25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Feb 09, 2026

83 குடும்பங்களுக்கு இலவச இணையவழி பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள்  பயனாளிகளின் இல்லங்களுக்கு நேரில் சென்று வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் செங்குன்றாபுரம் ஊராட்சியில்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், வீடுகள் கட்டி குடியிருப்பதற்கான உத்தரவுகள் பெற்று,  குடியிருந்து வரும் 83 பயனாளிகளுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், இணையவழி பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள்  பயனாளிகளின் இல்லங்களுக்கு நேரில் சென்று வழங்கினார்.தமிழ்நாடு அரசு சொந்தமாக வீடு இல்லாமல் அரசின் புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் ஏழை, எளிய குடும்பங்களுக்கு சொந்தமாக ஒரு வீடு கட்டி வாழ வேண்டும் என்பதற்காக  இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டம்  என்ற உன்னதமான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.இத்திட்டத்தின் மூலம் ஆக்கிரமிப்பு பகுதிகளில் வசிக்கும் ஏழை குடும்பங்கள் பாதுகாப்பான மற்றும் நிலையான வாழ்க்கையை வாழ வழிவகை செய்யப்படுகிறது.  இலவச மனை பட்டா வழங்கும் திட்டத்தின்  கீழ் வீடு இல்லாமல் ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி வாழ்ந்து வரும் ஏழை, எளிய குடும்பங்களுக்கு வீட்டு மனை வழங்கப்படுகிறது. மேலும், ஆக்கிரப்பு நிலத்திற்கு உண்டான பட்டாவையும் அரசே இலவசமாக வழங்கி வருகிறது.தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து மாவட்டங்களிலும் அதிகமான பட்டாக்களை வழங்கிய மாவட்டங்களில் ஒன்றாக  நமது மாவட்டம் திகழ்கிறது.அந்த வகையில் விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் செங்குன்றாபுரம் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த 83 குடும்பங்கள்  அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி குடியிருப்பதற்கான உத்தரவுகளை பெற்று குடியிருந்து வருவதாகவும், இதுவரை இந்த இடங்களுக்கான பட்டா இல்லை என்பதால், அதற்கான பட்டார்கள் வழங்கிட வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.அதனடிப்படையில்,  குடியிருந்து வரும் அப்பகுதி மக்களின்  கோரிக்கைகளை பரிசீலனை செய்து   வருவாய்த்துறையின்   மூலம்,  83 குடும்பங்களுக்கு இணையவழி பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று வழங்கினார்.இந்த இடங்களில் நாங்கள் குடியிருந்து வந்தாலும், அரசு பட்டா இல்லாமல் சிரமப்பட்டு இருந்தோம். தற்போது எங்கள் அனைவருக்கும் இலவச பட்டாக்களை, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களே வீடு தேடி வந்து வழங்கியது மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது எனவும், இலவச பட்டா வழங்கியதன் மூலம் நாங்கள் குடியிருந்து வரும் இந்த வீட்டுக்கான அரசு அங்கீகாரம் கொடுத்த தமிழ்நாடு அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் இப்பகுதி மக்கள் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.இந்நிகழ்வின் போது,  விருதுநகர் வருவாய்  வட்டாட்சியர் திரு.ராஜ்குமார் மற்றும்  அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Feb 09, 2026

விருதுநகர் மாவட்டம், 11 வட்டாரங்களில் காலியாக உள்ள 23 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடம் பூர்த்தி செய்யப்பட உள்ளது.

விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்கீழ் வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள விருதுநகர், சிவகாசி, இராஜபாளையம், திருவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி, சாத்தூர், வெம்பக்கோட்டை, வத்திராயிருப்பு மற்றும் காரியாபட்டி ஆகிய 11 வட்டாரங்களில் காலியாக உள்ள 23 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடம் பூர்த்தி செய்யப்பட உள்ளது.பணியிடமானது எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் நிரப்பட உள்ளன.வட்டார ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தகுதிகள்:1)ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி மற்றும் MS Office-ல் குறைந்தது 03 மாத சான்றிதழ் வகுப்பு (Certificate Course) சான்றிதழ் பெற்றவராக இருத்தல் வேண்டும்.2) 30 வயதிற்குள் மிகாமல் இருக்கவேண்டும்.3) தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் SHG/PLF போன்றவற்றில் குறைந்தது 05 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.4) வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் பணியிடமுள்ள வட்டாரத்தின் எல்கை பகுதிக்குள் வசிப்பவராக இரு வேண்டும். (Residence in same block)5) இரு சக்கர வாகனம் ஓட்டுநர் உரிமம் பெற்றிருத்தல் வேண்டும். இருசக்கர வாகனம் நன்றாக இயக்க தெரிந்தவராக இருத்தல் வேண்டும்.6) சிறந்த நன்னடத்தையுடன் இருக்க வேண்டும்.7) தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்டம்/புதுவாழ்வு திட்டம்/IFAD திட்டம் போன்றவற்றின்கீழ் பணிபுரிந்து நிரந்தர பணிநீக்கம்/தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டவராக இருக்கக் கூடாது.விண்ணப்ப படிவம்  இணையதள முகவரி www.virudhunagar.nic.in இல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.1)விண்ணப்பதாரர்கள் பிறந்த தேதி, பணிபுரிந்ததற்கான பணிஅனுபவச் சான்று, கல்வித் தகுதி, சாதிச் சான்று ஆகியவைகளுக்கு ஒளிநகல் (Xerox Copy) கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.2) விண்ணப்ப படிவத்தில் உள்ள விபரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.3) தகுதியில்லாத மற்றும் காலங்கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் இணை இயக்குநர்/ திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, அலுவலக வேலை நாட்களில், காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரிலோ அல்லது இணை இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி துறை அலுவலக வளாகம், விருதுநகர், அஞ்சல் - 626 002, விருதுநகர் மாவட்டம் என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ 16.02.2026 (திங்கட்கிழமை) பிற்பகல் 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Feb 07, 2026

அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடத்தில் அமைச்சர்அவர்கள் மருத்துவ சேவையினை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் (06.02.2026)  காணொலி காட்சி வாயிலாக, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ரூ.30.35 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள   மருத்துவமனை கூடுதல் கட்டடங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S,. அவர்கள் தலைமையில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள், அருப்புக்கோட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை புதிய கட்டடத்தில் மருத்துவ  சேவையினை குத்துவிளக்கேற்றி, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்து பார்வையிட்டார்.அதனைத்தொடர்ந்தும், மக்கள்தொகை அதிகரிப்பு மற்றும் ஊரின் விரிவாக்கம் காரணமாக தண்ணீரின் தேவை அதிகரித்ததால், சீவலப்பேரியில் இருந்து தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்த காரணத்தினால், அருப்புக்கோட்டை பகுதிகளில் தினசரி தண்ணீர் தட்டுபாடின்றி கிடைக்கிறது.மேலும், வைகையில் இருந்து கிடைக்கக்கூடிய குடிநீரை சுத்திகரித்து வழங்கும் வகையில், கட்டங்குடியில்குடிநீர்சுத்திகரிப்புமற்றும்நீரூற்றுநிலையம்அமைக்கும்பணிகள்மேற்கொள்ளப்பட்டு,அதுவிரைவில்பயன்பாட்டிற்குதொடங்கிவைக்கப்படவுள்ளது.இந்த அருப்புக்கோட்டை பகுதியில் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருவதோடு, வடிகால் அமைப்பு மற்றும் வாறுகால் அமைப்பு முறைகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.மக்களிடம் செல் மக்களோடு வாழ் என்று அறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார். நான் உங்களோடு இருக்கின்ற காரணத்தினால்தான், இந்த பகுதி மக்களின் குறைகளை தெரிந்து கொண்டு அதனை நிவர்த்தி செய்து வருகிறேன்.நம்முடைய  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை மற்றும் இராஜபாளையம் ஆகிய இரண்டு அரசு மருத்துவமனைகளில் கூடுதல் கட்டிடங்களை திறந்து வைத்துள்ளார். விருதுநகர் மாவட்டத்திற்கு  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும்,  அமைச்சர் பெருமக்கள் அவர்களும் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியுள்ளனர்.அருப்புக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கூடுதல் கட்டடம் 6 தளங்களுடன் மொத்தம் 8001.00 ச.மீ  பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.அதன்படி தரைத்தளத்தின், அதி தீவிர சிகிச்சை பிரிவில், தீவிர சிகிச்சை பிரிவு 6 படுக்கைகள், வைப்பு அறை மற்றும் பணி செவிலியர் அமர்வு அறை, நுண் கதிர் வீச்சு பிரிவு, மருந்தகம், உள்நோயாளிகள் 18 படுக்கைகள் பிரிவு, காவலர் அறை, உடல் பரி சோதனை அறை, பணி மருத்துவர் அறை, மருந்து பொருட்கள் வைப்பு அறை, ஊசி போடும் அறை, ஆண்கள் பரிசோதனை அறையும்,  முதல்தளமான தாய் சேய் நல பிரிவில், காய்ச்சல் பிரிவு, நோயாளிகள் தயார் படுத்தும் அறை, மருந்து பொருட்கள் வைப்பு அறை, குழந்தைகள் பிரிவு, பணி செவிலியர் நிலையம், குழந்தைகள் விளையாட்டு பகுதி, செவிலியர் ஒய்வு அறை, பிரசவத்திற்குப் பிந்தைய தாய் பிரிவு, தாய் பால் வங்கி, குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவும்,  இரண்டாம் தளத்தில், கார்ப்பிணிகள் பிரிவு, செவிலியர் அறை, நோயாளிகள் தயார் படுத்தும் அறை, இரத்த சுத்திகரிப்பு பிரிவு, இரத்த வங்கியும்,மூன்றாம் தளத்தில், நூலகம், பணி செவிலியர் அறை, மருத்துவர்கள் அறை, அலுவலகம், ஆவணபாதுகாப்பு அறை, இளநிலை நிர்வாக அலுவலர் அறை, அலுவலக கண்காணிப்பாளர் அறை, நிலைய மருத்துவ அலுவலர் அறை, மருத்துவ அலுவலர் அறையும், நான்காம் தளத்தில், பெண்கள் காய்ச்சல் பிரிவு, செவிலியர் அமர்வு அறை, பணி செவிலியர் ஒய்வு அறை, பொது மருந்துவ பெண்கள் சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பெண்கள் பிரிவு, பெண்கள் சிகிச்சை கட்டண அறையும்,ஐந்தாம் தளத்தில், ஆண்கள் காய்ச்சல் பிரிவு, செவிலியர் அமர்வு அறை, பணி செவிலியர் ஒய்வு அறை, பொது மருந்துவ ஆண்கள் சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை ஆண்கள் பிரிவு, ஆண்கள் சிகிச்சை கட்டண அறையும்,ஆறாம் தளத்தில், அறுவை சிகிச்சைக்கு பின் மயக்க தெளிவு அறை, அறுவை சிகிச்சைக்கு நோளாளிகள் தயார்படுத்தும் அறை, அறுவை சிகிச்சைக்கு பின் ஆண் பிரிவு, அறுவை சிகிச்சைக்கு பின் பெண் பிரிவு, செவிலியர் அறை,உடைமாற்றும்அறை,அறுவைஅரங்கமும்எனபல்வேறுவசதிகளுடன்அமைக்கப்பட்டுள்ளது.இக்கட்டிடங்கள் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். இக்கட்டிடங்களை வழங்கிய  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும்,  அமைச்சர் பெருமக்கள் அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் என்பது கிராமப்புற மக்கள் அதிகம் வாழும் பகுதியாகவும் ஏழை எளிய மக்கள் அதிகம் வாழும் பகுதியாகவும் உள்ளது. மருத்துவ சேவைகளுக்கு குறிப்பாக உயர் மருத்துவ சேவைகளுக்கு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு செல்லக்கூடிய நிலையில் இருந்தது. தற்போது இந்த பகுதியிலேயே மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அமைக்கப்பட்டு, அதற்கான கட்டட வசதிகள், உபகரணங்கள் தற்போது கொண்டுவரப்பட்டுள்ளதால், இப்பகுதி மக்களுக்கு பெரும் பயனாக அமையும். இதனால் இப்பகுதி மக்கள் விருதுநகர் வரை செல்லாமல் அருகிலேயே உள்ள இந்த மருத்துவமனையில் சிகிச்சைகளை பெற முடியும். இதனால் நேரமும், பண விரயமும் மிச்சமாகும் என இப்பகுதிகள் பொதுமக்கள் தெரிவித்தனர். இதனை ஏற்படுத்திக் கொடுத்த தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் இப்பகுதி மக்கள்  நன்றிகளை தெரிவித்தனர்.

Feb 07, 2026

திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் சென்னிலைக்குடியில் கட்டப்பட்டுள்ள புதிய 100 சமுதாய வீடுகளுக்கான சாவிகளை அமைச்சர்அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கி, புதிய வீடுகளை பார்வையிட்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், (06.02.2026)  விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் சென்னிலைக்குடியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் ரூ.6.20 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய 100 சமுதாய வீடுகளை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து, புதிய சமுதாய வீடுகளுக்கான சாவிகளை  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கி, புதிய வீடுகளை பார்வையிட்டார்.திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில், சென்னிலைக்குடியில் ரூ.6.20 கோடி மதிப்பில் புதிய 100 சமுதாய வீடுகள், சமுதாயக் கூடம், நூலகம், குழந்தை நல மையம், விளையாட்டு மைதானம், பூங்கா, சாலை, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் பிறப்பால் அனைவரும் சமம் என்ற எண்ணத்தை உருவாக்கிய தந்தை பெரியார் அவர்களின் பெயரில் சமத்துவபுரம் அமைக்கப்பட்டுள்ளது.அதன்படி, தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், (06.02.2026)  ரூ.6.20 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய 100 சமுதாய வீடுகளை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து, புதிய சமுதாய வீடுகளுக்கான சாவிகளை மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கி, புதிய வீடுகளை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.வீ.கேசவதாசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Feb 07, 2026

இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலி காட்சி வாயிலாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் (06.02.2026) காணொலி காட்சி வாயிலாக, விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ரூ.40 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.அதனைத்தொடர்ந்து, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி அவர்கள் தலைமையில், இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.தங்கப்பாண்டியன் அவர்கள் முன்னிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள், இராஜபாளையம் அரசு மருத்துவமனை புதிய கட்டடத்தில் மருத்துவ  சேவையினை குத்துவிளக்கேற்றி, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்து பார்வையிட்டார். இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடம் 4 தளங்களுடன் மொத்தம் 9118 ச.மீ  பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. அதன்படி தரைத்தளத்தில், பொது மருத்துவ வெளி நோயாளி பிரிவு, எம்.ஆர்.ஐ ஸ்கேன், இ.சி.ஜீ பரிசோதனை மையம், மைய நீராவி தொற்று நீக்கும் பிரிவு, விபத்து சிகிச்சை பிரிவும்,முதல் தளத்தில், அறுவை அரங்குகள் (3 எண்ணம்), எலும்பு முறிவு அறுவை சிகிச்சை பிரிவு, காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, முதியோர் மருத்துவ பிரிவு, கண்காணிப்பு பிரிவு, குழந்தை மருத்துவ வெளிநோயாளி பிரிவு, மயக்கவியல் பிரிவும், இரண்டாம் தளத்தில், ஆண்கள் மருத்துவ சிகிச்சை பிரிவு, குழந்தைகள் சிகிச்சை பிரிவு, இரத்த வங்கி மற்றும் தொற்று நோள் ஆய்வகமும், மூன்றாம் தளத்தில், பெண்கள் மருத்துவ சிகிச்சை பிரிவு, பெண்கள் அறுவை சிகிச்சை பிரிவு, ஆண்கள் அறுவை சிகிச்சை பிரிவு, பெண்கள் எலும்பு முறிவு சிகிச்சை பிரிவும், நான்காம் தளத்தில், பெண்கள் அறுவை சிகிச்சை பிரிவு, ஆண்கள் எலும்பு முறிவு சிகிச்சை பிரிவும் என பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.இராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் என்பது கிராமப்புற மக்கள் அதிகம் வாழும் பகுதியாகவும் ஏழை எளிய மக்கள் அதிகம் வாழும் பகுதியாகவும் உள்ளது. மருத்துவ சேவைகளுக்கு குறிப்பாக உயர் மருத்துவ சேவைகளுக்கு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு செல்லக்கூடிய நிலையில் இருந்தது. தற்போது இந்த பகுதியிலேயே இராஜபாளையம் அரசு மருத்துவமனை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்தப்பட்டு, அதற்கான கட்டட வசதிகள், உபகரணங்கள் தற்போது கொண்டுவரப்பட்டுள்ளதால், இப்பகுதி மக்களுக்கு பெரும் பயனாக அமையும். இதனால் இப்பகுதி மக்கள் விருதுநகர் வரை செல்லாமல் அருகிலேயே உள்ள இந்த மருத்துவமனையில் சிகிச்சைகளை பெற முடியும். இதனால் நேரமும், பண விரயமும் மிச்சமாகும் என இப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். இதனை ஏற்படுத்திக் கொடுத்த தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் இப்பகுதி மக்கள் நன்றிகளை தெரிவித்தனர்.இந்நிகழ்ச்சியில், இணை இயக்குநர்(மருத்துவப்பணிகள்) மரு.செந்தில்குமார், சீர்மரபினர் வாரிய துணைத்தலைவர் திரு.இராசா அருண்மொழி, இராஜபாளையம் நகர்மன்றத்தலைவர் திருமதி பவித்ரா ஷ்யாம், மருத்துவத்துறை அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.      

Feb 06, 2026

ஆணைக்குட்டம் ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில்மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, மாணவர்களுடன் கலந்துரையாடி, கல்வி தரம் குறித்து ஆய்வு .

விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியம், ஆணைக்குட்டம் ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் (05.02.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S,.அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, மாணவர்களுடன் கலந்துரையாடி, கல்வி தரம் குறித்து ஆய்வு செய்தார்.

Feb 06, 2026

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ)  மூலமாக  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு  பல்வேறு  திறன் அடிப்படையிலான  பயிற்சிகள்  வழங்கப்படுகிறது. 

 தாட்கோ  சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு   உலக தர உணவு சேவை மற்றும் சூழலியல் சுற்றுலா திறன்பயிற்சி (Global Food & Beverage Service Eco-Tourism), உயர் தொழில்நுட்ப AI பயிற்சி (Advanced Artificial Intelligence(AI)), ஆடை வடிவமைப்பு (ம)  மேலாண்மை திறன் பயிற்சி (Apparel & Designing Management) மற்றும் அழகுக்கலை (ம) சிகை அலங்கார மேலாண்மை திறன் (Glam and Cosmetology Salon Management)   ஆகிய பயிற்சிகள்  வழங்கப்படவுள்ளது.இப்பயிற்சியில்  சேர   ஆதிதிராவிடர்  மற்றும்  பழங்குடியின   இனத்தை  சார்ந்தவர்களாகவும், உலக தர உணவு சேவை மற்றும் சூழலியல் சுற்றுலா திறன்பயிற்சி (Global Food & Beverage Service Eco-Tourism), உயர் தொழில்நுட்ப AI பயிற்சி (Advanced Artificial Intelligence(AI)), போன்ற பயிற்சிகளுக்கு 18  முதல் 25 வயது  வரை  உள்ளவர்களாகவும் கல்வி தகுதியாக பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும்,  ஆடை வடிவமைப்பு (ம) மேலாண்மை திறன் பயிற்சி (Apparel & Designing Management) மற்றும் அழகுக்கலை (ம) சிகை அலங்கார மேலாண்மை திறன் பயிற்சி(Glam and Cosmetology Salon Management)   போன்ற பயிற்சிகளுக்கு 18  முதல் 40 வயது  வரை  உள்ளவர்களாகவும் கல்வி தகுதியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும்.  இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்கு சான்றிதழ்  மற்றும் வேலை வாய்ப்பிற்கு வழி வகை செய்யப்படும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்குள்  இருக்க வேண்டும்.இப்பயிற்சியினை  பெற தாட்கோ இணையதளமான (www.tahdco.com)  என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கால  அளவு  மூன்று மாதங்கள்  ஆகும்.  மேலும் சென்னையில்  உள்ள  விடுதியில்  தங்கி  படிக்கும்  வசதி  மற்றும்  உணவுக்கான    செலவினம் தாட்கோ மூலமாக  வழங்கப்படும். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் பதிவு செய்து இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Feb 06, 2026

திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட தமிழ் பாடி ஊராட்சியில்  தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட தமிழ் பாடி ஊராட்சியில் இன்று (05.02.2026) செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக வைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டனர்.

Feb 06, 2026

விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் முற்பகல் மற்றும் பிற்பகல் ஒருங்கிணைந்த   குடிமைப்பணிகள் தேர்வு -II , முதன்மை எழுத்துத் தேர்வு -,பதவிகளுக்கான போட்டித் தேர்வுகள் .

விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம்எதிர்வரும் 08.02.2026 அன்று முற்பகல் மற்றும் பிற்பகல் ஒருங்கிணைந்த   குடிமைப்பணிகள் தேர்வு -II (தொகுதி -II மற்றும் தொகுதி -II-A) முதன்மை எழுத்துத் தேர்வு - (Main Written Examination) பதவிகளுக்கான போட்டித் தேர்வு விருதுநகர், கே.வி.எஸ் மேல்நிலைப் பள்ளியில் (K.V.S HR SEC SCHOOL VIRUDHUNAGAR) முற்பகல் 228 தேர்வர்கள் மற்றும பிற்பகல் 231 தேர்வர்கள் மொத்தம் 459 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் விண்ணப்பதாரர்கள் முற்பகல் நடைபெறும் தேர்விற்கு காலை 08.30 மணிக்கு தேர்வு கூடத்திற்கு அனுமதிச்சீட்டு (Hall Ticket) உடன் வருகைபுரிய அறிவுறுத்தப்படுகிறார்கள். காலை 09.00 மணிக்கு மேல் தேர்வு கூடத்திற்கு வருகை தரும் தேர்வர்கள் கண்டிப்பாக தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும் தேர்வர்கள் 12.30 மணிக்கு முன்னர் தேர்வறையிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள். பிற்பகல் நடைபெறும் தேர்விற்கு பிற்பகல் 01.30 மணிக்கு தேர்வு கூடத்திற்கு அனுமதிச்சீட்டு (Hall Ticket) உடன் வருகைபுரிய அறிவுறுத்தப்படுகிறார்கள். பிற்பகல் 02.00 மணிக்கு மேல்  தேர்வு கூடத்திற்கு வருகை தரும் தேர்வர்கள் கண்டிப்பாக தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும் தேர்வர்கள் பிற்பகல் 05.30 மணிக்கு முன்னர் தேர்வறையிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள்.   தேர்வர்கள் தங்களுடைய புகைப்பட அடையாள அட்டைகளான ஆதார் அட்டை / கடவுச்சீட்டு (Passport) / ஓட்டுநர் உரிமம் / நிரந்தர கணக்கு எண் (PAN Card) / வாக்காளர் அடையாள அட்டையின் அசல் அல்லது ஒளி நகலை கொண்டு வர வேண்டும். தேர்வர்கள் கருப்புநிற பந்துமுனை பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும்.  மேலும் தேர்வர்கள் தேர்வு கூடத்தின் உள்ளே மொபைல் போன், மின்னணு கைக்கடிகாரம் (Electronic Watch) புளுடூத் (Bluetooth) போன்ற மின்னணு சாதனங்களை எடுத்து செல்ல அனுமதி இல்லை. தேர்வர்கள் எளிய அனலாக் கைகடிகாரங்கள் (Simple Analog Watches) பயன்படுத்தலாம். தேர்வர்கள் தேர்வு கூடங்களுக்கு செல்வதற்கு ஏதுவாக தமிழ்நாடு அரசுப்போக்குவரத்து கழகத்தின் மூலம் சிறப்பு பேருந்து வசதிகள் தேர்வு நாளன்று காலை 06.00 மணி முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  தேர்வர்கள் மேற்குறிப்பிட்ட முக்கிய அறிவுரைகளை பின்பற்றி தேர்வில் வெற்றி பெறுமாறு என மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S , அவர்கள் தெரிவித்துள்ளார்.

Feb 05, 2026

தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழு-2024-2026 ஆய்வுக்கூட்டம்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்,(04.02.2026) நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழு 2024-2026 ஆய்வுக்கூட்டத்தில், மாண்புமிகு தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழுத் தலைவர் திரு.எஸ்.காந்திராஜன்(வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர்) அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள், பேரவை முதன்மைச் செயலாளர் முனைவர் கி.சீனிவாசன் அவர்கள், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், மதிப்பீட்டுக்குழு உறுப்பினர்கள் டாக்டர் தி.சதன் திருமலைக்குமார்(வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர்), திரு.ஈ.ராஜா(சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி உறுப்பினர்), திரு.இராம கருமாணிக்கம்(திருவாடானை சட்டமன்ற உறுப்பினர்) மற்றும் திரு.எஸ்.எஸ்.பாலாஜி(திருப்போரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர்) ஆகியோர் அனைத்துத்துறை அரசு உயர் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டனர்.இந்த ஆய்வு கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை, கால்நடை பராமரிப்பு (கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை), பிற்படுத்தப்பட்டோர். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, கூட்டுறவு (கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை), நெடுஞ்சாலைகள் (நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை), சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் (உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை), நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, அறநிலையங்கள் துறை (சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை), வனம் (சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை), இயற்கை வளங்கள் துறை உள்ளிட்ட துறைகளின் கீழ் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட மானிய கோரிக்கைகளின் தற்போதைய நிலை குறித்தும், துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகைகள், நடைபெற்ற திட்டங்கள் மற்றும் திட்டத்தின் கால வரையறை, அதன் பயன், தற்போதைய நிலை உள்ளிட்டவை குறித்து சம்பந்தப்பட்ட துறையை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டனர்.இக்கூட்டத்தில் வருவாய் துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.3.28 இலட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப்பட்டாக்களையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு  ரூ.16,196 மதிப்பில் விலையில்லா தையல் இயந்திரம் மற்றும் தேய்ப்பு பெட்டியினையும், வேளாண்மைத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.3000 மதிப்பில் தார்பாலினையும், தோட்டக்கலைத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.72,500 மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 9 பயனாளிகளுக்கு ரூ.60,210 மதிப்பில் இலவச தையல் இயந்திரங்களையும் என மொத்தம் 22 பயனாளிகளுக்கு ரூ.4.80 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.இந்த ஆய்வின் போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன்,த.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) வீ.கேசவதாசன், சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான்,I A S., உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

1 2 ... 43 44 45 46 47 48 49 ... 140 141

AD's



More News