விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S,. அவர்கள் தலைமையில்(08.06.2026) நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்பஅட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள்.மேலும், முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.இக்கூட்டத்தில் சிவகாசி வட்டம், வேலூர் கிராமத்தைச் சேர்ந்த திருமதி அய்யம்மாள் என்பவர், தான் குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா வேண்டி கடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்ததன் பேரில், அவரது மனுவினை பரிசீலனை செய்து, அவருக்கு பட்டாவினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.பின்னர், விபத்தில் பெற்றோரை இழந்த 9 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.75,000/- வீதம் மொத்தம் ரூ.6.75 இலட்சம் மதிப்பிலான காப்பீட்டு பத்திரங்களையும்,ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் புதிரை வண்ணார் சமூகத்தை சார்ந்த 21 நபர்களுக்கு புதிரை வண்ணார் நல வாரிய உறுப்பினர் அட்டைகளையும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார். பின்னர், மாவட்டத்தில், நியாயவிலைக்கடைகளில் சிறப்பாக பணியாற்றிய விற்பனையாளருக்கு முதல் பரிசாக ரூ.4000/-மும், இரண்டாம் பரிசாக ரூ.3000/-மும், சிறப்பாக பணியாற்றிய எடையாளர்களுக்கு முதல் பரிசாக ரூ.3000/-மும், இரண்டாம் பரிசாக ரூ.2000/-மும் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.இக்கூட்டத்தில், தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.கு.மோகனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி பிர்தௌஸ் பாத்திமா, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் உலக உணவு பாதுகாப்பு தினம்-2026 முன்னிட்டு நடைபெற்ற உணவு பாதுகாப்பு கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (08.06.2026) தொடங்கி வைத்து பார்வையிட்டார்.உலக உணவு பாதுகாப்பு தினம் (World Food Safety Day) ஆண்டுதோறும் ஜூன் 7 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. பாதுகாப்பற்ற உணவுகளால் ஏற்படும் சுகாதாரக் கேடுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான உணவை அனைவருக்கும் உறுதி செய்யவும் ஐக்கிய நாடுகள் சபை (UN) இந்த தினத்தை அறிவித்தது.அதன்படி, உலக உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, பொதுமக்களிடையே பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உணவுப் பாதுகாப்பு கண்காட்சி இன்று நடைபெற்றது. இக்கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.பின்னர், கலப்படத்தைக் கண்டறியும் விரைவுச் சோதனை முறைகள் குறித்த விழிப்புணர்வு கையேட்டினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பொதுமக்களுக்கு வழங்கினார்.இந்தக் கண்காட்சியில், கலப்பட உணவுகளைக் கண்டறிவது எப்படி, அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய சத்துக்கள், பாரம்பரிய உணவு முறைகளின் நன்மைகள் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறையின் விதிகள் குறித்த பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.உண்ணும் உணவு பாதுகாப்பானதாக இருப்பது அவசியமாகும். ரசாயனம் கலந்த உணவுப் பொருட்கள் மற்றும் கலப்படங்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இக்கண்காட்சி நுகர்வோருக்கும், வணிகர்களுக்கும் உணவுப் பாதுகாப்பு குறித்த நல்ல புரிதலை ஏற்படுத்தும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் மரு.மாரியப்பன், உணவு பாதுகாப்பு அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு ஊரகப்புற வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் மரு. என்.ஓ. சுகபுத்ரா, I AS ., அவர்கள் (05.06.2026) நேரில் சென்று பார்வையிட்டு விரிவான ஆய்வு மேற்கொண்டார்.திடக்கழிவு மேலாண்மை மற்றும் நுண் உர மையம் ஆய்வு:சிவஞானபுரம் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 ன் படி தினசரி வீடுகள் தோறும் நான்கு விதமாக குப்பைகளை பிரித்து வழங்குவதை பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, பொது இடங்களில் குப்பைகள் தேங்காதவாறு தூய்மையைப் பராமரிக்க அறிவுறுத்தினார்.இதன் தொடர்ச்சியாக, தூய்மை பாரத இயக்கத்தின் (Swachh Bharat Mission) கீழ்* கூரைக்குண்டு ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள நுண் உர செயலாக்க மையத்திற்குச் (Micro Composting Centre) சென்ற மாவட்ட ஆட்சியர், அங்கு ஊராட்சி பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளை உரமாக மாற்றுவதைப் பார்வையிட்டார்.மேலும், இயற்கை உரம் தயாரிக்கும் பணிகளைத் தொய்வின்றி செயல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.பாதுகாப்பு:குப்பை கிடங்குகளில் எந்தக் காரணத்தைக் கொண்டும் தீ விபத்துகள் (தீ எரிதல்) ஏற்படக் கூடாது என அதிகாரிகளுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.நேரடி ஆய்வு:நகராட்சியின் நுண்ணுயிர் உரம் தயாரிப்பு மையங்கள் (MCC), மறுசுழற்சி மையங்கள் (MRF) மற்றும் குடியிருப்பு பகுதிகளில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாடு: நகராட்சியில் *5 MCC* (நுண்ணுயிர் உரம் தயாரிப்பு மையம்) மற்றும் *3 MRF* (மறுசுழற்சி மையம்) செயல்பாட்டில் உள்ளதாகவும், தற்போதுள்ள 2 MCC மையங்களுக்குப் புதியதாக *அரைக்கும் இயந்திரம் (Shredding Machine)* மற்றும் *கடத்து பட்டை (Conveyor Machine)* கொள்முதல் செய்யப்பட உள்ளதாகவும் நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர். மேலும், MCC-ல் தயாரிக்கப்படும் இயற்கை உரங்களை விவசாயிகளுக்கு அதிகளவில் விநியோகம் செய்ய வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.குடிநீர் தரம் மற்றும் விநியோக இடைவெளி ஆய்வு:அதனைத் தொடர்ந்து, விருதுநகர் நகராட்சி மூலம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரின் தரம் குறித்தும், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளின் (Overhead Tanks) தூய்மைத் தன்மை குறித்தும் ஆய்வு செய்தார்.வல்லநாடு CWSS (பழைய திட்டம்) + சீவலப்பேரி (புதிய திட்டம்): 6.5 MLD ஆனைக்குட்டம் உள்ளூர் நீர்ஆதாரம்: 1.00 MLD என மொத்தம் 2 தரைமட்டத் தொட்டிகள் வழியாக, 10 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு நீரேற்றம் செய்யப்படுகிறது.இதன் மூலம் 36 வார்டுகளுக்கும் *2 நாட்களுக்கு ஒருமுறை* சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.குடிநீர் விநியோகத்தினை அதிகாரிகள் தொடர்ந்து முறையாகக் கண்காணிக்க வேண்டும் எனவும், பொதுமக்களுக்கான சீரான குடிநீர் விநியோகத்தினை எவ்வித தடையுமின்றி உறுதிப்படுத்த வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.துப்புரவுப் பணிகள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் நலன்:நகராட்சியில் அர்ப்பணிப்புடன் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர், அவர்களுக்கு நகராட்சி நிர்வாகத்தால் வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்து அவர்களிடம் கேட்டறிந்ததுடன், அவர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களின் பயன்பாடு குறித்தும் விவாதித்தார்.சிறப்பு நிகழ்வாக, உலக சுற்றுச்சூழல் தினம்-2026 னை முன்னிட்டு, MRF வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ஆய்வு:ஆய்வின் இறுதி நிகழ்வாக, அல்லம்பட்டி வே.வ. வன்னிய பெருமாள் துவக்கப்பள்ளிக்குச் சென்ற மாவட்ட ஆட்சியர், அங்கு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு 'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின்' கீழ் வழங்கப்படும் உணவின் தரத்தினை நேரில் சுவைத்து ஆய்வு செய்தார். பள்ளி சமையல் அறையின் தூய்மையைப் பராமரிக்கவும், குழந்தைகளுக்குக் கால அட்டவணைப்படி சத்தான மற்றும் சுவையான உணவினைத் தடையின்றி வழங்கவும் பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் சமையலர்களுக்கு அறிவுறுத்தினார்.இந்நிகழ்வின் போது, நகராட்சி ஆணையர், நகராட்சிப் பொறியாளர்கள், அரசு உயர் அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு தாட்கோ மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஜவுளி வடிவமைப்பு உற்பத்தி (Diploma in Textile Industry Courses) மற்றும் துணிகளுக்கு சாயம், ஒவியம் மற்றும் அச்சிடுதல் (Certificate in Textile Painting, Dyeing & Printing Courses) போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S.,அவர்கள் தெரிவித்துள்ளார். வழங்கப்படும் பயிற்சிகள்: 1. ஜவுளி வடிவமைப்பு உற்பத்தி (Diploma in Textile Industry Courses) 2. துணிகளுக்கு சாயம், ஓவியம் மற்றும் அச்சிடுதல்* (Certificate in Textile Painting, Dyeing & Printing Courses) தகுதி மற்றும் நிபந்தனைகள்: வகுப்பு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (SC / ST) வகுப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். கல்வித் தகுதி: 12-ஆம் வகுப்பு (Plus Two) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். ஆண்டு வருமானம்: குடும்ப ஆண்டு வருமானம் *ரூ.3.00 லட்சத்திற்குள்* இருக்க வேண்டும். பயிற்சியின் சிறப்பம்சங்கள்: கால அளவு: 4 மாதங்கள் இடம் மற்றும் தங்குமிடம்: இப்பயிற்சி *கோயம்புத்தூர்* மாவட்டத்தில் நடைபெறும். தேர்வு செய்யப்படும் நபர்கள் அங்கு தங்கிப் படிப்பதற்கான விடுதி மற்றும் உணவுச் செலவினங்கள் முழுவதையும் *தாட்கோ (TAHDCO)* ஏற்கும். சான்றிதழ் & வேலைவாய்ப்பு: பயிற்சி நிறைவுற்றதும் சான்றிதழ் வழங்கப்படும். அத்துடன், தகுதியான நபர்களுக்கு முன்னணி நிறுவனங்களில் *ரூ.25,000/- முதல் ரூ.50,000/- வரை* ஆரம்ப கால ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும். விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ள விருதுநகர் மாவட்ட இளைஞர்கள் தாட்கோவின் அதிகாரப்பூர்வ இணையதளமான *www.tahdco.com* என்ற முகவரியில் ஆன்லைன் மூலம் பதிவு செய்து, இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தவுள்ள குரூப்-1 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன. தொடர் இலவசப் பயிற்சிகள்:விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வப் பயிலும் வட்டம் வாயிலாக TNPSC, TNUSRB, SSC மற்றும் RRB போன்ற பல்வேறு தேர்வு முகமைகளால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்குத் தொடர்ந்து இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இம்மையத்தில் போட்டித் தேர்வுகளுக்கான அனைத்துப் புத்தகங்கள் அடங்கிய நவீன நூலகம் மற்றும் அதிவேக ஒய்-பை (Wi-Fi) வசதியுடன் கூடிய கணினி ஆய்வகம் மாணவர்களின் பயன்பாட்டிற்காகச் செயல்பட்டு வருகிறது. குரூப்-1 தேர்வு மற்றும் பயிற்சித் தொடக்கம்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) குரூப்-1 பணிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கை வரும் 23.06.2026 அன்று வெளியிடப்படவுள்ளது. இத்தேர்வின் முதல்நிலைத் தேர்வுக்குத் (Preliminary Exam) தயாராகும் தேர்வர்களுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள், வரும் *08.06.2026 (திங்கள் கிழமை)* முதல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொடங்கப்படவுள்ளன. சிறப்பம்சங்கள்:இப்பயிற்சி வகுப்புகள் சிறந்த மற்றும் திறன் வாய்ந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்படவுள்ளன. மேலும், தேர்வர்களுக்கு விலையில்லாப் பாடக்குறிப்புகள் (Study Materials) வழங்கப்படுவதோடு, பாடவாரியான தேர்வுகள் மற்றும் முழு மாதிரித் தேர்வுகள் (Mock Tests) தொடர்ச்சியாக நடத்தப்படும். பதிவு செய்யும் முறைகள்: இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ள தேர்வர்கள் கீழே உள்ள வழிமுறைகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் தங்களது பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம்: 1. *கூகுள் லிங்க்:* https://forms.gle/zuHWWSgJEzK7WMNR9 என்ற இணையப் பக்கத்தில் பதிவு செய்யலாம். 2. *மின்னஞ்சல்:* studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விவரங்களை அனுப்பலாம். 3. *நேரடிப் பதிவு:* விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் சென்றும் விண்ணப்பிக்கலாம். எனவே, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த TNPSC குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராகும் தகுதியுடைய தேர்வர்கள் அனைவரும் இந்த இலவசப் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் 1435-ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) 2026-ம் ஆண்டு ஜூன் 12, ஜூன்16 முதல் ஜூன் 19 வரை மற்றும் ஜூன் 23 முதல் ஜூன் 25 வரை ஆகிய நாட்களில் சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் பின்வரும் அலுவலர்களால் நடத்தப்பட உள்ளது.வட்டம் வாரியாக வருவாய்த் தீர்வாயம்(ஜமாபந்தி) நடத்த உள்ள அலுவலர்கள் மற்றும் நாட்கள் விவரம் பின்வருமாறு :-சாத்தூர் வட்டத்தில், ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 5 நாட்கள் மாவட்ட ஆட்சித்தலைவர், விருதுநகர் அவர்கள் தலைமையிலும், சிவகாசியில் ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 5 நாட்கள் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தலைமையிலும், திருவில்லிபுத்தூரில் ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 3 நாட்கள் உதவி ஆட்சியர், சிவகாசி அவர்கள் தலைமையிலும், விருதுநகரில் ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 7 நாட்கள் வருவாய் கோட்டாட்சியர், சாத்தூர் அவர்கள் தலைமையிலும்,காரியாபட்டியில் ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 6 நாட்கள் அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் தலைமையிலும்,அருப்புக்கோட்டையில் ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 7 நாட்கள் உதவி ஆணையர் (கலால்), விருதுநகர் அவர்கள் தலைமையிலும், இராஜபாளையத்தில் ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 5 நாட்கள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், விருதுநகர் அவர்கள் தலைமையிலும்,வெம்பக்கோட்டையில் ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 5 நாட்கள் தனித்துணை ஆட்சியர்(ச.பா.தி), விருதுநகர் அவர்கள் தலைமையிலும், திருச்சுழியில் ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 8 நாட்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், விருதுநகர் அவர்கள் தலைமையிலும்,வத்திராயிருப்பில் ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 3 நாட்கள் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், விருதுநகர் அவர்கள் தலைமையிலும், வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெற உள்ளன. வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெறும் தினங்களில் தொடர்புடைய கிராம நில உடைமைதாரர்கள் நிலப்பதிவு சம்பந்தப்பட்ட மனுக்கள், பட்டா மாறுதல், நில ஒப்படை, நில நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை தொடர்புடைய பல்வேறு கோரிக்கை தொடர்பான மனுக்களை ஜமாபந்தி அலுவலரிடம் பொதுமக்கள் நேரில் வழங்கலாம் என மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில், 2025–2026 ஆம் கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ, மாணவியர்களும் விடுபடாமல் 100% உயர்கல்வியில் சேர்வதை உறுதி செய்யும் நோக்கில், விருதுநகர் மாவட்ட ஆட்சியரகத்தில் அமைக்கப்பட்டுள்ள "மாவட்ட அளவிலான கல்வி உதவி மையக் கட்டுப்பாட்டு அறையினை" (Higher Education Guidance Control Room) மாவட்ட ஆட்சியர் அவர்கள் (03.06.2026) அன்று திறந்து வைத்தார்.மையத்தின் செயல்பாடுகள் மற்றும் வழிகாட்டுதல்கள்:இக்கட்டுப்பாட்டு அறை மூலம் உயர்கல்வி தொடர விரும்பும் தகுதியான மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் பின்வரும் ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் நேரடியாகவோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ பெற்றுக்கொள்ளலாம்:படிப்பு சார்ந்த விவரங்கள்:மத்திய மற்றும் மாநிலப் பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகள், மருத்துவம், வேளாண்மை, சட்டம் உள்ளிட்ட தொழில்முறை படிப்புகள் (Professional Courses) தொடர்பான சேர்க்கை விவரங்கள்கூடுதல் வசதிகள்:அரசு மற்றும் ஆதிதிராவிடர் நல விடுதி வசதிகள், வங்கிக் கல்விக் கடன்கள் (Education Loans), கல்லூரிச் சேர்க்கைக்கான இணையவழி (Online) விண்ணப்பத் தேதிகள் மற்றும் சேர்க்கை நடைமுறைகள் குறித்த துல்லியமான தகவல்கள்.துணை ஆட்சியர் தலைமையில் சிறப்புக் குழு:மாணவர்களுக்குத் தகுந்த உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த ஆலோசனைகளைத் துல்லியமாக வழங்குவதற்காக, துணை ஆட்சியர் (Sub-Collector / Deputy Collector) மட்டத்திலான உயர் அதிகாரி ஒருவரின் தலைமையில் சிறப்புக் குழு ஒன்றினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் அமைத்துள்ளார். இக்குழுவில் கல்வித் துறை மற்றும் வேலைவாய்ப்புத் துறை வல்லுநர்கள் இடம்பெற்றுள்ளனர்.தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள்:இக்கல்வி உதவி மையக் கட்டுப்பாட்டறையை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கீழே குறிப்பிட்டுள்ள அலைபேசி எண்கள் வாயிலாகத் தொடர்புகொண்டு, தங்களது சந்தேகங்களுக்கு உடனுக்குடன் விளக்கங்களைப் பெற்றுக்கொள்ளலாம்:அலைபேசி எண்கள்:75985 10114, 96988 10699, 99769 03873விருதுநகர் மாவட்டத்தில் எந்தவொரு மாணவரும் பொருளாதாரச் சூழ்நிலை அல்லது வழிகாட்டுதல் இன்மை காரணமாக உயர்கல்வி பயிலும் வாய்ப்பை இழந்துவிடக் கூடாது என்ற உயரிய நோக்கில், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் நேரடி கண்காணிப்பில் இக்கட்டுப்பாட்டறை தொடர்ந்து செயல்படும் என மாவட்ட ஆட்சியர் மரு. என்.ஓ. சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் சிறுபான்மையினர்களுக்கு சுய வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதலுக்கான செயல்பாடுகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன் , விராசாத் (கைவினை கலைஞர்களுக்கான கடன் திட்டம் ) மற்றும் கல்விக்கடன் ஆகிய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வெவ்வேறு வருமானம் சார்ந்த பயனாளிகளுக்கு கடன் (ம) வட்டி விகிதங்களின் மாறுபட்ட அளவுடன் கூடிய திட்டம் 1-ல் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராம/நகர்புறங்களில் ரூ.3,00,000/- க்கு மிகாமல் இருக்க வேண்டும் மற்றும் திட்டம் 2-ல் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராம/நகர்புறங்களில் ரூ.8,00,000/-வரை ஆண்டு வருமானம் இருக்க வேண்டும். (திட்டம் 1-ன் கீழ் நன்மைகளை பெற முடியாத நபர்கள்) திட்டம் 1-ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6% வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.20,00,000/- ம் திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8% பெண்களுக்கு 6% வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.30,00,000/- கடன் வழங்கப்படுகிறது. கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5% பெண்களுக்கு 4% வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10,00,000/- கடன் வழங்கப்படுகிறது. சுய உதவிக்குழுக் கடன் நபர் ஒருவருக்கு ரூ.1,00,000/- ஆண்டிற்கு 7% வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 10%, பெண்களுக்கு 8% வட்டி விகிதத்திலும் நபர் ஒருவருக்கு ரூ.1,50,000/- கடன் வழங்கப்படுகிறது. மேலும் சிறுபான்மையின மாணவ மாணவியர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை/ முதுநிலை தொழிற்கல்வி/ தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு அதிகபட்சமாக திட்டம் 1-ன் கீழ் ரூ.20,00,000/- வரையில் 3% வட்டி விகிதத்திலும் திட்டம் 2-ன் கீழ் மாணவர்களுக்கு 8% மாணவியர்களுக்கு 5% வட்டி விகிதத்திலும் ரூ.30,00,000/- வரையிலும் கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.. மேலும், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின கைவினை கலைஞர்களுக்கு தங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு விராசாத் கடன் (கைவினை கலைஞர் கடன் திட்டம்) கைவினை கலைஞர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் மூலப்பொருட்களான உபகரணங்கள்/கருவிகள்/இயந்திரங்கள் வாங்குவதற்கு இக்கடன் வழங்கப்படுகிறது.இம்மாவட்டத்தில் வசிக்கும் கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சியர்கள் மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையின மக்கள் கடன் விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம்/மாவட்ட சிறுபான்மையினர் அலுவலகம், மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட/மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள் அல்லது நகர கூட்டுறவு வங்கி அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஆகிய அலுவலங்களில் பெற்று அதனை பூர்த்தி செய்து வங்கி கோரும் உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.கடன் விண்ணப்பங்களுடன் இணைத்து சமர்ப்பிக்கப்பட வேண்டிய போதிய ஆவணங்கள்தனிநபர் கடன் திட்டம், சுய உதவி குழுக் கடன், விராசத் (கைவனை கலைஞர் கடன் திட்டம்)1. சிறுபான்மையினர் மதச்சான்றிதழ்2. சாதி சான்றிதழ்3. வருமான சான்றிதழ்4. உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிட சான்றிதழ்5. ஆதார் அட்டை6. திட்ட அறிக்கை7. வங்கிகள் கோரும் தேவையான ஆவணங்கள் கல்விக்கடன்1. சிறுபான்மையினர் மதச்சான்றிதழ்2. சாதிச்சான்றிதழ்/ வருமான சான்றிதழ் நகல்/ இருப்பிட சான்றிதழ் நகல்/குடும்ப அட்டை3. ஆதார் அட்டை4. பள்ளி மாற்று சான்றிதழ் நகல்5. உண்மைச் சான்றிதழ் (Bonafide Certificate) அசல்6. கல்விக் கட்டணங்கள் செலுத்திய இரசீது அசல் (Original)7. மதிப்பெண் சான்றிதழ்கள்8. வங்கி கோரும் இதர ஆவணங்கள் எனவே சிறுபான்மையின மக்கள் இத்திட்டத்தை அதிக அளவில் பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S.,அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் 2026–2027ஆம் நிதியாண்டின் புதிய கல்வியாண்டு தொடங்குவதை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் பயிலும் மாணவ, மாணவியருக்கு அரசின் விலையில்லா கல்வி உபகரணங்கள், சீருடைகள் மற்றும் பல்வேறு நலத்திட்டப் பொருட்கள் வழங்கும் பணிகள் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றன.அதன் தொடர்ச்சியாக, (04.06.2026) விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்களுக்கான புதிய பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என்.ஓ. சுகபுத்ரா, I A S., அவர்கள் நேரிடையாகத் துவக்கி வைத்து, மாணவ-மாணவியருக்கு வழங்கினார்.முதற்கட்டமாக, பெரியவள்ளிக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு நேரில் சென்ற மாவட்ட ஆட்சியர் அவர்கள், அங்கு பயிலும் மாணவ, மாணவியரை இன்முகத்தோடு வரவேற்று, அவர்களுக்குத் தேவையான புதிய பாடப்புத்தகங்கள், சீருடைகள் மற்றும் இதர கல்வி உபகரணங்களை வழங்கினார்.அதனைத் தொடர்ந்து, குல்லூர்சந்தை வீரப்பா வித்யா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், தமிழக அரசின் பள்ளி கல்வித்துறையின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லாப் பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், கணிதப் பயிற்சி நோட்டுகள், வரைபட நோட்டுகள், ஓவியப் பயிற்சி புத்தகங்கள், இரு கோடு மற்றும் நான்கு கோடு எழுது புத்தகங்கள் மற்றும் புதிய சீருடைகள் உள்ளிட்ட அனைத்து கல்விப் பொருட்களையும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கி, மாணவர்கள் இவற்றை நல்ல முறையில் பயன்படுத்தி கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.மேலும், பாலவநத்தம் தொடக்கப்பள்ளிக்கு நேரில் சென்ற மாவட்ட ஆட்சியர், பள்ளிக்கு முதன்முறையாக வருகை தந்த குழந்தைகளை இனிப்புகள் வழங்கி உற்சாகப்படுத்தி வரவேற்றார். பள்ளி உள்கட்டமைப்பு மற்றும் கற்றல் கற்பித்தல் சூழல் குறித்தும் ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.தொடர்ந்து, பாலவநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2025-2026 ஆம் கல்வியாண்டின் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ-மாணவியரை ஊக்குவிக்கும் விதமாக, அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் கேடயங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார். மேலும், அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கைக்கான வழிகாட்டுதல்களையும் அதிகாரிகளுக்கு வழங்கினார்.இந்நிகழ்வின் போது, ஆசிரியர்கள், பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டின் கலைப்புலமைகளை மேம்படுத்தவும், பாதுகாக்கும் நோக்கிலும், கலைஞர்களின் கலைத் திறனை சிறப்பிக்கும் வகையிலும் கலை பண்பாட்டுத்துறையின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் செயல்படும் மாவட்டக் கலை மன்றங்களின் வாயிலாக ஒவ்வொரு மாவட்டத்திலும் 2002-2003ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வயது மற்றும் கலைப்புலமையின் அடிப்படையில் சிறந்த ஐந்து கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கிடவும் 2021-2022 முதல் சிறந்த பதினைந்து கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கிடவும் அரசு ஆணையிட்டுள்ளது.அவ்வாணையின்படி 2002-2003ஆம் ஆண்டு முதல் விருதுநகர் மாவட்டத்தில் 2023-2024ஆம் ஆண்டு வரையில் 135 கலைஞர்களுக்கு கலை விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளன.கலை விருதுகள், கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வரும் விருதுநகர் மாவட்டக் கலை மன்றத்தின் வாயிலாக, விருதுநகர் மாவட்டத்தில் இயல், இசை, நாடகம் முதலிய கலைகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கலைகளில் சிறந்து விளங்கும் பதினைந்து கலைஞர்களுக்கு விருதுகள் வழங்க மாவட்ட ஆட்;சித் தலைவர் அவர்கள் தலைமையில் தேர்வாளர் குழு அமைக்கப்பட்டு இத்தேர்வுக்குழு வாயிலாக விருதுக்கு விண்ணப்பிக்கும் கலைஞர்களை நேர்முகமாக அழைக்கப்பட்டு கலைவல்லுநர்களை கொண்டு கலைஞர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.ஆகவே, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாட்டு, பரத நாட்டியம், கும்மி, கோலாட்டம், மயிலாட்டம், தேவராட்டம், தோல்பாவைக்கூத்து, பொம்மலாட்டம், நையாண்டிமேளம், கரகாட்டம், காவடி, பொய்க்கால் குதிரையாட்டம், மரக்கால் ஆட்டம், கோல்கால் ஆட்டம், கழியல் ஆட்டம், கணியான் கூத்து, ஓவியம் சிற்பம், அரசன் அரசியாட்டம், புலியாட்டம், காளையாட்டம், மானாட்டம், பாம்பாட்டம், ஆழியாட்டம், கைச்சிலம்பாட்டம், சிலம்பாட்டம் (வீரக்கலை) மற்றும் வில்லிசை முதலிய செவ்வியல் கலைகள், நாட்டுப்புறக் கலைகள் என அனைத்து வகை முத்தமிழ் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும், விருதுகள் கீழ்க்கண்ட நிலைகளில் வழங்கப்படவுள்ளன 18 வயதும் அதற்குட்பட்ட கலைஞர்களுக்கு, கலை இளமணி விருதும், 19 முதல் 35 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு கலை வளர்மணி விருதும், 36 முதல் 50 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு கலைச் சுடர்மணி விருதும், 51 முதல் 65 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு கலை நன்மணி விருதும், 66 வயதிற்கு மேற்பட்ட கலைஞர்களுக்கு கலை முதுமணி விருதும் வழங்கப்படவுள்ளன.வயது மற்றும் கலைப்புலமையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் பதினைந்து சிறந்த கலைஞர்களுக்கு பட்டயம், பொன்னாடை மற்றும் பொற்கிழி ஈடாக கீழ்வருமாறு தொகைக்கான காசோலை வழங்கி கௌரவிக்கப்படும்.கலை இளமணி விருதிற்கு, ரூ.4,000/- பரிசுத்தொகையும், கலை வளர்மணி விருதிற்கு, ரூ.6,000/- பரிசுத்தொகையும், கலை சுடர்மணி விருதிற்கு, ரூ.10,000/- பரிசுத்தொகையும், கலை நன்மணி விருதிற்கு, ரூ.15,000/- பரிசுத்தொகையும், கலை முதுமணி விருதிற்கு, ரூ.20,000/- பரிசுத்தொகையும் வழங்கப்படவுள்ளன.மேலும், விருதுநகர் மாவட்டத்தில் தேசிய விருதுகள், மாநில விருதுகள், மாநில விருதுகள் (கலைமாமணி) மற்றும் ஏற்கனவே மாவட்டக் கலை மன்றத்தின் விருதுகளைப் பெற்ற கலைஞர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பம் செய்யக்கூடாது. மேலும், கடந்த ஆண்டுகளில் ஏற்கனவே விருதுக்கு விண்ணப்பம் செய்த கலைஞர்கள் தற்போது புதியதாக விண்ணப்பம் கண்டிப்பாக அனுப்பவேண்டும்;.இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதி வாய்ந்த கலைஞர்கள் விருதுகள் பெறுவதற்கான விண்ணப்பத்துடன் வயதுச் சான்று, முகவரிச்சான்று மற்றும் கலை அனுபவச் சான்றுகளின் நகல்களுடன் (தொலைபேசி எண்ணுடன்) உதவி இயக்குநர், மண்டலக் கலை பண்பாட்டு மையம், 870/21, அரசு அலுவலர் ‘ஆ’ குடியிருப்பு, (தொழிலாளர் வைப்பு நிதி அலுவலகம் அருகில்) திருநெல்வேலி – 7 தொலைபேசி எண்:0462-2901890 என்ற முகவரிக்கு செய்தி வெளியிடப்பட்ட நாளிலிருந்து 10 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.