25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

May 13, 2026

தென்மேற்கு பருவ மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ,அவர்கள் தலைமையிலான அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (11.05.2026) அன்று தென்மேற்கு பருவ மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I.A.S.., அவர்கள் தலைமையில், அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்ததாவது:மழையினால் பாதிப்புக்குள்ளாகும் இடங்களை கண்டறிந்து பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு ஏதுவாக,  நிவாரண மையங்களை தயார் நிலையில் வைத்து அதன் பொறுப்பு அலுவலர்களுக்கு சம்மந்தப்பட்ட துறையினருடன் சேர்ந்து ஆய்வு கூட்டம் நடத்த வேண்டும்.இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் பேரிடர் காலங்களில் பொதுமக்களை பாதுகாக்க சட்டம் ஒழுங்கு கடைப்பிடிக்க வேண்டும். மழைக்காலங்களில் சாலையோரம் மரங்கள் விழும் பொழுது போக்குவரத்து நெரிசலை சரி செய்ய வேண்டும்.மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வட்ட மற்றும் வட்டார அளவில் மாதிரி வெள்ள மீட்பு ஒத்திகைகள் (Mock Drills)  நடத்தி நாளேடுகளில் விளம்பரம் செய்ய வேண்டும்.அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களும்  MI Tank ஆய்வு செய்திருக்க வேண்டும். வெள்ள  நீர் சீரான முறையில் செல்வதை தடுக்கும் முட்செடிகள் மற்றும் புதர்களை அகற்றுதல் சிறுபாசனக் கண்மாய்கள், ஊரணி, குளங்கள் திறந்தவெளிக் கிணறுகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், இவைகளிலுள்ள விரிசல்கள், உடைப்புகளை சரி செய்தல், குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் சூழ்வதை தவிர்த்தல், போதிய அளவு மணல் மூட்டைகள், சாக்குப் பைகளை உடைப்புகளை சரிசெய்யும் பொருட்டு இருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்.பொதுப்பணித்துறையின் கட்டுபாட்டில் உள்ள கண்மாய்கள், குளங்கள், ஊரணிகளை ஆய்வு செய்ய வேண்டும். வெள்ள பாதிப்புகளை சீரமைக்கும் பொருட்டு ஜேசிபி மற்றும் கனரக வாகனங்களின் ஓட்டுநர்கள் மற்றும் உறுதியாளர்கள் கைபேசி எண், மாவட்ட நிலை அதிகாரிகளின் தொடர்பு எண்களை பெற்று ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.மழை வெள்ள காலங்களில் சாலைகளில் மரங்கள் சாய்ந்து விழுதல் மற்றும் மழை வெள்ளத்தினால் சாலைகள் சேதமடைந்து போக்குவரத்து பாதிக்கப்படுதல் போன்ற இடங்களில் உடனடியாக சீரமைப்புப் பணிகள் செய்ய தேவையான நவீன உபகரணங்கள், வாகனங்கள் மற்றும் மணல் மூடைகளை தயார் நிலையில் போதுமான அளவு வேண்டும்.அத்தியாவசியப் பொருட்களான அரிசி, பருப்பு, மண்ணெண்ணெய்,  சாக்குப் பைகள் மற்றும் இதர உணவுப் பொருட்களை போதுமான அளவு இருப்பு வைத்துக் கொள்ளவும்,மற்றும் மனிதவளம் உள்ளதை உறுதி செய்யவும்,  நியாய விலைக் கடைகளில் போதுமான அளவு அத்தியாவசியப் பொருட்கள் இருப்பு வைக்கவும்,  மண்ணெண்ணெய், எரிவாயு மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரிகளுக்கு தேவையான அளவு இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்.மருத்துவமனையில் நோய்த்தடுப்பு மருந்துகள், உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் தொற்று நோய் தடுப்பு மருந்துகள் தேவையான அளவு இருப்பு உள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.பகுதி வாரியாக மருத்துவக் குழுக்கள் அமைத்து அவற்றை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். ஆம்புலன்ஸ், ஜெனரேட்டர் போன்ற வசதிகளை மருத்துவமனையில் முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.உயர்அழுத்த மற்றும் தாழ்வழுத்த மின் கம்பி, மின்மாற்றிகளை முறையாக பராமரிப்பு செய்ய வேண்டும்.  தாழ்வாக உள்ள மின்கம்பிகளை உடனடியாக சரி செய்ய வேண்டும்பேரிடர் காலங்களில் மழை வெள்ளதால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு வட்டார போக்குவரத்து துறையில் இருந்து வாகனங்களை ஏற்பாடு செய்தும், அரசு துறைகளில் உள்ள வாகனங்களை ஆய்வு செய்து நல்ல நிலையில் வைத்திருக்க வேண்டும் எனத் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட  வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, சார் ஆட்சியர் திரு.முகமது இஃர்பான், திட்ட  அலுவலர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.வீ.கேசவதாசன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

May 12, 2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  (11.05.2026) மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.          இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நல உதவித்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது. மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தகுடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, கோரிக்கை மனுக்களும் பெறப்பட்டது.இம்மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்க ஒப்படைக்கப்பட்டது. இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆனந்தி, திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.வீ.கேசவதாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திருமதி பிர்தௌஸ் பாத்திமா, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

May 12, 2026

பல்வேறு துறைகளில், பன்முக திறமை கொண்டவர்களுக்கு "பத்ம விருது" வழங்க தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .

பன்முக திறமை கொண்டவர்களுக்கு 2027-ஆம் ஆண்டு ஜனவரி -26-ஆம் தேதி குடியரசு தின விழாவில் "பத்ம விருது" வழங்க தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.2025-ம் ஆண்டு பத்ம விருது வழங்கும் பொருட்டு கருத்துருக்கள் அனுப்புவதற்கான விதிமுறைகள்:1. விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த தகுதியான நபர்கள் (ஆண்/பெண்) விண்ணப்பிக்கலாம்.2. கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப் பணி, அறிவியல், பொறியியல், பொது விவகாரங்கள், குடிமைப்பணிகள், வர்த்தகம் மற்றும் தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிக சிறந்து விளங்குவராக இருத்தல் வோர்டும்.3. பத்ம விருது குறித்த விவரங்கள் அனைத்தும் இணையதளத்தில் (https://awards.gov.in) 15.03.2026 முதல் வெளியிடப்பட்டுள்ளது.4. இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 31.07.2026 இணையதளம் மூலம் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.5. இணையதளத்தில் பதிவு செய்த பிறகு அனைத்து ஆவணங்களையும் விருதுநகர் மாவட்ட சமூகநல அலுவலகத்தில், கையேடாக (Booklet) தயார் செய்து தமிழ் (ம) ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து தலா 3 நகல்கள் 31.07.2026-ற்குள் சமர்ப்பிக்க வேண்டும்.மேலும், கருத்துருக்களை மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், விருதுநகர். 04562-252 701 என்ற முகவரிக்கு சமர்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

May 12, 2026

15.05.2026 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் .

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக ஒவ்வொரு மாதமும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுவருகிறது. அதன்படி, படித்த வேலை தேடும் இளைஞர்களுக்காக வரும் 15.05.2026 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 03.00 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், விருதுநகர் சூலக்கரையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது.இத்தனியார் வேலைவாய்ப்பு முகாமில் ADYAR ANANDHA BHAVAN, SAMARTHANAM TRUST FOR DISABLED, CEPHAS MEDICAL, VISTAAR FINANCE, ABIS FOODS AND PROTEIN PVT LTD போன்ற 20க்கும் மேற்பட்ட பிரபல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு I.T.I.டிப்ளமோ மற்றும் பொறியியல் படிப்பு ஆகிய கல்வித் தகுதி உடைய பணியாளர்களை தெரிவு செய்யவுள்ளார்கள். இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்த விரும்பும் வேலைநாடுநர்கள் 15.05.2026 அன்று வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பாக www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களை பதிவு செய்துவிட்டு சுய விவரச் சான்றிதழ் (RESUME) அனைத்து கல்விச்சான்றிதழ், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது மேலும், இச்சேவையானது முற்றிலும் கட்டணமில்லா சேவையாகும்.இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அவர்களை நேரிலோ அல்லது vnrjobfair@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.   

May 11, 2026

விருதுநகர் மாவட்டத்தின் இரு கண்கள் - கல்விக்கு ‘திசை’..வாழ்விற்கு ‘உயிர்’! திசை’யால் உயரும் கல்வி..‘உயிர்’ பெறும் வாழ்வாதாரம்.

ஒரு சமூகத்தின் உண்மையான வலிமை அதன் விளிம்புநிலை மக்களின் முன்னேற்றத்தில்தான் அடங்கியுள்ளது. அந்த வகையில், விருதுநகர் மாவட்ட நிர்வாகம் கல்வி மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தி வரும் “திசை” மற்றும் “உயிர்” ஆகிய இரண்டு சிறப்புத் திட்டங்கள், மாவட்டத்தின் பின்தங்கிய நிலையிலுள்ள மக்களின் சமூக மற்றும் பொருளாதார வாழ்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி, அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்திற்காகவும், எதிர்கால நம்பிக்கைக்கு வலுசேர்க்கும் அடித்தளமாக அமைந்துள்ளன."விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் தொலைநோக்கு பார்வையுடன், சமூகப் பொறுப்பு நிதி (CSR) மற்றும் மாவட்ட கனிம அறக்கட்டளை நிதி(District Mineral Fund) யைப் பயன்படுத்தி இத்திட்டங்கள் மிகச் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. திசை: கனவுகளைத் துரத்தும் மாணவர்களுக்கான கலங்கரை விளக்கம்பள்ளிப் படிப்பை இடைநிறுத்திய மாணவர்களை மீண்டும் கல்வியோட்டத்தில் இணைப்பதே ‘திசை’ திட்டத்தின் பிரதான நோக்கம். கடந்த ஜனவரி 10-ஆம் தேதி தொடங்கப்பட்ட இத்திட்டம், குறுகிய காலத்திலேயே வியக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது கள ஆய்வு மற்றும் மாணவர்களின் புதிய பாதை:   சுமார் 662 மாணவர்களுடன் அதிகாரிகள் நேரில் கலந்துரையாடினர். அதிகாரிகள் நேரடியாகக் களமிறங்கி, மாணவர்களின் சூழலை நேரில் கேட்டறிந்ததோடு, அவர்களது கல்வித் தடைகளை நீக்க ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்கினர்.    இதன் விளைவாக 78 மாணவர்கள் மீண்டும் பள்ளிகளிலும், 14 பேர் தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் தங்களது கல்விப் பயணத்தைத் தொடர்ந்துள்ளனர்.சிகரம் தொடு: தேசியத் தேர்வுகளுக்கான சிறப்புப் பயிற்சி:       அரசுப் பள்ளி மாணவர்கள் ஐ.ஐ.டி (IIT) போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் நுழைய ஏதுவாக ‘வெற்றிப் பள்ளி’ பயிற்சி முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதில் JEE தேர்வில் 11 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். NEET தேர்விற்காக 407 மாணவர்களின் கட்டணத்தை மாவட்ட நிர்வாகமே ஏற்று, அவர்களுக்குச் சிறப்புப் பயிற்சிகளையும் வழங்கியுள்ளது.மேலும், 1,656 மாணவர்கள் ஆண்டு முழுவதும் நடைபெறும் கட்டமைக்கப்பட்ட பயிற்சித் திட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர்.தொடர் கண்காணிப்பு:   மாணவர்களின் முன்னேற்றத்தை ஓராண்டு முழுவதும் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரத்யேகக் ‘கல்வி கட்டுப்பாட்டு அறை’ அமைக்கப்பட்டு, வழிகாட்டுதல் ஆசிரியர்கள் மூலம் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.உயிர்: தற்சார்பு வாழ்வாதாரத்திற்கான உன்னத முயற்சி பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளி குழந்தைகளைப் பராமரிக்கும் தாய்மார்கள் மற்றும் சட்டத்துடன் முரண்படும் நிலையில் உள்ள (Children in Conflict with Law) இளஞ்சிறார்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் ‘உயிர்’ திட்டம் (தொடக்கம்: ஜனவரி 13) வடிவமைக்கப்பட்டுள்ளது. இளஞ்சிறார்களுக்கான மறுவாழ்வு:கடந்த 2026 மார்ச் 5 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெற்ற விழாக்களில், சட்டத்திற்கு முரண்பட்ட இளஞ்சிறார்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காகத் தையல் இயந்திரங்கள், சமையல் உபகரணங்கள் உள்ளிட்ட தொழில் கருவிகள் வழங்கப்பட்டன.மாவட்ட கனிம அறக்கட்டளை நிதியிலிருந்து (DMFT) ரூ.1,71,315 மதிப்பிலான உபகரணங்கள் இதற்காக ஒதுக்கப்பட்டன.உயிர் துரித உணவகம்:இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ‘உயிர் துரித உணவகம்’ (UYIR Fast Food) அமைப்பதற்கான நடமாடும் தள்ளுவண்டி உணவகங்கள் வழங்கப்பட்டுள்ளன. இது பாதிக்கப்பட்ட இளைஞர்கள் சுயதொழில் மூலம் கௌரவமான வாழ்வைப் பெற வழிவகை செய்கிறது.திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள்: 100 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு நடத்தப்பட்ட நேர்காணலின் அடிப்படையில், தையல் பயிற்சிக்காக 36 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 10 பேர் பயிற்சியை முடித்துள்ளனர். பேக்கரி மற்றும் குக்கீஸ் தயாரிப்பு பயிற்சியில் 10 பேர் சொந்தமாகத் தொழில் தொடங்கத் தயாராக உள்ளனர்.உயிர் டிப் டீ:  சதுரகிரி மலைப்பகுதி பழங்குடியின மக்கள் தயாரிக்கும் தேயிலைப் பொருட்களை “உயிர் டிப் டீ” என்ற பெயரில் சந்தைப்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன. சுமார் 30 பேர் இதில் பயிற்சி பெற்றுள்ளனர்.புதிய வாய்ப்புகள்:  ஆட்டோ ஓட்டுநர் பயிற்சியின் மூலம் ஓட்டுநர் உரிமம் பெற்றுத் தரப்பட்டுள்ளது. தற்போது மானிய விலையில் ஆட்டோ வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் ஒரு இளைஞரும், ஒரு ஆதரவற்ற இளம் பெண்ணும் முதற்கட்டப் பயனாளிகளாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.தேசிய அளவில் அங்கீகாரம்:        விருதுநகர் மாவட்டத்தின் இந்தத் தற்சார்பு மற்றும் கல்வி மேம்பாட்டுத் திட்டங்கள் அண்மையில் புதுடெல்லியில் நடைபெற்ற தேசியக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு, பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளன.மாவட்ட நிர்வாகத்தின் அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதால், கடந்த நான்கு மாதங்களில் ‘திசை’ மற்றும் ‘உயிர்’ திட்டங்கள் விளிம்பு நிலை மக்களின் வாழ்வில் நம்பிக்கையை விதைத்துள்ளன.  இத்திட்டங்கள் வெறும் அரசுத் திட்டங்களாக மட்டுமல்லாமல், சமூகத்தின் அடித்தட்டு மக்களின் தன்னம்பிக்கையை மீட்டெடுத்து, அவர்களைத் தற்சார்புப் பாதையில் அழைத்துச் செல்லும் ஒரு உந்துசக்தியாகத் திகழ்கிறது.மாவட்ட முதன்மை நீதிபதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்களின் ஒருங்கிணைந்த செயல்பாட்டினால், இத்திட்டங்கள் விளிம்புநிலை மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துகிறது.குறிப்பாக இளஞ்சிறார்கள் மற்றும் பெண்களின் மறுவாழ்விற்கு ஒரு புதிய பாதையை அமைத்துக் கொடுத்துள்ளன. இத்தகைய ஒருங்கிணைந்த அணுகுமுறை சமூக மாற்றத்திற்கான ஒரு வலிமையான பங்களிப்பை வழங்குகிறது. "தனிமனித முன்னேற்றமே சமூகத்தின் முன்னேற்றம் என்ற கோட்பாட்டிற்கு வலுசேர்க்கும் இத்திட்டங்கள், வரும் காலங்களில் இன்னும் பல எளிய மக்களின் வாழ்வில் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கித் தரும்.”உயிர் திட்டத்தின் கீழ் பயன் பெற்ற பயனாளி தெரிவிக்கையில் எனது பெயர் மாரீஸ்வரன். நான் விருதுநகர் மாவட்டம் தாணிப்பாறை ராம் நகரில் பழங்குடியினர் குடியிருப்பில் வசித்து வருகிறேன்.  முன்னதாக நான் வாடகை ஆட்டோ ஓட்டி வந்தேன். தற்போது மாவட்ட நிர்வாகத்தின் உயிர் திட்டத்தின் கீழ் எனக்கு பேட்ச் ஓட்டுநர் உரிமை இலவசமாக வழங்கப்பட்டு இருக்கின்றது. மேலும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எனக்கு புதிய ஆட்டோவினை வழங்க இருக்கிறார்கள்.   இந்த ஆட்டோ மூலம் என் வாழ்வாதாரத்தை நான் உயர்த்திக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. இதற்காக மாவட்ட நிர்வாகத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.கைப்பேசி எண்: 88381 01609திசை திட்டத்தின் கீழ் உயர்கல்வி போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்கள் தெரிவிக்கையில்:          நாங்கள் 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு, அருகில் உள்ள ஏதாவது ஒரு கல்லூரிக்கு சென்று பயிலாம் என்று நினைத்திருந்தோம்.மேலும் மதுரை, சென்னை ஆகிய நகரங்களில் உள்ள அரசு கல்லூரிகளில் பயில்வதற்கும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயில்வதற்கும் மிகவும் சிரமம் என்றும், அதற்காக செலவு நிறைய ஆகும் என்றும் ஒரு எண்ணம் இருந்தது.         ஆனால் மாவட்ட நிர்வாகத்தின் திசை என்ற உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் எங்களுக்கு நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதில் நீட் நுழைவுத் தேர்வுக்கு சுமார் 310 மாணவர்கள் நீட் நுழைவுத் தேர்வை எழுதியுள்ளனர்.         ஜே.இ.இ நுழைவுத் தேர்வுக்கு 79 மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு, முதன்மை தேர்வில் 11 மாணவர்கள் தேர்ச்சி பெற்று, தற்போது தனியார் போட்டித்தேர்வு மையத்தில் மேல்நிலைத் தேர்வுக்காக பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கான செலவுகள் அனைத்தையும் மாவட்ட நிர்வாகமே வழங்கி வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் எங்களுக்கு இலவசமாக வழிகாட்டுதல் மற்றும் தொடர்ச்சியான பயிற்சிகள் வழங்கி வரும் மாவட்ட நிர்வாகத்திற்கு எங்கள் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் என தெரிவித்தனர்.

May 09, 2026

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், பயிர்களை வெப்பத்தின் பாதிப்பிலிருந்து பாதுகாக்க விவசாயிகள் உரிய வழிமுறைகளை பின்பற்றுமாறு மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தல்.

விருதுநகர் மாவட்டத்தில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், பயிர்களை வெப்பத்தின் பாதிப்பிலிருந்து பாதுகாப்பது குறித்து விவசாயிகளுக்கு உழவர் நலத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல், மக்காச்சோளம் பயறு வகைள், எள், நிலக்கடலை, காய்கறிகள், மலர்கள் மற்றும் பழப்பயிர்களில் கோடை வெப்பம் காரணமாக மலர் உதிர்தல், காய் பிடிப்பு குறைதல் மற்றும் கருகல் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனைத் தவிர்க்க விவசாயிகள் கீழ்க்கண்ட மேலாண்மை முறைகளைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.நீர் மேலாண்மை:பயிர்களுக்குச் சொட்டு நீர்ப்பாசனம் அல்லது தெளிப்பு நீர்ப்பாசன முறையைப் பயன்படுத்த வேண்டும். நீர் ஆவியாவதைத் தவிர்க்க அதிகாலை அல்லது மாலை வேளைகளில் மட்டுமே நீர் பாசனம் செய்தல் வேண்டும்.பண்ணைப் பணிகள்:அதிக வெப்பம் நிலவும் நேரங்களான காலை 11.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை பண்ணை வேலைகளையும், புதிய நாற்று நடும் பணிகள் மேற்கொள்வதை விவசாயிகள் தவிர்க்க வேண்டும்.கோடை உழவு:கோடை உழவு மேற்கொள்வதன் மூலம் நிலத்தில் உள்ள பூச்சியின முட்டைகளை அழிக்கவும், மழைநீரைச் சேமித்து, மண்ணின் ஈரப்பதம் பாதுகாக்கப்படும்.நிழல் வலை மற்றும் மூடாக்கு:நாற்றங்கால் மற்றும் காய்கறிப் பயிர்களைப் பாதுகாக்க நிழல் வலைக் கூடாரங்களை அமைக்கலாம். செடிகளின் அடிப்பகுதிகளில் காய்ந்த இலைகள், தென்னை நார்க்கழிவு அல்லது பாலித்தீன் தாள்களைக் கொண்டு மூடாக்கு அமைப்பதன் மூலம் மண் ஈரப்பதம் காக்கப்படும். இலைவழித் தெளிப்பு:வெப்ப அழுத்தத்தைக் குறைக்க 1 சதவீத பொட்டாசியம் குளோரைடு (KCL) கரைசலை இலைகளின் மேல் தெளிப்பதன் மூலம் நீர் ஆவியாதலைக் குறைத்து பயிர்களை பாதுகாக்கலாம்.இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் கோடை வெயிலினால் ஏற்படும் பயிர் சேதத்தைத் தவிர்த்து, நிலையான மகசூலைப் பெற முடியும் என மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

May 09, 2026

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக 2026-2027 கல்வியாண்டுக்கான 6, 7 மற்றும் 8 வகுப்பு பயிலும் பள்ளி, மாணவ, மாணவியர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பங்கள்.

பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் விளையாட்டுத் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப, அறிவியல் பூர்வமான விளையாட்டு பயிற்சி, வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய முதன்மை நிலை விளையாட்டு மையங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன.இதனடிப்படையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக 2026-2027 கல்வியாண்டுக்கான 6, 7 மற்றும் 8 வகுப்பு பயிலும் பள்ளி, மாணவ, மாணவியர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளன.விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வமுள்ள மாணவ / மாணவியர்கள் முதன்மை நிலை விளையாட்டு மைய சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப்படிவத்தை 08.04.2026 -ஆம் தேதி முதல் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.விளையாட்டு விடுதிக்கான ஆன்லைன் வாயிலான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க கடைசி நாள் 11.05.2026 அன்று மாலை 6.00 மணி ஆகும். முதன்மை நிலை விளையாட்டு மையத்தில் சேர்வதற்கான நேரடி மாநில அளவிலான தேர்வு போட்டிகள் வருகின்ற 12.05.2026 அன்று காலை 7.00 மணியளவில் நடைபெற உள்ளது.மாணவியர்களுக்கான டென்னிஸ் விளையாட்டுப் போட்டிகள் நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டரங்கத்திலும், மாணவ மாணவியர்களுக்கான ஜிம்னாஸ்டிக்ஸ் AGB நீச்சல் குள வளாகம், வேளச்சேரியிலும், மாணவ மாணவியர்களுக்கான வில்வித்தை, சைக்கிளிங், இறகுப்பந்து, மேசைப்பந்து மற்றும் கனோயிங் (மாணவர்கள் மட்டும்), கையாக்கிங் (மாணவர்கள் மட்டும்) தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம், மேலக்கோட்டையூர், செங்கல்பட்டிலும் 12.05.2026 அன்று காலை 7.00 மணி முதல் நடைபெற உள்ளது.  நேரடி மாநில அளவிலான தேர்வில் சிறப்பாக செயல்பட்டவர்கள் விவரம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in எனும் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும். ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். மற்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். ஆகவே பள்ளி மாணவ மாணவியர்கள் முதன்மை நிலை விளையாட்டு மைய தேர்வு போட்டிகளில் கலந்து கொண்டு பயனடையுமாறு என மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

May 09, 2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் 11.05.2026 முதல் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகவல்.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026, இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கை வெளியிடப்பட்டு தேர்தல் நடவடிக்கைகள் முடிந்து தற்போது தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளதைத் தொடந்து 11.05.2026 முதல் பிரதி வாரம் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெறும்.பொதுமக்கள் தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

May 09, 2026

தமிழ்நாட்டில் 97.17 விழுக்காடு பெற்று இந்தாண்டு தேர்ச்சி சதவீதத்தில் ஒன்பதாவது மாவட்டமாக இடம் பெற்றுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் மார்ச் - ஏப்ரல் 2026ல் நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள், விருதுநகர் வருவாய் மாவட்டத்தில் 219 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 99 தேர்வு மையங்களில் 9,731 மாணவர்களும், 11,599 மாணவியர்களுமாக மொத்தம் 21,330 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்.அதில் 08.05.2026 அன்று வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் 9,297 மாணவர்களும், 11,430 மாணவியர்களும் என மொத்தம் 20,727 மாணவர்கள் தேர்ச்சி பெற்று, தமிழ்நாட்டில் கடந்த ஆண்டை விட 0.53 விழுக்காடு கூடுதலாக பெற்று 97.17 விழுக்காடு பெற்று இந்தாண்டு தேர்ச்சி சதவீதத்தில் ஒன்பதாவது மாவட்டமாக இடம் பெற்றுள்ளது.மேலும் அரசுப்பள்ளிகளில் 20. அரசு உதவிபெறும் பள்ளிகளில் 23 பதின்மப் பள்ளிகளில் 37 மொத்தமாக 80 பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சியை பெற்றுள்ளது.வேதியியல் பாடத்தில் 10 மாணவர்கள், கணித பாடத்தில் 14 மாணவர்கள், கணினி அறிவியல் பாடத்தில் 170 மாணவர்கள், உயிரியல் பாடத்தில் 07 மாணவர்கள், தாவரவியல் பாடத்தில் 02 மாணவர்கள்,கணினி பயன்பாடுகள் பாடத்தில் 80 மாணவர்கள், கணக்குப் பதிவியல் பாடத்தில் 52 மாணவர்கள், வணிகவியல் பாடத்தில் 23 மாணவர்கள், வரலாறு பாடத்தில் 40 மாணவர்கள், பொருளியல் பாடத்தில் 07 மாணவர்கள், வணிக கணிதம் பாடத்தில் 11 மாணவர்கள், பிரெஞ்ச் பாடத்தில் 07 மாணவர்கள், என மொத்தம் 423 மாணவர்கள் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்கள் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

May 02, 2026

விருதுநகர் மாவட்டத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு பணிகள் தீவிரம்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 23.04.2026  அன்று நடைபெற்று, பதிவான வாக்குகள் அனைத்தும் 04.05.2026 அன்று விருதுநகர் ச.வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி (VSVNPC) மையத்தில் எண்ணப்பட உள்ளன.இதற்கான முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் / மாவட்ட தேர்தல் அலுவலர் மரு. என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் என்.ஸ்ரீநாதா, இ.கா.ப., அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்  (01.05.2026) நடைபெற்றது.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 202-ராஜபாளையம், 203-ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி), 204-சாத்தூர், 205-சிவகாசி, 206-விருதுநகர், 207-அருப்புக்கோட்டை மற்றும் 208-திருச்சுழி ஆகிய 7 சட்டமன்றத் தொகுதிகளின் வாக்கு எண்ணும் பணி விருதுநகர் ச.வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற உள்ளது.வாக்கு எண்ணும் மையத்தில் ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியாக ஒதுக்கப்பட்ட அறைகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) வைக்கப்பட்டுள்ள 'காப்பு அறைகள்' (Strong Rooms) முதல் வாக்கு எண்ணும் மேஜைகள் வரை அனைத்தும் *சிசிடிவி (CCTV)* கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும். தடையற்ற மின்சாரத்தை உறுதி செய்ய தேவையான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, வாக்கு எண்ணும் மையத்தில் சுற்றி மத்திய பாதுகாப்பு படை, தமிழ்நாடு அரசின் சிறப்பு காவல் படை, ஆயுதப்படை மற்றும் சட்டம் ஒழுங்கு காவலர்கள் என 4 அடுக்குப் பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படும் முகவர்களுக்கு இந்த ஆண்டு முதன்முறையாக QR கோடுடன் கூடிய  பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. உரிய அடையாள அட்டை இல்லாத எவரும் மையத்திற்குள் நுழைய அனுமதி இல்லை. வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்போன்கள், ஐபேட், லேப்டாப், தீப்பெட்டி, எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களை எடுத்துச் செல்ல வேட்பாளர்களுக்கும், முகவர்களுக்கும் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு தலா 14 மேஜைகள் வீதம் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ஒவ்வொரு மேஜைக்கும் வேட்பாளரால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு முகவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார். முகவர்கள் காலை 6:00 மணிக்கே மையத்திற்கு வருகை தந்து தங்களின் வருகையைப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.கல்லூரியைச் சுற்றியுள்ள 100 மீட்டர் பகுதி நடைபாதை மண்டலமாக (Pedestrian Zone) மாற்றப்பட்டுள்ளது. இப்பகுதிக்குள் வாகனங்கள் நுழைய அனுமதி இல்லை. கோடை வெப்பத்தைக் கருத்தில் கொண்டு, முகவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு போதிய குடிநீர், நிழற்கூடங்கள், கழிவறை வசதிகள் மற்றும் அவசர கால மருத்துவக் குழுக்கள் ஆம்புலன்ஸ் வசதியுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.ஊடகவியலாளர்கள் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தனி ஊடக மையம் (Media Centre) அமைக்கப்பட்டுள்ளது. மேலும், செய்தியாளர்கள் தடையின்றிப் பணியாற்றத் தேவையான வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் முடிவுகள் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியாக வாக்குகள் எண்ணப்படும் அறைகள் (Counting Halls) தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், வாக்கு எண்ணிக்கை பணியை எவ்வித புகார்களுக்கும் இடமின்றி, அமைதியான முறையிலும் ஜனநாயக ரீதியிலும் நடத்தி முடிக்க அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகளும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் கேட்டுக்கொண்டார்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஆனந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) திரு.சோமசுந்தர சீனிவாசன், தேர்தல் வட்டாட்சியர் திரு.சீனிவாசன், மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

1 2 ... 24 25 26 27 28 29 30 ... 140 141

AD's



More News