25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

May 19, 2026

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் புதிய விண்ணப்பங்கள் வரவேற்பு.

விருதுநகர் மாவட்டத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் ‘முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின்’ கீழ், 2026-27 ஆம் நிதியாண்டிற்குப் புதியதாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ், குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால் ரூ.50,000/- மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000/- வீதம் இரண்டு குழந்தைகளுக்கு மொத்தம் ரூ.50,000/- வைப்புத்தொகை இரசீது வழங்கப்படும். அதேபோல், மூன்று பெண் குழந்தைகள் இருக்கும் பட்சத்தில், ஒரு குழந்தைக்கு ரூ.25,000/- வீதம் மூன்று பெண் குழந்தைகளுக்கு மொத்தம் ரூ.75,000/- வைப்புத்தொகை இரசீதாக வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெறும் குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடைந்த பின்னர், முதிர்வுத் தொகையைப் பெறுவதற்கு அக்குழந்தையின் வைப்புத்தொகை இரசீது நகல், 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல் மற்றும் வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் மாவட்ட சமூக நல அலுவலகம் அல்லது சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் உள்ள சமூக நல விரிவாக்க அலுவலரை அணுகலாம். இ-சேவை மையங்களின் மூலம் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்களாவன: குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், தாய் அல்லது தந்தையின் வயதுச் சான்றிதழ், ஆண்டு வருமானச் சான்றிதழ் (ரூ.1,20,000/-க்குள் இருக்க வேண்டும்), குடும்பக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ், ஆண் வாரிசு இன்மைச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், குடும்ப அட்டை மற்றும் உரிய அடையாள அட்டை நகல் ஆகியவையாகும். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு, "மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியரக வளாகம், விருதுநகர் மாவட்டம் – 626002" என்ற முகவரியிலோ அல்லது 04562-252701 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

May 19, 2026

மகளிர் மற்றும் குழந்தைகள் விடுதிகள் ஜூன் 30-க்குள் பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்துத் தொழிற்சாலை விடுதிகள், தனியார் பணிபுரியும் மகளிர் விடுதிகள் மற்றும் குழந்தைகள் விடுதிகள் ஆகியவை, ‘தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுதிகள் (ஒழுங்குமுறை) சட்டம் 2014’ மற்றும் அதன் 2015-ஆம் ஆண்டு விதிகளின்படி, வரும் *30.06.2026-க்குள்* தங்களது விடுதிகளைக் கட்டாயமாகப் பதிவு செய்துகொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மரு. என்.ஓ. சுகபுத்ரா, I A S., அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.ஏற்கனவே பதிவு செய்து, புதுப்பிக்காமல் உள்ள விடுதிகள் உடனடியாகத் தங்களது உரிமத்தைப் புதுப்பித்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறது. அரசின் விதிமுறைகளின்படி, உரிய உரிமம் பெறாமல் விடுதிகளை நடத்தினால் *2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.50,000/- அபராதம்* விதிக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.விடுதிகள் பதிவு செய்வது தொடர்பான முழு விவரங்களையும், இதனுடன் இணைக்கப்பட்டுள்ள *QR Code* மூலம் காணொளி வாயிலாக அறிந்து கொள்ளலாம். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பதிவு செய்யாத அல்லது புதுப்பிக்காத விடுதிகள் மற்றும் நிறுவனங்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பான விண்ணப்பங்கள் மற்றும் கருத்துருக்களைக் கீழே குறிப்பிட்டுள்ள முகவரியில் சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர்  அவர்கள் தெரிவித்துள்ளார்.முகவரிமாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியரக வளாகம், விருதுநகர் மாவட்டம் – 626002.தொலைபேசி எண்: 04562-252701

May 18, 2026

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் தலைமையில் அனைத்துத் துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

 விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்  (16.05.2026), மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் திட்டச் செயல்பாடுகள் குறித்த அனைத்துத் துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,  அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சியர் மரு. என்.ஓ. சுகபுத்ரா, I A S., மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் என். ஸ்ரீநாதா, இ.கா.ப., ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தின்  வளர்ச்சிக்குத் துறை அலுவலர்கள் அனைவரும் ஒரு ஒருங்கிணைந்த வழிகாட்டியாகத் திகழ வேண்டும். கல்வித் துறையில் விருதுநகர் மாவட்டம் எப்பொழுதும் முதன்மை மாவட்டமாகத் திகழ்வதை உறுதி செய்யும் வகையில், மாவட்டத்தில் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வரும் “உயிர்” மற்றும் “திசை” ஆகிய திட்டங்களின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியவை.அதேபோல், பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெறாத 500-க்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், 10 மாணவர்களுக்கு ஒரு பொறுப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு, அவர்களைத் தேர்ச்சி பெற வைக்க மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் சிறப்பு நடவடிக்கைகள் தொடர வேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ‘முன்னேற விழையும் மாவட்டங்களின் (Aspirational Districts) பட்டியலில்  நமது விருதுநகர் மாவட்டம், தற்போது மாவட்ட நிர்வாகத்தின் தொடர் முயற்சியால் பல்வேறு குறியீடுகளில் சிறந்த முன்னிலையை எட்டியுள்ளது. இதே உத்வேகத்துடன் மாவட்டத்தின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர் விநியோகம் உள்ளிட்ட பணிகளுக்குத் துறை அலுவலர்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும். குறிப்பாக, தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தினை முழுமையாகச் செயல்படுத்தத் தேவையான உள்கட்டமைப்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.  நமது மாவட்ட இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில், நவீன விளையாட்டு அரங்கம் அமைப்பதற்குத் தேவையான உரிய நிதி ஒதுக்கீடுகளைச் செய்து, அவர்களின் நீண்ட நாள் தேவையைப் பூர்த்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், பொது சுகாதாரம் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு ஆகியவற்றுக்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் உள்ளாட்சி மற்றும் சுகாதாரத் துறையினர் தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா. ஆனந்தி, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர்(தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு) திரு.ம.ராஜசேகரன், மற்றும் பல்வேறு அரசுத் துறைகளின் உயர் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

May 16, 2026

அமைச்சர் செல்வி. ச.கீரத்தனா அவர்கள் விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை.

விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தந்த  அமைச்சர் செல்வி. ச.கீரத்தனா அவர்களை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (15.05.2026) பூங்கொத்து வழங்கி வரவேற்றார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் என்.ஸ்ரீநாதா,இ.கா.ப., அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி அவர்கள் ஆகியோர் உள்ளனர்.

May 16, 2026

இளைஞர் நீதிக் குழும மாணவர் கல்வி பயில ரூ. 24,000/- கல்வி உதவித்தொகை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்  (14.05.2026) நடைபெற்ற நிகழ்வில், இளைஞர் நீதிக் குழுமத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தனது கல்வியைத் தொடர்வதற்காக, 2026-2027 ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை ரூ. 24,000/- க்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர்  மரு. என்.ஓ. சுகபுத்ரா, I A S., அவர்கள் மாணவரின் பெற்றோரிடம் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த மாணவர், தான் இளைஞர் நீதிக் குழுமத்தைச் (Juvenile Justice Board - JJB) சார்ந்த இளஞ்சிறார் பிரிவில் உள்ளதாகவும், தற்போது பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிப்பை நிறைவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். தனது குடும்பம் மிகவும் வறுமையான நிலையில் உள்ளதால், மேல்படிப்பைத் தொடர கல்வி உதவித்தொகை வழங்கிடுமாறு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தார்.அம்மாணவரின் கோரிக்கையை ஏற்று, அவரது கல்வி நலனைக் கருத்தில் கொண்டு, முதற்கட்டமாக 2026-2027 ஆம் கல்வி ஆண்டிற்கான கல்வி உதவித்தொகையாக ரூ. 24,000/- வழங்கப்பட்டது. இதற்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் மாணவரின் பெற்றோரிடம் நேரில் வழங்கினார். இந்நிகழ்வில், இளைஞர் நீதிக் குழும உறுப்பினர் திருமதி முனியம்மாள், கல்லூரி முதல்வர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

May 15, 2026

பல்வேறு துறைகளில், பன்முக திறமை கொண்டவர்களுக்கு "பத்ம விருது" வழங்க தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பன்முக திறமை கொண்டவர்களுக்கு 2027-ஆம் ஆண்டு ஜனவரி -26-ஆம் தேதி குடியரசு தின விழாவில் "பத்ம விருது" வழங்க தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.2025-ம் ஆண்டு பத்ம விருது வழங்கும் பொருட்டு கருத்துருக்கள் அனுப்புவதற்கான விதிமுறைகள்:1. விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த தகுதியான நபர்கள் (ஆண்/பெண்) விண்ணப்பிக்கலாம்.2. கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப் பணி, அறிவியல், பொறியியல், பொது விவகாரங்கள், குடிமைப்பணிகள், வர்த்தகம் மற்றும் தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிக சிறந்து விளங்குவராக இருத்தல் வோர்டும்.3. பத்ம விருது குறித்த விவரங்கள் அனைத்தும் இணையதளத்தில் (https://awards.gov.in) 15.03.2026 முதல் வெளியிடப்பட்டுள்ளது.4. இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 31.07.2026 இணையதளம் மூலம் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.5. இணையதளத்தில் பதிவு செய்த பிறகு அனைத்து ஆவணங்களையும் விருதுநகர் மாவட்ட சமூகநல அலுவலகத்தில், கையேடாக (Booklet) தயார் செய்து தமிழ் (ம) ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து தலா 3 நகல்கள் 31.07.2026-ற்குள் சமர்ப்பிக்க வேண்டும்.மேலும், கருத்துருக்களை மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், விருதநகர். 04562-252 701 என்ற முகவரிக்கு சமர்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S ., அவர்கள் தெரிவித்துள்ளார். 

May 15, 2026

மாவட்ட அளவிலான சிறப்பு தடுப்பு பணி பிரிவு மற்றும் மணல் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட அளவிலான சிறப்பு தடுப்பு பணி பிரிவு (District Level Task Force) மற்றும் மணல் ஒருங்கிணைப்புக் குழு (Sand Co-ordination Committee) கூட்டம் மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S ., அவர்கள் தலைமையில்  (13.05.2026) நடைபெற்றது.இக்கூட்டத்தில், மாவட்டத்தில் சட்டவிரோத மணல் மற்றும் கனிமக் கடத்தலை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் 2026 மாதங்களில் வருவாய்த்துறை, காவல் துறை மற்றும்  கனிம வளத்துறை இணைந்து மேற்கொண்ட திடீர் சோதனைகள் மற்றும் வழக்குகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.குறிப்பாக, சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவரங்கள் பரிசீலிக்கப்பட்டன.மேலும், மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கல் குவாரிகள், கிரானைட் குவாரிகள் மற்றும் செங்கல் சூளைகளின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தங்களது கட்டுப்பாட்டு பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொண்டு, விதிமுறைகள் மீறப்பட்டால் உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டனர்.கனிமக் கடத்தலைத் தடுக்கும் வகையில் வருவாய், காவல், சுரங்கத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், அனைத்து  வட்டார அளவிலும் வட்டாட்சியர்களால் பணிக்குழு கூட்டங்களும் முறையாக நடத்தப்பட வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.மேலும், பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறைகளின் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளுக்காக கனிமங்கள் பயன்படுத்தப்படும் போது, விதிகளின்படி அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், பயன்பாட்டு சான்றிதழ்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆனந்தி, சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான், I A S.,  உதவி இயக்குநர் (புவியியல் மற்றும் சுரங்கத்துறை) முனைவர்.சி. சுகதாரஹிமா,  கோட்டாட்சியர்கள், காவல் துறை, சுரங்கத்துறை மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

May 15, 2026

2026 ஆம் ஆண்டிற்கான பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஆயுதப்படை மைதானத்தில்  (14.05.2026) மாவட்ட நிர்வாகம், போக்குவரத்துத் துறை, காவல் துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறை இணைந்து 2026 ஆம் ஆண்டிற்கான பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு பணிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் என்.ஸ்ரீநாதா, இ.கா.ப., அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இந்த ஆய்வில் தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் கட்டுப்பாடு மற்றும் நடைமுறை படுத்துதல்) விதிகள் 2012-ன் படி, தீயணைப்பு கருவிகள் பொருத்தப்பட்டு முறையாக பராமரிக்கப்படுகிறதா, உரிய மருத்துவ உபகரணங்களுடன் கூடிய முதலுதவி பெட்டி பொருத்தப்பட்டுள்ளதா, அவசரகால வழிகள் (Emergency Exit) அமைக்கப்பட்டுள்ளதா, வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா, உரிய நடத்துநர் உரிமம் பெற்ற உதவியாளர் (Attender), ஓட்டுநருக்கு உதவியாக மாணவ, மாணவியர்கள் உரிய முறையில் வாகனத்தில் ஏறி இறங்கும் பொழுது உதவி புரியும் வகையில் பணியமர்த்தப்பட்டுள்ளாரா, மாணவ, மாணவியர் வாகனத்தின் எளிதாக ஏறும் வகையில் படிக்கட்டின் முதல் படி தரையில் இருந்து 25 செ.மீ இல் இருந்து 30 செ.மீ;-க்குள் உள்ளவாறு அமைக்கப்பட்டுள்ளதா, வாகன ஓட்டுநரின் இருக்கைப்பகுதி தனியாக பிரிக்கப்பட்டுள்ளதா, இருக்கைகள் முறையாக வாகனத்தின் தரைதளத்துடன் Bolts மூலம் பொருத்தப்பட்டுள்ளதா, புத்தகப்பைகள் வைத்திட தனியாக Racks அமைக்கப்பட்டுள்ளதா, வாகனத்தின் தரைத்தளம் முழுமையாக ஒன்றாக நல்ல தரத்துடன் பொருத்தப்பட்டுள்ளதா, வாகனத்தின் பக்கவாட்டு ஜன்னல்கள் மாணவ, மாணவியர் கரம், சிரம் நீட்டாதவாறு, மூன்று நீளமாக கிடைமட்ட கம்பிகளால் பொருத்தப்பட்டு பாதுகாப்பாக உள்ளதா என்பது குறித்தும், போதிய பராமரிப்பு உள்ளதா  போன்றவை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.   பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்புக் கருதி தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் (கட்டுப்பாடு மற்றும் நடைமுறைப்படுத்துதல்) சிறப்பு விதிகளின்படி மாவட்ட நிர்வாகம், காவல்துறை, போக்குவரத்துத்துறை, பள்ளி கல்வித்துறை ஆகிய துறைகள் இணைந்து  பள்ளி வாகனங்களை கூட்டாய்வு செய்து வருகிறார்கள்.அதனடிப்படையில்,  விருதுநகர் போக்குவரத்து வட்டாரத்தில் உள்ள 46 பள்ளிகளைச் சேர்ந்த 249 வாகனங்கள், திருவில்லிபுத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 27 பள்ளிகளைச் சேர்ந்த 84 வாகனங்கள், சிவகாசி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 38 பள்ளிகளைச் சேர்ந்த 185 வாகனங்கள், அருப்புக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 43 பள்ளிகளைச் சேர்ந்த 182 வாகனங்கள், இராஜபாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 45 பள்ளிகளைச் சேர்ந்த 177 வாகனங்கள் என மொத்தம் 199 தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 877 வாகனங்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் 688 பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அதில் 656 பள்ளி வாகனங்கள் முழுத்தகுதி உடையவையாக உள்ளன. 32 பள்ளி வாகனங்கள் முழுத்தகுதி இல்லாத காரணத்தினால் தகுதியற்றவையாக நிராகரிக்கப்பட்டுள்ளது. நிராகரிக்கப்பட்ட வாகனங்கள் குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் ஆய்வுக்கு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. பின்னர், பள்ளி வாகன ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள், மாணவர்களின் பாதுகாப்பை முதன்மையாகக் கொண்டு செயல்படுவோம் என்ற உறுதிமொழியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் ஏற்றுக்கொண்டனர்.இந்த ஆய்வின் போது, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ரமேஷ், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் திரு.மாணிக்கம்(விருதுநகர்), திரு.சந்திரசேகர்(திருவில்லிபுத்தூர்), வேலுமணி(சிவகாசி), சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.கனகராஜ், வாகன ஆய்வாளர்கள், பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள், தீயணைப்புத்துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

May 15, 2026

பள்ளிக்கல்வித்துறை சார்பில், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத 603- மாணவர்களை கண்காணித்து, சிறப்பு பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் வழங்குதல்.

விருதுநகர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்  (14.05.2026) பள்ளிக்கல்வித்துறை சார்பில், 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத 603- மாணவர்களை கண்காணித்து, சிறப்பு பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் வழங்குதல் தொடர்பாக ஒன்றிய வாரியாக நியமிக்கப்பட்டுள்ள தலைமையாசிரியர்கள் மற்றும் தனி பொறுப்பு அலுவலர்களுடனான (Nodal Officers) ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.விருதுநகர் மாவட்டத்தில் மார்ச் - ஏப்ரல் 2026ல் நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள், விருதுநகர் வருவாய் மாவட்டத்தில் 219 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 99 தேர்வு மையங்களில் 9,731 மாணவர்களும், 11,599 மாணவியர்களுமாக மொத்தம் 21,330 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். இம்மாணவர்களில், 20,727 மாணவர்கள் தேர்ச்சி பெற்ற நிலையில், 603-தேர்ச்சி பெறாத மாணவர்களை கண்காணித்து, சிறப்பு பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் வழங்குதல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்ததாவது:          மாணவர்களை அவர்களின் இல்லத்தில் சந்தித்து, மறுதேர்வு எழுதுவது தொடர்பாக உரிய விழிப்புணர்வு வழங்கப்பட வேண்டும். மாணவர்களின் குடும்ப பொருளாதார சூழ்நிலை காரணமாக மறுதேர்வு எழுதுவதை தவிர்க்கும் மாணவர்களை கண்டறிந்து பெற்றோருடன் தொடர்பு கொண்டு மாணவர்கள் மீண்டும் தேர்விற்கு தயாராகும் வகையில் ஊக்குவிக்க வேண்டும்.சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டுமெனவும். மாணவர்களின் வருகை மற்றும் முன்னேற்றத்தை வாரந்தோறும் கண்காணிக்க வேண்டுமெனவும், தொடர்புடைய அலுவலர்கள் உடனடியாக மேற்படி பணிகளை மேற்கொண்டு மாணவர்கள் 100% தேர்ச்சி பெற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமெனவும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தினார்.இக்கூட்டத்தில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திரு.அரவிந்தன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

May 13, 2026

வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக, சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்.

வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக, சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்15.05.2026 அன்று வெள்ளிக்கிழமை வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I.A.S., அவர்கள் தகவல்விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக ஒவ்வொரு மாதமும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுவருகிறது. அதன்படி, படித்த வேலை தேடும் இளைஞர்களுக்காக வரும் 15.05.2026 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 03.00 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், விருதுநகர் சூலக்கரையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது.இத்தனியார் வேலைவாய்ப்பு முகாமில் ADYAR ANANDHA BHAVAN, SAMARTHANAM TRUST FOR DISABLED, CEPHAS MEDICAL, VISTAAR FINANCE, ABIS FOODS AND PROTEIN PVT LTD போன்ற 20க்கும் மேற்பட்ட பிரபல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு I.T.I.டிப்ளமோ மற்றும் பொறியியல் படிப்பு ஆகிய கல்வித் தகுதி உடைய பணியாளர்களை தெரிவு செய்யவுள்ளார்கள். இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்த விரும்பும் வேலைநாடுநர்கள் 15.05.2026 அன்று வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பாக www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களை பதிவு செய்துவிட்டு சுய விவரச் சான்றிதழ் (RESUME) அனைத்து கல்விச்சான்றிதழ், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது மேலும், இச்சேவையானது முற்றிலும் கட்டணமில்லா சேவையாகும்.இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அவர்களை நேரிலோ அல்லது vnrjobfair@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I.A.S.., அவர்கள் தெரிவித்துள்ளார்.

1 2 ... 23 24 25 26 27 28 29 ... 140 141

AD's



More News