத்தையும் தாட்கோ நிறுவனமே ஏற்கும். வேலைவாய்ப்பு மற்றும் ஊதியம்:இப்பயிற்சியில் வெற்றிகரமாகத் தேர்ச்சி பெறும் தகுதியான நபர்களுக்கு, பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாகவே வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும். ஆரம்ப கால மாத ஊதியமாக சுமார் *ரூ.15,000/- முதல் ரூ.20,000/- வரை* வருவாய் ஈட்டக்கூடிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும்.விண்ணப்பிக்கும் முறை:இப்பயிற்சியில் சேர விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், தாட்கோ இணையதளம் (www.tahdco.com) வழியாகத் தங்களது விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த தகுதியுடைய இளைஞர்கள் இந்த நல்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

Jun 04, 2026

உலக புகையிலை ஒழிப்பு தினம்-2026 விழிப்புணர்வுப் பேரணி.

விருதுநகர் மாவட்டம், மாரியம்மன் கோவில் திடலில், பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில், உலக புகையிலை ஒழிப்பு தினம்-2026-னை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் மரு. என்.ஓ. சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். புகையிலை நுகர்வினால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கைவிட அவர்களை ஊக்குவிக்கவும், ஒவ்வொரு ஆண்டும் மே 31 அன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இத்தினம், உலகெங்கிலும் உள்ள மக்கள் தங்களது உடல்நலத்திற்கு முன்னுரிமை அளிக்கவும், புகையிலை பழக்கத்தை நிறுத்துவதற்கான முயற்சிகளை ஆதரிக்கவும், புகைப்பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வைப் பரப்பவும் வழிவகுக்கிறது. ஏற்கப்பட்ட விழிப்புணர்வு உறுதிமொழி: அதன் ஒரு பகுதியாக, "இன்றைய தினம் நான் ஒருபோதும் புகைபிடிக்கவோ அல்லது புகையிலைப்பொருட்களை யாதொரு வடிவிலும் உட்கொள்ளவோ மாட்டேன் என்றும், அவ்வாறு புகைபிடிப்பதற்கு அல்லது புகையிலைப் பொருட்களை யாதொரு வடிவிலும் உட்கொள்வதற்கு என்னுடைய உறவினர்களையோ அல்லது நண்பர்களையோ ஊக்குவிக்க மாட்டேன் என்றும் நான் என்னுடன் பணியாற்றும் சக ஊழியர்களைப் புகையிலை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க ஊக்குவிப்பேன் என்றும், மேலும் புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதினால் ஏற்படும் மாசிலிருந்து எனது சுற்றுச்சூழலைப் பாதுகாக்கப் பங்களிப்பேன் என்றும் உறுதியளிக்கிறேன்" என்ற விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வாசிக்க, அனைவரும் அதனை ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. விழிப்புணர்வுப் பேரணி: இதனைத் தொடர்ந்து, மாரியம்மன் கோவில் திடலில் தொடங்கிப் பழைய பேருந்து நிலையம் வரை நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைக்க, மருத்துவப் பணியாளர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்நிகழ்வில், இணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) திரு.செந்தில் குமார், விருதுநகர் மாவட்ட சுகாதார அலுவலர் மரு. யசோதாமணி, மருத்துவத்துறை அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Jun 03, 2026

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு இலவச அழகுக்கலை மற்றும் சிகை அலங்காரப் பயிற்சிகள்.

  தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்குப் பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.அதன் அடிப்படையில், தற்போது தாட்கோ மற்றும் முன்னணி தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு *அழகுக்கலை* (Master Certification in Bridal Makeup Artistry Course) மற்றும் *சிகை அலங்காரம்* (Diploma in Creative Hair Dressing Chemical Treatment Courses) ஆகிய பயிற்சிகளை இலவசமாக வழங்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் மரு. என்.ஓ. சுகபுத்ரா, I A S.,அவர்கள் தெரிவித்துள்ளார். விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்:           இனம்: விண்ணப்பதாரர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.           கல்வித் தகுதி: பன்னிரண்டாம் வகுப்பில் (12-ஆம் வகுப்பு) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.           வயது வரம்பு: 18 முதல் 35 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.           குடும்ப வருமானம்: குடும்ப ஆண்டு வருமானம் *ரூ.3.00 லட்சத்திற்குள்* இருக்க வேண்டும். பயிற்சியின் விவரங்கள்:        கால அளவு: 45 நாட்கள்.             பயிற்சி மையம்: இப்பயிற்சிகள் *திருச்சி மாவட்டத்தில்* நடைபெற உள்ளன.             தங்கும் வசதி: தேர்வு செய்யப்படும் நபர்கள் பயிற்சி நடைபெறும் மாவட்டத்தில் தங்கிப் படிப்பதற்கான முழுச் செலவினத்தையும் தாட்கோ நிறுவனமே ஏற்கும். வேலைவாய்ப்பு மற்றும் ஊதியம்:       இப்பயிற்சியில் வெற்றிகரமாகத் தேர்ச்சி பெறும் தகுதியான நபர்களுக்கு, பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாகவே வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும். ஆரம்ப கால மாத ஊதியமாகச் சுமார் *ரூ.15,000/- முதல் ரூ.25,000/- வரை* வருவாய் ஈட்டக்கூடிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும். விண்ணப்பிக்கும் முறை:     இப்பயிற்சியில் சேர விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், தாட்கோ இணையதளம் (www.tahdco.com) வழியாகத் தங்களது விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த தகுதியுடைய இளைஞர்கள் இந்த நல்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்டஆட்சியர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

Jun 03, 2026

வேளாண் அடுக்குத் திட்டத்தின்கீழ், விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பெறுவது அவசியம், மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகவல்.

விருதுநகர் மாவட்ட வேளாண் அடுக்குத் திட்டத்தின்கீழ், விவசாயிகள் தங்கள் நில உடமை விவரங்களை வலைதளத்தில் பதிவு செய்வது அவசியம் விவசாயிகள் அரசின் பல்வேறு நலத்திட்ட பலன்களை பெறுவதற்கு ஒவ்வொரு முறையும் தங்களது நில உடமை விபரங்கள், அடங்கல் போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. அதை தவிர்த்திட விவசாயிகள் தங்கள் நில உடமை விபரங்களை ஆதார் எண் மற்றும் செல்போன் எண் ஆகியவற்றுடன் இணைப்பதற்கு வேளாண் அடுக்குத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிராமங்கள் தோறும் வேளாண்மைத்துறை தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண்மை விற்பனை வணிகத் துறை  சார்ந்த அலுவலர்களால் நில உடமை விபரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.  மேலும் விவசாயிகள் பொது சேவை மையம் மூலமாகவும் தங்கள் நில உடமை விபரங்களை இணைத்துக் கொள்ளலாம். இவ்வாறு இணைக்கப்பட்ட பின்னர் ஒருங்கிணைக்கப்பட்ட தனித்துவமான தேசிய அளவிலான நில உடமை அடையாள எண் ஒவ்வொரு விவசாயிக்கும் ஏற்படுத்தப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 94,682 விவசாயிகளில் 79,302 விவசாயிகள் மட்டுமே பதிவு செய்துள்ளனர், மீதமுள்ள 15 ஆயிரத்து 450 விவசாயிகள் வேளாண்மை உழவர் நலத்துறை அலுவலர்கள் நடத்தும் முகாம்களில் அல்லது அருகில் உள்ள இ சேவை மையங்களுக்கு நேரடியாக சென்று பதிவு செய்து கொண்டு பயன்பெறலாம்.வரும் நிதியாண்டு முதல் பிரதம மந்திரி கௌரவ நிதி உதவி தொகை ((PMKISAN) பெறுவதற்கும் மற்றும் அரசின் நலத்திட உதவிகளை பெறுவதற்கு பயிர் காப்பீடு பதிவிற்கும், உரம் வாங்குவதற்கு, வெள்ளம் மற்றும் வறட்சி நிவாரணம் பெறும் சூழ்நிலையில் இந்த எண் மிகவும் அவசியம் என்பதால்  அனைத்து விவசாயிகளும் தங்களது நில உடமை விவரங்களை பதிவு செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jun 02, 2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் .

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் (01.06.2026) நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்பஅட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள்.மேலும், முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.இக்கூட்டத்தில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் மூலம் பணியிடத்தில் விபத்து மரணமடைந்த திரு.அர்ச்சுணன்(லேட்) மற்றும் திரு.ரவிச்சந்திரன்(லேட்) ஆகிய 2 கட்டுமான தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணியிடத்து விபத்து மரண உதவித் தொகையாக ரூ.8 இலட்சம் வீதமும்,கட்டுமானப் பணியிடங்களில் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் இறந்த திரு.கணேசன்(லேட்) மற்றும் திரு.சீத்தாராமன்(லேட்) ஆகிய 2 கட்டுமானத் தொழிலாளர்களின் பணியிடத்து விபத்து மரணத்திற்கு தலா ரூ.5 இலட்சம் வீதமும் என பணியிடத்தில் விபத்து மரணம் அடைந்த 4 தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு மொத்தம் ரூ.26 இலட்சம் மதிப்பில் உதவித்தொகைக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர்  அவர்கள் வழங்கினார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.கு.மோகனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி பிர்தௌஸ் பாத்திமா, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jun 02, 2026

தமிழ்நாட்டில்  உள்ள பள்ளி வாசல்களில்  பணியாற்றும்  உலமாக்களுக்கு  இருசக்கர  வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டத்தில் விண்ணிப்பிக்கலாம்.

உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 வயது முதல்  60 வயது வரை உள்ள உலமாக்களுக்கு  புதிய இருசக்கர வாகனம் வாங்க மானியத்தொகை ரூ.50,000/-  வழங்க  தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிலுள்ள பள்ளிவாசல்களில்  பணியாற்றும்  பேஷ்இமாம்கள்,  ஆலிம்கள்,  அரபி ஆசிரியர்கள்/ஆசிரியைகள்  உள்ளிட்ட உலமாக்களிடம் இருந்து  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.  இரு சக்கர வாகனத்திற்கான மானியம் பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள 5-வது தளத்தில் (அறை எண்- 505) இயங்கும்  மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் படிவத்தினை பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து ஒப்புதல் பெற்ற பின்னரே பயனாளி இருசக்கர வாகனம் வாங்க வேண்டும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தின் 5-வது  தளத்திலுள்ள (அறை எண்- 505) மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்  நல அலுவலகம்/ சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 30.06.2026-ம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jun 02, 2026

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் சிறப்பு தொழில் கடன் முகாம் 01.06.2026 முதல் 30.06.2026 வரை நடைபெறுகிறது.

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் ஒரு மாநில நிதிக் கழகம் ஆகும். 1949 ஆம் ஆண்டு துவங்கப் பெற்ற இக்கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது. இக்கழகம் குறு சிறு மற்றும் நடுத்தர (MSME) தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கு தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் நிறுவனங்களை விரிவுபடுத்துவதற்கு, உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.மேலும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் கடனுதவிக்கு அப்பாற்பட்ட சேவைகளையும் செய்து வருகிறது (Lending Plus Service Provide to MSME).சிவகாசி கிளை அலுவலகத்தில் (முகவரி:- 98/சி4 சேர்மன் சண்முக நாடார் ரோடு, 2 வது தளம், சிவகாசி, விருதுநகர் மாவட்டம் 626 123) குறு, சிறு மற்றும் நடுத்தர (MSME) தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் 01.06.2026 முதல் 30.06.2026 வரை நடைபெறுகிறது. மாநில அளவில் நடப்பு நிதியாண்டின் கடன் இலக்காக ரூ.2125/- கோடியாக நிர்ணயத்து முனைப்புடன் பணியாற்றி வருகிறோம். விருதுநகர் மாவட்டத்திற்கு மட்டும் கடன் இலக்காக ரூ.61.00 கோடி இலக்குடன் பணியாற்றி வருகிறோம்.         இச்சிறப்பு தொழில் கடன் முகாமில் டி.ஐ.ஐ.சி. (TIIC)யின் பல்வேறு கடன் திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய மாநில அரசுகளின் மானியங்கள் (மூலதன மானியம், வட்டி மானியம் மற்றும் இதர மானியங்கள்), புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS) மற்றும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் (AABCS), கலைஞர் பசுமை ஆற்றல் திட்டம் (Kalaingar Green Energy Scheme) போன்றவை குறித்து விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது. தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவிகிதம் முதலீட்டு மானியம் அதிகபட்சமாக ரூ.150 இலட்சம் வரை வழங்கப்படும். கூடுதல் மானியமாக 10 சதவிகிதம் மற்றும் மகளிர் தொழில் முனைவோருக்கு 5 சதவிகிதம் சிறப்பு மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனங்களின் விரிவாக்கம் மற்றும் நவீனபடுத்துவதற்கு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு 5 சதவிகிதம் வட்டிமானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது.மேலும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் (AABCS) கீழ் SC/ST தொழில் முனைவோருக்கு திட்ட மதிப்பில் 35 சதவிகிதம் முதலீட்டு மானியம் மற்றும் 6 சதவிகிதம் வட்டி மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும். இந்த அரிய வாய்ப்பினை தொழில் முனைவோர்கள் பயன்படுத்தி தங்களது தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் தகவலுக்கு கிளை மேலாளர் - 9445023477, திட்ட அலுவலர்கள் - 9500301892, 8838195375, என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

1 2 ... 20 21 22 23 24 25 26 ... 139 140

AD's



More News