விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் (11.07.2026) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் உலக மக்கள்தொகை தினம்-2026 முன்னிட்டு, விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.உலக அளவில் மக்கள்தொகை பெருக்கம் என்பது நாடுகளின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய இடையூறாக திகழ்கின்றது . மக்கள் தொகை பெருக்கும் குறிக்கும் அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11 அன்று உலக மக்கள் தொகை தினமாக அனுசரிக்கப்படுகிறது. அது குறித்த உறுதிமொழி ஏற்றல், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பேரணி நடத்தப்படுகிறது இந்த ஆண்டு உலக மக்கள் தொகை தினம் தாய் மற்றும் குழந்தையின் நலனுக்காகவும் திட்டமிடப்படாத கர்ப்பங்களை தடுப்பதற்காகவும் கர்ப்பங்களுக்கிடையே ஆரோக்கியமான கால இடைவெளியினை பேணுவோம் என்ற கருப்பொருளின் அடிப்படையில் அனுசரிக்கப்படுகிறது.அதன்படி, உலக மக்கள் தொகை தினம்-2026 முன்னிட்டு விருதுநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இருந்து செவிலியர் மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.மக்கள்தொகை பெருக்கம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், ஊரக வளர்ச்சித்துறை, நகர வளர்ச்சித்துறை, உணவு மற்றும் பொ து விநியோகம், போக்குவரத்துத்துறை, கல்வித்துறை ஒருங்கிணைந்து செயலாற்றிட வேண்டும்.போதிய கர்ப்ப இடைவெளியினால், தாயின் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து மேம்படும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் இரண்டு ஆண்டுகள் வரை கொடுப்பதால் தாய் மற்றும் சேய் நலம் மேம்படுவதுடன், ஆரோக்கியம் மற்றும் சுகாதாரமான எடை அதிகரிக்கிறது. இதனால் பிரசவ காலங்களில் ஏற்படும் இறப்பு விகிதம் மற்றும் குழந்தை இறப்பு விகிதம் குறைகிறது. தாய் மற்றும் குழந்தையின் நல்வாழ்வுக்கு 20 வயதிற்கு பிறகு முதல் கர்ப்பம் ஆவது சிறந்தது. இரண்டு பிறப்புகளுக்கு இடையில் குறைந்தது 3 வருட இடைவெளி மற்றும் கருக்கலைப்புக்குப் பிறகு குறைந்தது 6 மாத இடைவெளி இருப்பது நல்லது.குடும்ப நலத் தேவைகளை பூர்த்தி செய்வதில், தற்காலிக மற்றும் நிரந்தர கருத்தடை முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், கருத்தடை உள்ளிட்ட சேவைகளை வழங்குவதில் முதன்மையான கவனம் செலுத்த வேண்டும் கருக்கலைப்பு தொடர்பான ரகசியம் பாதுகாக்கப்படும்.அதன்படி, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்கள் ஆகிய அனைத்து இடங்களிலும், குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளான, தற்காலிக குடும்ப நல சேவைகள்(ஐயுசிடி பொருத்துதல் ஊசி மூலம் கருத்தடை ), நிரந்தர குடும்ப நல சேவைகள்(பெண்களுக்கான கருத்தடை முறைகள் ஆண்களுக்கான கருத்தடை முறைகள்) ஆகிய குடும்ப நலத்திட்டமிடல் சேவைகள் வழங்குவதில் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.பெண்களுக்கான நிரந்தர கருத்தடை முறை (டியூபெக்டமி, லேப்ராஸ்கோபிக்) எளிமையானவை. இதற்கு பயனாளிக்கு அரசு ஊக்கத்தொகை வழங்கப்படும். ஆண்களுக்கான நிரந்தர கருத்தடை சி கிச்சை (நவீன வாசக்டமி ) எளிமையானது. இதற்கு பயனாளிக்கு அரசு ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.இதுபோன்ற அறிவியல் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது மருத்துவத் துறையினரின் கடமை. எனவே ஒட்டுமொத்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தான் உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்த பேரணியில் கலந்து கொண்ட பயிற்சி செவிலியர்கள் தங்கள் கைகளில், வளமான குடும்பம், வலிமையான குடும்பம்; வளர், இளம் பெண்களை காப்போம்;, வேண்டாம், வேண்டாம் இளம் வயது திருமணம் வேண்டாம்;, போதும் போதும் ஒரு குழந்தை போதும் என்ற விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர். இந்த பேரணியானது அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று நிறைவு பெற்றது.முன்னதாக, உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.மேலும், உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.இந்நிகழ்ச்சியில், அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மரு.ஜெயசிங் உட்பட அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், மருத்துவப்பணியாளர்கள், செவிலியர் கல்லூரி மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை, விருதுநகர் மாவட்டக் கலை மன்றத்தின் வாயிலாக 2025-2026 ஆம் ஆண்டுக்கான மாவட்ட அளவில் அகவை மற்றும் கலைப்புலமையின் அடிப்படையில் சிறந்த 15 கலைஞர்கள் விருதுகள் வழங்கிட தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இவ்விருதுகளை தமிழ்நாட்டின் கலை பண்புகளை மேம்படுத்தும் மற்றும் பாதுகாக்கும் நோக்கிலும் கலைஞர்களின் கலைத்திறனை சிறப்பிக்கும் வகையிலும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் செயல்பட்டு வரும் மாவட்டக் கலை மன்றங்களின் வாயிலாக 2021-2022 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் சிறந்த பதினைந்து கலைஞர்களுக்கு கலை விருதுகள் வழங்கிட அரசு ஆணையிடப்பட்டுள்ளது.2025-2026 ஆம் ஆண்டுக்கான மாவட்டக் கலை விருதுகள் வழங்க மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S. அவர்கள் தலைமையில் 10.07.2026 அன்று நடைபெற்ற தெரிவுக்குழு கூட்டத்தில், திருநெல்வேலி, மண்டலக் கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர், திரு.து.சிவப்புகழ் அவர்கள், விருதுநகர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.நாகராஜபூபதி அவர்கள், விருதுநகர் மாவட்ட சுற்றுலா அலுவலர் திரு.நா.அன்பரசு அவர்கள், கலை சுடர்மணி திருமதி.வ.லலிதா, பரதநாட்டியக் கலைஞர், கலை வளர்மணி திரு.ரவிச்சந்திரன், நாதஸ்வரக் கலைஞர், கலை முதுமணி திரு.கோ.ஆறுமுகம், நாடகக் கலைஞர் மற்றும் கலை வளர்மணி.செல்வி.உமாராணி, கிராமியக் கலைஞர் ஆகியோர் கலந்து கொண்டு, மாவட்ட அளவில் சிறந்த கலைஞர்களை, அகவை மற்றும் கலைப்புலமை அடிப்படையில் கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.2025-2026 ஆம் ஆண்டு மாவட்ட கலை விருதுகளில் கலை இளமணி விருதுகளுக்கு செல்வி பா.காவ்யஸ்ரீ(பரதநாட்டியம்), செல்வி செ.ஸ்ரீநிதி (பரதநாட்டியம்), செல்வி.மு.வேதசாதனா(ஓவியம்), கலை வளர்மணி விருதுகளுக்கு திரு.இர.சுரேஷ்குமார்(நாடகம்), திரு.பொ.விஸ்வநாத்(கரகாட்டம்), திரு.பெ.சிவக்குமார்(நாட்டுப்புறப் பாடல்),கலை சுடர்மணி விருதுகளுக்கு திரு.வே.சுடலைக்கனி(தவில்), திரு.கா.கருப்பசாமி(ஒயிலாட்டம்), திரு.த.தனலெட்சுமி(வில்லிசை பாடகர்), கலை நன்மணி விருதுகளுக்கு திரு.அ.கந்தவேல்(நாதஸ்வரம்), திரு.ப.மாரிராஜ்(வாய்பாட்டு), திரு.பா.வெங்கடேஸ்வரன்(சிலம்பம்), கலை முதுமணி விருதுகளுக்கு திருமதி இளவரசி சொக்கர்(ஓவியம்), திரு.எஸ்.கே.கோபால்(நாதஸ்வரம்), திரு.பே.காளியப்பன்(நாடகம்) ஆகிய 15 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்ட கலைஞர்களுக்கு, விருதுநகர் மாவட்டத்தில் 19.07.2026 அன்று அரசு அருங்காட்சியகத்தில் நடைபெறவுள்ள ஓவிய சிற்பக் கண்காட்சி மற்றும் பயிற்சி பட்டறை நிறைவு விழாவில் விருதுக்கான பொற்கிழி, பட்டயம் மற்றும் பொன்னாடை வழங்கி கௌரவிப்படுவார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ் வளர்ச்சித் துறையால் “தனித்துவத் தமிழ்நாடு எனப்பெயர் சூட்டப்பட்ட 18.07.1967ஆம்நாளினை பெருமைப்படுத்திடும் வகையில் ஆண்டுதோறும் சூலை 18ஆம் நாள் “தமிழ்நாடுநாள் விழாவாக” மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாடுநாளை நினைவுகூரும் வகையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளிலும் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் 14.07.2026 அன்று விருதுநகர் கே.வி.எஸ். ஆண்கள் நடுநிலைப்பள்ளியில் (விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகில்) நடத்தப்பெறும். பள்ளி மாணவர்களுக்கானக் கட்டுரை பேச்சுப்போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.10,000 -மும் இரண்டாம் பரிசாக ரூ.7000 -மும் மூன்றாம் பரிசாக ரூ.5000 -மும் மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்பெறும். தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநில அளவிலான கட்டுரை பேச்சுப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.50,000 -மும், இரண்டாம் பரிசாக ரூ.30,000 -மும், மூன்றாம் பரிசாக ரூ.20,000 -மும், மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்பெறும். முதன்மைக் கல்வி அலுவலரால் அளிக்கப்பெறும் பெயர்ப்பட்டியலில் உள்ளவர்கள் மட்டுமே போட்டிகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள். கட்டுரைப் போட்டி தமிழ்நாடு நாள் கருவானது முதல் உருவானது வரை என்ற தலைப்பிலும் , பேச்சுப் போட்டி 1.நான் விரும்பும் தமிழ்நாடு 2.அன்றைய மெட்ராஸ் மாகாணம் இன்றைய நவீன தமிழ்நாடு 3.இளைஞர்களின் பார்வையில் தமிழ்நாடு 4.கல்வியில் சிறந்த தமிழ்நாடு 5. வீரம் செறிந்த தமிழ்நாடு என்ற ஐந்து தலைப்புகளில் போட்டி நாளன்று மாணவர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கும் ஏதேனும் ஒரு தலைப்பின்கீழ் பேசவேண்டும். மேலும் போட்டி பற்றிய கூடுதல் விவரங்களுக்கு தமிழ்வளர்ச்சி உதவி இயக்குநர் மாவட்டஆட்சியர் அலுவலக வளாகம் விருதுநகர் என்ற முகவரியிலோ அல்லது செல்பேசி 8778878443 / 8608953287 என்ற எண்ணிலோ தொடர்புகொள்ளலாம். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் இப்போட்டிகளில் பங்கேற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என்.ஓ.சுகபுத்ரா, I A S., தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தின் கலை, கலாச்சாரம் மற்றும் இலக்கியம் தொடர்பான திறனை மேம்படுத்தி உயர்த்தும் நோக்கில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டுச் சங்கம் தோற்றவிக்கப்பட்டது.அச்சங்கம் மூலம் 11 சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகளை தெரிவு செய்து அவர்களுக்கு தலா ரூ.1,00,000/- ஆக நிதி உதவியினை உயர்த்தி வழங்கிட அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. 2025-2026-ஆம் ஆண்டிற்கான சிறந்த எழுத்தாளர்களுக்கான உதவித்தொகையினை பெற தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அதற்கான விண்ணப்பங்களை தொடர்புடைய மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகங்களிலும், ஆதிதிராவிடர் நல ஆணையரகத்திலும் வேலை நாட்களில் பெற்றுக் கொள்ளலாம்;, மேலும் tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள website) https://cms.tn.gob.in/cms_migrated/document/forms/best/writers/award_application_form/2025-2026.pdf என்ற Link அல்லது இணைப்பில் காணும் QR Code-ia ஸ்கேன் செய்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்;, விண்ணப்பதாரர்கள் தங்களது படைப்பின் இரு நகல்களை வன்நகலாகவும் (Hard Copy) டிஜிட்டல் (Digital) முறையிலும், உரிய படிவத்தில் பூர்த்தி செய்து 31.08.2026 -க்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர், மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின், கீழ் செயல்படும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் சமூக நீதி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ / மாணவியர்கள் விடுதிகளில் நடைபெறும் தவறுகள் மற்றும் அசம்பாவித சம்பவங்கள் குறித்து புகார் தெரிவிக்க 9445477016 என்ற வாட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே மாணவ / மாணவிகள் விடுதிகளில் உள்ள குறைபாடுகள் தொடர்பாக மேற்படி 9445477016 எனற வாட்ஸ்அப் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S. அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இந்திய அரசின் Startup India (DPIIT), தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் (StartupTN) மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நடத்திய தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி பட்டறையினை TEJAS (Transforming Entrepreneurial Journeys and Accelerating Startups) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (09.07.2026) தொடங்கி வைத்தார்.இந்த பயிற்சி பட்டறையில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு ஸ்டார்ட்அப் திட்டங்கள், நிதி உதவிகள், இன்குபேஷன் வசதிகள், முதலீட்டு இணைப்புகள், அறிவுசார் சொத்துரிமை, சந்தை அணுகல் மற்றும் ஸ்டார்ட் அப் பதிவு தொடர்பான விரிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் இன்குபேஷன் மையங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, தொழில்முனைவோருக்கு சிறந்த சேவைகளை வழங்கும் நோக்கில், வட்டார இன்குபேஷன் கிளஸ்டரினை (Regional Incubation Cluster) மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார். மேலும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் பெண்களின் திறன்களை மேம்படுத்தி, புதுமை, தொழில்முனைவு மற்றும் சமூக முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் விருதுநகர் பெண்மை (Virudhunagar PenmAI 2026) என்னும் தொழில்நுட்பம் சார்ந்த பதாகை வெளியிடப்பட்டது.ஸ்டார்ட்அப் இந்தியா என்பது, இந்தியாவில் புதுமையான தொழில்முனைவோரை உருவாக்கவும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும், புதுமைகளை ஊக்குவிக்கவும், தொடங்கப்பட்ட முயற்சியாகும்.விருதுநகர் மாவட்டம் தமிழ்நாட்டில் முன்னேற விழையும் மாவட்டங்களில் ஒன்றாகும். எனவே, மாவட்ட நிர்வாகம், கல்வி நிறுவனங்கள், தொழில்முனைவோர், மருத்துவ நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் மாணவர்கள்கள் ஆகியோர் ஒன்றிணைந்து உள்ளூர் சவால்களுக்கு புதுமையான தீர்வுகளை உருவாக்குவதற்கான சிறந்த வாய்ப்பாக இது அமைகிறது. விருதுநகர் மாவட்டத்தில் புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவு சூழலை உருவாக்க மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து பல்வேறு முன்னோடி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.மாவட்டத்தின் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் ஆண்டுதோறும் தொழில்முனைவு மற்றும் புத்தாக்க சிந்தனையை மாணவர்களிடையே உருவாக்கும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் தொழில்முனைவு வழிகாட்டுதல் முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தொடர் முயற்சிகளின் பலனாக, கடந்த ஆண்டில் 3 ஆக இருந்த இன்குபேஷன் மையங்கள் தற்போது 8 பதிவு செய்யப்பட்ட இன்குபேஷன் மையங்களாக உயர்ந்துள்ளன. மேலும், 4 இன்குபேஷன் மையங்களுக்கு StartupTN மூலம் மொத்தம் ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டு, தொழில்முனைவோருக்கு தரமான வழிகாட்டல் மற்றும் ஆதரவு வழங்கும் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.விருதுநகர் மாவட்டத்தில் தற்போது 149 DPIIT அங்கீகாரம் பெற்ற ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்கள் வேளாண்மை, தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம், உணவுப் பதப்படுத்தல், பசுமை தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்பட்டு மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களித்து வருகின்றன.மாவட்டத்தில் ஏற்கனவே ஸ்டார்ட்அப் இந்தியா, ஸ்டார்ட்அப் தமிழ்நாடு (StartupTN) மற்றும் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களுடன் இணைந்து கடந்த ஆண்டு, தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனங்களை அழைத்து "விருதுநகர் முதலீட்டாளர்கள் கூட்டம் 2025(Virudhunagar Investor Meet 2025)" நடத்தப்பட்டது. இதன் மூலம் முன்னணி தொழில்முனைவோர்கள் மூலம் புதிய தொழில்முனைவோர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே புதுமை சிந்தனைகளை ஊக்குவித்து, சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டது.விருதுநகர் மாவட்டத்தின் மிகப்பெரிய பலமாக பட்டாசு தொழில் விளங்குகிறது. குறிப்பாக சிவகாசி பட்டாசு தொழில் ஆண்டுக்கு சுமார் ரூ.6,000 கோடி வருவாயை ஈட்டுவதோடு, சுமார் 1.5 லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பை வழங்குகிறது. இதில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்கள் ஆவர். இது மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இருப்பினும், இரசாயன கலவைப் பணிகளின் போது ஏற்படும் விபத்துகள் தொடர்ந்து கவலைக்குரியதாக உள்ளன.எனவே, கல்லூரிகள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் இணைந்து இரசாயன கலவை மற்றும் ஆபத்தான தொழிற்சாலை பணிகளை தானியக்கப்படுத்தும் அல்லது தரநிலைப்படுத்தும் தொழில்நுட்பத் தீர்வுகளை உருவாக்க வேண்டும். விருதுநகர் மாவட்டத்தின் இரண்டாவது முக்கிய சவால் நீர் வள மேலாண்மை ஆகும். குறைந்த மழைப்பொழிவு காரணமாக மாவட்டம் நீர் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. மேலும், சீமைக் கருவேல மரங்கள் பரவலாக வளர்ந்து நிலத்தடி நீர் வளங்களையும், விவசாயத்தையும் பாதிக்கின்றன. சீமைக் கருவேலத்தை அகற்றுவதற்கோ அல்லது பயனுள்ள பொருளாக மாற்றுவதற்கோ தொழில்நுட்பத் தீர்வுகள் உருவாக்கப்பட்டால், அது விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தி, பிரதமரின் “விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும்” இலக்கை அடையவும் உதவும்.மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு திட்டமான திசை திட்டத்தின் கீழ் பள்ளியில் மாணவர்களின் இடைநிற்றலை குறைப்பதன் மூலம் குழந்தைத் திருமணம், பதின்பருவ கர்ப்பம், இரத்தச்சோகை, குழந்தை இறப்பு விகிதம் (IMR), தாய் இறப்பு விகிதம் (MMR) போன்ற சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். அரசு பள்ளிகளில் பயிலும் திறமையான மாணவர்களை அடையாளம் கண்டு, நீட் (NEET), க்யூட் (CUET) மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகளை வழங்கி உயர்கல்விக்கு வழிகாட்டப்படுகிறன.விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 5 பழங்குடியினர் கிராமங்கள் உள்ளன.அவற்றில் இராஜபாளையத்தில் இரண்டு குடியிருப்புகளும், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு பகுதிகளில் மூன்று குடியிருப்புகளும் அமைந்துள்ளன. சதுரகிரி மலைப்பகுதியில் மருத்துவ குணங்கள் நிறைந்த பல்வேறு வன விளைபொருட்கள் கிடைக்கின்றன. சதுரகிரி மலைப்பகுதி பழங்குடியின மக்கள் தயாரிக்கும் தேயிலைப் பொருட்களை பழங்குடியின மக்களின் பங்களிப்புடன் “உயிர் டிப் டீ” என்ற பெயரில் சந்தைப்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன.இந்த தயாரிப்புகளை டெல்லியில் நடைபெற்ற கண்காட்சியிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. உங்களுடைய ஒத்துழைப்பும் ஆதரவும் கிடைத்தால், இத்தகைய திட்டங்கள் விருதுநகர் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமையும். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், உங்களுக்குத் தேவையான அனைத்து வகையான ஒருங்கிணைப்பு மற்றும் செயல்பாட்டு தளத்தையும் (Platform) வழங்க தயாராக உள்ளன. உங்களிடம் உள்ள திறமைகள், புதுமையான யோசனைகள் மற்றும் வளங்களை பயன்படுத்தி, அவற்றை செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் முழு ஆதரவையும் வழங்கும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S ., அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்வில் StartupTN உதவி இணைத்தலைவர் திரு.பிரேம் குமார், துணைத்தலைவர் திரு.சிவக்குமார், அசோசியேட் (Associate) Startup India திரு.ரோஹன் சச்தேவா, ஆலோசகர்(Startup India) திரு.விஷால் கர்க், வட்டார ஒருங்கிணைப்பாளர் திரு.சக்திவேல், கல்வி நிறுவனங்கள், தொழில்துறை பிரதிநிதிகள், முதலீட்டாளர்கள், இன்குபேஷன் மையங்கள், அரசு அலுவலர்கள், ஸ்டார்ட்அப் நிறுவனர்கள், மாணவர்கள் மற்றும் தொழில் முனைவோர் ஆர்வலர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சென்னை தொழிலாளர் ஆணையர் அவர்களின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு அரசு தொழில் நிறுவனங்கள் மற்றும் பணியாளர்களிடையே தொழில் நல்லுறவை மேம்படுத்தும் நோக்கில் “தொழில் நல்லுறவை பேணிப்பாதுகாக்கும் பணியில்” சிறந்து விளங்கும் நிர்வாகத்தினர் மற்றும் தொழிற்சங்க அமைப்புகளுக்குப் பரிசுகள் வழங்கும் வகையில் “தொழில் நல்லுறவு பரிசுத் திட்டம்” என்ற திட்டத்தை 1975-ஆம் ஆண்டு துவங்கி நாளது தேதி வரை செயல்படுத்தி வருகிறது.இத்திட்டத்தின் கீழ் முதல் மற்றும் இரண்டாம் பரிசு பெறுபவர்களுக்கு கேடயம், பரிசுத் தொகை மற்றும் தகுதிச் சான்றிதழ்கள் வழங்கப்படும். ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் அமைக்கப் பெற்ற முத்தரப்புக்குழு பரிசுக்குரியவர்களைத் தேர்ந்தெடுக்கும்.இத்தொழில் நல்லுறவு விருதுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய இறுதி நாள் 30.04.2026 என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இவ்விருதுக்கு விண்ணப்பிக்கும் காலம் 31.07.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்விருதுக்குரிய விண்ணப்பங்களை தொழிலாளர் துறையின் வலைதளத்தில் (http://www.labour.tn.gov.in/gira) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். அல்லது இவ்விண்ணப்பங்களை நேரடியாக திருநெல்வேலி பெருமாள்புரம் போஸ்ட் திருமால்நகர் ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகத்திலுள்ள தொழிலாளர் உதவி ஆணையர் (சமரசம்) அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.விண்ணப்பத்துடன் நுழைவுக் கட்டணமாக விண்ணப்பித்தவர் தொழிற்சங்கமானால் ரூ.100-ம் வேலையளிப்பவரானால் ரூ.250-ம் “செயலாளர் (தொழிலாளர் தனி இணை ஆணையர் தொழிலாளர் ஆணையர் அலுவலகம்) தொழில் நல்லுறவு பரிசுக்குழு அண்ணாநகர் சென்னை-40” (The Secretary, (Special Joint Commissioner of Labour, Office of the Commissioner of Labour) Good Industrial Relations Award Committee, Anna nagar, Chennai-40) என்ற பெயருக்கு கணக்குத் தலைப்பு (“0230-00 00 Labour and Employment 800 other Receipts- 227 Non Taxation fees – 99 others –AG Receipt of Labour Department (DP code No. 0230 00 800 AG 22799)”)ன் கீழ் பாரத ஸ்டேட் வங்கியின் கருவூலக் கிளையில் தொகை செலுத்திய அசல் செலுத்துச்சீட்டு (Challan) வைத்து அனுப்ப வேண்டும். அல்லது விண்ணப்பத்துடன் நுழைவுக் கட்டணமக தொழிற்சங்கத்திற்கு ரூ.100-ம் வேலையளிப்பவருக்கு ரூ.250-ம் “நிர்வாக அலுவலர் (குறைந்தபட்ச ஊதியம்) தொழிலாளர் ஆணையர் அலுவலகம் சென்னை” என்ற பெயரில் செலுத்திய வரைவோலையை (Demand Draft) வைத்து அனுப்ப வேண்டும் மேலும் விவரங்களுக்கு 044-24320887 என்ற அலுவலக தொலைபேசி எண்ணிற்கு தொடர்புகொள்ளளாம் என மாவட்ட ஆட்சித்தலைவர், மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுவானது 29.03.2023 அன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேற்படி குழுவானது மூன்று வருடத்திற்குள் கலைக்கப்பட வேண்டும்.எனவே நடைமுறையில் உள்ள பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் நல்வாழ்வு குறித்த மாவட்ட அளவிலான வன்கொடுமை தொடர்பாக தற்போது உள்ள விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழுவானது கலைக்கப்படுகிறது. புதிய குழு அமைத்து, அக்குழுவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைவராகவும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்- செயல் உறுப்பினராகவும் செயல்படுவார்கள். இக்குழுவில் அதிகாரப்பூர்வமான உறுப்பினர்களாக காவல்கண்காணிப்பாளர் மற்றும் அரசிதழ் பதிவுபெற்ற அதிகாரிகள் (Gazatted Officers) செயல்படுவார்கள். நாடாளுமன்றம் அல்லது மாநில சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் (பட்டியலினத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்) அல்லது மாநில அரசால் பரிந்துரை செய்யப்படும், விருதுநகர் மாவட்டத்தினைச் சேர்ந்த இரண்டு நபர்கள் மற்றும் அதிகாரப்பூர்வமற்ற உறுப்பினர்களாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த சமுக ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள் விண்ணப்பிக்கலாம். எனவே , விருப்பமுள்ள தகுதி வாய்ந்த நபர்கள் விருதுநகர் மாவட்ட பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் நல்வாழ்வு குறித்த மாவட்ட அளவிலான வன்கொடுமை தொடர்பான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினராக சேர்வதற்கு வருகின்ற 15.07.2026 –க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S . அவர்கள் தெரிவித்துள்ளார்.
சாதிப் பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையினையும் கடைபிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவித்து கௌரவிக்கும் வகையில், தகுதி படைத்த 10 ஊராட்சிகளுக்கு சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுடன் தலா ரூ.1 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதனடிப்படையில், 2026-27-ஆம் ஆண்டிற்கான சமூக நல்லிணக்க ஊராட்சி விருது பெற விரும்பும் ஊராட்சிகள் விண்ணப்பப் படிவத்துடன், அதற்குரிய ஆவணங்களையும் இணைத்து விண்ணப்பிக்கலாம். இவ்விருதுக்கான விண்ணப்ப படிவத்தை tn.gov.in என்ற இணைய தளத்தில் உள்ள https://cms.tn.go.in/cms migrated/document/forms/Social Award App26 27.pdf Link அல்லது இணைப்பில் காணும் QR code -யை ஸ்கேன் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது விருதுநகர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலும் விண்ணப்பப் படிவத்தை பெற்றுக் கொள்ளலாம் . பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் உரிய ஆவணங்கள் மற்றும் புகைப்படத்துடன் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது அரசு தபால் அஞ்சல் மூலமாகவோ 31.07.2026 மாலை 06.00 மணி வரை பெறப்படும். தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், காரிசேரி கிராமத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.பி.செல்வம் அவர்கள் முன்னிலையில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் (08.07.2026) நடைபெற்றது.இம்முகாமில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் 1 பயனாளிக்கு ரூ.1 இலட்சம் மதிப்பிலான விபத்து நிவாரண உதவித்தொகையையும், 155 பயனாளிகளுக்கு ரூ.56.79 இலட்சம் மதிப்பில் இணைய வழி பட்டாக்களையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் 4 பயனாளிகளுக்கு ரூ.26,000/- மதிப்பில் விலையில்லா தையல் இயந்திரம் மற்றும் தேய்ப்பு பெட்டிகளையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.13,000/- மதிப்பில் தையல் இயந்திரங்களையும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் 4 கர்ப்பிணித்தாய்மார்களுக்கு ரூ.8000/- மதிப்பில் ஊட்டச்சத்து பெட்டகங்களையும், வேளாண்மைத்துறையின் சார்பில், 6 பயனாளிகளுக்கு ரூ.48,374/- மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும், தோட்டக்கலைத் துறையின் சார்பில், 3 பயனாளிகளுக்கு ரூ.71,300/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு காப்பீட்டு அட்டைகளையும் என மொத்தம் 177 பயனாளிகளுக்கு ரூ.59.46 இலட்சம் மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்கள் பற்றியும் அதற்கான தகுதிகள் பற்றியும் அனைத்து பொதுமக்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் இம்முகாம் நடத்தப்படுகிறது. இம்முகாமில் பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் தங்கள் துறை சார்ந்து செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து, அனைத்து திட்டங்களையும் கடைக்கோடி கிராமங்களில் வாழும் ஏழை, எளிய மக்களும் அறிந்து தெரிந்து கொண்டு எவ்வித சிரமமின்றி அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் தகுதியான மக்கள் பெற்று பயன்பெற வேண்டும் என்பதற்காகத்தான் ஒவ்வொரு மாதமும் ஒரு கிராமத்தை தேர்வு செய்து, மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்படுகிறது.மேலும் இந்த மக்கள் தொடர்பு முகாமில் அரசினுடைய திட்டங்களை மக்கள் அறிந்து கொள்கிற வகையில் பல்வேறு அரசுத் துறைகள் மூலமாக கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டும், துறை சார்ந்த அரசு அலுவலர்கள் மூலம் பொது மக்களுக்கு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டும் வருகிறது.தமிழக அரசின் சிங்கபெண் அதிரடிப்படை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களைத் தடுத்து, துரிதமாகச் செயல்பட்டுப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் காவல் உதவியை, 1091 என்ற உதவி எண் மூலம் நேரடியாக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை தொடர்பு கொள்ளலாம்.விபி-ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ் ஒரு நிதியாண்டிற்கான வேலை நாட்கள் 100-லிருந்து 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வேலை நாட்களும் ஊதியமும் அதிகரிக்கப்பட்டுள்ளதால், சரியான பணியினைத் தேர்வு செய்து கிராமப்புறக் குடும்பங்களுக்கு பணி வழங்கப்படும்.எல் நினோ மழைப்பொழிவு மற்றும் வெப்பநிலையில் கடுமையான மாற்றங்களை ஏற்படுத்தும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கையாக தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கவும், விவசாய உற்பத்தியில் கவனம் செலுத்தவும் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றிட சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.எனவே, பொதுமக்கள் இதுபோன்று பல்வேறு துறைகள் மூலம் அரசு செயல்படுத்தும் திட்டங்களை அறிந்து கொண்டு, பயன்பெற வேண்டுமெனவும், மற்றவர்களுக்கும் அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமெனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். முன்னதாக இந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பல்வேறு அரசு துறைகள் மூலமாக அமைக்கப்பட்ட அரசு திட்டங்கள் சார்ந்த அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், துணை இயக்குநர் (மேகமலை புலிகள் காப்பகம், திருவில்லிபுத்தூர்) திரு.ரவி மீனா இ.வ.ப., சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான்,இ.ஆ.ப., தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திருமதி கு.மோகனா, சிவகாசி வட்டாட்சியர், அரசு அலுவலர்கள், உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.