தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET), பாரத்நெட் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களுக்கு உயர்தர இணைய சேவைகளை வழங்கும் நோக்கில் மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்களை (District Level Franchisee Partners- DLFP) தேர்வு செய்யும் பணிகளை முன்னெடுத்து வருகிறது.இதற்காக 01.01.2026 அன்று வெளியிடப்பட்டிருந்த அறிவிப்பின் அடிப்படையில் பல்வேறு பகுதிகளிலிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, அதிகமான விண்ணப்பதாரர்கள் பங்கேற்கும் வகையில் நிதி தகுதி விதிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.முன்னதாக விண்ணப்பதாரர்களுக்கு கடந்த மூன்று நிதியாண்டுகளின் சராசரி ஆண்டு வருவாய் ₹50 லட்சம் மற்றும் அதற்கு மேல் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்த நிலையில், தற்போது அது ₹20 லட்சம் மற்றும் அதற்கு மேல் என தளர்த்தப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் பாரத்நெட் திட்டப் பணிகள் தற்போது சுமார் 96% வரை நிறைவடைந்துள்ளன. மாநிலத்தின் 37 மாவட்டங்களிலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது இரண்டு தொழில் பங்கீட்டாளர்களை தேர்வு செய்து, கிராமப்புறங்களில் தடையில்லா இணைய சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதன்படி, ஒவ்வொரு மாவட்டமும் வருவாய் உட்கோட்டம் (Revenue Division) அடிப்படையில் 2 முதல் 6 வட்டாரங்களை கொண்ட துணைப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, அந்தந்த துணைப் பிரிவுகளுக்கு தொழில் பங்கீட்டாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.ஒரு விண்ணப்பதாரர் அதிகபட்சம் இரண்டு மாவட்டங்களுக்கு மட்டும் விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார். அந்த மாவட்டங்கள், விண்ணப்பிக்கும் நிறுவனம் அல்லது தனிநபர் செயல்படும் மாவட்டம் மற்றும்/அல்லது அவர்களின் முகவரி அமைந்துள்ள மாவட்டமாக இருக்க வேண்டும்.தேர்வு செய்யப்படும் தொழில் பங்கீட்டாளர்களின் முக்கிய பொறுப்புகளில் Optical Fibre Cable (OFC) மற்றும் Optical Network Terminal (ONT), பராமரிப்பு தடையில்லா இணைய சேவை வழங்குதல், சேவை தடைகளை விரைவாக சரிசெய்தல், Service Level Agreement (SLA) விதிமுறைகளை பின்பற்றுதல் மற்றும் சேவை தரத்தை பராமரித்தல் ஆகியவை அடங்கும்.விண்ணப்ப பதிவு நடைமுறை TANFINET இணையதள போர்டல் (https://tanfinet.tn.gov.in) மூலம் நடைபெறும். விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு மற்றும் தொடர்புடைய ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்து, தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து, தாங்கள் செயல்பட விரும்பும் துணைப் பிரிவை (Division) தேர்வு செய்ய வேண்டும்.ஒவ்வொரு துணைப் பிரிவுக்கும் ₹25,000/- (திரும்பப்பெறக்கூடிய, வட்டியில்லா) விண்ணப்ப பாதுகாப்பு வைப்பு தொகை செலுத்த வேண்டும். தேர்வு செய்யப்படும் பங்கீட்டாளர்கள், ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ₹2,00,000/- பாதுகாப்பு வைப்பு தொகை செலுத்திய பின்னர் TANFINET தலைமையகத்தால் பணி ஆணை (Work Order) வழங்கப்படும்.மேலும், ஏற்கனவே விண்ணப்பித்து கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் அதே வருவாய் உட்கோட்டத்திற்கு மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. ஆனால் அவர்கள் அதே மாவட்டத்தில் உள்ள பிற துணைப் பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.இந்த விண்ணப்பங்களுக்கான TANFINET இணையதள போர்டல் 10.03.2026 முதல் 04.05.2026 வரை மீண்டும் செயல்படும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.மேலும் விவரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு 044- 24965595 என்கிற உதவி மைய எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
“தற்பொழுது கோடை காலம் துவங்கிவிட்டதால் பொதுமக்களுக்கு பதநீர், இளநீர், கம்மங்கூல், பழரசம், சர்பத், கரும்பு ஜுஸ், கூல்டிரிங்ஸ் (Carbonated Drinks) மில்க் மோர் மற்றும் இவை போன்ற பல திரவ ஆகாரங்களின் தேவைகள் அதிகமாகும். மேலும் இவற்றின் தேவைகளைப் பூர்த்தி செய்ய புதுப்புது உணவு வணிகர்கள் உருவாக வாய்ப்புகள் அதிகம் உள்ளது.மேலும் திரவ ஆகாரங்கள் பெரும்பாலும் தண்ணீர் அடிப்படையிலானது என்பதினால் தொற்றுநோய்களின் தாக்கத்திற்கு சிறிது வாய்ப்பு உள்ளது. எனவே மேற்கூறிய திரவ ஆகாரங்களை மிகவும் பாதுகாப்பாக உற்பத்தி செய்து, அவற்றை பாதுகாப்பான சூழலில் நுகர்வோர்களுக்கு விற்பனை செய்ய வேண்டிய கடமை உணவு வணிகர்களுக்கு உள்ளது.எனவே, கோடை கால உணவினை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் வணிகர்கள் பின்வரும் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.வணிகர்களின் கவனத்திற்கு:1. அனைத்து உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்புத் துறையின் உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழை (https://foscos.fssai.gov.in) என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழைப் பெற்ற பின்னரே உணவு வணிகம் ஆரம்பிக்க வேண்டும்.2. பழரசம், சர்பத், கம்மங்கூல் போன்ற திரவ ஆகாரங்களைத் தயாரிக்கப் பயன்படும் தண்ணீர் பாதுகாப்பானதாகவம் நன்னீராகவும் இருக்க வேண்டும். மேலும் உற்பத்தியாளர்கள் பயன்படுத்தும் தண்ணீரின் தரத்தினை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத் துறையின் பகுப்பாய்வுக்கூடம் அல்லது NABL அங்கீகாரம் பெற்ற தனியார் பகுப்பாய்வுக்கூடங்களில் பகுப்பாய்வு செய்து, அதன் அறிக்கையை வைத்திருக்க வேண்டும்.3. உற்பத்தியாளர்கள் கொள்முதல் செய்யும் அனைத்துப் பொருட்களுக்கும் பில் வைத்திருக்க வேண்டும்.4. திரவ ஆகாரங்களைத் தயாரித்து, அதற்கேற்ற வெப்பநிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும், கரும்பு ஜுஸ் உள்ளிட்ட அவ்வப்போது உடனடியாக விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களைத் தயாரித்த பின்னர் 2 ½ மணி நேரத்திற்கும் மேலாக இருப்பு வைத்திருக்கக் கூடாது. கம்மங்கூல் போன்ற உணவுப் பொருட்கள் கடையை மூடும் வரை விற்பனையாகாமல் மீதமானால், அவற்றை அப்புறப்படுத்திடல் வேண்டும்.5. திரவ ஆகாரங்களைத் திறந்த நிலையில் ஈக்கள் மற்றும் பூச்சிகள் மொய்க்கும் வகையில் விற்பனை செய்யக்கூடாது. 6. திரவ ஆகாரங்களை குளிரூட்ட உணவுத் தர “ஐஸ் கட்டியைப்” பயன்படுத்த வேண்டும். உணவுத் தர ஐஸ் கட்டி செயற்கை வண்ணம் கலக்காமலும், உணவுத் தரமில்லாத ஐஸ் கட்டி “நீல நிறத்திலும்” இருக்கும். 7. ஐஸ் பெட்டிகள் கழுவி சுத்தமாக இருக்கிறதா என உறுதி செய்து ஐஸ்கட்டிகள் சுகாதாரமான முறையில் கையாளப்படுகிறதா என்பதை உரிமையாளர் கவனிக்க வேண்டும்.8. ஐஸ் கட்டிகளை வைக்கோல் சணல் பை போன்றவை கொண்டு சுகாதாரமற்ற முறையில் மூடி வைத்திருத்தல் கூடாது.9. பழரசம் தயாரிக்கப் பயன்படும் பழங்கள் புதியதாகவும் தரமானதாகவும் இருத்தல் வேண்டும். அழுகிய பழங்களை பழரசம் தயாரிக்கப் பயன்படுத்தக்கூடாது. 10. ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயற்கை நிறமி கலந்த சர்பத், கூல்டிரிங்ஸ்(Carbonated Drinks) போன்றவை தவிர உடனுக்குடன் பரிமாறும் வகையில் தயாரிக்கப்படும் எந்த திரவ உணவுப் பொருளிலும் செயற்கை வண்ணங்களைக் கலக்கக்கூடாது. 11. திரவ ஆகாரங்களைத் தயாரிப்பில் ஈடுபடும் பணியாளர்கள் மற்றும் கையாளும் பணியாளர்கள் அனைவரும் தன்சுத்தம் பேணி கையுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்திருக்க வேண்டும். அவர்கள் “தொற்றுநோய்த் தாக்கமற்றவர்” என்பதிற்கு மருத்துவச் சான்று வைத்திருக்க வேண்டும்.12. பதநீரைக் கொள்முதல் செய்து அது கெட்டுப்போகும் முன்னர் விற்பனை செய்திடல் வேண்டும். குறிப்பாக பதநீர் இறக்கிய 6-7 மணி நேரத்திற்குள் விற்பனை செய்திடல் வேண்டும்.13. சுத்திகரிக்கப்பட்டு பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் பாட்டில்களை வெயில் படாதவாறு பாதுகாக்க வேண்டும்.14. கடையும் அதன் சுற்றுப்புறமும் ஈக்கள், பூச்சிகள் இல்லாமலும் குப்பைகள் இல்லாமலும் சுகாதாரமாக பராமரிக்கப்பட்டிருக்க வேண்டும்.15. கூழ் மோர், பால், தண்ணீர் போன்றவை துருப்பிடிக்காத சுத்தமான பாத்திரங்களில் வைத்திருக்கப்பட வேண்டும்.16. பழங்கள் சூரியஒளி/வெப்பம் படும் வகையில் இருந்தால் தரமும் சுவையும் மாறுபட்டு சீக்கிரம் அழுகிவிடும் தன்மையுடையவை என்பதால் பழங்களை சூரிய ஒளிஃவெப்பம் படாதவாறு, குளிர் பெட்டி (Chill box)) அல்லது குளிர்சாதன பெட்டியில் வைத்திருக்கவேண்டும்.17. பழரசம் குளிர்பானங்களில் உபயோகப்படுத்தப்படும் சர்க்கரை சர்க்கரை பாகு முதலியவை தண்ணீர் மற்றும் தூசி படாதவாறு மூடி வைத்து தனியான தேக்கரண்டி கொண்டு சுகாதாரமான முறையில் கையாளப்படவேண்டும்.18. சாறு எடுக்க பயன்படுத்தும் மிக்ஸி, ஜுசர், வடிகட்டி போன்றவை துருபிடிக்காமலும் தூய்மையாகவும் இருக்கவேண்டும்.19. பழரசம் குளிர்பானம் மோர் போன்றவற்றை பாத்திரங்களிலிருந்து கைப்படாத வண்ணம் எடுக்க, நீளமான கரண்டி உபபோகப்படுத்துவதை உறுதி செய்து கொள்ளவும்.20. பழச்சாறு, குளிர்பானங்களை பருக பயன்படுத்தும் ஸ்டராக்கள் (Straw) உணவுத் தரம் வாயந்ததாகவும் தூசி படாமலும் ஈக்கள் மொய்க்காமலும் மூடி வைக்கப்பட்டிருக்க வேண்டும்.21. திரவ ஆகாரங்களை உணவு தரமற்ற மற்றும் மறுசுழற்சி (Recycled) செய்யப்பட்ட மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப்களிலும், பைகளிலும் வழங்கக்கூடாது. 22. குப்பைகளை போட மூடியுடன் கூடிய குப்பை தொட்டிகளை உபயோகிக்க வேண்டும்.நுகர்வோர்களின் கவனத்திற்கு:1. கடையில் உணவு பாதுகாப்பு உரிமம் உள்ளதா என்பதை உறுதி செய்யவும். அவ்வாறு உணவு பாதுகாப்பு உரிமம் இல்லையெனில், அக்கடையில் எவ்வித உணவுப் பொருளையும் வாங்கக்கூடாது.2. பழரசம்/ப்ரூட் சாலட் செய்ய பயன்படுத்தும் பழங்கள் அழுகும் நிலையில் இருந்தால் அவைகளை தவிர்க்கவும்.3. சர்பத் மற்றும் குளிர்பானங்களில் அங்கீகரிக்கப்படாத நிறங்கள் சேர்க்கபட்டிருந்தால், அதனை வாங்குவதை தவிர்க்கவும்.4. குளிர் பானங்கள் பழரசங்கள் நேரடியாக குளிர்பெட்டியிலிருந்து பெறுவது நல்லது. உணவு வணிகர் ஐஸ்கட்டிகள் போட்டு தரும் குளிர்பானங்களையும், பழச்சாறுகளையும் வாங்கும் முன்னர் ஐஸ்கட்டிகள் உணவுத் தரம் வாய்ந்தவையா என்பதை உறுதி செய்துகொள்ளவும். 5. திறந்த நிலையில் உள்ள எந்த வகை திரவ ஆகாரங்களையும் நுகர்வோர் தவிர்க்க வேண்டும்.6. நுகர்வோர்கள் கோடை காலத்தில் அதிக அளவில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் பாதுகாப்பான திரவ ஆகாரங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். 7. தங்களது கலோரியின் தேவைக்குட்பட்டு பாட்டிலில் அடைக்கப்பட்ட கார்பனேற்றம் செய்யப்பட்ட கூல்டிரிங்ஸ் (Carbonated Drinks) போன்றவற்றை மிகவும் குறைவான அளவுடன் எடுத்துக்கொண்டு பழரசம் இளநீர் பதநீர் கரும்பு ஜுஸ் கூழ் வகைகள் போன்ற இயற்கை திரவ ஆகாரங்களை அதிகளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். 8. பொட்டலமிடப்பட்ட திரவ ஆகாரங்களின் பாக்கெட்டுகளில் தயாரிப்புத் தேதி காலாவதி நாள் உள்ளிட் அனைத்து லேபிள் விபரங்களும் உள்ளதா என்பதை கவனித்து வாங்க வேண்டும்.9. காரம் மிகுந்த மற்றும் அதிகம் சூடான உணவு வகைகளை அதிகம் எடுத்துக்கொள்ளக்கூடாது.10. நுகர்வோர் வாங்கும் திரவ உணவுப் பொருட்களின் தரத்தில் குறைபாடோ அல்லது அவற்றை விற்பனை செய்யும் கடையில் சுகாதாரக் குறைபாடோ காணப்பட்டால், 94440-42322 என்ற உணவு பாதுகாப்புத் துறையின் வாட்ஸ்அப் புகார் சேவை எண்ணிற்கு புகார் அளிக்கலாம் எனவே, கோடை காலத்தில் திரவ ஆகாரங்கள் உற்பத்தி அல்லது விற்பனை செய்யும் உணவு வணிகர்கள் உணவு பாதுகாப்பு நெறிமுறைகளைத் தவறாது கடைபிடிக்க வேண்டும் என்றும், தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நுகர்வோர்களும் திரவ ஆகாரங்களை கவனித்து வாங்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S,.அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் (FL1) மற்றும் FL2/FL3/FL3A/FL3AA மற்றும் FL 11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை, 2003-ம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணை விதி (1) The Tamil Nadu Liquor (Licence and Permit) Rules,1981-ன்படி, தொழிலாளர் தினமான 01.05.2026 (வெள்ளிக்கிழமை) அன்று தற்காலிகமாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேற்படி உத்தரவினை மீறி செயல்படும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் ; (FL1) மற்றும் FL2/FL3/ FL3A/FL3AA மற்றும் FL11 மதுபான உரிம ஸ்தலங்களின் உரிமதாரர்களின் மீது The Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981-ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S.,அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்-2026 (23.04.2026) அன்று நிறைவடைந்ததை முன்னிட்டு, மாவட்டத்தின் 7-சட்டமன்றத் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் (BU), கட்டுப்பாட்டு இயந்திரங்கள்(CU), விவிபேட் இயந்திரங்களை (VVPAT) பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ச.வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் மாவட்டத் தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில், தேர்தல் பொது பார்வையாளர்கள் மற்றும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் வைக்கப்பட்டு சீல் செய்யப்பட்டது.அதன்படி, இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் 269 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட 538 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 269 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 269 விவிபேட் இயந்திரங்களும், திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் 308 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட 309 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 309 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 315 விவிபேட் இயந்திரங்களும், சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் 291 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட 584 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 292 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 294 விவிபேட் இயந்திரங்களும்,சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 290 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட 292 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 292 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 296 விவிபேட் இயந்திரங்களும், விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் 281 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட 281 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 281 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 281 விவிபேட் இயந்திரங்களும், அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 270 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட 542 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 271 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 272 விவிபேட் இயந்திரங்களும், திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் 292 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட 586 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 293 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 297 விவிபேட் இயந்திரங்களும், என மொத்தம் 2,001 வாக்குச்சாவடிகளில், வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்பட்ட 3,132 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2,007 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 2,024 விவிபேட் இயந்திரங்கள் சட்டமன்றத் தொகுதி வாரியாக அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வைப்பறையில் வைத்து சீல் செய்யப்பட்டு, பலத்த காவல்துறை பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு மத்திய பாதுகாப்பு படை, தமிழ்நாடு அரசின் சிறப்பு காவல் படை, ஆயுதப்படை மற்றும் சட்டம் ஒழுங்கு காவலர்கள் என 4 அடுக்குப் பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.மேலும், இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், இதற்கு பாதுகாப்பாக மத்திய பாதுகாப்பு படையினர் 24 மணிநேரமும் கண்காணித்து வருகின்றனர். வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையை சிசிடிவி உடன் இணைக்கப்பட்டுள்ள தொலைக்காட்சி பெட்டி வாயிலாக அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள அறையில் 24 மணிநேரமும் கண்காணித்து கொள்ளலாம்.மேலும், மாவட்ட நிர்வாகம் சார்பில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை 24 மணிநேரமும் கண்காணிக்க உயர் நிலையான அலுவலர்களை ஒருங்கிணைத்து கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது என மாவட்டத் தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் சட்டமன்றத் தொகுதி கே.வி.எஸ்.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள பாதுகாப்பு வைப்பறையில் இருந்து (23.04.2026) நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தல்-2026க்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் வாக்குப்பதிவிற்கு தேவையான பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை அனுப்பி வைக்கும் பணிகளை மாவட்டத் தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (22.04.2026) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.விருதுநகர் மாவட்டத்தின் 7 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை பின்வருமாறு:இராஜபாளையம் (202): 2,14,192,ஸ்ரீவில்லிபுத்தூர் (203): 2,24,122சாத்தூர் (204): 2,29,330சிவகாசி (205): 2,28,205விருதுநகர் (206): 2,00,618அருப்புக்கோட்டை (207): 2,07,750திருச்சுழி (208): 2,05,301மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள்: 15,09,518 உள்ளனர்.7-சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 2,001 வாக்குச்சாவடிகளுக்கு ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் 29 மண்டலங்களில் உள்ள 269 வாக்குச்சாவடிகளுக்கு 538 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 269 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 269 விவிபேட் இயந்திரங்களும், திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் 29 மண்டலங்களில் உள்ள 308 வாக்குச்சாவடிகளுக்கு 308 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 308 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 308 விவிபேட் இயந்திரங்களும், சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் 22 மண்டலங்களில் உள்ள 291 வாக்குச்சாவடிகளுக்கு 582 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 291 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 291 விவிபேட் இயந்திரங்களும்,சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 25 மண்டலங்களில் உள்ள 290 வாக்குச்சாவடிகளுக்கு 290 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 290 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 290 விவிபேட் இயந்திரங்களும், விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் 28 மண்டலங்களில் உள்ள 281 வாக்குச்சாவடிகளுக்கு 281 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 281 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 281 விவிபேட் இயந்திரங்களும்,அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 26 மண்டலங்களில் உள்ள 270 வாக்குச்சாவடிகளுக்கு 540 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 270 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 270 விவிபேட் இயந்திரங்களும், திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் 29 மண்டலங்களில் உள்ள 292 வாக்குச்சாவடிகளுக்கு 584 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 292 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 292 விவிபேட் இயந்திரங்களும்,என ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த சட்டமன்ற தொகுதியிலிருந்து சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், 20 சதவீதம் கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களில் தயார் நிலையில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.மேலும், (22.04.2026) மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள 2,001 வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றவுள்ள பயிற்சி அளிக்கப்பட்ட 9,604 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கி பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 20 சதவீதம் கூடுதல் வாக்குச்சாவடி அலுவலர்கள் அந்தந்த சட்டமன்ற தொகுதியில் தயார் நிலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்குப்பதிவிற்கான ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, வாக்காளர்கள் அனைவரும் நாளை (23.04.2026) தவறாமல் வாக்களித்து தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுமாறு மாவட்டத் தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 23.04.2026 அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு, 206-விருதுநகர் சட்டமன்றத் தொகுதி 149-ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச் சாவடி மையம் மற்றும் 151-ஷத்திரிய பெண்கள் நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முழுமையாக பெண் அலுவலர்கள் பணியாற்றும் இளஞ்சிவப்பு நிற வாக்குச்சாவடி மையத்தினை (Pink Booth) மாவட்டத் தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் (22.04.2026) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.விருதுநகர் மாவட்டத்தில், 202-இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் 269 வாக்குச்சாவடி மையங்களில் 1,292 அலுவலர்களும், 203-திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் 308 வாக்குச்சாவடி மையங்களில் 1,480 அலுவலர்களும், 204-சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் 291 வாக்குச்சாவடி மையங்களில் 1,396 அலுவலர்களும், 205-சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 290 வாக்குச்சாவடி மையங்களில் 1,392 அலுவலர்களும், 206-விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் 281 வாக்குச்சாவடி மையங்களில் 1,348 அலுவலர்களும், 207-அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 270 வாக்குச்சாவடி மையங்களில் 1,296 அலுவலர்களும், 208-திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் 292 வாக்குச்சாவடி மையங்களில் 1,400 அலுவலர்களும் என மொத்தம் 7 சட்டமன்ற தொகுதிளில் 2,001 வாக்குச்சாவடி மையங்களில் 9,604 அலுவலர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.மாதிரி வாக்குச்சாவடி மையம்:மாதிரி வாக்குச்சாவடி என்பது தேர்தல் ஆணையத்தால் வாக்காளர்களைக் கவரும் வகையிலும், வாக்களிப்பதை எளிமைப்படுத்தும் வகையிலும் சிறப்பாக வடிவமைக்கப்படுவதாகும்.இந்த வாக்குச்சாவடி முழுவதும் வண்ண அலங்காரங்கள், ஓவியங்கள் மற்றும் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் பதாகைகள் இருக்கும். மேலும் நிழற்பந்தல், குடிநீர் வசதி, நாற்காலிகள் மற்றும் கழிப்பறை வசதிகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்களிக்க சாய்தளங்கள், சக்கர நாற்காலிகள் மற்றும் சிறப்பு வரிசைகள் இருக்கும்.அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் 202-இராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி 95-எஸ்.எஸ்.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 203-திருவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதி 261-குருநான சம்மந்தர் இந்து உயர்நிலைப்பள்ளியிலும், 204-சாத்தூர் சட்டமன்றத் தொகுதி 280-மேலகாந்தி நகர் நகராட்சி தொடக்கப்பள்ளியிலும்,205-சிவகாசி சட்டமன்றத் தொகுதி 57-சாட்சியாபுரம் எஸ்.சி.எம்.எஸ்.பெண்கள் உயர்நிலைப்பள்ளியிலும், 206- விருதுநகர் சட்டமன்றத் தொகுதி 149-ஷத்திரிய பெண்கள் உயர்நிலைப்பள்ளியிலும், 207-அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதி 125-தேவாங்கர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 208-திருச்சுழி சட்டமன்றத் தொகுதி 44-கலுவனசேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும் என ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் ஒரு மாதிரி வாக்குச் சாவடி வீதம் 7-மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இளஞ்சிவப்பு நிற வாக்குச்சாவடி (Pink Booth): ஒரு வாக்குச்சாவடியின் தலைமை அலுவலர், வாக்குப்பதிவு அலுவலர்கள், காவல்துறை மற்றும் பாதுகாப்பு பணியாளர்கள் என, அனைவரும் பெண்களாகவே இருப்பார்கள். பெண் வாக்காளர்கள், குறிப்பாக முதியவர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள், என அனைவரும் எவ்வித அச்சமும் இன்றி பாதுகாப்பாக வாக்களிக்க இது உதவுகிறது.பிங்க் பூத்களில் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி, குடிநீர் மற்றும் நிழற்கூடங்கள் போன்றவை உள்ளன. பெண் வாக்காளர்கள் பொது வாக்குச்சாவடியில், நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கலாம். இது பெண்களுக்கான அதிகாரமளித்தல் மற்றும் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் 202-இராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி 94-ஏ.கே.டி.ஆர்.பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 203-திருவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதி 259-மகாராஜபுரம் நாகம்மாள் ராஜையா தேசிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 204-சாத்தூர் சட்டமன்றத் தொகுதி 201-மேட்டுர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும்,205-சிவகாசி சட்டமன்றத் தொகுதி 239-எஸ்.எச்.என்.பெண்கள் நடுநிலைப்பள்ளியிலும், 206-விருதுநகர் சட்டமன்றத் தொகுதி 151-ஷத்திரிய பெண்கள் நடுநிலைப்பள்ளியிலும், 207-அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதி 145-கஞ்சநாயக்கன்பட்டி கம்மவார் இந்து தொடக்கப்பள்ளியிலும், 208-திருச்சுழி சட்டமன்றத் தொகுதி 57-காரியாபட்டி அமலா உயர்நிலைப்பள்ளியிலும் என ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் ஒரு இளஞ்சிவப்பு நிற (Pink Booth) வாக்குச் சாவடி வீதம் மொத்தம் 7-மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.அதன்படி, 206-விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மையம் மற்றும் முழுமையாக பெண் அலுவலர்கள் பணியாற்றும் வாக்குச்சாவடி மையத்தினை (பிங்க் பூத்) மாவட்டத் தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது, ஜனநாயகக் கடமையான தேர்தல் பணியில் எவ்விதத் தொய்வுமின்றி செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 23.04.2026 அன்று நடைபெறுவதை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள 7-சட்டமன்றத் தொகுதிகளிலும் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள 9,604 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (நிலை 1, நிலை 2, நிலை 3)) , 157-நுண் பார்வையாளர்கள் மற்றும் 1,010 வாக்குச்சாவடி அமைவிடங்களில் பணிபுரியவுள்ள 1,073 காவல் துறை அலுவலர்களை இணைய வழியில் சீரற்றமயமாக்கல்(Randomization) முறையில் ஒதுக்கீடு செய்யும் பணிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (21.04.2026) மாவட்டத் தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில், தேர்தல் பொது பார்வையாளர்கள் திரு.உதயன் மிஷ்ரா,I A S., அவர்கள்(இராஜபாளையம், மற்றும் திருவில்லிபுத்தூர்), திரு.அரவிந்த் மீனா,I A S., அவர்கள்(சாத்தூர் மற்றும் சிவகாசி), திரு.ரஞ்சித் குமார் லால்,I A S., அவர்கள்(விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை), திரு.சஞ்சீவ் ஸ்ரீவாஸ்தவா,I A S ., அவர்கள்(திருச்சுழி), மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மரு.ந.ஸ்ரீநாதா,இ.கா.ப., ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2026 னை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள 7-சட்டமன்றத் தொகுதிகளிலும் மொத்தம் 2001 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு, அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியவுள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு இயந்திர செயல்முறை குறித்து பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.அந்த வகையில், மாவட்டத்தில் உள்ள 7-சட்டமன்றத் தொகுதிகளுக்கும் மொத்தம் 9,604 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (நிலை 1, நிலை 2, நிலை 3)), 157-நுண் பார்வையாளர்கள் மற்றும் 1,010 வாக்குச்சாவடி அமைவிடங்களில் பணிபுரியவுள்ள 1,073 காவலர்கள் தேர்தல் பணிகளில் அமர்த்தப்பட உள்ளனர்.அதனடிப்படையில், இன்றைய தினம் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், நுண் பார்வையாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி அமைவிடங்களில் பணிபுரியவுள்ள காவல் துறை அலுவலர்களை இணைய வழியில் சீரற்றமயமாக்கல்(Randomization) முறையில் ஒதுக்கீடு செய்யும் பணிகள் மாவட்டத் தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) திரு.சோமசுந்தர சீனிவாசன், தேர்தல் தனி வட்டாட்சியர் திரு.சீனிவாசன், தேர்தல் தொடர்பான அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S,. அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி இன்று பல்வேறு சிறப்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.இந்நிகழ்ச்சிகளில் அரசு அலுவலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் உற்சாகமாக பங்கேற்றனர். “ஒவ்வொரு வாக்கும் முக்கியம்” என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்கள் அனைவரும் "எனது வாக்கு விற்பனைக்கு அல்ல" மற்றும் "ஜனநாயகக் கடமையை தவறாமல் ஆற்றுவேன்" என்ற உயரிய நோக்கை வலியுறுத்தி, மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் அனைவரும் இணைந்து நேர்மையாகவும், தவறாமலும் வாக்களிப்போம் என விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.மேலும், நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் மூலம் வாக்குரிமையின் அவசியம் மற்றும் ஜனநாயகத்தின் வலிமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில், வாக்களிப்பின் முக்கியத்துவம் குறித்த பல்வேறு கோஷங்கள் முழங்கப்பட்டன.இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் இணைந்து மனித சங்கிலி அமைத்து, 100% வாக்குப்பதிவை உறுதி செய்வோம் என்ற ஒற்றுமைச் செய்தியை வெளிப்படுத்தினர். மேலும், நவதானியங்கள் கொண்டு அமைக்கப்பட்ட கோலம் மூலம் வாக்களிக்க வேண்டிய அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது.இந்நிகழ்வின் போது, வரவிருக்கும் தேர்தலில் அனைவரும் தங்களின் வாக்குரிமையை தவறாமல் பயன்படுத்தி, 100% வாக்குப்பதிவை எட்ட ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
சென்னை, தொழிலாளர் ஆணையர் திரு.சி.அ ராமன், I A S. அவர்களின் உத்தரவின்படி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சட்டமன்றங்களுக்கும் பொதுத்தேர்தல் வருகின்ற 23.04.2026 அன்றும், மேற்கு வங்கத்தில் முதல் கட்டமாக 23.04.2026 நாளன்றும் இரண்டாம் கட்டமாக 29.04.2026 நாளன்றும் சட்டமன்றப் பொதுத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அன்றைய தினம் 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவம் சட்டம் மற்றும் விதி 135B-ன் அடிப்படையில், தேர்தல் ஆணையம் அளித்துள்ள அறிவுரையின்படி தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகள், மற்றும் வர்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தோட்ட நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி மற்றும் சுருட்டு நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் தினக்கூலி, தற்காலிக, ஒப்பந்த தொழிாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் வாக்களிக்கும் பொருட்டு, வாக்குப்பதிவு நாளான 23.04.2026 அன்று ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், மேற்கு வங்காளத்தில் 23.04.2026 மற்றும் 29.04.2026 ஆகிய தேதிகளில் பொதுத் தேர்தல் நடைபெறுவதாலும், மேற்கு வங்காளத்திலிருந்து வந்து தமிழகத்தில் பணிபுரியும் அம்மாநிலத் தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திற்குச் சென்று வாக்களிக்க ஏதுவாக மேற்படி தினங்களில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன் தொடர்ச்சியாக தேர்தல் தினமான 23.04.2026 மற்றும் 29.04.2026 ஆகிய தினங்களில் மேற்படி தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்காத நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு தொழிலாளர்கள் புகார்களை தெரிவிப்பதற்காக விருதுநகர் மாவட்டத்தில், விருதுநகர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அமலாக்கம் தலைமையில் அவரது ஆட்சி எல்கைக்குட்பட்ட பகுதிகளுக்கான தேர்தல் கட்டுப்பாட்டு அறை விருதுநகர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள விருதுநகர், தொழிலாளர் உதவி ஆணையர் அமலாக்கம் அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.மேலும் தொழிலாளர்களுக்கு தேர்தல் தினத்தன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிப்பது தொடர்பான புகார்களை 04562-252130, 94453 98763, 91594 43377, 98653 90006 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருமதி பா ஆனந்தி அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்-2026-ஐ முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள 9,604 அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட மறு பயிற்சி வகுப்புகள் (18.04.2026) பல்வேறு மையங்களில் நடைபெற்றன.சாத்தூர் எஸ்.ஆர்.என்.எம் கல்லூரி மையத்தில் நடைபெற்ற பயிற்சி வகுப்பினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என்.ஓ. சுகபுத்ரா, I A S,. அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் (நிலை 1, 2, 3) ஆகியோருக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாளுதல் மற்றும் வாக்குப்பதிவு நடைமுறைகள் குறித்து அந்தந்தத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் மண்டல அலுவலர்கள் விரிவான பயிற்சி அளித்தனர்.தொகுதிவாரியாகப் பங்கேற்ற அலுவலர்களின் விவரம்:202-இராஜபாளையம்:-பி.ஏ.சின்னையா ராஜா நினைவு மேல்நிலைப்பள்ளி - 1,292 அலுவலர்கள்.203-திருவில்லிபுத்தூர்: கலசலிங்கம் பல்கலைக்கழகம் - 1,480 அலுவலர்கள்.204-சாத்தூர் எஸ்.ஆர்.என்.எம் கல்லூரி - 1,396 அலுவலர்கள்.205-சிவகாசி:எஸ்.எச்.என்.வி. மேல்நிலைப் பள்ளி - 1,392 அலுவலர்கள்.206-விருதுநகர்: கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப்பள்ளி - 1,348 அலுவலர்கள்.207-அருப்புக்கோட்டை:தேவாங்கர் கலைக்கல்லூரி - 1,296 அலுவலர்கள்.208-திருச்சுழி: சேது தொழில் நுட்ப பயிலகம் - 1,400 அலுவலர்கள்.ஒட்டுமொத்தமாக மாவட்டத்தில் மொத்தம் 9,604 அலுவலர்கள் இந்தப் பயிற்சியில் பங்கேற்றனர். பயிற்சி வகுப்புகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசுகையில், "ஜனநாயகக் கடமையான தேர்தல் பணியில் எவ்விதத் தொய்வுமின்றி செயல்பட இந்தப் பயிற்சி மிக அவசியமானது. நுணுக்கமாக வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகளை இப்போதே முழுமையாகக் கற்றுக்கொள்ள வேண்டும். தேர்தல் நாளன்று எவ்விதப் பதற்றமுமின்றி அலுவலர்கள் நேர்த்தியாகச் செயல்பட வேண்டும்" என அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.