25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Jul 15, 2026

பெருந்தலைவர் காமராஜர் நூற்றாண்டு நினைவு மணிமண்டபத்தில் அன்னாரது 124-வது பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பெருந்தலைவர் காமராஜர்  124-வது பிறந்த நாளையொட்டி, விருதுநகர் - மதுரை சாலையில் அமைந்துள்ள  பெருந்தலைவர் காமராஜர் நூற்றாண்டு நினைவு மணிமண்டபத்தில் அமைந்துள்ள அன்னாரது  திருவுருவச் சிலைக்குமாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை  அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில், தமிழ்நாடு அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.தமிழ்நாடு அரசு செய்தித்துறையின் சார்பில், தமிழ்ச் சான்றோர்கள், விடுதலைப் போராட்ட தியாகிகள் மற்றும் தலைவர்கள் ஆகியோரை பெருமைப்படுத்துகின்ற வகையில், அன்னார்களது பிறந்தநாளன்று அரசின் சார்பில் ஆண்டுதோறும்  மாலை அணிவித்து, மரியாதை  செலுத்தி, விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த தினமான ஜுலை 15-ஆம் நாள், ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.அதன்படி, பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில், பெருந்தலைவர் காமராஜர் நூற்றாண்டு நினைவு மணிமண்டபத்தில் அமைந்துள்ள அன்னாரது  திருவுருவச் சிலைக்கு இன்று(15.07.2026)  மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை  அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கௌதம் கோயல்,இ.கா.ப., அவர்கள் மற்றும் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.பி.செல்வம் அவர்கள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த அன்னாரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் சிலைக்கும், நினைவு இல்லத்தில் உள்ள அன்னாரது சிலைக்கும்   மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா.,I A S., அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இந்நிகழ்ச்சியில்,  செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.அ.கொ.நாகராஜபூபதி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் திருமதி சுஜிதா, தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரிய உதவி இயக்குனர்  திரு.பால மாணிக்கம், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.கனகராஜ், விருதுநகர் வட்டாட்சியர், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Jul 15, 2026

விற்பனை மையங்கள் அமைத்து மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் தேங்காய்களை வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் தென்னையிலிருந்து பெறப்படும் தேங்காய் மற்றும் கொப்பரை ஆகியவை வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டு வரும் நிலையில் விற்பனை மையங்கள் அமைத்து மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் தேங்காய்களை வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் குறிப்பாக இராஜபாளையம், திருவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு பகுதிகளில் அதிக அளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது, தென்னையிலிருந்து பெறப்படும் தேங்காய் மற்றும் கொப்பரை ஆகியவை வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டு வரும் நிலையில் தென்னை விவசாயிகளிடமிருந்து மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் நேரடியாக வியாபாரிகளுக்கு தேங்காய்களை கட்டுபடியாகும் அதிக விலைக்கு விற்பனை செய்யும் வகையில் சேத்தூர் பகுதியில் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளிலும், மம்சாபுரம் பகுதியில் புதன் கிழமையும் மற்றும் வத்திராயிருப்பு பகுதியில் திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும் விற்பனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, தேங்காய்கள் விற்பனை செய்யப்படவுள்ளது.தேங்காய்களை விற்பனை செய்ய விருப்பமுள்ள விவசாயிகள் தங்களின் ஆதார் அட்டை நகல் வங்கி கணக்கு எண் மற்றும் கைபேசி எண் ஆகியவற்றை விற்பனை மையத்திற்கு எடுத்து வந்தால் போதுமானது. அடங்கல் தேவையில்லை என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jul 14, 2026

தமிழக அரசின் சாதனைகள் விளக்க புகைப்பட கண்காட்சி.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஊராட்சி ஒன்றியம் புதுப்பட்டி கிராமத்தில் (13.07.2026) செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பாக வைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனைகள் விளக்க புகைப்பட கண்காட்சிகளை பொதுமக்கள் பார்வையிட்டனர்.

Jul 14, 2026

தூய்மைப் பணியாளர்கள் மறுவாழ்வு குறித்த மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் .

விருதுநகர்  மாவட்டத்தில்   தூய்மைப் பணியாளர்கள்    மறுவாழ்வு     குறித்த மாவட்ட  அளவிலான  விழிப்புணர்வு   மற்றும்   கண்காணிப்பு   குழுவானது  23.06.2023 அன்று  ஏற்படுத்தப்பட்டுள்ளது.   குழுவானது   மூன்று   வருடத்திற்குள்      கலைக்கப்பட வேண்டும்.  எனவே   நடைமுறையில்   உள்ள  தூய்மை    பணியாளர்கள்    மறுவாழ்வு  குறித்த  மாவட்ட அளவிலான  விழிப்புணர்வு  மற்றும் கண்காணிப்பு  குழுவானது தற்போது கலைக்கப்படுகிறது.   புதிய  குழு  அமைத்து   அக்குழுவிற்கு   மாவட்ட ஆட்சித்தலைவர்   அவர்கள்  தலைவராகவும்,   மாவட்ட   ஆதி திராவிடர்  மற்றும்   பழங்குடியினர்  நல  அலுவலர்  செயல் உறுப்பினராகவும்  செயல்படுவார்கள்.  இக்குழுவில்   நிரந்தர  உறுப்பினராக,  காவல் கண்காணிப்பாளர் , உதவி இயக்குநர்  பேரூராட்சிகள்,  அனைத்து   மாநகராட்சி   ஆணையர்   மற்றும்   நகராட்சி ஆணையர்கள்    மாவட்டத்தில்   இரயில்வே   துறையினைச்   சேர்ந்த  ஒரு  பொறுப்பாளர்  கெஜட்  அதிகாரி   மாவட்ட அளவிலான வங்கி குழுவின் ஒரு பொறுப்பாளர்  ஆகியோர்கள்  நிரந்தர உறுப்பினராக செயல்படுவார்கள்.மாநில    சட்டமன்ற  உறுப்பினராக  தேர்ந்தெடுக்கப்பட்டவர்  பட்டியலினத்தைச்  சேர்ந்தவராக  இருத்தல்  வேண்டும்  .அல்லது   மாநில  அரசால்  பரிந்துரை    செய்யப்படும்  விருதுநகர்   மாவட்டத்தினைச்  சேர்ந்த  இரண்டுக்கும் மிகாத நபர்கள்  உறுப்பினராக  இருத்தல் வேண்டும்.  மனித  கழிவுகளை  அகற்றும்  தொழில்  செய்வதை   தடுத்தல்    மற்றும்   மறு  வாழ்விற்காக  பணி  மேற்கொள்ள  எண்ணிக்கையில்  4  பேருக்கு   மேற்படாத  சமூக ஆர்வலர்கள்  (மாவட்ட ஆட்சியரால் முடிவு செய்யப்பட்டவர்கள்) அதிகாரப் பூர்வமற்ற உறுப்பினராக  4 சமுக ஆர்வலர்கள் விண்ணப்பிக்கலாம்.தகுதி வாய்ந்த நபர்கள் விருதுநகர் மாவட்ட தூய்மைப் பணியாளர்கள் மறுவாழ்வு குறித்த மாவட்ட அளவிலான  விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினராக வருகின்ற 30.07.2026 –க்குள் விண்ணப்பிக்குமாறு, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S.. அவர்கள்  தெரிவித்துள்ளார்.

Jul 14, 2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (13.07.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.14.25 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் வழங்கினார்.இக்கூட்டத்தில், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிந்தோர் நல உதவித்திட்டங்கள், விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை மற்றும் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தான மனுக்கள் பெறப்பட்டன.மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்கு நேரடியாகச் சென்று, அவர்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்று பரிசீலித்தார். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட இம்மனுக்கள் அனைத்தையும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து, அவற்றின் மீது உரிய மற்றும் விரைவான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.இக்கூட்டத்தில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில், திறன் வார விழாவை முன்னிட்டு நடைபெற்ற பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும்,மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு திட்டமான உயிர் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு தேநீர் கடை வைப்பதற்காக ரூ.1,00,654/- மதிப்பில் உதவித்தொகையையும், கோவிட் தொற்றால் தாய் தந்தையை இழந்த 4 நபர்களுக்கு போட்டித்தேர்வுக்கான பாடக் குறிப்பேடுகளையும்,ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தீண்டாமையை கடைப்பிடிக்காத மற்றும் நல்லிணக்கத்தோடு வாழும் கிராமமாக தேர்வு செய்யப்பட்ட சாத்தூர் வட்டம், நள்ளி ஊராட்சிக்கு கிராம வளர்ச்சிக்காக ரூ.10 இலட்சம் பரிசுத்தொகைக்கான காசோலையினையும், பணியின்பொழுது மரணமடைந்த பணியாளரின் வாரிசுதாரருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையினையும்,மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1,08,000/- வீதம் மொத்தம் ரூ.3.24 இலட்சம் மதிப்பிலான மின்கல மூன்று சக்கர நாற்காலிகளையும் என ஆக மொத்தம் ரூ.14.25 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.தொடர்ந்து, பொதுமக்களிடமிருந்து 694 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்க ஒப்படைக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்கள் எவ்வித சிரமமுமின்றி சேவைகளைப் பெறுவதை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திருமதி கு.மோகனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திருமதி பிர்தௌஸ் பாத்திமா, அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jul 14, 2026

"சீமைக் கருவேலம் இல்லா விருதுநகர் – பசுமை நிறைந்த விருதுநகர்" திட்டத்தின் கீழ் கூட்டுப்பணியில் சீமைக் கருவேல மரங்கள் (Mass eradication of Prosopis juliflora) அகற்றும் பணிகள் நடைபெறவுள்ளது.

சீமைக் கருவேலம் (Prosopis juliflora) என்பது வெளிநாட்டிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட ஆக்கிரமிப்பு தாவர இனமாகும். இதன் கட்டுப்பாடற்ற பரவல் காரணமாக பூர்வீக தாவர இனங்கள் அழிவடைவதுடன், உயிரினப் பன்முகத்தன்மை பாதிக்கப்படுகிறது. மேலும், நிலத்தின் இயற்கை வளம் மற்றும் உற்பத்தித்திறன் குறைவதோடு, மேய்ச்சல் நிலங்கள், விவசாய நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் அரசு நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் சமநிலை பாதிக்கப்படுவதுடன், நில மீட்பு மற்றும் பசுமை மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கும் பெரும் இடையூறு ஏற்படுகிறது.இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் W.P.(MD) Nos. 16485 & 14699 of 2015 மற்றும் W.P. No. 3075 of 2017 ஆகிய வழக்குகளில் வழங்கியுள்ள உத்தரவுகள் மற்றும் தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு ஆக்கிரமிப்பு தாவரங்கள் அகற்றுதல் மற்றும் சுற்றுச்சூழல் மறுசீரமைப்புக் கொள்கை (TNPIPER) ஆகியவற்றின் அடிப்படையில், விருதுநகர் மாவட்ட நிர்வாகம் "விருதுநகர் செழுமை கருவூலம்" என்ற சிறப்பு முன்முயற்சியின் கீழ், அரசு நிலங்கள் மற்றும் வளாகங்களில் சீமைக் கருவேல மரங்களை வேருடன் முழுமையாக அகற்றி, பூர்வீக மர இனங்களை நடவு செய்து சுற்றுச்சூழலை மீட்டெடுக்கும் பணிகளை பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்புடன் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.  "விருதுநகர் செழுமை கருவூலம்" அரசு நடவடிக்கையாக மட்டுமல்லாமல், மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என்பதே மாவட்ட நிர்வாகத்தின் நோக்கமாகும். எனவே, விவசாயிகள், நில உரிமையாளர்கள், தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் தங்களது சொந்த நிலங்கள் மற்றும் வளாகங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை வேருடன் அகற்றி, அதற்குப் பதிலாக பூர்வீக மர இனங்களை நடவு செய்யும் பணிகள் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளான 15.07.2026 அன்று நடைபெறவுள்ளது. இம்முயற்சியில் தன்னார்வத்துடன் அனைவரும் பங்கேற்று பெருமளவு சீமைக் கருவேல மரங்களை அகற்றிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.மேற்கொள்ளப்படும் பணிகளின் அகற்றுதலுக்கு முன் மற்றும் பின் (Before & After) புகைப்படங்கள், இட விவரங்கள், அகற்றப்பட்ட பரப்பளவு, நடப்பட்ட பூர்வீக மர இனங்கள் மற்றும் மரக்கன்றுகளின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை selumaikaruvoolamvnr@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. சிறப்பாக செயல்படுத்தப்படும் தனிநபர்கள், விவசாயிகள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் பங்களிப்புகள் மாவட்ட நிர்வாகத்தால் பாராட்டப்பட்டு, மாவட்ட அளவில் முன்மாதிரிகளாக எடுத்துக்காட்டப்படும்.  "சீமைக் கருவேலம் இல்லா விருதுநகர் – பசுமை நிறைந்த விருதுநகர்" என்ற உயரிய இலக்கை அடைய அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jul 14, 2026

பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 124-வது பிறந்தநாள் விழா 15.07.2026 அன்று சிறப்பாக நடைபெறவுள்ளது.

பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் தனக்கென்று வாழாமல் பிறருக்காகவே வாழ்ந்து, நாட்டுமக்கள் உள்ளத்தில் நிரந்தர இடத்தைப் பெற்றவர். விருதுபட்டி என்னும் விருதுநகரில் குமாரசாமி நாடார் சிவகாமி அம்மாள் தம்பதிக்கு 1903 ஜீலை 15 அன்று மகனாகப் பிறந்தார்.எளிய குடும்பத்தில் பிறந்தவர். ஆறு வயதுச் சிறுவனாக இருந்தபோதே தந்தையை இழந்தவர். ஆறாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே பள்ளி செல்வதை நிறுத்த வேண்டிய சூழ்நிலைமைக்கு ஆளானவர். தன் முழு நேரத்தையும் நாட்டுப் பணிக்கு அர்ப்பணிப்பதற்காகத் திருமணம் செய்து கொள்ளவும் மறுத்தவர்.எளிய தொண்டனாக அரசியல் வாழ்க்கையைத் துவக்கி, உண்மையான உழைப்பால், அடக்கமான எளிய வாழ்க்கையால், உயர்ந்த பதவிகளைப் பெற்று, வரலாற்றுப் புகழை அடைந்தார். பல்கலைக்கழகப் படிப்போ, பட்டமோ பெறாதிருந்தும், தனிப்பட்ட முறையில் ஏராளமான நூல்களைப் படித்து உலக அறிவை வளர்த்துக் கொண்டார்.தமிழ்நாட்டின் முதலமைச்சராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டு, 1954 முதல் 1963 வரை முதலமைச்சராக இருந்தார். பள்ளிகளில் இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அனைவருக்கும் 11-ஆம் வகுப்பு வரை இலவசக் கல்வி அளித்தார். பதவியைச் சேவை செய்வதற்கான வாய்ப்பாகவே கருதினார். சேவையில் முழுநேரம் ஈடுபடுவதற்காகப் பதவியைத் துறக்கவும் அவர் தயங்கியதில்லை.ஏழை எளிய மக்களை வாழ வைக்க வேண்டும் என்ற இலட்சியப் பிடிப்போடு பாடுபட்டு, இந்தியாவில் தமிழ்நாட்டிற்குத் தனிப் பெருமை தேடித் தந்தார். ஜவகர்லால்நேரு மறைந்த போது இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்கும் தனிப் பெருந்தலைவராக காமராஜர் திகழ்ந்தார். இத்தகைய பெருமைக்குறிய பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் விருதுநகர் வீடு நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த நினைவு இல்லத்தில், பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், வாழ்க்கை நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறும் புகைப்படங்கள், படித்த நூல்கள் ஆகியவை நிரந்தரமாக வைக்கப்பட்டுள்ளன. மேலும், பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் பிறந்த தினம் அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, விருதுநகரில் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 124-வது பிறந்தநாள் விழா செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், 15.07.2026 அன்று சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது.அன்றைய தினம், விருதுநகர்-மதுரை சாலையில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராசர் நூற்றாண்டு நினைவு மணிமண்டபத்தில் உள்ள அன்னாரது திருவுருவ சிலைக்கு மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், முக்கிய பிரதிநிதிகள் உட்பட பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளார்கள்.மேலும், பொதுமக்கள் அன்னாரது நினைவு இல்லத்தில் உள்ள சிலைக்கு மரியாதை செலுத்தவும், இல்லத்தை பார்வையிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jul 13, 2026

அரசுப்பள்ளி மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி பயில தயார் செய்யும் வகையில் வெற்றிப்பள்ளி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பயிற்சி வகுப்புகள்.

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நாடார் நகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அரசுப்பள்ளி மாணவர்கள்  உயர்கல்வி நிறுவனங்களில்  கல்வி பயில தயார் செய்யும் வகையில் வெற்றிப்பள்ளி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பயிற்சி வகுப்புகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (11.07.2026) பார்வையிட்டு ஆய்வு செய்தார். அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனை பாதுகாத்திடவும், அதிகப்படியான மாணவர்கள் சிறந்த கல்வி நிறுவனங்களில் உயர் கல்வி பயில வேண்டும் என்பதற்காக வெற்றிப்பள்ளிகள் திட்டம் பள்ளிக்கல்வித்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு பயிலும் மாணவர்களுக்கு சிறந்த பயிற்றுனர்களைக் கொண்டு பாடங்கள் நடத்தப்படுகின்றன. மாணவர்களுக்கு தேவையான வழிகாட்டி புத்தகங்களும், எழுதுப்பொருட்களும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் அரசுப்பள்ளி மாணவர்கள் தனியார் நிறுவனங்களில் கட்டணம் செலுத்தி பயிற்சி பெறும் சூழ்நிலை தவிர்க்கப்படுவதோடு, அனைத்து மாணவர்களும் விருப்பத்தின் பேரில் பயிற்சி பெறும் சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் விருதுநகர் த.பெ.நா நகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி, பாலவநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளி, சிவகாசி அ.உ.நகராட்சி மேல்நிலைப்பள்ளி, திருவில்லிபுத்தூர்  திரு.வி.க. நகராட்சி மேல்நிலைப்பள்ளி, எம்.ரெட்டியபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, படந்தால் அரசு மேல்நிலைப்பள்ளி, இராஜபாளையம் சேத்தூர் சேவக பாண்டியாஅரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என 7 பள்ளிகளில் 1209 மாணவ, மாணவிகளுக்கு நீட், ஜே.இ.இ மற்றும் க்யூட் ஆகிய பயிற்சிகள் வழங்கப்படுகிறது.இதன் மூலம் அனைத்து அரசுப்பள்ளி மாணவர்களும் உயர் கல்வி பயில வேண்டும் என்ற மாணவர்களின் கல்விக்கனவு நிறைவேற்றப்படுகிறது. ஆசிரியர்களை மாணவர்களிடம் கனிவாகவும், புரியும் வண்ணமும் பாடங்கள் நடத்தியும், தொடர்ந்து தேர்வுகள் நடத்தியும் அவர்களின் கற்கும் திறனை மேம்படுத்திட அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. இதனை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.முன்னதாக, பள்ளிப்படிப்பில் இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து, 3 மாணவர்களின் வீடுகளுக்கு சென்று   அவர்களின் பெற்றோர்களுக்கு அறிவுரைகள் வழங்கி மீண்டும் கல்வி தொடர அறிவுறுத்தினார் .ஆய்வின் போது, மாவட்ட கல்வி அலுவலர் திருமதி சாந்தி , மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமதி மீனாட்சி உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Jul 13, 2026

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி வட்டாரத்தில் “உங்களை தேடி உங்கள் ஊரில்”முகாம் நடைபெறவுள்ளது .

மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மக்களைத் தேடிச்சென்று குறைகளைக் கேட்டறியவும், பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே சென்று ஆய்வு செய்திட ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற  திட்டம் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, விருதுநகர் மாவட்டம், ‘காரியாபட்டி வட்டத்தில்“ உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டமானது 15.07.2026 அன்று காலை 09.00 மணி முதல் மறுநாள் 16.07.2026 அன்று காலை 09.00 மணி வரை நடைபெறவுள்ளது. மேலும் 15.07.2026 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 04.30 மணி வரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அனைத்து மாவட்ட நிலை அலுவலர்களும் கள ஆய்வில் ஈடுபட்டு, காரியாபட்டி வட்டத்தில் உள்ள மக்களின் குறைகளைக் கேட்டறிந்து அரசின் அனைத்து நலத்திட்டங்களும் மற்றும் சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை ஆய்வு செய்ய உள்ளனர். அதன் ஒரு பகுதியாக, 15.07.2026 அன்று  மாலை 03.00 மணி முதல் 06.00 மணி வரை காரியாபட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வைத்து மக்களை சந்தித்து குறைகளைக்; கேட்பதும், மாலை 06.00 மணி முதல் மாவட்ட அளவிலான முதல் நிலை அலுவலர்களுடன் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்து இரவில் தங்கி பணியாற்றவும் உள்ளனர்.மேலும், அன்றைய தினம் நடைபெறும் முகாமில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. எனவே காரியாபட்டி வட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது பகுதிகளில் உள்ள குறைகளை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் நேரில் தெரிவித்து, அரசின் திட்டங்கள் அனைத்தும் தங்கள் பகுதிக்கு முழுமையாக கிடைத்திட இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Jul 13, 2026

மாவட்ட அளவிலான வன்கொடுமை தொடர்பான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினராக தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான வன்கொடுமை தொடர்பான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழுவானது 29.03.2023 அன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேற்படி குழுவானது மூன்று வருடத்திற்குள்  கலைக்கப்பட வேண்டும்.  எனவே  நடைமுறையில் உள்ள பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் நல்வாழ்வு குறித்த மாவட்ட அளவிலான வன்கொடுமை தொடர்பான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழுவானது தற்போது கலைக்கப்படுகிறது.  புதிய குழுவிற்கான உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இக்குழுவில் மாவட்ட ஆட்சியர் தலைவராகவும், மாவட்ட ஆதிதிராவிடர்  மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செயல் உறுப்பினராகவும், உறுப்பினர்களாக நாடாளுமன்றம் அல்லது மாநில சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் (பட்டியலினத்தைச்  சேர்ந்தவராக இருத்தல் வேண்டும் அல்லது மாநில அரசால் பரிந்துரை செய்யப்படும் விருதுநகர் மாவட்டத்தினைச் சேர்ந்த இரண்டுக்கும் மிகாத நபர்கள்), காவல் கண்காணிப்பாளர், அதிகாரப்பூர்வமான உறுப்பினர் (Gazatted Officers), அதிகாரப்பூர்வமற்ற உறுப்பினர்கள்(ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த சமுக ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள்) ஆகியோர் இருப்பார்கள்.எனவே, தகுதி வாய்ந்த நபர்கள் விருதுநகர்  மாவட்ட பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் நல்வாழ்வு குறித்த மாவட்ட அளவிலான வன்கொடுமை தொடர்பான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினராக வருகின்ற 15.07.2026 –க்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

1 2 ... 9 10 11 12 13 14 15 ... 139 140

AD's



More News